Advertisement

அத்தியாயம் 30 1

தனபாலனின் கட்டிட திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த சர்வேயர் அக்குவேறு ஆணி வேறாக பத்திரத்தைப் புரட்டி, அந்த கட்டிடம் அமைந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தார். 

“இங்க பாருங்க மிஸ்டர் தனபால், ரியல் எஸ்டேட் பீல்டு-ல இருக்கிற உங்களுக்குத் தெரியாததில்ல. அவங்ககிட்ட பேப்பர் தெளிவா இருக்கு. அந்த பொண்ணு ஒரு கேஸ் போட்டா, நீங்க கட்டியிருந்த இந்த பிளாட்ஸ் மொத்தத்தையும் இடிக்க வேண்டி வரும்.”,என்று தனபாலிடம் சொன்னவர்.. அங்கிருந்த கூட்டத்தினரிடம் பொதுவாக, 

“இவங்க இந்த பிரச்சனையா சுமூகமான முறையில தீர்த்துக்கிட்டாங்கன்னா, நீங்க இங்க வீடு வாங்கறதுக்கு அட்வான்ஸ் பண்ணலாம். அப்படி இல்லையா, இதுவரைக்கும் யாராவது வீடு புக் பண்ணி இருந்தீங்கன்னா இப்போவே குடுத்த  அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்கிக்கோங்க. இல்லன்னா குறைஞ்சது ஒரு புரோநோட்-ல யாவது”, தலை திருப்பி தனபாலனை பார்த்து, “இவர்கிட்ட கையெழுத்து வாங்கிக்கங்க”, என்று அறிவித்தார். 

இருபது இருபத்தைந்து பெரி கொண்ட கூட்டம் அடுத்து என்ன செய்வதென்று யோசித்து ஆளுக்கொரு கருத்தாக சளசளக்க ஆரம்பித்தனர். அங்கிருந்தவர்களில் அநேகம் பேர் வீட்டுக்காக ஏற்கனவே தனபாலனின் நிறுவனத்தில் முன்பணம் கட்டியவர்கள்.

அவர்கள் முகத்தில் தெரிந்த நம்பிக்கையின்மையும் வசைகளும் மேடையின் அருகே இருக்கையில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த தனபாலனின் அக்காவை சங்கடப்படுத்தியது.  

தன் அருகே இருந்த மனிதனிடம் தனபாலனை கூப்பிடுமாறு சொன்ன ஜீவிதா, அவன் அருகே வந்ததும், “என்ன தனா இது?”, என்று வருந்தியவர், ஒரு நெடுமூச்சோடு, “சரி விடு. நா அந்த பொண்ணு கிட்ட பேசறேன். முதல்ல இந்த பிரச்சனைய சுமூகமா முடிச்சுக்கறோம்னு எல்லார்ட்டையும் சொல்லு”, என்று கடிந்து கொண்டார்.

சில முக்கியமான முடிவுகளை எடுத்த தனபாலன், மேடையேறி மைக்கைக் கையில் எடுத்துக் கொண்டு, “பிரெண்ட்ஸ் ஒரு நிமிஷம். எல்லாருக்கும் வணக்கம்”, என்று ஆரம்பித்தான். அனைவரும் பேச்சை நிறுத்தி மேடையில் தங்கள் கவனத்தைத் திருப்பினர்.

“உங்களுக்கே தெரியும்,  எங்க தொழில்ல இத்தனை வருஷத்துல இப்படியொரு பிரச்சனை வந்ததில்லை. ஏன்னா, வில்லங்கம் இருக்கிற சொத்தை நாங்க வாங்கினதுமில்லை. இது எங்களுக்கே தெரியாம நடந்த ஒரு சம்பவமா இருக்கலாம். எங்களுக்கு இந்த சொத்து பூர்வீகசொத்துன்னோ, அப்போ இந்த பொண்ணு மேஜர்-னோ தெரியாது”,என்று நிறுத்தினான். 

சுற்றி ஒருமுறை பார்த்து அங்கிருக்கும் எல்லாரும் தன்னை கவனிப்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்ட தனபாலன், “ஆனா இப்போ இவங்க சொல்றது  உண்மைன்னு தெரிஞ்சிடுச்சு. இங்க இருக்கிற சர்வேயர் ஐயா கூட நமக்குத்  தெளிவா விளங்க வச்சாங்க. நீங்க எல்லாரும் முதல்ல என்னை மன்னிக்கணும். இப்படி ஒரு சிக்கல்-ல உங்களை கொண்டு வந்து நிறுத்தினத்துக்கு”,என்று வருந்தியவன்..  

