சொர்க்கம் உன்னருகில் 9

   விஜயன் மனைவி பேசியதிலேயே அவளின் ஏமாற்று வேலைகளை தெரிந்து கொண்டான். ஏற்கனவே எடுத்த முடிவில் ஒருசில மாற்றங்கள் மட்டும் செய்து மகேஷுக்கு அழைத்து சொன்னான்.

      “அண்ணா இது சரி வருமா?  பெரிய பிரச்சனை ஆகும். உங்க எஜமானியம்மாவ எப்படி சமாளிப்பிங்க?” என்றான் மகேஷ்.

   “எல்லாருகிட்டயும் பாயறவ என்கிட்ட மட்டும் பதுங்குவா. கவலைபடாதே. பதினேழு வருசம் ஜெய்ய படாதபாடு பட காரணமா இருந்த எனக்கு எல்லாரும் பாவம் பாக்கறிங்க. இது சரியா? உன் கூட்டாளிக்காக என்னை நீ பழிவாங்கலயா?” என சிரித்துக்கொண்டே கேக்க,

      “அண்ணா அப்ப உங்களுக்கு தெரிஞ்சும் இவ்வளவு நாள் அமைதியா இருந்திங்களா? ஜெய் பாவம்.” என்றான் மகேஷ்.

    “டேய் மகேஷா லவ் பண்ணது அவன். அவன்தான ஹீரோ ஆகனும். டம்மியா அவனிருந்தா நா என்ன செய்ய? விளையாட்டு பேச்சி போதும். நா சொன்னது போல செஞ்சிமுடி உன் கூட்டாளிக்காக. ஜாதகத்தை புரோக்கர்கிட்ட குடுக்கறதோட பிரண்ட்ஷிப் முடிஞ்சிடாது, தெரியுதா? பக்கத்தில இருந்தும் பதினேழு வருசம் அவன நீ விட்டுட்ட. இப்ப வந்தவன் அப்பவே வந்து என்னைய பாத்திருக்கலாம். எல்லாம் நேரம். யார கெற சொல்ல.” என்றான் விஜயன்.

    கீழே வரவும் சுசிலா, “தம்பி போன்ன குடு. ராத்திரி எழுந்தா டைம் பாக்க வேணும்.” என்க

    “டைம் பாத்து எழுந்து வேல செய்ய போறியா? இல்ல கிளம்பி ஆபீஸ் போறயா? கம்முன்னு போயி படு. இன்னும் யாரை மொட்டையடிக்கனும்?  ஜெய்யை அடிச்சது பத்தாதா?” என்க

    “என்னடா பேச்செல்லாம் ஒருமாதிரியா இருக்கு? யாருகிட்ட பேசறோமுன்னு தெரியலயா?” பரமசிவம் அதட்ட

    “ ஏன் ஜெய் கூட மேல வரல? எங்க பென்ஷன் பணத்த கேட்டிட போறேனோன்னு தான மேல வரல? பணம் எங்க? நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்கோம் சொல்லுங்க.. சொல்லுங்க உங்க பென்ஷன் பணம் எங்க? நானு உங்க பேருல பணமா இருக்கட்டும். கொஞ்சம் சேந்தவுடன் வீட்டுமனையா உங்க ரெண்டுபேர் பேரிலயும் வாங்கலாமுன்னு சொன்னேன். வேண்டாமுன்னு பணத்தை ஒவ்வொரு மாசமும் வாங்குனிங்க. இப்போ ஒரு நிலம் ரோட்டு மேல வருது. பணத்த குடுங்க உங்க பேரிலேயே வாங்கலாம்.” என்க பேச்சு மூச்சை காணோம்..

