Advertisement

அத்தியாயம் 31

“சரிக்கா. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வீட்டை உன்பேர்ல மாத்தி குடுக்கறவரைக்கும் அவரை நா நம்ப மாட்டேன்”, என்று மாதேஷ் தனது அக்கா ஸ்ருதியிடம் மறுத்து பேசும்போது யோகி தனது திகைப்பை விட்டு வெளியே வந்தான்.

இரண்டெட்டு எடுத்து வைத்து வீட்டை அடைந்தவன், வாசலில் செருப்பை விடும்போதே உள்ளே கூடத்தில் இருந்தவர்களை பார்த்து, “அட மாதேஷ்.. நீங்க காத்துட்டு இருக்கீங்கறதே மறந்துட்டேன் பாத்தீங்களா? எங்க அவ்ளோ அவசரமா போனேன்னு நினைக்கறீங்க? எல்லாம் இந்த வீட்டு விஷயம்தான்”,என்று ஆர்பாட்டமாக பேசியபடி கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் யோகி.

மகன் வந்ததும் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க வேண்டுமென்று நினைத்த வசந்தம்மாவாகட்டும், அக்காவை ஏமாற்றி வீட்டை தனது பெயரில் மாற்றக்கொண்ட யோகி மீது கடுங்கோபத்தில் இருந்த மாதேஷாகட்டும் யோகியின் இந்த ஆரவாரத்தை எதிர்பார்க்கவில்லை. அங்கே யோகி வரும்முன் பேசிய அனைவர் முன்பும் ஒரு திரை விழுந்தாற்போல் திகைத்து அடுத்து என்ன பேசுவதென தெரியாமல் நின்றனர்.

யோகி எதிர்பார்த்ததும் இதைத்தானே?

வெட்டவா குத்தவா என்று நினைப்பவர்கள் மத்தியில் ஒருவன் எவ்வித பயமுமின்றி சென்று ‘என்ன பிரச்சனை தெரியுமா?’ அவர்கள் பேசவேண்டிய விஷயத்தை தானாக ஆரம்பித்தால்..அவர்கள் திகைக்கத்தானே செய்வார்கள்?

அந்த சில நொடி திகைப்பை தனக்கு சாதகமாக்க நினைத்த யோகி தொடர்ந்து பேசினான். “அட உக்காருங்க ஏன் நிக்கறீங்க? விஷால் நீங்களும்தான்.இப்பதான்..தோ.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் அந்த தனபாலன்ட்ட பேசி ஒரு நல்ல முடிவு எடுத்தாச்சு. இனிமே அவன் எப்போதும் இங்க வந்து பிரச்சன பண்ண மாட்டான்”, என்று சொன்னவன்.. எதேச்சையாக திரும்பி ஸ்ருதியைப் பார்த்து, “இதோ பார்றா! நம்ம வீட்டுக்காரம்மா கூட இங்கதான் இருக்காங்க”, என்று இயல்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.

ஸ்ருதி சிறு முறுவலோடு அவனை பார்த்தாலும் அவளது கண்களில் தொக்கி நின்றது?.. ‘இப்போ இவன் மாதேஷ் கிட்ட எனக்கு தெரிஞ்சுதான் பவர் பத்திரம் கிரைய பத்திரமா மாறுச்சுனு சொல்லணுமே?’ என்ற பரிதவிப்பா அல்லது,’நான் நினைக்கறா மாதிரி இவன் தகுந்த காரணத்துக்காக அப்படி செஞ்சிருக்கணும். அந்த காரணம் மாதேஷ் ஒத்துக்கற அளவு இருக்குமா?’, என்ற எதிர்பார்ப்பா? அல்லது இரண்டுமே கலந்த ஒன்றா?.

ஸ்ருதி யோகியை இப்படி உறுதியாக நம்பக காரணம் என்றோ ஒரு நாள் யோகி சொன்ன, ’யோகி செய்தா அது சரியாயிருக்கும்னு நம்பனும்’ என்பதும் ‘எங்கம்மா வருத்தப்பட்டா எனக்கு பிடிக்காது’, என்ற வாசகமும் ஸ்ருதியின் மனதில் அழுத்தமாகப் படிந்ததுதான்.

