குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, விஜயனோடு ஊர் செல்ல வேண்டும். இனி ஜெய்யுடன் இருப்பது சாத்தியமில்லை என்பதே சுசிலாவிற்கு மிகப் பெரிய அவமானமாக, தண்டனையாக இருந்தது. இங்கே எந்த வேலையும் இல்லை. அதிகாரமாக நினைத்ததை சாதித்து பழகியவர் அவர்.
ஜெய்யை போல விஜயனை கட்டுபடுத்தி தங்களுக்கு கீழே வைத்திருக்க முடியாது. சுஜியை பேசினால் யோகன், கவியை தவிர தடுக்க ஆளில்லை. வாய்க்கு வந்ததை பேசியே பழகியவர். இனி ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசனும். சும்மாவே கீதாகிட்ட நிறைய கிடைக்க போகுது. இதில் பேசினா கீதா கொலவெறியில ஏதாச்சும் செஞ்சாலும் செஞ்சிடுவா.
நேற்று இரவு தன்னிடம் பேசுவதாக நினைத்து விஜயனிடம் பேசியவளும், அதற்கு முன் ஜெய்யிடம் பேசியவளும் ஒருத்தியே என்பதை பேசியதை கேட்ட சுசிலாவால் நம்பமுடியவில்லை. ஏன் பேசியதை கேட்ட யாராலும் நம்ப முடியாது. அவ்வளவு குழைவு, இணக்கம் கீதாவின் குரலில் சுசிலாவிடம் பேசும்போது.
விஜயனிடம் பிடிபட்டது இன்னும் தெரியாது போலும். நேற்றே அவனிடமும் பேசினாள்.
“ஏங்க போன காரியம் என்ன ஆச்சி? ஏமாத்துகார அண்ணங்கிட்ட இருந்து உங்க கூட்டாளிக்கு சொத்த பிரிச்சி குடுத்திங்களா? இப்படி சொந்த தம்பியவே ஏமாத்தறவன் நாளைக்கு சொத்துக்காக அவன போட்டுத்தள்ளவும் தயங்க மாட்டான். எதுக்கும் போலீஸுல கம்பளைண்ட் குடுத்து வைக்க சொல்லுங்க நீங்களும் கொஞ்சம் பத்திரமா இருங்க.”
“நாளைக்கு கோவில் பூஜைக்கு எதுக்குங்க இவ்ளோ பேர கூப்பிட்டிருக்கீங்க? நாம கிடா வெட்டி கறி விருந்தா போட போறோம்? அதெல்லாம் கவின் கல்யாணத்தப்போ செஞ்சிடலாம் அதையும் ஜெய் தன் செலவுல போடறேன்னு முன்னாடியே சொல்லிட்டாங்க.” என்க
“அடிப்பாவி இன்னும் எவ்வளவு காலம் இவங்கள ஆட்டிபடைக்க முடிவு செஞ்சிருக்க?” மனதினுள் திட்டியபடி விஜயன்,
“கவிக்கு மொட்டை போட்டு காது குத்தினப்போ விருந்து வச்சது. இப்போ நெருங்கின சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு சின்னதா ஒரு விருந்து போடலாமுன்னு ஆசை கீதா. அதான் கோவில் பூஜைய சாக்கா வச்சி கூப்பிட்டுட்டேன்.” விஜயன் சொல்ல
“பூஜை சாமான் லிஸ்ட் அனுப்பங்க. ஜெய்கிட்ட சொன்னா அங்கிருந்தே வாங்கிட்டு வந்துடுவாங்க.” என கீதா சொல்ல
“இல்லமா கீதா. நானே ஏற்பாடெல்லாம் பண்ணிட்டேன். காலை சாப்பாடு கோவில்லதான். கிளம்பி ரெடியா இருங்க. நான் வந்து கூட்டிட்டு போறேன். ஆமா ஊருக்குள்ள என்னமோ பேசறாங்கன்னு போன்ல சொன்னாங்க என்ன பேசறாங்க? யாரை பத்தி பேசறாங்க?” விஜயன் கேக்க
“அது…. ஜெய் இங்க நிலம் வாங்கி இருக்காங்களாம்.. ரெண்டு கோடியாம். நாம வாங்கும்போது பணமில்லைன்னு சொல்லிட்டு இப்ப எங்கிருந்து பணம் வந்து வாங்குனாங்களோ தெரியலை. இங்க அந்த மூலவீட்டு செல்வி அக்கா கேக்கறாங்க இன்னும் எல்லாம் பொதுவுல இருக்கும்போது எப்படி உன் கொழுந்தன் தனியா நிலம் வாங்குவாரு? உன் வீட்டுக்காரர் இதையெல்லாம் கேக்க மாட்டாரான்னு? அவங்க சம்பளம் அவங்க வாங்கறாங்க, உங்களுக்கு ஏன் வலிக்குதுன்னு நல்லா கேட்டுட்டுதான் வந்தேன்”
“உங்ககிட்ட சொல்லியிருந்தா நீங்க வேணாமுன்னா சொல்ல போறிங்க? ஏன்தான் இப்படி உங்கள ஒதுக்கி விடறாங்கன்னு எனக்கு புரியல. உங்க அப்பாம்மாவுக்கும் வேலைக்கு போய் பணம் சம்பாரிக்கிற மகனும், மருமவளுதான் பெருசு. அவங்கள தான் தலையில வச்சி ஆடறாங்க. இங்க வந்து ஒரு பத்து நாளாச்சும் இருங்கன்னு நானும் ஒவ்வொரு தடவையும் கெஞ்சறேன். ஆனா வர மாட்டேங்கிறாங்க. இங்க வந்தா உங்களுக்கு அதிக செலவு ஆகுமாம். இவிங்களுக்கு செலவு பண்ணி பாத்துக்க முடியாத அளவு நாம வக்கத்து போயிட்டோமான்னு எனக்கு அழுகையா வரும். யாருக்கிட்ட இத சொல்ல முடியும். உங்களுக்கோ உங்கம்மா,அப்பாவை ஏதாவது சொன்னா பயங்கரமா கோபம் வரும். நான் ஏதாவது சொல்லி நீங்க சண்டை போட்டா நம்ம மரியாதையை நாமே குறைச்சிக்கிற மாதிரி ஆயிடும். அதனால நான் அமைதியா போயிடறேன்” என்றாள்.
