Advertisement

அத்தியாயம் 18 2

மறுநாள் காலையில் விஷால் அலுவலகம் செல்லக் கிளம்ப, நந்தினி, “ரெண்டு மூணு ப்ளவுஸ் தைக்க தரணும். மார்க்கெட் போயி லைனிங் துணி, லேஸ்,  எம்ப்ராய்டரி டிசைன்ல்லாம் வாங்கிட்டு டைலர் கடைக்குப்  போலாம்னு இருக்கேன்”

“ம்ம்”, என்றவனின் கவனம் வேறெங்கோ இருந்தது. நண்பனை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வு விஷாலைப் படுத்திக்கொண்டே இருந்தது.

“ஏதாவது வேணும்னா வீட்டுக்கு போன் பண்ணாதீங்க, செல்லுக்கு போடுங்க”

“ம்ம் சரி”, என்று விடைபெற்ற விஷால், ‘ஹ்ம்ம்.என் பிரச்சனை பத்தி உனக்கு என்ன? எப்பப்பாரு மார்க்கெட்டு,ஷாப்பிங், லேஸ்.. ஹ்ம்ம். உன்ன மாதிரி பொம்பளையா பிறந்துருக்கலாம்’ என்று மனதுள் சலித்து தனது வண்டியை நேரே தனபாலனின் அலுவலகம் நோக்கி கிளப்பினான்.

விஷால் சென்றதும் தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட நந்தினி ரமணன் வேலை பார்க்கும் வங்கிக்குச் சென்றாள். அவளது அலைபேசியில் ராகவ் காசோலையின் போட்டோ ஒன்று இருந்தது. விஷாலின் மொபைலில் இருந்ததை அப்படியே தனது பேசிக்கு மாற்றி இருந்தாள். அதை விஷால் கண்டுபிடித்துவிட கூடாதென்பதற்காக அனுப்பின அந்த வாட்ஸாப் தகவலையும் அழித்திருந்தாள். மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இதைக் காட்டி இன்னும் சில  விஷயங்கள் ரமணனிடம் தெரிந்து கொள்ள எண்ணினாள்.

அவன் பெயர் பலகையைப் பார்த்து கேபினுக்குள் நந்தினி செல்ல, “வாங்க, ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க. இவங்கள பாத்திட்டு வர்றேன்”, என்றான் ரமணன்.

சரி,அடுத்தவருக்கு தவறாக தெரியக்கூடாதென்று நினைக்கிறான் என்பது புரிந்து  அங்கிருந்த ஒரு இருக்கையில் அமைதியாக உட்கார்ந்தாள். ரமணன் ட்ரிம்மாக உடையணிந்திருக்க ஏனோ நந்தினின் மனம் தன்னையறியாது வன் பொருளகத்தில் சாதாரணமான டீ ஷர்ட் பனியனோடு நிற்கும் கணவன் முகம் நினைவுக்கு வந்தது.

‘நீ வந்த வேலை இதுவல்ல’ என்று அவளது மனசாட்சி அவளைப் போக் செய்ய.., வேறு பக்கம் தனது பார்வையை திருப்பிக் கொண்டாள்.

சிறிது நேரத்திலே ரமணன் அவனது பார்வையாளர்களை அனுப்பி இருந்தான். அதன் பின்னர்,”சொல்லு என்ன விஷயம்?”, என்று கேட்டான்.

நந்தினி ஸ்ருதியின் பிரச்சனை குறித்து ரமணனிடம் சுருக்கமாக சொல்லிவிட்டு, “ராகவ் வோட கையெழுத்து போர்ஜரின்னு கண்டுபிடிக்க முடியாதா?”,எனக் கேட்டாள்.

