Advertisement

“அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத”, என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால், அவரது சொத்து, சொந்தம் எதுவுமே வேண்டாம் என்று தள்ளி நின்றவர்கள் இப்போது ஏன்?..

அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இதோ இவன் நினைத்தால், இப்போது நிற்கும் இந்த ஐந்து கிரவுண்ட் மனை மட்டுமல்ல, மாமா சம்பாதித்து சேர்த்திருக்கும் சொத்துக்கள் அனைத்துக்குமே இவன் உரிமை கோர முடியும். சட்டப்படி உரிமையுள்ளவன்.

அதையும் விட அக்காவின் பிள்ளைகளுக்கு தாங்கள் இரண்டாம் தாரத்தின் வாரிசு என்பது தெரிந்தால்..?, கலவரமான தனபால் பின்னால் அக்காவைப் பார்த்தான். அவர் ‘என்ன பேசுகிறார்கள்?’ என்று பார்த்துக்கொண்டு சாதாரணமாக இருந்தார். ‘நல்ல வேளை, அக்காக்கு இன்னும் இந்தப்பயல அடையாளம் தெரில’

இவன் திரும்பி தன்னை பார்த்ததை கண்டு, “என்ன தனா என்ன கேக்கறாரு?”, என்று ஜீவிதா கேட்டார்.

“ஒண்ணுமில்லக்கா, நா நாந்..நான் பாத்துக்கறேன். நீ அந்த பொண்ணுகூட பேசிட்டு இரு”, என்று அக்காவை திசைதிருப்பினான். தனபாலில் இந்த தொழிலும் அதன் மூலதனமும் அவனது அக்கா போட்ட பிச்சை. ஜீவிதா மீது உடன்பிறந்த பாசத்தோடு நன்றியும் அவனுக்கு எப்போதும் உண்டு. ‘என்னிக்கோ நடந்த விஷயத்துக்காக இவ்ளோ நாள் கழிச்சு அக்கா கஷ்டப்படறதா? நோ. அந்த பசங்களுக்கு தெரிஞ்சா..? கூனிக் குறுகி போயிருவாங்களே?’, பதறினான்.

யோகியின் அருகே வந்து அவன் கைபிடித்துக் கொண்டான். தணிவாக இல்லை இல்லை இறைஞ்சுதலாக, “நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன். இப்பவோ போன் போட்டு அங்க தங்கி இருக்கிற காவல்காரனை போக சொல்லிடறேன். ஆனா..”, என்று மென்று விழுங்கினான். ‘அக்காக்கு தெரியக்கூடாது’ என்று சொல்ல வந்தவனுக்கு வார்த்தை தடுமாறியது.

தனது கையைப் பிடித்துக் கொண்டிருந்த தனபாலனின் கையைப் பிரித்து எடுத்து, யோகி இரண்டடி பின்னால் தள்ளி  நின்றான். “ஹ்ம்ம். பிச்சை போட்டத சொந்தம் கொண்டாடுற பழக்கம் எங்களுக்கு இல்ல”, என்று இகழ்ச்சியாக சொல்லிவிட்டு, “இப்போ ஏன் அந்த நிலத்துக்காக வந்திருக்கேன்னு யோசிக்கறயா? எங்கப்பா போயி கொஞ்ச நாளிலேயே அந்த வயக்காட்ட நிராதரவா நின்னவங்களுக்கு தானமா குடுத்துட்டோம்”, என்ரூ சொன்ன யோகியின் தாடை இறுகியது.

“எவ்வூரிலே இதுவரைக்கும் எவனும் என்னை ஒரு வார்த்த கைநீட்டி பேசினதில்ல, உன்னால ஒரு சின்னப்பய கேட்டான், ‘அய்யா.. தரிசா கிடந்த நிலத்தை தானமா குடுத்தீங்க.. என்னுதுன்னு நினைச்சு ரத்தம் சிந்தி விரலால உழுது பொண்ணு விளையற பூமியாக்கினேன். இப்படி பொசுக்குன்னு பேப்பர் நீட்டி நிமிஷத்துல  எரிச்சுபோடுவீங்கன்னு தெரியாத போச்சே’-னு வயித்துல அடிச்சிட்டு அழுதான்யா”, என்று அன்று நடத்தை நினைத்து கைமுஷ்டி இறுக அய்யனாரைப் போல் நின்றான் யோகி சரத். அவனருகே இருந்த சுகுமாரன் “அத்தான்”, என்று கூப்பிட யோகியின் நினைவுச் சங்கிலி அறுந்தது.