    “அது வட்டிக்கு கொடுத்திருக்கோம். இப்போதைக்கு வட்டி மட்டும் குடுப்பாங்க… குடுக்கிற அப்பவே இத்தனை வருசமுன்னு பேசிதான் குடுத்தது.” சுசிலா சொல்ல,

     “டேய் ஜெய் இப்ப நான் பாத்திருக்கிற நிலத்தோட ஓனரும் வட்டிக்கு விடறவர். அதனால இங்க வட்டி குடுக்கிறவர் அங்க குடுக்கட்டும். நாம ஆக வேண்டியத பாக்கலாம். சரிம்மா பாண்டு, பத்திரம் ஏதாவது வாங்கி வச்சிருக்கீங்களா? இருந்தா குடுங்க. அவர்கிட்ட காட்டி கேட்டுட்டு வர்றேன்” என்றான் விஜயன்.

    “என்னடா எங்கள ஓவரா மெரட்டுற? அது என் பணம். அத ஏன் உன்கிட்ட கொடுக்கனும்?” என்று பரமசிவம் எகிற

    “ அப்பா! பணம் எங்க போச்சின்னும் எனக்கு தெரியும். அதை எப்படி வாங்கனுமுன்னும் எனக்கு தெரியும். போங்க. போயி திட்டம் போட்டு பெரிய மருமவளுக்கு கூஜா தூக்குங்க. அவ உங்கள நட்டாத்துல உட்டுட்டு போயிடுவா. என்னைவிட  உங்களுக்கு அவ மேல  அப்படி என்ன பாசம்?. ஜெய் பிள்ளைகளும் உங்களுக்கு பேர பிள்ளைகள் தான். ஏன் அது உங்க அறிவுக்கு எட்டவே மாட்டேங்குது.?” என விஜயன் சத்தம் போட

  “மருந்து, மாத்திரை தீந்து போக போகுதுடா ஜெய். உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வாங்கி தர சொல்லு”, என சுசிலா பேச்சை மாற்ற

    “சுஜி இங்க வா” என்றழைத்த விஜயன் அவள் வரவும்,

     “சுஜி இனிமே இவங்களுக்கு நான் சொல்ற வரை நீ எதுவும்….. நல்லா கேட்டுக்க எதுவுமே செய்ய கூடாது. அவங்க பணத்தை பத்தி நாங்க பேசறது தப்புன்னா நீ உன் சம்பள பணத்துல அவங்களுக்கு செய்யறதும் தப்பு.. நீ அவங்களுக்கு வேல செய்யறதும் தப்பு. நீ யாரு அவங்களுக்கு செய்ய? அவங்க பையனா? அவங்க ஆச மருமவ கீதாவா? இல்ல அவங்க பேரனுங்க கவின், பவனா? யாரு நீ? உனக்கு என்ன உரிமை இருக்கு அவங்களுக்கு செய்ய? நீ பசங்கள கூட்டிட்டு போய் தூங்குமா.” என்றான்  சத்தமாக.

     “குடிக்க வெந்நீர் வச்சி குடுத்துட்டு போறேன் மாமா. இரும்பிகிட்டே இருக்காங்க.” என்று சுஜி சொல்ல

     “ உனக்கு ரோசம் எல்லாம் வரவே வராதா சுஜி? இப்போ தானே நான் அவ்வளவு சொன்னேன். ஏன் எங்கம்மாவுக்கு அடுப்பு இருக்கற இடம் தெரியாதா? அவங்க ஆச மருமவளுக்கு பருப்பு ஆட்டி வடை சுட்டு தர முடியுது. உன் ஊட்டுல வெந்நீ வைக்க தெரியாதா? அவங்க வேலைய அவங்களே செய்யட்டும். இங்க உன் வீட்டுல சும்மா உட்கார்ந்து சோறு திங்க அவங்க யாரு?” விஜயன் கோபத்தை தூண்டுவது போல பேச

    “ஏன் இங்க எங்களுக்கு உரிமை இல்லயா? அவ யேன் மருமக தானே, எனக்கு வெந்நீ வைக்க மாட்டாளா? அவள வேல செய்யாதன்னு சொல்ற?” என சுசிலா எகிற

