Advertisement

அத்தியாயம் 22 2
ஆயிற்று இதோ அதோவென ஈஸ்வரியின் வளைகாப்பு வைபவம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ஸ்ருதி வெறுமே மண்டபம் சென்று தலைகாட்டி விட்டு போய்விடலாம் என்று எண்ணி இருக்க, (அதற்கே அவளுக்கு ஆயிரம் யோசனைகள் ஓடியது)  ஈஸ்வரி அவளை அப்படியெல்லாம் சும்மா இருக்க விட்டு விடவில்லை. 
விருந்தினர்கள் தரும் மொய் பணத்தை வசூல் செய்து, அதை குறிப்பெடுக்கச் சொன்னாள். கூடவே தனது மாற்றுப்புடவைகள், முத்து மாலை, தங்க ஹாரம்,மற்றும் வளையல்கள்  அடங்கிய ஹோல்டர் ஒன்றை ஸ்ருதியின் பொறுப்பில் கொடுத்திருந்தாள். 
ஸ்ருதிக்கு மொய் வாங்கி அதை பையில் போடுவதே பெரிய வேலையாகிப் போனது. நல்ல வேளையாக ஈஸ்வரி அமர்ந்திருந்த மேடைக்கு அருகிலேயே ஒரு மேஜையும் நாற்காலியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனவே ஸ்ருதிக்கு பெயரைக் குறித்து வைப்பது கொஞ்சம் இலகுவாக இருந்தது.
சுகுமாரனின் தந்தை தனது தாய்மாமன் முறையை விடாமல், அவரே ஈஸ்வரியை அழைத்து வந்து மேடையில் அமர வைத்தார். அதிகாலை வீட்டில் இருந்து புறப்படும்போதே ஈஸ்வரி அவளது ப்ரொஸ்தடிக் கால்களை அணிந்து கொண்டு வந்ததால் ஏதும் பிரச்சனை இல்லை. 
எப்போதும் வெளியே செல்லும்போது அணிந்து கொள்வதுதான். அவளோடு கூட வரும் ஒருவர் ஈஸ்வரியைக்  கொஞ்சம் தாங்கலாக பிடித்துக்கொண்டால் போதும். நடப்பதில் அவளுக்கு சிரமமே இருக்காது. ஆனால் இப்பொழுது கர்ப்பத்தின் காரணமாக அவளது உடல் எடை கூடி இருந்ததால் அந்த கால்களோடு நடப்பதில் சிரமம் இருந்தது. இருந்தபோதும் மேடையில் அமரும்வரை அதை வெளியே காண்பிக்காமல் சமாளித்தாள் ஈஸ்வரி. 
முகூர்த்த நேரம் வந்து விட்டது, நலுங்கு வைக்கும் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று பாட்டி ஒருவர் கூறவும், அவர்கள் வழமையாக சுகுமாரன் ஈஸ்வரிக்கு அருகே வந்து முதலில் நலுங்கிட ஆரம்பித்தான். 
முதலில் கன்னம் அடுத்து கைகளில் சந்தனம் பூசி விட்டுமேடையை விட்டு கீழே இறங்காமல் அவளுக்கு அருகே இருந்த சிறிய ஸ்டூல் ஒன்றை எடுத்து முழந்தாளை ஒட்டினாற்போல் வைத்து, அதன் மேலே சந்தனம் குங்குமம், ஆசீர்வாதம் செய்யத் தேவையான அட்சதை மற்றும் பூக்கள் அடங்கிய பெரிய தாம்பாளத்தை வைத்து விட்டான்.
என்ன என்று பார்த்த மனைவியிடம், “ஸ்ட்ராப் லூஸ் பண்ணிவிடு ஈஸு. யாருக்கும் தெரியாது”, என்றான் சுகுமாரன். அதற்கு நன்றியாக இல்லை நன்றியாக இல்லை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்து, அடுத்து நலங்கு வைக்க வருபவர்களை கவனிக்க ஆரம்பித்தாள் ஈஸ்வரி.
உறவினர்கள் அனைவரும் விருந்து சாப்பாடு முடித்து பாதி ஆட்களுக்கு மேல் புறப்பட்டு இருந்தனர். சிலருக்கு வாடகை வாகனம், சிலருக்கு பேருந்து நிறுத்தம் இன்னும் பலருக்கு ரயில்வே ஸ்டேஷன் என்று வழி சொல்லி, செல்பவர்களுக்கு பலகாரம் கட்டிக் குடுத்து என்று வேலை நெட்டி எடுக்க  களைத்துப் போனான் யோகி. 