தனபாலனை புழுவைப் பார்ப்பது போல பார்த்து, “வெறும் சொத்துப் பத்திர பேப்பர் கையில இருக்குங்கிற திமிர்ல.. விளைஞ்சு நின்ன வயலை எரிச்சிருக்க? ஒரு வார்த்த என்னைக் கேட்டிருந்தா அதுக்கு ஈடா பணத்தை உம்மூஞ்சில விட்டெரிஞ்சிருப்பேன்”

“நீயெல்லாம் சோத்ததான திங்கற? நீ கட்டி வச்சிருக்கியே இந்தா இவ்ளோ பெரிய கட்டிடம்? புல்டவுசர் வச்சு இடிச்சா உனக்கு எப்படி இருக்கும்? செய்யட்டா? சல்லி சல்லியா செங்கல் செங்கலா பிரிச்சுபோடணும்போல ஆத்திரம் வந்துதான் இவ்வளவும் செஞ்சேன்.”

“ஆனா”, என்று பெருமூச்சு விட்டு, “எத்தனையோ பேரோட உழைப்புல உருப்படியா நிக்குதே உசிரில்லாத இந்த கட்டடம், இத வாங்கறதுக்கு இத்தனை பேரு கனவு கண்டுட்டு நிக்கறாங்களே, எப்படி இதை உருத்தெரியாம ஆக்கறது?” என்றவன் கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்டான்.

“எங்கப்பா செத்ததக் கூட எங்களுக்குச் சொல்லாம..? ஹும் அவரு எழுதின உயில யாருக்கும் தெரியாதுன்னு மறைச்சு வச்சிருக்க இல்ல? அதோட காப்பி பத்திரமா என்கிட்டே இருக்கு. நா படிக்கும்போதே என் காலேஜ்க்கு தபால்ல அனுப்பியிருந்தார் உங்க மா..மா.”

“எதுக்குச் சொல்றேன்னா.அந்தாளையே வேணாம்னு குடுத்துட்டோம். அவர் சேத்து வச்ச சொத்து எங்களுக்கு எதுக்கு?, என்று நிறுத்தி.. தொலைவில் இருந்த ஸ்ருதியின் வீட்டைக் கண்ணால் காண்பித்து, “அந்த வீட்டுக்காரம்மா கிட்ட ஏதாவது வம்பு வளத்தன்னு வையி.. நீங்க நிக்க இடமில்லாம பண்ணிடுவேன்”, என்றான்.

அருகே நின்ற மைத்துனனைப் பார்த்து, “சுகு.. நம்ம ஊர்ல இருக்கிற இடம் அது  சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் இவன் தீர்த்துட்டானா பாத்துட்டு வீட்டுக்கு வா”, என்று சொல்லி யோகி சரத் கிளம்பினான்.

கிளம்பும் முன் நினைவு வந்தவனாக, “ஆங்.. அந்த பொண்ணு விஷயம். நாளைக்கு அவங்க பேர்ல வீடு ரிஜிஸ்டர் ஆகணும். சரியா? அப்பறம்.. உன்கிட்ட வாங்கின காசு இருக்குல்ல? அதை உனக்கே அட்வான்சா திருப்பிக் கொடுத்தாச்சு. எங்களுக்கு ஆனா செலவை மட்டும் கழிச்சிகிட்டு மொத்தமா செட்டில் பண்ணிட்டோம். கணக்கு பாத்துக்க”

யோகி சொன்ன உயில் காப்பி என்ற வாசகம் தனபாலனது மொத்த இயக்கத்தையும் நிறுத்தி, யோகியின் பேச்சுக்கு, ‘சரி சரி’ என்பதை (மட்டும்) சொல்ல போதுமானதாக இருந்தது.

)))))))))))))

வீட்டின் மெயின் கேட்டை திறக்கும்போதே.., அவனது வீடு சந்தடியாக இருந்தது. அம்மாவை மாற்றி ஈஸ்வரி, அடுத்து மாதேஷ் என்று மாறி மாறி பேசியது கேட்டது.

