Advertisement

அத்தியாயம் 24 2

சுகுமாரன், “நீ சொல்றது கரெக்டுதான் . இந்த பயத்த ஏன் முன்னாலேயே சொல்லல?”

“எப்படி சொல்ல? சொன்னா ஈஸ்வரி உன்னை கட்டிக்குமா?”

“ஏன் கட்ட மாட்டா?”

“அவ அண்ணனுக்கு ஆனாதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. அத்தான் அவள விட பத்து வயசு மூப்பு, ஆனாலும் கட்டிக்காம இருக்கு ஏன்னு தெரியுமா வர்றவ ஈஸ்வரிய சரியா பாத்துப்பாளோ மாட்டாளோனு பயம்தான்”

“அதுக்கு?”, தன்னை முன் வைத்து ஒரு பட்டி மன்றம். அதுவும் தான் சம்மந்தப்படாமலேயே என்று கோபம் வந்தது. “நீ பெரிய தியாகம் பண்றதா நினைச்சு இப்படி பண்ணியா?”,   ”நீயில்லன்னா இன்னொருத்திய கட்டமாட்டனா? அப்படி என்ன உங்கிட்ட உருகி வழிஞ்சிட்டா நின்னேன்?”, என்று கடித்தான். 

“பாத்திங்களா? நா சொன்னது சரியா போச்சா? எவ்ளோ சுளுவா இன்னொருத்திய கட்டிப்பேன்னு சொல்லறீங்க?”,என்று வனிதா கேட்க.. ‘சட்’ டென தலையில் அடித்துக் கொண்டான். இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தான் யோகிக்கு தோன்றியது

“இந்தா வனிதா இங்க பாரு நா இல்லாம யாரை கட்டிக்கிட்டாலும் உனக்கு ஓகே தான?”, என்று கறாராய் கேட்டான்.

அவள் திருதிருவென முழித்தாள்.

“என்ன?”, என்று அதட்டவும்..

“ம்ம்”, என்று மண்டைய வேகமாக ஆட்டினாள்.. 

“சுகு போயி அப்பாவை கூப்பிடு. நம்ம சொந்தத்துல நல்ல பையனா.. அடக்கமா.. சொல் பேச்சு கேக்கற பையனா யாராச்சும் இருக்காங்களா பாக்கச்சொல்லு”

“அத்தான்..!”,அதிர்ச்சியாகப் பார்த்தான் சுகுமாரன்.

“என்ன கட்டிக்கறவ புரிஞ்சவளா இல்லேன்னா பரவால்ல,  எப்போப்பாரு எக்ஸ்ரே கண்ணோட பொண்டாட்டி இருந்தா வீடு நரகமாயிரும். உங்க அக்கா சொல்றதுலயும் குத்தம் சொல்ல முடியாது. அதனால..”,என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “ஏற்கனவே அரை மணி நேரம் முடிஞ்சு போச்சு. இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம் தான் இருக்கு. ஓடு யாரையாவது..ஆங். அத்தை அந்த உங்க சொந்தத்துல யாரோ வனிதாவை கேக்க வந்தாங்களே? ஜங்க்ஷன் பஸ் ஸ்டாண்ட்-ல கூட காம்ப்ளெக்ஸ் வச்சி இருக்காங்க இல்ல? அவங்க எப்படி?”

“நல்ல மாதிரிதான் பா. ஆனா இவ்ளோ அவசரமா இவ கல்யாணத்த முடிக்கணுமான்னு..?”

“யோசிக்கவே யோசிக்காதீங்க. ஈஸ்வரி நாக்குல சரஸ்வதி குடியிருக்கா. ஆனா அப்பப்போ அவ பேருக்கு ஏத்தாப்புல அதுல காளி வந்து டான்ஸ் ஆடுவா. அதுலயும் வனிதா அவ கண்ணெதிரில ஒரே வீட்ல இருந்தா அவ்ளோதான். பேசித் தீத்துடுவா”, என்றான் தங்கையை நன்கு அறிந்தவனாக.   

