சொர்க்கம் உன்னருகில்   20

             (இறுதி பதிவு)

    ஜெய் அவனின் மனதினுள், சுஜி அவனை தண்டிக்க வேண்டி பிரிந்திருக்க நினைப்பதாக எண்ணிக்கொண்டு உளற சுஜி முறைக்க ஆரம்பித்தாள். கண்ணனும் போலியாய் மிரட்ட ஜெய் வெட்கி தலைகுனிய நடந்ததை பார்த்த யோகன், கவி, பவன், கவின் காயு அனைவரும் சிரித்தனர்.

     “சரிமா நீங்க பாருங்க. நாங்க மூணு பேரும் கிளம்பறோம்” என விஜயன் தன் மக்களுடன் கிளம்ப

        சுஜி “நிலத்தில இப்போதைக்க வேலை எதுவும் இல்லை. தண்ணீ பாய்ச்சறது மட்டும்தான்னு சொன்னிங்க. அதுதான் சென்சார் போர்டு வச்சி இங்கிருந்து செல்போனுல கண்ட்ரோல் பண்றமாதிரி செட் பண்ணியிருக்கிங்க. அப்புறம் ஏன் கிளம்பறீங்க? இங்கிருந்தே தோட்டத்தை பாத்துக்கலாமே?” என சுஜி கேக்க

     “இல்லமா நாங்க அங்க இருக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது. அவங்க வெளியில வந்த பின்னாடி வேற பிரச்சனைய கிளப்புவாங்க. இந்த கவினுமே காரியம் ஆக காலையும் புடிப்பான், கழுத்தையும் புடிப்பான். நாங்க அங்க இருக்கிறதுதான் சரி.

     “ நீ எங்க குடும்பத்துக்குள்ள வந்த நாளா எங்களுக்காகன்னு பாத்து பாத்து நெறய கஷ்டப்பட்டுட்ட. போதும் இனியாவது கொஞ்சம் சந்தோசமா, நிம்மதியா இரு. அடிக்கடி நாங்களும் வரோம். நீங்களும் லீவுக்கு வாங்க. அதுதான் நிரந்தரம். நாங்க கிளம்பறோம்” விஜயன் மகன்களுடன் கிளம்ப

      கவி “விஜிப்பா பவன் அண்ணாவ விட்டுட்டு போங்க. அண்ணா இங்கயே இருக்கட்டும் ப்ளீஸ் விஜிப்பா” கெஞ்ச

    “அண்ணன் ரெண்டு மூணு நாள்ல காலேஜ் கிளம்பிடுவான். அதுவரை என்னோட இருக்கட்டும்மா கவி. அடுத்த லீவுக்கு இங்க அவனை அனுப்பி வைக்கிறேன்.” என்று சொல்லி

    “இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும் யோகனும் உங்க மாமாகூட பாட்டி வீட்டுக்கு போயிட்டு சன்டேதான் வருவிங்க. நீங்க வரும்வரைக்கும் பவன் தனியா இருக்கனுமில்ல. உங்களோட அடுத்த லீவு அண்ணன்களுடன் தான் கவலைபடாதே” எனவும் விஜயன் சொன்னான்.

     “கவின் அண்ணா வேண்டாம். பவன் அண்ணா மட்டும் போதும். பெரியம்மாவும், கவின் அண்ணாவும் ஒரே மாதிரி கேரக்டர். ஸோ அவங்க உங்களோடவே இருக்கட்டும்.” என இருவரும் ஒரே குரலில் கூற விஜயனுக்கு மனது பதைத்தது.

    “குழந்தையும், தெய்வமும்” ஒன்று. ஆனால் கவி பதறவதை பார்த்தால்….. கவினும் அவனம்மாவை போல இருந்துவிட்டால்…. சந்தேகமே வேண்டாம், அவன் குணமே அதுதான். இனி இவர்கள் பக்கம் அவனை வர விடாமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டு கிளம்பினான்.

