Advertisement

அத்தியாயம் 23 1

குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது ஸ்ருதிக்கு யோகி பேசியதில் என்னமோ உறுத்தியது. ‘வசந்தம்மாக்கு யோகி பாடறது பிடிக்காதா? அப்போ யோகி நல்லா பாடுவான்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியும் ஏன் அவங்களுக்கு பிடிக்காம போச்சு?’, என்று யோசிக்கும்போதே ஸ்ருதிக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. 

‘வாடகைக்கு வீடு பாக்க வந்த போது யோகி விவசாயம் பாக்கறதா சொன்ன வசந்தம்மா, அவர் வக்கீலுக்கு படிச்சதா சொல்லையே?.  ஊரே அவன் பேச்சு கேக்கும், என் பையன் அதுவாக்கும் இதுவாக்கும்னு பெரும பேசினாங்களே தவிர, படிப்பை பத்தி ஒன்னும் பேசல. சுகுமாரன் வந்து எனக்கு வீடு வேணும்னு கேக்கும்போதுதான் யோகியும் சட்டம் படிச்சவன்னு தெரியும்.’

‘அட, அப்போ அதை சொன்னது அத்தையாச்சே? ஒருவேளை வசந்தம்மா அத்தைகிட்ட சொல்லியிருப்பாங்களோ? ம்ம். இருக்கலாம்.’

சிந்தனையோடு ஒரு கையால் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஸ்ருதி. சின்னவன் தோளில் தூங்கிக்  கொண்டு இருந்ததால், நேரே படுக்கையறை சென்று அவனை மெத்தையில் படுக்க வைத்தாள். தானும் கொஞ்ச நேரம் படுத்து உறங்கலாம் என்று ஸ்ருதிக்குத் தோன்ற, மகனை அணைத்தவாறு படுத்தாள்.

ஸ்ரீகுட்டி பர்வதம்மா மற்றும் குருக்கள் மாமியோடு வருகிறேன் என்று சொன்னதால், அவளை மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தாள். குருக்கள் மாமி வீட்டுப் பையனைத் தவிர இன்னும் இரண்டு குழந்தைகள் ப்ரித்விஸ்ரீயின் வயதை ஒட்டி மண்டபத்தில் இருக்க, பிள்ளைகள் விளையாடுவதில் மும்மரமாக இருந்தனர்.

‘என்னிக்காவதுதான் வெளியே கூட்டிட்டு போறோம்,  விளையாடிட்டு வரட்டுமே, எப்படியிருந்தாலும் ஸ்ரீகுட்டிய பாத்துக்கறதுக்கு அத்தை இருக்காங்க’, என்ற எண்ணம் ஸ்ருதிக்கு. 

வளைக்காப்புக்கு மண்டபத்திற்கு சென்றது, அங்கே அங்குமிங்கும் அலைந்தது, அதோடு கூட பலமான விருந்து அனைத்தும் சேர்ந்து, ஸ்ருதிக்கு உடனடியாக உறக்கத்தை வரவழைத்தது. 

தன் மீதிருந்த பாலாவை தலை தூக்கிப் பார்த்து சிரித்த யோகியும், உமிழ்நீர் வழிய தூக்கத்தினூடே யோகியைப் பார்த்து சிரித்த குட்டி பாலாவும் ஸ்ருதியின் தூக்கத்தில் வந்து சென்றனர். அவளையுமறியாது ஸ்ருதியின் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டது.

—————–

யோகிக்கு, ஸ்ருதி பாலாவை வாங்கிச் சென்ற பத்தாவது நிமிடத்தில் அம்மா வசந்தியிடமிருந்து போன் வந்தது.

“சொல்லும்மா”

“எங்கப்பா இருக்க?”

“படுக்கனும் போல இருந்தது அதான் வீட்டுக்கு வந்தேன்.”

“சாப்பிட்டு போயிருக்கலாமில்ல?”

“ப்ச். பசியில்லமா.”

“அதெப்பிடி பசிக்காம போகும்? நீ வர்றியா? இல்ல நா டப்பால கெட்டி எடுத்துட்டு வரட்டா? நர்சரிக்காரம்மா வீட்டுக்காரரோட நீ சாப்பாட்டு ஹாலுக்கு போனத பாத்தேன். சரி, நீ சாப்ட்டிருப்பன்னு நினைச்சுட்டோம். இப்போ அவங்களுக்கு வளையலும் தாம்பூலமும் குடுக்கும்போதுதான் நீ அவங்க கூட சாப்பிடலன்னு சொன்னாங்க. சொல்லுப்பா. நா கேரியர்ல கொண்டு வரேன்.”