    “நீயும் உங்கூட்டுகாரரும் இருபதாயிரம் பென்ஷன் பணத்த பேங்க்ல இருந்து ஒன்னாம் தேதி ஆனா எடுத்துடறிங்க. சரி அத வாங்கி பத்து பைசா இங்க குடுத்தேன்னு உங்க வாயால சொல்லுங்க பாக்கலாம். ஊருக்கு வர கூட பஸ் செலவு இல்ல. நான் வந்தா கூட்டிட்டு போறேன். ஜெய் வர்றான் கொண்டு வந்து விட, கூட்டிட்டு வர. உங்களுக்கு மட்டுமில்லாம அங்க  எங்கூட்டுக்கும் கறி, காயின்னும் மாசாமாசம் பத்தாயிரத்துக்கு மேல புடுங்கி இருக்கிங்க? நீங்க எல்லாம் மனுசங்க தானா? இதுல அதிகாரம் வேற? நீங்க எல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தவங்கலா? டேய் ஜெய் இவங்களுக்கு போயி புள்ளைங்களா பொறந்து தொலச்சுடோமேடா! இந்த பாவத்த கழுவுனா கங்கைக்கே விமோசனம் கிடைக்காதே…. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவம் தீராதே…” என்றவன் ஓரக்கண்ணால் சுசிலாவை பார்த்துக் கொண்டே

     “ இதுல கவின, பவன வேற இழுத்து வுட்டுட்டாங்களே. அந்த நாடி ஜோஸியகாரன் சொன்னது பலிச்சுடும் போலவே? நான் என்னா செய்வேன்? இதுல யார நானும் பலி கொடுக்க? பசங்களயா? பொண்டாட்டியையா? யார பலி குடுக்க? என்ன பெத்த கழுதைங்களே யேன் பேச்சை கேக்க மாட்டிங்குதே? யேன் பொண்டாட்டி பணத்தாசை பிடிச்ச பிசாசு எப்படி கேக்கும்? அடுத்தவங்க காச புடுங்கி வச்சிருக்கவங்க நாசமா போயிடுவாங்கன்னு தெளிவா சொன்னானனே…ஏம்மா சுஜி நீயும் ஜெய்யும்  கேட்டிங்க தான அவன் சொன்னத.? அவன்தா தெளிவா சொன்னானே ரெண்டு கோடி பணம், உன் தம்பி பணம், உங்கிட்ட உன் பொண்டாட்டி கிட்ட இருக்கு. அது உங்குடும்பத்துக்கு கொள்ளிவக்க வந்த பணமுன்னு சொன்னானே…!” என்று விஜயன் அடிச்சிவிட

      யோகனும், கவியும் சுஜியிடம் ” எப்பம்மா சொன்னாங்க அந்த ஜோஸியகாரங்க? நாங்க உங்க கூடவே இருக்கோம் எங்களுக்கே தெரியல” குசுகுசுவென கேக்க

   “டேய் யோகா என்ன கேளுடா. இன்னைக்கு உங்க விஜியப்பன் பொழச்சி வந்ததே பெரிய விசயம். ஒரு பெரிய லாரி என்ன இடிச்சிருக்கும் ஒரு மயிரிழையில உசுரு தப்பிச்சி வந்திருக்கேன்டா” என்க

     “காயு அத்தையதான இப்படி சொல்லறாரு? இருங்க அத்தைக்கு போன் போட்டு சொல்றேன். அம்மா விஜிப்பா சூப்பர் ஆக்டர்மா.” என்றான் யோகன் சுஜியிடம்.

