Advertisement

அத்தியாயம் 25

ஸ்ருதி யோகியிடம் அவனது திருமணத்தைப் பற்றி பேசி ஓரிரு வாரங்கள் சென்றிருந்தது. அவன் சொன்னது போல வசந்தம்மாவிடம் கடந்த நிகழ்வுகள் குறித்து இவள் எதுவும் பேசவில்லை.

ஆனாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்ருதிக்கு, ‘இவங்க வளத்த பிள்ளையையே நம்ப மாட்டேங்கிறாங்களே?’, என்று ஆற்றாமையோடு கூடிய கோபம் வந்தது. உடனேயே, ‘ஹ்ம்ம். இவங்களும் பாவந்தான்’, என்றும் தோன்றும். 

இப்படியிருக்க, ஒரு நாள் காலை தேனீர் அருந்தும்போது வீதியில் என்னவோ ஆரவாரம் கேட்க, ஸ்ருதி எழுந்து வாசலுக்கு வந்தாள். இவளது வீட்டின் அருகே இருந்த காலி மனையை பத்திருபது ஆட்கள் கோடரி,  கடப்பாரை, மண்வெட்டி சகிதம் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் இரண்டு லாரிகள் நின்றன.  

ஐந்து கிரவுண்ட் நிலத்தைப் பார்த்தாள் ஸ்ருதி. சரக்கொன்றை, புங்கை, கருங்காலி மற்றும் வேப்ப மரங்கள் இவை தவிர நீண்டு நெடிந்துயர்ந்த மூங்கில் ஒரு ஓரத்தில் உயரமாக வளர்ந்து இருந்த ஐந்து கிரவுண்ட் நிலம். மரங்கள் தவிர உள்ளே அநேக புற்களும் கொடியும் வளர்ந்து எப்போதும் பச்சை ஆடை உடுத்தியிருந்த இடம் அது. அவ்வப்போது பாம்பு கீரி கூட தலை காட்டியது உண்டு.  

வந்தவர்களையும் அவர்களது ஆயத்தங்களையும் பார்த்ததில் , ‘‘ஓ! இந்த மரத்தையெல்லாம் வெட்றதுக்கு ஆளுங்கள வந்திருக்காங்க போல” என்று மாடியில் இருந்த ஸ்ருதிக்குப் புரிந்தது.  

மாநகரத்தில் இருக்கிறோம் என்ற எண்ணமே வராத அளவு ரம்யமாக வைத்திருந்த சுற்றுப்புறம் இது. சாதாரண செடி கொடிகளை அகற்றவே ஸ்ருதிக்குப் பிடிக்காது. இத்தனை பெரிய மரங்களை வெட்டுவது என்றால்? அரசாங்கத்தில் யாருக்காவது போன் செய்து இதை தடுத்து நிறுத்த முடியுமா? என்று கூட ஒரு கணம் யோசித்துப் பார்த்தாள்.

இது தனியார் நிலம், அவர்கள் விருப்பப்படி என்னவும் செய்து கொள்ளலாம் என்பது அவளது அறிவுக்கு எட்டினாலும், மனது புலம்பியது. 

மரம் வெட்ட வந்திருந்த ஆட்களில் சிலர் ஒரு புங்கை மரத்தின் கிளைகளை வெட்ட, ஒரு மனிதன் மரத்தின் மீதேறி பாதி உயரம் சென்று அம்மரத்தைச் சுற்றி ஒரு தாம்புக்கயிறை கட்டினான். அதன் பின் தானியங்கி ரம்பத்தைக் கையில் வைத்திருந்த இன்னொருவன் கிளைகள் இழந்த மரத்தின் அடிப்பகுதிக்யை ரம்பத்தால் அறுக்க ஆரம்பித்தான். 

ஸ்ருதிக்கு ஏனோ மனது வலித்தது. சட்டென உள்ளே சென்று தாளிட்டு கொண்டாள். பர்வதம், “என்னம்மா?”, என்று கேட்க..

