Advertisement

“என்னாச்சு யோகி சார், ரொம்ப அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவளது சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி.

யோகியோ எதுவும் சொல்லாமல் சாதத்தை கொஞ்சமாய்க் கொறித்து விரலால் அளைந்தபடி இருந்தான்.

ஸ்ருதி கிட்டத்தட்ட சாப்பாட்டை முடிக்கும் தருணம், யோகி  முதலுமின்றி முடிவுமின்றி, “தேங்க்ஸ்ங்க” என்றான்.

கேள்வியாக ஒரு பார்வை பார்த்து, “ஓ..கே. வெல்கம். ஆனா.. எதுக்கு இந்த தேங்க்ஸ்ன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“நா உங்களை கேக்காம என் பேர்ல ..”, என்று யோகி நடந்தவைகளுக்கு விளக்கம் குடுக்க நினைத்தான்.

ஆனால், ஸ்ருதியோ “ம்ப்ச்… அதெல்லாம்தான் முடிஞ்சுபோச்சே..?”,என்று இலகுவாக அதைக் கடந்து சென்றாள்.

யோகிக்கு முன்பே ஸ்ருதியை பிடிக்க ஆரம்பித்து இருந்தது. இப்போது உன் செயல்களுக்கு விளக்கம் கூட வேண்டாம் என்ற அவளது பெருந்தன்மை, ஸ்ருதியை இன்னும் இன்னும் பிடிக்க வைத்தது.

அவள் எதிரே அமர்ந்திருப்பதிலேயே யோகியின் மனம் திண்ணென்று பூரணமானது போன்றதொரு உணர்வு. ‘இனி இவள்தான் இவளே தான் வேண்டும்’ என்று கூத்தாடும் உணர்வுகளை கட்டுப்படுத்தி புன்னகை பூசி, தனது இந்த நிலைக்கு காரணமானவளை அமைதியாய்ப் பார்த்திருந்தான்.

திடீரென மௌனமான யோகியை ஸ்ருதி நிமிர்ந்து பார்த்தாள். அவன் மனதின் எண்ணங்களும் அதற்கான காரணங்களும்  புரியாத போதும், யோகி மிகவும் மகிழ்வாக இருக்கிறான் என்பது ஸ்ருதிக்குப் புரிந்தது.

மகிழ்ச்சி என்பது ஓமிக்ரானை விட வேகமாக பரவும் தன்மையுடையது அல்லவா? எனவே ஸ்ருதிக்கும் அவனது புன்னகை தொற்றியது.

“மறுபடியும் வீட்டை மாத்தி பதிவு பண்ணனும். எல்லாமும் ரெடி பண்ணிட்டேன். இன்னும் பத்திருபது நாள்ல ஊருக்கு போகணும்”, அமைதியாக சொன்னான்.

ஸ்ருதிக்கு.. ஒரே குடும்பம் போல பழகிவிட்டு இப்போது அவர்கள் அனைவரும் மொத்தமாக ஊர் திரும்புகிறார்கள் என்பது சொல்ல இயலாத வலியைத் தந்தது. ஆனால், அவரவருக்கு கடமைகள் உண்டே?

வலிந்து முறுவலித்து, ஆமோதிப்பதுபோல தலையசைத்தாள். தானாக எழுந்த பெருமூச்சினோடு சிறுகீற்றாக இதழ்பிரித்து, “ம்ம். எங்க அத்தையும் ஸ்ரீகுட்டியும்தான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவாங்க, அத்தைக்கு வசந்தாம்மா இல்லன்னா பொழுதே போகாது, ஸ்ரீக்கு சாயங்காலம் ஆனா ஈஸ்வரியோட விளையாடனும்.”

“நீங்க யாரையும் மிஸ் பண்ண மாட்டிங்களா?”, என்று யோகிக்கு எதிர்பார்ப்பு தன்னையறியாது வந்திருந்தது.

“ம்ம். நானுந்தான் உங்க எல்லறையும் மிஸ் பண்ணுவேன். முக்கியமா உங்க பாட்டை.. ரெண்டுமூணு நாளா உங்க வீட்லேர்ந்து பாட்டு சத்தம் கேக்குதாமே? வேலைக்காரம்மா சொன்னாங்க. கூடவே நீங்க சூப்பரா பாடறீங்களாம். சூப்பர் சிங்கர் போட்டிக்கு போனா பெரிய ஆளா வருவீங்கன்னும் சொன்னாங்க”, சிரித்தாள்.

