“கவி, யோகன் வாங்க தூங்கலாம். நாளைக்கு ஸ்கூல் போகனும். “ என்றழைத்தான் ஜெய்.
“அப்பா இருங்க. அம்மாக்கு கிச்சன் கிளீனிங் க்கு ஹெல்ப் பண்ணிட்டு வரோம். “ என்றனர் மக்கள் இருவரும்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. டேய் யோகா நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற. இந்த வேலைய உன் ஆத்தாகாரி செய்ய மாட்டாளா? என்ன மகாராணியால அஞ்சு நிமிஷம் வேல பாக்க முடியாதா? நா எல்லாம் காலையில கோழி கூப்பிடும் முன்னாடி எந்திரிச்சி பட்டியில இருக்குற ஆடு மாட்டை இடம்மாத்தி கட்டிட்டு தீனி போட்டு முடிச்சி பால் கறந்து பால் சொசைட்டியில ஊத்திட்டு வந்தாதான் விடியும். ஆனா இங்க எழுந்து வாச தெளிச்சு கோலம் போடவே விடுஞ்சிடுது. “
“அப்புறம் சமைச்சி உங்க தாத்தா, அப்பன், பெரியப்பன அனுப்பும் முன்னாடியே பட்டிய கூட்டி அள்ளி சுத்தம் பண்ணிட்டு தவிடு புண்ணாக்கோட போட பருத்தி கொட்டையை ஆட்டுகல்லுல ஆட்டி தாளி வைச்சிடுவேன். வேலைக்கு வர ஆட்களோட வேலையும் செஞ்சிட்டு வீட்ட கூட்டி சுத்தம் செய்யறது துணிதுவைப்பது நல்லது, கெட்டத பாக்கறது என எல்லாத்தையும் ஒத்த ஆளா செஞ்சேன். இங்க இவளுக்கு எத்தன பேருதான் வேல செய்யறது? பொம்பளைக்கு கண்ணு பாத்தா கை செய்யாதா? ஒரு சோம்பேறிய என் மகன் கட்டிக்கிட்டு வந்துட்டானே ஆண்டவா” என்று அர்த்தராத்திரியில புலம்ப,
சுஜி யோகனையும், கவியையும் பார்க்க இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர். அவர்கள் சென்றபின் ஜெய்யை பார்க்க, அவன் தலையசைக்க அவளும் அறைக்குள் சென்றாள்.
“அம்மா அந்த காலத்துல தினமும் சாம்பார், மூணுபொரியல், ரெண்டு சட்னி செஞ்சி எல்லாருக்கும் குடுத்தாங்களா? ஏம்மா இவங்க இப்படி பிஹேவ் பண்றாங்க? “ என்றான் யோகன்.
“அப்பா மேல அவங்க ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க. எங்க உங்க அப்பா என்னையும் அவங்களையும் கம்பேர் பண்ணி எனக்கு சப்போர்ட் பண்ணிடுவாரோன்னு நினைக்கறாங்க. எங்க என் பேச்சை கேட்டு எங்களோட சம்பளப்பணத்தை குடுக்கமாட்டாரோன்னும் எங்க இவ்ளோ வருசம் குடுத்தத கணக்கு கேட்டு வாங்கிடுவாரோன்னும் பயப்படறாங்க. அதோட விளைவுதான் இது.”என்ற சுஜி,
“தங்கம் இத பத்தி நாம சன்டே பேசலாம். நாளைக்கு நம்ம எல்லாருக்கும் ஸ்கூல். இப்ப இத மைண்டுல ஏத்தாதிங்க. ஓகே. யாரோ யாரையோ பேசறாங்கன்னு சன்டே வரை கண்டுக்காம இருங்க. ஐ வில் எக்ஸ்பிளைன். இப்போ எதையும் யோசிக்காம தூங்குங்க. “ என்றும் கூறி அவர்களுடன் படுத்தாள் சுஜி.
