Advertisement

அத்தியாயம் 32 1

“என்ன இந்த பக்கம்? ஆச்சர்யமா இருக்கு?”, என்று யோகியைப் பார்த்து ஸ்ருதி கேட்டாள். 

“அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா.. அவங்க வீட்டு கரெண்டு கனெக்ஷனுக்கு பேரு மாத்தணும் கொஞ்சம் கூட வரமுடியுமா தம்பின்னு கேட்டாங்க. அதான்..”

“ஓஹ் வேலை முடிஞ்சதா?”

“ம்ம். நாலுநாள் முன்னாலதான ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணினோம். இன்னும்  ஆபீஸ்லேர்ந்து பத்திரம் வரல.இன்னும் பத்து நாள் ஆகும்ன்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு உண்டான பாரம்-ல்லாம் குடுத்து பூர்த்தி பண்ணி குடுங்க, பத்திரம் வந்ததும் அதோட காப்பி அப்பறமா கொண்டு வாங்கன்னு சொன்னாங்க. அவங்க பொண்ணு எல்லாத்தையும் எழுதிட்டு நாளைக்கு கொண்டு வந்து குடுக்கறேன்னு சொல்லிட்டு இப்பத்தான் போச்சு. நீங்க இந்த ஆபீஸ்தான? அதான் ஒழுங்கா வேலை செய்யறீங்களா? இல்ல குமுதம் கல்கி ஆனந்த விகடன்னு புக்கு படிக்கறீங்களான்னு பாத்துட்டு போக வந்தேன்”

இடவலமாக மறுப்பாக தலையசைத்து, “ம்..ம்ஹூம்.தப்பா சொல்றீங்க”, என்று ஸ்ருதி சொல்ல.. 

அவளென்னவோ எப்போதும் யோகியோடு பேசுவது போல இயல்பாய் இருந்தாள்.ஆனால் யோகிக்கு சாதாரணமாக இருக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. “ஓ! அப்ப வேல செய்யறீங்கன்னு சொல்லுங்க..”

“சேச்சே .., கல்கி,குமுதம் போயி.. , லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தர ராமசாமியோட புத்தகம்ன்னு வாசிப்பு வேற மாதிரி போகுது.ஹஹ”

‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, என்ற வாசகம் யோகியின் மனதுக்குள் ஓடியது. ஆனால் வெளியே, “ஹூம். ஆக மொத்தத்தில நாங்க குடுக்கற வரியெல்லாம் இப்படித்தான் வேஸ்ட்டா போகுது போல..”, என்று அவனது வழமையான பகடி தொடர்ந்தது. 

“வேஸ்டுன்னு சொல்லிட முடியாது, வேலையும் அப்பப்ப எப்போவாவது தோணினா..”, என்று வாக்கியத்தை முடிக்காமல் இதழ் விரிய சிரித்தாள் ஸ்ருதி.

 யோகி பதிலேதும் பேசாமல் சிரித்தவாறே சில நொடிகள் அவளது முகத்தையே பார்த்து பின் தலையை திருப்பிக் கொண்டான். யோகி வழக்கத்துக்கு மாறாக தனது அலுவலகம் வந்திருக்கிறான் என்பதிலேயே, என்னவோ விஷயம் என்று புரிந்து கொண்டாள் ஸ்ருதி.

யோகி இங்கே பொது இடத்தில் பேசத்  தயங்குவது போல ஸ்ருதிக்குத் தெரிய.., “இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்கு, சாப்பாடு நல்லாயிருக்கும், இடமும் அமைதியா சுத்தமா இருக்கும். நீங்க எப்படியோ தெரியாது ஆனா எனக்கு கரெக்ட்டா நேரா நேரத்துக்கு பசிக்கும்”, என்றாள்.

மறுநொடியே எந்த வித பிகுவும் செய்யாமல், “போலாம்”, என்றான் யோகி. 

“ஒரு நிமிஷம் தேவகி மேம் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்”, என்று விட்டு உள்ளே இருந்த தடுப்பறைக்குச் சென்று சில நிமிடம் பொறுத்து வெளியே வந்தாள் ஸ்ருதி.அவள் வரும்போது தேவகியின் தலையும் வெளியே எட்டிப்பார்த்து யோகியை அளவெடுத்தது.  அவனையும் ஸ்ருதியையும் மாறி  மாறி பார்த்தவருக்கு, யோகியின் எண்ணம் ஓரளவு புரிந்தாற்போல் இருந்தது. ஆனால் ஸ்ருதி கல்மிஷமில்லாமல் தான் இருக்கிறாள் என்பதும் தேவகிக்குப் புரிந்தது. மேற்கொண்டு நில்லாமல் அவரது அறைக்குச் சென்று விட்டார். 