“பக்கத்து ப்ளாட்ல இருக்கிற மரத்தை வெட்டறாங்க அத்த. அது கீழ  யார் மேலயும் விழுந்திடக்கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதையா கயிறு கட்டிட்டு வெட்றாங்க. பாக்கவே சகிக்கல. அதுலயும் சித்திரை மாசம் மஞ்ச மஞ்சேர்ன்னு பூக்கற சரக்கொன்றை மரத்தை, இப்படின்னு சொடக்கு போடறதுக்குள்ள வெட்டிட்டாங்க”, என்று புலம்பினாள்.

“ஹ்ம்ம். விடு வீடு.. அபார்ட்மெண்ட் ஏதாச்சும் கட்டுவாங்களா இருக்கும். சரீ பக்கத்துல இருக்கிற காலி இடம் நம்மள வந்து மிரட்டினானே அவனோடது தான?”, என்று கேட்டார் பர்வதம். 

“அட ஆமால்ல, இந்த இடம் அதுக்கு அடுத்த ரெண்டு வீடு அப்பறம் அந்த கடைசி ஒட்டு வீடு எல்லாம் அவனோடதுன்னு  தான சொன்னாங்க?”

“ஆமா, இந்த பக்கத்து இடத்தோட ஓனர் இறந்துட்டதால,  அவரோட பையன் அபார்ட்மெண்ட் கட்டிடலாம்னு, தனபாலன்  கிட்ட குடுத்திருக்கான் போல. பேச்சு வாக்குல விஷால் சொன்னது இப்போதான் ஞாபகம் வருது.”

“ஓ!”

“என்னாச்சு ரொம்ப நாளா இந்த நந்தினியையும் காணோம், விஷாலயும் இந்த பக்கம் பாக்க முடியறதில்ல?”, அத்தை.

“அப்டில்லாம் இல்லியே? போன வாரம் கூட நந்தினி போன் பண்ணினாங்க. அவங்க பையன் விஷாலன்னா அம்மா அப்பா வோடவே இருக்கபோறானாம். ஸ்கூலுக்கு கூட அங்கயிருந்தே போயிட்டு வருவானாம். அவங்க மாமியார் சொன்னதா சொன்னாங்க”

“என்ன இது அம்மா ஒரு இடத்துல புள்ள ஒரு இடத்துல?. ஹ்ம்ம். ஆனா விஷால் அம்மா நல்ல திடமாத்தான் இருக்காங்க. அவங்க ரெண்டு பொண்ணுங்களோட குழந்தைங்களையும் அவங்க தான் பாத்துக்கறாங்க ன்னு நினைக்கறேன். இல்ல?” 

“ஆமாத்தை, மூணு பேரப் பசங்க இருக்காங்களாம். பெரிய பொண்ணோட பசங்க ரெண்டு பேரு, சின்னப் பொண்ணோட பொண்ணு ஒருத்தி. இப்போ விஷாலன்னா பையனும் அங்க போயிட்டா நாலு பசங்க. குழந்தைங்க எல்லாம் சேர்ந்து வளரட்டும்னு நினைக்கறாங்களோ என்னவோ?”

“ம்ம். நல்ல விஷயம்தான். விஷால் ஏதாச்சும் போன் பண்ணினானா?”

“இல்லத்தை, வேலை அதிகம்னு நந்தினி சொன்னாங்க.”

“ஓஹோ?”

“சரி. நேத்து தேவகி வந்தாங்களே என்ன விஷயம்?”

“அதுவா அவங்க பிரான்ச்-லேயே என்னோட கிரேட்-ல இருக்கிற போஸ்ட் ஒன்னு காலியாகுதாம். உன்  ட்ரான்ஸ்பர நா பாத்துக்கறேன். லீவ் கட் பண்ணிட்டு ஒரு மாசம் முன்னாடியே வந்து ஜாயின் பண்ண முடியுமான்னு கேக்கறாங்க.”