தனது பிடித்தம் மறந்து மற்றவரின் நலத்தை விரும்பும் யோகியின் குணம். கூடவே தன்னை நம்பாத அம்மாவின் உணர்வுகளுக்குக் கூட மதிப்பளிக்கும் யோகி அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்துவானா? என்பதுதான் அவளது எண்ணத்தின் அடித்தளம். ஆனாலும்…?

எப்போதும் ஸ்ருதியோடு பேசும்போது ஒரு நொடிக்கு மேல் அவள் மீது நீடிக்காத யோகியின் பார்வை, இப்போது அவளை மட்டுமே பார்த்தபடி இருந்தது. யோகிக்கு ஆச்சர்யம் + மகிழ்ச்சி. ’எங்கம்மா கூட என்னை நம்பல, இந்த வீட்டுக்காரம்மா நம்புது பாரேன்?’,என்ற உவகை அவனைப் பார்க்க வைத்தது. பார்கும்போதே அவளது மனதின் அலைப்புறுதல் புரிய. அது தேவையற்றது என்பது போல ஸ்ருதியைப் பார்த்து மலரச் சிரித்தான் யோகி.

தனக்கு வலது பக்கவாட்டில் இருந்த நாற்காலியை ஸ்ருதிக்குக் காண்பித்து, “உக்காருங்க”, என்றான். அவனது சிரிப்பிலேயே ‘நா பாத்துக்கறேன்’, என்ற அவனது பதில்மொழியை ஸ்ருதி புரிந்து அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டாள். ஸ்ருதியே அறியாத வகையில் அவளது மனதின் கீச்சிடல்கள் மாயமாகி இருந்தது. மற்றவர்களும் யோகியோடு பேச ஏதுவாக அங்கிருந்த இருக்கைகளை நிரப்பினர்.

ஸ்ருதியின் அருகே அமர்ந்த அவளது தம்பி மாதேஷோ, ‘இவன் என்ன தப்பு பண்ணின மனுஷன் மாதிரியே இல்லையே? ஒரு சின்ன கில்டி கான்ஷியஸ் கூட இல்லாம.. ? ஹ்ம்ம். ஒருவேளை எனக்கு வந்த டீடெயில்ஸ் தப்பா இருக்குமோ?’என்ற அளவு யோசிக்கத் துவங்கி இருந்தான்.

யோகி, “ஏம்மா வராதவங்க நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க, காப்பி கீப்பி குடுத்தீங்களா?”, என்று வசந்தம்மாவிடம் கேட்டான்.

அவரோ, ‘சரத்து வந்ததும் என்னவோ கேக்கணும்னு நினைச்சோமே?’ என்ற யோசனைக்குச் சென்றிருந்ததால், அவன் இப்போது சொல்வது மூளைக்கு எட்டாமல்,“ஆங்..?”,என்று மகனை கேள்வியாக நோக்கினார்.

“ப்ச். காபி இல்லன்னா டீ எடுத்துட்டு வாங்கம்மா, எனக்கும் தலைவலிக்கிறா மாதிரி இருக்கு”, என்று அன்னையிடம் பகின்று, திரும்பி தங்கையைப் பார்த்து, “ஈஸு, நீயாவது வந்தவங்கள கவனிக்கலாமில்ல?”, என்று வீட்டு மனிதனாக விருந்தாளிகளைக் கவனிக்காது இருக்கும் பெண்களை கடிந்தான்.

“இதோ நானே எடுத்துட்டு வர்றேன்ப்பா”, என்று வசந்தி அடுக்களை சென்றார். ஆனால், ஈஸ்வரியோ அண்ணனிடமிருந்து தனது பார்வையை அகற்றாமல் ‘உன் மடை மாற்றும் வேலை நானறிவேன்’, என்பது போல அழுத்தமாக அவளது சக்கரநாற்காலியில் இருந்து அசையாமல் இருந்தாள்.

