விஜயனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது. “ஏம்மா காயு நீயும் ஜெய்யும் கூட டெட் எழுதனுமா? பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எழுதனுமுன்னு செய்தியில் போட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் +1,+2 பசங்களுக்கு தான பாடம் எடுக்கறிங்க?” என்க
“ஆமாண்ணா நாங்க எழுத தேவை இல்லை. மத்தவங்களும் எழுதனுமான்னு இன்னும் கன்பார்ம் பண்ணல. அரசாங்கம் தான் முடிவு செய்வாங்க.” என்றான் ஜெய்.
காபியுடன் வந்த நிலாவும் சுஜியும் அனைவருக்கும் கொடுத்தனர். சுஜியை பார்த்த விஜயன் “ ஏம்மா சுஜி இவங்களுக்கெல்லாம் புரமோசன் கெடச்சி மேல் கிளாஸூக்கு பாடம் எடுக்க போயிட்டாங்க. நீ மட்டும் ஏன் முயற்சி பண்ணலயா? இன்னும் படிக்கனுமா? “ என்க
சுஜி முகம் மாற ஜெய்யை பார்த்துவிட்டு, “விடுங்க மாமா. இது என்ன மெடிக்கல் காலேஜ் மார்ச்சுவரியா? செத்த பிணத்தை மறுபடி மறுபடியும் எடுத்து அறுக்க.. “ என்க
“இவ்ளோ நேரம் யேங்கிட்ட எதுவும் சொல்ல கூடாதுனு பல்லை கடிச்சிகிட்டு உள்ள இருந்தியா? “ என விஜயன் கேட்க,
“இல்ல மாமா. நிலாவோட சீனியர் ஒருத்தங்களுக்கு பிராஜக்ட் வேணுமுன்னு கேட்டிருந்தாங்க. அவங்களோட டாப்பிக், தீம் பத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தேன். சாரி மாமா நீங்க வந்த உடன் உங்களதான் பஸ்ட் கவனிச்சிருக்கனும். பார்ட் டைம் அந்த ஒர்க்க பண்றதால அத முடிச்சிட்டு வந்தா ப்ரியா பேசலாமுன்னு முடிச்சிட்டு வந்தேன்.” என்றாள் சுஜி.
“யேன் வீட்டு வேதாளத்த சமாளிக்க நீ இந்த வேல செய்யறீயா சுஜி?” என்க
“இவளுக்கு டீச்சிங் உயிர். ஆனா இவளோட கோடிங் திறமை அபாரம். படிக்கறப்போவே இவ கம்ப்யூட்டரையும் கரைச்சி குடிச்சிட்டா. யுஜி, பிஜி கம்ப்யூட்டர் படிக்க சொன்னா, நம்மால மெசின் கூட குப்பை கொட்ட முடியாதுன்னு மொழிதான் வழின்னு மொழி பாடத்தை படிச்சி கவிதாயினி ஆயிட்டா” என கதை சொன்னாள் காயு.
“என்னோட அண்ணன், அவன் ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் அப்பவே இவதான் பிராஜக்ட் செஞ்சி குடுத்தா. அத ஜாலியா செஞ்சவ இப்ப காசுக்காக பண்றா. அவ்வளவு தான் வித்தியாசம்.” என்றாள் காயு.
“இவ்ளோ நாள் இதை எல்லாம் தாக்குபிடிச்சதுக்கு இதுவும் ஒரு காரணம். சண்டை போட நேரம் வேணுமில்ல. மேடம் கோடிங் பண்றாங்க. ஆன்லைன் டியுசன், கவிதாயினி அவதாரம் அப்படின்னு ஓடிக்கிட்டே இருக்கா. இதுல இந்த கொசு தொல்லை தாங்கலன்னு அதை அடிக்க நேரமில்லை. ஸோ உங்க கீதா உசுரோட இருக்கு.” என்க
“அத்தை மாமா அப்பவே சிக்கன் ஆடர் போட்டு வாங்கிட்டு வந்து குடுத்துட்டாங்க. நாங்க நாலு பேரும் சிக்கன் பிரியாணி சமைச்சிட்டோம். அம்மா சில்லி போட்டுட்டாங்க. இங்கையே கொண்டு வரோம். இப்படியே சாப்பிடலாம் “ என்று உள்ளே ஓடினாள் கவி.
