Advertisement

ஸ்ருதிபேதம் 27 2 (1)
மருத்துவமனை அறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்க்கையில் ஸ்ருதிக்கு என்னவோ போலிருந்தது. அவளறிந்த வரையில் நந்தினி நிமிர்வான பெண், விபரம் தெரிந்தவள், கலைகளில் ஆர்வம் மிகுந்தவள், அழகை ஆராதிக்கும் பெண். ஆனால்..இப்போது கிழிந்த நாராக கிடக்கும் இவள், நந்தினிதானா? என்று தோன்றியது.
கண்களில் இருந்து வடிந்த நீர் காதுவரை சென்று இருந்தது அது உப்பரித்து வென்கோடாக படிந்து இருந்தது. அருகே இருந்த டிஷ்யூ வைத்து அந்த உப்புப்படலத்தைத் துடைத்தாள் ஸ்ருதி. 
அந்த தொடுகையில் கண் விழித்துப் பார்த்த நந்தினி,ஸ்ருதியைக் கண்டதும் என்ன நினைத்தாளோ, முகத்தை தனதிரு கைகளால் பொத்திக்கொண்டு “ஸ்ருதி” என்று கேவினாள்.  
அதில் அவள் கையிலிருந்த வென்ஃபிளான் பிய்த்துக்கொள்ள, அங்கிருந்து குருதி சொட்டு சொட்டாக வெளி வர ஆரம்பித்தது. 
“ஐயோ நந்தினி என்ன பண்றீங்க?, சிஸ்டர்..”,என்று நிமிர்வதற்குள் நர்ஸ் வந்து விட்டார். 
“ஏம்மா ஐவி போயிட்டிருக்கறது தெரில?”, என்று சத்தம்போட்டு, “நமக்குன்னு வந்து சேர்றாங்க பாரு”, முணுமுணுத்தார். பாதி மிகுதியாய் இருந்த ட்ரிப்ஸ்சை ஏற்றுவதற்காக, நந்தினியின் மறு கையில் மீண்டும் ஒரு முறை வென்ஃபிளான் பொருத்தினார்.
;இன்னும் ஒரு மணிநேரம் ஆகும். கையை அசைக்கக்கூடாது”, நந்தினியிடம் சொல்லிட்டு, ஸ்ருதியின் பக்கம் திரும்பி,”அம்மா நீங்க கூடத்தான இருக்கீங்க? பாத்துக்கங்க”, என்று வேறு சொல்லிவிட்டு போனார் அந்த செவிலி.
“ஏன்ன ஆச்சு? ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு?”, என்று நந்தினியின் புறங்கையில் தனது கையை ஆதூரமாக வைத்து கேட்டாள் ஸ்ருதி.
சொல்லக் கூடிய அவலமா அவள் செய்தது? அப்படியே சொன்னாலும் புரியுமா?,என்று விரக்தியாக ஸ்ருதியைப்  பார்த்தாள் நந்தினி. 
“பேசுங்க நந்தினி, பேசினாத்தான் உங்க பிரச்சனை என்னன்னு புரியும். மனசுலிருக்கற பாரம் குறையும்”, என்று ஸ்ருதி நந்தினியை ஊக்குவித்தாள். 
நந்தினி மெல்ல நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தாள். “நா உங்க வீட்டுக்கு வந்து தனபாலன் பத்தி சொன்னேன் இல்லியா?”
“ம்ம். ஆமா.அதுகூட உங்களுக்கு தெரிஞ்ச மேனேஜர் சொன்னார்ன்னு சொன்னீங்களே?”
“ம்ம்.அவர்தான். அவரை எனக்கு முன்னாடியே தெரியும். ரொம்ப முன்னாடி, என்னோட சீனியர் அவர்”
ஸ்ருதிக்கு கொஞ்சம் புரிவது போல இருந்தது. ஆனாலும் இதை இப்படி எதிர்பார்க்கவில்லை. விஷாலண்ணாவோடு மனஸ்தாபம் முற்றிப்போய் ஏடாகூட முடிவு எடுத்திருப்பாள் என்று இவள் நினைத்ததற்கு மாறாக, எவனோ ஒரு மூன்றாம் மனிதன் குறுக்கே வருகிறானே?என்று எண்ணினாள். ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல், “ம்ம்?”, என்றாள்.