“அதுக்குள்ளயா உன்னோட லீவ் முடியப்போகுது? ஓ! சொல்ல சொல்ல கேக்காம நா கால் உடைச்சி கிட்டத்துக்கு லீவ் போட்ட?”

“ப்ச். அது பரவால்ல விடுங்கத்த”,என்ற ஸ்ருதி யோசனையாக, ”சின்னவன் என்னவோ காலைல மதியம் நைட் தூங்கும்போது மட்டும் தான் என்னை தேடறான். மதியத்துக்கு பாலை பிரிட்ஜ்ல எடுத்து வச்சிட்டு ஆபிஸ் போக ஆரம்பிக்கலாமா-ன்னு தோணுது அத்தை.”

“குழந்தைக்கு இன்னும் ரெண்டு மாசமாவது..?”, என்று இழுத்த பர்வதம், “உனக்கு எது சரின்னு தோணுதோ அத செய் ஸ்ருதி”, என்றார். 

“ஹ்ம்ம். பாக்கலாம்த்த.  நா போயி ஸ்ரீகுட்டிய எழுப்பி விடறேன். ஸ்கூலுக்கு கிளம்பனும்”, என்று அறைக்குச் சென்றாள் ஸ்ருதி. 

))))))))))))))

“மிஸ்டர் லோகேஷ். அக்ரிமென்ட் போடும்போது என்ன சொன்னீங்க? கையெழுத்து போட்ட ரெண்டு மாசத்துல ரெண்டு தவணையா பேசியபடி பணம் தர்றேன்னு தான? ஒரு தவணை தான் வந்திருக்கு”, சுகுமாரன் தனபாலனின் அலுவலகத்தில், லோகேஷிடம் கறாராகப் பேசிக் கொண்டிருந்தான். 

“சொன்னோம் சார், அந்த இடத்துக்கு அவசரமா பிளான் போட்டு அப்ரூவல் கேட்டதால பணம் இரண்டு பங்கு செலவாச்சு. அதுவும் இல்லாம, அங்க இருந்த மரம் அப்புறப்படுத்தறது, அது இதுனு ஏகப்பட்ட செலவு”, என்ற லோகேஷ் தொடர்ந்து..

“எங்க இடத்தை க்ளீன் பண்றதுக்கே ஒரு வாரம் ஓடிப்போச்சு. அந்த கார்னர் ஓட்டு வீட்ட இப்போதான் இடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. அத சுத்தி இருக்கிற மரம் மட்டைன்னு அதையும் க்ளீன் பண்ணனும். பத்தாக்குறைக்கு ஈ பி காரங்க கிட்ட சொல்லி அங்க வர்ற கரன்ட்டை கட் பண்ண சொல்லணும். அந்த செலவு வேற இருக்கு. இத முடிச்சுட்டு அடுத்த ரெண்டு வீடு இடிக்கணும். டெமாலிஷன் காண்ட்ராக்ட் பேசினதுல அதுவும் செலவு.”

“சார், இதெல்லாம் ரியல் எஸ்டேட் பத்தி தெரியாதவன்கிட்ட சொல்லுங்க, வீட்டை இடிச்சா அதுல இருக்கிற பழைய கதவு ஜன்னல்ன்னு அதுக்கு ஒரு ரேட் வச்சு வித்துடுவீங்க இல்ல? மரம் பத்தி சொல்லவே வேணாம். நல்ல ஜாதி மரம்னா டிம்பர் காரங்களே லாரி அனுப்பிடுவாங்க”, என்றான் சுகுமாரன். 

“ஹிஹி, அதெல்லாம் சரியா சொல்லறீங்க. ஆனா வீட்டை காலி பண்ணி குடுங்கன்னு சொன்னா, நீங்களும் உங்க அத்தானும் வாயத் திறக்க மாட்டேங்கிறீங்க. எங்களுக்கு எல்லாம் ஒரே செலவா போகுமில்ல?.”

