Advertisement

அத்தியாயம் 29 2

யோகி அங்கே சுகுமாரனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்..

கடை வீதிக்குச் சென்று வீடு திரும்பிய வசந்தம்மா, தனது வீட்டில் இருந்து வெளியே வரும் ஸ்ருதியின் தம்பி மாதேஷைத் பார்த்தார். ஒரு சிறு முறுவலோடு, “அடடே வாப்பா மாதேஷ், பர்வதம்மாவ கீழ கூப்பிடட்டுமா?”, என்று வினவினார் வசந்தி.

ஆனால் மாதேஷோ அவரை நிமிர்ந்து கூட பாராமல், “உங்க பையன் எங்க?”, என்று காட்டமாகக் கேட்டான்.

அவனது உடல் மொழியில் முகம் சுருக்கிய வசந்தி, “என்னப்பா? என்ன விஷயம்?”, என்று கேட்க..,

பின்னால் இருந்த அவரது வீட்டைக் கை காண்பித்து,  “அதை உள்ள கேட்டுக்கோங்க, மிஸ்டர் யோகி வந்தா உடனே மேல வரச்சொல்லுங்க”, என்ற மாதேஷ் விறுவிறுவென மாடிக்குச் சென்றான்.   

வசந்தி, “இந்த பையன் எதுக்கு இவ்ளோ கோவமா மேல போகுது?”, என்று தனக்குள்ளே பேசியபடி வீட்டினுள் சென்றார். அங்கே கூடத்தில் ஈஸ்வரி யோசனையாக அமர்ந்திருக்க, அவளருகே பேரன் இல்லாததால், “குட்டி தூங்கறானா ஈஸு?”, என்று கேட்டார்.

அவள் பதில் சொல்லாமல் அலைபேசியை வெறித்தபடி இருக்க, மகளது கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை புரிந்து, “ஏ ஈஸ்வரி, புள்ள என்ன பண்ணுது?”, என்று சத்தமாக கேட்டார். 

சற்றே திடுக்கிட்டு நிமிர்ந்த ஈஸ்வரி அன்னையைப் பார்த்து,  “ப்ச். தூங்கறாம்மா”, என்றாள்.  

“சரீ, என்ன மாதேஷ் என்னவோ உன்கிட்ட கேட்டுக்க ன்னு சொல்லிட்டு போகுது? என்ன விஷயம்? ஏன் அந்த தம்பி நம்ம சரத்-தை கேக்குது?”,என்று மக்களிடம் மானாவாரியாக கேள்விகளை தூவினார்.

“அது..”,என்று இழுத்தவள், “ம்மாவ். நாக்கு ரொம்ப வறட்சியா இருக்கு,கொஞ்சம் டீ போடேன்”, என சற்றே கெஞ்சுதலாகக் கேட்டாள்.

“க்கும். சுடுதண்ணீ குடிக்க உனக்கு வலிக்குது. இப்போல்லாம் நீ நிறைய டீ  குடிக்கற”, என்ற வசந்தி மாதேஷை மறந்து போனார். “ஈஸு, நீ ரூமுக்கு போ. சின்னவன் எழுந்தா அவன் பாட்டுக்கு கைய கால அசைச்சிட்டு கிடப்பான்”, என்று முணுமுணுத்தவாறே அடுக்களை சென்றார் வசந்தி.

“ம்க்கும். உன் பேரன்தானே? இவ்ளோ நேரம் விளையாடிட்டு இப்பதான் தூங்கறான். எப்படியும் எழுந்துக்க ஒரு மணி நேரமாவது ஆகும். நீயும் போயி கொஞ்ச நேரம் தூங்கும்மா. விட்டவிடிகாலைல ஏஞ்சிட்ட”, என்று அம்மாவின் முணுமுணுப்புக்கு பதிலளித்தபடி தனது அண்ணனுக்காக காத்திருந்தாள்  ஈஸ்வரி. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.   

))))

கீழே ஈஸ்வரியின் வீட்டில் யோகி இல்லையென்பதை தெரிந்துகொண்ட விஷாலும் மாதேஷும் நேரே மாடிக்குச் சென்றனர். அழைப்பு மணியை இருமுறை அடித்ததும், பர்வதம் வந்து கதவைத் திறந்தார். 

