Advertisement

அத்தியாயம் 23 2

அதற்குள்ளாகவே யோகி ரிமோட் கொண்டு தொலைக்காட்சியை அமர்த்தி இருந்தான். அவன் எழுந்த வேகத்தில் செஸ் காய்கள் சிதறி இருக்க.., “யோகன்னா, காயெல்லாம் கீழ விழுந்து வேற கட்டத்துக்கு போயிடுச்சு பாருங்க”, என ஸ்ரீகுட்டியின் குற்றம் சாற்றினாள்.

அதை ஏற்றுக்கொண்டு வருந்தும் குரலில், “ஓஹ்க்கோ?. ஸாரி. மறுபடியும் முதல்லேர்ந்து ஆடலாமா”, என்று கேட்டு அவளை சமாதானப்படுத்தினான். கூடத்தில் இருந்து வாசல் தெரியாது என்பதால் தன் அன்னையின் வரவை யோகி கவனிக்கவில்லை. 

ஆனால் வாசலில் இருந்த ஸ்ருதிதான் அவரை கவனித்துவிட்டாளே? வசந்தாம்மாவின் தோற்றத்தைப் பார்த்ததுமே நான்கே எட்டில் அவர் அருகே வந்து நின்றாள். கேரியரை வாங்கிக்கொண்டு, “ஸ்ரீம்மா” என்று குரல் குடுக்க.., தாழேதும் போடாமல் பாதி திறந்திருந்த கதவுதானே?, ஸ்ரீகுட்டி வந்து விட்டாள். “ம்மா…?”

குட்டியிடம், “சாப்பாட்டுக் கேரியர் இங்க இருக்குன்னு சொல்லிடு கண்ணா”, என்று விட்டு வசந்தம்மாவின் தோளைத் தொட்டு, “அத்த உங்க கிட்ட என்னமோ சொல்லணும் நீங்க வந்தா கூட்டிட்டு வான்னு சொன்னாங்க வசந்தம்மா”, என்றாள்.

ஸ்ருதியின் தொடுகையில் கொஞ்சம் சுதாரித்த வசந்தி. “ஆங். சரி”, என்று வசந்தி சொல்லும் நேரம், யோகி வீட்டுக் கதவை விரியத் திறந்து கொண்டு வெளியே வந்தான். 

கேரியரைத் தூக்கமுடியாமல் தூக்கிய ஸ்ரீகுட்டியிடம் இருந்து அதை வாங்கியவன், வசந்தமாவின் முகம்பாராமல், “ஏம்மா? கேரியர் எடுத்துக்கன்னு ஒரு போன போட்டா கீழ வரமாட்டனா?”,என்றான். நிமிர்ந்து பார்த்திருந்தால் அம்மாவின் முக மாறுதல் தெரிந்திருக்கும். 

வராத புன்னகையை வலிந்து வரவழைத்த ..“நா போட்டா ரெண்டு வாய் கூட சாப்பிடுவன்னுதான்..”, என்றார். 

அப்போதுதான் அம்மாவைப் பார்த்தான். ஒரு நொடி பாட்டைக் கேட்டிருப்பாரோ என்று தோன்றியது. ஆனால் அவரது புன்னைகை இயல்பாக இருக்க,  அவரோடு கூட நின்ற ஸ்ருதியை யோசனையாகப் பார்த்தான். 

உன் யோசனை சரிதான் என்று ஆமோதிப்பதுபோலப் பார்த்து யோகி கேட்காத கேள்விக்கு பதில் சொன்ன ஸ்ருதி, வசந்தியிடம்  “அத்தை கூப்பிட்டாங்க வசந்தாம்மா”, என்று மீண்டும் சொன்னாள்.

“சூடா சாப்டு சரத்து”, என்று சொல்லி ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்றார் வசந்தி.

“அத்த, வசந்தம்மா வந்தா குட்டிபாப்பாவோட வெயிட் என்ன இருந்துச்சுன்னு கேக்கணும்னு சொன்னீங்களே?”,என்று சொன்னபடி வசந்தம்மாவை கூட்டிக்கொண்டு உள்ளே வந்தாள் ஸ்ருதி.

இருவரையும் பார்த்த பர்வதம்மா, “வா வசந்தி” என்றார். மருமகளின் பேச்சின் மூலம் வசந்திக்கு ஏதோ சரியில்லை என்று புரிய, வசந்தியை அருகே அமர வைத்துக்கொண்டார்.