“இவங்க சமைச்சாங்களா?” விஜயன் வாயை பிளக்க
“அண்ணா சுஜி ஏமாந்த ஒரே இடம் ஜெய் மட்டும் தான். மகாபாரதத்தில் பீஷ்மனின் பலம் சிக்கன்டியின் முன் வலுவிழந்து போறது போல ஜெயிற்காக அவ தன்னோட தன்மானத்தை விட்டு கொடுத்துட்டா.”என காயு சொல்வதற்குள்,
பிரியாணி, தயர் பச்சடி, சாஸ், சில்லி, சாதம், ரசம், ஆம்லெட் என வரிசைகட்டி வர பேச்சிக்கு விடுதலை அளித்து வயிற்றிற்கு நியாயம் செய்ய முடிவெடுத்தனர்.
எட்டு மணியாக சுஜி வீட்டினர் கிளம்பினர். வண்டி எடுக்கும்போது கவியிடம் ஏதோ கிசுகிசுத்தாள் சுஜி. அவர்கள் பேசிக் கொள்வதை ஆசையுடன் பார்த்தான் ஜெய். தம்பியை கவனித்துக் கொண்டிருந்த விஜயன் திரும்பி பார்த்தான். இவங்க பேசிக்கிறத ஏன் இப்படி பாக்கறான்னு தெரியலயே? இதுக்கு மேல தாங்காது, இப்பவே கண்ண கட்டுதே எபக்ட்ல பாக்க கவி தன் தகப்பனிடம் வந்து
“வீட்ல இருக்கறவங்களுக்கு பிரியாணி வாங்கிகிட்டு வாங்கப்பா “ சொல்லிட்டு வேகமாக ஓடி சுஜியுடன் வண்டியில் ஏறினாள்.
விஜயனுக்கு தனக்கொரு பெண் சுஜியை போல, கவியை போல பிறக்கவில்லையே என ஏக்கம் வந்தது.
காசு, பணம், நகை, பாத்திரம், பண்டமென எல்லாவற்றையும் பிடுங்கினாலும் வயிற்றில் அடிக்காத அந்த மனதை, அந்த பெருந்தன்மையை வணங்கினான்.
“அண்ணா ஏறு போலாம். நாம சாப்பாடு வாங்கிட்டு போறதுக்குள்ள என்ன நடக்குமோன்னு வேற பயமா இருக்கு? “ என ஜெய் பதற
“தெய்வங்கள் மனித ரூபத்தில வந்தா நாம ஏத்துக்கிறதில்லை ஜெய்” என விஜயன் உளறிட்டு தலையை தட்டிக்கொண்டு வண்டியிலேற நைட் ஹோட்டல் முன் நிறுத்தி “ரெண்டு பிரியாணி பார்சல் ணா” என்றான் ஜெய்.
