Advertisement

அத்தியாயம் 28 2
ஆயிற்று இதோ அதோவென இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தனபாலனின் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தொகுப்பு கட்டி முடிக்கப்பட்டு பிரபல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ருதி பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். ஈஸ்வரி பிள்ளைக்கு ஐந்தாம் மாதம் ஆனதும் ஊர் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது. 
நந்தினி, ஸ்ருதியின் வீட்டின் அருகே இருந்த அவளது வீட்டை காலி செய்து விட்டு மாமியார் வீட்டுக்கே வந்து விட்டாள். இப்போது விஷாலோடு அவனது கடைகளுக்கும் சென்று வர ஆரம்பித்து இருந்தாள். 
அவளது தனிப்பட்ட அலைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்யாமல் கிடப்பில் போட்டாள். அம்மா மற்றும் சொந்தங்களோடு பேச விஷாலின் வீட்டில் இருந்த லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டாள். மொத்தத்தில் ‘ரமணன்’ என்ற பெயர் கூட நினைவில் வராதிருக்க எல்லாவற்றில் இருந்தும் தள்ளி நின்றாள். 
ஒரு நாள் கடையில்  இரண்டாவது பிரான்ச்-ல் நந்தினி இருக்கும் போது தொலைபேசி அழைத்தது.பேசியை அதன் தாங்கியில் இருந்து எடுத்த நந்தினி வழக்கம் போல, “விஷ்ணு ஹார்ட்வர்ஸ்”,என்று முகமன் உரைத்தாள்.
“நதி..நந்தினி”, என்ற ரமணனின் குரல் கேட்டதும் ஒரு நொடி உடல் விரைத்து நின்ற நந்தினி, பின் சாதாரணமாக “எஸ், சொல்லுங்க மிஸ்டர் ரமணன்”, என்று கேட்டாள்.
ரமணனுக்கு அந்த ஒரு நொடி மௌனமும் அடுத்து நந்தினியின் குரலில் இருந்த விலகலும் பளிச்சென்று புரிந்தது. ‘அவ்வளவுதான். துண்டித்துக் கொண்டாள். இனி நந்தினியை  சிநேகிதியாய்க் கூட கருத முடியாது. ஆனால் அவள் நலம் என்னால் கெடுவதாய் இருந்தால்? அதை மட்டுமாவது தெரிந்து கொள்ள வேண்டும்.’  
“நந்தினி.. அன்னிக்கு நீ போனதுக்கப்பறம் உன் மொபைலுக்கு ட்ரை பண்ணினேன். ஸ்விச் ஆஃப் ன்னு வந்துச்சு. அடுத்த நாள்,அதுக்கடுத்த நாள்னு கால் பண்ணிட்டே இருந்தேன். உன்னை காண்டாக்ட் பண்ண முடில. ஜஸ்ட் ஒரே ஒரு விஷயம் தெரியணும். உன் வீட்ல உன்ன டார்ச்சர் பண்றாங்களா?, என்னால உனக்கு எதாவது ப்ராப்ளமா?”, கவலையாக ரமணன் கேட்டான்.
“இல்ல, எந்த பிரச்சனையும் இல்ல. நான்தான் மத்தவங்கள டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன். அதோட போன் தேவையில்லன்னு நான்தான் ரீசார்ஜ் பண்ணாம இருக்கேன்”
“வந்து.. நீ இங்க வந்தது.. விஷால்..க்கு ..?”
“இதுவரைக்கும் தெரியாது”, என்று சொல்லிவிட்டு, மெதுவாக, “ஆனா சொல்லுவேன். கண்டிப்பா சொல்லுவேன். ஹூம். எப்போவாவது, நா சாகறதுக்குள்ள..”
“நந்தினி ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத, எனக்கு ரொம்ப கில்டியா ஃபீல் ஆகுது. நா உன்ன எவ்ளோ விரும்பினேன்னு உனக்குத் தெரியும். நீ எப்போ வந்தாலும் உன்ன ஏத்துக்கத் தயா”,என்று ரமணன் பேசும்போதே நந்தினி குறுக்கிட்டாள்.
“ஷட் அப் ரமணன். இது நாம ஏற்கனவே பேசிட்டோம். மறுபடியும் சொல்றேன். நா எப்படி உங்க கூட வரணும்னு எதிர் பாக்கறீங்க? அன்னிக்கி நடந்த இன்சிடென்ட்-னாலயா? தெரியாம உணர்ச்சி வேகத்துல ன்னு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்,உண்மை நம்ம ரெண்டு பேர் மனசுக்கும் தெரியும்.”