பூட்டிய வீட்டில் யாருமில்லா கூடத்தில் பாடத்தான் தனக்கு அதிர்ஷடம் என்று உடனே யோகிக்குத் தோன்ற முகம் குன்றியது. “எல்லாருக்கும் பிடிச்சதை செய்யறதுக்கு கொடுப்பினை இருக்கறதில்லீங்க. ம்ப்ச். அதை விடுங்க.. உங்க வீட்ல இருக்கற பாமா அக்கா.. அவங்களும் ஊருக்குப் போறதா கேள்விப்பட்டேன்”

” ஆமா, அவங்க பையனுக்கு வேலை கிடைச்சிடுச்சு. நா பையன்கிட்ட போகட்டுமான்னு கேட்டாங்க, போங்கன்னு  சொல்லிட்டேன். எல்லாரும் அவங்கவங்க இடத்துக்கு போக வேண்டியவங்க தான?”, என்று பொதுவில் சொன்னாள்.

“மாதேஷ் உங்கள அங்க வர சொல்றாருபோல?”

“ஆமா.. அவன் கிட்ட போனா, அங்கேயே இருன்னு சொல்லிடுவான். அத்தைக்கு கூட அவன் சொல்றதுதான் சரின்னு தோணுது.  அதுவும் இந்த சொத்து விஷயத்துக்கு அப்பறம் ரொம்ப மும்மரமா என்னை அங்க கூட்டிட்டு போகணும்னு இருக்கான்”

“ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?”

“பிடிக்குது பிடிக்கலைன்னு பெரிசா ஒன்னும் இல்ல. அவனுக்கு பாரமாப்போயி உக்கார்றதா? ன்னு  தோணுது. ஏற்கனவே எங்கப்பாக்கு ஒரு ஆளை வச்சு பாத்திட்டு இருக்கான்”, என்ற ஸ்ருதி.. தொடர்ந்து..

“சிலசமயம் அவன் ஏன் இப்படி ரொம்..ப நல்லவனா இருக்கான்னு கூடத் தோணுது. சிலநேரத்துல நாம கொஞ்சம் சுயநலமாவும் இருக்கக் கத்துக்கணும்.”

“அவன்கூட எங்கப்பா இருக்கறதால, குடும்பத்தை கூட்டிட்டு வெளிய போறதுங்கிறதே கிட்டத்தட்ட இல்லன்னு சொல்லலாம். அந்த பசங்க பாவம்”, என்று தனது தம்பி மக்களை நினைத்து வருத்தமான ஸ்ருதி,  டிஷ்யூவால் கையை துடைத்துக்கொண்டாள்.

சட்டென, “நீங்களுந்தான் எங்கயும் போறதில்ல. அப்ப நீங்க  கூட பாவம்தான?”, என்று கேட்டான் யோகி. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருந்தவனுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வர, பிடித்துக்கொண்டான்.

யோகியை நிமிர்ந்து ஆழமாகப் பார்த்த ஸ்ருதிக்கு யோகி என்ன பேசப்போகிறான் என்பது நூலளவு பிடிபட, “இதப் பேசணும்னா இவ்வளவு தூரம் வந்தீங்க?”, என்று நேரடியாக கேட்டாள். அவளது குரலில் முன்பிருந்த தோழமை இல்லை.

யோகியும் தனது தயக்கத்தை உடனே உதறினான். “இல்லீங்க, அத பேசறதுக்கு வரல. உங்கள எனக்குப் பிடிச்சுருக்கு. என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா-ன்னு கேட்கலாம்னு  வந்தேன்”, சுற்றி வளைக்காமல் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் கேட்டே விட்டான் யோகி.

“என்னது?”, நிச்சயமாக என் காதுகளுக்கு என்னமோ ஆகிவிட்டது,என்றுதான் ஸ்ருதி நினைத்தாள். காரணம் இவளிடம் மறுமணம் பற்றி இதற்கு முன்பே சிலர் பேசியுள்ளனர், தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல .. ‘பிள்ளைகள் பாவம்’, ‘அவர்களுக்காக திருமணம்’ அவர்கள் எதிர்காலம் பாதிக்கும்’,  ‘பிள்ளைகளை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்தறேன்’ என்று சிலர் உளறியதுண்டு.

ஆனால் அப்படியான காரண காரியம் ஏதும் சொல்லாமல் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று யோகியைப்போல வெளிப்பூச்சின்றி யாரும் சொன்னதில்லை.