“அக்கா சொல்லிட்டு போயிட்டாங்க. இந்தாங்க அக்கா பணமும் அனுப்பிட்டாங்க. பிரியாணியும், சில்லியும் போதுமாண்ணா? ஒரம்பர வேற வந்திருக்காங்க போல? பரோட்டா கட்டட்டா? “ என கடையில் வேலை செய்யும் பையன் கேட்க,
வீட்டினுள் செல்லும் போதே சுசிலாவின் சத்தம் பெரிதாக வந்தது. “வீட்டுல ரெண்டு பேர் இருக்காங்களே. அவங்க மதியம் சாப்பிட்டது. சாயங்காலம் நேரமா வந்து ஒரு டீ போட்டு குடுப்போம். வகை வகையா வயசுல சாப்பிட்டு இருப்பாங்க. இப்போ பஜ்ஜி, போண்டா, வடை, சமோசான்னு எதாவது செஞ்சி குடுப்போம் அப்படின்னு ஒரு அக்கறை இருக்கா? இதுவே கீதான்னா அத்த உங்க கைபக்குவம் எனக்கு வர மாட்டங்குது. அதனால பருப்பு ஊற வச்சிட்டேன். ஆட்டி வடை போட்டுட்டிங்கன்னா மாமாவுக்கும் உங்க மகனுக்கும் குடுத்துடுவேன்னு வேல செய்வா????.” என கத்த
விஜயன் சத்தமாக சிரித்தான். “சுஜிமா உனக்கும் எங்க அம்மா கைபக்குவமும் இல்லை. மனபக்குவமும் இல்லை. பாறேன் உன்னை மெட்டையடிக்க நினைக்கும் இவங்களுக்கு சிக்கன் பிரியாணி, சில்லின்னு வாங்கிட்டு வர…. அவங்களும், அவங்க ஆச மருமக கீதாவும் வேணுமுன்னே நீ சாப்பிடுமுன்ன சோத்துல தண்ணீ ஊத்தி வச்சாங்க. அந்த பக்குவம் எப்பம்மா உனக்கு வரும்?” என்றான் விஜயன்.
“பருப்பை ஊற வைய்யிமா. எங்கம்மா வடை சுட்டு தருவாங்க. ஏம்மா பருப்பை மூட்டை கட்டி சுஜி பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போயிடுச்சா? டப்பாவுல இருக்க பருப்பை எடுத்து வடை சுட சுஜி வரனுமா?” என்க
“நான் ஏன் செய்யனும்?” சுசிலா கத்த
“அந்த பொண்ணும் மனுசி தான. காலைல டிபன்,மதியத்துக்கு சாதம், சாம்பார், பொரியல், ரசமுன்னு செஞ்சிட்டு வேலைக்கு போகுது. இங்க முடிச்சி அங்க, அங்க முடிச்சி இங்கன்னு அல்லாடுது. ஏன் நீ செஞ்சா கெறஞ்சா போயிடுவ? மனுசனுக்கு மனசாட்சி இருக்கும். நீதான் சூனியக்காரி ஆச்சே.” என்றான் விஜயன் மனம் வருந்தி.
“இந்தா இத தின்னுட்டு நல்லா திட்டம் போடுங்க, எதை எல்லாம் தெரிஞ்சி எடுத்துட்டு போலாம்? ன்னு” தூக்கி போட்டுட்டு மாடி ஏற
“டேய் போன் குடு. கீதா நாங்க வரலன்னு பாத்துக்கிட்டு இருக்கும். நாளைக்கு உன் கூட வர்றோமுன்னு சொல்லனும்.” பரமசிவம் கேட்க
“யேன் பொண்டாட்டிகிட்ட நான் போன் பேசி சொல்லிடுறேன். நீங்க போயி தூங்குங்க” என்றான்.
“ஜெய், சுஜி உங்க போன குடுங்க.“ என கேட்டு வாங்கிக்கொண்டு மாடிக்கு சென்றான்.
குரலை மாற்றும் செயலியை ஏற்கனவே நித்திலன் மூவரின் கைபேசியிலும் பதிவேற்றி அதை பயன்படுத்தும் விதத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தான்.
விஜயன் சுசிலாவின் குரலை மூன்றிலும் செட் செய்தான்.
காலைல பத்து மணிக்கு உரமெடுக்க கடைக்கு சென்றதிலிருந்து நடந்தவை படமாக மனதினுள் ஓடியது.