சுசிலா “ஜெய் என்னடா இது? நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன், எல்லாம் மயிராச்சின்னு தூங்க போயிட்டாங்க. எல்லாம் நீ குடுக்கற இடம்தான். எங்க அம்மா கேட்டா பதில் சொல்லனுமுன்னு நீ பழக்கியிருக்க வேண்டாமா? கொஞ்சமும் பயமில்லை, மரியாதை இல்லை.என்ன பொழப்பு இது”என்க,
பரமசிவமோ “நாங்க சொன்ன பொண்ண கட்டியிருந்தா இந்நேரம் நீ ராஜா மாதிரி இருந்திருக்கலாம். நாங்களும் உட்கார்ந்துகிட்டு வேல வாங்கலாம். நேரத்துக்கு சூடா ருசியா சாப்பிடலாம். எங்க அதிஷ்டம் அவ்வளவு தான் “. என்றார்.
ஜெய் எதற்கும் மறுப்பு சொல்லாமல் “சரிப்பா காலையில பாக்கலாம். நானும் ஸ்பெஷல் கிளாஸுக்கு நேரமா போகனும் “ எனச் சொல்லி படுக்க சென்றான்.
ஜெய் பஞ்சாயத்து முடிஞ்சி வரும்போது முவரும் தூங்கியிருந்தனர். சுஜியிடம் மன்னிப்பு கேட்டான் மௌனமாக. “சுஜி நான் உன்னை என்ன செஞ்சேன்? ஏன் என்னிடமும் பேச மறுக்கிறாய்? “என்று அவளிடம் கேட்க, சண்டையிட ஆசைதான். ஆனா என்ன செய்தாலும் சுஜி பேசமாட்டாளே, என நினைத்தான்.சுஜி இன்னும் தூங்கவில்லை அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை ஜெய் அறியவில்லை. அவனின் அன்பு மனைவி மனதளவில் அவனைவிட்டு விலகிகொண்டிருக்கிறாள் என்பதையும் அவன் அறியவில்லை.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு வரை சுஜியின் குரல் அவ்வீட்டினுள் சங்கீதமாய்தான் ஒலித்தது. அன்று சுசிலா உள்ளே வரும்போதே கண்டது கையில் புது புத்தகங்களுடன் வந்த ஜெய்யை தான்.
“இவ்வளவு புத்தகம் யாருக்கு? யோகனும், கவியும் பாடபுத்தகத்தை படிச்சாங்கன்னா போதும் மார்க் அதிகம் வரும்.” என சொல்லிக்கொண்டே புத்தகங்களை புரட்ட, பரமசிவம் “கவிதை புத்தகமா? நீ கவிதை எல்லாம் படிக்கறயா என்ன? ஏன்டா இந்த பழக்கம்? வேற வேலயே இல்லையா? “ என்க,
பில்லைப் பார்த்து, “ ஏங்க! இங்க பாருங்க ரெண்டாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்காங்க! ஐயோ! ஐயோ! இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா? எனக்கு படபடன்னு வருதே. இந்த காசு இருந்தா பவனுக்கு (விஜயனின் இளைய மகன்) ஒரு சட்டை எடுத்து குடுத்திருப்பேனே! காச கரியாக்கி வச்சிருக்காளே யேன் வூட்டு மவராசி!” என்று அழுது புலம்ப,
ஜெய் சுஜியை பார்த்து “ நான் அப்பவே சொன்னேன் கேட்டயா? என்க,
அவர்களுடன் புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்த காயு “ஐயோ நிறுத்துங்க. என்ன பேசறிங்க? பில் யார் பேருல போட்டிருக்கு பாத்திங்களா? எங்க ஸ்கூல் இலக்கிய மன்றத்திற்கு வாங்கினோம். அண்ணா அவங்க தான் வெவரமில்லாம பேசினா நீங்களுமா புத்தகத்தை வேஸ்டுன்னு நினைக்கிறிங்க? சுஜி வேற எப்பவும் ஏதாச்சும் ஒன்ன படிச்சிக்கிட்டே இருப்பாளே”, என்றாள் திகைப்புடன். அவளுக்கு ஏதோ நூலிழை சிக்கிய உணர்வு.
சுஜியை திரும்பி பார்க்க அவள் தன் மாமியாரை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தினமும் சாயங்காலத்துல நோட்டு, கட்டுரை, பரிச்சபேப்பருன்னு திருத்தி முடிச்சிட்டா சனி, ஞாயிறு-ல காட்டுல வேல செய்ய வரனும்ல. அதான் புத்தகம் படிச்சிகிட்டே இருந்துட்டு சனி, ஞாயிறுல வேல பாக்கறது போல நடிக்கிறா. யாரு நான் சொன்னா கேக்கறா? கட்டினதும் கேக்கல. பெத்ததும் கேக்கல. பாத்து கட்டி வைச்சதும் கேக்கமாட்டேங்குது. நா என்ன சொல்ல?எல்லாம் என் நேரம்”. மூச்சிவிடாமல் சுசிலா பேச ஜெய் பதட்டமானான்.