“அய்யய்ய. அதெல்லாம் வேண்டாம்ம்மா. தலைவலி பத்து நிமிஷம் தல சாய்க்கலாம்னு வந்தேன். இப்போ சரியாயிடுச்சு.  நானே அங்கதான் வந்துட்டு இருக்கேன்”,என்று சொல்லி போனை வைத்தான். 

வீட்டை பூட்டும்போது ஸ்ருதியின் பார்வை நினைவுக்கு வந்தது. ‘இந்த வீட்டுக்காரம்மா முழியே சரியில்லையே.. அம்மாட்ட கேட்டுருமோ?’, என்று எண்ணிக் கொண்டான்.

 ‘இந்த குட்டிப்பய பூ மாதிரி சிரிச்சா,என்ன பண்றது? தானா பாட்டு வருது’, என்று தனக்குத்தானே சொல்லி கொண்டவனுக்கு குட்டியின் சிரிப்பும், அவனது  ‘ன்னண்ணா’ வும் நினைவுக்கு வர குறுஞ்சிரிப்புடனே இரண்டிரண்டு படியாக இறங்கி சத்திரம் சென்றான். 

——-

ஈஸ்வரியின் விழா முடிந்து யோகியின் வீட்டுக்கு வந்த வனிதாவின் குடும்பம் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சென்னை முழுவதும் சுற்றி பார்த்து பொறுமையாக புறப்பட்டனர். அவ்வப்போது வனிதாவின் கணவர் முணுமுணுத்தாலும், அவனது தங்கை மற்றும் தம்பிக்காக வேறு வழியின்றி பொறுமை காத்தான். யோகி, கீழ் வீட்டிலேயே தங்கி அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் மேலே சுகுமாரனின் வீட்டுக்குக் சென்றான். 

அடுத்ததாக, ஈஸ்வரி மற்றும் சுகுமாரன் இருவரது மௌனகாண்டமும்  முடிந்ததின் விளைவாக சுகுமாரன் கீழேயே தனது ஜாகையை மாற்றிக்கொள்ள, யோகி மொத்தமாக மாடியில் குடியேறினான். 

சுகுமாரனின் அம்மா, ‘பிரசவம் முடியும்வரை நானும் கூடமாட ஒத்தாசை செய்துகொண்டு சென்னையிலேயே இருக்கிறேன்’, என்றதும் கூடுதலாக ஒரு காரணம். 

யோகியின் இருப்பு ஸ்ருதிக்கும் ஸ்ரீகுட்டிக்கும் அவ்வளவு ஏன் நிமிடத்தில் நாலுகால் பாய்ச்சலாக தவழும் பாலாக்குட்டிக்குமே சகஜமானது. 

இதற்கிடையே ஒருநாள் ஸ்ருதியின் வீட்டுக்கு வந்த சுகுமாரன், ராகவ் எழுதிக் கொடுத்ததாக சொன்ன பத்திரத்தின் நகலை காண்பித்து, “அன்னிக்கு லோகேஷ் உங்க கிட்ட காமிச்ச பத்திரம் இதனா பாருங்க?”, என்று கேட்டான்.

ஒரு முறை அதை கையில் வாங்கிப் பார்த்ததும், “ஆமா இதான். பாருங்க அவரோட சைன் அப்படியே இருக்கு. அந்த ஆர்-ரோட வளைவு அச்சு அசலா அவரோடது மாதிரியே இருக்கு பாருங்க. இதான் இதேதான் அன்னிக்கு பாத்தேன்” என்றாள் ஸ்ருதி படபடப்பாக.  

“ம்ம்.”

“எப்படி லோகேஷ் கிட்ட இருந்து உங்களுக்கு கிடைச்சது?”, என்று ஸ்ருதி கேட்க..,

“இது வெறும் ஜெராக்ஸ் காப்பிதாங்க. ஒரிஜினல் இன்னும் அவன்ட்ட தான் இருக்கு”, என்றான்.

கொஞ்சம் ஏமாற்றம் தோன்ற, “ஓஹ்! அத வாங்க முடியுமா?”

