தன் குழந்தையை விட பணமே பெரியதென பேசும் கீதாவின் மனநிலையை எண்ணி அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். அதைவிட பவனை கையோடு இழுத்துச் செல்லும் சுஜியின் பதட்டம் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
குழந்தை விஷ பால் குடித்து இறந்ததை ஜஸ்ட் லைக் தட் போல சொல்லும் அவளும் ஒரு தாயா இந்த பூமியில் என பார்த்தனர்..
ராகினியின் கணவர் சுபாஷ் விஜயனிடம் வந்து, “ விஜி நிறைய இடங்களில் இதுபோல பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கிறது, பிறந்தபின் கொல்லறதுன்னு பெண் சிசு கொலைகள் பரவலா இருந்த காலக்கட்டம் அதுன்னு உன்னால இவங்கள மன்னிக்க முடியுமா?”
“ உன் அம்மா, மனைவி ரெண்டு பேருமே இதுல சம்பந்தபட்டிருக்காங்க. உங்க அப்பாவும் இந்த சிசு கொலையில உடந்தை. நீ என்ன பண்ண போற? கேஸ் குடுக்கிறயா? எவிடென்ஸ் இப்ப நீங்க பேசுனதை ரெகார்ட் பண்ணிண வீடியோ இருக்கு. உன் முடிவு என்ன?” தயக்கமாய் கேக்க
“ இனிமேல கொழுந்தனாரு சம்சாரத்த கொலை பண்ணப்போயி தன்னோட குழந்தைக்கே விசம் வைச்சாளே கீதா,அவளோட பையன் அப்படீம்பாங்க. இதையும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க” என காயுவின் கணவன் கண்ணன் சொல்ல,
“இதே சுஜிக்கு அதை கொடுத்து அவ உசுர விட்டிருந்தாலும் இப்படித்தான் பேசுவிங்களா? அவ சொன்னத கவனிச்சிங்களா இல்லையா?”
“சுஜியதான் கொல்ல ட்ரை பண்ணியிருக்கா, தவறுதலா குழந்தை பலியாயிடுச்சி. இப்படி அடுத்தடுத்து எத்தனை பேர் சுஜிக்காக, சுஜியை காப்பாத்த உசுர கொடுக்கனுமுன்னும் சொல்லிடுங்க? உங்களுக்கு எல்லாம் இந்த கொடுமையோட சீரியஸ்னஸ் தெரியல.” என்ற காயு
“சுஜி கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரங்கூட இங்க ஒழுங்கா சாப்பிடல. இப்பவும் இங்க வந்தா இவங்க மூணு பேரும் ஏறக்குறைய பட்டினியா தான் ரிட்டர்ன் ஆவாங்க.”
“ இது ஜெய் அண்ணாவுக்கும் வீடுதான? ஆனா அவர் பெட்டர் ஹாப் இங்க நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியல என்ன வாழ்க்கை அவங்களுக்கு?”
“இங்க மட்டுமில்லை அங்க அவங்க வீட்டுலயும் அவள நிம்மதியா ஒரு நேரம் சாப்பிட விட்டாங்களா இந்த ராட்சசிங்க? வகை வகையா இவங்க கொட்டிக்குவாங்க. ஆனா அவ சாப்பிட வந்தா பிச்சைக்காரிய பேசறதுபோல பேசுங்க. ஆனா இதுங்கதான் சோத்துக்கு வழியில்லாம எல்லாத்தையும் அந்த கழிசடைக்கு கொட்டிகுடுத்துட்டு சுஜிகிட்ட பிச்சை எடுத்ததுங்க. பேசறப்போ பாருங்க பிரிட்டிஷ் மகாராணி மாதிரி பேசறத…”
“ச்சே இதுங்கள பேசி நம்மோட தரத்தை குறைச்சிக்குறோமோன்னு அவ்வளவு கேவலமா இருக்கு. இந்தம்மா இவ்ளோ நடந்தும் குறுக்க வந்தான் கௌசிக்குன்னு, அவங்க ஊருக்கு போறத தடுக்க வருது. விட்டா அவரோட இதுவே குடும்பம் நடத்தும்போல ச்சே என்ன பொம்பள?” காயு கோபமாக புலம்ப
“காயு நீ சொல்றது உண்மையா? சுஜி ஒரு வாரங்கூட இங்க முழுசா நிம்மதியா சாப்பிடலயா? ஏம்மா சுஜி இத எங்ககிட்ட சொல்லல? ஒரு வேல எனக்கு மட்டுந்தான் தெரியலயா? ஜெய் உனக்கு தெரியுமா?” விஜயன் கேக்க
“அண்ணா ஏதோ பிரச்சனை போகுதுன்னு தெரியும். ஆனா இங்க சுஜி சாப்பிடறதே இல்லன்னு அவ மயங்கி விழுந்து ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டு நமக்கு தகவல் தெரிஞ்சி நாம பதறியடிச்சி போனோமே அப்பதான் எனக்கு தெரியும். அதுக்கப்புறந்தான நீங்க வீடு பாத்து தனியா வச்சிட்டிங்க. அவளே பிரச்சனைய பத்தி சொல்லாதப்போ நானென்ன சொல்லன்ன விட்டுட்டேன்?” ஜெய் சமாளிக்க
“ என்ன செய்யட்டும் நீயே சொல்லு? உன் மனசுக்கு பிடிச்ச பொண்ண, அவங்க அப்பாவோட நீ இன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்தயே எதுக்கு?”