   அதற்குள் சுசிலா, “ விஜி என்ன சொல்ற? பெரிய கண்டத்தில இருந்து தப்பிச்சிருக்க. ஆண்டவா யேங் குடும்பத்தை காப்பாத்து” என வேண்டுதல் வைக்க

    “அந்த இடத்துல ஒரு பெரியவர் இருந்தாரு. அவரு நாடி பாப்பாராம். அவரு என்னோட கைய பாத்து நடந்தத எல்லாம் சொன்னாரு. தெரிஞ்சி பாதி, அந்த பொண்ணுக்கே தெரியாம பாதின்னு உன் தம்பி சொத்த உன் பிள்ளைகள காட்டி புடுங்கி, திருடி வைச்சிருக்காங்க. அதுவும் சொந்த மகனூட்டுல திருடற ஆத்தா பெத்த புள்ள நீயி. அடுத்தவங்க சொத்துக்கு ஆசபட்டு புடுங்கி வச்சி நீயும் உன் புள்ளங்களும் இல்லாம அனாமத்தா போக போகுதுனு சொன்னாரு. அவரு சொன்னமாறி நம்மூட்டுல நீயும் நோயாளியா மாத்திரை மருந்துல உசுர புடுச்சி வைச்சிருக்க. கீதாவுக்கு கர்ப்ப பையில கட்டின்னு வைத்தியம் பண்றோம். கட்டி சாதா கட்டியா இல்லாம புற்றுநோயா இருந்துச்சின்னா என்ன ஆவறது? பணம் உசுர புடிச்சி வைக்குமா?” என சுவற்றை பார்த்தபடி புலம்ப, கீதாவின் பெயரை கேட்டவுடன் வெலவெலத்து போயினர் சுசிலாவும், பரமசிவமும்.

     கவின் கேம்பஸ் இன்டெர்வியூல பாஸ் பண்ண முடியாததிற்கு சொன்ன நொண்டி காரணங்களை காரணங்காட்டி விஜயன், “ கவின் இன்டெர்வியூல நல்லா பண்ணாலும் அவனுக்கு ஒரு கம்பெனியும் வேல தரலையாம். அவன் வாழ்க்கையும் உங்க மூணு பேருத்தால வீணா போகுது. யேன் உசுருதான் கட்டின பொண்டாட்டியால போக போகுது. யேம்ப பையன் வாழ்க்கையாவது நல்லாயிருக்குமுன்னு நெனச்சா அதுக்கும் வழியில்லயா? யேன் வம்சமே அவ்வளவு தானா? வேல கெடச்சாதான் ஒரு கண்ணாலம் காட்சின்னு பாத்துட்டாவது நா போயிசேர.” என்றவன்,

     “ஜெயா எனக்கு ஏதாவது ஒன்னாச்சின்னா நீ அப்பன் ஸ்தானத்தில் நின்னு எதுவும் செய்யாதடா. அப்பனில்லாத புள்ளையாவே அவனுங்க இருக்கட்டும். அப்படியாவது இவங்க பாவம் கெறையட்டும். அவனுக்கு கொழந்தை பொறக்குமா தெரியலயே? இவங்க ஏமாத்துன பணத்தை கணக்கு சொன்னவாச்சும் ஏதாவது பண்ணலாம். நானும் பேரன், பேத்தின்னு கொஞ்சகாலம் இருந்துட்டு போயிடுவேன். எங்க இவிங்களுக்கு தான் யேன் பொண்டாட்டி சொல்ற மாதிரி யேன் மேல பாசமே இல்லையே. என்ன செய்ய? ச்சே நான் ஒரு முட்டாள். சொல்ல வந்தத விட்டுட்டு கவலையில ஏதேதோ பொலம்பிட்டு இருக்கேன். டேய் ஜெயா, இந்தா இதுல ஒரு லட்சம் இருக்கு. சுஜிகிட்ட குடு. சுஜிமா பத்திரமா வச்சி பூட்டி வைய்யி. இல்லன்னா இதுவும் அந்த வெளங்காதவ கைக்கு போயிரும். இந்த காசுல யேங் காரியம் எல்லாம் பண்ணுங்க.. அவ கையில இருந்து பச்சை தண்ணீகூட யேம்மேல படக்கூடாதாம். பட்டா அவ பாவம் என்னையும் பிடிக்குமாம்.” என்க