அதுவுமில்லாமல் அக்காவிற்கு திருமணம் முடிக்காமல் தான் செய்துகொண்டோம் என்ற குறுகுறுப்பும் சுகுமாரனுக்கு வரக்கூடாது இல்லையா? அது அவனது தங்கையின் இல்வாழ்க்கையை பாதிக்குமே?

“அப்போ உங்களுக்கும் ஒரு பொண்ணைப் பாருங்க அத்தான்” சுகுமாரன் சொல்ல..

“ஆமாப்பா அதான் சரி கங்கணம் கட்டினது போட்டதாவே இருக்கட்டும். இரு அவரை கூப்பிடறேன். நிமிஷத்துல உங்க மாமா ஏற்பாடு பண்ணிடுவாரு”, இது வனிதாவின் அம்மா. 

“அய்ய அத்த…”,என்று கூப்பிடும் முன் அவர் சென்றிருந்தார். சில நிமிடங்களில் அந்த ஜங்ஷன் காம்ப்ளெக்ஸ் மாப்பிள்ளை வீட்டார் நேரே வனிதாவின் அறைக்கு வந்து விட்டார்கள். மளமளவென விஷயத்தை விளக்கிச் சொல்லி, திருமணம் செய்து கொள்ள இயலுமா என்று சுகுமாரன் கேட்டதும், பிரகாசமானார்கள். 

ஆனால் அந்த திடீர் மாப்பிள்ளை மட்டும், யோகியைப் பார்த்து முறைத்தவாறே, “ஜீவா நா உங்க அக்காகிட்ட ஒரு வார்த்த பேசணும்”, என்று சுகுமாரனின் காதைக் கடிக்க.., அவனருகே நின்ற யோகி காதில் அது விழாமலா இருக்கும்?. 

“பேசிக்கட்டும் ஆனா அத்தைய வனிதா கூட நிக்க சொல்லு”, என்று சொல்லிவிட்டு, “நேரமாச்சு. அஞ்சு நிமிஷத்துல மேடைல இருக்கனும்”, என்று அந்த மாப்பிளையை பார்த்து நேரடியாக சொன்னான். 

அது இருவித அர்த்தம் தந்தது. “மவனே அஞ்சு நிமிஷத்துக்கு மேல போச்சு…?”,என்றும்  “நல்ல நேரம் முடிஞ்சிடும் அஞ்சு நிமிஷத்துல வாங்க” என்றும் பொருள் தருவதாக இருக்க, மாப்பிள்ளை குழம்பினான். வனிதாவோடு பேச நினைத்தது மறந்து விடும்போல இருந்தது.   

“சரிங் சகல”, என்று பம்மினான் அந்த புது மாப்பிள்ளை. 

யோகிக்கோ, ‘ஆளும் மூஞ்சியும் பாரு?  நினைப்புல ஒன்னு ஓடுது, வெளிய வாய் ஒன்னு சொல்லுது. சகலையாம்ல..?”, என்று நினைத்தபடி முகத்தை சுருக்கி வெளியே வர.. எதிரே கண்ணீரோடு ஈஸ்வரி. 

ஹூப்! அவளைத் தேற்றி சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது. இப்போவே கல்யாணம் பண்ணிக்க, என் என்ற அவளது கோரிக்கையும் நிராகரித்தான் யோகி.

கூடவே அவளுக்கு வனிதாவோடு எந்த வாதமும் செய்யாமல், அவளது புகுந்த வீட்டினரின் மனம் கோணா வண்ணம் அனுசரித்து நடக்க வேண்டும் என்று தங்கைக்கு கட்டளையும் இட்டான் யோகிசரத்.

வனிதாவின் கழுத்தில் மணமகன் மங்கள நாண் சூட, குழுமியிருந்தோர் மஞ்சள் அட்சதை தூவி ஆசிர்வதித்தார்கள். சிலர் வருத்தமாக,சிலர் கவலையாக, சிலர் மிக மகிழ்வாக. 

ஆனால் யோகி மட்டும் மன நிறைவாக அட்சதை தூவினான். அதிலும் கண்ணில் துளிர்த்த கண்ணீரோடு மணமக்களுக்கு ஆசி கூறும் தனது அன்னையைப் பார்த்து கீற்றான புன்னைகையுடன். 