“ஈசியா கண்டுபிடிக்க முடியும். நிறைய டெக்னலாஜி வந்துடுச்சு, ஆனா ஒருவேளை கையெழுத்து அப்டியே ஜெராக்ஸ் மாதிரி இருந்தாலோ, எழுதும்போது எழுத்துகளோட வீச்சு..  புள்ளி வைக்கறது எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலோ கொஞ்சம்  கஷ்டம். அதைவிட ராகவ் மேட்டர்-ல என்ன ப்ராப்ளம்ன்னா எழுதிகொடுத்தவர் உயிரோட இல்ல, சோ ப்ரூவ் பண்றது இன்னும் காம்ப்ளிகேட்டா இருக்கும்”

“அதுவுமில்லாம, பணம் குடுத்தோம்னு சொல்றவர் ஒருவேளை கேஸ் போட்டா ஸ்ருதிக்கு இன்னும் பிரச்சனை வரும். முதல்ல அலைச்சல் அதிகமாகும். கோர்ட் சொல்ற டேட்ல அவங்க சொல்ற நேரத்துல அங்க இருக்கனும்.எப்போ நம்ம கேஸ் நம்பர் வருமோன்னு பாத்து உக்காந்துட்டு இருக்கணும்”

“வக்கீல் இருந்தா ஓகேன்னு வச்சுக்க,ஆனாலும் அலைச்சல், பணத்தோட டைமும் வேஸ்ட்டாகும். அதைவிட அவுட் ஆப் கோர்ட் செட்டில் பண்ணிக்கறது நல்லது”, என்றான்.

நந்தினி, “ஓ!”,என்று சொல்லி அடுத்தது என்ன என்று  யோசனையானாள்.அதற்குள் ரமணனின் தொலைபேசி அடிக்க, எடுத்துப் பேசினான்.

நேற்று விஷால் பேசும்போது என்னவொ எழுபது லட்சம் என்று சொன்னது  நந்தினியின் நினைவுக்கு வந்தது. அவுட் ஆப் கோர்ட்டாக செட்டில் செய்ய அது ஒன்றும் சிறிய தொகை இல்லையே? ஆனால் அவ்வளவு பணத்தை ராகவ் வாங்கினானா? இல்லையென்று விஷால் அந்த தனபாலிடம்  பேசுவதைக் கேட்டாள்தான். ஆனாலும் உறுதி செய்துகொள்ள நினைத்தாள்.

தொலைபேசி உரையாடலை முடித்த ரமணன் நந்தினியைப் பார்க்க, “ஒரு சின்ன ஹெல்ப்”, என்று தனது பேசியில் இருந்த காசோலையின் எண்ணைக் காண்பித்து, “இவரோட அக்கவுண்ட்ல எழுபது லட்சம் ன்னு  ஏதாவது அமௌன்ட் வரவு வந்திருக்கா ன்னு பாக்க முடியுமா?” எனக் கேட்டாள்.

“நோ, முடியாது”, என மறுத்து “அப்படி அடுத்தவங்க கணக்கு விபரங்களை நாம பாக்கறது தப்பு”, என்றான்.

நந்தினியோ,”சரிங்க, அவரோட அக்கவுண்ட் டீட்டைல் நா பாக்கறதுதான் தப்பு, அஸ் எ மேனேஜர் நீங்க பாக்கலாமில்ல?”, என்று கேட்டாள்.

இதற்கும் ரமணன் தயங்க, “ப்ளீஸ் எனக்காக… என் புருஷன் பண்ற தப்பை நா சரி பண்ண முடியுமான்னு பாக்கறேன்” என்று நந்தினி கண்களில் நீர் திரையிட  சொன்னாள்.

அதன்பின் ரமணன் தயங்கவில்லை.  ராகவினுடைய வங்கிக் கணக்கு துல்லியமாக இருந்தது. அவனது சம்பளம் மற்றும் வாடகைப்பணம் அனைத்தும் முறையாக வரவு வைக்கப்பட்டு  இருந்தது.ஆனால் நந்தினி சொல்லும் எழுபது லட்சங்கள் ..? ம்ஹூம்.

“இல்ல நந்தினி, அவரு கணக்குல அவ்ளோ வரவு இல்ல”,என்றான்.

 “அப்போ இதை வச்சு ராகவ் பணம் வாங்கலைனு ஈஸியா நிரூபிக்க முடியும் இல்லியா?”, வழி கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி வந்தது.