நல்ல பசிவேறு. மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் உண்ட களைப்பு தீர உறங்கிக்கொண்டு இருக்க, சரி நாம் சாப்பிட்டு விடுவோமென்று உள்ளே டைனிங் ஹாலுக்குச் சென்றான். அங்கே ஒரு பக்கம் ஈஸ்வரி சுகுமாரன், அத்தை,மாமா, வசந்தம்மா, பர்வதம் என்று அமர்ந்து பேசியவாறே சாப்பிட, எதிர்புறம் வனிதா குடும்பத்தினர். 
இருபுறமாகவும் இரண்டு இலைகள் விருதாவாக இருந்தன. யாரேனும் சாப்பிடாமல்  விட்டுப் போயிருந்தால், அவர்கள் வரும்போது சட்டென அமர்ந்து சாப்பிட ஏதுவாக பரிசாரகர்கள் இலை போட்டு இருந்தனர். ஆனால், அதில் இன்னமும் பதார்த்தம் ஏதும் பரிமாறி இருக்கவில்லை.
அங்கே அப்படி அனைவரும் அன்னியோன்யமாக பேசுவதைக் கண்ட யோகிக்கு என்னவோ அங்கே போகப் பிடிக்கவில்லை. ஈஸ்வரிகூட கணவனோடும் வனிதாவோடும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தவன், திடீரென வெறுமையை உணர்ந்தான். 
அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், தான் இப்போது அங்கே நுழைந்தால், அங்கே அசவுகரியமானதொரு நிலைமை தோன்றும். இப்போது கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பவர்கள் மேலே பேச்சை தொடர்வதா வேண்டாமா என்று யோசிப்பார்கள். வனிதா கணவன் என்னவோ நான் அவளை கொத்திக் கொண்டு போய் விடுவேன் என்பது போல பார்ப்பான். இவன் பொறாமைப்படுமளவு நான் என்ன செய்து விட்டேன் என்றுதான் புரியவில்லை.
மொத்தத்தில் இந்த சொந்தங்கள் மத்தியில் இருக்கப் பிடிக்காமல் போனது. உலகத்தில்  தான் ஒருவன் மட்டும் தனியாளாக இருப்பது போல யோகிக்குத் தோன்ற ஓசையெழுப்பாமல் அப்படியே சாப்பாட்டுக் கூடத்தில் இருந்து வெளியேறினான். அங்கே இருந்த சந்தடியில் இவன் வந்ததையும் போனதையும் யாரும் கவனிக்கவில்லை.   
நேரே வெளியே சென்றவன் காரில் ஏறி அமர்ந்து விட்டான். ’எங்கே போவது? வீடு அது விட்டால் வேலை என்று பழகியாயிற்று. மண்டபத்தில் பெரிதாக வேலை என்று எதுவும் இல்லை. மிச்சம் இருக்கும் சொந்தங்களை அம்மா மாமா  பார்த்துக் கொள்வார்கள்.’ 
‘ஈஸ்வரியைப் பற்றி இனி கவலையில்லை. சுகு இருக்கிறான். இனி அவள் டெலிவரி முடியும் வரை எப்போதும் கூடவே இருக்கப்போவதாக வேறு சொல்லி இருக்கிறான். அதுவரை நான் மேல் போர்ஷனில் வசதியாக இருக்க வேண்டுமாம். ஹ்ம்ம். வசதி? யார் கேட்டா?  ச்சே..’,  என்று புத்தி பேதலித்தவனைப்  போல யோசித்த யோகி தலையை உலுக்கி விட்டுக்கொண்டான்.  
‘இது என்ன இப்படி ஒரு விரக்தி? சரியில்லை, வேலை அதிகமென்று நினைக்கிறேன். வீட்டுக்கு போய் சிறிது நேரம் படுத்திருந்தால் எல்லாம் சரியாய்ப் போகும்’, தனக்குத்தானே ஏற்றுக்கொண்டாலும் மனது முணுமுணுவென்று புலம்பிக்கொண்டு தான் இருந்தது. 
கீழ் வீட்டில் அத்தையின் அம்மா அப்பா மற்றும் அவரது மாமா போன்ற வயதானவர்கள் படுத்துக் கொள்வதாக சொல்லி மண்டபத்தில் இருந்து வந்திருந்தனர். இவன்தான் அவர்கள் அனைவரையும் காரில் கொண்டு வந்து விட்டான்.  