அங்கே இனி திருமண வேலைகளை பார்த்துக்கொள்ள அநேகம் பேர் உண்டு என்பதால் மெல்ல மண்டபத்தை விட்டு வெளியேறினான் யோகி.

)))))))))))))))))))))

பர்வதம் யோகியின் திருமணம் நின்ற கதையைக் கூறி முடிக்க, தினசரி பழங்கள் கொண்டு வரும் கிழவி ஸ்ருதியின் வீட்டுக்கு வந்தார். அவரிடம் தேவையான பழங்களை வாங்கிக்கொண்டு அவரது பேரனுக்கும் பேத்திக்கும் மிகுதியாய் இருந்த பலகாரங்களை டப்பாவில் அடைத்துத் தந்தாள் ஸ்ருதி. 

 பின்னர் அனைத்தும் இயல்பான தாளகதியில் நடக்க, சிற்சில சமயம் ஸ்ருதிக்கு ‘யோகி ஏன் திருமணம் வேண்டாம் என்கிறான்?’ என்ற குறுகுறுப்பு தோன்றும். 

எப்போது பார்த்தாலும் ஈஸ்வரி புலம்புவதும் அதுதானே? நேரடியாக அவனிடமே கேட்டுவிடுவோமா என்று நினைப்பாள். ஆனாலும் இப்போது தான் சாதாரணமாக இருவரும் பேச ஆரம்பித்து இருகிறோம். இதைப் போய் எப்படி கேட்பது என்று தயங்கினாள். 

யோகியைப் பார்க்க நேர்ந்தாலோ, அல்லது அவன் ஸ்ருதியின் கண் பார்வை படும்படி இருந்தாலோ அவனைத் தூண்டி துருவுவதுபோல யோசனையோடு பார்ப்பாள்.  

ஒரு நாள் கிழே இறங்கும்போது படி வளைவில் யோகி திரும்புவதற்கும், ஸ்ருதி மேலே ஏறுவதற்கும் சரியாக இருக்க.., எப்போதும் போல யோகி ஒதுங்கி நின்றான். ஸ்ருதி கையில் பால் கவரோடு மேலே ஏறியதும், யோகி  இறங்கினான். 

ஏதோ முதுகைத் துளைப்பது போல உணர்ந்தவன்,  சட்டென நின்று திரும்பிப் பார்க்க, அங்கே படி திருப்பத்தில் ஸ்ருதி நின்று இவனை பார்த்திருந்தாள். யோகி பார்த்ததுமே ஸ்ருதிக்கு படபடப்பாக வந்தது. ஆயினும் சமாளித்து நின்றாள். 

ஸ்ருதியிடம்,  “ஏதாச்சும் சொல்லனுங்களா?”, என்று கேள்வி கேட்டான். 

“ஆங். ஆமா நம்ம வீடு விஷயம் என்ன ஆச்சுன்னு..?”,

“அதான் சுகு சொல்லி இருப்பானே? பேசினவரைக்கும், அந்த லோகேஷ் ‘பத்திரத்தை திருப்பிக் கொடுக்கறேன், நானே வீட்டை நல்ல ரேட்க்கு எடுத்துக்கறேன் னு சொல்லிட்டு இருக்கான். இல்லன்னா சும்மாவாவது கேஸ் போடுவேன்னு சொல்லிட்டு இருக்கான். சுகுமார் சொல்லி இருப்பானே?”

“ஆங். சொன்னார். அவங்களால எந்த தொல்லையும் வராதுன்னு சொன்னார்..”, பேச்சை தொடரும் எண்ணம் தொக்கி நின்றது. 

“வேற ஏதாவது கேக்கனுங்களா?”

“அது..  கேக்கலாமா வேணாமா தெரில.., ஆனா உங்க தங்கச்சி ஈஸ்வரிக்காக கேக்கறேன். இதொ இப்போ பேசிட்டு இருக்கும்போது கூட அவ உங்கள பத்திதான் கவலைப்படறா.  ஏன் கல்யாணம் வேணாங்கிறீங்க?”

