Advertisement

அத்தியாயம் 26
ஒரு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்ருதியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். வெண்திரை சுகுமாரன் அழைக்கின்றான் என்று சொன்னது. அழைப்பை ஏற்று, “ஹலோ, சொல்லுங்க சுகுமார்”
“ஹலோ, வீட்ல இருக்கீங்களா?”, என்ற சுகுமாரனின் குரலில் கொஞ்சம் வேகம் இருந்தது. 
“ஆமா சொல்லுங்க என்ன விஷயம்?”
“வந்து… ஒரு சின்ன டவுட். உங்களுக்கு வாட்சப்ல ஒரு போட்டோ அனுப்பறேன் அது உங்க பிரெண்டான்னு பாத்து சொல்லறீங்களா?”
ஸ்ருதியை மெல்லிய பதட்டம் தொற்ற, “யாரு? யாரை சொல்லறீங்க?”, என்று கேட்டாள். 
“அட நம்ம தெருலயே மூணு வீடு தள்ளி லேடி ஒருத்தங்க வருவாங்கல்ல?”
“நந்தினி, நந்தினியாவா சொல்லறீங்க?”
“ஆங். அவங்க பேர் எனக்குத் தெரில.”, என்று சுகுமாரன் முடிப்பதற்குள் ஸ்ருதி இடையிட்டு, “அவங்களுக்கு என்னாச்சு?”, என்று விட்டு அவசரமாக, “இல்ல.. லைன்ல இருக்கேன். முதல்ல போட்டோவை அனுப்புங்க. பாத்துட்டு சொல்றேன்”, என்றாள்.
ஸ்ருதி சொன்னபடி போட்டோவை அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான் சுகுமாரன். 
பரபரவென புலனத்தைத் திறந்து அவன் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்த ஸ்ருதி, அதிர்ந்தாள். அதில் நந்தினி மருத்துவமனை படுக்கையில் கண்மூடி படுத்திருக்க, அவளது கையில் சலைன் ஏறிக்கொண்டு இருந்தது. 
“ஐயோ இது நந்தினிதான். என்னாச்சு? எங்க இருக்காங்க?”    
“அவங்க இங்க ஹாஸ்பிடல்ல-ல இருக்காங்க”
“இங்கன்னா எங்க? விஷால் அண்ணாக்கு தெரியுமா?”
“பதறாதீங்க சிஸ்டர். பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்ல. திருவள்ளூர்-ல இருக்காங்க. திருப்பதி போற ட்ரெயின்-ல இவங்க வந்தாங்க போல. டிடிஆர் வந்து டிக்கெட் கேக்கும்போதே கொஞ்சம் குழறலா பேசி இருக்காங்க. அதான் அவருக்கு சந்தேகம் வந்து ரயில்வே போலீஸ் கிட்ட தகவல் சொல்லி ஹாஸ்பிடல்ல சேக்க சொல்லி இருக்காரு.”
“ஓ!”
“நா திருவள்ளூர்க்கு ஒரு வழிப்பறி  கேசுக்காக வந்தேன். அப்பதான்  அவங்கள கம்பார்ட்மெண்ட் லேர்ந்து கீழ கூட்டிட்டு வந்தாங்க. பாத்த முகம் மாதிரி இருக்கேன்னு பின்னாடியே போனேன். பக்கத்துல ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அதான் உறுதிப்படுத்திக்கலாம்னு நினைச்சு  உங்களுக்கு கால் பண்ணினேன்.”
“நல்லா இருக்காங்கல்ல? ஒன்னும் ப்ராப்ளம் இல்லியே?”
“வயித்த க்ளீன் பண்ணிட்டாங்க, டாக்டர்ஸ்ல்லாம் ‘மாத்திரை போட்டுட்டு சீக்கிரமே வந்துட்டதால பயப்பட வேண்டி  இருக்காதுன்னு சொல்றாங்க”, என்றவன், “நீங்க இங்க வரமுடியுமா சிஸ்டர்?”, என்று கேட்டான்.
“நா விஷாலண்ணாக்கு கால் பண்ணி சொல்றேனே?”
“அது.. பண்ணுவோம். ஆனா அதுக்கு முன்ன நீங்க வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்-னு தோணுது.”
“ஏன்?”