“ஹும்.. அடுத்து இந்த பஞ்சாயத்தா?”, என்று அவனுக்குள்ளே சொல்லிக்கொண்ட யோகி.. தனது வீட்டை நோக்கி நாலு எட்டு எடுத்து வைக்கும்போது, “அந்தாளும் இப்படித்தான். தேனா பேசி என்ன நம்ப வச்சு கழுத்தறுத்தாறு. இந்த பையன் அப்படியாகக் கூடாதுன்னு பாத்துப்பாத்து வளத்தேன். இப்போ..”, என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு கேட்டதுன் சட்டென ஒரு வெறுப்பு தோன்ற யோகியின் நடை தளர்ந்தது. ‘ப்ச்.. இவங்க எப்பத்தான் நம்மள நம்புவாங்க?’, என்று ஒரு அயர்ச்சியோடு ஏதும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றான்.

அடுத்து ஈஸ்வரியின்,”எம்மா என்ன நடந்துச்சுன்னே நமக்குத் தெரியாது. அதுக்குள்ள நீ உன் ஒப்பாரிய ஆரம்பிச்சிட்ட? ஸ்ருதிதான் சொல்றாங்கல்ல? அண்ணன் பேர்ல வீட்டை எழுதுறது அவங்களுக்குத் தெரியும்னு?”, என்ற பதிலும் கேட்டது.

‘ஓ! வீட்டுக்காரம்மா இப்படி சொல்லியிருக்காங்களா?’, என்று நினைத்ததும் ஸ்ருதியின் முகம் கண்ணில் தெரிந்தது. ‘நீங்க நம்பற அளவு கூட எங்கம்மா என்ன நம்பலங்க’ என்று மானசீகமாக அவளிடம் சொன்னான்.

“அதான் எதுக்குன்னு கேக்கறேன்? இன்ன பிரச்சனை இருக்கு அதனால இப்படி எழுதறோம்னு சொல்லியிருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும். சும்மா பெருக்கல் குறி போட்ட இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டுட்டு வந்து இங்க எங்கிட்ட கதை சொல்லிட்டு இருக்காதக்கா”, என மாதேஷ் ஸ்ருதியை திட்டுவதும் கேட்டது.

“ஆமாடா, என்ன ஏதுன்னு தெரியாதுதான். ஆனா யோகி செஞ்சா அது சரியா இருக்கும்னு எனக்குத் தெரியும். சரீ.. ஒரு விஷயம் கேக்கறேன் பதில் சொல்லு பாக்கலாம்?  நீங்க எல்லாம் ஏமாத்துக்காரன்னு சொல்றவர் ஏன் வாடகை பணத்தை மாசாமாசம் கரெக்ட்டா குடுக்கனும்?. வீடு அவர் பேர்ல மாத்தி எழுதி இத்தனை மாசம் ஆச்சு. ஈபி, வீட்டு வரி, தண்ணீ வரின்னு எதையாவது அவர் பேருக்கு மாத்திட்டு இருக்காரா? ஏமாத்த நினைக்கிறவங்க இப்படி பண்ணுவாங்களா?”, என்று கேட்ட ஸ்ருதி..

வசந்தம்மாவைப் பார்த்து, “என் தம்பி மாதேஷுக்கு உங்க பையனத் தெரியாது. அவன் சந்தேகப்படலாம். ஆனா நீங்க ஏன் உங்க புள்ளைய நம்பமாட்டேங்கிறீங்க? இத்தனை வருஷமா பாத்துப் பாத்து வளத்து இருக்கீங்கன்னு சொல்லறீங்க, ஆனா எப்போவாவதுஅவர் பக்கம் நின்னு யோசிச்சு இருக்கீங்களா?”

“தன்னோட கல்யாணம் நின்னுபோன அந்த அந்த நேரத்துல கூட, ஈஸ்வரி பத்தியும், அவரை வேண்டாம்னு சொன்ன அந்த பொண்ணோட நல்லதை பத்தியும் எவ்ளோ தீர்மானமா முடிவெடுத்தாரு? நா அவரோட கொஞ்சம்தான் பேசியிருக்கேன். எனக்கு யோகியை புரிஞ்ச அளவு கூட உங்களுக்கு புரியலையே?, அவரோட பேச்சு மட்டும்தான் அகட விகடமா இருக்கும். எனக்குன்னு இல்ல யாருக்குமே யோகி துரோகம் பண்ண மாட்டார். ஏன்னா அவர் துரோகத்தோட காயங்களை பாத்து வளந்துருக்காரு”, என்றாள் ஸ்ருதி.

அங்கேயிருந்த அனைவரும் வாயடைத்துப் போய் நின்றனர். வெளியே தூணருகே நின்ற யோகி உட்பட.

Advertisement