     “சுஜி இப்போ தான் நீங்க நிஜமாவே தனிக்குடித்தனம் வந்திருக்கிங்க. மனசுவிட்டு பேசுங்க ரெண்டு பேரும். அண்ணனும் உன்னையே நினைச்சி போராடி உன்னய கல்யாணம் பண்ணியிருக்காரு. ஆனா உன்னோட சந்தோசமா வாழ விடாம உங்க கூடவே இருந்து அதுங்க அழிசாட்டியம் பண்ணிடுச்சிங்க. இப்போதான் உங்களுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு போல.”

   “அம்மா உங்கிட்ட ஒன்னு சொல்லச் சொன்னாங்க. புடிச்ச பீடையெல்லாம் இத்தோட போகட்டும் அப்படின்னு எண்ணெய் தேச்சி குளிச்சிட்டு கோயிலுல விளக்கு போட்டுட்டு வர சொன்னாங்க. போயிட்டு வாங்க” காயு மனதார சொல்ல, அணைத்துக் கொண்டாள் சுஜி.

    சுஜியின் அண்ணன் சுகந்தன் யோகனையும், கவியையும் அழைத்துச் செல்ல வந்தவன்  “சுஜா நாங்க இவங்கள பெங்களூருல ஸ்கூல் சேத்துடட்டுமா? அம்மா, அப்பாவையும் கூட்டிட்டு போயிடறேன். இவ்வளவு நடந்திருக்கு. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொன்னியா நீயி?  உன் மேல எங்களுக்கும் அக்கறை இருக்கு. ஏன் அதை நீ புரிஞ்சிக்கல. அசம்பாவிதம் ஏதாவது நடந்திருந்தா என்ன பண்ணியிருப்ப? அசட்டுதைரியம் ஆபத்து சுஜா. புரிஞ்சிக்கோ. இனியாவது எதையும் மறைக்காம சொல்லு. நாங்க இருக்கோம் உனக்கு.” என அதட்டி ஆறுதல் கூறி தங்கையின் மக்களை கூட்டிச் சென்றான்.

     கண்ணன், காயுவிடம்    “சுஜாவை நீங்க பாத்துகிட்டதுக்கு தேங்க்ஸுன்னு சொல்லி உங்கள தூரமா நிறுத்தமாட்டேன். அவளுக்கு நான் வேற நீங்க வேற இல்லை. என்னோட இடத்தை நீங்க பில் பண்ணியிருக்கிங்க. யு ஆர் கிரேட். சொந்த பந்தங்களே, கூட இருந்தே குழி பறிக்கிற இந்த காலத்துல ப்ரெண்ட்ஸிப்க்காக அவங்க கூடவே இருந்து அவங்க வாழ்க்கையவே காப்பாற்றி குடுத்திருக்கிங்க.” மனம் நிறைந்த சந்தோசத்துடன் சொன்னான்.

     செல்லும்முன் சுஜியை அணைத்துக் கொண்டு “அம்மா கேர்புல்லா இருங்க.” என சொல்லி முத்தமிட்டு, ஜெய்யிடம் தலையாட்டி விட்டு சென்றனர் யோகனும், கவியும்.

      “சுஜி எனக்கு தலை பாரமா இருக்கு. ஒரு காபி…” சுஜி முறைக்க “இல்ல வந்து நான் காபி குடிக்கலாமுன்னு நினைச்சேன். அதான் உனக்கும் போடுட்டுமான்னு… கேட்டேன்..” ஜெய் தடுமாற

     “ஸ்டராங்கா போட்டுட்டு வாங்க.” என்றவள் பார்வையில் “இதுதான் நான் உனக்குன்னு போட்டுத்தர்ற மொத காபி இல்லையில்லை செய்யற முதல் வேல சரியா சொன்னேனா?” என்றான் புரியாத பாவனையில்.