“அப்பறம் நீங்கல்லாம் பெரிய மனசு பண்ணி ஒரு பத்து நிமிஷம் டைம் குடுங்க. நம்ம சர்வேயர் ஐயா சொன்ன மாதிரி இப்போவே உங்க கண்ணு முன்னாலேயே இந்த ப்ராபளத்தை சரி பன்றோம்”, என்று வாக்குறுதி போல சொன்னான். நல்ல லாவகமாக தேர்ந்த அரசியல்வாதி போன்ற பேச்சு. 

அங்கிருந்தோர் அமைதி காத்து தனபாலனின் கோரிக்கைக்கு ஒப்புதல் தர, “லோகு எல்லாருக்கும் ஸ்னாக்ஸ் கொண்டு வரச்சொல்லு. அப்டியே கூல் ட்ரிங்க்ஸ்ம் எடுத்துட்டு வரச்சொல்லு”,என்று மேடையில் இருந்து இறங்கியவன், அக்காவை ஒரு பார்வையில் அழைத்து, நேரே அந்த ஒட்டு வீட்டுப் பெண் இருந்த இடத்திற்குச் சென்றான். தனபாலனின் குறிப்பை அறிந்த அக்காவும் தனபாலனைத் தொடர்ந்து அவ்விடம் சென்றார். 

சுகுமாரன் ஏற்கனவே அங்கேதான் இருந்தான். தனபாலன் வருவதை பார்த்ததுமே, அத்தானுக்கு போன் செய்து விட்டான். யோகியும் அந்த ஓட்டு வீட்டுப் பெண்மணிக்கு நியாயமாக சேர வேண்டியதை பேசி நேரம் கடத்துமாறு சொல்லி தொடர்பை துண்டித்து இருந்தான். 

மேடையில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் அருகே வந்த தனபாலன், அங்கு இருந்த சுகுமாரனை கண்டு கொள்ளாமல் நேரடியாக, “சொல்லுமா, உனக்கு என்ன நஷ்டஈடு வேணும்?”, என்று பேரத்தில் இறங்கினான். 

“எங்களுக்கு யாரும் பிச்ச போடவேணாம். நீங்க பிடிங்கிக்கிட்ட எங்க இடத்த தந்தா போதும்”, என்று சுள்ளென பதில் சொன்னாள், தனது தந்தையின் அகால மரணத்திற்கு இவனும் ஒரு காரணம் என்று நினைத்த அப்பெண்.

“இப்படி சொன்னா எப்படிம்மா? நாங்க என்னவோ வேணும்னே உங்கப்பா கிட்ட இருந்து வீட்டை எழுதி வாங்கினா மாதிரி சொல்றியேம்மா? அவரா வந்தாரு. வித்தாரு. அதுக்குண்டான காசு கொடுத்தோம், இதுல எங்க தப்பு எங்க வருதுன்னு சொல்லு?”, என்றவன்… தொடர்ந்து,

“சரி போனதை பத்தி பேசி பிரயோஜனமில்லை அதை விட்டுடுவோம். நீங்க குடியிருக்க வீடு.. அதுவும் நீ சொன்ன அதே இடத்துல. ப்ளஸ் உங்க இடத்துக்குண்டான மார்க்கெட் ரேட் தர்றேன். சரிதானா?”, என்று நயந்து கூறினான். வந்த வேலை முடிய வேண்டுமே? அதுவும் உடனடியாக. 

இல்லையென்றால், நிறுவனத்தின் பெயரும் இன்றுவரை காப்பாற்றிய நன்மதிப்பும் வீதிக்கு அல்லவா வந்துவிடும்?, தவிர அங்கே கூடி இருப்பவர்கள் குடுத்த முன்பணமெல்லாம் கட்டிடமாக நிற்கின்றபோது அவர்களுக்கு எப்படி பணம் தர முடியும்?    

தனபாலனோடு கூடவே வந்த லோகேஷோ, சுகுமாரனைப் பார்த்து முறையோ முறை என்று முறைத்தான். பல்லைக் கடித்துக் கொண்டு, அடிக்குரலில், “இதெல்லாம் உன் வேலையா? அங்க அந்த பொம்பள கிட்ட இடத்தை வாங்கி தர்றேன்னு ஆசை காட்டி, இந்த பக்கம் இந்த பொண்ணை தூண்டி விட்டு இருக்க? என்ன டபிள் கேமா? வெளிய வருவ இல்ல? பாத்துக்கறேன்”, என்று கருவினான்.  

