சுஜியை எப்படி சமாதானம் செய்ய தலையை பிடித்தான் ஜெய். சுஜி சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் அவனால் ஒன்னும் செய்யமுடியாது. தன் குடும்பத்தை பற்றி அறிந்தும் சுஜியை திருமணம் செய்தது தவறென அவன் மனசாட்சி குத்தியது. ஆனால் அவன் அறிவோ “சுஜி இதையெல்லாம் தூசிமாதிரி தட்டிவிட்டுட்டு முன்னேறி போயிக்கிட்டே இருப்பா பாரு. அவளுக்கு ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி” என சொல்ல மனம் லேசாகியது.
மறுநாள் வழக்கம் போல சுஜி கிளம்பினாள். வழக்கம் போல் ஏதோ வேலை செய்வது போல கீதா பின்கட்டில் நின்றிருந்தாள். சுஜி தேடி வந்து “போய் வருகிறேன்னு” சொல்லுவா என்று எதிர்பார்த்தாள்..
ஆகையால் களையெடுப்பது போல நடிக்க முடிவு செய்தாள். மாற்றி மாற்றி சுஜியின் அறை ஜன்னலை பார்க்கவும் குனிந்து புல்லை பிடுங்கவும் செய்தாள். சுஜி கிளம்பிக்கொண்டே எதேச்சையாக வெளியே பார்த்தாள். பார்த்தவள் சிரித்துக்கொண்டே கிளம்பினாள்.
சுசிலாவிடம் “அத்த போயிட்டு வரேன்”, என்க அவரோ “பணத்தை பத்திரமா எடுத்துட்டு வா சுஜி, பாத்து போயிட்டு வா “ என்க “சரிங்கத்த “ என செருப்பை மாட்டிக்கொண்டு ஜெய்யின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
கீதாவும் ரொம்ப நேரமாக ஜன்னலை பார்ப்பது வேகவேகமாக புல்லை பிடுங்குவது என வேலை செய்து கொண்டிருந்தாள்.. பஸ் ஏறும் போதும் புன்னகையுடன் அவளிருக்க ஜெய் ஏதும் புரியாமல் அவளிடம் காரணம் கேட்டான். “தரமான சம்பவம் ஒன்னு நடந்திருக்கு. விளைவுகளுக்கு தயாராகனும் “, எனச் சிரித்துக்கொண்டே சொல்ல அவள் முகம் பார்த்து தான் கேட்க வந்ததை மறந்தான்.
“எட்டு மணிக்கு கிளம்புவாளே, இன்னைக்கு இன்னுமா கிளம்பல? அப்பவே ஜடை பின்னினாளே. ஒரு வேல அடுத்த பஸ்ஸூல போவாளோ? ச்சே இந்த கை வேற வலிக்குது இன்னும் எவ்ளோ நேரம்தான் கிளம்புவா”? என தனக்குள் பேசிக்கொண்டே புல் பிடுங்கினாள். சிறிது நேரத்தில் பவன் தூக்கம் களைந்து அழ ஆரம்பிக்க சுசிலா தன் பெரிய மருமகளைத் தேடி பின்கட்டுக்கு வந்தார்.