“தப்பு பண்ற தப்பு பண்ற’ன்னு என் மனசாட்சி அடிச்சிக்கிட்டது இன்னும் தெளிவா எனக்கு ஞாபகமிருக்கு.. ஆனாலும்..”, ஒரு பெருமூச்சொன்றை எடுத்து, “மோகத்தைக் கொன்றுவிடு-ன்னு பாரதி ஒன்னும் சும்மா பாடல”, என்று சொல்லி சில நொடிகள் அமைதியாய் இருந்தாள். 
அதன் பின், “நடந்தத மாத்த முடியாது ரமணன். சப்போஸ் நீங்க சொல்றமாதிரி உங்க கூட வந்தேன்னு வைங்க.. தர்ஷித்தை என்ன பண்ணுவேன்? அவன் கழுத்த நெரிச்சுக் கொன்னுட்டு உங்க கூட வர்ற அளவு நா காமத்துக்கு அடிமையாகல ரமணன்.”
அவசரமாக, “நந்தினி நா தர்ஷித்தை வேணாம்னு…”, என்று ரமணன் குறுக்கிட,
“கரெக்ட். நீங்க அவனையும் ஏத்துப்பீங்கதான். ஆனா கூட்டிட்டு வந்தப்பறம், நீங்க அவனை சாதாரணமா திட்டறதோ அடிக்கறதோ எனக்கு வேற மாதிரி தெரிஞ்சா?”
“அவ்வளவு ஏன்? நீங்க அவனுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி குடுத்தாக் கூட, ‘கள்ளகாதலியின் குழந்தையை விஷம் குடுத்துக் கொன்றான்’-ன்னு எப்போவோ நியூஸ்ல பாத்தது எனக்கு ஞாபகம் வந்துச்சுன்னா..?”
“நந்தினி..”, மறுமுனையில் ரமணன் அதிர்ந்து நின்றான். ஆனால் அவன் இடையிட்டதை கவனியாமல் நந்தினி தொடர்ந்தாள்..
“சரி அவனை விஷால் கிட்ட விட்டுட்டு வந்தா என்னாகும் தெரியுமா? ‘அவன் என்ன பண்றானோ? யாரு கிட்ட எப்படி அவமானப்படறானோ’ ன்னு அந்த குற்ற உணர்ச்சிலேயே நா செத்துட மாட்டேன்?”
“அவ்வளவு தூரம் போவானேன்? உங்களால கூட என்னோட இயல்பா இருக்கமுடியாது. எங்க ரெண்டு வார்த்த அதிகமா பேசினா வேற யார்கூடவாவது போயிடுவாளோன்னு ஒரு பயம் உங்களை அறியாமலேயே உங்களுக்குள்ள இருக்காது?”
“இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு யோசிச்சுதான் நா உங்க கூட வரலைன்னு தயவுசெஞ்சு நினைச்சிடாதீங்க. ஏன்னா நா அன்னிக்கு எடுத்த முடிவு.. சுயகட்டுப்பாடு இல்லாத நா உலகத்தவிட்டு போகணும்னுதான். ஆனா.. கடவுள் எனக்கு ரெண்டாவது வாய்ப்பு குடுத்துருக்காரு.” 
“ஏன்னா நா உங்களை காதலிக்கலை. ரெண்டு பேருக்கும் ஒத்த கருத்து, நல்ல ரசனை, இதமான பேச்சு, இதுதான் என்னை உங்களோட பேசிப் பழக வச்சுது. ஆனா உங்கக்கூட பேசும்போதெல்லாம் , ஏன் விஷால் இப்படி இல்ல? ஏன் அவர் என்னோட இப்படி பேச மாட்டேங்கிறார்? ஏன் இப்படி ரசனையான தேடல் அவருக்கு வரமாட்டேங்குது? ன்னு தான் நினச்சேன். என்னோட ஒவ்வொரு யோசனைக்கு பின்னாலயும் அவர் இருந்தார் ரமணன்.”
விரக்தியாய் சிரித்து, “ஹ்ம்ம். அவர் ஏன் எனக்கு பிடிச்சா மாதிரி இல்லன்னு நினைச்சேனே ஒழிய, அவரு எந்த மாதிரி பொண்டாட்டிய எதிர்பார்த்து இருப்பாரு? நாம அப்படி இருக்கோமான்னு யோசிச்சதில்ல.”
“அவருக்குள்ள என்னை விதைக்கறத விட்டுட்டு  உங்களுக்குள்ள அவரை தேடியிருக்கேன். கொஞ்சம் தெளிவா நா யோசிச்சு இருந்தா இந்த தொல்லையெல்லாம் வந்திருக்காது”
“நல்ல வேளையா, அன்னிக்கு பாதுகாப்பான நாள். இல்லை ஏதாவது ஏறுக்கு மாறான விளைவுகள் நடந்திருந்தா..  யாரோடதுன்னு தெரியாம.. ச்சே ச்சே சொல்லவே கூசுது. ப்ளீஸ் ரமணன் விட்டுடுங்க.”
