Advertisement

ஸ்ருதிபேதம்

அத்தியாயம் 27 1
காதிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து,  “ம்ப்ச், இந்த விஷால் அண்ணா போன் என்கேஜ்டாவே இருக்கு”,என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி. ஸ்ருதி யோகியோடு காரில் திருவள்ளூர் சென்று கொண்டு இருந்தார்கள்.
“கொஞ்சம்நேரம் பொறுத்துப் பண்ணுங்க. விஷால் ஒருவேளை தெரிஞ்சவங்க இல்லன்னா  சொந்தக்காரங்களுக்கு போன் போட்டு நந்தினி அங்க வந்தாங்களான்னு கேக்கராறோ என்னமோ?”, யோகி.
“ம்ம். இருக்கலாம்”
“ஒரு வேலை பண்ணுங்க. ‘அண்ணா உடனே போன் பண்ணுங்க’ன்னு ஒரு மெசேஜ் தட்டி விடுங்க. பாத்துட்டா அவரே கால் பண்ணுவாரு.”  
யோகியின் யோசனை ஸ்ருதிக்கு சரியெனப்பட, “ம்ம்”, தலையசைத்து, யோகி சொன்னதுபோல செய்தாள். 
சில மணித்துளிகள் செலவானதற்குப் பின் யோகி ஸ்ருதி இருவரும் சுகுமாரன் குறிப்பிட்ட அந்த மருத்துவமனையை வந்தடைந்தனர். இதுவரை விஷாலிடமிருந்து அழைப்பு வரவில்லை. 
காரை சுகுமாரன் குறிப்பிட்ட மருத்துவமனை வாயிலில் நிறுத்திவிட்டு, தனது அலைபேசியில் அவனைத் தொடர்பு கொண்டான் யோகி. “சுகு நாங்க ஹாஸ்பிடல் வந்துட்டோம். எங்க இருக்கீங்க?”
“அத்தான் இங்க முத மாடில இடதுபக்கம் மூணாவது ரூம்ல இருக்காங்க. நா ரூம் வாசல்லதான் நிக்கறேன். தெரில்லனா நந்தினி சூசைட் அட்டெம்ப்ட் ன்னு சிஸ்டர்ட்ட  கேளுங்க, சொல்லுவாங்க”, சுகுமாரன். 
மருத்துவமனை சுவர்களில் பாதைகளைக் காட்டும் சுட்டி  தெளிவாக இருந்ததால்,  யார் உதவியும் இல்லாமலேயே நந்தினி இருந்த இடத்திற்கு இருவரும் சென்றார்கள். ஸ்ருதியை அறையின் உள்ளே போகச் சொன்ன யோகி, வெளியே அமர்ந்திருந்த சுகுமாரனிடம் நடந்த விபரங்களைக் கேட்க ஆரம்பித்தான்.
கட்டைவிரலால் முதுகுப்புறம் இருந்த அறையை சுட்டிக் காண்பித்து, “என்னவாம்?”, என்றான் யோகி. 
“காலைல ஆறு ஆறேகால்க்கு கிளம்பற திருப்பதி வண்டிக்கு  டிக்கெட் புக் பண்ணிட்டு வந்துருக்காங்க. சென்ட்ரல்-ல ட்ரெயின் ஏறும்போது வாட்டர் பாட்டில் வாங்கினாங்களாம். ஐநூறு ரூவா குடுத்துட்டு மிச்சம் வாங்கிக்கலைன்னு சமோசா விக்கிற பையன் சொல்லியிருக்கான். வண்டி கிளம்பரத்துக்கு முன்னாலேயே பத்து பன்னெண்டு தூக்க மாத்திரைய முழுங்கி இருக்காங்கபோல.”
“டிடிஆர் வந்தா ஐடி காமிச்சிட்டு படுத்துக்க நினைச்சிருக்காங்க. அப்பதான் தொந்தரவு இல்லாம இருக்கும்னு”
“சாகறதுக்கு? ஹும்”, என்று சொல்லி கேலியாய் சிரித்தான் யோகி. “இருந்து உருப்படியா சாதிக்க துப்பில்லாம..”, மூன்றாம் நபரான நந்தினி மீது கோபம் பொங்கியது. 
“அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாருக்குத் தெரியும்?ஆனா பாருங்க அத்தான், இவங்க நல்ல நேரமோ என்னமோ இன்னிக்குன்னு திருப்பதி டிடிஆர் லேட்டா வந்துருக்காரு.”
“ஹ்ம்ம்”
“அவர்ட்ட டிக்கெட்டு காமிக்கும் போது ஒரு மாதிரி மயக்கத்துல பேசியிருக்காங்க. பேசினவங்க மூஞ்சில அருளே இல்ல, உலகத்தையே வெறுத்த மாதிரி இருந்ததைப் பாத்துட்டு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சு. கைல, கழுத்ததுல காதுல இருந்தத வச்சு வசதியான வீட்டு ஆளு, என்னவோ மனசு சரியில்லாம தப்பா முடிவு எடுத்திருப்பாங்களோனு தோணி இருக்கு.”
“அடுத்த ஜங்ஷன் திருவள்ளூர், அவரோட ஃபிரண்டு ஆர்பிஎப் போலீஸ் ஸ்டேஷன் இன்சார்ஜா இருக்கு. அவர் கிட்ட பேசி ஹாஸ்பிடலுக்கு கூட்டி போக சொல்லியிருக்காரு. சீக்கிரம் கொண்டு வந்ததால இவங்களுக்கு பயப்படுவதற்கு ஒன்னுமில்லை”, நடந்ததை சுருக்கமாக விளக்கினான்.
“முழிச்சுகிட்டாங்களா?”
“அரை மணி நேரம் முன்ன முழிச்சாங்க. சிஸ்டரையும் என்னையும் பாத்துட்டு மறுபடியும் கண்ணை மூடிட்டாங்க. எனக்கு என்ன பேசறதுன்னு தெரில. நா வெளிய வந்துட்டேன். அவங்க கூட இருந்த சிஸ்டர் ரெண்டு மூணு தடவ அழக்கூடாது சொன்னது காதுல விழுந்துச்சு.”
“சரி நம்ம விஷயம் என்னாச்சு?”
“தனபாலன் கிட்ட இருந்து வந்த பணத்துல பாதிய எடுத்து  அவனுக்கே வெளிநாட்டு பார்ட்டி குடுக்கறா மாதிரி டோக்கன் அட்வான்ஸ்-சா கொடுத்தாச்சு. அதுக்கு அக்ரீமெண்ட்டும் நம்ம நர்சரிகாரம்மா பையன் வெளிநாட்ல இருக்கான் இல்ல? அவன் பேர்ல போட்டாச்சு.”
“ம்ம். அடுத்து அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா விஷயம்..?”
“ஆங். அதயும் முடிச்சிட்டேன். முதல்ல அவங்க வீடு எங்கன்னு தெரில. ஆனா, அவங்க பொண்ணு வேலைக்குப் போகும்போது ஒரு நாள் கண்ல பட்டுச்சு நைசா பேச்சுக் குடுத்து விலாசம் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த அம்மா கிட்டயும் தெளிவா பேசியாச்சு.”
“ஹ்ம்ம். ஒத்துக்கிட்டாங்களா?”
“அட எப்போடா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்துகிட்டு இருந்தாங்க போலிருக்கு. அந்த தனபாலன் மேல இருந்த ஒரே வீட்டையும் பிடிங்கிக்கிட்டான்னு வயித்தெரிச்சல்ல இருக்காங்க.  அதோட, அவன்தான் அவங்க வீட்டுக்காரருக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து சாகடிச்சிட்டான்னு புலம்பறாங்க.”
“அப்போ அதையும் ஒரு கம்பளைண்ட்-டா வாங்கிடமில்ல?”