“ அந்த பொண்ணு உசுருக்கு நாளைக்கு யாரு காரண்டீ குடுப்பா? நீ கொடுத்தாலும் உங்கம்மாவும் எங்கம்மாவும் சோறும் போட மாட்டாங்க ஒன்னும் போட மாட்டாங்க. வேணும்னா போட்டுத் தள்ளுவாங்க. ஏற்கனவே நல்ல இடமா உன்ன வித்து பணம் வாங்க பேசி வச்சிருப்பாங்க. கேட்டுப்பாரு.” விரக்தியாக விஜயன் பேச
“அப்பா உங்களுக்கு என்ன தோணுதே அத செய்ங்கப்பா. எங்களுக்காகன்னு கண்ணன் அங்கிள் சொன்னமாதிரி பாக்காதிங்க. இனி இவங்க கைல தண்ணீ வாங்கி குடிக்க கூட பயப்படனும். யாரும் நம்ம வீட்டுக்கு பயமில்லாம வருவாங்களா? இத்தனை வருசம் சுஜிமா இதை எப்படி பொறுத்துபோனாங்க?” என்றவன்
“ நீ யாரு? கீதாவோட வாரிசாச்சே அப்புறம் நடிக்க சொல்லியா தரனும்?”
“எம்மா பொண்ணு நீ யாரு எவருன்னு எனக்கு தெரியாது ஆனா நீயும், உங்குடும்பமும் நல்லா இருங்கனுமுன்னு நினைச்சா இவங்க இருக்குற திசைக்கே ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிடு அப்படி போயிட்டன்னா பொழப்ப. இல்ல… இவனோடதான் வாழ்க்கையின்னு முடிவு செஞ்சா நல்ல காஸ்ட்லீ ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக்கோ. ஏன்னா இவங்க பஸ்ட் கைய வைக்க நினைக்கிறது நம்மோட கருப்பைல தான்.”
“ சுஜி தப்பிச்சிட்டா. நீ…. காலந்தான் பதில் சொல்லனும்…” காயு கோபமாக ஆரம்பித்து விரக்தியாக முடிக்க
கவின், “ஆண்ட்டி நீங்க சொல்றது…. ஆயாவும், அம்மாவும் இதுவும் செஞ்சாங்களா?” என்றவன்
சுபாஷிடம் திரும்பி “சார் உங்கள நா கெஞ்சி கேக்கறேன். இவங்க மேல ஆக்ஷன் எடுங்க. எனக்கு தெரிஞ்சி இன்னும் ரெண்டு கொல பண்ணி இருக்காங்க கீதாம்மா.. இல்லயில்ல இந்த கீதா…”
“நிலத்தை விக்க வைக்க எமோஷனலா ப்ளாக் மெயில் பண்ணி அந்த ஆண்ட்டியை தற்கொலை செய்ய வச்சாங்க. அந்த அங்கிள மிரட்டி எழுதி கொடுக்க வச்சிட்டு, அவரையும் விசம் குடிக்க வச்சிட்டு அந்த பணத்தையும் பிடுங்கிட்டு வந்துட்டாங்க. அந்த பணம் எங்க வீட்டுல இருக்கு. அதுக்கு நானே சாட்சி.” படபடவென கவின் ஒப்புவிக்க, சுபாஷே மிரண்டு போனார் அவன் சொன்ன செய்தி கேட்டு.