“கடல் பாக்கறதுக்கு நல்லா இருக்கும் ரமணன். ஆனா அதுல குளிக்க முடியாது, குளிச்சாலும் உப்பு நமநமன்னு உடம்பு பூரா இருக்கும். நிம்மதியா ஒரு நாள் கூட தூங்க முடியாது. அவங்கவங்க வீட்டு கிணத்துத்  தண்ணீல குளிச்சாதான் ஆரோக்கியம். இது தெரியாம ஒரு தடவ கடல்ல முங்கிட்டோம். நா குடும்பத்தை காவலா வச்சுகிட்டு என் உப்ப கரைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். கடல் தூரமாவே இருக்கட்டும் அதான் எல்லாருக்கும் நல்லது”, என்று கட் செய்ய நினைத்தவள்…
“இனிமே தயவுசெஞ்சு போன் பண்ணாதீங்க”,என்று விட்டு பேசியை அதன் தாங்கியில் வைத்தாள் நந்தினி. அவளது மனம் நிச்சலனமாக இருந்தது. 
))))))))))))))
அடுத்தடுத்த வாரங்கள் சாதாரணமாகச் செல்ல, ஒரு ஞாயிறு அன்று கீழ் வீட்டுக் குருக்கள் மாமி, சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு நிவேதனமாக ஆயிரத்து எட்டு மோதகம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார். என்ன விபரம் என்று கேட்டதற்கு யாரோ ஒரு பக்தர் அவரது வேண்டுதலுக்காக தயார் செய்ய சொல்லியிருக்கிறார் என்று பர்வதம்மாவிற்குத்  தெரியவந்தது.  
“மோதகம் பன்றதுதானே? நீங்க மாவும் தேங்கா பூரணமும் பண்ணி குடுங்க மாமி. அழகா உக்காந்துகிட்டே சொப்பு செய்து தர்றேன்”, என்று பர்வதம்மா மாடியில் இருந்து மெல்ல கீழே வந்திருந்தார். அவரது தொத்துக்குட்டியாக பேத்தி. 
வீட்டில் இருந்த ஸ்ருதி வரும் வாரத்திற்கான துணிகளை இஸ்திரி கடையில் கொடுப்பதற்காக கட்டைப் பையில் எடுத்து வைத்தாள். முடிந்தவரை குட்டி தூங்கும்போதே தனது வேலைகளை முடித்து விடுவாள். அவன் எழுந்துவிட்டால் அவனோடு சுற்றவே நேரம் சரியாக இருக்கும்.  
பாமா அக்கா அவரது மகனோடு தொலைபேசியில் பிசியாக இருந்தார். வீட்டு வாசலில் அரவம் கேட்க, ஸ்ருதி எட்டிப்பார்த்தாள். மூச்சு வாங்க அவசர அவசரமாக தேவகி வருவதை பார்த்து, “வாங்க வாங்க”, என்று வரவேற்றாள் ஸ்ருதி. 
“என்ன இவ்ளோ தூரம்? நாளைக்கு காலைலே ஆபீசுக்குத்தானே”, வரப்போறேன் என்று சொல்ல நினைத்து நிறுத்திக் கொண்டாள். என்னவோ சரியில்லை. அதுதான் இத்தனை அவசரமாக தேவகி  வந்துள்ளார் என்று புரிந்து கொண்டாள்.
மின்விசிறியை சுழல விட்ட ஸ்ருதி, “உக்காருங்க”, என்றுவிட்டு  கிட்சன் சென்ற பெரிய டம்பளரில் நீர் கொணர்ந்து குடுத்தாள். அவருக்கும் அது தேவையாக இருக்கவே, வாங்கி மடக் மடக்கென வாயில் கவிழ்த்துக் கொண்டார். 
 “என்னாச்சு?”, ஸ்ருதி.
தேவகியோ, “நீ வீட்டை வித்துட்டியா என்ன?”, என்று பதில் கேள்வி கேட்டார்.
“இல்லையே, யார் சொன்னா?”
“இதோ பாரு முழு பக்க விளம்பரம்..”, என்று ஒரு தினசரி பேப்பரின் முதல் பக்கத்தைக் காண்பித்தார். “இதுல மட்டுமில்ல, இன்னும் நாலஞ்சு பேப்பர்ல ஆட் வந்துருக்கு”
“இது பக்கத்துல கட்டிட்டு இருக்காங்க இல்ல? அந்த அபார்ட்மெண்ட்-டோட விளம்பரம் மேடம்..”, என்று ஸ்ருதி விளக்க..
“இல்ல, முதல்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். இங்க இதுல பாரு, பேஸ் ஒன் பேஸ் டூ ன்னு ரெண்டுத்துக்கும் சேர்த்து வந்திருக்கிற விளம்பரம். நல்லா பாரு, உன் வீடு உனக்கு அடுத்த வீடுன்னு எல்லா இடத்தையும் சேர்த்துதான் அடுத்த அடுக்குமாடி கட்டிடம் வரப்போறதா விளம்பரம் குடுத்துருக்கான்.”