“ஏன்னா என்னத்த சொல்றது? இந்தம்மா கைல ஏதும் துணிமணி எடுத்துக்கல, போன் இல்ல, பர்ஸ்-ல கொஞ்சோண்டு பணம்,  கூடவே இவங்க பான் கார்டைத் தவிர வேற எதுவும் கொண்டு வரல..”
“ம்ம் ??”
“அவங்க அட்ரஸ் கண்டுபிடிக்க கூடாதுனு அட்ரஸ் இல்லாத ஐடிய கொண்டு வந்து இருக்காங்க. அப்ப வீட்ல என்னவோ பிரச்சனைன்னு தான அர்த்தம்?”
“அது.. “, என்று கொஞ்சம் யோசித்து, “சரி வர்றேன். ஆனா திருவள்ளூர் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே?” என்றாள் பாவமாக.   
சுகுமாரனுக்கு ‘அட ராமா’ என்று இருந்தது. இதே ஈஸ்வரியாய் இருந்தால், இத்தனை நேரம் ‘லொகேஷன் அனுப்புங்க வந்துடறேன்’, என்று சொல்லி கார் புக் செய்திருப்பாள். ஆனால் அவளுக்கு இந்த நந்தினி ஸ்ருதி அளவுக்கு நெருக்கமில்லையே?
“எங்க அத்தான் இருக்காரான்னு கேட்டு அவரை கூட கூட்டி வரீங்களா?”, என்று கேட்டு ஸ்ருதி பதில் சொல்ல நேரம் குடுத்த சுகுமாரன், அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக.., தயக்கமாக, “வந்து.. வரும்போது ஒரு புடவை எடுத்துட்டு வாங்க”, என்றான். 
இதென்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் புடவை கேட்கிறான்? என்று யோசித்த ஸ்ருதி, “ஏன்?” என்று கேட்டாள். 
சுகுமாரனோ, “அவங்களுக்கு ப்ளீடிங் ஆயிருக்கு புடவைல்லாம்  கறையா இருக்கு. அதான்”, என்று சங்கடமாக சொன்னான்.  
அடுத்த வினாடியே, “நா உடனே வர்றேன். நீ கொஞ்சம் கூட இருங்க”, என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு ஸ்ருதி கிளம்ப ஆயத்தமானாள். 
அத்தையிடம் சுருக்கமாக விஷயத்தை சொல்லி, கூடவே வேறு யாருக்கும் இது தெரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி, யோகியை தேடிச் சென்றாள்.  
அவனோ இவளை எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததுபோல அவனது வீட்டு வாசலில் அலைபேசியில் பேசியபடி நின்றான். 
யோகியைப் பார்த்து, “சுகுமாரா?”, ஸ்ருதி கேட்டாள். 
ஆமென்று தலையசைத்து, “இதோ வந்துட்டாங்க. கிளம்பறோம். இன்னும் ஒன்றை மணி நேரத்தில எங்களை நீ எதிர்பார்க்கலாம்”, என்று அலைபேசியில் சுகுமாரனுக்குச் சொல்லி போனை அனைத்து வைத்தான்.
“போறதுக்கே ஒன்றை மணி நேரமாகுமா?”, என்று யோசனையோடு கேட்டாள் ஸ்ருதி. 
அவசரமாக போட்ட டீஷர்ட்டின் காலரை சரி செய்தபடி, “ஆமால்ல, இங்கேயிருந்து ஒரு அம்பது அம்பத்தஞ்சி கிலோமீட்டர் இருக்காது?”, என்று பதில் கேள்வி கேட்டான் யோகி.
“ஓஹோ..”, என்று சொன்ன ஸ்ருதி, “சரி நீங்க காரை எடுத்து வெளிய வைங்க. தோ இப்போ வந்துடறேன்”, என்று மீண்டும் தனது வீட்டுக்குச் சென்றாள். 
“ம்ம்”, யோகி அவனது வீட்டை பூட்டிவிட்டு கீழே சென்று அம்மாவிடம், “ம்மா. வெளிய போறேன், சாப்பாடு வேணாம்”, சொல்லி சாவியை அலமாரியில் வைத்தான். 