“ஏய்ய்ய் கீதா என்ன திடீர்னு இவ்ளோ பொறுப்பா வேலயெல்லாம் செய்யற? எந்த போதி மரத்தடியில ஞானம் கெடைச்சது? சின்னவன் அழுவறது உனக்கு கேக்கலியா? வா வந்து அவனுக்கு சோத்த ஊட்டு”. என்க
“அத்த கொஞ்ச நேரம் அவன சமாளிங்க. சுஜி யேங்கிட்ட சொல்லிட்டு கிளம்பட்டும், நா உள்ள வரேன்”, என்க
“போடி போக்கத்தவளே! அவ போறதுக்கும் நீ பையனுக்கு சோத்த ஊட்ட வாரதுக்கும் என்ன சம்பந்தம்” எனக் கேட்க
கீதா “ என்ன போயிட்டாளா? யேங்கிட்ட சொல்லாமயே போயிட்டாளா? மூத்த மருமவளுக்கு நல்ல மரியாதை குடுத்தாங்க…இந்த குடும்பத்துல வாக்கப்பட்டு வந்து வக்கத்து நிக்கிறேனே, இன்னைக்கி வரட்டும் இருக்கு…கட்டிக்கிட்டு வந்த நாளா எனக்கே மரியாதை குடுக்கலியே. நாளபின்ன உனக்கு உன் சின்ன மருமவ மாமியான்னு மரியாத குடுப்பாளா? மதிப்பாளா? தெரியலையே. மானங்கெட்ட குடும்பத்துல கட்டிக்கிட்டு வந்து வண்ணங்கொழஞ்சி கெடக்கேனே யாருக்கிட்ட சொல்லியழுவன்னு தெரியலியே”ன்னு அவ பொலம்ப,
விஜயன் வயலில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தவன் “ அம்மா யாருக்கு என்னாச்சி? கீதா வீட்ல யாரும் தவறிட்டாங்களா? உடனே எனக்கு தகவல் சொல்றதில்லையா? கிளம்புங்க போலாம் “, எனச் சொல்ல,
கீதா தலையிலடித்துக் கொண்டே ஓவென சப்தம் போட்டு அழுதாள். விஜயனிடம் நடந்ததை சுசிலா விளக்க,
இருவரையும் முறைத்த விஜயன், “ ஏம்மா நீ உன் புத்திய யாருக்காச்சும் கடங்கிடன் கொடுத்திட்டயா? அவ சொல்லறான்னு பஞ்சாயத்து வக்கிற. உங்கிட்ட சொல்லிட்டு தான போச்சி அப்புறம் என்ன? இவ அவ அப்பமூட்டுக்கு போனாகூட யாருகிட்டயும் சொல்லிட்டு போகமாட்டா. ஆனா இவகிட்ட தெனமும் அந்த புள்ள சொல்லிட்டு போகனுமா? நல்ல கதையா இருக்கே. அம்மா காட்டுல வேல செய்யற ஆளுங்களுக்கு தண்ணீ கொண்டு வர சொன்னா சலிச்சிக்கிட்டே என்னை திருவாரூர் சமஸ்தானத்துல மகாராணியாக்க கேட்டாங்க, சென்னையில கேட்டாங்க, செங்கல்பட்டுல கேட்டாங்க இங்க வெய்யிலுல வர சொல்றீங்கன்னு மூக்கால அழுவுவா. இன்னைக்கி என்ன காலையில களையெடுக்கும் பணின்னு கேட்டிருந்தா நீ நியாயஸ்தி.”
“இவகூட சேந்த நீ வீணா போயிடுவ. நல்லா நியாபகம்
வச்சிக்க. நாளபின்ன உனக்கு ஏதாவது ஒன்னுன்னா சுஜிதான் பாக்கும். அதுகிட்ட பாத்து பக்குவமா நடந்துக்க. இவள நம்புன இப்ப நாடகம் போட்டமாறி உங்கிட்டயும் போட்டு நடுரோட்டுல நிப்பாட்டுவா பாத்துக்க. இதுக்கு மேல உஞ்சமத்து”, என்றவன்
“எனக்கு தெரியாதா உங்க ரெண்டு பேரையும். மெச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தே கண்டுபிடிக்கலாம். சரி வாங்க. சுஜி சமையலை ஒரு பிடி பிடிப்போம்”, விஜயன் ஆவலுடன் செல்ல பவன் அவனே தட்டில் சோறு போட்டு அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“பசியில அழுவுற பையனுக்கு சோத்த போட துப்பில்லை. இதுல ஊரில் இருக்கிற எல்லாரும் உங்கள மதிக்கனும், என்னை கேட்ட உங்களையெல்லாம் தூக்கிப்போட்டு மிதிக்கனும்”, என்றவன்
பவனிடம் “செல்லம் என்ன செய்யற”? என்ற விஜயனுக்கு “அப்பா சுஜிமா எனக்கு சாப்பாடு போடவும், சாப்பிடவும் சொல்லித்தந்தாங்க. ஆயாவும், அம்மாவும் வேல செஞ்சிட்டு இருக்கறப்போ அவங்கல தொல்லை பண்ணாம சாப்பாடு போட்டு சாப்பிட சொன்னாங்க. இப்ப ரொம்ப பசியா இருந்துச்சா அதான் நானே போட்டு சாப்பிடறேன்”, என்றவன்,
“அப்பா குட்டிபையன் நானே போட்டு சாப்பிடுறேன். சித்தி நம்ம வேலய நாமளே செஞ்சிக்கிறது நல்ல பையனுக்கு அழகுனாங்க…. உங்களுக்கு, சித்தப்பாக்கு எல்லாம் இந்த நல்ல பழக்கம் தெரியாதா? ஆயாவும், தாத்தாவும் சொல்லித்தரலையா?, எனக் கேட்டான்.