தங்கையை சட்டை செய்யாமல் ஆண்கள் இருக்கும் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினாலும் மனதுக்குள், ‘என் தங்கச்சியா கொக்கா? ஈஸ்வரிய ஈஸியா ஏமாத்திட முடியுமா என்ன?’’, என்று யோகி பெருமிதப்பட்டுக் கொண்டான்.

மாதேஷ் மட்டும் விஷாலின் கையில் இருக்கும் வில்லங்க சான்றை மட்டும் படிக்காமல் இல்லாதிருந்தால், இதுநாள்வரை நினைத்தபடி ‘யோகி தன பெயருக்கு பவர் மட்டுமே வாங்கினான் என்பதை நம்பக்கூட ஆரம்பித்து இருப்பான். அத்தனை இயல்பாக இருந்தது யோகியின் நடவடிக்கை.

விஷாலும் மாதேஷின் சிந்தனை ஓட்டத்தில் இருந்தான் போலும், ஏனென்றால் எதற்கும் ஒருமுறை சரி பார்த்துவிடலாம் என்று அவன் அந்த வி.சா.பேப்பரை தனது சட்டை பாக்கெட்டில் இருந்துக் கொண்டு இருந்தான்.

தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கவனியாததுபோல யோகி ஸ்ருதியிடம், “ஆங். நா வரும்போது சொன்னேல்ல? அந்த தனபாலன் தொல்லை இனிமே நமக்கு இருக்காது. நம்ம அடுத்த வாரமே போயி அந்த பத்திரத்தை கான்சல் பண்ணிடலாம்”, என்று ஸ்ருதியிடம் கூறினான்.

“மாதேஷ் நீங்க இருப்பீங்கல்ல? ஏன்னா இன்னும் ரெண்டு நாள்ல ஈஸ்வரி ஊருக்கு போறதால, சுகுமாரனும் கூட போகவேண்டி இருக்கும். நீங்க இருந்தா இந்த சாட்சி கையெழுத்து போடறது, அப்பறம் உங்க அக்காவை ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வர்றதுன்னு கொஞ்சம் ஹெல்ப்-ஆ இருக்கும். முடியுமான்னு சொல்லுங்க”

“ஒரு வாரம் இங்க இருக்கறது..ங்.கிறது..:”, என்று யோசித்த மாதேஷ்,’இல்லியே நா இதை பேசறதுக்கு வரல, எதுக்கு பேர் மாத்தி எழுதினீங்கன்னு இல்ல கேக்க வந்தேன்?, என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு, யோகியைப் பார்த்து அழுத்தமாக, “எந்த பத்திரத்தை கேன்சல் பண்ணனும்னு சொல்லறீங்க?, நீங்க இந்த வீட்டை உங்க பேர்ல மாத்தி எழுதிக்கிடீங்களே அந்த பத்திரத்தையா?”,என்று இகழ்ச்சியாக ஒரு வித உதட்டுச் சுழிப்போடு கேட்டான். .

“ஆமா, அதே பத்திரம்தான். உங்களுக்கு தெரியுமான்னு தெரில. அந்த தனபால் உங்க அக்காவை ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்லி குடைச்சல் குடுத்தான். நாங்க போயி இவங்கள கூட்டிட்டு வந்துட்டோம். நா வக்கீலுன்னு தெரிஞ்சதும் போலீஸு கொஞ்சம் பின் வாங்கிச்சு வச்சுக்கோங்க.”
“அப்போதான் என்னடா யாருடா இந்த தனபாலன்? இவனுக்கு இந்த வீட்டு மேல ஏன் கண்ணு?ன்னு பாக்கும்போது அவனைப் பத்தின விஷயங்கள் தெரிய வந்துச்சு. அநாதரவான நிலையில மூணு பொம்பளைங்கள நடுதெருல நிறுத்தி இருக்கான். அவனுக்கு ஒரு இடம் வேணும்னா,அது கிடைக்கறதுக்கு எந்த எல்லைக்கும் போவானாம். அவனை பத்தி தெரிசவங்க சொன்னாங்க”, என்று சொல்லி எதேச்சையாக பார்ப்பது போல விஷாலைப் பார்த்தான்.