சுகுமாரனோ கொஞ்சமும் அசராமல், “அதுக்கெதுக்கு வெளிய வர்றது? இப்பயேதான் நல்லா பாத்துக்கயேன்”, என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று லோகேஷை பதிலுக்கு கிண்டல் செய்தான். அச்சமயம் யோகி வீட்டிலிருந்து வந்துவிட்டான். அங்கிங்கு கண்களை சுழல விட்டவன், சுகுமாரைப் பார்த்ததும் நேரே அவனருகே வந்துவிட்டான். 

இவர்கள் பேசுவது அடுத்தவருக்கு கேட்காத வண்ணம் பத்து அடி தொலைவில் இருவரும் நின்றார்கள். “என்ன சுகு?”, என்று யோகி கேட்க..

“நம்ம நினச்சா மாதிரியே போயிட்டுருக்கு அத்தான்”

“ஹ்ம்ம். எல்லாம் சரிதான். ஆனா இந்தம்மா வருவாங்கன்னு நாம யோசிக்கவேயில்லயே?”, என்று ஜீவிதாவைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“அந்தம்மா மட்டுமா? உங்க தங்கச்சியும்தான் வந்துருக்கு..”, என சுகுமாரன் சொல்ல..

யோகியோ சுகுமாரனை எரித்து விடுவதைப்போல பார்த்து, “என்ன மச்சான் லந்தா? எனக்கு ஒரு தங்கச்சிதான். அது வீட்ல இருக்கு..”, என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

தனபாலன் அருகே இருந்த ஜீவிதா, தனது தம்பியும் அப்பெண்ணும் பேசுவதை கேட்டபடி அவர்கள் அருகேதான் நின்றிருந்தார். அவளிடமிருந்து சாதகமான பதிலேதும் வராமல் போகவே ஜீவிதா அப்பெண்ணைப் பார்த்து, “உன் வேதனை எனக்குப் புரியுதும்மா, நம்மளுதுனு நினைச்ச ஒன்னு திடீர்னு மத்தவங்களோடதா ஆகும்போது,  மனசு என்ன கஷ்டப்படும்னு எனக்கு நல்லா தெரியும்”, என்றார் அமைதியாக. 

அவரது சொற்களில் இருந்த ஏதோ ஒன்று அங்கிருந்த அனைவரையும் தாக்க, அப்பெண் நிமிர்ந்து ஜீவிதவைப் பார்த்தாள். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை.

ஜீவிதா தனது பேச்சைத் தொடர்ந்தார், “ஆனா பாரு, இத்தனை பேரோட சொந்த வீட்டுக் கனவு உன்னால கலைஞ்சு போகணுமா? உன் வீடு என்னவோ இடிச்சது இடிச்சதுதான். அது திரும்ப வராது. அப்படி இருக்கும்போது நீ யாருக்கும் பாதகமில்லாம ஒரு முடிவுக்கு வரலாமில்ல?”, என்று கேட்டார்.    

அவளோ சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த சுகுமாரையும் யோகியையும் பார்த்தாள். ஜீவிதா என்ன நினைத்துக் கொண்டாரோ? “ஓ! இவங்ககிட்ட தான் பேசணுமா?”, என்று அவளிடம் கேட்டுவிட்டு, “சொல்லுங்க தம்பி நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க?”, என்று நேரடியாக யோகியைப் பார்த்துக் கேட்டார் அவர். 

தன்னிடம் பாந்தமாக பேசும் இந்த பெண்மணியின் இன்னொரு முகத்தை யோகி தனது பத்து வயதிலேயே அறிவான். ஆனால் இப்போதிருக்கும் பிரச்சனை அதுவல்ல என்பது புரிய, “முதல்ல அந்த பொண்ணுக்கு சட்டப்படி என்ன சேரணுமோ அதை தர்றோம்னு உங்க தம்பி இப்போவே ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி தரணும். எங்க பக்க சாட்சியா அந்த சர்வேயர் ஐயாவும் நானும் இருக்கோம். உங்க பக்கம் நீங்களும் உங்க பொண்ணும் கையெழுத்து போட்டுக் குடுங்க”, என்றான் யோகி. 

பத்து நிமிடத்தில் யோகி கேட்ட பத்திரம் தயாரானது. சர்வேயர், ஜீவிதா அவரது மகள் மூவரும் கையெழுத்து இட்டதும் அந்த பத்திரம் யோகியின் கைக்கு வந்தது.