“ஆமாம்டா பெரிய மனுசா. இங்க பல பேருக்கு நல்ல புத்தி சொல்லி வளக்காம நம்ம தலயில கட்டி வச்சி நம்ம உசிரையும் வாங்கறாங்க. என்ன செய்ய? எல்லாம் தலயெழுத்து” என்றான் விஜயன்.
சுசிலாவும், கீதாவும் தலைகுனிந்தனர். சுஜியின் சமையல் ருசியாக இருக்க ஒன்றும் பேச முடியவில்லை அவர்களால். அவர்களிடம் கேட்டு பணம் வாங்க மறுத்த சுஜியை மட்டம்தட்ட முயன்று மூக்குடைந்தனர்.
மதியம் இடைவேளையின் போது ஜெய்யிற்கு காலையில் சுஜி சிரித்துக்கொண்டே சென்றது நியாபகம் வர திக்கென்று ஆனது. சுஜியிடம் கேட்டால் சிரித்தே மழுப்பிவிடுவாள். வீட்டில்தான் எதுவோ நடந்திருக்கு. அம்மாவிடம் இப்போ கேட்டால் சாயங்காலத்துக்குள்ள பேசிப்பேசியே மனுசன சாவடிச்சிடும். என்ன பண்ண? என குழம்பி விஜயனுக்கு போன் போட அவன் சொன்ன கதையை கேட்ட ஜெய்யிற்கும் அதை சொன்ன விஜயனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“டேய் ஜெயா நாங்கூட இந்த புள்ள பாக்க அப்பாவியா இருக்கே, நம்மூட்டு பிடாரிக என்னவெல்லாம் பண்ண காத்திருக்கோ? எப்படி சமாளிக்கும் அப்படின்னு கவலைப்பட்டேன். ஆனா இனி தினமும் சரவெடிதான் போல. எல்லா பணத்தையும் வாங்கிடனும், நம்மக்கிட்ட கையேந்த வைக்கனுமுன்னு உங்கண்ணி நெனச்சா. சுஜி பாத்து பதமா காலையில பண்ண மாறி இப்பவும் யேன் அக்கவுண்ட் க்கு அனுப்பிடுச்சி. சாயங்காலம் அப்பாவியா எந்த விசயமும் தெரியாத மாதிரி, அப்படியான்னு மூஞ்சை வச்சிக்கிட்டு நில்லு. சிரிச்சி என்னையும் மாட்டிவுட்றாத”. எனச் சொல்லிட்டு சட்டென “ ஜெய் உங்கண்ணி அவ நெனச்சது நடக்கலன்னா பசங்கள சுஜிகிட்ட விடமாட்டா, சுஜியும் விலகி நின்னுடும். அதைமட்டும் பண்ண வேண்டாமுன்னு சொல்லுடா, பசங்கள எப்பவும் போல நடத்த சொல்லுடா”. என்றான்.
“டேய் அண்ணா இவ்வளவையும் பாத்தும் நீ திருந்தலியா? சுஜி நேத்து ஸ்நாக்ஸ் வாங்க எப்படி பர்மிசன் வாங்கினான்னு பாத்ததான? நீ பயப்படாத”, என்க
“ஜெய் நீ பார்த்துகிறேன்னு சொல்றயா? என விஜயன் கேட்டவுடன்,
“அதெல்லாம் சுஜி பாத்திருவா. அவ பாக்கதான் ஸாப்ட். ஆனா செம போல்ட். நேத்து நான் ஒழுங்கா இங்க இரு இல்லையின்னா போயிடுன்னு மிரட்டுனா வா ரெண்டு பேரும் போயி நல்ல வக்கீல பாக்கலாம்கிறா, எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சி. இதுல நா பாத்தாலும்….. போண்ணா வேலவெட்டி ஏதுமில்லையா? யேங்கிட்ட வெட்டியா பேசிட்டு இருக்க. போயி பொழப்ப பாரு” என்றான் ஜெய் சிரித்தபடி.