ஸ்ருதி, ஹோட்டலுக்கு கிளம்புவதாக தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அவளது இருசக்கர வாகனத்தின் சாவியை யோகியிடம் தந்தாள். 

யோகியோ சாவியை வாங்காமல், “பக்கத்துலதான்னு சொன்னீங்க. வண்டி எதுக்கு?”, என்று கேட்டான். இதற்கு முன்பு அவளோடு சென்றது வேறு. இப்போது..?  

அவள் சாவியை பைக்குள்ளே போடப் போக,  யோகி  ‘எனக்கு வீட்டுக்காரம்மா கூட போக ஒரு மாதிரி இருக்கு அதுக்கெதுக்கு அவங்க நடந்து போகணும்?’ என்று நினைத்தவனாய், “வழி சொல்லுங்க. நா பின்னால நடந்து வர்றேன்,நீங்க வேணா.. வண்டில போங்க”, பேசும்போது தடுமாறினான்.    

‘ஹ்ம்ம். யோகி இப்படியெல்லாம் இருக்க மாட்டானே? என்னமோ சரியில்ல. ரெண்டு மூணு நாளா பூட்டின வீடு பூட்டினா மாதிரி இருக்கு. ஆனா உள்ள இருந்து பாட்டு சத்தம் மட்டும் கேக்குதுன்னு வேலைக்காரம்மா சொல்லும்போதே,ஈஸ்வரிகிட்ட என்ன ஆச்சு உங்க அண்ணனுக்குன்னு கேட்டிருக்கணுமோ?’ இல்லாட்டி எடக்கு ஏகாம்பரத்துக்கு பேச்சு தடுமாறுமா என்ன?’ 

என்று நினைத்த ஸ்ருதி.. யோகியிடம், “பஸ் ஸ்டாப் தாண்டி முத லெஃப்ட்-ல ஹோட்டல் இருக்கு”, என்று தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பிக்க..

“வடக்கா தெக்கா?”,என்று பதில் கேள்வி கேட்டான் யோகி. 

ஸ்டார்ட் செய்வதை நிறுத்திவிட்டு, “என்னது வடக்கு தெக்கு?”,அவன் கேட்பது புரியாமல் கேட்டாள்.

“ரோட்டுல வடக்கு தெக்குன்னு ரெண்டு பக்கமும் பஸ்ஸ்டாப் இருக்கு.எந்த பக்கத்து பஸ் ஸ்டாப் ன்னு நீங்க சொல்லலியே?”

ஸ்ருதி வேலை செய்யும் மின் பகிர்மான அலுவலகம் சாலையில் இருந்து சற்றே உள்ளடங்கி இருக்கும். அலுவலகத்தில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் வரை நடந்து சென்றால்தான் சாலைக்குச் செல்ல இயலும். நடக்கும் தொலைவுதான். அதே போல சாலையில் இருபுறமும் பேருந்து நிலையம் உண்டு.

ஸ்ருதிதான் வண்டியில் செல்கிறாளே? அவள் முன்னே சென்றுவிட்டால் தனக்கு உணவகத்திற்கு வழி தெரிய வேண்டுமல்லவா? அதனால்தான் யோகி ஸ்ருதியிடம் வழி கேட்டான்.   

ஆனால் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வடக்கு தெற்கு தெரிந்திருக்க வேண்டுமே?  ‘அட. .  இந்த வடக்கு தெற்க்குன்னு எங்கயோ படிச்சிருக்கோமே? ஆங். சூரியன் உதிப்பது கிழக்கு. அப்பறம் சூரியன பாத்து ரெண்டு கையையும் விரிச்சுட்டு நின்னா வலது பக்கம் வடக்கு இல்லல்ல தெற்கு.. அடச்சே மறந்து போச்சே’,என்று நினைத்தவள் மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்தாள். 

‘ஆமா இப்போ சூரியன் தலைக்கு மேலல்ல இருக்கு? எப்படி கைய விரிச்சு திசை கண்டுபிடிக்கிறது?’ என்ற மாபெரும் சந்தேகம் ஸ்ருதிக்கு வந்தது. 

வண்டியை ஸ்டார்ட் செய்வதை நிறுத்தி மேலே ஆகாயத்தை பார்த்து நின்ற  ஸ்ருதியின் நடவடிக்கை பார்த்து, “ஏங்க வீட்டுக்காரம்மா, ஹோட்டலுக்கு வழி கேட்டா என்னமோ சந்திர மண்டலத்துக்கு வழி கேட்டா மாதிரி முழிக்கிறீங்களே?, என்றான் யோகி.

சின்ன முறுவலுடன், “சந்திர மண்டலத்துக்கு வழி கேட்டா ஈஸியா மேல கை காமிச்சிடலாம். நீங்க வடக்கு தெக்குன்னு கஷ்டமா கேக்கறீங்களே? இந்த சூரியன் தலைக்கு மேல இருக்கே எப்படி திசை தெரிஞ்சிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”, என்றாள் ஸ்ருதி.  