“அவர் என்னை லவ் பண்ணினார். லெட்டர்லாம் குடுத்திருக்கார்”
ஸ்ருதி வெறுமே தலையசைத்து ‘மேலே சொல்’ என்பதுபோல பார்த்தாள்.
“ஆனா எங்கவீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சதால நா அவரை கன்சிடர் பண்ணல. அவர் காலேஜ் முடிச்சு போயிட்டாலும் நா படிக்கற வரைக்கும், என்னை பாக்கறதுக்காகன்னு அப்பப்போ வருவார். எங்கூட படிக்கற பிரெண்ட்ஸ் கிட்டயும் அதை சொல்லி இருக்கார். ஆனா, நடக்காதுன்னு தெரிஞ்ச ஒன்னை எதுக்கு நாம கற்பனை பண்ணிட்டு பின்னால வருத்தப்படணும்னு நா அமைதியாவே இருந்துட்டேன்.”
“அவருக்கு வேலை ட்ரான்ஸ்பெர் ஆச்சு. காலேஜ் முடிச்சு ஒரு வருஷத்துல எனக்கு மேரேஜ் ஆச்சு. இவர்..”, என்றதும், கணவனின் நினைவில் நந்தினியின் கண்கள் கங்கையானது.
“இவங்க வீடே வித்தியாசமானது ஸ்ருதி. எப்படின்னா  ஆம்பளைங்கன்னா சம்பாதிக்கணும், பொம்பளைங்கன்னா சமையக்கட்டுல இருக்கணும்னு இல்லனா தங்கமும் பட்டும் போட்டுக்கிட்டு ஊராருக்கு காமிச்சு அவங்க வீட்டுக்காரர் பெருமை பேசணும்.”
“அவளும் ஒரு மனிஷின்னு அங்கீகரிச்சு கலந்து பேசறதுங்கிறது கிடையவே கிடையாது. வீட்டு ஆம்பளைங்களுக்கு என்ன பிடிக்கும்னு பாத்து பாத்து சமச்சு வைக்கவா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறாங்க? எங்க நாத்தனார் அப்படித்தான் சொன்னாங்க.”
“விஷால் கொஞ்சம் வேற மாதிரி இருப்பார்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா அவரும் டிபிகலா அதே மாதிரிதான். ரெண்டு வார்த்தை தெரிஞ்சதை பேசினா, அதிகப்ரசங்கி வாய மூடு ன்னு வரும். இல்லியா, உனக்கெதுக்கு இது போயி சமையலைப் பாருன்னு வாய அடைப்பாரு.”
“ஒரு குழந்தையுமாச்சு,இப்படியே காலத்த தள்ளிட வேண்டியதுதான்னு இருந்தப்ப இவர் வீட்டுக்கு வந்தார்.நாங்க கணக்கு வச்சிருக்கிற பேங்க்-ல மேனேஜரா இருக்கறதா சொல்லிட்டு எங்க வீட்டுக்காரர்கிட்ட பேசிட்டு போனார்.
அப்பறம் பேஸ் புக்-ல பிரெண்டு ரெக்வஸ்ட் கொடுத்திருந்தார். விஷால் எதுக்கோ என்னை தூக்கியெறிஞ்சி பேசினார்ன்னு நினைக்கறேன். அப்போதான் அவரோட பேஸ்புக் பிரெண்டு ஆனேன்.”
“அடுத்து அவர் என்னவோ டாகுமெண்ட் வேணும்னு வீட்டுக்கு வந்தபோது, வழக்கம்போல உங்க அண்ணா என்னை கண்டபடி பேசினார். அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? பூமி பிளந்து என்னை அப்படியே உள்ள இழுத்துக்காதான்னு தோணுச்சு.”