வசந்தம்மா பெருமூச்சு விட்டு, “காசிக்கு போனாலும் கருமம் தொலையாதுங்கிறது சரிதான் பர்வதம்மா”, என்று பீடிகையோடு ஆரம்பித்தார் வசந்தி.

ஸ்ருதிக்கு அவர் பேசுவது கேட்டாலும் அவள் அங்கே அவர்களோடு அமரவில்லை. நேரே சமையலறை சென்று இருவரும் குடிக்க தேநீர் தயாரித்தாள். 

பாமாவின் மகனது  பரீட்சை முடிந்து இருந்ததால், சென்னை வந்திருந்தான். இரண்டு நாட்கள் தங்கி அடுத்த செமஸ்டருக்குத் தேவையான துணிமணிகள் இன்னபிற பொருள்கள் வாங்கவென ரங்கநாதன் தெருவிற்கு தாயும் மகனும் சென்று இருந்தனர்.  

“என்ன பழமொழில்லாம் ரொம்ப பலம்மா இருக்கு?”, என்று பர்வதம் கேட்க..

எப்போது கேட்பார் என்று காத்திருந்தாற்போல தன் மனக்குமுறலைக் கொட்ட ஆரம்பித்தார் வசந்தி. “தொலைச்சுத் தலை முழுகிட்டேன். அந்தாளு எப்படி இருப்பாருன்னுகூட எனக்குத் தெரியாதுன்னு எனக்கு நானே ஆயிரம் தடவ சொல்லிக்கிட்டாலும், ஒரு குரலு, ஒரு பாட்டு, சரத்தோட ஒரே ஒரு செய்கை, அந்தாளை ஞாபகப்படுத்துதே பர்வதம்மா. என்ன பண்றது சொல்லுங்க?”

அந்தாள் யாரென்று கேட்காமலேயே அது யோகியின் தந்தை என்று ஸ்ருதிக்குப் புரிந்தது. 

“இப்படித்தான் யோகிக்கு தாலாட்டு பாடுவாரு. அவரு பேசினாலே எதிராளிக்கு மறுத்து பேசத் தோணாது. அப்படி ஒரு தன்மையா பேசுவாரு. இதுவரைக்கும் கோவமா ஒரு சொல்லு, ஒரு சண்டை எதுவுமே கிடையாது” 

“மெத்த படிச்சவரு. விவசாயம் பாக்க பிடிக்கல. பட்டணத்துக்கு போயி வேலை பாக்கணும்ன்னு சொன்னாரு. அவரு நினைச்சா மாதிரியே பெங்களூர்ல மத்திய சர்க்கார் வேல கிடைச்சது. யோகி அப்போ வயித்துல இருந்தான். கூப்பிட்டாரு. நானும் போயி ஆறு மாசம் இருந்தேன். அப்பறம் பிரசவத்துக்குன்னு  அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு.”

“கைபுள்ளைய வச்சிட்டு சமாளிக்க முடியாதுன்னு யோகி கொஞ்சம் வளரட்டும் அனுப்பி வைக்கறேன்னு அப்பா சொன்னாரு. அவருக்கு மாப்பிள்ளை காடு கழனி எல்லாம் பாக்காம மாச சம்பளம் வாங்கறாரே ன்னு ஒரு கோபம் இருந்துச்சு போல”

“யோகிக்கு ஒரு வயசாகி மொட்டை போடுற வரைக்கும் சனி ஞாயிறான போதும் ஊருக்கு வந்துடுவாரு. அந்த ரெண்டு நாளும் அவரு இருக்கறவரைக்கும் இவன தன் கைலேர்ந்து இறக்க மாட்டாரு. இவனும் யார்ட்டயும் போ மாட்டான்.”

“அப்பறம்தான் வாரம் வர்றது மாசமாச்சு, மாசங்கிறது ஆறு மாசமாச்சு. சரி ரொம்ப வேலையா இருக்காரு போலன்னு விட்டுட்டேன். கொஞ்ச வருஷம் வடக்கு பக்கம் கூட வேலை பாத்தாரு.”

“ஆனா பெங்களூருக்கு என்ன கூப்பிட்டாப்ல வேற எந்த ஊருக்கும் கூப்பிடல. நானே வரட்டான்னு கேட்டாலும் வேணாம் வருஷத்துக்கு ஒரு ட்ரான்ஸ்பர் வருது. யோகி படிப்பு கெட்டுபோகும்னு சொல்லிட்டாரு.”