” ம்ம்”, என்று உதடு பிதுக்கி மறுத்து, “ராகவ் க்கு செக் குடுத்ததா சொன்னாங்கன்னா ஈசியா அதை ட்ராக் பண்ணலாம். ஆனா, டிடி குடுத்தேன், அதுவும் பிச்சு பிச்சு அவர் சொன்ன ஆளுங்க பேர்ல குடுத்தேன் னு சொன்னா, அதை இல்லன்னு சொல்றது கஷ்டம் நந்தினி”, என்றான் ரமணன். .

“சரி யாரு அந்த பில்டர்?”, ரமணன் கேட்க..

“தனபாலன்ன்னு “, என்று நிறுத்தினாள்

“வாட் ? டிபி பில்டர்ஸ் தனபாலனா?”,என்று அதிர்ந்தான் ரமணன்.  அதுவரை அசட்டையாக பேசியவன்,தனபாலனின் பெயரைக் கேட்டதும் மடை திறந்த வெள்ளம்போல அவனுக்குத் தெரிந்த விபரங்களைக் கூற  ஆரம்பித்தான்.அவன் பேசிமுடிக்கும்போது அரைமணி நேரத்திற்கும் மேல்  கடந்திருந்தது.

என்ன செய்தால் அவனிடமிருந்து ஸ்ருதியை காப்பாற்ற முடியும் என்று அவனறிந்த வகையில் அறிவுரை சொன்னான். சரி இதை ஸ்ருதியிடம் சொல்கிறேன் என்று நந்தினி விடைபெற்றுப் .புறப்பட, “இதை பத்தி மட்டும் தான் பேச வந்தியா நந்தினி?”, என்ற ரமணனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள் நந்தினி.

**************

“வரவர என்கிட்ட ஒன்னும் சொல்றதில்லைன்னு இருக்கீங்க போல?”, நந்தினி பர்வதம்மாவிடம் மட்டுமல்லாது பொதுவாக கேட்டாள்.

“அட அப்படியெல்லாமில்ல நந்தினி, அந்த லோகேஷ் ஆளுங்க போனதும் நா அண்ணனுக்குத்தான் போன் பண்ணினேன். அவங்க சொல்லல?”, என்று கேட்டாள் ஸ்ருதி.

‘அவர் எதை சொல்லியிருக்காரு இதை சொல்றதுக்கு? இந்த விபரமே நேத்திக்கு அவர் வீட்ல இருந்து பேசினதாலதான எனக்கு  தெரிய வந்தது? ஹ்ம்.’  மனதுக்குள் பொறுமியவாறே, “ம்ம் சொன்னார்”, என்றாள்.

நந்தினி வங்கிக்குச் சென்று ரமணனிடம் பேசிவிட்டு நேரே ஸ்ருதியின் வீட்டுக்கு வந்து விட்டாள். காரணம் ரமணன் தனபாலனைப் பற்றி சொன்ன விஷயங்கள் அவளை அச்சுறுத்துபவையாக இருந்தது.

‘என்னவா இருந்தாலும் அந்தாள மட்டும் பகைச்சிக்க வேணாம்னு சொல்லு, அவன் காரியமாகணும்னா யார் கழுத்துல வேணா கத்திய வைப்பான். குழந்தைங்க வேற  இருக்குன்னு சொல்ற. பாத்து நடக்க சொல்லு’, என்று சொல்லி,இவர்கள் தெருவில் இருந்த நாலாவது வீடான ஓட்டு வீட்டினருக்கு நடந்ததை சொன்னான்.

அங்கிருந்தவரின் பூர்வீக சொத்தான அந்த வீடு தனபாலனுக்கு தேவைப்பட, முன்பே குடிகாரனாக இருந்த அந்த குடும்பத்தலைவனை மேலும் மதுவுக்கு அடிமையாக்குவதோடு நில்லாமல் அவ்வப்போது கைச்செலவுக்கு பணம் தந்து சிலபல ரசீதில் கையெழுத்து வாங்கிக்கொண்டான் இந்த தனபாலன்.