ஜெய்யின் கூட்டாளி மகேஷ் உரக்கடைக்கு வந்தவன் விஜயனை பார்த்ததும் ஏதோ சொல்ல வருவதும், சொல்ல முடியாமல் தயங்குவதும் என தடுமாற விஜயன் “என்னப்பா மகேஷ் என்ன விசயம்?” என கேக்க
“அண்ணா வாங்க போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாமுன்னு” கூட்டிப் போயி “அண்ணா உங்க தம்பி கிளாஸ் மேட் நானு. என்னைய பாத்தே நான் வருத்தத்தில் இருக்கறேன்னு கண்டுபிடிச்சி கேக்கறீங்க. ஆனா பதினேழு வருசமா கூட பெறந்த தம்பி படுற கஷ்டம் தெரியலயா? சொல்லுங்கண்ணா” என கேக்க
“மகேஷூ புரியற மாதிரி பேசுடா. ஜெயனுக்கு என்ன பிரச்சனை? அவன் யேங்கிட்ட ஒன்னும் சொல்லலியே?” என்க
“அவன் சுஜிய காதலிச்சானா? இதே எனக்கு இப்பதான் தெரியும். இதுல அவன நான் பழிவாங்கறனா? நாங்களே பாத்திருந்தாகூட சுஜி மாதிரி ஒரு பொண்ண கண்டுபிடிச்சிருக்க முடியாது .சுஜியும் லவ் பண்ணுச்சா? பாத்தா அப்படி தெரியலையே?”
“அட போங்க. அவன் சுஜிகிட்ட இப்ப வரை அத சொன்ன மாதிரி தெரியலை. சொல்லற அன்னைக்கு இருக்கு மச்சானுக்கு ஆப்பு “ என்க
“சரி சொல்லு என்னதான் நடக்குது?” என விஜயன் கேக்க
“அண்ணா மாசாமாசம் சம்பளம் வாங்கினதும் உங்க வீட்டம்மாவுக்கு இன்னமும் படியளக்கறாங்க. உங்க பசங்க பீஸ், நீங்க காடு வாங்க குடுத்த இருபது லட்சம், நீங்க பேங்க்ல வச்ச நூறு பவுனு நகையும் சுஜிது ஆனா உங்க வீட்டம்மா அம்மா வீடு போட்டதுன்னு சொல்லி பெருமை பட்டுக்குது. எனக்கு தெரிஞ்சதே இவ்வளவு. இதுக்கு மேல நீங்க தான் கண்டுபிடிக்கனும்”
“இப்போ இன்னும் கேப்பாங்க போல. சுஜிக்கும் ஜெய்யுக்கும் வாக்குவாதம் போல. சுஜி ஜெய்கிட்ட பேசறதில்லை. வாழ்க்கைய வெறுத்தவனாட்டம் பேசறான். அவன் லவ் பத்தி சொல்லி ஏதோ பிளாக்மெயில் பண்றாங்க.” என மகேஷ் சொல்ல சிறிது யோசித்த விஜயன் ஒரு சில வேலைகளை சொல்லி “இதெல்லாம் ரெடி செய். ஜெயனுக்கு ஏதும் சொல்லாத. அவன வாழ வைப்பது நம்ம கடமை” என்று முடித்து கிளம்ப,
போன் அடித்தது. புது எண்ணிலிருந்து கால் வர யாராயிருக்கும் யோசித்துக் கொண்டே ஆன் பண்ண
“சுஜி வரும்போதா? அவ அங்க வரக்கூடாதுன்னு உங்க வீட்டுக்காரம்மா பண்ற வேலை தெரியாதா உங்களுக்கு?” என்ற காயு
“உங்களுக்கு உங்க அம்மா மேல பாசமே இல்லையா? அங்க வரவே மாட்டேங்கிறாங்க? ஒரு ரெண்டு மூணுமாசமாவது சுஜிக்கு நிம்மதிய குடுங்களேன். இந்த பதினஞ்சி நாள்ல சுஜி ஸ்கூல்ல நாலஞ்சி தடவை மயக்கம் போட்டுட்டா. டாக்டர் பீபி அதிகமா இருக்கு. இரத்தம் இவ்ளோ கம்மியா இருந்தும் பீபி அதிகமா இருக்குறது ஆபத்து. டென்ஷன குறைங்கன்னு சொல்லறாங்க.ஜெய் அண்ணங்கிட்ட இவ இதப்பத்தி சொல்லவும் இல்லை. அவரோட பேசறதுமில்லை. உங்கம்மா நின்னா குத்தம், நடந்தா குத்தமுன்னு அவ உசுர தவணை முறையில கொஞ்சம் கொஞ்சமா வாங்கிட்டு இருக்காங்க.” சற்றே மூச்சி வாங்கிட்டு
“ அவ என்ன உங்கூட்டுக்கு பணம் காய்க்கிற மெஷினா? உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்ன அந்த ஆண்டவன் படச்சானா, இல்லையா? நீங்க எல்லாம் மனுஷ ஜென்மங்க தானா? ச்சே” என கத்திவிட்டு காலை கட் செய்ய,
“அந்த பொண்ணவிட சுஜி பயங்கர தைரியமான பொண்ணு. ஆனா ஏன் இத்தனை நாள் மண்ணுமாதிரி அமைதியா இருந்ததுன்னு தான் தெரியல. கவிதை, கதைன்னு வச்சி வெளுத்து வாங்கும். கராத்தே, சிலம்பம் – ன்னு எல்லாத்தையும் கத்துவேற வச்சிருக்கு. ம்ம்ம்ம் யாருக்கு என்னன்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கானோ” என்றான் மகேஷ் குழப்பத்துடன்.
