Advertisement

அத்தியாயம் 27 2
“நந்தினி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பேங்க் மேனேஜருக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதால அவரை பாக்கப் போனீங்க. அதை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, அண்ணாக்கு சொல்லாம போனீங்க பாருங்க. அங்க உங்க தப்பு ஆரம்பிச்சிடுச்சு. உணர்ச்சி வேகத்துல தெரியாம நடந்துச்சு, அவர் கட்டாயப்படுத்தினதால-ன்னு என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், நீங்க உங்க சுய நினைவோடதான் தப்பு பண்ணி இருக்கீங்க. அதுனால வந்த குற்ற உணர்ச்சில இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனா..?”
மருத்துவமனை அறையில் அழுத்தழுது ஓய்ந்த கண்களுடன் இருந்த நந்தினி ஸ்ருதி என்ன சொல்ல வருகிறாள் என்பது போல அவளை பார்த்தாள். 
“விஷாலன்னாக்கு தகவல் சொல்லிட்டேன். வந்துட்டு இருக்காரு. அடுத்து எதுவாயிருந்தாலும் அவர் வர்றதுக்குள்ள முடிவு பண்ணிடுங்க.”, நிதானமாக பேசினாள் ஸ்ருதி. தொடர்ந்து.. 
“எனக்கு காதல் தெரியாது நந்தினி. அதுலயும் உங்க காதல் எனக்கு சுத்தமா புரியல. இதுக்குப் பேரு காதலான்னும் தெரில. ‘இப்போவே வா கடைசிவரைக்கும் காப்பாத்தறேன்னு.. உங்க அந்த.. அவர்.., பாருங்க அவரை என்ன முறை சொல்லி கூப்பிடறதுனு கூட தெரில, சொல்றாருன்னு சொல்லறீங்க. அது எவ்வளவு தூரம் சரியா வரும்?.”
“விஷால் அண்ணா இருக்கும்போது அடுத்தவங்க உங்க மனசுல வந்துருக்காங்கன்னா தப்பு உங்க மேலயா இல்ல அண்ணா மேலயா இல்ல, கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சும் உங்க கூட பழக நினைச்ச அந்த ஆளு மேலயா? யார்து தப்பு?.”
“அண்ணாகிட்ட உங்களுக்கு என்ன பிடிக்கலைன்னு எனக்குத் தெரில. நா சாதாரண ஆளு. எனக்கு உங்களைப் போல ரொம்ப விவரமெல்லாந் தெரியாது. ஆனா, விஷாலன்னா குடிக்கமாட்டாரு, வேற எந்த தப்பான பழக்கமும் கிடையாது. அவரைப் பாத்தா வொய்ப்-பை அடிக்கிற ஆளா தெரில. அதே போல, சிறுக சிறுக சேர்த்து வைக்கிற நார்மல் மிடில் க்ளாஸ் ஆளு”
“அண்ணா கிட்ட ஒரு வேலைய சொல்லிட்டா, நம்ம அதை மறந்துபோயிடலாம். ஏன்னா அவர் எப்பாடுபட்டாவது  முடிச்சிடுவார். அவ்ளோ பொறுப்பானவரு”.
“ஆனா, எல்லாரோட எதிர்பார்ப்பும் ஒரே மாதிரி இருக்காதுன்னும் எனக்குப் புரியுது. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல புருஷனுக்கான தகுதி இவ்ளோதான். உங்களுக்கு எப்படியோ..?”
மெல்லிய நீண்டதொரு பெருமூச்சு விட்ட ஸ்ருதி, “எதுவாயிருந்தாலும் நல்லா நிதானமா யோசிச்சு முடிவெடுங்க நந்தினி.”
“அப்படியும் உங்களுக்கு முடிவெடுக்க முடில, மனசு சமாதானமாகலையா, உங்க மாமியார் வீட்டுக்கு போயி உங்க பையனோட கொஞ்சநாள் இருங்க. அங்க தர்ஷித்தோட சேர்த்து நாலு பசங்க இருக்காங்க. உங்களுக்கும் ரிலாக்ஸ்டா இருக்கும் ”
“ம்ம். நானும் அங்க போலாம்னுதான் இருக்கேன்”, என்று நந்தினியிடம் இருந்து முதல்முறையாக தெளிவானதொரு பதில் வந்தது. 
“அப்ப அண்ணாகூடத்தான்? இல்லியா?”
“ம்ம்”, என்று உறுதியாக நந்தினி தலையசைக்க, ஸ்ருதிக்கு ‘ஹப்பாடா’ என்பதாய் ஒரு விடுதலை உணர்வு. 