“பணமும் பவரும் இருக்குங்கிற தைரியத்துல, ஆளுங்கள கடத்தறது, புள்ள குட்டிய பிணையா வச்சு நிலத்தை எழுதி வாங்கறதுன்னு அவன் பண்ணாத வேலை கிடையாது. இத கேள்விபட்டத்துலேர்ந்து, ‘அவனை மாதிரி ஆளுங்க கூடலாம் மோதவேணாம். அவனுக்கு வீட்டை எழுதி வச்சிடுங்க’ன்னு பர்வதம்மா சொன்னாங்க. உங்க அக்காக்கு அப்படி விட மனசு வரல. என்கிட்டே யோசனை கேட்டாங்க. அப்பத்தான் உங்க தம்பிக்கு பவர் குடுங்க அவரை வச்சு நா பாத்துக்கறேன்னு சொன்னேன்”

“ஆனா பாருங்க,அதுக்குள்ள எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சு, இந்த ஊரு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல தனபாலனுக்கு நெருக்கமான ஆளுங்க ட்ரன்ஸ்பர் ஆகி வரப்போறாங்க ன்னு. அவங்க வந்தா, போலி பத்திரம் தயாரிச்சு இந்த வீட்டை ஸ்வாகா பண்ணிடலாம்னு அந்த தனபால் ஐடியா போட்டு இருக்கான்.”

“இவ்ளோ தெரிஞ்சதுக்கப்பறம் நாம சும்மா விடலாமா? வீடு இவங்க பேர்ல இருந்தாத்தான? பவருக்கு பதிலா கிரயமே குடுத்தா மாதிரி எழுதிக்குவோம்னு பிரச்சனைய நம்ம தலைக்கு கொண்டு வந்துட்டேன். கூடவே அவனுக்கு இசைவா இருக்கிறா மாதிரி நம்ம சுகுவை விட்டு பேசிட்டே இருகச் சொன்னேன். இந்த இடைப்பட்ட நேரத்துல முக்குல இருக்கிற ஓட்டுவீட்டுகாரங்கள கண்டுபிடிச்சு,தேவையான ஆதாரத்தை சேகரிச்சு.., ஷப்பா.. பெரீய வேலையாயிடுச்சு போங்க”, என்று அலுத்துக்கொண்டு..

“ஏற்கனவே போலீஸ் அவன் பக்கம்னு நமக்குத் தெரியும். அப்டி இருக்கும்போது அந்த ஓட்டு வீட்டு பொம்பளைங்க கேஸ் குடுத்துட்டு நிம்மதியா இருக்க முடியுமா? அதான்..சரியான நேரத்துக்காக காத்துட்டு இருந்தோம். போதோ இன்னிக்கு அவன் கட்டிடம் திறக்கற நாளு. வீடு வாங்க வந்திருக்கிற ஆளுங்க, பத்து பதத்துக்கு தனபால் ஏற்பாடு பண்ணியிருந்த நேரடி ஒளிபரப்பு”, என்று சொல்லிவிட்டு ம்ஹும்க்ம்ஹும் வாய்மூடி சிரித்துக்கொண்டான்.

“அவனுக்கு அவனே தோண்டிகிட்ட குழி, வேறென்ன சொல்றது? இது தான் சரியான நேரம்னு.. எல்லா ஆதாரத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி அவனை டாரு டாரா கிழிச்சாச்சு. இப்போ மீடியா முன்னாடி விஷயம் போயிடுச்சு பாருங்க. அவனோட பவரு, ஆள் பலம் எல்லாம் இருந்தும் .. இப்போ ஒரு துரும்பைக்கூட அவனால அசைக்க முடியாது.”

“இனிமே அந்த பொம்பளைங்களுக்கோ, நம்ம வீட்டுக்கோ.. சும்மா ஒரு கீறல் விழுந்தாலும் அவனுக்குத் தான் பிரச்சனை”.

“அதனால, இனிமே எந்த தொல்லையும் வராதுங்கிறதால, உங்க அக்கா பேர்லயே மறுபடியும் வீட்டை மாத்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்”, என்று நடந்த விபரங்களை (சிலதை மறைத்து) முழுவதுமாக சொல்லி முடித்தான் யோகி.