“ மகேஷூ நான் சொன்னதை திங்கள், செவ்வாய்க்குள் ரெடி பண்ணிட்டு சொல்லு. யாருக்கும் தெரியகூடாது, முக்கியமா எங்க வீட்ல யாருக்கும் தெரிய கூடாது பாத்து பண்ணு” என அப்படியே தம்பியை பார்க்க கிளம்பினான்.
மீள முடியுமா அந்த பண பிசாசிடமிருந்து என யோசித்தான் விஜயன். இவ்வளவையும் எவ்வாறு கடந்தான் ஜெய்? அப்போதுதான் காயு சொன்னது ஞாபகம் வந்தது. கோடிங், டியுசன், கவிதாயினி அவதாரம்…. அப்படின்னா? மகேஷ் சொன்னது காதில் ஒலித்தது. கவிதை, கதைன்னு வச்சி வெளுத்து வாங்கும். ஏதோ ஒரு வகையில கீதாகிட்ட இருக்க மொத்தமும் சுஜியின் உழைப்பு. சுஜாதாஜெயந்தனுக்கு மட்டுமே உரியது.
தற்சமயம் கீதாவை திசை திருப்பினால் மட்டுமே தான் செய்ய நினைப்பதை செய்து முடிக்க முடியும். கையிலிருந்த சுஜியின் போன் ஒலித்தது. சத்தம் கேட்டு யோகனும் சுஜியும் மேலே வந்தனர். டிஸ்பிலேயில் பிபி காலிங்ன்னு வந்தது. யோகன் ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.
“ஏன் என் போன் எடுக்க இவ்வளவு நேரம்? எங்க போயி தொலஞ்சிங்க? தொலஞ்சிட்டிங்கன்னா எனக்கு இன்னும் வசதி நானே எல்லாத்தையும் வாங்கிப்பேன். ஆமா நான் சொன்னதெல்லாம் அந்த கிழம் ரெண்டும் உங்கிட்ட சொல்லுச்சா? வாங்கி குடுத்தையா? எப்போ ரெண்டும் வருதுங்க? ஆனாலும் ஜெய் செலக்சன் சூப்பர். அந்த பட்டுப்புடவைய எனக்குன்னே பாத்து பாத்து வாங்கியிருக்கான். பத்தரமா குடுத்தனுப்பு. நாளைக்கு காலையிலயே அதுங்கள அனுப்பி வை. புடவையை நா கட்டி பாக்கனும்” என மூச்சி விடாமல் பேசி போனை வைத்தாள் கீதா.
விஜயன் என்ன முடிவெடுப்பான்? சுஜிக்கு ஜெய்யின் பிரச்சனை தெரிய வருமா? சுசிலா அமைதியா இருப்பாரா? ஜெய் விஜயனின் முடிவை எதிர்ப்பானா? ஏற்பானா? காத்திருப்போம் ஓரிரு நாட்கள்.