கீதா தன் தாயும், தம்பியும் குடுத்த பணமும் நகையும்தான் நிலம் வாங்க கொடுத்தேன் என கூற கீதாவின் குடும்பத்தினர் மனம்பதற பார்த்திருந்தனர்.
“நம்ப அம்மாகிட்ட பணமில்லை. உன் தம்பியும் ரியல் எஸ்டேட் பிஸ்னல நஷ்டப்பட்டு சில வருஷமா கடன்ல இருக்கான். ஸோ உனக்கு பணம் எப்படி வந்ததுன்னு சொன்னா நல்லது.” என கீதாவின் தங்கை கேக்க
“நீ யாரு என்னை கேள்வி கேக்க? எப்படியோ வந்துச்சி? அது எதுக்கு உனக்கு? வந்திங்களா, பூசைய பாத்திங்களா, அன்னதானத்துல சாப்பிட்டிங்களா போயிக்கிட்டே இருக்கனும். ஒன்னத்துக்கும் வக்கில்லனாலும் வாய் மட்டும் வக்கனையா பேச முடியுது.” என தங்கையிடம் சண்டைக்கு போக
“தங்கச்சிதான கேக்ககூடாது. நானு கேக்கலாமில்ல. ஏது அந்த பணம்? யாரு குடுத்தது? எதுக்கு குடுத்தாங்க? நீ அதுக்கு பதிலா என்ன செஞ்ச? சொல்லு நல்ல குடும்பத்துல பொறந்தவ செய்யறதா இதெல்லாம்? பணம் எங்கிருந்து வந்துச்சி? எல்லாரும் உன்னை ஒரு மாதிரி பாக்கறது தெரியுதா இல்லையா?” கீதாவின் தம்பி கத்த
“நீ சத்தம் போட்டா நான் சொல்லனுமா? அது என் பணம். நான் சம்பாதிச்சது.” என தெனாவெட்டாக சொல்ல
“என்ன தொழில் பண்ணி சம்பாதிச்சீங்க? சொல்லுங்க என்ன தொழில்? உங்க வீட்டுக்காரர் இருபது ஏக்கருக்கு மேல விவசாயம் பாத்து சம்பாதிக்க முடியாதத நீங்க எப்படி சம்பாதிச்சிங்க?” ஆனந்தி எமோஷனலாக தாக்க
“என்ன தொழில் செஞ்சா உங்களுக்கு என்ன? உங்களவிட நான் பல படி மேல இருக்கேன்னு உனக்கு பொறாமை. அதான் இப்படி பேசற” என பேச
“எனக்கு சொல்லு பதில. எப்படி இவ்வளவு பணமும், நகையும் உன்னிடம் வந்துச்சி? இது நல்ல வழியில உனக்கு வந்ததுன்னா ரைட் ராயலா நீ பதில் சொல்லாமே? பதில் சொல்ல நீ தயங்குற ஒவ்வொரு நொடியும் இங்க இருக்கிற ஒவ்வொருவரும் உன்னை, உன் நடத்தையை சந்தேகமா பாக்கறாங்க. ஏன் எனக்குமே நீ இத சட்டத்துக்கு புறம்பா சம்பாதிச்சது போலதான் தோணுது. நீ பதில் சொல்லித்தான் ஆகனும்.” என விஜயன் கேக்க
“என்ன நான் நடத்தை சரியில்லாதவளா? உங்க தம்பி போல காதலிச்சது ஒருத்தர, கல்யாணம் பண்ணிக்கிறது வேற ஒருத்தரன்னு இருக்கறவளா நானு? “ ஜெய்யை இழுத்தால் ஜெய்யோ இல்லை சுசிலாவோ விஜயனை கட்டுப்படுத்துவார்கள். அல்லது சுஜி ஜெய்யுடன் சண்டைக்கு கிளம்பினால் இதை சமாளிப்பது எளிதென அவள் நினைத்து பேச
“ஜெய் விசயத்துக்கு அப்புறம் பஞ்சாயத்து சுஜி வச்சிக்கட்டும். இப்போ நீ சொல்லு கொலை செஞ்சியா? கொள்ளை அடிச்சியா? கள்ள நோட்டு மாத்தி குடுக்கிறயா? இல்ல வேற வெளிய சொல்லமுடியாத தொழில் செஞ்சியா? பணம் ஏது?” விஜயன் விடாது கேக்க
ஜெய்யும், சுஜியும் அமைதியாக இருக்க, கீதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இவனை இனியும் விட்டு வைக்க கூடாது. நாம திசை திருப்பி விடறதுல இன்னைக்கு இவங்க நேரா வக்கீல பாக்க போகனுமுன்னு முடிவு செய்து
“என் தம்பி குடுக்கல உங்க தம்பிதான் நகை குடுத்தான். எங்கம்மா பணம் கொடுக்கல. உங்கம்மாதான் பணங்குடுத்தாங்க. போதுமா?” என கீதா கத்த
“உனக்கு என் தம்பி எதுக்கு நகை கொடுக்கனும்? நம்பறமாதிரியே இல்லயே.” விஜயனும் சலிக்காமல் கேக்க
“அவன் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண காதலிச்சான். அப்புறமும் நான் சொன்னமாதிரி என் தங்கச்சிய இல்லனா நர்மதாவை கட்டிக்க முடியாதுன்னு சொல்லி இவள கட்டிக்கிட்டான். அதையெல்லாம் இவகிட்ட நான் சொல்லாம இருக்கதான் இதெல்லாம் எனக்கு கொடுத்தான் போதுமா?”