அதைத் தடுத்த அவனது மனைவியையும் இரண்டு மகள்களையும் கட்டாயப்படுத்தி கிராமத்திற்கு அனுப்பி வைத்ததும் தனபாலன்தான் என்று கேள்வி. அப்படி வீட்டுப் பெண்கள் இல்லாத நேரத்தில் தனக்கு தேவையான பத்திரங்களில் அக்குடிகாரனிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்ட தனபாலன், அவன் முழு போதையில் இருக்கும்போது நடு வீதியில் இறக்கி விட்டு செல்ல, மறுநாள் அந்த சாலையில் இருந்த கழிவுநீர்க் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டான் அந்த ஓட்டுவீட்டின் சொந்தக்காரன்.

அதன் பின் அவனது மனைவி வெகு பாடுபட்டு என் பெண்களைக் கரை சேர்க்கவாவது ஏதாவது செய்யுங்கள் என்று தனபாலனிடம் கெஞ்சி கூத்தாடி அறுபது லட்சம் பெறுமானமுள்ள இடத்திற்கு வெறும் பத்து லட்சம் வாங்கியதாக ரமணன் நந்தினியிடம் தெரிவித்திருந்தான்.

அந்த அம்மாள் ரமணனின் வங்கியில்தான் முதலீடு செய்துள்ளார். பெண்களுக்குத் திருமணம் நிச்சயமானதும் அதை உபயோகித்துக் கொள்வதாகவும், அதுவரை குடும்பத்தின் வாடகை மற்றும் மாதாந்திர செலவுகளை சமாளிக்க தற்போது ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் அவர் வேலைபார்ப்பதாக சொன்னான்.

“நா ஒரு வேலையா பேங்க் போயிருந்தேன் ஸ்ருதி, அங்க மேனேஜரா இருக்கார்ல அவர் காலேஜ்ல எனக்கு சீனியர். பேச்சுவாக்கில தனபாலன் பத்தியும் அவனோட ஆளுங்க என்னல்லாம் செய்வாங்கன்னும் தெரிஞ்சிகிட்டேன். அந்த ஒட்டு வீட்டை தனபாலோட ஆளுங்க வாங்கிட்டாங்களாம் தெரியுமா?”, என்று சொல்லி ரமணன் அவர்களை பற்றி சொன்னதையும் ஸ்ருதி மற்றும் அத்தையிடம் தெரிவித்தாள் நந்தினி.

ஸ்ருதி வேலைக்குச் சென்ற புதிதில் அவள் அலுவலகத்தில் இருந்தபோது அந்த ஓட்டுவீட்டுப் பெண்மணி கிராமத்தில் இருந்து போன் செய்தது அப்போது நினைவுக்கு வர, அதை நந்தினியிடம் பகிர்ந்தாள். அவர்களோடு உடனிருந்த பர்வதம்மா, “இதை ஏன் நீ அப்பவே சொல்லல?”, என்று கேட்டார்.

“அப்பதாந்த்த சின்னவன் உண்டாயிருந்தான், அதுவுமில்லாம நா ஆபீஸ் போன புதுசு வேற. அந்த குழப்பத்துல இதை மறந்துருப்பேன்”, என்று அத்தையிடம் சமாளித்தாள் ஸ்ருதி.

நந்தினி, “பாத்தீங்களா அநியாயத்தை? கிட்டத்தட்ட இந்த தெருவே காலியாகப்போகுது. இன்னொன்னு தெரியுமா உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற இந்த கிரவுண்ட் அவனோடதுதானாம். இங்க பெரிசா பிளாட் கட்டணும்னுதான் சுத்தி இருக்கிற எல்லாரையும் காலி பண்ண வைக்கிறான்.  நாம அவனுக்கு அனுசரிச்சுப்போனா பணத்துக்கு குறைவில்லாம குடுத்துடுவான். மாட்டோம்னா மொத்தமா அழிச்சிடுவான்னு பேசிக்கிறாங்கம்மா”, என்றாள்.

“யார் யாரை அழிச்சிடுவானாம்?”, வசந்தி ஸ்ருதியின் வீட்டுக்குள் வந்தவாறே கேட்க.., அவர் பின்னால் யோகி சரத்.

Advertisement