மாலையில் ஏதும் நடக்காதது போல் இயல்பாய் இருந்தனர் மூவரும். சுஜியும் எதையும் கண்டுகொள்ளவில்லை.
“சுஜி எங்க பணம்? சீட்டுக்கு இன்னைக்கு குடுக்கனும்”, என சுசிலா கேக்க
“மாமா அக்கவுண்ட்க்கு காலையில பத்து மணிக்கே அனுப்பிட்டேன். நான் மாமாகிட்ட சொல்லிட்டு தானே போனேன். நிறைய பணமுன்னு நீங்களும் பயந்திங்க, அதனால அப்படியே அனுப்பிட்டேன் “ சுஜி கூலாக சொல்ல இஞ்சி தின்ன குரங்கு போல் முழித்தனர் மாமியாரும், மருமகளும்.
திருமண வாழ்வின் முதல் வருடத்திற்கு சென்று திரும்பிய சுஜி காயுவிடம் “ஜெய் அப்பவே முடிஞ்சா இரு இல்லன்னா போயிக்கிட்டே இருன்னு சொன்னாரு. போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் ன்னு போயி இருக்கனும். அப்ப தெரிஞ்சிருக்கும்…ச்சே என்ன ஜென்மம் அந்த அம்மா? யோகனுக்கே பதினாலு வயசாச்சி! எங்க கல்யாணம் முடிஞ்சி பதினேழு வருசமாச்சி. இன்னுமும் ஏதாவது ஒரு வாக்குவாதம் வந்தா நான் பாத்த பொண்ண கட்டியிருந்தான்னு ஆரம்பிக்குது. தகுதி தராதரம் பாக்கணும்னு பெரியவங்க ஏன் சொல்றாங்கன்னு இப்ப புரியுது. கிளியோபாட்ராவையும் டயானாவையுமா குடுக்கறேன்னு சொல்லியிருப்பாங்க. ஏதோ ஒரு குப்பாயியையோ இல்ல சுப்பாயியையோ பத்து மாடு, நாலு வயலோட கட்டிக்கிட்டு வந்து மாமியாளும் மருமவளும் சாணி வாரியிருப்பாங்க. வரட்டி தட்டிக்கிட்டு இருந்திருப்பாங்க. நான் வந்து கெடுத்துவிட்டுட்டேனாம். முடியல காயு. கொலவெறியாவுது. ஜெய்யும் வாய திறக்கறதில்லை.” என சுஜி மூச்சிவிடாமல் புலம்ப
காயு “ பொசசிவ்னஸ்… இருக்க வேண்டியது தான். ஆனா எங்கோ இடிக்குது. என்னாச்சி? லேட்டஸ்ட் அப்டேட் என்ன சொல்லு ” என்க
“அட லூசு உனக்கு இன்னுமா புரியல. போன வாரம் எனக்கு வந்த அரியர் பத்தி ஜெய் உளறிட்டாரு. சம்பளமும் போன வருசத்த விட கூடிடுச்சி. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற வீடு விற்பனைக்கு வருது. விஜயன் மாமாகிட்ட அவங்க யாராவது கேட்டா சொல்லுங்கன்னு சொல்லியிருக்காங்க. உங்க தம்பி கூட வாங்கலாம். வாங்கி குடி வந்தா வாடகை மிச்சம் அப்படின்னும் சொல்லியிருக்காங்க. ஊருக்கு போனவரு இதை பேச்சுவாக்குல சொல்லிட்டாரு. என் பேருல வாங்கினா பத்திர செலவு ஒரு சதவீதம் குறையும். அதனால என் பேருல வாங்கலாமுன்னும் சொல்லியிருக்காரு. ரெண்டும் இப்ப சலங்கை கட்டாம ஆடுதுங்க. இந்தம்மா அங்க ஆடிப்பாத்து ஒன்னும் நடக்கலன்னு இங்க வந்து நாடகம் போட்டுக்கிட்டு இருக்கு ஜெய்கிட்ட.. இந்த ஏமாளியும் அதை நம்பிகிட்டு எங்கிட்ட சண்டை போடுது.” என்க