“அட மாது? உள்ள வாப்பா, விஷால் நீயுந்தான்.உள்ள வா”, என்று சுவாதீனமாக அழைத்தார் பர்வதம். 

ஆனால் ஆண்கள் இருவரும் உள்ளே வராமல் வாசலிலேயே நின்றனர். “பர்வதம்மா, ஸ்ருதி எங்க?”,என்ற விஷாலின் குரலில் மிதமான பதட்டம் இருந்தது. அவனருகே நின்ற மாதேஷ்தான் கோபத்தில் இருந்தான். 

அவனுக்கு அவனது அக்காவின் மேல் கோபம், ‘மூன்றாம் மனிதனை நம்பி மோசம் போனோமே’ என்று தன் மீது கோபம், மறதி நோயுள்ள தனது  தந்தையின் மேல் கோபம், அக்காவின் கையிலும் வயிற்றிலும் பிள்ளையைத் தந்துவிட்டு அல்பாயுசில் இறந்து போன அக்கா கணவன் ராகவ் மேல் தணியாத கோபம், முத்தாய்ப்பாய் எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் கடவுளின் மேல் தீராத கோபம் கொண்டிருந்தான்.  

“நா வரல, அக்காவ வரச்சொல்லுங்க அத்தை. கொஞ்சம் பேசணும்”, என்றான் மாதேஷ். ஸ்ருதியின் வீட்டுக்குள் அவள் அழைக்காமல் உள்ளே வருவதில்லை என்ற அவனது பிடிவாதத்தில் இருந்து சிறிதும் இறங்காமல். 

“அதான் வாசல் வரைக்கும் வந்தாச்சில்ல?, உள்ள வந்தா குறைஞ்சு போயிடுவியா? உள்ள வா”, என்று தம்பியை உரிமையாக கடிந்து சொன்னது சாட்சாத் ஸ்ருதியே தான். 

மாதேஷ் காலிங் பெல் அடித்தபோது, ஸ்ருதி அலுவலகம் செல்ல தயாராக அறையில் புடவை மாற்றிக்கொண்டு இருந்ததால்  அழைப்பு மணி சத்தம் காதில் விழுந்த போதும் கதவைத் திறக்க வரவில்லை. ஆடை திருத்தி வெளியே வரும் முன்பே, வாசலில் இருவரின் பேச்சுக்குரலை வைத்தே  வந்திருப்பது யார் என்று ஸ்ருதிக்குத் தெரிந்து விட்டது. 

‘இந்நேரத்துக்கு தம்பி விஷாலண்ணாவோடு வந்திருக்கிறானே? ஒருவேளை தேவகி மேம் நேத்து சொன்ன விஷயமாக இருக்குமோ?’, என்ற சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் “நா வரல”, என்ற மாதேஷின் பேச்சு, சிறுவயதில் தன்னோடு சண்டை போட்டு சமாதானமாகாமல் முறுக்கிக் கொண்டு நிற்கும் பழைய தம்பியை நினைவு படுத்தியது. இன்னும் எத்தனை நாள் இந்த வரட்டுப் பிடிவாதம் என்று மனதில் தோன்ற, தம்பியை அவளாகவே உள்ளே வா என்று அழைத்தாள். 

 ஆனால் அப்படி ஸ்ருதி வா என்று கூப்பிட்டும், மாதேஷ் தன் அக்காவை முறைத்துக் கொண்டே தான் உள்ளே வந்தான். அவன் பின்னால் விஷாலும் உள்ளே வர..,

“வாங்கன்னா, உக்காருங்க”, என்று வரவேற்ற ஸ்ருதி, இருவரது கடின முகங்களை பார்த்ததும்,இவள் யூகித்தது சரிதான். இது தேவகி பேசிச் சென்ற விஷயம்தான் என்று புரிந்து கொண்டாள். ‘நேற்று பேசியது அதற்குள்ளாக மாதேஷுக்கு சென்று, இதோ கிளம்பி வந்தேவிட்டான். ஹ்ம்ம். நல்ல வேகம்தான்’ 

“என்ன பாமா அக்கா வேலையா?”, என்று ஸ்ருதி தம்பியிடம் குத்தலாகக் கேட்டாள்.