தனபால், தன்னருகே நின்ற லோகேஷிடம், “இத ஒரு பத்து காப்பி எடுத்துக்க, இங்கிருந்த எல்லார்ட்டயும் கொடுத்து பிரச்சனை முடிஞ்சதுன்னு சொல்லு,உடனே போ”, என்று அனுப்பி  வைத்தான்.

இப்போது தனபாலன் யோகி & கோ வைப் பார்த்து, “சரி நீங்க கேட்டதை நாங்க எழுதிக் கொடுத்துட்டோம். இப்போ அந்த பொண்ணு, பின்னால எந்த ஒரு தொல்லையும் தரமாட்டேன்னு எழுதி தரட்டும்’, என்றான்.

இதற்காகவே காத்திருந்தாற்போல, “அதுக்கு தனியா ஒரு விலை இருக்கே?”,என்றான் யோகி.

தனபாலனின் முகம் கடுமையாக, “என்ன சொல்லறீங்க? நீங்க கேட்டதைத்தான் அவங்களுக்கு குடுத்தாச்சே?”, என்று கேட்டான். 

“அது அவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கு கமிஷன் என்ன தருவீங்க?”, இது சுகுமாரன்.

‘கமிஷனுக்கு அலையும் புரோக்கர் கூட்டமா இவங்க?’, என்று எண்ணிய தனபாலன், ஒரு வித இகழ்ச்சியான முகச்சுழிப்போடு தன அக்காவிடம் இவர்களை கைக்காண்பித்து, “இவங்க வக்கீலுனு நினச்சேன். கமிஷனுக்கு வேலைபாக்கற கழிச..”,என்று யோகி சுகுமார் இருவரையும் பாரத்து வார்த்தையை விட..

சொடக்கிடும் நேரத்தில் தனபாலனின் எதிரே வந்து நின்ற சுகுமாரன், ஆள்காட்டி விரலால் பத்திரம் காண்பித்து, “தப்பா ஒரு வார்த்த வந்துச்சு.., உசுரோட வெளியே போமாட்ட”, என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான். அவனது வேகத்திலும் கோபத்திலும் மலைமுழுங்கி தனபாலனுக்கே கிலி ஏற்பட்டது.

“ப்ச். சுகு.. சும்மாயிரு”,என்று அவனைப் பின்னுக்கு இழுத்தான் யோகி.

“பேச்சு பேச்சா இருக்கட்டும் தம்பிங்களா”, என்று ஜீவிதா இரு தரப்பையும் கண்டித்தார்.

யோகியைப் பார்த்து, “சொல்லுப்பா உங்க டிமாண்ட் என்ன?”, என்று அவரே கேட்கவும் செய்தார்.

யோகியோ அவரோடு பேசுவதை தவிர்த்து, தனபாலனைப் பார்த்து நிதானமாக, “சொல்றோம். கண்டிப்பா செய்வீங்களா?”, என்றான். அவனது கேள்வியை விட அவனது பார்வை கூர்மையாக இருந்தது. தனபாலன் மனதுக்குள் ‘இவனை நாம ஏமாத்தினா மாதிரி தெரிலையே? இவ்ளோ நாளா இவன்தான நம்மள ஏமாத்திட்டு இருந்தான்? ஹ்ம்ம். இவன் யாராயிருக்கும்?’, என்ற சிந்தனை எழுந்தது.

தனது யோசனையினூடே, “கேக்கறது நியாயமா இருந்தா..”, என்று யோகிக்கு பதில் அளித்தான்.

ஒரே ஒரு முறை ஜீவிதாவை பார்வையிட்டு, பின் தனபாலனிடம் திரும்பி, “நீங்க எரிச்ச வயக்காட்டு நிலத்தை அதோட சொந்தகாரங்களுக்கே திரும்பி தரணும், அங்க தண்ணீ சுத்திகரிப்பு ஃபாக்டரி கட்டக்கூடாது”, என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னான்.

யோகி சொன்னதைக் கேட்ட தனபாலனுக்கு சில நொடி ஒன்றும் புரியாமலிருந்து. ஒவ்வொரு வார்த்தையாக மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்கையில் பேசுபவனும், அவன் பேசிய த்வனியிலும் தனபாலனின் வயிற்றில் சில்லென குளிர் பரவியது. முதலில் யோகியை யாரோ என்று நினைத்தவன்தான்.. ஆனால் இதோ இப்போது யோகி பேசிய தோரணையிலேயே எதிரே நிற்பது யாரென தெரிந்து கொண்டான்.

Advertisement