அங்கே போனா, ‘கல்யாணம் பண்ணிக்கடா சாமி, நம்ம வாகீசன் பொண்ணு தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கு, முத்துவேலன் பொஞ்சாதி மருதாயி தெரியுமா? அவ பேத்தி மஞ்சக்கிழங்காட்டம் இருக்கான்னு ஆரம்பிப்பாங்க’, என்று கடுப்பானவன், நேரே மாடிக்குச் சென்றான். 
ஜன்னலின் ஓரம் சாவி மாட்டி வைத்திருப்பதால் வீட்டைத் திறந்து, கதவை முழுக்க மூடக்கூட செய்யாமல் அப்படியே தரையில் படுத்துகொண்டான் யோகி. கண்களை மூடிகொண்டவனின் மனதுக்குள் என்னென்னவோ குழப்பங்கள் வந்து போயின. ஆயினும், வேலை செய்த உடம்பல்லவா? சற்று நேரத்தில் அசதியில் அப்படியே கண்ணயர்ந்து விட்டான். 
சிறிது நேரம் கழித்து, மெத்து மெத்து என்று யோகியின் கன்னத்தில் ஏதோ ஒன்று தொட்டுச் செல்ல, புருவம் நெரிபட கண் விழித்தான். எதிரே பாலா, பாலகிருஷ்ணன், தனது முத்துப் பற்களைக் காட்டி சிரித்தான். யோகிக்கு திடீரென உலகமே வெளிச்சமானது போலத் தோன்றியது. 
தனது பிஞ்சுக் கைகளால் யோகியை தட்டி எழுப்பி விட்டதில் சின்னவனுக்கு சந்தோஷம். இன்னும் கலகலவென அவன் சிரிக்க, யோகியும் புன்னகைத்தான். 
“ஓ! இவன் இங்க இருக்கானா? செரிலாக் ஊட்டிட்டு, பாத்திரத்தை சிங்க்-ல போட்டு திரும்பறதுக்குள்ள இவனை காணோம், என்று பதட்டமாக வந்தார் பாமா. 
அவரது குரலை கேட்டதுமே எழுந்து அமர்ந்து விட்டான் யோகி. 
தனது பதட்டம் அடங்காமல், “போன வாரத்திலேர்ந்து தவழ ஆரம்பிச்சிட்டானே? இப்பவே  ஜெட் ஸ்பீட்ல போறான். நல்லவேளை படிக்கட்டுக்கு போற பாதையை கம்பி கேட் போட்டு அடைச்சிட்டோம். இல்ல..?”,என்று நடக்காத ஒன்றைப் பற்றி யோசித்து பயந்தார் அந்த பாமா அக்கா. 
இவரை மண்டபத்தில் பார்த்ததுபோல தெரியவில்லையே என்று யோசித்த யோகி,  “நீங்க மண்டபத்துக்குப் போகலியா?”, என்று கேட்க..
“இல்ல தம்பி, ஸ்ருதி வந்ததும் நா போகணும்”, என்றார் பாமா.
“அட என்னங்க இப்போவே மணி மூணு ஆகப்போகுது? இருங்க ஆட்டோ கூப்பிடறேன்”, என்று போன் எடுத்து தனக்கு நன்கு பழக்கமான  ஆட்டோ ஓட்டுனருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான் யோகி. 
மறு முனையில் ரிங் போய்க்கொண்டு இருக்கும்போதே, யோகியின் எதிரே இருந்த பாமா, “இல்ல தம்பி இதோ குட்டிய பாத்துக்கணும். ஸ்ருதி வந்துடுவாங்க. சாப்பிட்டு உடனே வந்துடறேன்னு கொஞ்ச நேரம் முன்ன கூட போன் பண்ணி சொன்னாங்க”, என்று சொன்னார். 
அவர் யோகியோடு பேசி முடிக்கும்போது அந்த ஆட்டோ ட்ரைவர் யோகியின் அழைப்பை எடுத்திருந்தான்.
“அண்னா. சொல்லுங்கண்ணா”
“லியோ ஸ்டாண்ட்-ல இருக்க?”
“ஆமாங்கண்ணா”
“அப்டியே நம்ம வீட்டுக்கு வர்றியா? இங்க ஒருத்தங்க மண்டபம் வரைக்கும் போகணும்”
“சரிங்கண்ணா, அண்ணா, அவங்கள வெளிய நிக்கச் சொல்லுங்கன்னா. இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துருவேன்”,என்று அவன் தொடர்பைத் துண்டித்தான்.