“யார் வேலையா இருந்தா என்ன? உனக்கு பிரச்சனை வந்தா நாந்தான் பாக்கணும்”, என்று சிடுசிடுத்தான் மாதேஷ். 

“ஏன்? நா பாத்துக்க மாட்டேனா?”, அழுத்தமாக ஸ்ருதி. ‘எப்போ இவன் என்னால எந்த ப்ராப்ளத்தையும் சமாளிக்க முடியும்னு ஒத்துக்க போறான்?’, என்று ஸ்ருதிக்குத் தோன்றயது. 

“நீ பாத்த லட்சணம்தான் நல்லாத் தெரியுதே?”, என்று பொறுமையின்றி ஆரம்பித்த மாதேஷ், சற்றே நிதானித்து, “அக்கா நீ என் வாயக் கிண்டாம வீட்டு பத்திரத்தை எடுத்துட்டு வா”, என்றுவிட்டு தனக்குள் பேசுவதை போல விஷாலைப் பார்த்து, “லாயரைப் பாத்துப் பேசி  ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கணும்”, என்றான். 

‘என்ன விஷயத்துக்காக..?’, என்று கேக்க நினைத்த ஸ்ருதி, “மாது எனக்குத் தெரி..”, என்று பேச ஆரம்பித்த நேரம், கீழே மெயின் கேட் திறக்கப்படும் கிறீச் சப்தமும் கேட்டது. விஷால் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, “மாதேஷ், யோகி வர்றாரு”, என மாதேஷிடம் கூறினான். 

இறுகிய முகத்துடன், “அக்கா நீ நா சொன்ன  பத்திரத்தை எடுத்து வை, இதோ வர்றேன்”, என்று ஸ்ருதியிடம் கூறிவிட்டு விடுவிடுவென வெளியே செல்ல ஆரம்பித்தான். 

அவன் பின்னோடு வந்த ஸ்ருதியின், “மாதேஷ் ஒரு நிமிஷம் நா சொல்றத கேளு”, என்ற வார்த்தைகளை சட்டை செய்யாமல் விறுவிறுவென மாதேஷ் கீழே செல்ல, விஷாலும் அவனை வேகமாகப் பின் தொடர்ந்தான். 

ஸ்ரீக்குட்டி பள்ளிக்குச் சென்றிருக்க, ஸ்ருதியுமே மாதேஷ் வரும்போது அலுவகத்துக்குக் கிளம்பிக் கொண்டுதானே இருந்தாள்? இப்போது, தம்பியின் கோபத்தைப் பார்த்ததும்.., தாற்காலிகமாக அவளது தினசரி அலுவல்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஸ்ருதிக்குத் தோன்றியது. 

உடனடியாக அலுவலக மேலதிகாரிக்கு அழைத்து, இன்று விடுப்பு எடுப்பதாக தகவல் அளித்த ஸ்ருதி, அதை பர்வதத்திடம் தெரிவித்தாள். பாமா அக்கா, இப்படி நடக்கும் என்பது தெரிந்தாலோ என்னமோ, மாதுவின் வரவைப் பார்த்ததும் உள்ளே சென்றவர்தான் இன்னும் அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் அவரை நொந்து பிரயோஜனமில்லை என்பது ஸ்ருதிக்குத் தெரியும். தவிரவும், பாமா இங்கே வேலைக்கு வந்த காரணமே அதுதானே? என்று ஒரு பெருமூச்சோடு இவற்றை  யோசித்த ஸ்ருதி கீழே செல்ல தயாரானாள்.

அக்கா தம்பியின் பேச்சைக் கேட்ட அத்தை பர்வததிற்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. ”லீவ் போடற அளவுக்கு என்னம்மா பிரச்சனை? ஏன் மாதேஷ் சத்தம் போட்டுட்டு போறான்? என்ன பத்திரம்?”, என்று கேட்டார். 

மாதேஷ் என்ன விஷயமாக வந்துள்ளான் என்பது இவளுக்கே முழுதாய் தெரியாது.அப்படியிருக்க அத்தையிடம் என்ன சொல்வது?

“அது.. எனக்கும் கொஞ்சம் குழப்பமாதான் இருக்குத்த. அவன் எதையோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கான்னு நினைக்கறேன். யோகி கிட்ட பேசறதுக்கு கீழ போயிருக்கான். கோவம் வந்தா என்ன பேசறோம்னு தெரியாது. அதனால கீழ போறேந்த்தை”,என்று செருப்பை மாட்டிக்கொண்டவள்..