இப்படியொரு கேள்வி அதுவும் இந்த பெண்ணிடம் வரும் என்று எதிர்பார்க்காததால் சில நொடி திகைத்தான். பின் தனது வழமையான எடக்கு தலை தூக்க,கோணல் சிரிப்போடு, “சேவண்ட்டி எம்மம் படம் ஓட்டுனாங்களா? யாரு ஓட்டுனது அம்மாவா? ஈஸ்வரியா?”, என்று விட்டு பளிச்சென சிரித்த யோகி, “அதான பாத்தேன். எப்பவும் எதிரிய பாக்கறா மாதிரியே பாக்கற இந்த வீட்டுக்காரம்மா இப்போ கொஞ்ச நாளா வித்தியாசமா பாக்கறாங்களேன்னு தோணுச்சு. இதான் விஷயமா?”, என்று கேள்வியை ஸ்ருதியை நோக்கி திருப்பினான். 

‘நா எதிரி மாதிரி பாத்தேனா? எப்போ?’, என்று ஸ்ருதி கேட்பாள் என்று நினைத்துத்தான் யோகி இப்படி சொன்னது. ஆனால் என்னை மடை மாற்ற நினைக்காதே என்பது போல கையை கட்டிக்கொண்டு ஸ்திரமான பார்வை பார்த்து நின்றாள் ஸ்ருதி. 

யோகியின் அஸ்திரம் புஸ்வாணமாக  சில நொடிகள் எடுத்துக்கொண்டு, “ஈஸு கவலைப்படுதுனு தெரியும், அம்மாவும் தான். ஆனா அம்மாக்கும் வனிதா மாதிரி என்மேல பயம் இருக்கு.”

“அப்டின்னா?”

“அம்மாக்கு நானும் அவங்க வீட்டுக்காரர் மாதிரி செய்ஞ்சிடுவேனோன்னு பயம் இருக்கு”

“ச்சேச்சே வசந்தம்மா அப்டில்லாம் நினைக்க மாட்டாங்க.”

“ஆமா வசந்தம்மா நினைக்க மாட்டாங்க, யோகியோட அம்மா கூட தன் பையன பத்தி அப்படி நினைக்க மாட்டாங்க ஆனா, கல்யாண சுந்தரத்தோட மனைவியா அவங்க அப்படித்தான் நினைக்கறாங்க.”

“இல்லல்ல நீங்க அந்த வனிதா மேல காதல் கீதல் வச்சுகிட்டு இல்லாத காரணத்தை கொண்டு வரீங்கன்னு ”

“காதலா? ஹ்ம்ம். இப்போ நீங்க என்ன திசை திருப்பறீங்களாக்கும்?”, என்று சொல்லி தனது பழைய நினைவுகளில் மூழ்கினான். அவனையுமறியாது பதில் வந்தது.

 “காதலிச்சேனா னு கேட்டா தெரில. ஆனா சாதாரணமா கல்யாணம்னா இருக்க வேண்டிய ஆசையெல்லாம் எனக்கும் இருக்கத்தான் செஞ்சது”, என்று அமைதியாக யோகி சொல்ல.., ஸ்ருதி ஒரு படி கீழே இறங்கி இருந்தாள். அவனது குரலில்தான் என்ன ஒரு ஆகர்ஷணம்? 

தலையை சிலிப்பிக்கொண்ட யோகி, “ப்ச். கல்யாணமான பொண்ணைப் பத்தி இப்படி பேசறதே தப்பு. விடுங்க. ஆனா எங்கம்மா பத்தி நா சொன்னது நிஜம்”

“உங்கம்மா உங்களை பத்தி எவ்ளோ கலவைப்படறாங்கன்னு எனக்குத் தெரியும்”, கொஞ்சம் கோபம்கூடவந்தது. வசந்தம்மா மீது குற்றம் சொல்கிறானே என்று ஸ்ருதிக்கு தோன்றியது. 