ஆனால் அந்த ஆசுவாசத்தை நீடிக்க விடாமல், நந்தினியின்  முகம் கசங்கிச் சுருங்கவும், “என்னாச்சி?”, என்று ஆறுதலாய்க் கேட்டாள் சுருதி. 
“அது.. அவர்.. அவர்..”,என்று திணறிய நந்தினி, “வந்து அவர் தொட்டா எனக்குக் கூசிப்போகுது. எச்சில் பண்டமாயிட்டோமேன்னு..”, கூற மளுக் கென்று அவள் கண்களில் கோர்த்திருந்த நீர் கீழே கன்னத்தில் இறங்கியது. 
ஸ்ருதிக்கு ஐயோ என்று இருந்தது. என்ன அழகான பெண்? இப்படி பேசுகிறாளே? “சேச்சே இதென்ன பண்டம் கிண்டம்னு சொல்லிட்டு..?, அழக்கூடாது. பாருங்க, தப்பே பண்ணாதவங்கனு இந்த உலகத்துல ஒருத்தராவது இருக்காங்களா சொல்லுங்க? அவங்கெல்லாம் பூமில வாழல?”
“நாம பயப்படவேண்டியது நம்ம மனசாட்சிக்கு மட்டும்தான். அதுதான் கடைசிவரைக்கும் நம்மகூட வரும். அதான் நம்ம முதல் நண்பன், அதுபோல அதேதான் நம்ம முதல் எதிரி. யாருக்கு துரோகம் பண்ணினாலும் அதுக்கு மட்டும் நம்ம துரோகம் பண்ணவே முடியாது. உள்ள ஒருத்தரும் வெளிய இன்னொருத்தரும்னு மனசை அலைபாய விடாம தெளிவா இருங்க. நம்மள நாமளே மன்னிக்கலைன்னா வேற யார் மன்னிப்பாங்க சொல்லுங்க?” 
“ஒன்னே ஒன்னு சொல்றேன் நந்தினி. லைஃப்ல நமக்கு யாரும் சந்தோஷம் குடுக்கலைன்னு வருத்தப்படறத விட, நம்ம யாரோடைய  சந்தோஷத்தயும் கெடுக்காம, மத்தவங்களுக்கு கொஞ்சமாச்சும் உபயோகமா இருக்க முடியுமான்னு  யோசிச்சோம்னா போதும். வாழ்க்கை அருமையா இருக்கும்”, என்று சொல்லி எழுந்துகொண்ட ஸ்ருதி, நந்தினியின் மருந்து மாத்திரைகளை ஒரு கவரில் எடுத்து வைத்தாள். 
காஃபி வேணுமா என்று கேட்க நந்தினியின் அறைக்கு வந்த யோகி, பெண்களின் பேச்சு சத்தத்தில், அதிலும் நந்தினியின் அழுகைக் குரல் கேட்டு, தற்போதைய நிலையில் மனம்திறந்து பேசுவதுதான் அவளுக்கு நல்லது’ என்று எண்ணி அறைக்கு வெளியே இருந்த நீண்ட இருக்கையில் அமர்ந்து கொண்டான். 
ஒற்றை சுவர் இடைவெளி மட்டும் இருந்தபடியால் அறைக்கு உள்ளே பேசுவது யோகிக்கு சன்னமாகக் கேட்டது. குறிப்பாக ஸ்ருதி சொன்ன ‘சந்தோஷமா இருக்கோமோ இல்லியோ அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கனும்’, என்பது தெளிவாகக் கேட்டது. 
யோகியின் முகத்தில் மெலிதானதொரு  புன்னகை அமர்ந்துகொண்டது. காரணம் இவன் ஸ்ருதி சொன்னதை வாழ்நாள் கோட்பாடாக கடைபிடிப்பவனாயிற்றே? 
)))))))))
ஒரு மணி நேரம் கடந்திருக்க.. விஷால் வந்தான். நந்தினியைப் பார்த்த அவனது கண்களும் கலங்கியிருக்க இருவரும் ஏதும் பேசவில்லை. 
மருத்துவமனை செலவினங்களை செட்டில் செய்து, ஸ்ருதி பேக் செய்திருந்தவற்றை கையில் எடுத்துக் கொண்டான். அனைவரும் புறப்பறத்தயாராக இருக்க, “போலாமா?”,என்று ஸ்ருதி கேட்டதும் நந்தினி சரியெனத் தலையசைத்து நலுங்கியிருந்த ஆடை திருத்திக்கொண்டு கார் நிறுத்துமிடம் சென்றார்கள்.