ராகினியும், காயுவும் கீதாவை பயங்காட்டி சுஜியிடமிருந்து விலக்கி வைக்க சொல்லி அழைத்து வந்திருந்தனர். இப்போது இது வேறு கோணத்தில் செல்ல, விஜயனை பார்க்க, விஜயன் யாரையும் பார்க்க முடியாமல் வேதனையில் தலைகுனிந்தான்.
“சார் இந்தம்மாவையும் கொஞ்சம் விசாரிங்க. இதுக்கும் பல விசயம் தெரிஞ்சிருக்கும். வாரத்துல மூணு நாலு தடவை ரெண்டு பேரும் மணிக்கணக்கா தனியா பேசுவாங்க. போன்லயும் பேசுவாங்க தினமும். இந்தம்மா ரூமுல எங்க யாரையுமே விடாது. இவளதவிர அங்க போனவங்க யாருமில்ல எங்கொழுந்தியா கூட போனதில்ல. அந்த ரூமயும் செக் பண்ணி பாருங்க” ஆனந்தி சொல்ல
“அண்ணி அடுத்த பாயாசம் உங்களுக்கு தான்னு முடிவு பண்ணி இருந்தாங்க போல.” கீதாவின் தங்கை ஆனந்தியிடம் முணுமுணுக்க “ஐய்யோ” என்றாள் ஆனந்தி.
கீதாவின் அம்மா, கீதாவிடம் வந்து முடியை பிடித்திழுத்து அறைந்து, “நாந்தான் உன் கொழுந்தன் கிட்ட முடிஞ்ச வரைக்கும் கறக்குறதப் பாரு போதுமுன்னு படிச்சி படிச்சி சொன்னேன் கேட்டியா? யேன் சித்தப்பன் மக என்னையவிட நல்லா பொழப்பா, நான் பாத்துகிட்டு வயிரு எறியவான்னு கேட்டு அவ பொழப்புக்கு ஒல வக்கப்போயி இப்ப என்னையும் மாட்டி விட்டுட்ட. நீ நல்லா இருப்பியா? நாசமாத்தான் போவ!” என சாபமிட்டாள்.
சுபாஷ் அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்க, பரமசிவம், சுசிலா, கீதா, அவளின் அம்மா ஆகியோரை காவலர்கள் விசாரணைக்கு இழுத்துச் சென்றனர். கீதா அம்மாவின் அறையை சோதனையிட அங்கேயும் பணமும், சில குறிப்புகளும் கிடைத்தன.
“ஏன்டீ இப்படி செஞ்சி என்னையும் மாட்டிவிட்ட? நான் பாட்டுக்கு என் மகனோட கடைசி காலத்துல நிம்மதியா இருந்திருப்பேனே, கெடுத்தயே”ன்னு திட்டிக் கொண்டிருந்தார்(ள்) கீதாவின் அம்மா.
விஜயனும், ஜெய்யும் கூனிக்குறுகி நின்றிருந்தனர் ஜெய்யின் வீட்டில் சுஜியின் முன்.
“சாரிமா சுஜி. நான் என்னோட தம்பிக்கு உதவி பண்ண நினைச்சது உன் உயிருக்கு ஆபத்தா இருந்திருக்கு. உன்னை கஷ்டப்படுத்துவாங்கன்னு தெரியும். ஆனா கொலை பண்ண பாப்பாங்கன்னு நினைக்கலம்மா. நீ கொஞ்சம் கவனமா இருந்ததால பொழச்ச, இல்லன்னா ஐய்யோ நினைக்கவே குலை நடுங்குது.” விஜயன் கண்ணீருடன்
“நானும் இவ்வளவு மோசமா இருப்பாங்கன்னு எதிர்பாக்கல. ஏதோ கசாயம், கர்பப்பையை புண்ணாக்கிடும் அப்படின்னு ரகசியமா பேசுனதை நான் கேட்டேன். அதற்கப்புறம் இவங்க இருக்கிற வீட்டுல பச்ச தண்ணீகூட குடிக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டு காயுகிட்ட சொன்னேன்.”