“சரி எங்கம்மா எதுக்கு உனக்கு பணம் குடுத்தாங்க? அதுக்கு என்ன காரணம்? அதையும் சொல்லு எல்லா விடுகதையையும் இன்னைக்கு ஒன்னா விடிவிச்சிடலாம்” விஜயனின் கேள்விக்கு
“அங்க உங்க தம்பி பொழப்பு நாத்தமா நாறுது அதவிட்டுட்டு என்னை கேள்வியா கேக்குறிங்க. உங்க தம்பி வாழ்க்கை உங்களுக்கு முக்கியமில்லயா? அத பாருங்க மொதல்ல” எகத்தாளமாக கீதா பேச
“நீ அத பேசாம எங்கம்மா எனக்கு தெரியாம பணம் எதுக்கு குடுத்தாங்க சொல்லு?” விஜயன் விடாமல் கேக்க
“தன்னோட தம்பி பொண்ண கட்ட அவங்க நினைச்சாங்க. ஆனா உங்க தங்க கம்பி தரகர் கொண்டுவந்த ஜாதகத்தோட இருந்த இவ போட்டோ பாத்துட்டு இவமட்டுந்தான் இந்த உலகத்துல பொண்ணா தெரியறா. கட்டுனா இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த காலுல நின்னான்… லவ் பண்ண பொண்ண காரணங்காட்டி இவள வேணாமுன்னு சொல்லிப் பாத்தாங்க.
இவன் கேக்கல. அதனால கல்யாணம் முடியிற வரைக்கும் அது நடக்காம நிறுத்த நிறைய திட்டம் போட்டாங்க. ரகசியமா முயற்சி பண்ணாங்க. கல்யாணம் முடிஞ்சி இங்க வந்த பின்னாடி அவசோத்துல கல்லு, மண்ண போடறது, தண்ணீ ஊத்தி வைக்கறது, உப்பள்ளி போடறதுன்னு நிறைய வேல செஞ்சாங்க. அதையெல்லாம் நான் யாரிடமும் சொல்லாம இருக்க கேக்கறப்போ பணம் கொடுத்தாங்க போதுமா?”
“நான் என்ன செஞ்சேன், ஏன் செஞ்சேன்னு, இவ்வளவு கேள்வி கேட்டியே! இப்ப உங்கம்மா தம்பிய கேக்க முடியுமா உன்னால? வந்துட்டான் நாந்தான் இங்க நாட்டாமைன்னு. எல்லாம் என் தலைவிதி.” கீதா வெறி கொண்டு கத்தினாள்.