“உஷ் உஷ்.. சத்தம் போடாத சரத்து, நைட் பூரா உம் மருமவனும் தங்கச்சியும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருந்து இப்பதான் தூங்கறாங்க”, என்று ரகசியமாக  கிசுகிசுத்தார் வசந்தம்மா. அதுவுமில்லாமல் வீட்டையே இருட்டாக்கி வைத்திருந்தார். 
அவரது பாவனையில் சிரிப்பு வர, முறுவலித்து “சரி வர்றேன்மா”, என்று சொல்லிவிட்டு வெளியே வந்த யோகிக்கு, ஷெட்டில் நிற்கும் காரை பார்க்கும்போதுதான், ஸ்ருதி வீட்டில் இருந்து கார் சாவியை எடுக்க மறந்து விட்டோம் என்பது  நினைவுக்கு வந்தது.
எனவே மீண்டும் மேலே சென்றான். ஸ்ருதி வீட்டுக் கதவை தட்ட நினைக்கையில், “பாமாக்கா, பிரிட்ஜ்-ல பால் எடுத்து வச்சிருக்கேன். சுடுதண்ணில ரெண்டு நிமிஷம் வச்சிட்டு பாட்டில்-ல ஊத்தி சின்னவன் எழுந்ததும் குடுங்க. நா வர்றதுக்கு இன்னும் லேட்டாச்சுன்னா செர்லாக் குடுங்க. சீக்கிரம் வந்துடறேன். அப்பறம்.. ஸ்ரீகுட்டி வந்தா ஹோம் ஒர்க் முடிக்க சொல்லுங்க”, என்று ஸ்ருதியின் அவசரப் பேச்சு காதில் விழுந்தது. 
“டொக் டொக்” டொக்கியது யோகி. 
சத்தமாக, “திறந்துதான் இருக்கு யாரு?”, ஸ்ருதி. 
கதவைத் திறந்து, “வண்டிய வெளிய எடுக்கச் சொல்லிட்டு சாவி கொடுக்கலைன்னா அனுமார் மாதிரி கையால தூக்கியா வைக்க முடியும்?”, அபிநயத்தோடு யோகி சொல்ல…
“ஹஹ”, பர்வதம்மாவும் பாமாவும் சிரித்தனர். 
“உஷ்…”, என்று தலையை இடவலமாய் அசைத்து ‘முடில’ என்று எண்ணிக் கொண்டாள் ஸ்ருதி. 
“அந்த ஸ்டாண்ட்-ல இருக்குப்பா எடுத்துக்க”, பர்வதம். அதற்குள் பாமா, “நா தர்றேன்மா”, என்று சாவியை எடுத்து யோகியின் கையில் கொடுத்திருந்தார். வாசலில் இருந்தே சாவி வாங்கிய யோகி, கீழே சென்றான். 
அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அவர்கள் செல்லும் கார் பிரதான சாலையை எட்டியிருந்தது.
“ஏங்க இவ்ளோ நாளா சென்னை-ல இருக்கீங்க? திருவள்ளூர் எங்கேயிருக்குன்னு தெரியாதா?”, வழக்கம் போல அவனது கிண்டலை ஆரம்பித்தான்.
புருவம் சுருக்கி, “தெரியாது”, என்று விட்டு குறுகுறுவென யோகியைப் பார்த்து, “சரி உங்களுக்கு கொண்ட்வா எங்க இருக்குன்னு தெரியுமா?”, என்று கேட்டாள். 
திரும்பி அவளது முகம் பார்த்தவன், “கொண்ட்வா-வா?”, தாடையை சொறிந்து கொண்டான். 
 “சரி அத விடுங்க மல்லிக்நகர் எங்க இருக்கு தெரியுமா?”, குறுக்கு விசாரனை செய்வதுபோல ஸ்ருதி கேட்க..
“எனக்கு மல்லிகை நகர் தான் தெரியும், மல்லிக் நகர்..?”, இழுத்தான். 
“ஏங்க இவ்ளோ நாளா இந்தியால இருக்கீங்க. இந்த இடம் கூட தெரியாம இருக்கீங்க?”, என்று அவன் சொல்வது போலவே கிண்டலாக சொன்னாள்  ஸ்ருதி.