“அம்மா புக்குதான் ஸ்கூல் காசுல வாங்கினதுன்னு தெரிஞ்சிடுச்சில்ல. விடுங்க. சுஜி, காயு எங்க உங்களோட வந்த சாருங்க ரெண்டு பேரும்? உள்ளே கூப்பிடாம நீங்க மட்டும் வந்துட்டிங்களா? போயி அவங்கள உள்ள கூட்டிட்டு வாங்க” என ஜெய் பேச்சு போகும் திசையை மாற்றி பெருமூச்சிவிட அவனை பாத்துக்கிட்டே சுஜி காயுவுடன் வெளியே போய் அவர்களை அழைத்து வந்தாள்.
“சாருக்கு ஒரு போன் வந்தது. பேசிட்டு வர லேட்டாயிடுச்சி “, என்று சொல்லி சுஜியை பரிதாபமாக பார்த்தார் ஒருவர். அவர்கள் இருவரும் சென்ற பின் சுஜி சுசிலாவிடம் “படிக்காம எப்படி பாடம் சொல்லித்தர முடியும்?” எனக் கேட்டாள்
“ஆமா இவங்க கலெக்டருக்கு படிக்கறாங்க. பத்தாவது பசங்களுக்கு சொல்லிக்குடுக்கறது என்ன கம்பசித்திரமா? இதுக்கு போயி மணிக்கணக்கா படிக்கறது, “ என்றார்.
இரவில் தங்கள் அறைக்கு வந்ததும் சுஜி, “ என்ன ஜெய் உங்கம்மா இப்படி பேசறாங்க நீங்க பேசாம வரீங்க. உங்களுக்கும் நான் படிக்கறது பிடிக்கலயா?”” என்றாள்.
ஜெய் அவளை பார்த்தபடி படுத்துக்கொண்டு “உண்மையா எனக்கு இந்த கவிதை, கதை இதெல்லாம் பிடிக்காது. இதுவரை உனக்காகதான் மௌனமா இருந்தேன். இனிமே படிச்சாலும் உன் ஜாப்ல இங்கிரிமென்ட் கிடைக்காது. சம்பளமும் ஏறாது. வேஸ்டா எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கனும். நீ படிக்கற நேரத்துல யோகனுக்கும், கவிக்கும் சொல்லிக்குடுத்தா அவங்க இன்னும் நல்ல மார்க் எடுப்பாங்க. இல்லையா நீதான் நல்லா துணித்தைப்பாயே ஆரிஒர்க் செய்வாயே! அதப்பாத்தாகூட வருமானம் வரும். உன்னோடது, உங்க ஸ்கூல் டீச்சர்ஸ்-க்கு டிசைன் பண்ணி நீ தைத்து குடுத்தாகூட போதும்.” என்க, ஐந்தாம் வகுப்பு படிக்கும் கவி “அம்மா எங்க மேம்கிட்ட சொல்லவா? அவங்க டிரஸ்ஸூம் தச்சி கொடுப்பிங்களா?, என்றாள்.
“அப்பா என்ன சொல்றீங்க நீங்க? நல்லா படிச்சி வேலையில இருக்கற நீங்களே இப்படி சொல்றீங்க. அப்ப பாட்டி படிக்காதவங்க சொல்றத என்ன பண்ண. அப்பா படிக்கறது பணம் சம்பாதிக்க இல்லை. அறிவை வளர்க்க, “ என்ற யோகன் “பணம் மட்டும்தான் வாழ்க்கையாப்பா? இத நான் உங்ககிட்ட எதிர்பார்க்கலப்பா. “என்றான்.