விஜயன் சுசிலாவை பார்க்க, சுசிலா தலைகுனிந்தபடி “ யேன் பையனுக்கு எனக்கு பிடிச்ச பொண்ண கட்டுனுமுன்னு ஆசப்பட்டது தப்பா? இவ சொன்னா உங்க செல்லபையன் யாரோ ஒரு புள்ளைய லவ் பண்றானாம் அப்படின்னு…. நான் நம்பல. இவ எங்கிட்ட பந்தயம் கட்டினா? அவ சொல்றது உண்மையானா அவ சொல்ற பொண்ண கட்டனுமுன்னு. நானும் சின்னவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்னு பந்தயம் கட்டினேன். அவன் வூட்டுக்கு வந்தப்போ இவ கண்டுபிடிச்ச மாதிரி கேக்க, அவன் ஆமாம் அண்ணி. அவ எங்க காலேஜிக்கு-ன்னு சொல்ல ஆரம்பிக்கும்போதே நான் அழுவ ஆரம்பிக்க அவன் கத்தன்னு பிரச்சனை ஆயிடுச்சி. அவன் பையகூட எடுக்காம காலேஜுக்கு அப்பவே கிளம்பி போயிட்டான். அவன் பைல இருந்த புத்தகத்துல ஒரு போன் நம்பர் இருந்துச்சி. அந்த நம்பருக்கு போன் போட்டு திட்டிட்டு வச்சிட்டோம்.” சுசிலா கோர்வையாக சொல்லிக்கிட்டே வர
காயு கத்த ஆரம்பித்தாள், “நீங்கதானா அது? பேசறது யாரு என்னன்னு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசுன…. நீ மட்டும் இல்லையில்ல நீங்க மட்டும்….ஆமா உனக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிகிடக்கு இதுக்குமேல? ஏன்டீ பண்ணாடைகளா? ஒரு நம்பர் இருந்தா அது லவ் பண்ற பொண்ணாதான் இருக்கனுமா? ப்ரெண்டா, தெரிஞ்சவங்களா இருக்க கூடாதா? நீங்களல்லாம் மட்டும் நல்ல குடும்பத்துல பிறந்தவங்க…. இல்ல… நாதேறிங்க ச்சே.” என கொதிக்க
விஜயன் “காயுமா அமைதியா பேசு” என்க
“இவளுங்க பேசினது எங்கிட்ட…அதனால என் கோவம் நியாயமானது..யாரு எதுக்கு பேசறாங்கன்னு தெரியாம இவளுங்க பேசினத கேட்டு பிரஷர் ரெய்ஸாயி மயக்கம் போட்டு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும்..இவளுங்க மட்டும் அன்னைக்கு யேங்கையில கெடச்சிருந்தாளுங்க கண்டந்துண்டமா வெட்டி காக்காயிக்கு போட்டிருப்பேன். வந்துட்டாளுங்க சீவி சிங்காரிச்சிகிட்டு. இவளுங்க சுஜிய பேசறாளுங்க. சுஜிய நிமிர்ந்து பாக்க தகுதி இருக்கா இந்த பஞ்சபரதேசிங்களுக்கு?” கண்ணன் இழுத்து பிடிக்காமல் விட்டிருந்தால் காயு அவர்கள் இருவரையும் புரட்டி எடுத்திருப்பாள்.
“ஏன்டா எவளோ ஒருத்தி என்னைய இப்படி கேவலமா பேசறா பாத்துகிட்டு சும்மா நிக்கிறியே?. அப்ப அவளுக்கும் உனக்கும் என்ன..” கீதா சொல்லிமுடிக்கும் முன் காயு அவள் மீது பாய்ந்து அடித்திருந்தாள்.
“இப்பதான் உங்களுக்கு உங்க பொண்டாட்டியோட லச்சணம் தெரியுதா? என்ன மனுசி?” அடுத்து என்ன பேச தெரியாமல் திணறினாள்.
காயு சிரித்துக்கொண்டே, “ஜெய் அண்ணா, அங்கதான் நீங்க சுஜிய பர்ஸ்ட் பாத்திங்களா? அங்க பாத்தும் இந்த பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமுன்னு ஒத்த காலுல நின்னிங்களா? ஸோ ஸேடு.” சொல்ல
“ராஜன அடிச்சது சுஜியா? விஜிண்ணா நீங்களாவது சொல்லுங்க?” என மகேஷ் பதற
“இப்ப தெரியுதா பையன் ஏன் பம்மறான்னு” விஜயன் கிண்டல் செய்ய
கீதா தலையை பிய்த்துக் கொண்டாள். அவள் நினைத்தது ஒன்னு. நடந்தது ஒன்னு.