“யோவ். இது ஏற்கனவே சொன்ன கண்டிஷன்தான?. அக்ரீமெண்ட் போடும்போது சரி சரின்னு தலையை ஆட்டினீங்க?, உங்க கோக்குமாக்கு தெரிஞ்சிதான் அத்தான் இதை பத்திரத்துல எழுத சொன்னாருன்னு நினைக்கறேன்”, என்று சொன்ன சுகுமாரன், “நீங்க சொன்னாப்ல ஆறு மாசத்துல எங்க பிளாட் (flat)-டை ரெடி பண்ணிக் குடுங்க. ஆறு மாசம் அதிகம்தான். ஆனாலும் உங்களுக்கு காசு புரளனும்  இல்லியா?அதான் அத்தான் ஆறு மாசம் கொடுத்தாரு. இந்த கைல சாவி கொடுத்து அந்த கைல சாவி வாங்கணும். நாங்க உடனடியா நீங்க கட்டி குடுக்கற வீட்டுக்கு குடி வந்துடுவோம்னு சொல்லிதானேயா ஒப்பந்தம் போட்டது?”

“ஆமாங்க ஆமா, ஆனா ஒரு விஷயம் மட்டும் எங்களுக்கு புரியவே இல்லங்க. அந்த லேடி அதான் ஸ்ருதி.. எங்க கிட்ட அவ்ளோ வீம்பு காட்டினாங்க? எப்படி உங்களுக்கு மட்டும் ..?”

“அது உங்களுக்கு தேவையில்லாத ஆணின்னு  நினைக்கறேன்”, என்று சுகுமாரன் சற்று காட்டமாகவே பதிலளித்தான்.

“ஹிஹி சொன்னா அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது உபயோகமா இருக்கும்னு..”,பல்லை இளித்தான் லோகேஷ். அதில் அவனது கரடு தட்டிய முகம் இன்னும் விகாரமாக தெரிந்தது. 

இருக்கையை விட்டு எழுந்த சுகுமாரன், “வெட்டிப்பேச்சு வேணாம். ஆறு மாசத்துல வீடு வேணும், இல்ல நீங்க குடுத்த அட்வான்ஸ் பணத்துல பாதிதான் திருப்புவோம். ஞாபகம் வச்சு சீக்கிரமா வேலைய முடிங்க”, என்று கிளம்பி விட்டான். 

“இந்தாளு ரொம்ப துள்றானே? ஹ்ம்ம். இவனால கொஞ்சம் வேலையாகுது, பாப்போம் கொஞ்சம் விட்டு பிடிப்போம். ஓவரா பண்ணினான்னா பிளாட்-ல மட்டமான கலவையை கொட்ட வேண்டியதுதான்”, இது லோகேஷ்.

))))))))))))) 

அடுத்த ஒரு மாத இடைவெளியில், ஸ்ருதியின் வீட்டை ஒட்டிய காலி மனை, அடுத்தடுத்த வீடுகள் அனைத்தும் தந்தரையாகி இருந்தன. அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சமீபத்தில் ஒப்புதல் அளித்து இருந்தது.

ஒரு நல்ல வாஸ்து நாள் பார்த்து, தனபாலனின் கட்டுமான நிறுவனம் அஸ்திவாரத்திற்கான வேலைகளை மளமளவென ஆரம்பித்தது.

முதல் காரணம் தனபாலனிடம் முன்பு ஒரு நாள், தங்கள் குடும்பம்  வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து செட்டில் ஆவதாகவும், அதிலும் குறிப்பாக நங்கநல்லூரிலேயே வீடு வேண்டும் என்று கேட்ட அந்த நபர்..  இரு தினங்களுக்கு முன் அவனோடு பேசி  நான்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டும் என்று கேட்டு டோக்கன் அட்வான்ஸாக ஒரு கணிசமான தொகையை கொடுத்திருந்தது. 