“தங்கம் நாம தூங்கலாம் வா. “என்ற சுஜியை ஒட்டிப் படுத்தான் யோகன். மறுநாள் காலையில் ஜெய், “சுஜி என்னோட பேப்பர் கட்டை திருத்திட்டயா? கொண்டு வா. நான் இன்னைக்கே பசங்களுக்கு மார்க்-க கொடுத்துடறேன், என்க, உடனே “”ஐய்யய்யோ எங்க அம்மாவே சோம்பேறி. வேல செய்ய தெரியாதவங்க, ஏன் எதுவுமே தெரியாத தத்தி. அவங்ககிட்ட கொடுத்ததுக்கு பதிலா நீங்களே திருத்தியிருக்கலாம், இல்லையினா அதிபுத்திசாலியான உங்க அம்மாகிட்ட குடுத்து திருத்தியிருக்கலாம்,” என்ற யோகன். “அம்மா வாங்க எங்களுக்கு லஞ்ச் பேக் பண்ணிட்டு சாப்படலாம்.. “ கையோடு சுஜியை அழைத்துச் சென்றான்.
ஜெய் தன் வேலை நடக்காததால் முகம் தூக்கி சுஜியிடம் சொல்லாமல் தன் பெற்றோரிடம் மட்டும் போய்வருவதாக சொல்லிச்சென்றான்.
பள்ளிக்கு சென்ற சுஜியின் வாடிய முகம் பார்த்த காய “சுஜி சாரிமா நேற்று நான் கொஞ்சம் யோசிச்சிருந்திருக்கனும். சாருங்க வண்டியில வைச்சிருந்தா ஒரு கஷ்டமும் இல்லாம புக்ஸ் ஸ்கூல் வந்திருக்கும்’, என்றாள். “ ராஜ மாதா எப்ப ஊருக்கு போறாங்க? அதுக்கு அப்புறமாவது ரிலாக்ஸா இருப்பியா? “ என்க
“காயு நான் எல்லாரையும் கண்ணைமூடிக்கிட்டு நம்பிடறேன்னு திட்டுவாயே அது நூறு சதவீதம் உண்மை. நீ என்னைய சரியா கணிச்சிருக்க. என்னைய மட்டுமில்ல எல்லாரையும் சரியா புரிஞ்சிவச்சிருக்க. நான் படிச்சிக்கிட்டே இருக்காம பசங்களுக்கு சொல்லிக்குடுத்தா நல்ல மார்க் எடுப்பாங்களாம். எனக்கு தெரிந்த தையல், ஆரி வேலையை பார்த்தா பணம் வருமாம். நான் படிக்கறது வேஸ்டாம். உங்க அண்ணன் ஒரே அட்வைஸ். அப்பவும் பணம், பணம் ச்சே ஏன் தான் வாழறோமோன்னு இருக்கு”, என்றாள் சுஜி.
காயு உடனே “ சுஜி பசங்க மார்க் எல்லாம் அண்ணன் பாப்பாரா? மாட்டாரா? ஏன்னா நூத்துக்கு மேல மார்க் போட முடியாது பாரு, அவங்க இப்பவே நூத்துக்கு நூறுதான. வாத்தியார் அவரே குழம்பிட்டாருன்னு நினைக்கிறேன். மொதல்ல அவர கவுன்சிலிங் அனுப்பு. எல்லாம் சரியாகும்”, என்றாள்.
“நீதான் கவிஞர் கவிதாயினி அப்படின்னு சொல்லிட்டயா சுஜி? “ எனக் கேட்க “நான் சொல்லனுமான்னு யோசிக்கிறேன். சொன்னா இன்னும் பல புது பிரச்சனைகள் உருவாகும். அமலாக்கத்துறையை கூட கொஞ்சம் ஏமாற்றலாம். ஆனா எங்க வீட்டு சர்வாதிகாரிய ஏமாற்ற முடியாது. நான் முதன்முதலில் வாங்கிய பரிசுத்தொகையிலிருந்து கடைசியா பெற்ற சன்மானம் வரை கணக்கு காமிச்சு அத என் மூத்தார் சம்சாரத்திற்கு பங்கு கொடுத்து சந்தோசப்பட முற்றும் துறந்த ஞானியா நான்? சம்பளம் வாங்கற நான் புத்தகத்திற்கு செலவு பண்ணா தண்டச்செலவு, ஆனா என்னோட சம்பள பணத்தை என் மூத்தார் பசங்க பிறந்தநாள் கொண்டாட, தண்ணியடிக்க செலவு பண்ணா சரி, என்ன கொடுமை காயு இது? அவரை ஏதோ சொல்லி கார்னர் பண்றாங்க. “ என்றாள்.