“ஏன்னா அதுவரைக்கும் விஷாலை அன்பா பாத்துக்கற கணவர் நல்லவர்னு அவர்கிட்ட சொல்லியிருந்தேன். இதுக்குப் பேர்தான் நல்லா பாக்கறதா நந்தினின்னு கேட்டுட்டு போனார். நேர்ல தான் நல்லா இல்ல,கற்பனைல இருக்கற புருஷனாவது நல்லவரா இருக்கட்டுமேன்னு நினைச்சு நா கட்டின பொய்யெல்லாம்  சீட்டுக்கட்டு மாதிரி உதுந்து போச்சு”
விட்டத்தை வெறித்தபடி, “அப்பறம் அவர் பேச நான் பேச ன்னு..”, சொன்ன நந்தினி.. திரும்பி ஸ்ருதியைப்பார்த்து, “ஒரு விஷயம் சொல்லிடறேன் ஸ்ருதி. இதுவரைக்கும் தப்பா ஒரு நினைப்பு, தப்பா ஒரு பார்வை அவர்கிட்டயிருந்து வந்ததில்லை. அவர் ஒரு நல்ல பிரெண்டு, ஆறுதலா என்னை மதிச்சு என் வால்யூ தெரிஞ்சு பேசுற ஒரு சக மனுஷன்.”
“அந்த தனபாலன் விஷயமா அவர் பாக்க போகும்போதுதான் ஒரு கேள்வி கேட்டார். ‘இதுக்காக மட்டும்தான் என்னை பாக்க வந்தியா?’ன்னு, இல்லன்னு அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அதுக்கப்பறம் அவரை பாக்க சந்தர்ப்பம் அமையல. ஆனா தினமும் சாட்-ல பேசுவோம். இதுவரைக்கும் எங்க பேச்சுல கூட நாங்க கோடு தாண்டினதில்ல. ஆனா ஆனா..”, மீண்டும் கண்ணீர் கரை புரண்டது. 
“ஸ்ஸ். அழுதா தலைவலி வரும் நந்தினி. நடந்த எதையும் நாம மாத்த முடியாது,அமைதியா இருங்க”, என்ற ஸ்ருதி மணி பார்த்துக்கொண்டாள். ‘சின்னவன் என்ன பண்றானோ? ஸ்ரீகுட்டி ஸ்கூலேர்ந்து வர்ற நேரம்.. ஹ்ம்’,  என்ற எண்ணம் ஸ்ருதியின் மனதில் வந்து சென்றது. 
“ரெண்டு நாளா அவர் கிட்டயிருந்து மெசெஜே வரல. அவருக்கு கால் பண்ணினா ஸ்விச் ஆப். சரி பேங்க் நம்பருக்கு போடுவோம்னு அந்த லேண்ட் லைன் நம்பருக்கு போட்டேன். அவங்க இவருக்கு உடம்பு சரியில்ல. வைரல் பீவர்ன்னு சொன்னாங்க. என்னாச்சுன்னு தெரிலையேன்னு அவருக்கு மறுபடி மறுபடி போன் பண்ணேன். போன்தான் ஸ்விச் ஆப் ஆச்சே?. அப்பறம் கொஞ்ச நேரம் பொறுத்து அவரே போன் பண்ணினார். உடம்பு சரியில்ல, எழுந்து சார்ஜ்-போடக் கூட முடில. என்ன சாப்பிட்டாலும் வாந்தி செய்யுதுன்னு சொன்னார்.”
“என்னாச்சுன்னு கேட்டதுக்கு, எப்பவும் சாப்பாடு தர்ற மெஸ்ஸை காலி பண்ணிட்டு போயிட்டாங்க, ரெண்டு நாளா ஜுரம் வேற. வாட்ச்மேன் வொய்ப் கிட்ட கஞ்சி வேணும்னு சொல்லி, இப்போதான் குடிச்சேன்னு சொன்னார். அப்புறம்.. ரொம்ப தயங்கி தயங்கித்தான் ரசம் மட்டும் செஞ்சு யார்கிட்டயாவது குடுத்து அனுப்ப முடியுமான்னு கேட்டார்”, என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் நந்தினி. 
காட்சி மனதில் விரிந்தது. 