ஸ்ருதியின் வீட்டுக்காக சுகுமாரனிடம் ஒரு பெரிய தொகை கொடுத்திருந்தான். கொடுத்ததில் பாதி கருப்பு மீதி வெள்ளை. ஜாயிண்ட் வென்ச்சர் ஒப்பந்தத்தில் வெள்ளை மட்டும் பதிவு செய்து இருக்கிறான். ஆனாலும் அந்த பெண்ணின் (ஸ்ருதியின்) வீட்டைத் தர சம்மதித்ததற்காக அந்த செலவை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், என்ற மனோபாவத்தில்  இருந்தான் தனபாலன்.

தேசிய வங்கியில் கடன் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறான். ஒவ்வொரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போதும் செய்வதுதான். கட்டுமானம் நடைபெறப்போகும்  இடங்களின் தஸ்தாவேஜுகள், அவனது கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன தணிக்கை அறிக்கைகள் என்று அனைத்தும் வங்கியில் சமர்பித்தாயிற்று. அவை  பரிசீலனையில் இருப்பதாகவும், சரியாக இருக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் கடன் வழங்கப்படும் என்றும் வங்கியில் இருந்து நம்பகமான தகவல்  கிடைத்தது.

ஒன்று போட்டால் பல மடங்காக திரும்பத் தரும் பணம் காய்ச்சி மரம் ரியல் எஸ்டேட் துறை. இதில் ஒன்று போட்டு இரண்டு எடுப்பவர்கள் அநேகம் பேர். நேர்மையோடு கூடிய கடின உழைப்பு, அறிவு, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் இவர்களின் வளர்ச்சி சீராக நேர்கோட்டில் இருக்கும். 

ஆனால் அதே துறையில் ஒன்று போட்டு பத்து மடங்கு சம்பாதிக்க நினைக்கும் தனபாலன் போன்றோரும் இருக்கிறார்கள். இதற்கும் கடின உழைப்பு, அறிவு தேவை. அதோடு கூட செல்வாக்குள்ள மனிதர்களின் தொடர்பு, வரி ஏய்ப்புக்காக பினாமிகளாக செயல்பட நம்பிக்கையான நபர்கள், அரசாங்கத்திற்கு இட்டுக்கட்டி கணக்கு காண்பிக்கும் தணிக்கையாளர்கள், கூட கொஞ்சம் அடியாட்கள், அனைத்திற்கும் மேல் எதற்கும் அஞ்சாத துணிவு. நியாய அநியாயம், தர்மம், கொலை பாதகம் என்று எதற்கும் அஞ்சாத துணிச்சல்.

இவை எல்லாமும் தனபாலனிடம் இருந்தது. இன்னும் ஒன்றும் இருந்தது அது பேராசை. அவனுக்கு அது மிகமிக அதிகமாக இருந்தது. 

))))))))))))))))))

கையிலிருந்த காகிதத்தை வெறித்து நின்ற விஷாலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடிதத்தை ஏழெட்டு முறை படித்து விட்டான். ஏன்? ஏன்? ஏன்? அது மட்டும்தான் மண்டையைக் குடைந்தது.

நான்கே வரிகள்..

‘அன்புள்ள’, என்று எழுதி அதை குறுக்காக கோடிட்டு அடித்து,

அன்பில்லாத கணவனுக்கு,

உங்களுடன் இயந்திரம்போல வாழ முடியாததால்.. போகிறேன். எத்தனை பேரை வேண்டுமானால் ஏமாற்றி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளவும். தர்ஷித்தை அத்தையிடமே விட்டுச் செல்கிறேன்.

தேட வேண்டாம். தேடி கண்டுபிடித்தாலும் வரமாட்டேன்.

நந்தினி.

))))))))))))

Advertisement