அவளது முக பாவத்தைக் கண்டு யோகிக்கு சிரிப்பும் கவலையும் ஒருங்கே வந்தது. மெல்ல நகைத்து, “வீட்டுக்காரம்மா அப்படி பாக்காதீங்க, நல்லாவே இல்ல”,எனச் சிரித்தவன், “அவசரப்பட்டு எந்த முடிவும்  சொல்லாதீங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா.. கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்றான்.

“ஆனா ஏன்? போயும்போயும் ஏன் என்னை?”, என்று ஸ்ருதி குழப்பமாகக் கேட்டாள். அவனோ திருமணமாகாதவன். தனக்கோ திருமணமாகி இருபிள்ளைகள் உண்டு. இவன் ஏன் தன்னைத் தேர்ந்தெடுத்தான் என்று அவளுக்கு புரியவேயில்லை. அதையே கேட்டும் விட்டாள்.

ஒரு வினாடி கூட தாமதியாமல் “ஏன்னா.. நா கிணத்துல விழுன்னு சொன்னா மறுபேச்சு பேசாம கிணத்துல விழற பொண்ணு வேணும்னு நினைச்சேன். ஆனா நீங்க..  நான்தான் உங்கள உங்களுக்கே தெரியாம கிணத்துல தள்ளிவிட்டேன்னு தெரிஞ்சும், என்னை காட்டிக்குடுக்கல. அதுவுமில்லாம மத்தவங்க கிட்ட எனக்காக பேசினீங்க பாருங்க. அப்பலேர்ந்து உங்கள பிடிச்சது. இப்படி நம்பற பொண்ணு காலம் பூரா என் கூட  வந்தா நல்லாயிருக்கும்னு தோனுது.அதனால நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கணும்”, என்றவன் தொடர்ந்து..

“அப்பறம் அது என்னது? போயும்போயும் ஏன் என்னை? ன்னு கேட்டீங்க இல்ல?”,  “ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நீங்க சொல்லுங்க? நீங்க என்ன பழம் பஞ்சாங்கமா? விதவைங்க எல்லாம் முக்காடு போட்டுட்டு மூலைல நிக்கனும்னு நினைக்கற ஆளா?”

“ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி வேணும்னு எல்லா பொம்பளைங்களும் கொடி பிடிக்கறீங்க. ரெண்டு குழந்தைங்க இருக்கிற ஒரு ஆம்பள ரெண்டாவது கல்யாணம் பண்ணினா சரிசரின்னு போறீங்க. அதுவே பொம்பளங்க பண்ணினா போயும்போயுமா?”

“உங்களுக்கு ஒன்னு சொல்லவா? உணர்வுகள் எல்லாருக்கும் பொதுவானதுங்க.அதை ஆமான்னு ஒத்துக்கறதுக்கு பொம்பளைங்களுக்கு பயம். சுத்திலும் இருக்கறவன் ஏதாவது சொல்லிடுவானோ? அடுத்தாப்பல வர்றவன் பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்தி குதர்க்கமா குத்திப் பேசி உங்கள நோகடிச்சுடுவானோன்னு பயம். அந்த பயத்துக்காகத்தான் நாங்க நினைவுகள்லயே வாழ்ந்துடுவோம் ன்னு சப்பைக்கட்டு கட்டறீங்க.”

“ஏன்? எங்களுக்கு பழைய ஞாபகம்ல்லாம் வராதா? அது எங்களை கஷ்டப்படுத்தாதா?”, இது ஸ்ருதி.

“வருங்க. வரும். வராம எப்படி இருக்கும்? ஞாபகம்ன்னா  வரத்தான் செய்யும். ஆனா ஞாபகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லையே? அதைத்தான் நா சொல்றேன்”,என்றவன்  தொடர்ந்தான்.

“என்னையே எடுத்துக்கோங்க, சின்னப்போ நா ரொம்ப அப்பா செல்லம். அவரு ஊருக்கு வந்தா அவரு மேலேர்ந்து கீழ இறங்கவே மாட்டேன். அவரு கூட கபடி ஆடினது, ஆத்துல நீச்சலடிச்சது. இங்கிலீஷ் கத்துக்குடுத்ததுன்னு அவரோட நினைப்பு இப்பவும் இருக்கு. ஆனா அதை பத்து வயசுக்கு மேல காமிச்சிக்க முடிஞ்சதா? அவரைப் பத்தி பேசினாக்கூட அம்மா வருத்தப்படுவாங்கன்னு  தெரியும். அப்பறம் எங்க பேசறது?” 