“சுஜி நீயா இது? பணத்தை பங்கு போடுவாங்கன்னு எப்படி சொல்ற?,
“இதை பற்றி நான் அவரிடம் கூட பேசியதில்லை. எங்க கல்யாணத்திற்கு முன்னாடியே நாம டீச்சர் வேலைக்கு போயிட்டோம் உனக்கு ஞாபகம் இருக்கா?”
“ஆமா உங்க கல்யாணமே நீ வேலைக்கு போறதால தானே நடந்தது. பவுனு பணத்தையெல்லாம் பத்தி பேசவே வேணாம். பொண்ணு குடுத்தா போதும்னு சொல்லித்தான கல்யாணம் பண்ணிட்டு போனாங்க. “
“அப்ப அது பெருமையா தெரிஞ்சது, ஆனா இப்போ கொடுமையா தெரியுது. ஏன்டா வேலை கிடைச்சதுன்னு இருக்கு. இந்த வேலை இல்லாம இருந்திருந்தா இந்த புதைகுழியில மாட்டியிருக்க மாட்டேன். எல்லாம் என்னோட கெட்ட நேரம். “ என்க
காயு “சுஜி என்ன நடக்குது ஏன் இப்படி எல்லாம் பேசற” “ பணம், பவுனு பத்தி பேசாம இருந்தது அவங்க தந்திரம். முதல் மாசம் சம்பளம் வந்துடுச்சா சுஜி? ஒரு சீட்டு கட்டணும் அப்படின்னு கேட்டாங்க “
“அப்புறம் “ என்றாள் காயு. தன் நினைவடுக்கில் சுஜி அந்த நாளுக்கே பயணித்தாள்.
“சுஜிமா சம்பளம் போட்டுட்டாங்களா?” என்று சுசிலா கேட்க
“ இன்னைக்கு மாசக் கடைசி நாள். தனியார் ஸ்கூல்ல வேலை செய்ற ஜெய் சம்பளம் வாங்கிட்டு வந்து தந்தாச்சி. கவர்மெண்ட்ல இன்னும் போட்டிருக்க மாட்டாங்களா? “ என்றாள் ஜெயந்தனின் அண்ணி கீதா.
அவ சொந்தத்துல ஒரு பெண்ணை பார்த்து வைக்க ஜெய் சுஜியை பிடித்திருக்கு என்று சொல்லி அவள் வேலையை காரணம்காட்டி திருமணமும் செய்திருந்தான்.
தான் சொன்ன பெண்ணை திருமணம் செய்யாததால் அவள் தனிக்குடித்தனம் செல்லக் கேட்க, சுசிலா அவளிடம், “எனக்கு மட்டும் அவள பிடிச்சிருக்கா என்ன? அவளோட ஒரு சில வருசம் ஒன்னா இருந்தா அவ சம்பளத்தை வாங்கி நாலஞ்சு ஏக்கர் நிலம் வாங்கிடலாம். பெரிய வீடு கட்டிடலாம். யோசிச்சு சொல்லு,” என்க அவளும் சம்மதித்தாள்.
“பேங்க் அக்கவுண்ட்ல போட்டுட்டாங்க.” என்றாள் சுஜி. “விஜயன்கிட்ட ஏடிஎம் கார்டு குடுமா சீட்டு கட்ட பணம் வேணும். எடுத்துட்டு வரட்டும் “ என்று சுசிலா சொல்ல
சுஜி தயங்கியபடி “ஏடிஎம் கார்டு நான் வாங்கவே இல்ல. எங்க ஸ்கூல் பக்கத்துல பேங்க் இருக்கறதால லஞ்ச் பீரியட் ல போய் பணம் எடுத்துக்குவேன்.“ என்க, சுசிலா, கீதா இருவர் முகமும் வாடியது.
“சீட்டுக்கு எவ்வளவு பணம் வேணுமுன்னு சொன்னிங்கன்னா நாளைக்கு நான் எடுத்துட்டு வரேன். “ என்றாள் சுஜி.
“சம்பளம் எவ்வளவு வரும்? சீட்டு போக மிச்சம் இருக்குற பணத்துல என்னோட வேண்டுதல நிறைவேத்தனும்” என்றார் சுசிலா.
என்ன வேண்டுதல்? யாருக்கு வேண்டுதல்? ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். வேண்டுதல் பலமானது போல… அறிய நேரம் கூடி வரவில்லை…. நாமும் சற்றே காத்திருப்போம் தோழிகளே..