எதிரே நின்ற பாமாவைப் பார்த்து,”அம்மா நீங்க கீழ போயி நில்லுங்க, நம்ம லியோ ஆட்டோ வரும். அதுல ஏறி மண்டபத்துக்கு போங்க, நல்லா சாப்பிட்டு தங்கச்சி நல்லா இருக்கணும்னு வாழ்த்திட்டு மெதுவா ஆற அமர வாங்க. அங்க சுகு இல்லன்னா அம்மா இருப்பாங்க. வரும்போது வண்டிக்கு அவங்க ஏற்பாடு பண்ணிடுவாங்க.எப்படியிருந்தாலும் பாலா அம்மா வர்றேன்னு சொல்லி இருக்காங்கல்ல?”, என்று சொல்லிவிட்டு, “அதுவரைக்கும் இந்த பெரிய மனுஷன நான் பாத்துக்கறேன்”, என்று சின்னவனைத் தூக்கித் தன் மேல் போட்டுக்கொண்டான். 
யோகி இவ்வளவு வலியுறுத்திச் சொல்லவும், ஆட்டோ வேறு சொல்லியாயிற்றே? பாமா சரியென்று ஒப்புக் கொண்டார்.. ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி முகம் துடைத்து கொண்ட பாமா, கிளப்பி கீழே செல்லும்போது மறக்காமல் சின்னக்குட்டியின் தண்ணீர் பாட்டிலை (பிளாஸ்டிக்) யோகியிடம் குடுத்து, “இப்போதான் சாப்பிட்டு இருக்கான் தம்பி, கொஞ்ச நேரம் பொறுத்து தண்ணீ கேப்பான். சும்மா அவன் கைல குடுத்தா போதும் அவனே குடிச்சுப்பான்”, என்று சொல்லிவிட்டு சென்றார்.
பாமா சென்றதும் எழுந்து கதவை அடைக்க சோம்பல் பட்ட யோகி மீண்டும் முன்போலவே தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்ள, என்னவோ தனக்குப் பட்டா போட்ட இடம் போல சின்னவன் யோகியை எண்ணிக்கொண்டான்.அவன் மேலே ஏற முயற்சித்தான். பிராண்டினான். ‘ங்தா ப்பா’, என்று அவனது கையில் இருந்த தழும்பினைப் பார்த்து கதை பேசினான். 
யோகியின் கழுத்தின் கீழே சுருள் சுருளாய் வளர்ந்திருந்த முடியை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்தான். யோகி, ‘ஸ்ஸ்’ என்று ஒவ்வொரு முறையும் வலியில் முனக, அவன் முகம் பார்த்து, ‘ன்னான்னா’ என்று சொல்லிப் பூவாய்ச் சிரித்தான். 
ஸ்ரீகுட்டி அடிக்கடி ‘யோகன்னா’ என்று கூப்பிட சொல்லி பாலாவை பழக்குவாள். அப்போதெல்லாம் போக்கு காட்டி விட்டு, அவளில்லாத நேரத்தில் ‘ன்னான்னா’ சொல்லி யோகியைப் பார்த்து தனது நான்கு பற்களும் தெரிய சிரிக்கிறான் பொடியன். 
அந்த சின்னக்கண்ணனின் சிரிப்பைப் பார்த்து மயங்கி, அவனைப் பார்த்து.. 
‘சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ? கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா’, என்று தன்னை மறந்து பாட ஆரம்பித்தான் யோகி. 
யோகியின் அடர் நிறத்து சட்டை பட்டனை பிய்ப்பதில் கவனமாக இருந்த பொடியன் கூட அவனது வேலைய சட்டென நிறுத்தி, யோகி பாடுவதை விழி கொட்டாமல் பார்த்தான். 
அவனிடமிருந்து சற்றும் பார்வையை அகற்றாமல் யோகியின் கை மீது தலை வைத்து அவன் அருகே படுத்துக் கொண்டான். பின்பு வெகு சுவாதீனமாக தவழ்ந்து யோகியின் மேலே ஏற முயற்சித்தான். யோகி இழுத்து மேலே போட்டுக்கொள்ள ஒரு பூக்குவியல் தன்மீது படுத்துக் கொண்டது போல இருந்தது. 
பாடிக்கொண்டே சின்னவனின் தலையை தடவி கொடுத்துவிட, ரெண்டு நிமிடத்தில் பாலா தூங்கியே விட்டான். தூக்கம் யோகியின் குரல் தந்த மயக்கத்திலா அல்லது அவனது தூங்கும் நேரம் இது என்பதாலோ தெரியாது. 
 சரியாக அந்நேரத்திற்கு ஸ்ருதி அவளது வீட்டிற்கு மாடி ஏறி வரவும், யோகி பாடலின் அடுத்த அடியான.. 