“எல்லாத்தையும் விபரமா அப்பறம் சொல்றேன். குட்டிய பாத்துக்கோங்க”, என்று சொல்லிவிட்டு, வீட்டின் உட்புறமாக பார்த்து சத்தமாக, “பாமாக்கா, அத்தைக்கு சத்துமா கொடுக்கிற நேரமாச்சு”, என்று பாமாவிற்கு கேட்குமாறு சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பாராமல் கீழிறங்கினாள் ஸ்ருதி.

))))))))))))

விழா நடக்கும் இடத்திலிருந்து ஈஸ்வரியின் அழைப்பால் வீட்டுக்கு வந்த யோகி, முதலில் பார்த்தது கூடத்தில் தனக்காக காத்திருக்கும் தங்கை ஈஸ்வரியைத்தான். 

“என்ன ஈஸு, திடீர்னு வரச்சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்க?”, என்று கேட்டவாறே தங்கையிடம் வந்தான். 

“உன்னை தேடிட்டு மாதேஷும் அந்த மூணு வீடு தள்ளி இருக்கிற ஹார்ட்வர் கடைக்காரரும் வந்தாங்க”, என்றாள் அண்ணனின் முகத்தில் ஏற்படப் போகும் மாற்றத்தை கவனித்தபடி..    

“ப்ச். இதுக்கா கூப்பிட்ட? நா எவ்ளோ முக்கியமான..”

“ண்ணா, அவங்க ரெண்டு பேரும் உன்மேல கோவமாயிருந்தாங்க”, என்று யோகியை இடைமறித்தாள் தங்கை.  

“ஈஸு..இப்ப யார் கோவத்தைப் பத்தியும் யோசிக்கற நிலமைல இல்ல”, என்றவன்.. தனக்குள்ளாக, “சரியா வேலை முடியற நேரத்துல.. ப்ச்”, என்று தலையைக் கோதிக்கொண்டான். அதற்குள்ளாக சுகுமாரிடமிருந்து அழைப்பு வந்தது. 

“சொல்லு சுகு..”

“அத்தான் அவங்க செட்டில்மெண்ட்க்கு வர்றேன்னு சொல்றாங்க..”, என்று பதட்டமாக சுகுமாரன் சொல்ல..

‘சட்’ என தலையில் அடித்துக்கொண்டான் யோகி. “சரி, முதல்ல அந்தம்மாக்கு  வேணும்ங்கிறதை பேசிட்டு இரு. நா இப்போ வர்றேன்”,என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

தங்கையைப் பார்த்துக் கண்டிப்பாக அதே சமயம் அவசரமாக, “யாராயிருந்தாலும் அரை மணி நேரம் காத்திருக்கச் சொல்லு ஈஸ்வரி”, என்று விட்டு யோகி வெளியேற நினைக்க.. வாசலில் மாதேஷும் விஷாலும் நின்றிருந்தனர். 

“முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டுப் போங்க”, என்று மாதேஷ் எடுத்த எடுப்பிலேயே ஆரம்பிக்க..

“இங்க பாருங்க, உங்க எல்லா சந்தேகத்துக்கு நா பதில் சொல்றேன். இப்ப நா வெளிய போனும்”, என்று வாசலைக் கடக்க நினைத்தான் யோகி. இவர்களுக்கு பதில் சொல்லி விளக்க இப்போது நேரமில்லை என்று அவன் நினைக்க..

அதென்ன இவன்? ஏமாற்றுவதையும் செய்துவிட்டு பதிலும் திமிராக சொல்கிறானே? என்று மாதேஷ் யோசித்து, யோகியின் வழியை  மறித்தாற்போல் நின்று, “முடியாது. எனக்கு ஒரு விஷயம் க்ளியர் பண்ணுங்க. அக்காகிட்ட இருந்து நீக்க பவர் எழுதி வாங்கினீங்களா? இல்ல வீட்டையே எழுதி வாங்கிட்டிங்களா?”, பேச்சில் கடினம் கூடி கண்களில் அனல் தெறித்தது. 