“காயுவும் அண்ணாவும் அங்க வீடெடுத்து தங்கினாங்க. நான் ஸ்கூல்விட்டு வரும்போதே எனக்கு ஏதாவது சமைச்சி ரெடியா வச்சிருப்பாங்க அம்மா. அவங்க வீட்டுல சாப்பிட்டுட்டு வந்துடுவேன். காலை, மதியம் ரெண்டு வேளைக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வருவா. இப்படியே பல மாசம் ஓட்டினேன்.”
“ நான் இங்க சாப்பிடலன்னு எங்க என்னோட சம்பள காசில வெளிய சாப்பிட்டிருவனோன்னு ரெண்டு பேரும் உங்க தம்பிகிட்ட சொல்லி பிக்கப் அன் டிராப்பெல்லாம் செய்ய வச்சாங்க. இந்த மண்ணாந்தையும் நாம நம்ம பொண்டாட்டிகிட்ட பேசவே கூடாதுனு சொல்ற அம்மாவும், அண்ணியும் ஏன் வண்டியில கூட்டிட்டு போக சொல்றாங்கன்னு யோசிக்கவும் இல்ல நான் சொல்றத காதுகொடுத்து கேக்கவும் இல்ல.”
“ஒரு வாரம் ஸ்கூல் லீவ். என்னை எங்கேயும் வெளிய போக விடாம உங்க தம்பிய எங்கிட்ட சண்டை போட வச்சி பட்டினி போட்டப்போதான் நான் மயங்கி விழுந்து, டாக்டர் உங்க தம்பிய திட்டி உங்க வலுகட்டாயத்தில நாங்க தனியா போனது. இதுல உங்க தம்பி முன்னால நடிப்பாங்க பாருங்க…. ஆஸ்கார் அவார்ட் வாங்கறவங்க இவங்ககிட்ட டியுசன் வரனும்.” என்றாள் சுஜி.
“கண்ணா நீயும் இதெல்லாம் தெரிஞ்சும் ஏதும் சொல்லல. ஏன்டா உனக்குமா என்மேல நம்பிக்கை இல்லை” விஜயன் கேக்க
“சுஜிதான் ஜெய்யே நம்பல. என்னைய புரிஞ்சிக்கல. விடுங்கண்ணா எனக்கு நான் கேக்கும் போது சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுங்க நான் பாத்துக்கிறேன். என்னையவே குடும்பத்தை பிரிக்க பாக்கறேன்னு ஜெய்ய சொல்ல வச்சிட்டாங்க. வேற ஏதோ சொல்லியும் அவர கார்னர் பண்றாங்க. அதனால நானே பாத்துக்கிறேன்னு சொல்லிடுச்சி. அதனால அத ஹெல்தியா வச்சிக்க எங்களால ஆனத பண்ண ஆரம்பிச்சோம்” என காயு சொல்ல
“விசாரணை நடக்கும். பாக்கலாம் இன்னும் என்னென்ன விசயத்தை மறைச்சி வச்சிருக்காங்கன்னு” என்ற விஜயன் அமைதியானான்.
ஜெய் சுஜியை பார்த்தபடி இருக்க, சுஜி அவனை பார்க்காமல் தவிர்க்க மனதுக்குள் அவன் மன்னிப்பு கேட்டால் என்னவாகுமென யோசிக்க ஆரம்பித்தான். சுஜியை போல அவனே மனதுக்குள் பதில் தர
“சுஜி நீ என்னை….” ஜெய் பேச வர , “உங்கள.. சொல்லுங்க… உங்கள என்ன செய்ய? உங்க அம்மா சொன்னது வேத வாக்குதான, ஏன் இன்னும் எங்கள விட்டு வச்சிருக்கிங்க? எப்ப போட்டுத் தள்ள போறிங்க?”
“ நீங்க இனி மேல் போர்சன்ல இருந்துக்குங்க. என்னை இனியாவது நிம்மதியா இருக்க விடுங்க. தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும். உங்களமாதிரி தப்புக்கு ஜால்ரா போட்டவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகுது? ஐய்யோ இவ்ளோ நடந்திருக்கா? எனக்கு ஒன்னும் தெரியலன்னு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டுட்டு போயிடுவீங்க” என்றாள் சுஜி கோபமாக.