“கரெக்டு. அது தவிர இன்னொரு பாயிண்டும் இருக்கு. அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. இவங்களோட அந்த ஓட்டு வீட்டை தனபாலன் பேர்ல அந்தாள் எழுதிக் குடுக்கும்போது.., அவரோட பெரிய பொண்ணு மேஜர். புர்வீக சொத்தை எனக்குத் தெரியாம வித்துட்டாங்கன்னு அந்த பொண்ணை விட்டே ஒரு கம்பளைண்ட் ரெடி பண்ணி இருக்கேன். நீங்க சொன்னீங்கன்னா ஃபைல் பண்ணிடலாம்”, என்றான் சுகுமாரன். 
கண்கள் வெற்றிடத்தை வெறிக்க, “பொறு அவன் ஒரு முழுசா ஒரு பேஸ் phase கட்டுமானத்தை முடிச்சிட்டு, அதை விக்கறதுக்கு தயாராகட்டும். என்னிக்கு பேப்பர்-ல விளம்பரம் தர்றானோ அன்னிக்கு இந்தம்மாவோட விஷயம் பூதாகரமா வெளில வரணும்”, என்ற யோகியின் முகம் இறுகியிருந்தது. 
“அத்தான்.. ஈஸ்வரி-ய இதுக்குள்ள இழுக்கணுமா?”, என்று சற்றே கவலையோடு கேட்டான் சுகுமாரன். 
ஆழ்ந்த பெருமூச்செடுத்து, “தேவைப்பட்டா பாத்துக்கலாம்”, என்ற யோகி, பின்னால் நந்தினியின் அறையைக் கண்ணால் காண்பித்து, “சரீ இந்தம்மா வீட்டக்காரனுக்கு போன் போட்டியா?”, என்று கேட்டு நடப்புக்கு வந்தான். 
“ம்ஹூம். நம்பர் இல்ல”
“கேக்க வேண்டியதுதான?”
“நர்ஸம்மா கேட்டாங்க, பதில் சொல்லாம அழுதுட்டே இருந்தாங்களாம்”
‘இது என்னடா தொல்லை’, என்பதுபோல,  “ஸ்ஸ்”, என்று நெற்றியில் கை வைத்து யோசித்த யோகி, “வீட்டுக்காரம்மா உள்ள இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து போனை வாங்கிட்டு வா, அதுல விஷாலோட நம்பர் இருக்கு”, என்று சொன்னவன், “எதுக்கும் கதவ தட்டிட்டு போ”, என்று சேர்த்துச் சொன்னான். 
“ம்ம்”, என்ற சுகுமாரன் அறைக்கதவை இருமுறை தட்டி காத்திருந்தான். 
அறைக்கதவை த் திறந்த ஸ்ருதியின் கண்கள் கலங்கியிருக்க, அதைப் பார்த்து யோசனையாக சுகுமாரன், “அவங்க வீட்டுக்காரர் நம்பர் வேணும், உங்க போனை அத்தான் கேட்டாங்க”, என்றான்.
“நானே விஷாலண்ணாக்கு கால் பண்ணி பேசறேன்-னு சொல்லிடுங்க”, என்று ஸ்ருதி உள்ளே செல்லத் திரும்ப..
“ஏன்? என்னாச்சு?”, சுகுமாரன் கேட்க.. 
ஸ்ருதி எதையும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். 
“அவருக்கு சொல்ல வேணாம்னு சொன்னாங்களா?”, என்று வெளியே இருந்து யோகியின் குரல் வந்தது. அவனுடையது எப்போதுமே அழுத்தமான குரல்தானே? அந்த அமைதியான சூழலில் அது இன்னும் பலமாகக் கேட்டது.
“ஷ்..உஷ்.”, என்று உதடுகளில் கைவைத்து பேசாதே என்பதுபோல ஜாடை காட்டி, ஸ்ருதி அறையிலிருந்து வெளியே வந்து மெல்ல கதவை மூடினாள். 