அவளது பகடியை புரிந்து கொண்ட யோகி, “அய்ய ஜோக்கு? அடுத்த சிக்னல் வரட்டும். ஞாபகப்படுத்துக்க சிரிச்சிடலாம்”, என்றதும் இருவருமே புன்னகைத்தனர்.
“சரி சொல்லுங்க எங்க இருக்கு அந்த கோண்ட்வாவும் மல்லிக் நகரும்? புனாலயா?”    
 “ஹஹ ஆமா, தம்பி வீடு கொண்ட்வா, தம்பி வைஃப் வீட்டு ஆளுங்க இருக்கறது மல்லிக் நகர்”
“ஏங்க அம்பது கிலோமீட்டர்ல இருக்கிற இடம் தெரிலன்னு சொல்லறீங்களேன்னு கேட்டா, ஆயிரங் கிலோமீட்டர் தள்ளியிருந்த ஊரத் தெரியுமான்னு கேட்டு வார்றீங்களே?” என்று கேட்டான்.  
சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் இருந்த ஸ்ருதி, “ஸ்ரீ அப்பா இருக்கும் போது எங்கயாவது பிக்னிக் போறதா இருந்தா, ‘வெளியே போறோம் கிளம்புங்க’-ன்னு சொல்லுவாங்க. எங்க எதுக்குன்னு எனக்கும் கேக்கத் தோணாது, அவங்களும் சொன்னதில்ல”, என்றாள் அமைதியாக. 
யோகி ஒருநொடி தலை திருப்பி உன்னிப்பாக ஸ்ருதியைப் பார்த்தான். ‘முததடவா இவங்க ஸ்ரீகுட்டி அப்பா பத்தி சொல்றாங்க’, என்று நினைத்த யோகிக்கு, ‘அடடா பழசை கிளறி விட்டுட்டோமோ?’, என்றும் தோன்றியது. 
அந்த அவளது அமைதியை மாற்றுவதற்காக, “சரியான குரங்கு குட்டியா இருந்தீங்கன்னு சொல்லுங்க?”, என்றான் யோகி.
“என்னது? குரங்குக்குட்டியா?”, அவனது உவமேயத்தில் அதிர்ந்தவளாக, ஸ்ருதி. 
“ஆமா, ஊர்ல பாதி பொம்பளைங்க அப்படித்தான இருக்கீங்க?
“ஒன்னா குரங்கு மாதிரி தவ்வி தோள் மேல ஏறிக்கறது, இல்லியா இதோ இந்த நந்தினி பண்ணாப்ல தள்ளிட்டு குதிர மாதிரி ஓடவேண்டியது.”
“அப்ப பொம்பளைங்க எப்படி இருக்கணும்ங்கிறீங்க?”
“நாய்குட்டி மாதிரி கூடவே நடந்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க?”
“பொம்பளைங்கன்னா உங்களுக்கு குரங்கு, குதிரை. நாய் தான் ஞாபகம் வருதா? ஏன் எங்கள பாத்தா உங்களுக்கெல்லாம் மனுஷங்க மாதிரி தெரியாதோ?”. 
“அட என்னங்க நீங்க? நீங்க நாய்ன்னா உங்கள கட்டின நாங்களும் நாய்தானங்க? தலைக்குமேலே ஏறிட்டு பாரமாவும் வேணாம், ஒட்டவே ஒட்டாதுனு தூரப்போவும் வேணாம்.. ஒன்னுக்கொன்னு ஆதரவா கூட சேர்ந்து நடங்கன்னு தாங்க சொல்ல வந்தேன்? அதுக்குள்ள நீங்க பெண்ணியம் பேச கிளம்பிட்டீங்க..?”, என்று மடக்கினான்.
‘ம்ம். இந்த ஆளோட பேசி ஜெயிக்கறது ஆண்டவனாலயும் முடியாது.’, என்று நினைத்து, “நா விஷாலண்ணாக்கு போன் பண்றேன்”, என்று தலையை திருப்பிக் கொண்டாள். 
ஸ்ருதி கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்து யோகி மனதுள் சிரித்துக்கொண்டான். ‘வீட்டுக்காரம்மோவ்.. நல்லா கோவப்படுங்க.. ஆனா வருத்தப்படாதீங்க’.
இவர்களையறியாமலேயே இருவருக்குமிடையே நல்ல நட்பு முகிழ்த்திருந்தது.

Advertisement