‘ஹ ஹ ஹா அடக்கடவுளே தெச தெரியாமத்தான் இவங்க இந்த முழி முழிக்கிறாங்களா?’, பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள் அதக்கி, “அடடா. முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாது? காலைலயே சொல்லியிருந்தீங்கனா, இங்க பாரு சூரியா..எங்க வீட்டுக்காரம்மா மட்ட மத்தியானதுல வடக்கெது தெக்கெதுன்னு  கண்டுபிடிக்க கஷ்டப்படுவாங்க. அதனால அவங்க திசையெல்லாத்தையும் கண்டுபிடிக்கிற வரைக்கும் நீ கிழக்காலயே நில்லுன்னு சொல்லியிருப்பேன்ல்ல?”, என்று யோகி உண்மை போலவே சொல்ல, இருவருமே வாய்விட்டு சிரித்தார்கள். 

ஸ்ருதியின் அலுவகத்தில் இருந்து இரண்டொரு தலை வெளியே எட்டிப்பார்த்தது. சில ஜன்னல்களிலும் தலைகள் வந்து போயின. 

அப்படி தலைகள் தெரிவதை ஸ்ருதி கவனித்தாலும், அவளது புன்னகை மாறாமல், “வண்டி இங்கயே இருக்கட்டும் யோகி. ரெண்டு பேரும் நடந்து போலாம், நா வழி  சொல்றேன்.நீங்க திசை சொல்லுங்க.உங்களுக்கு சரியா சொல்லத் தெரியுதான்னு செக் பண்றேன்”,என்று சொல்லி, கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு ஸ்ருதி முன்னே நடக்க ஆரம்பித்தாள். கூடவே யோகியும் சேர்ந்து பேசியவாறே சென்றனர். 

“அட  சும்மா உண்மைய சொல்லுங்க வீட்டுக்காரம்மா, தெச கண்டுபிடிக்க தெரியாதுதான?”

“ம்ம். ஆமா, ஆனா இப்போ நிஜமாவே எப்படி திசையை கண்டுபிடிக்கறதுன்னு டவுட் வந்துடுச்சு. மத்தியான நேரத்துல ராத்திரில எல்லாம் திசையை எப்படி கண்டு பிடிக்கிறது?”

“மனசுக்குள்ள மேப் போட்டுக்கனும்ங்க. இப்போ டெல்லி எங்க இருக்குன்னு கேட்டா வடக்க இருக்குன்னு சொல்லுவோமில்ல? அசாம் கிழக்கு, குஜராத் மேற்கு. கன்னியாகுமரி தெற்கு. அதே போலத்தான் எல்லா இடத்துக்கும் மனசுக்குள்ள மேப் கொண்டு வரணும்”,என்று சின்சியராக சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்க..

ஸ்ருதி தலையில் தட்டிக்கொண்டு, “அடடா மேப். அதை மறந்துட்டேனே, இருங்க இருங்க நீங்க கேட்ட திசை, அட்சரேகை தீர்க்க ரேகை பூமத்திய ரேகை உட்பட எல்லாத்தையும் இதோ இப்போ சொல்றேன் பாருங்க”, என்று தனது  அலைபேசியை எடுத்து அதில் கம்பஸ் எனும் திசைகாட்டி ஆப்-பினை திறந்து அவனிடம் காண்பித்தாள்.

அவளது செயலைக் கண்டு யோகி சிரித்தான். “எல்லாத்துக்கும் ஒரு ஆப்-புங்களா?”

“எல்லாத்துக்கும் இல்லீங்க இந்த வடக்கு தெக்கு குழப்பத்துக்கு ஆப்பு”, என்று அவளும் சிரித்தாள்.

)))

உணவகத்தில் யோகிக்கும் தனக்குமான மதிய சாப்பாட்டை ஆர்டர் செய்திட்டு கைகளை சுத்தம்செய்து வர வாஷ்-க்கு சென்றாள் ஸ்ருதி.

அப்போது யோகிக்கு..

ஈஸ்வரி தன்னிடம்  “அண்ணே இது நடக்குமா?”,என்று கேட்டதும் அதை தொடர்ந்த ஞாபகங்களை வந்து போயின. 

யோகி மெல்ல சிரித்து, “ஈஸு”, என்று தங்கையைப் பார்த்தவன், “ஒரு விஷயம் நடக்குமா நடக்காதான்னு முன்னாடியே தெரிஞ்சிட்டா  வாழ்க்கையோட சுவாரசியம் போயிடுமில்ல?”,என்றான். சில நொடி தாமதித்து அவனது ஆழமான குரலில், “ஆனா, நடந்தா நல்லாயிருக்கும்னு தோணுது”, என்று உணர்ந்து சொன்னான். 