ஸ்ருதியும் யோகியும் வந்த கார் முதலில் நின்றது. ஆனாலும் நந்தினி அதை விடுத்து, விஷால் கொண்டு வந்திருந்த வாகனத்தில் ஏறினாள்.
“எங்க போனும் நந்தினி? நம்ம வீட்டுக்கா? இல்ல வேற..?”, இதைக் கேட்கும்போதே விஷாலுக்கு தொண்டை அடைத்தது. அவள் எங்கு போகவேண்டும் என்று சொன்னாலும் கொண்டு விட சித்தமாய் இருந்தான். ஸ்ருதியின் மூலமாக திருப்பதி செல்லும் ரயிலில் நடந்ததைக் (ரயிலில் நடந்தது மட்டும்) கேட்டதில் இருந்து அவள் உயிரோடு இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான்.      
“அத்தை வீட்டுக்கு போலாமா? தர்ஷித்தை பாக்கணும் போல இருக்கு”, ஆய்ந்து ஓய்ந்து போன குரலில் நந்தினி சொல்ல, வாகனம் புறப்பட்டது.
வெகுநேரம் அமைதியாக இருந்த விஷால், ‘நந்தினி, தனபாலன்கிட்ட வாங்கின அட்வான்ஸ் பணம் எல்லாத்தையும் நகையை அடமானம் வச்சு திருப்பி குடுத்துடலாம்னு இருக்கேன். அப்பறம்,  டெய்லி நீ நம்ம கடைக்கு வர்றியா நந்து?  இப்ப.. உடனே இல்ல. மெதுவா வந்தா போதும். நீ வரவு செலவு  கணக்கு நல்லா பாப்ப இல்ல? வேலைய பகிர்ந்து பண்ணினா மாதிரி இருக்கும். பிஸினெஸ்ல உன்னோட ஐடியாவைவும் குடுத்தா நல்லா டெவலப் பண்ணலாம்”, என்றான். 
நிமிர்ந்து விஷாலைப் பார்த்த நந்தினியின் கண்கள் நிறைந்தது. ‘இது இதைத்தானே கேட்டேன், கணவனே? பகிர்ந்து கொள். கவலையோ, மகிழ்ச்சியோ, லாபமோ நட்டமோ, இனிப்போ துவர்ப்போ எதையும் இருவரும் பகிர்ந்து கொள்ளத் தானே திருமணம்? பரஸ்பரம் பேசுவதும் எண்ணங்களை பகிர்வதும் பாராட்டுவதும் வசை பாடுவதும்  அடங்கியது தானே திருமணம்?’
‘இதை இரண்டு நாட்களுக்கு முன் செய்திருந்தால்..?’, என்று நினைத்து உள்ளம் மருகி, இருக்கையில் அமர்ந்தபடியே மடங்கி அழ ஆரம்பித்தாள் நந்தினி. 
அவளது அழுகையில் பதறிய விஷால், காரை நிறுத்திவிட்டு, “ஐயோ நந்தினி அழாத, உனக்குப் பிடிக்கலைன்னா கடைக்கு வரவேணாம். அதுக்காக அழுவங்களா? ஏதா இருந்தாலும் வாயத் திறந்து சொல்லு. அழுது என்னை  பயமுறுத்தாத”, என்று அவள் தோளைப் பிடித்து நிமிர்த்தினான். 
அவனது கண்களில் தனக்கான கவலையையும் பதைப்பையும் கண்ட நந்தினி சிரித்தாள். தன் தோள்மீது இருந்த கணவனின் கையை கெட்டியாக பிடித்துகொண்டாள். முகம் தெளிவாகி ஆழமூச்செடுத்து, “இல்ல நா வர்றேன். பயப்படாதீங்க இனிமே அழமாட்டேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள். 
அவளது சிரிப்பு இதயத்தில் இருந்து உண்மையாக வந்தது. “போலாம்ங்க. போகும்போது பசங்களுக்கு பால் பேடாவும், அத்தைக்கு ஓமப்பொடியும் வாங்கிட்டு போலாம்.”
)))))))))))))
“என்ன உங்க அண்ணா என்ன சொன்னார்? ரொம்ப அரண்டு போயிட்டார்  போல?”, யோகி. ஸ்ருதியிடம் பேசியபடி வீட்டுக்கு பயணம் செய்யும் வழியில் கேட்டான். 
“நிறைய சொன்னார். முக்கியமா யாரையுமே இந்த காலத்துல முழுசா நம்ப முடியறதில்லைன்னு சொன்னார்”, என்றாள் ஸ்ருதி. முகம் ஏனோ சிந்தனை வயப்பட்டதுபோல இருந்தது. 

Advertisement