மாதேஷால், “ஓ!”,என்ற வார்த்தைக்கு மேல் எதுவும் சொல்ல தோன்றவில்லை. இவையனைத்தையும் கிரகிக்க அவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் குடிப்பதற்கு சூடாக தேநீர் வந்துவிட, ஆளுக்கொரு டம்பளரை எடுத்துக் கொண்டனர்.

“தனபாலன் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சிக்கணும்னா நீங்க வேற எங்கயும் போகவேண்டாம்.விஷால் கிட்ட கேளுங்க அவருக்கு நல்லா தெரியும்”, என்று முத்தாய்ப்பாக சொல்லிவிட்டு யோகி தனது தேநீரை எடுத்துக் கொண்டான்.

தனபாலனைப் பற்றி விஷாலுக்கு மிக நன்றாக தெரியுமே? ஆனால், எப்படித் தெரியும் என்பதையும்,ஏன் விலகினான் என்ற விபரத்தையும் அவனால் மாதேஷிடம் சொல்ல இயலுமா என்ன? திருடனுக்கு தேள் கொட்டினால் போல் யோகியின் கருத்தை ஒத்துப் பாட வேண்டிய சூழலுக்கு விஷால் தள்ளப்பட்டான்.

அவரவர் அவரவர் சிந்தனையிலிருக்க, ஈஸ்வரி மட்டும் இன்னும் தன் அண்ணனைப் பார்த்தபடியே இருந்தாள். காரணம் அவளது அண்ணனின் நடத்தையில் தெரிந்த மாறுபாடு.

எப்போதும்போல யோகி தான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கைதாங்கியில் வலது கையை வைத்திருந்தான். அதில் ஏதும் மாற்றமில்லை, ஹ்ம். இப்போது தீநீர் குடிக்கிறான்.

வழமையாக கால் மீது கால் போட்டு இடது பக்க கால் தன்னிச்சையாக ஆடுவதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.. ஆனால்.. அட யோகன்னாவின் பார்வை..? ஆஹா..! எதிரில் இருப்பவரை அளவெடுப்பதுபோல பார்த்து, அவர்களின் எண்ண ஓட்டத்தை கிரகித்துவிடும் யோகியின் ஸ்திரமான பார்வை.. இப்போது அரை நிமிடத்திற்கு ஒரு முறை அங்கிருந்த ஸ்ருதியை தொட்டு மீண்டு வந்தது.

இங்கே ஈஸ்வரி தனது அண்ணனின் பார்வை பற்றி அலசிக்கொண்டிருந்த நேரத்தில், மாதேஷ் விஷாலிடம் தனபாலன் பற்றி கேட்டுத் தெளிந்து கொண்டான்.

இரண்டு மூன்று முறைக்கு மேல் யோகியை கவனித்த ஈஸ்வரிக்கு ஏதோ புரிவதுபோல இருக்க.., அந்த தனது யூகம் சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, “அப்போ நல்ல நாள் பாக்க சொல்லலாமா யோகண்ணா?”, என்று இருபொருள்படக் கேட்டாள் யோகியின் தங்கையாக.

தான் அமர்ந்திருந்த இருக்கையில் முதுகை நன்றாக சாய்த்துக் கொண்டு, ஈஸ்வரியை திரும்பிப் பார்த்த யோகி,தங்கையின் கேள்வியில் இருந்த உட்பொருள் புரிய பளிச் சென சிரித்தான். “கண்டிப்பா, இதோ மாதேஷ் இருக்காரு, மேல பர்வதம்மாட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு, வீட்டுக்காரம்மா ஓகே சொன்னா முடிச்சிட வேண்டியதுதான்”, என்றான் அவனுமே இருபொருள்பட.