“ஏண்ணே, உனக்கு இந்த வேண்டாத வேலை? எத்தனை பொண்ணுங்க வந்துச்சு? அதையெல்லாம் விட்டுட்டு.. ஹூம்.  நீ கேட்ட உடனே இந்தா-ன்னு  கட்டிக்குடுக்க நீ என்ன வெறும் பொண்ணையா பாத்து வச்சிருக்க? கைல குஞ்சும் குளுவுமா ரெண்டு பசங்க, அவங்க மாமியாரு, பத்தும் பத்தாதுக்கு அவங்க தம்பி.. ஹூம். எல்லாரையும் சம்மதிக்க வச்சு இது நடக்கறதுக்குள்ள.. வீடு விட்டுடும் போ. அவங்க வீட்டுத் தொல்லையெல்லாம் போதாதுன்னு இந்தப்பக்கம் நம்ம அம்மாவ வேற சமாளிக்கனும்”, என்றாள் தங்கை. 

ஆனால் அவளே தொடர்ந்து, :”ஆனா யோகண்ணே.. நீ சொன்னா மாதிரி நடந்தா நல்லாருக்கும்னுதான் எனக்கும் தோணுது ”,என்று கூறி அவள் வரையில் சம்மதம் என பச்சைக் கொடி காண்பித்தாள் ஈஸ்வரி.  

‘அப்படி என்ன பிடிச்சுது இவங்ககிட்ட? ஆங்.. கரெக்ட்..அன்னிக்கு அந்தம்மா பாத்த பார்வ. என் நம்பிக்கைய காப்பாத்திருவியா-ன்னு..? அதுல எவ்ளோ டென்ஷனு? அவங்க சொன்னது பொய்யின்னு தெரிஞ்சா அவங்க தம்பிட்ட மாட்டிப்பாங்கன்னு தெரிஞ்சும் அத பத்தி யோசிக்காம.. ! அது.. அப்ப.. அந்த செகண்ட்லேர்ந்துதான் அவங்கள புடிக்க ஆரம்பிச்சுது’, இந்த நினைவில் யோகியின் முகம் புன்னகை பூசிக்கொள்ள,அவன் அருகே இருந்த ஒன்றிரண்டு பேர் வித்தியாசமாக பார்த்து விட்டு அவர்களது சாப்பிடும் வேலையைத் தொடர்ந்தனர்.

‘ஆமா இந்த வீட்டுக்காரம்மா, மறு கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்ன அவங்க தம்பியையே பொளேர்ன்னு கன்னத்துல அடிச்சுதே? இப்ப கேட்டா கட்டையால  அடிக்குமோ?’

“ஹ்ம்ம் நல்லவேளை ஏஸி ஹாலுக்கு வந்துருக்கோம்.ஆளுங்க கொஞ்சாமாத்தான் இருக்காங்க. சேதாரம் பலமா இருக்காது’ 

‘மீறி அடிச்சாலும் வாங்கிக்க வேண்டியதுதான்.’

‘எதே ..?’

‘துப்பினா துடைச்சுக்கறதில்லையா அப்படித்தான்.’

‘அடேய். ஊருக்குள்ள நீ பெரியாளுன்னு..’

‘எவன் சொன்னான் நா பெரியாளுன்னுட்டு..? இன்னும் கல்யாணம்கூட முடிக்கல… போவியா..?’,என்று தனக்குள்ளே இரு கூறாகி வாதிட்டு நின்றான் யோகி. 

‘எங்கப்பன் பண்ணிட்டு போன காரியத்தால பொண்ணுங்கன்னா பத்தடி தள்ளியே  நின்னாச்சு. கிண்டல் பண்றதுன்னா ஈஸியா வருது. ஆனா.. இவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரிலையே?’

யோகி சுத்தமான அக்மார்க் காதல் குழப்பத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தான். சிறுபிள்ளைத்தனமான தனது மனதில் எண்ணங்கள் அவனுக்கே சிரிப்பை வரவழைத்தாலும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் அவனது ஆழமான அறிவுக்குத் தெரிந்தேதான் இருந்தது. இது கொஞ்சம் கடினமான விஷயம்.

இன்னொன்றும் மனது சொன்னது. ‘கடினமானவை கடினமானவையே தவிர  இயலாதவையல்ல’.

ஆனாலும் ஆசை என்பது வெட்கம் அறியாது அல்லவா? ஆசையறுத்தால் மானிடர் அனைவரும் புத்தராகிவிட மாட்டோமா? 

// அக்கரைச் சீமையில் நீ இருந்தும்  ஐவிரல் தீண்டிட நினைக்குதடி- அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி..

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா?

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே

ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே//

Advertisement