     “எல்லாருக்கும் காதல் பட்டுப்பாதைய விரிக்காது. ஆனா எனக்கு எல்லாம் கிடைச்சும், தக்கவச்சிக்க தெரியல எனக்கு. நாயிக்கு முழுத்தேங்காய் கிடைச்சா அதுவும் திங்க முடியாது. அடுத்தவங்க எடுக்கவும் அது விடாது. அதுபோல உன் வாழ்க்கையில நான் விளையாடிட்டேன். என்னை மன்னிக்க வேண்டாம். நீ என்னோடவே இருந்து உனக்கு தோணுற  தண்டனையை எனக்கு குடு சுஜி.” என்றவன்

     “இரு காபி போட்டுட்டு வரேன். காபி வித் சுஜின்னு நிறைய பேசலாம்” வேகமாக போக

   “என்னை பாத்து பயந்திங்க சரி ஆனா அப்புறம் எப்படி என்னைய பிடிச்சது? ஏன் என்னை இவ்வளவு கஷ்டப்பட விட்டிங்க? என்னை கல்யாணம் பண்ண போராடுனிங்க சரி. அதுக்கப்புறம் உங்க காதல் எங்க போச்சி? ஏன் மௌனமா நின்னிங்க?” சுஜி கண் கலங்கி கேக்க

      “சுஜி இரு. நான் காபி போட்டுட்டு வரேன். குடிச்சிட்டு திட்டு, இல்ல அடிக்கனும்னு தோணினா அடி. ஆனா இன்னையோட இந்த கேள்வி பதில் செசன் முடியனும்.” என்றவன் ஐந்து நிமிடத்தில் இன்ஸ்டன்ட் காபியுடன் வந்தான்.

     சுஜியிடம் கொடுத்துட்டு, அதை அவள் குடிக்க “உனக்கு மட்டும் அத்தை ப்ரஸ்ஸா பில்டர் காபி குடுப்பாங்க இல்ல? அதை நீ ரசிச்சி குடிக்கும்போது நான் அதை பிடுங்கி குடிக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசைபட்டிருக்கேன். ஆனா என்னோட ஆசையை என்னோடவே என் மனசோட நிறுத்திக்குவேன். நான் உன்னோடநெருங்கி இருந்தா நம்ம ரெண்டு பேருல ஒருத்தர்தான் இப்போ இருந்திருப்போம்.”

    “இப்போ கேளு. நான் சொல்றேன். பயந்தது உன்னை பார்த்து இல்ல. உன்னோட பிடிவாதத்தை பார்த்து. எதையும் டக்குனு முடிவு செஞ்சிடுவ. ஒன்னு வேணும், வேணாம்னு நீ முடிவெடுத்தா மாத்த முடியாதுன்னு சுகந்தன் பல முறை பொலம்பி இருக்கான். இந்த டீச்சர் ட்ரெய்னிங் அவனுக்கு பிடிக்கல. உன்னை எஞ்சினியர் ஆக்க அவன் அவ்வளவு ஆசைப்பட்டான். நீதான் நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் முடிச்சிட்டேன். நான் பிஇ சேர மாட்டேன்னு பிடிவாதமா இங்க வந்த. உனக்கு ஞாபகமிருக்கா?”

    “உனக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியல. சுகந்தனும் கண்ணனும் என்னோட ப்ரெண்ட்ஸ். ஸோ  நான் உன்னை நீங்க அட்மிஷன் போட வந்தப்பவே பார்த்தேன். கண்ணனை சுகந்தன் என்னோட ப்ரெண்டுன்னு சொன்னதும் அண்ணா எந்த டிப்பாட்மென்டுனு கேட்டு பேச ஆரம்பிச்ச.”

     “பக்கத்துல நின்ன நான் திரும்பி பாக்காம ஓடிட்டேன். நீ என்னையும் அப்படி கூப்பிட்டுட்டா என்ன செய்ய?  அதுல இருந்தே உன்னை எங்கயாவது அவங்களோட பார்த்தாலே விலகி போக ஆரம்பிச்சேன்.”

    “ராகினி  எங்க கிளாஸ் பொண்ணுதான். ஆனா ராஜன் பக்கத்து காலேஜ்ல இருந்துவந்து தொந்தரவு குடுத்தான். அவன் ரௌடிபோல இருந்ததால யாரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணல. நீ அவளுக்கு ஹெல்ப் செஞ்சி எங்க கிளாஸ் கேர்ள்ஸுக்கு ப்ரெண்டு ஆயிட்ட.”