வழி மறித்து நிற்கும் மாதேஷை, ‘சோப்லாங்கி மாதிரி இருந்துகிட்டு..? என் ஒரு அடிக்குத் தாங்குமா இவன் உடம்பு?’ , என்று  மனதுக்குள் திட்டிய யோகி, வெகு இயல்பாக மாதேஷின் தோளைப் பிடித்து நகர்த்தி, “வீட்ல இருங்க. வந்து சொல்றேன்”, என்று அவனது கண்களைக்  கூர்ந்து பார்த்தபடி அமர்த்தலாக சொல்லி விட்டு வெளியேறினான்.

யோகி சென்றதும் அனிச்சையாக, “ஷ்…”, என்ற மாதேஷ் தனது வலது கையால் இடது தோள்பட்டையை பிடித்துக் கொண்டான். அப்போதுதான் மாதேஷுக்கு அவனது தோள் வலி தெரிந்தது. யோகியின் பிடியில் அத்தனை இறுக்கம். 

தங்களை மீறி வெளியே செல்லும் யோகியை மாதேஷ் பிடித்து நிறுத்தக் கூட முயலவில்லை. யோகியின் குரல் எதிர்த்தோ மறுத்தோ பேசக்கூடிய குரலாக இல்லை. 

அது நேர்மையானவனின் தனித்துவமான ஆளுமை என்பது புரிந்து, மெயின் கேட்டைத் தாண்டிச் செல்லும் யோகியைப் பார்த்தவாறே நின்றிருந்தான் மாதேஷ்.  

 “மேல போயிடலாமா மாதேஷ்?”, விஷால் கேட்கும்போதே..  

“என்னப்பா பிரச்சனை?”, என்று அறையில் இருந்து வெளியே வந்த வசந்தி கேட்டார்.

மாதேஷ் பதில் சொல்லும் முன், “உங்க பையன் யோகி இருக்காருல்ல, அவரு ஸ்ருதி கிட்டயிருந்து பவர் வாங்கிக்கறேன்னு சொல்லி, இந்த வீட்டையே தன் பேருக்கு எழுதிக்கிட்டாரு. அந்த விஷயமாத்தான் பேச வந்திருக்கோம்”, என்று விஷயத்தை போட்டு உடைத்தான் விஷால்.

“என்னது?, என்பையன் சொத்த மாத்தி எழுதிகிட்டானா? என்னப்பா சொல்றீங்க?”, என்று அதிர்ந்து போய் கேட்டார் வசந்தி.

விஷாலோ தன் கருத்தை நிரூபிக்கும் வண்ணம், “உண்மையைத்தான் சொல்றோம்மா, இதோ பாருங்க”, என்று தன்னிடம் இருந்த ஆவணங்களை  நீட்டினான்.     

அவன் நீட்டிய காகிதத்தில் அரசாங்க முத்திரை இருப்பது மட்டுமே வசந்திக்கு புரிந்தது. அதிலிருந்த ஒரு வரி கூட அவருக்கு மனதில் பதியவில்லை. ஆனால் தன்  மகன் யோகி ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டான் என்பது மட்டும் தலையில் ஆணி அடித்தாற்போல பதிந்தது. 

அன்னையின் வெளுத்துப்போன முகத்தைப் பார்த்து கலவரமான ஈஸ்வரி, “அம்மா, அவங்க சொல்றது இருக்கட்டும். யோகண்ணா வந்தோடனே அதுகிட்ட கேளு”, என்றாள்.   

கடினமான முகத்தோடு, “சரத்து இப்ப வந்தானா?”, என்று மகளிடம் கேட்டார் வசந்தி.

“ஆமாம்மா, கொஞ்ச நேரம் முன்ன வந்திச்சு”, ஈஸ்வரி. 

ஈஸ்வரி சொல்லும்போதே விஷாலும், “நாங்க பேசிட்டு இருக்கும்போதே வெயிட் பண்ணுங்க இப்ப வந்திர்றேனு அதிகாரமா சொல்லிட்டு போயிட்டார்மா”, என்றான். அவனுக்கு எப்படியும் யோகியை அவனது அம்மாவை வைத்து மடக்கி, ஏமாற்றப்பட்ட ஸ்ருதிக்கு நியாயம் செய்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. 