“அது..”, என்று தயங்கி..,” பேசறவங்க பேசறா மாதிரி பேசினா எதுவும் கிடைக்கும்”, என்றான் சுகுமாரன்.

“அப்ப அவன் குடுக்கலன்னா அவன் பேர்ல கேஸ் போடப் போறீங்களா?”

“பேசி பாப்போம். ஒத்து வரலனா கோர்ட்க்கு போக வேண்டியதுதான்.”

“ம்ம். வேற என்னமோ கேக்கணும்னு நினைச்சேனே? ஆங். அந்த போலீஸ் கம்பளைண்ட்?”,என்று ஸ்ருதி கேட்க..

“அவங்க எந்த கம்ப்ளைன்ட்டும் பண்ணல. சும்மா ரீல் விட்டு இருக்காங்க”, என்றான் சுகுமாரன்.

“அப்போ இந்த பத்தரம் மட்டும் நம்ம கைக்கு வந்துட்டா இனிமே அவங்களால எந்த பிரச்சனையும் பண்ண முடியாது இல்லையா?”, ஆர்வமாக கேட்ட ஸ்ருதியை ஒரு முறை ஏறிட்டு நோக்கிய சுகுமாரன், பார்வையை தழைத்து கையில் இருந்த பத்திரத்தின் மீது தனது கவனத்தைத் திருப்பினான். 

மெதுவாக, “பத்திரம் வரலைன்னா கூட  இனிமே அவங்களால எந்த பிரச்சனையும் வராது”, என்று சொன்னான். 

“அதான நீங்கல்லாம் இருக்கும்போது இன்னொருத்தன் வந்து பிரச்சனை பண்ணிடுவானா என்ன?”, என்று ஸ்ருதி நம்பிக்கையோடு கேட்டதும், எச்சில் கூட்டி விழுங்கி சுகுமாரனும் பொதுவாக சிரித்து வைத்தான்.

))))))))))))))))

ஒரு சுபயோக சுப தினத்தின் இதமான மாலை நேரத்தில் ஒரு அழகான ஆரோக்கியமான பெண் மகவை ஈன்றெடுத்தாள் ஈஸ்வரி. அவளுக்கு ரத்த அழுத்தம் கூடுவதும் குறைவதுமாக இருந்ததால் பிரசவத்திற்கு குறித்த தேதிக்கு இரு தினங்களுக்கு முன்பாகவே அட்மிட் செய்துவிடுமாறு மருத்துவர்கள் சொல்லிவிட, அவ்வளவுதான் சுகுமாரன் ஈஸ்வரியைத் தவிர உலகத்தில் வேறெதுவும் இல்லை என்பதுபோல மனைவியை விட்டு ஒரு அடி கூட நகராமல் அடை காத்தான். 

மருத்துவமனைக்கு சென்ற ஈஸ்வரிக்கு ரத்த அழுத்தம் இயல்பாவதற்கு மருந்து கொடுத்து, எதற்காகவும் பயப்பட வேண்டாம்.. டென்ஷன் கூடாது, என்று மகப்பேறு மருத்துவர் தேறுதல் சொல்லவும். ஈஸ்வரி அதை மனதில் இருத்தி ஓரளவு சரியாகி பிரசவத்திற்கு தயாராகி விட்டாள்.

மறுநாள் மாலையில் ஈஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டு லேபர் வார்டு செல்ல, அந்த அறையின் வாசலில் இறுகிப்போய் அமர்ந்தவன்தான். யோகிக்கே சுகுமாரனின் இருண்டு போன முகத்தைக் காண சகிக்கவில்லை. 

இரண்டொரு முறை சொல்லிப் பார்த்தும் சரி சரி என்றானே ஒழிய அவனது பதட்டம் குறையவே இல்லை. அரை மணி நேரம் பொறுத்து, லேபர் வார்டில் இருந்து வெளியே வந்த நர்ஸ் ஈஸ்வரிக்கு பெண் பிறந்த செய்தியையும் ஈஸ்வரி நன்றாக இருப்பதையும் சுந்தரத் தெலுங்கில் சொல்ல, சுகுமாரன் அவரது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு “தேங்க்ஸ் சிஸ்டர் தேங்க்ஸ் சிஸ்டர்”, என்றான். 