   “உன்னை பாத்தா நான் பதறி கண்ணன்கிட்ட இருந்து தூரமா போயிடறத பாத்து இந்த பக்கிங்க சுகந்தன்கிட்ட சொல்லி கலாட்டா பண்ணாங்க. நான் என் மனசை புரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே கண்ணனும், சுகந்தனும் கண்டுபிடிச்சிட்டாங்க.”

     “சுகந்தனோட ஹெல்ப் இல்லன்னா என்னால உன்னை வாழ்க்கைத்துணையா அடைஞ்சிருக்க முடியாது. நீ வேற திரும்பியே பாக்க மாட்ட. இவனுங்க ரெண்டு பேரும் என்னை ஓட்டித்தள்ளுவாங்க.”

     “இதுக்கு நடுவுல எங்கண்ணன் கல்யாணம். அப்போதெல்லாம் கவின் அம்மா நல்லவங்களா இருந்தாங்களா? இல்ல நடிச்சாங்களோ? என்னோட நல்லா பேசுவாங்க. காலேஜ் ப்ரெண்ட்ஸ் பத்தியெல்லாம் கேப்பாங்க. நானும் கண்ணன், மகேஷ் பத்தி சொன்னேன்.ஏனோ சுகந்தனை பத்தி சொல்லல. அப்போ நினைச்சேன், சுகந்தன் எங்க காலேஜ் இல்லை அதனாலதான் சொல்லலைன்னு. நாளாக, நாளாக காலேஜ் லவ், லஸ்ட் பத்தி விலாவரியா கேக்கும்போது நான் கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சேன்.

    கொஞ்சம், கொஞ்சமா நா பேசாம கவனிக்க ஆரம்பிக்க, அண்ணனுக்கும் நெறய முன்னுக்குபின் முரணான விசயங்கள் நடந்திருக்கு கீதா மூலமா, ஸோ கவனிச்சிருக்காங்க. நானும், அண்ணனும் இதைபத்தி பேசிக்கிறது அவங்களுக்கு தெரியல. நான் போனுல  மகேஷ்கிட்ட பேசினது கேட்டு அம்மாவிடம் சொல்லி பிரச்சனை செஞ்சி அவங்க தங்கையை இங்க கொண்டு வர திட்டம் போட்டாங்க.

     அண்ணனும், சுகந்தனும் அங்கே என் ஜாதகமும், இங்கே உன் ஜாதகமும் வர தரகர்கிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சாங்க. இதுக்குமேல எல்லாம் உனக்கு தெரியும்.

       உனக்கும் என்னை பிடிக்கும்.. பிடிக்கலன்னா நீ நம்ம கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்ட. ஆனா நீ எதையும் மனந்திறந்தும் சொல்லிடமாட்ட. அதுவும் எனக்கு தெரியும்.

    “சாரிமா. உன் விருப்பம், கனவு எல்லாம் காயு, சுகந்தன் மூலமா தெரிஞ்சும் என்னால நீ விரும்பினது போல ஒரு சுதந்திரமான வாழ்க்கையை கொடுக்க முடியல. பேச்சும், எழுத்தும் உனக்கு உயிர்ன்னு தெரிஞ்சும் என்னால ஒன்னும் செய்யமுடியல. சொந்தமா வீடுகூட இல்லாம உன்னை அடிமை போல ஆக்கிட்டேன்” ஜெய் புலம்ப

     “யோகன் புக் ஷெல்ப்ல ஒரு ரெட் பைல் இருக்கும் பாருங்க. போயி எடுத்துட்டு வாங்க” சுஜி உத்தரவு போட, ஜெய் எடுத்துவர

    “பைலை ஓப்பன் செஞ்சி பாருங்க. நீங்க பதினேழு வருசமா சொந்த வீட்டுலதான் இருக்கிங்க..”