“அவரு ஒன்னு சொன்னா வேதம்ல்ல எனக்கு? அடடா புள்ள மேல என்ன பாசம்னு கிடந்தேன். எது எப்படி போனாலும் யோகி பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வந்துடுவார். அடுத்து பொங்கலுக்கு வருவாரு. நமக்கு தைப்பொங்கல்தான பண்டிகை? தீபாவளியெல்லாம் பிள்ளைகளுக்காக கொண்டாடறதுதான? அதனால தீபாவளிக்கு அவரு வரலைன்னா ஒன்னும் தப்பா தெரியாது.”

“ஒரு பய அவர பாத்து நாக்கு மேல பல்லு போட்டு பேசமாட்டான். ஆளு அத்தனை கட்டுமஸ்தானம். ஹ்ம். அந்த கட்டுமஸ்தானத்துக்கு எவளோ ஒருத்தி வேளாவேளைக்கு ஆக்கிப்போடறதுதான் காரணம்னு இந்த புத்திக்கு உரைக்காம போச்சு”, என்று தனது நெற்றியில் அடித்துக்கொண்டார் வசந்தம்மா.

உள்ளே வசந்தி பேசுவதை கேட்டவாறே தேநீரை இரண்டு கோப்பைகளில் நிரப்பிய ஸ்ருதி, ‘என்ன? யோகியின் அப்பாவிற்கு இரண்டு மனைவியா?’, என்று திகைத்தாள்.

“ஒரு நாள் இல்ல ரெண்டு நாளில்லை, பத்து வருஷம்.முழுசா பத்து வருஷம் அந்தாளு ஏமாத்தறார்ன்னே தெரியாம ஏமாந்துருக்கேன். இதோ ஈஸு இருக்காளே அவ குறை மாசத்துல எட்டு ஆரம்பிக்கும்போதே பொறந்துட்டா.”

“இப்போ பாக்கறா மாதிரி அப்போ ஸ்கேன் வசதியெல்லாம் இல்லல்லியா? அதும் எங்கூருல? ஹெல்த்து சென்டர்தான் எங்களுக்கு பெரிய ஆஸ்பத்திரி. இவளுக்கு இந்த பிரச்சன இருக்குன்னு முன்னாடியே தெரில.”

“எனக்கு வலி எடுத்ததுமே அப்பா அந்தாளுக்கு போன் பண்ணி சொல்லிட்டாரு. அவரும் என்ன பண்ணினாரோ அஞ்சு மணி நேரத்துல வார்டுக்கு வந்துட்டாரு. ஆனா, பிள்ளையை ஒரு முறைகூட அந்த மனுஷன் ஒழுங்கா பாக்கல.அதுக்குள்ள..”, என்று விசித்து விசித்து அழ ஆரம்பித்தார் வசந்தி.

இந்த கதையை ஏற்கனவே கேட்டவர் என்ற முறையில், “விடு வசந்தி, முடிஞ்சு போனத பத்தி நினச்சு இப்போ யாராவது அழுவங்களா?”,பர்வதம் வஸந்தியைத் தேற்றினார். 

“எப்போ நினைச்சாலும் வயிறு எரியுது பர்வதம்மா. புள்ள குறையா பொறந்துருக்கேன்னு கவலைப்பட்டு நிக்கும்போது, தோள் குடுக்க வேண்டிய புருஷனும் இல்லன்னு ஆனா எப்படியிருக்கும்னு சொல்லுங்க?”,என்றார். 

அப்போது தேநீரோடு வந்த ஸ்ருதி, “டீ எடுத்துக்கோங்க”, என்று வசந்தியின் கையில் ஒரு கோப்பையை குடுத்து ஆறுதலாக சிரித்தாள்.

முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டவர் “என்னம்மா? இந்தம்மாக்கு பின்னால இப்படியொரு கத இருக்கான்னு பாக்கறியா?”, என்று ஸ்ருதியைப் பார்த்து வசந்தம்மா கேட்கவும்..

கனமான பார்வையோடு, “எல்லார் பின்னாலயும் ஒரு கத இருக்கு வசந்தாம்மா”, என்றாள் ஸ்ருதி.

அவள் அவளது நிலைய சொல்வதை புரிந்து, “உண்மதான்மா”, என்று பெருமூச்சு விட்டார்.