ரமணன் போன் செய்து அரை மணி நேரத்திற்குள்ளாகவே நல்ல குழைவான சாதம், பூண்டு ரசம், நெல்லிவத்தல், சில நாரத்தை துண்டுகள் என்று பரபரவென தயார் செய்தாள் நந்தினி. மூன்றடுக்கு கேரியரில் அனைத்தும் கட்டி வைத்துவிட்டு, விஷாலின் அலைபேசிக்கு, “காய்கறி மளிகை வாங்க வெளியே போகிறேன்”, என்று தகவல்அனுப்பி இருந்தாள்.  
தனது இருசக்கர வாகனத்தை எடுத்தவள், அவனது இருப்பிடத்தை ரமணன் முன்னெப்போதோ வாட்சப்பில் அனுப்பி இருந்ததால் கால்மணி நேரத்தில் ரமணன் இருக்கும் வீட்டை அடைந்தாள். 
அந்த தெருவில் அது கடைசிவீடு. எனவே அதிக போக்குவரத்து இல்லாத இடமாக இருந்தது. இரண்டு முறை காலிங் பெல் முழுமையாக அடித்தும் கதவு திறக்கப் படாமல் இருக்க ரமணனை அலைபேசியில் தொடர்புகொண்டாள் நந்தினி. அதுவும் இரண்டாவது அழைப்பில் தான் எடுக்கப்பட்டது. 
“சொல்லு நதி..”, குரல் கிணற்றிலிருந்து வருவது போல அத்தனை ஹீனமாக இருந்தது. 
“வெளியே நிக்கறேன். கதவ திறங்க”,என்றவள், “முடியுமா? இல்ல யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிட..”
“இல்லல்ல நானே வர்றேன்”,  சக்தியெல்லாம் திரட்டிய ரமணன் படுக்கை அறையிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தான். முழங்கால் வரையுள்ள ஷார்ட்ஸ் போட்டு மேலே ஒரு கனமான துண்டு போர்த்தி இருந்தான்.    
விரியத் திறந்த கதவின் ஊடே உள்ளே வந்த நந்தினியிடம், “நீ ஏன் வந்த நந்தினி? யார்ட்டயாவது குடுத்து அனுப்பி இருக்கலாம் இல்ல?”, என்ற சொன்ன ரமணனின் குரல் ஜுர வேகத்தில் நடுங்கியது. 
“யாரும் தெரிஞ்சவங்க இல்ல,என்ன பண்றது..?”, என்று நந்தினி பேசும்போதே, ரமணன் தன் வயிறை பிடித்துக்கொண்டு வாஷ் பேசின் நோக்கி ஓடினான்.
ஓங்கரித்து வயிறே காலியாவதுபோல அவன் வாந்தி எடுப்பதைப் பார்த்த நந்தினி கையும் ஓடாமல் காலும் ஓடாமல் நின்றாள். வாய் மற்றும் முகம் சுத்தம்செய்து கொண்ட ரமணன் சுவரைக் கையால் பிடித்தவாறு, ”அந்த டவல் குடு நந்தினி”, என்று சொல்ல.., கீழே கிடந்த துவாலையை அவனிடம் கொடுத்தாள்.
“என்ன ஆச்சு?”
“பசிச்சுதேன்னு ரெண்டு ப்ரெட் சாப்பிட்டேன். அது சேரல போல”,என்றுமொத்தமாக ஓய்ந்து போய் அருகேயிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.
“டாக்டர் கிட்டே போனீங்களா?”
“ம்ப்ச். போனேன். மருந்து கொடுத்தார். சாப்பிட்டு போட்டுக்க சொன்னார். சாப்பாடுதான் பிரச்சனையா இருக்கு”,என்றான்.
“எடுத்திட்டு வந்திருக்கேன்.  சாப்பிடறீங்களா?”
“நீ போ நந்தினி நா சாப்ட்டுக்கறேன்”, என்றான். அவன் குரலே சொல்லியது. கண்டிப்பாக போட்டு சாப்பிடும் அளவு அவனுக்கு பலம் இல்லை என்று.