“சத்தம் போடாதீங்க, நந்தினி பாத்ரூம் போயிருக்காங்க, கேட்டாங்கன்னா சங்கடமா இருக்கும்” 
“அடுத்தவங்க கஷ்டப்படுவாங்களேன்னு இவங்க யோசிச்சாங்களா?”, என்று ஒரு வித முகச்சுளிப்போடு சொன்னாலும், யோகியின் சத்தம் குறைந்துதான் வந்தது. 
யார் யார் மீதோ உள்ள கோபத்தில், அருகே இருந்த சுகுமாரனைப் பார்த்து, “எங்கயோ அவசரமா போனும்னு சொன்ன? வாய பாத்திட்டு இருக்க?”, என்று கடித்தான்.  
இதற்கு மேல் இங்கே நின்று இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள சுகுமாறன் என்ன முட்டாளா? “ஆமா, அதான் நீங்க வந்துடீங்களே? இதோ கிளம்பிட்டேன்த்தான்”, என்று சொல்லி சிட்டாக பறந்தான். 
சுகுமாரன் புறப்பட்டுச் சென்றதும் சென்ற பின், யோகி ஸ்ருதியிடம், “இங்க பாருங்க, என்ன இருந்தாலும் அவங்க வீட்டுக்காரருக்கு தெரியாம இருக்கக்கூடாது. அவரு போலீஸ் க்கு போயிருந்தா, உங்களுக்கு நந்தினி இருக்கிற இடம் தெரிஞ்சிருந்தும் ஏன் சொல்லல னு கேள்வி வரும்.”
“நாமதான் கால் பண்ணிட்டே தான இருந்தோம்? உங்களுக்கே தெரியும்தான நா கால் பண்ணினது?”
“அது சரிதாங்க, ஆனா ஒன்னு சொல்லிக்கறேன். அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்க ரெண்டு பேரும்தான் பாத்துக்கணும். மத்தவங்க நடுல நின்னு நாட்டாமை பண்ணக்கூடாது”, என்று ஸ்ருதியிடம் கறாராக சொன்னான். 
எதையோ சொல்ல நினைத்து ஆரம்பித்தவள், மனதை மாற்றிக்கொண்டவளாக, “ம்ம்”, என தலையசைத்தாள்.
“அப்ப போன் எடுத்து அவருக்கு பேசுங்க. அவரோட கடை நம்பர் இருக்குதா?”, என்று யோகி சொல்லும்போதே ஸ்ருதியின் போன் அடித்தது. விஷாலேதான். 
“ஹலோ அண்ணா..”
“ஸ்ருதி, இப்பதான் உன் மெசேஜ் பாத்தேன்”, என்றவனின் குரலில் உயிரில்லை.  மெசேஜ்தான் பார்த்திருக்கிறான், மிஸ்ட் கால்களை பார்க்கவில்லை. பார்த்திருந்தால், முன்னமே அழைத்திருப்பானோ என்னவோ?
“அண்ணா  நந்தினி இங்க திருவள்ளூர்-ல இருக்காங்க. நா அவங்ககூட இருக்கேன்”,என்று விஷயத்தை பளிச் சென்று சொன்னாள், 
“நந்தினியா? அங்கியா இருக்கா? வீட்லேர்ந்து ஆட்டோ பிடிச்சு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போனதா சொன்னாங்க. நா அங்கெல்லாம் போயி…”, என்று படபடத்தவனுக்கு, அடுத்து என்ன பேச வார்த்தைகள் வரவில்லை. மனதில்  ‘ஹா’, என்றொரு நிம்மதி படர்வதை விஷாலால் உணர முடிந்தது. 
 அடைத்துக்  கொண்டிருந்த தொண்டையை செருமி சரி செய்து, “அது.. ஹம் ஹ நல்லா இருக்காளா? ஒன்னும் பிரச்சனையில்லையே?”, என்று அடுத்தடுத்து மூச்சுவிடாது கேட்டான். 