பூ போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா 
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா, என்று  பாடவும் சரியாக இருந்தது. 
ஸ்ருதி,  சின்னவனுக்காக போட்ட க்ரில்-லை திறக்கும்போது, சுகுமாரனின் வீட்டில் இருந்து யாரோ பாடுவது கேட்டது. இத்தனை நேர்த்தியாக யாரேனும் பாடுகிறார்களா அல்லது யூ ட்யூபில் பாடல் கேட்கிறார்களா? என்ற யோசனையோடு சுகுமாரனின் போர்ஷனுக்கு வந்து நின்றாள். 
பாதி கதவு திறந்திருக்க, படுத்துக்கொண்டு இருந்த யோகிதான் பாடுகிறான் என்று தெரிந்தது. மேலே ஏறும்போது அவள் சந்தேகித்தது ஊர்ஜிதமாக, உண்மையில் அவனது குரலைக் கேட்டு, அதிலிருந்த பாவத்தைக் கேட்டு சங்கீதத்தின் அரிச்சுவடி கூட தெரியாத ஸ்ருதி கூட திகைத்துத் தான் போனாள். 
அதைவிட யோகியின் மார்பில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குட்டிப்பையன்,  யோகி பாடுவதை நிறுத்தியதும், தூக்கத்திலேயே தலை தூக்கி யோகியைப் பார்த்து ‘ன்னான்னா’, என்று சொல்லி சிரித்தான். 
படுத்திருந்த யோகி மெல்ல எம்பி சின்னவனின் தலையை செல்லமாக முட்டி பதிலுக்குச் சிரித்தான். இருவருடைய செய்கையிலும் இருந்தது கிஞ்சித்தும் கல்மிஷமில்லாத அன்பு அன்பு பரிபூரண அன்பு மட்டுமே. 
ஸ்ருதிக்கு யோகியும் பாலாக்குட்டியும் சேர்ந்து சிரித்த அந்த காட்சி அப்படியே மனதில் பதிந்து போனது.  
இவர்களின் ஏகாந்தத்தை கெடுக்க மனமின்றி ஸ்ருதி அவளது போவீட்டுக்குச் செல்ல அந்த நீண்ட நடைபாதையில் திரும்பினாள். ஸ்ருதியின் கைப்பை அங்கிருந்த இரும்பு க்ரில்லில் மோதிக்கொண்டது. ஸ்ஸ் என்றுவிட்டு க்ரில்லில் மோதிய கைப்பையை இழுத்துக் கொண்டாள். 
ஆனால் யோகி அந்த சப்தத்திலேயே எழுந்து விட்டான். வாசலுக்கு அருகே ஸ்ருதியை பார்த்ததும் அமரக்கூடஇல்லாமல் எழுந்தே விட்டான்., செறுமியவாறே., “ஓ வாங்க”, என்றான்.   
“இல்லல்ல நீங்க தூங்குங்க, நா குட்டிய எடுத்துட்டு போட்டா?”,என்று கேட்டாள்.
யோகிக்கு ஸ்ருதியைப் பார்த்த அதிர்ச்சியை விட, அவன் தன்னை மறந்து பாடியது அதிர்ச்சியாக இருந்தது. ஐயோ அம்மாக்குப் பிடிக்காதே? “ம்ம்”,என்று குழப்பத்தோடு தலையசைத்தான். 
சின்னவன் படுத்திருப்பது யோகியின் மீதுதானே? ஸ்ருதியின் வரவால் படுத்திருந்த யோகி எழுந்து அமர்ந்து விட்டாலும், பாலா இன்னும் அவன் மீது தானே இருக்கிறான்? 
இவன் என்ன பிள்ளையை எடுத்துத் தராமல் ‘ம்ம்’ என்கிறான்?, என ஸ்ருதி தயங்கி நிற்க..
“ஓ! சாரி, இந்தாங்க”, என்று தோளில் இருந்த பாலாவை தூக்கி ஸ்ருதியிடம் குடுத்தான்.
சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் ஸ்ருதியின் வாயில் இருந்து, “நல்லா பாடறீங்க”, என்று வந்தே விட்டது. 
பொதுவாக பாராட்டைக் கேட்கும் மனிதர்கள் சிரிப்பு, ஆமோதிப்பு குறைந்த பட்சமாக தலையாட்டல் போன்ற மறுமொழி தருவார். ஆனால் யோகியோ, “வந்து ..  இத அம்மாட்ட சொல்லிடாதீங்க”, என்றான் அவசரமாக.
குழப்பமாக பார்ப்பது இப்போது ஸ்ருதியின் முறையானது.

Advertisement