கண்களை மூடி தலை சாய்த்திருந்த ரமணனைப் பார்த்த நந்தினி, நேரே கிட்சன் சென்றாள்.அது அவனைவிட அலங்கோலமாக கிடந்தது. “முதல்ல இவர ஒரு கல்யாணத்த பண்ணிக்க சொல்லணும்”, என்று அவளுக்குள்ளாக முணுமுணுத்து, வட்டில் ஒன்றை எடுத்து வந்தாள். அதில் சாதம்போட்டு ரசத்தை தெளிவாக ஊற்றி பிசைந்தவள், நெல்லி வத்தலை டிபன் பாக்ஸ் மூடியில் வைத்தாள். 
“ஒரு நிமிஷம் இங்க பாருங்க, இத அப்படியே குடிச்சிடுங்க. பாத்திரத்தை எடுத்திட்டு நா கிளம்பறேன்”, என்று ரமணனை எழுப்பினாள். பாதி கண் திறந்த அவனோ, “ம்ம்ம் அங்கயே வச்சிடு”, என்று விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். 
இது வேலைக்காகாது என்று நினைத்த நந்தினி அவன் தோளைத் தொட்டு இருமுறை உலுக்கினாள். அதில், ரமணன் மிகவும் பிரயத்தனப்பட்டு விழித்துக் கொண்டான். 
“இதைக் குடிங்க..”,என்று வட்டிலை அவன் கையில் திணித்தாள் நந்தினி. 
சூடான பூண்டு ரசத்தின் மணம் நாசியை நிரட, அவனது புலன்கள் விழிப்புற்றன. இரு கையால் அந்த பாத்திரத்தை வாங்கி ஒருவாய் குடித்தான். அதன் பின் சாப்பாட்டின் ருசியால் உந்தப்பட்டு வட்டில்  முழுவதையும் வேகமாக காலி செய்தான்.
கடைசியாக இருந்த அன்னரசத்தை பாத்திரத்தோடு வாயில் கவிழ்க்க, ரமணனுக்கு புரை ஏறியது. அடடே தண்ணீர் கொண்டு வரவில்லையே என்று தன்னை வைது கொண்ட நந்தினி, கிச்சன் சென்று டம்ப்ளரில் நீர் கொணர்ந்தாள். அதை வாங்கி அருந்திய பின்னும் ரமணன் இருமிக்கொண்டே இருக்க.. அருகே சென்று அவன் தலையில் தட்டினாள். 
சுவாசப்பாதையில் மாட்டிக்கொண்ட சாதப்பருக்கை வெளியே வரமாட்டேன் என்று ரமணனிடம் அடம் பிடிக்க, தொடர்ந்து கண்ணில் நீர் வழிய, இருமிக்கொண்டே இருந்தான் அவன். 
அருகே நின்ற நந்தினிக்கு அவன் திணறுவதை பார்க்க சிரமமாக இருக்க, அவன் கையில் இருந்த வட்டிலை வாங்கி கீழே வைத்து விட்டு அங்கிருந்த டவலை கையில் திணித்தாள்.
ரமணன் இருக்கையில் அமர்ந்திருக்க, அருகே அவ்வளவு நெருக்கமாய் நந்தினியை நிமிர்ந்து பார்த்தான். துவாலையோடு நந்தினியின் கையும் அவன் பிடியில் இருந்தது. ரமணனுக்கு இரண்டையுமே விடுவதற்கு மனமில்லை. நந்தினியும் கையை விடுவித்துக்கொள்ள போராடவில்லை. 
அதன் பின் நிகழ்ந்தவைகளுக்கு பொறுப்பு இருவரும்தான். தன்னை ஆராதனை செய்யும் இந்திரனுக்கு வரம் தரும் அகலிகையானாள் நந்தினி.
புராணம் சொல்வது போல கணவன் கௌதமனின் சாபத்தாலா  அகலிகை கல்லாய் சமைந்தாள்?
இல்லை.
தர்மம் தவறியதால் அல்லவோ அவள் கல்லாய் புழுதியாய்க் ஊனுணர்வற்றுக் கிடந்தாள்? 

இந்த அகலிகையோ… ?

Advertisement