    “நம்ம கல்யாணம் முடிஞ்ச மொத மாசம் என் சம்பள பணத்தை உங்க வீட்டாளுங்க கேட்ட லட்சணத்துலயே நான் அலர்ட் ஆயிட்டேன். அதுவரை வாங்கின சம்பளம் எல்லாம் அக்கவுண்ட்ல இருந்துச்சி. நானும் காயு, கண்ணன் அண்ணா, சுகந்தன் நாலு பேரும் யோசிச்சி ஸ்கூல் பக்கத்துல வேணும்முன்னு தேடி இதை வாங்கினோம். காயுவும் எனக்காக இங்க வீடு வாங்கினா.”

      “இந்த விசயம் இதுவரை யாருக்கும் தெரியாது. வாடகைன்னு சொல்லி சம்பளத்துல எடுத்தது மியூச்சூவல் பண்டுல கட்டிட்டு வரேன். மாசம் மூவாயிரத்துல ஆரம்பிச்சி இப்போ மாசம் பதினஞ்சாயிரம் கட்டிட்டு வரேன். சொந்த வீட்டுக்கு வாடகையான்னு நீங்க நெனைக்கலாம். ஆனா விட்டிருந்தா இதுவும் கடல்ல கரைச்ச பெருங்காயம் போல ஆயிருக்கும். சாரி இந்த விசயத்தை சொல்லாம இருந்ததுக்கு” என்ற சுஜி

    “அங்கிருந்து நான் தப்பிக்க பல மாசம் ஆச்சி. மழை விட்டும் தூவானம் விடாததுபோல இங்கே வந்தும் என்னைய பழிவாங்க துடிச்சாங்க. நீங்க ஏன் எனக்காக ஒரு துரும்பை கூட அசைக்கலை? கல்யாணம் முடிந்ததும் உங்க காதல் எங்க போச்சி? பல நாள் நான் அழுதிருக்கேன் இந்த மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கிட்டேனேன்னு.” சுஜி கோபமாக பேசிக்கொண்டே இருக்க

    “எனக்கு தெரியும். உன்னால இதை கடந்து வரமுடியும் என்பது. நான்தான் உன்னோட வீக்னஸ், கரெக்டா? நான் நெருங்கி வந்திருந்தா உன்னால அவங்கள சமாளிக்க முடியாம போயிருக்கும். நீ துவண்டு போயிருப்ப. இருபத்துநாலு மணி நேரமும் உன்னோட என்னால இருக்க முடியாது. ஸோ உன் பலத்தை, உன்னை நம்பி நான் தள்ளி நின்னேன். என்னோட லைப்பே நீதான்னு உனக்கு தெரியும்.”

    “உனக்கு பின்னாடி நானிருந்தேன். என் உணர்வுகளை புரிஞ்ச நீ இன்னும் பலமா போராடுவன்னு எனக்கு தெரியும்.  நம்ம வாழ்க்கை இப்படியே போகாது, மாறிடும், மாத்திடுவன்னு நினைச்சேன்”.

    “ ஏன் அமைதியாவே இருந்த? என்கிட்ட ஒரு சண்டை போடல, கேள்வி கேக்கல? என்னை நம்பலியா நீ? நான் சரி பண்ணிட முடியாதுன்னு நினைக்கறீயா அப்படீன்ற ஈகோ வேற அப்பப்போ. பணந்தான, நம்ம கவின், பவனுக்குதான குடுக்குறோம்ன்ன மனசை பலதடவை தேத்திக்குவேன். இதுக்கு மேல எதுவும் கேக்கனுமா?” ஜெய் கேக்க,  

     சுஜி “இன்னைக்கு தான் இவ்ளோ நேரம் எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம என்னோட பேசியிருக்கிங்க. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல போங்க. அப்படியே ஷாக்காயிட்டேன். இது சுஜி பின்னாடி சுத்துன ஜெயந்தனான்னு சந்தேகமா இருக்கு?” நக்கலாக பேச, மெய் மறந்து அவளையே பார்த்திருந்தான் ஜெய்.