   சுசிலா அழுக ஆரம்பித்தார், “விஜயா ஏன்டா இப்படியெல்லாம் பேசற? எனக்கு ஈரகுலையே நடுங்குதே. நான் என்ன செய்ய? நீயும் உம்பசங்களும் நல்லா இருக்கனும். அதுக்கு பணம் நெறையா வேணும். இல்லையினா ஜெயன் பொண்டாட்டி மதிக்க மாட்டா. அதனால படிக்காத புள்ளையா பாத்தா காலத்துக்கும் ஒன்னாவே உனக்குங் கீழவே அடங்கியிருப்பான்னு கீதா ஜெயனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கும் போதே சொன்னாப்பா. அப்படித்தான் பாக்கவும் ஆரம்பிச்சோம். ஆனா புரோக்கர் கொண்டு வந்த ஜாதக பையில இருந்த இவ போட்டோவ பாத்துட்டு இந்த பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு. இந்த பொண்ணுதான் யேம் பொண்டாட்டி. இந்த புள்ள வேண்டாமுன்னா எனக்கு கல்யாணமும் வேண்டாம் அப்படின்னு இவன் சொல்லிட்டான்.” என்ற சுசிலா முகம் கழுவ செல்ல

    “இதெல்லாம் எனக்கு தெரியாதே” என விஜயன் சொல்ல,

   பரமசிவம் உடனே “ கீதாதான் இந்த சின்ன சின்ன விசயத்தையும் சொல்லி அவர டென்ஷன் பண்ண வேண்டாம். அவருக்கு ஏற்கனவே நெறய வேல.நாமலே பாத்துக்கலாம். இதெல்லாம் ஒரு மேட்டரா? அப்படின்னு உங்கிட்ட சொல்லவிடல.” என்க

  “ஓ…யேன் தம்பி வாழ்க்கை அவளுக்கு சின்ன விசயம்? சரி மேல சொல்லுங்க. யோகா ஒரு பேப்பரும் பேனாவும் குடு” என்க

   திரும்ப வந்த சுசிலா, “பேப்பர், பேனா எதுக்கு?” எனக் கேக்க

   “இதுல எனக்கு வர்ற சந்தேகத்தை குறிச்சி வச்சி அப்புறம் உங்கிட்ட கேக்கதான், வேற எதுக்கு? நடுவுல கேட்டா விசயம் தடம் மாறிபோயிடும்.” என்றான் முறைத்துக் கொண்டு.

    “கீதாவும் எவ்வளவோ சொல்லிப்பாத்தா. ஆனா ஜெயன் இவளதான் கட்டுவேனுட்டான். வேற வழியில்லாம கல்யாணத்துக்கு நாள் குறிச்சோம். அப்புறம் கீதா ஒரு ஐடியா சொன்னா. பணத்தை அவகிட்ட வுட்டுவச்சாதான தனியா போவா? உங்க பெரிய மகன மதிக்க மாட்டா? நாம மொத மாசத்துல இருந்து சம்பளத்தை வாங்கிட்டு செலவுக்கு காசு குடுக்கலாம். அதுவும் என்கிட்ட குடுத்துட்டு எங்கிட்ட கணக்கு சொல்லி வாங்க வைங்க. அப்பதான் எனக்கும், எம்புருஷனுக்கும் அடங்கியிருப்பா, அப்படின்னு சொன்னா. அதுசரியா இருக்குமான்னு யோசிக்கிறதுக்குள்ள கீதா கிணத்துல விழ போயிட்டா. வர்றவ பணக்காரி, வேலக்கி போயி மாச கடைசியில சொளையா பணம் குடுப்பா. அவளதான நீங்களும் மதிப்பீங்க. ஒவ்வொரு மாசமும் அவ ஏதாவது வாங்கிட்டு வந்து குடுப்பா நானு அவகிட்ட கையேந்தனும் அப்படின்னு அழுதா. அவ ஏதும் தப்பா முடிவெடுக்க கூடாதன்னு சரின்னு சொல்லி கல்யாணத்தை பண்ணிட்டோம்.”