“ஓ! அப்படியா இருக்கு..?”, என்று பேப்பரை இன்னும் கூர்ந்து கவனித்தாள். ஆம் அடுத்த வீட்டுக்கு அருகே இருக்கும் சிறிய விநாயகர் கோவிலில் இருந்து பேஸ் இரண்டு ஆரம்பிப்பதாக வரைபடம் காண்பித்தது. வயிற்றுக்குள் சின்னதாய் ஒரு கலவரம்.
“அபார்ட்மெண்ட் கட்ட தரமாட்டேன்னு ராகவ் சொன்ன இடத்தை  கொடுத்திருக்க ஏன்? அந்த பில்டர் ஏதாவது செஞ்சிடுவேன்னு மிரட்டினானா?”,தேவகி அடுக்கடுக்காக கேள்வி கேட்டார்.
“மிரட்டிப் பாத்தான். ஆனா நா தரல”
“அப்ப எப்படி இப்படி ஒரு விளம்பரம் வந்திருக்கு? அதுவும் நாளைக்கு வீடு வாங்க வர்றவங்க அட்வான்ஸ் தொகை குடுத்து பதிவு பண்ணிக்கலாம்னு கொட்டை கொட்டையா போட்டிருக்கு?”
ஸ்ருதி, “தெரிலையே மேடம்..?”, குழம்பினாள்.
“சரி, என்னால இதுக்கு மேல நின்னு இத பத்தி பேசமுடியாது. வீட்ல என் நாத்தனார் வர்றாங்க. இந்தா பேப்பர்ல எழுதியிருக்கிற இந்த வெப்சைட்க்கு போ. போய் உன்னோட பட்டா நம்பரை வச்சு, வில்லங்க சர்டிபிகேட் கேளு. உடனே பிடிஎப் பைல் உன்னோட மெயில் ஐ டிக்கு அனுப்புவாங்க. அதை ஒரு முறை நல்ல்லா படிச்சுப் பாரு”, என்று விட்டு, வெளியே காத்திருந்த ஆட்டோவில் வந்த வேகத்தில் கிளம்பினார் தேவகி.  
“என்ன ஸ்ருதி தேவகிம்மா வந்தாங்க உடனேயே போயிட்டாங்க…?”, என்று பாமா அக்கா கேட்டார்.
மொபைல் திரையைப் பார்த்துக்கொண்டே, “என்னவோ வீட்டுப் பத்திரத்தை சரி பாரு. பிரச்சனை இருக்கு போலிருக்குன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டு இருக்கேன்”, என்றாள் ஸ்ருதி. 
பாமா போனை எடுத்துக்கொண்டே அடுக்களைக்கு நுழைந்து, மாதேஷுக்கு இத்தகவலை அனுப்பினார்.  
ஸ்ருதி.. தேவகி சொன்னதுபோல, தனது மொபைலில் அவர் குறித்துக் கொடுத்த உரலியைத் தட்டினாள். அது நேரே தமிழக பதிவுத்துறை (tnreginet.gov.in) என்ற தளத்துக்குச் சென்றது. 
அதில் இவளுக்கு தேவையான தரவுகளை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்தாள். வீட்டின் பட்டா எண், பிரிவு என் என்று அனைத்தையும் குடுத்த பின், அது வில்லங்க சான்றிதழை பெற்றுக்கொள்ள சொன்னது. வில்லங்க சான்றிதழ் என்பது ஒரு குறிப்பிட்ட சொத்து எப்போதெல்லாம் விற்பனை, அடமானம், பவர் மாற்றம் செய்தல், வாரிசுகளுக்கு பாகம் பிரித்துக் கொடுப்பது  போன்ற விஷயங்களை.. பதிவு செய்த தேதி வாரியாக காண்பிக்கும் ஆவணம் ஆகும்.   
அந்த கோப்பினை திறந்து படித்த ஸ்ருதிக்கு முதலில் குழப்பம், பின் வருத்தம் வந்தது. சிறிது நேரம் கண்மூடி அமர்ந்து இருந்தபின் ஒரு தெளிவான மனநிலைக்குச் சென்றாள் ஸ்ருதி. 
+++++++++++++++++ +++++++++++
தோழமைகளே..
இன்னும் ரெண்டு எபிசோட் தான் பிளான் பண்ணி இருக்கேன். சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்.
இடைவிடாத உங்க எல்லாரோட ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி.
உங்களோட லைக்ஸ்-ம் கமெண்ட்டும் தான் என்ன மாதிரி ஆளுங்களுக்கு எனெர்ஜி ட்ரின்க் + சத்து மாத்திரை.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளுடன்..

Advertisement