    இதுதான், இந்த பேச்சிதான் அவளை திரும்பி பார்க்க வைத்தது. “சுஜி என்னோட பீரோல புக்ஸ் இருக்கு பாத்தியா?” கனிவுடன் அவள் முகம் பார்த்து கேக்க

    சுஜியோ கண்களில் கனவோடு, “ம்ம்… பார்த்தேன். ஆனா…” என்க

    “ஆனா, ஆவன்னா எல்லாம் இல்லை… உன்னோட பஸ்ட் புக்ல இருந்து இப்பவரை எல்லா புக்கும் வாங்கி பத்திரமா வச்சிருக்கேன்.  உன்னை போல அதுவும் எனக்குள்ள பத்திரமா இருக்கு.”

   “போதும் சுஜி. இன்னைக்கு நாம  தனியா இருக்கோம். நாம ரெண்டு பேரும் இதுவரை இப்படி எப்பவாச்சும் எங்கயாவது தனியா இருந்திருக்கோமா? வீட்டுல, வெளியில? பார்வை வட்டத்துல,  பக்கத்து ரூமுல யாராவதுன்னு…. பல சமயம் ரொம்ப டிப்ரஸ்டா பீல் பண்ணியிருக்கேன். ஆனா உன்னை பார்த்துட்டா அணைச்சிக்கனும், மடியில படுக்கணும், உன் முகத்தை பார்த்துகிட்டே இருக்கனும்னு தோணும். எங்க அதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கனும். ஆசைபட்டு கட்டிக்கிட்டவ கண்முன்னாடி இருந்தும் ஆசையா பாக்ககூட முடியாது. எங்க அம்மா நந்திமாதிரி  வந்து குறுக்க நிக்கும்.”

    “ச்சே என்ன வாழ்க்கை அது? பேச முடியாம, பாசமா, ஆசையா பாக்க முடியாம நைட்மட்டும் கிட்ட வரும்போது எனக்கு அசிங்கமா வேதனையா இருக்கும். ஆனாலும் ஐயம் யுவர்ஸ். அதனால பல நாள் அணைச்சு படுப்பேன். அதுக்குமேல என்னால முடியாது. உன் பக்கத்துல இருக்கேன்ற சந்தோசத்துலயே தூங்கிடுவேன்”.

     “அவங்க வெளிய வந்தாலும் இனி இங்க விருந்தாளியா கூட வரக்கூடாது. இனியாவது நாம நம்ம வாழ்க்கையை பார்ப்போம். என்ன நான் சொல்றது சரியா?” என்றவன் தயக்கத்துடனும், ஆசையுடனும்

    “சுஜி இன்னைக்குதான் நமக்கு மேரேஜ் ஆயிருக்குன்னு நெனச்சிக்கலாம்.  இந்த மூணு நாளும் நாம விரும்புனதுபோல இருப்போமா? பலநாள் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட, ஊட்டிவிட ஏங்கியிருக்கேன். சுஜி ப்ளீஸ்…நாம…”

     “பேசிட்டே இருந்த நான் என்ன செய்ய? இப்போ வாங்க டின்னர் சமைக்கலாம். ஆனா கிட்சன் எங்கிருக்குன்னு தெரியுமா? என் முந்தானைய பிடிச்சிட்டே வாங்க பாக்கலாம்” கலகலவென சிரித்தபடி சுஜி எழுந்து ஓட பார்க்க

     “சுஜி இப்போ சமைச்சே ஆகனுமா? சிரிக்கிற உன்னை எனக்குள்ள சிறையெடுக்க தோணுதுடா. நான் என்ன செய்யட்டும்?” காதலுடன் சம்மதத்திற்காய் காத்திருக்க,

    முதன்முதலாய் அவனின் ஆசையை வார்த்தையாய் கேட்டவள், தனிமை துணையிருக்க,

    அவனின் தோள் சாய்ந்தவள், அவனின் கை விரல்களை தன்னோடு கோர்க்க ஆசையாக அவளை அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றான்.

   இனியாவது அவர்களின் ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறட்டும். வாழ்த்தி விடைபெறுவோம்.