“அடுத்து எங்க மாமா பொண்ணு..  கல்யாணமேடை வரைக்கும் வந்துட்டு என்ன வேணாம்னு சொல்லிச்சு. ஆனா அதைத்தான் கட்டப்போறேன்னு நினைச்சு.. பண்ணின கற்பனை குடித்தனம் இன்னமும் என் மனசுக்குள்ள இருக்கு. இதெல்லாம் வெளிய சொல்ல முடியுங்களா? கடந்துதான் போகணும். வாழ்க்கைல ஒன்னு போனா ஒன்னு வரும். போனதயே நினைச்சிட்டு இருந்தா மனுஷன் சந்தோசம்னு ஒருவிஷயத்தையே மறக்க வேண்டியதுதான்”  

“எந்தங்கச்சி ஒன்னு கேட்டுச்சு, நீ நினைக்கறது நடக்குமான்னு, அதுகிட்ட சொன்னேன். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ன்னு தெரியாம இருக்கற வரைக்கும்தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு”

“ரெண்டு மூணு வருஷம் முன்னாடி, நீங்க வேலைக்கு போவீங்கன்னு நினைச்சுக்கூட பாத்திருக்க மாட்டீங்க.”

“மெயின் ரோட்டுல டூ வீலர ஒத்த கையில ஓட்டுவீங்கன்னு என்னிக்காச்சும் நினைச்சிருப்பீங்க? இப்போ ஒத்த கையில என்ன? ரெண்டு கையுமே எடுத்துட்டு ஓட்ட சொன்னாலும் செய்வீங்கதான? மாற்றம்தாங்க நிஜம்” 

“இப்போ நா உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேனே இதுவே ஒரு மாற்றம்தான். நா எவன்கிட்டயும் இதுவரைக்கும் இது வேணும்னு கேட்டதே கிடையாது. எனக்கும் ஒரு  மாற்றம் வேணும்னு தோணுது. கேப்போமே? கேக்கறதுல தப்பென்ன இருக்கு?”

“தனியாவே இருந்து போரடிக்கிதுங்க. எத்தனை நாளைக்கு அம்மா அம்மான்னு அவங்களையே தாங்க முடியும் சொல்லுங்க? சுகு ஈஸுல்லாம் இருக்காங்கதான். ஆனா அவங்ககிட்ட கூட ஒரு லிமிட் வச்சுத்தான் பேசமுடியும். மனசுல இருக்கறத பகிந்துக்க ஆளில்லாம இவ்ளோ நாள் இருந்தாச்சு. உங்ககூட ரொம்ப ஈஸியா சகஜமா பேச முடியுது. எனக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சுக்கணும்னு இருக்கு. அது உங்ககூடன்னா நிறைவா இருக்கும்”

“நா இல்லன்னு சொன்னா?”, ஸ்ருதியிடம் என்ன பதில் சொல்வான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  

அதுவே யோகிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கண்களில் மின்னல் வெட்ட, “ம்ம். கிணறு இருக்கிற ஊரா போயி பொண்ணு தேட வேண்டியதுதான்”, பளிச்சென சிரித்தான். 

பதிலுக்கு சிறு புன்னகையை பதிலாக தந்த ஸ்ருதியின்  சிந்தனைகள் வேறு கோணத்தில். சில நிமிடங்கள் கனத்த அமைதி நிலவியது. ஸ்ருதி நேரம் பார்த்தாள். லன்ச் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது.

யோகி அவள் குறிப்பறிந்து, “நேரமாயிடிச்சுல்ல?, போலாமா?”, என்று கேட்டான்.

ஸ்ருதி, “ம்ம்.”,என்று யோகியின் பார்வையைத்  தவிர்த்தாள்.மனதுக்குள் ஆயிரமாயிரம் குழப்பங்கள். அதை படித்தானோ என்னவோ? “சாதாரனமா இருங்க வீட்டுக்காரம்மா, ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுடுங்க. அதுக்கெதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க?”, என்று இலகுவாக இருக்கும்படி சொல்லி விட்டு, பில்லோடு வந்த பேரரிடம் சாப்பாட்டுக்கான தொகையைக் கொடுத்து எழுந்தான் யோகி.

Advertisement