    பரமசிவம் “ஆனா இவங்கள வாழவே விடக்கூடாதுன்னு அவ செஞ்ச வேலையெல்லாம் எனக்கு தெரியாது. இங்க குடி வந்தபின்னாடி அந்த மகேஷ்கிட்ட ஜெய் சொல்லறப்போ தெரிஞ்சிக்கிட்டேன். அதனால எவ்வளவு வாங்கி குடுக்கறோமுன்னு குறிச்சிவைக்க ஆரம்பிச்சேன். இந்தா இந்த நோட்ல எந்த தேதியில எவ்வளவு ஜெய்கிட்ட வாங்குனோம்? அங்க கீதாகிட்ட எவ்வளவு குடுத்தோமுன்னு எழுதி இருக்கு.” என குடுக்க,

     “இவ்வளவு வேலை ஏன் பாக்கனும்? அப்பவே எங்கிட்ட சொல்லியிருக்கலாமே?” என விஜயன் கேக்க

     “யேம் புருசனுக்கு நீங்க ஏதாவது சொன்னா பசங்கள கொன்னுட்டு நானும் செத்துருவேன். சும்மா சாவ மாட்டேன் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துனிங்க அப்படின்னு உங்க அஞ்சி பேரையும் மாட்டி விட்டுட்டு தான் சாவேன் அப்படின்னா. நாங்க என்ன செய்ய முடியும்?”என அவர்கள் சொல்ல, கேட்டுக்கொண்டே நோட்டை புரட்டின விஜயன் அதிர்ந்தான்.

    சுஜி குடுத்தது, பென்ஷன் பணம், ஜெய் வீட்டில் எடுத்தது என ஒவ்வொரு மாதமும் எழுதியிருந்தது.

அகவிலைப்படி ஏற ஏற சம்பளம் ஆரம்பத்தில் எட்டாயிரத்தில் ஆரம்பித்து இப்போ ஐம்பதாயிரத்தில் வந்து நின்றிருந்தது.

  சுஜியை திரும்பி பார்த்தான். தன்னையும் கீதாவையும் ஜெய், சுஜி இடத்தில் வைத்து கற்பனை செய்தான். தானும் கீதாவும் என்னவெல்லாம் செய்திரும்போம் என நினைத்து பட்டியலிட்டான். ஆனா இந்த சுஜி இன்னும் அமைதியா இருக்கே எப்படி? ஆச்சர்யம் அடைந்தான்.

    ஜெய் சுஜியை விரும்பினான். அவளுக்காக போராடினான். ஆனால் கல்யாணம் பண்ணிட்டு வந்ததற்காக ஒரு பெண் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறாள்? ஒரு ஆண் இந்தளவு தன் மனைவியின் குடும்பத்திற்காக விட்டுக் கொடுப்பானா? சாத்தியமா? சுயத்தை மறைத்து உழைப்பை கொடுத்து இந்த பெண்கள்…. அப்பப்பா தேவதைகள். வரம் தரும் தேவதைகள் தான்.

  தன் தம்பியை பார்த்தான். அவனுக்குகாக சுஜி விட்டுக்கொடுத்தவை ஏராளமாய் இருக்க தானும் தம்பிக்காக ஏதேனும் செய்ய நினைத்தான்.

   என்ன செய்ய போகிறான்.? எப்படி தம்பிக்கு நியாயம் செய்ய போகிறான்? கீதாவை சமாளித்து வாழ்வது அவனுக்கு சாத்தியமா? தெரிந்து கொள்ள ஓரிரு நாட்கள் காத்திருப்போம் தோழிகளே.