வசந்தி ஈஸ்வரியிடம், “சுகு எங்கேயிருக்கான்னு போன் போட்டு கேளு”, என்று சொல்ல..

“அம்மா அண்ணனே கொஞ்ச நேரத்துல வந்திடறேன்னு சொல்லி இருக்கு..”, என்று இழுத்தாள்.   

“ஈஸு.. சொன்னதை செய்யின்னு எத்தனை தடவ உங்கிட்ட சொல்லியிருக்கேன்?”, என்று கண்டிப்புடன் வசந்தம்மா கேட்க.. 

ஈஸ்வரி, வேறு வழியின்றி கையிலிருந்த அலைபேசியில் தனது கணவனான சுகுமாருக்கு அழைத்தாள்.

நான்காவது ரிங்கில் தொடர்பு கொண்டவன், “ம்ம். சொல்லு”, என்றான்.

“யோகன்னே உங்க கூடத்தான் இருக்கா?”, எனக் கேட்டாள்.

“இல்ல ஈஸு, இங்கதான் வர்றேன்னு சொன்னாரு  இதோ இங்க நம்ம வீட்டுப் பக்கத்துல ஒரு பங்க்ஷன் நடக்குத்தில்ல? அங்க தான் இருக்கோம்”, என்றவன், அப்போதுதான் நினைவு வந்தவனாக.., “என்ன அத்தானுக்கு மெசேஜ் அனுப்பின? இப்போ எனக்கு போன் போட்டு இருக்க?”, என்று கேட்டான்.

“ஒண்ணுமில்ல சும்மாத்தான்..”, என்று சொல்லி, “சரி வச்சிடறேன்”, என்று தொடர்பைத் துண்டித்தாள். 

“ம்மா. பக்கத்து கிரவுண்டுல என்னவோ விழா நடக்குதாம், அங்க தான் ரெண்டு பேரும் இருக்காங்க”, ஈஸ்வரி.

“பக்கத்துல புது பிளாட்ஸ் கட்டி இருக்காங்கம்மா, ஸ்ருதி வீட்டுக்கு வந்து தகராறு பண்ணினாங்க இல்ல? அந்த கட்டிடக்காரங்கதான் ஒரு பார்ட் முழுசா கட்டிடாங்க. அவங்க நடத்துற பங்க்ஷன்தான் அது. அவங்க சொல்லித்தான் யோகி இப்படி எழுதி வாங்கியிருக்கணும். ஏன்னா கொஞ்சநாளா உங்க மாப்பிள்ளை சுகுமார் தனபால் ஆபீஸ்க்கு  போகவர இருந்தாரு. நானே பாத்துருக்கேன்”, என்று விஷால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினான்.

“அம்மா இவங்க சொல்றது எந்த வரைக்கும் நிஜம்னு நமக்குத் தெரியாது, அண்ணே வரட்டும்,கேப்போம்”, என்றது ஈஸ்வரி. தனது கையிலிருந்த காகிக் காண்பித்து, “என்னத்தடீ கேக்கறது? இந்தா நீட்டறாங்கல்ல ஆதாரம்?”, என்று வசந்தி மகளிடம் காய்ந்தார். அப்போது பார்த்து ஸ்ருதி உள்ளே வர, ஈஸ்வரி பதில் சொல்ல இயலாமல் அமைதியாக இருந்தாள். 

“என்ன ஆதாரம்? என்ன மாது எல்லாம் உன் வேலையா?”,என்று ஸ்ருதி கேட்க..

“இல்லமா உன் தம்பி மேல எந்த தப்பும் இல்ல, உனக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது”

“என்ன தெரியாதுன்னு சொல்லறீங்க வசந்தம்மா?”

“அது வந்து என் பையன் வீட்டை தன்னோட பேருக்கு மாத்தி எழுத்திகிட்டான்ங்கிற ..”

“ஆமா, அவர் பேர்ல நாந்தான் எழுதிக் கொடுத்தேன். எனக்கு அந்த தனபாலன் கிட்ட இருந்து பாதுகாப்பு வேணும்ங்கிறதுக்காக பண்ணினோம். அதனால என்ன பிரச்சன?”, என்று கேட்டு அங்குள்ளோரை திகைப்பில் ஆழ்த்தினாள் ஸ்ருதி.

Advertisement