“மாமா பணம் என்னோடதுதான? போனா போகுது. அந்த நிலத்தை வித்தவங்க மகன்/மகள்கிட்ட திருப்பி குடுத்துடுங்க. அது வேணாம் நம்ம பசங்களுக்கு.”
“ரெண்டு கோடி குடுத்து வாங்கினது சுஜிமா. அத விட சொல்றீங்க?” என்று கவின் பதற
“நான் இன்னும் ஒரு மணி நேரத்துல மூணு கோடி உங்க அக்கவுண்ட்க்கு மாத்திவிடறேன். உங்க பாப்பாவையோ, உங்கம்மாவால செத்துப்போன அந்த அம்மாவையோ உசுரோட கொண்டுவா பாக்கலாம். வந்துட்டான் பணம் பணமுன்னு” சுஜி வெறுப்புடன் சொல்ல
“பணமும் இருக்கு. நிலம் வித்தவரையும் காப்பாத்திட்டாங்க. அவர பாத்து எது வேணுமுன்னு கேட்டு குடுத்திடறேன் சுஜி. ஜெய்யிக்கு தண்டனை கொடுத்தே ஆகனுமா சொல்லுமா?” என கேக்க
“உங்கம்மா ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நான் சொன்ன பொண்ண கட்டியிருந்தான்னு சொல்லிடும். நெறய நாள் நான் நெனச்சிருக்கேன். இவங்க கண்ணுலபடாம இருந்திருந்தா நல்லா இருந்திருப்பேன்னு.”
“ நான் டிரான்ஸ்பர் கேட்டிருக்கேன். காலேஜ் லக்ச்சரர் போஸ்ட்க்கு எக்ஸாம் வருது. படிச்சிகிட்டு இருக்கேன். எதுல சான்ஸ் கிடைச்சாலும் நாங்க மூணு பேரும் போறோம். என்னோட பசங்கள இவரை நம்பி விட நான் தயாராயில்லை.” என சுஜி சொல்ல
“சுஜி பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு? பிரச்சனைக எல்லாம் முடிஞ்சதுன்னு நான் சந்தோசமா இருந்தா நீ புதுசா ஒரு குண்டை தூக்கி போடற. அந்த எக்ஸாமுக்கு நீ அப்ளை பண்ணியிருக்கியா? என்கிட்ட சொல்லி இருந்தா நானும் போட்டிருப்பேன் இல்ல. ஏன் சொல்லல?” காயு கேட்க
“டிரான்ஸ்பர் கேட்டிருக்கையா? எங்கள விட்டுட்டு இருந்துடுவியா? அண்ணா எப்படி உங்களவிட்டு இருப்பாங்க” காயு புலம்ப
“இங்கையே இருந்தா நான் பைத்தியமாவே ஆயிடுவேன். நான் எழுதறத நிறுத்தி மாசக்கணக்காகுது. படுத்தா தூக்கம் கூட வர மாட்டங்குது. கொஞ்ச நாள் பிரிஞ்சிருப்போம். ரெண்டு பேருக்கும் நிம்மதி கெடச்சா நிரந்தரமா பிரிஞ்சிடுவோம். பார்ப்போம் காலம் என்ன வச்சிருக்குன்னு” மனதுக்குள் கேள்வியும் அவனே பதிலும் அவனேன்னு சொல்லிகிட்டு இருந்தவன், திடீரென
“அண்ணா சுஜிய போக வேணாமுன்னு சொல்லுங்க. சுஜி இல்லாம என்னால இருக்க முடியாது. எனக்கு பைத்தியமே பிடிச்சிடும். என்கூட இருந்தே எனக்கு தண்டனை தர சொல்லுங்க.” என கத்த சுஜி முறைத்தாள்.
“சுஜி நீயே போக சொல்லிடுவ போல. சுஜியோட ரத்தம் வரைக்கும் அட்டையாய் உறிஞ்சிகிட்ட பின்னால அவங்க மூணுபேரும் இங்க இருந்து தொரத்திவிட நினைக்கிறியா பங்கு? உன்னை என் தங்கச்சிக்காக பங்கு போட்டுடுவேன் பாத்துக்க” என கண்ணன் விளையாட்டாய் மிரட்ட ஜெய் திருதிருவென முழித்தான்.