“ஈஸ்வரி இப்படி இருந்ததால அவங்கப்பா விட்டுட்டு போயிட்டாங்கன்னு நா நினைச்சேன்”

“இல்லமா. அந்த பொண்ணோட தம்பிக்கு ரொம்ப நாளா இவர் பேர்ல சந்தேகம் இருந்திருக்கு. ஏன்னா சரியா வருஷா வருஷம் யோகி பொறந்த நாளுக்கு இங்க வருவாரா? அதெப்பிடி ஒவ்வொரு வருஷமும் ஒரே மாசத்துல கேம்ப் வருதுன்னு ஆரம்பிச்ச சந்தேகம். பொங்கலுக்கும் கரெக்ட்டா நம்ம வீட்டுக்கு வந்துடுவாரு இல்ல? சம்பளப்பணமும் பாதிக்கு பாதி குறையவும் அவனுக்கு என்னமோ தோணியிருக்கு. ஈஸு பொறந்ததும் அப்பா போன் போட்டாரு இல்லியா? அதுல சந்தேகம் உறுதியாயிருக்கு. அக்கா, அக்கா பிள்ளை அம்மா எல்லாரையும் கூட்டிகிட்டு பின்னாடியே வந்துட்டான்.”

“ஹாஸ்பிடல்ல எல்லார் முன்னயும் ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணுங்கன்னு அந்த பொண்ணு நிக்கிது. சும்மா நின்னா பரவால்லயே? வாயும் வயுறுமா நிக்கறவ கிட்ட என்ன நியாயம் பேச முடியும்? அவ தம்பியா சொல்லுக்கா இப்பயே இந்தாள  வெட்டிடறேன்-ன்னு குதிக்கறான்.”

“எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. இதுல குழந்தையை பத்தி யோசிக்க எங்க நேரம்? யோகிதா பாத்துக்கிட்டான். அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் அவன்தான் ஈஸ்வரிக்கு எல்லாம் பண்றான்.”

“இத்தன நடந்தும் அந்தாளு மட்டும் கல்லாட்டம் நின்னாரே ஒழிய, யாரோடையும் ஒரு வார்த்த பேசலையே? எனக்குத்தான் அந்த சின்ன பய பேசினதை கேட்டு கூசிப்போச்சு. என்ன இருந்தாலும் மரியாதையா பாத்தே பழகிட்டேனா? அத்தனை பேரு முன்னால அந்தாளு அவமானப்படறத பாக்க முடியாம, அப்பா அத்து விட்டுருங்கப்பா-ன்னு எங்கப்பாட்ட சொன்னேன்.”

“அந்தாளு சம்பாதிச்சு அவரு பேருல வாங்கின சொத்தெல்லாம் யோகிக்குன்னு சொல்லிட்டு கடைசியா ஒருதடவ என்னோட பேசணும்னு சொன்னாரு.”

“அந்த பொம்பளையோட பேசினா நா இப்படியே போயி பஸ்சுல விழுந்து சாகறேன்னு அந்த பொண்ணு சொன்னா. என்னை நிமிந்து ஒருமுறை பாத்தாரு. போயிட்டாரு.”

“அவ்ளதான். இன்னிவரையும் அந்தாளு எம் புள்ளைக்குன்னு குடுத்த அந்த மேக்கு பாத்த நிலத்தை நா கண்ணால கூட பாத்ததில்லை. சரத்து வளந்து விவசாயம் பாக்க ஆரம்பிச்சதுக்கப்பறம் எம்புள்ளையையும் அத தொட விடல.”

“அப்பு, இந்த நிலம் உங்கப்பனோடதுன்னு நினைக்காத, ஒரு நல்ல பொண்ணோட வயித்தெரிச்சல் அதுல இருக்குன்னு சொன்னேன். நா சொன்னேங்கிறதால எம்புள்ள அதை அப்படியே பத்து பதினஞ்சு குடும்பத்துக்கு இனாமா குடுத்தான். அதும் யாருக்குங்கிறீங்க? காலம் காலமா எங்க காட்ல வேலை பாத்து, விசுவாசமா இருந்தவங்களுக்கு குடுத்தான்.”

“சரத்து எப்பவாச்சும் கொஞ்சம் குரலை குறைச்சு பேசினாலும், என்னடா ரகசியமா பேசற? உரக்கப் பேசுடான்னு பழக்கினேன். என்ன வேணா படி, ஆனா விவசாயந்தான் பாக்கணும்-ன்னு கறாரா சொன்னேன். ஆனா, இத்தனை செஞ்சும் எம்புள்ள மாலையும் கழுத்துமா நிக்கும்போது அவன் மேல விழுந்த கறைய என்னால துடைக்க முடியாம போச்சு.”

Advertisement