“இப்ப உடனடி தேவை என்னவாம்?” காயு கேட்க
“பணம் அல்லது நகை. கீதாவுக்கு” சுஜி வருத்தத்துடன் சொல்ல
“திடீர்னு ஏன் இவ்ளோ அவசரமா?” என
“நான் கொஞ்ச நாளா எந்த பங்சனுக்கும் நகை போடறதில்லை. “ என சுஜி கூற
“நானும் வானதி வீடு கிரகபிரவேசத்து அப்பவே கேக்கனுமுன்னு இருந்தேன் கவிக்கு கூட பேஷன் ஜூவல்ஸ்தான் போடற என்னாச்சி” காயு ஆர்வமாக கேட்க
“ இந்த வருச ஆரம்பத்தில் இருந்து இதுவரை இந்த பங்சனுக்கு மட்டும் போட்டிருந்துட்டு தர்றேனு வாங்கின தங்க நகைகள் இருபது பவுனுக்கு மேல. ஒரு வார்த்தை கூட திருப்பி குடுக்கறத பத்தி பேசல. நான் ஏதாவது கேட்டா ஜெய்கிட்ட இதுக்கு கூட நா பொருமானம் இல்லையான்னு சண்டை..ஏன் போடணும் ஏன் குடுத்துட்டு வருத்தப் படனும்?. கவிக்கு நான் கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சேத்தா ஒரேடியா அடிச்சிட்டு போறாங்க.” என புலம்ப
“ சரியான பகல் கொள்ளையா இருக்கு.”
“கீதாவுக்கு நகையா இல்லனா பணமா குடுக்கணுமாம். நகையாய் குடுத்தா புது நகை வாங்க செய்கூலி சேதாரமும் குடுக்கணுமாம். நம்மாளு நான் ஏன் குடுக்கனும், எனக்கும் குடும்பம் இருக்குன்னு சொல்லனும். எங்கே வாயே திறக்கறதில்ல. எங்கிட்ட மட்டும் பாரு வம்பு சண்டைக்கு வர்றது. இதுல பணத்தை திருப்பி கேக்ககூடாது. விஜயன் மாமாக்கு தெரியகூடாதுன்னு கண்டிசன்ஸ் வேற. இப்பதான் பக்கத்து நிலத்தை வாங்க இருபது லட்சம் கொடுத்தோம்.” என்று புலம்பித்தள்ள
காயு “ ஆண்டவா எனக்கு அடுத்த பிறவியின்னு ஒன்னு இருந்தா இந்த சுசிலாம்மாவுக்கு மகளாகவோ, ஜெய்யிக்கு அக்கா தங்கச்சியாகவோ பெறக்க வைய்யிப்பா உனக்கு நான் தினமும் படையல் போடுறேன்னு” திடீர் வேண்டுதல் வைக்க
“என் கவலை உனக்கு கிண்டலா இருக்கா?” என கண்கலங்கினாள்.
“சுஜி இதுவும் கடந்து போகும், காயூ இருக்க கவலை எதற்கு? அண்ணங்கிட்ட பொறுமையா பேசு இல்லனா பிளான் பண்றோம் தட்டி தூக்கறோம்.” என ஆறுதல் சொல்ல சுஜி யோசிக்க ஆரம்பித்தாள்.
அவரவர் வாழ்வை, வளத்தை காப்பாற்ற அவங்கவங்க தான் போராடனும். சுஜி தெளிவாக சிந்திக்க தொடங்கினாள்.
பணமா? நகையா? சுஜி எதைக் கொடுப்பாள்? நிறையுமா கீதாவுக்கு? விஜயனுக்கு தெரிந்தால் விளைவுகள் எப்படி இருக்கும்? காத்திருப்போம் ஓரிரு நாட்களுக்கு….