“எனக்கும் தெரியும், எங்கம்மாக்காக நீங்க வக்காலத்து வாங்காதீங்க. வேணுன்னா ஈஸ்வரிட்ட கேளுங்க, அன்னிக்கு கல்யாணம் நின்ன போது எனக்கு உடனடியா பொண்ணு தேடறேன்னு யார்யாரெல்லாம் சொன்னாங்கன்னு கேளுங்க. அப்டியே யாரெல்லாம் சும்மா நின்னாங்கன்னும் சொல்லச்சொல்லுங்க”, என்றான் ஆணித்தரமாக.

“…”

“அவங்க பேர்ல தப்பே இல்ல. வனிதா கேட்ட கேள்வி அவங்களை பொறுத்த மட்டும் கரெக்ட். ஏன்னா அவங்க அந்த வலிய அனுபவிச்சு இருக்காங்க.  என்னோட யோசனை, நேர்த்தியான திட்டம் போட்டு செய்யற விதம் எல்லாமும் அவங்களுக்கு அப்பாவை ஞாபகப்படுத்துது. பேசற விதத்தை, குரலை மாத்திக்க சொன்னாங்க. ஆனாலும் அவங்க எனக்குள்ள அவங்க வீட்டுக்காரரோட சாயல பாத்துட்டேதான் இருந்துருக்காங்க. இப்பவும் இருக்காங்க.”

இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று ஸ்ருதி எதிர்பார்க்கவில்லை. “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில”, என்றாள்.

“அட ஒரு பொண்ணை கட்டினாதான் குடும்பமா? ஊரே என்துன்னு நினைச்சிகிட்டா..? கலாம் மாதிரி காமராஜர் மாதிரி உருப்படியா ஏதாவது பண்ணலாமில்ல?”, என்று சிரித்தான் யோகி. 

“அப்போ .. இப்படியேதான்…”, என்று கேட்க.. அவளது குரலில் இருந்த பரிதாபத்தை மாற்ற நினைத்த யோகி..

“இப்போ என்னங்க? நா கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோதான? குலம் கோத்திரம், ஜாதி,மதம் எதுவும் வேணாம். ஒரே ஒரு கண்டிஷன் தான். நா கிணத்துல குதின்னு சொன்னா உடனே குதிக்கற பொண்ணா இருக்கனும். யோகி பண்ணினா அது தப்பா இருக்காதுன்னு உலகமே எதுத்து நின்னாலும் சொல்ற அளவு அவ நம்பனும்.”, என்று சிரித்துவிட்டு, “வீட்டுக்காரம்மா பொண்ணு கிண்ணு பாத்துடாதீங்க. கிணறே இல்லாத ஊரு இது”,  என்று கேலியாக பேசி விட்டு வாசலை நோக்கி சென்றான்.

என்ன நினைத்தானோ அப்படியே திரும்பி படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் நின்று அண்ணாந்து ஸ்ருதியைப் பார்த்து, “என்னவோ கேட்டீங்க டக்குன்னு ஏதேதோ சொல்லிட்டேன்…”,என்று விட்டு, “அம்மா வருத்தப்பட்டா எனக்குக்  கஷ்டமா இருக்கும்”,என்றான். 

அம்மாவிடம் இந்த விஷயத்தைக் கூறாதே என்கிறான் என்பது புரிய, “வசந்தாம்மா வருத்தபடறா மாதிரி எதுவும் சொல்ல மாட்டேன்”,என்றாள் பெண்.

“தேங்க்ஸ்” என்று வராண்டாவில் தனது நீண்ட கால்களை எட்டிப் போட்டான் யோகி. மாடியில் இருந்து அவனை விசித்திரமாக பார்த்து நின்றாள் ஸ்ருதி.  

)))))))))))))))

டிசம்பருக்குள்ள இந்த கதையை முடிக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

செப் 2020 ல ஆரம்பிச்ச கதை…இன்னும் இழுக்குது. அலுவக வேலை தவிர, வேற வெட்டி வேலை பாக்காம (படிக்கக்கூட செய்யாம..) கிடைக்கற கேப்-ல எழுதறேன். தோழமைகளே ப்ளீஸ் பொறுத்தருள்க.

அடுத்த எபியோட சீக்கிரம் வர்றேன்.

Advertisement