“சரி சரி இந்த கூட்டத்திலேயே பாகம் பிரிக்கறது பத்தி பேசிடுங்க” கீதா இடைபுக
“எங்க பாகத்தை பிரிக்க நீ யாரு? நானும் என் தம்பியும் ஏற்கனவே பிரிச்சி எழுதிக்கிட்டோம். நீ உன்னோட இருபது பவுன மட்டும் பாரு போதும்,” விஜயன் சொல்ல
“அப்போ நான் குடுத்த பணம், நகை என்னாச்சி? பாகம் பிரிச்சத எங்கிட்ட ஏன் சொல்லல? நானு உன் பொண்டாட்டி. எங்கிட்டயே இத சொல்லாம மறச்சிருக்க? அப்ப நான் யாரு உங்கூட்டு வேலக்காரியா?” ஆவேசமாய் கீதா கேக்க
“எந்தம்பி யார கட்டிக்கனுமுன்னு முடிவு பண்ண நீ யாரு? அவன பெத்தவங்க இருக்காங்க, கூட பெறந்தவன் நானு மலையாட்டமிருக்க நீ யாருடீ அதிகாரம் பண்ண? என்ன பெத்தவங்க என்னோட இருக்கனுமா வேணாமான்னு சொல்ல நீ யாருடி? உன்ன கட்டிக்கிட்டு வந்தா இங்க இருக்கிறது முழுசும் உனக்கே வரனுமுன்னு பேராசை பட்டா நடக்குமா? அதுக்காக நீ பண்ணின வேலைக்கு ஆதாரம் இருக்கு. சுஜி ப்ரெண்டு ராகினி வீட்டுக்காரர் யாருன்னு தெரியுமா? எஸ்பி. சுஜி கேஸ் குடுத்தா மொத்தமா ஊத்தி மூடிடலாம். ஜெய், சுஜிகிட்ட வாங்கினது எல்லாத்தையும் வட்டி போட்டு குடுத்துட்டேன்.இனிமேல இருக்கிற இடம் தெரியாம இருக்கிறதா இருந்தா இங்க இரு. இல்லனா உங்கம்மா வீட்டுக்கு போ? ஏம்மா ஆனந்தி இவள கூட்டிட்டு போறிங்களா?” விஜயன் கேக்க
ஆனந்தி பதில் சொல்லும் முன்னமே, கீதாவின் அம்மா
“ஐயோ வேணாம். இவ என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துடுவா…. இவ சொன்ன பொண்ண அவனும் கட்டல, ஆனந்தியும் இவ பந்தா காட்றத பாத்து சும்மாவே இவ சொல்லறத கேக்கமாட்டா. இனி சுத்தமா மதிக்கவும் மாட்டா. அதனால அங்க இவ சரிப்பட்டு வரமாட்டா. இவள நீங்களே கூட்டிட்டு போயிடுங்க.” என்று கூற கீதாவின் சப்தநாடியும் நடுங்கியது பயத்தில் அல்ல. தான் ஏமாற்றி வாங்கிய அனைத்தையும் தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டதால்.
மாட்டினால் விஜயனை சொல்லி தப்பிக்க நினைத்து லாக்கர் வாங்காத தன் மடத்தனத்தை எண்ணி அழுதாள். எல்லோரும் அவள் செய்த தப்புகளை நினைத்து அழுகிறாள். இனி திருந்தி விடுவாள் என நினைக்க,
“என்னை ஏமாத்திட்டல்ல நீ. நான் உங்கிட்ட இந்த விசயங்களை மறைத்தாலும் பணம், நகையெல்லாம் உன் பெயரில்தானே லாக்கரில் வைத்திருந்தேன். ஒரு வார்த்தை என்னிடம் கேக்காமல் என்னை மோசக்காரி போல நினைக்க வச்சிட்டில்ல. நான் உங்கம்மா சொன்னதுபோல கல்யாணத்துக்கு முன்னாடி யாருன்னு சொல்லாம அவகிட்ட பேசினேன். ஜெய் ஏற்கனவே காதலிச்சது, அவங்கம்மா பிரச்சனை பண்ணிணது, இப்போ கட்டினா இவளைதான் கட்டுவேன்னு நிக்கிறது எல்லாத்தையும் சொன்னேன். அவ ஏதுவுமே பேசாம வைச்சிட்டா. அவ இவனவிட்டு போனா சொத்தும் அவளோட போயிடும். ஜெய் பொண்டாட்டியும் இல்லாம, சொத்தும் இல்லாம கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சிதான் இப்படி செஞ்சேன். என் நேரம் எங்க போனாலும் முட்டுசந்தாவே வருது. நான் நல்லதுதான் நினைச்சேன்” அவள் விளக்க
இப்போ சுஜி, “மாமா என்னை மன்னிச்சிருங்க. இதுக்கு மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது. பதினேழு வருசம் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக நான் அமைதியா இருந்தேன்” என்க
“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா” என காயு கூவ, கண்ணன், மகேஷுடன் கோபாலும் ஆனந்தியும் சேர்ந்து ஓவென கத்தினர்.
சுஜி ஏன் இப்போ மன்னிப்பு கேட்கிறாள்? என்ன செய்ய போகிறாள்? சுசிலா, பரமசிவமாவது திருந்துவார்களா? இவ்வளவுநாள் ஏன் சுஜி அமைதி காத்தாள்?