“ஈ தன்யவாதலு மீ பார்யக்கு செப்பண்டி”, என்று சொல்லி சிரித்தார் அந்த செவிலி. அவனையும் மீறி பிடித்திருந்த அவரது கைகளுக்கு முத்தமிட்டு சுகுமாரன் மனைவியை தேடி ஓட, உடனிருந்த நர்ஸ், பயிற்சி மருத்துவர் என்று அனைவரும் சிரித்தனர். நல்ல வேளையாக முத்தம் வாங்கிய அந்த செவிலிக்கு வயது ஐம்பதுக்கு மேல். 

ஈஸ்வரியிடம் இதை சொல்லிச் சொல்லி அனைவரும் சிரிக்க, அவளுக்கு நிறைவாக இருந்தது. தன்னை தன் குறைகளோடு விரும்பி ஏற்றுக்கொண்டவன் தன் கணவன் என்று  பெருமையாகவும். 

அதன் பின்னர் சுகுமாரனைப் பார்க்கும் போதெல்லாம், நர்ஸ்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சிரித்து வைக்க, ஈஸ்வரி அங்கு இருக்கும்வரை மருத்துவமனை கலகலத்தது. டிஸ்சார்ஜின் போது அங்கே வேலை பார்க்கும் தாதியில் இருந்து தலைமை மருத்துவர் வரை அனைவர்க்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்து தனது மகிழ்ச்சியை கொண்டாடினான் சுகுமாரன். 

யோகி அவனது ஆர்பாட்டத்தைப் பார்த்து, ‘என்னவும் பண்ணிகொள்’ என்று சிரித்ததோடு சரி. அவனுக்கும் இது உவப்பான விஷயம்தான் ஆனால், இத்தனை ஆர்பாட்டமெல்லாம் அவனுக்கு ஆகாது. 

குழந்தை பிறந்து மூன்றே நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தாள் ஈஸ்வரி. யோகியின் வீட்டில் பவுடர் மற்றும் டெட்டால் வாசனையும், பிள்ளைத் துணியும், பெண்களின் ஆதிக்கமும் அதிகமாகிப் போக, யோகி அன்னையிடம் “எதாவது வேணும்ன்னா போன் பண்ணுங்க, அப்டியே என் சாப்பாடும் மேலயே சாப்டுக்கறேன்.  கேரியர்ல கட்டி வச்சுடுங்கம்மா”, என்று சொல்லி விட்டான். 

அங்கே ஊரில் இது பழக்கமான விஷயம்தான். யோகி வயலுக்கோ அல்லது தென்னை நார் தொழிற்சாலைக்கோ செல்வதானால், மதிய உணவை எடுத்துக்கொண்டு செல்வான். எனவே இங்கேயுமப்படி செய்யுமாறு அன்னையிடம் சொன்னான்.

சிலநாட்கள் கழித்து கீழே தயாரான உணவை வசந்தம்மா மகனுக்கு எடுத்துக்கொண்டு மாடி ஏறினார். அப்போது யோகி ஸ்ரீகுட்டியோடு செஸ் ஆடிக்கொண்டு இருந்தான். 

வீட்டில் ஒரு ஆளாக தொலைக்காட்சி ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க, விளம்பரங்கள் முடிந்து அமுத கானம் என்று பழைய  பாடல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சி வந்தது. 

யோகியின் கவனம் முழுவதும் சதுரங்கத்தில் இருக்கும் நேரம்..,  தொலைக்காட்சியில்  ‘சின்ன சின்ன கண்ணனுக்கு’ பாடல் ஒளிபரப்பானது. சடாரென நிமிர்ந்த யோகி, சுற்றும் முற்றும் பார்த்து அவசரமாக ரிமோட்டைத் தேடினான். 

ஸ்ருதி சரியாக அந்த நேரத்தில் தன் வீட்டு வாசல் கதவு கீலுக்கு எண்ணெய் போட்டுக் கொண்டு இருந்தாள்.  

அப்பாடலைக் கேட்டதும் யோகியின் போர்ஷனை நோக்கி அவள் திரும்ப, அங்கே கேரியரோடு மேலே ஏறி வந்த வசந்தம்மாவின் முகம் இருளடைந்து போனது தெரிந்தது. அவர் யோகியைக் கூப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே வாசலில் நின்று விட்டார். 

Advertisement