யோகியின் பதிலை கேட்ட ஈஸ்வரி நமுட்டு சிரிப்போடு, அண்ணனுக்கு பச்சைக் கொடி காண்பிக்க, அவளது மனம் உள்ளூர மகிழ்ந்தாலும், இது எத்தனை தூரம் சாத்தியப்படும் என்பது புரியாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? தனியா நீங்களே முடிவெடுத்த விஷயம். அத நீங்கதான் முடிச்சும் வைக்கணும்”,என்று மாதேஷ் வீடு பற்றி அவனது கருத்தை சொல்ல அதுவும் இருபொருள் படவே இருந்தது. அதில் மாதேஷின் ‘என்னை நீ கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செய்தாய்’ என்ற குற்றச்சாட்டும் பொதிந்து இருந்தது.

“சொல்லிடீங்கள்ல? நல்லபடியாவே முடிச்சிடலாம்”, என யோகி சொல்ல..

“சரி அப்ப நாங்க கிளம்பறோம், எப்ப ரெஜிஸ்ட்ரேஷன்-ன்னு சொன்னா, எனக்கு டிக்கெட் புக் பண்ண ஈஸியா இருக்கும்”, மாதேஷ்.

“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள சொல்லலாமா? ஏன்னா ஸ்டாம்ப் பேப்பர் ரெடி பண்ணனும்” என்று யோகி சொல்ல..

“ஆமா இந்த ரெஜிஸ்டர் செலவெல்லாம் யாரோடது?”, என்று விஷால் கேட்டான்.

“எல்லாம் தனபாலன் பணம்தான், அட்வான்ஸ் கொஞ்சம் வாங்கினேன், எல்லாம் அவன் அரசாங்கத்தை ஏமாத்தி சேர்த்து வச்சிருக்கிற கருப்பு பணந்தான். கொஞ்சமாச்சும் அரசாங்கத்துக்கு போகட்டுமேன்னு செலவு பண்ண வச்சேன்’, என்று சிரித்தான் யோகி.

மாதேஷுக்கும் ஏன் அவனுடனிருந்த விஷாலுக்கும் கூட புன்னகை எட்டிப்பார்த்தது.

“சரி கிளம்பறோம்”, என்று சொல்லி ஆண்கள் இருவரும் வெளியேற..

தம்பியைத் தொடர்ந்து..தானும் இருக்கையில் இருந்து எழ குனிந்து புடவையை சரி செய்தபடியே யோகியைப் பார்த்து, “என் தம்பிட்ட மாட்டிட்டு முழிப்பீங்கன்னு நினைச்சேன். ஹ்ம்ம். பரவால்ல. தப்பிச்சிட்டீங்க”, சிரிப்பை மென்றவாறு முணுமுணுவென சொல்லிவிட்டு எழுந்த ஸ்ருதி.. ஈஸ்வரியின் அருகே சென்று, “நானும் கிளம்பறேன்மா”, என்று விடை பெற்று தனது வீட்டுக்குச் சென்றாள்.

அவர்கள் அனைவரும் சென்றதும், வசந்தி யோகியிடம் வந்து, “இதெல்லாம் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு செய்யக்கூடாதாப்பா?“,என்று கடிந்து கொண்டார்.

யோகி, “அம்மா,சொன்னா வீணா கவலைப்படுவீங்க, நீங்க வருத்தப்படறதுமில்லாம பர்வதமாவையும் சேத்து குழப்புவீங்க, அதான் சொல்லல”, என்று சொன்னான்.

“ஹூம். அதும் சரிதான்”, என்று விட்டு உள்ளே சென்றார் வசந்தி.

“என்ன சொல்றாங்க வீ..ட்டுக்காரம்மா?”,என்று ஈஸ்வரி, வீட்டுக்காரம்மாவில் ஏக அழுத்தம் குடுத்து யோகியிடம் கேட்க..

ஈஸ்வரியைப் பார்த்து வாய் கொள்ளா புன்னைகையோடு, “ஆங். அவங்க தம்பிட்ட இருந்து நா தப்பிச்சேட்டனாம்..”, என்றான்.

என்றும் இல்லாத திருநாளாக யோகியின் முகத்தில் ஆயிரம் வாட் பல்ப் வெளிச்சம் தெரிய, ஈஸ்வரிக்கு மனதில் சுருக் கென வலித்தது. எதிலும் பற்றில்லாதவனாக இருந்தவன்.. இப்போது ஆசைப்படுவது ஈடேறுமா?

Advertisement