“ம்ம். நல்லாயிருக்காங்க. காலைல வெறும் வயித்தோட கோவிலுக்கு புறப்பட்டு இருக்காங்க போலிருக்கு. இங்க வரும்போது மயங்கிட்டாங்களாம், கூட இருந்தவங்க ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்காங்க. அப்போ நம்ம வீட்ல சுகுமார்னு ஒருதத்தர் குடியிருக்காரில்ல? அவர் பாத்துட்டு எனக்கு போன் பண்ணினார். அப்போலேர்ந்து உங்களுக்கு ட்ரை பண்றேன். உங்களை பிடிக்கவே முடில”, என்றாள்.
“ம்ம். நா வர்றவரைக்கும் அங்க இருக்க முடியமா?”, என்று நயந்து கேட்டான் விஷால். 
“அதெல்லாம் நீங்க சொல்லனுமாண்ணா?”, என்றுவிட்டு, “நாங்க இருக்கற ஹாஸ்பிடல் அட்ரஸ் அனுப்பறேன். வந்துடுங்க”, முடித்தாள்.
விஷால் தனது கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தவாறே முழுதாக ஒரு நிமிடம் மௌனித்தான். நந்தினியின் கடிதம் படித்ததும் உடனடியாகத் தோன்றிய ஒரு வயிற்றை இறுக்கிப்பிடித்த பயம் போன்றதோர் உணர்வு, அதன் பின் அடுக்கடுக்காக வந்த எண்ணிலடங்கா குழப்பங்கள் மெல்ல சமன் படுவதையும் என்னவென்றே தெரியாத ஆசுவாசம் மனதில் எழுவதையும் விஷாலால் உணர முடிந்தது. 
இனி எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் தன்னால் வர, ஒரு வினாடியும் தாமதிக்காமல் மனைவியைக் காண புறப்பட்டான். செல்லும் வழியில் மனம் எங்கெங்கோ சென்றது. 
முதன் முதலாக நந்தினியை பெண் பார்க்கச் சென்ற போது, மாப்பிள்ளை வீட்டார்கள் வருகிறார்களென்ற பதட்டத்தில் அவள் வீட்டுக்கு விலக்கானது தெரிந்து அன்றைய நிகழ்ச்சியை ஒத்தி வைத்தது. 
அதன் பின் ஒருநாள் கோவில் சென்று அவளறியாமல் அவளை பார்த்து அவளது அழகில் மயங்கியது. அவர்கள் வீட்டுத் தொலைபேசி எண் கையில் கிடைத்தும், அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசாமல் இருந்தது. 
திருமணம் ஆன பின் அவளது அறிவைக் கண்டு மலைத்தது. இவன் பார்த்த வரை புடவை நகை எதிலும் பெரிதாக ஆசைப்படாத பெண் நந்தினி தான். எதையும் நேர்த்தியாக தேர்வு செய்வதில் வல்லவள். 
‘நிறைய தடவ நினைச்சிருக்கேன் நந்து, உன் லெவல் வேற.. என் லெவல் வேறன்னு. ஆனா என்னை விட்டுட்டு போற அளவுக்கு நம்ம லெவல்ல வித்தியாசம் இருக்குன்னு இப்ப தெரிஞ்சிகிட்டேன். நா யாரையும் ஏமாத்த நினைக்கல நந்து. சம்பாதிக்க ஒரு வாய்ப்பு வந்தது, செஞ்சேன்’
‘அதோட, வெள்ளையானைய கட்டி மேய்க்கிறா மாதிரி ஸ்ருதி அந்த வீட்டை வெச்சிட்டு சின்ன சில்லறை வேலை செஞ்சு கஷ்டப்பட வேணாமேன்னு நினைச்சுதான் இந்த ஏற்பாடு பண்ணலாம்னு நினைச்சேனே ஒழிய.., ஸ்ருதி குடும்பத்தைபோய்  நா ஏமாத்துவேனா?’, அவன் புலம்பல்கள் மருத்துவமனை செல்லும் வரை தொடர்ந்தது. 
சிலருக்கு ‘கண் கெட்ட பின்பு தான் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற அறிவே வருகிறது. 
))))))))))))))))))

Advertisement