“உங்கள மதிக்கிறவங்களா இருந்தா நிலத்தை பத்தி உங்ககிட்ட சொல்லி விசாரிச்சிருக்கலாம். விலைபேச உங்கள முன்னாடி வச்சிருக்கலாம். கிரயம் பண்றப்போ இன்னும் நமக்கு பாகம் பிரிக்கல, அதனால பொதுவுல அப்பா, அம்மா யாரு பேருல எழுதலாமுன்னு கேட்டிருக்கலாம். இவ்வளவு ‘லாமும்’ செய்யாம விட்டுட்டாங்க.”
“நீங்கதான் அப்பா, அம்மான்னு சின்ன சின்ன விசயத்துக்கும் அவங்கள முன்னவச்சி செய்யறிங்க. ஆனா அவங்ககூட உங்களுக்கு சொல்லல. நாளைக்கு யேன் சொந்த பந்தமெல்லாம் கேக்குமே., ஏன்
இப்படி நிலம் வாங்குனதை அவங்களுக்கு சொல்லலன்னு. நான் எப்படி சொல்லுவேன் எங்களுக்கே ஒரு பார்மாலிட்டிக்குகூட சொல்லலன்னு.” அழ ஆரம்பித்தாள்.
“கீதா நீயேன் உனக்கு சொல்லலன்னு சொல்ற? யாரு கேட்டாலும் யேன் வீட்டுக்காரர்தான் வாங்கிவச்சாருன்னு பெருமையா சொல்லு. எனக்கு தெரியாம எதுவும் நடக்காதுன்னு உனக்கு தெரியாதா? ஜெய் எங்கிட்ட சொல்லி நா பாத்து வச்சதுதான் இது.” என்க
“அப்போ ஏன் என்கிட்ட சொல்லல? நீங்க எல்லாம் ஒரே குடும்பம் நானும் எம்பசங்களுந்தான் வேற அப்படிதான? அவங்களும் சொல்லல நீங்களும் சொல்லல. அப்ப எனக்கென்ன மரியாதை?” என சண்டையை ஆரம்பிக்க
“இத நாளைக்கு நேரில பேசலாம், இப்ப கால் கட்பண்றேன்” விஜயன் கட்செய்துவிட்டு பார்க்க பெருமூச்சிவிட்டனர் அனைவரும்.
யோசித்துக்கொண்டே சுஜி வர, சுசிலா அழுதுகொண்டும், சுஜியை திட்டிக்கொண்டும் வந்தார்.
“இவளால இப்போ என்ன நடக்கப்போகுதோ தெரியல. பணம்தான போனா போகுதுன்னு நினைக்காம என்ன பொம்பள இவ? இவ அப்பன் வீட்டு காசயா கேட்டாங்க?” என பேச
“பின்ன அதென்ன உங்கப்பன் வீட்டு காசா? இல்ல உன் மருமவ கீதாவோட அப்பன் வீட்டு காசா? நீங்க வெட்டி முறிச்சி சம்பாரிச்சிங்களா? மாசம் முழுசும் பாடம் நடத்தி, எழுதிபோட்டு, படிக்க வச்சி, பரிட்சை வச்சி, பேப்பர் திருத்தி அவங்க சம்பாரிச்ச காச நீயும் உன் மருமவளும் சொந்தம் கொண்டாடி அள்ளி கட்டிக்க பாக்கறீங்களே, நீங்களாம் பொம்பளங்களா? பிசாசுங்க கொள்ளிவாய் பிசாசுங்க. வாய திறக்காம வரனும். வாய திறந்த நானும் உனக்கு போட்டியா உன்னவிட மோசமா பேசுவேன் பாத்துக்க.” விஜயன் பல்லைக்கடித்துக் கொண்டே சுசிலாவுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல சுசிலா கப்பென வாயை மூடினார்.
சுஜி மௌனமாய் வர விஜயன், “சுஜி நீ தைரியமா இருமா. நான் பாத்துக்கிறேன்.”என்றவன் தன் மனதுக்குள் “எப்பவும் இவங்களுக்கு இவங்க பேரை தவிர வேறொன்னும் தெரியாதும்மா. அதையே திரும்ப, திரும்ப சொல்லிப்பாங்க சுசிலாம்மாவும், கீதாவும்….. குடியகெடுத்தவ, விளங்காதவ, கேடுகெட்டவ இப்படி சொல்லி சொல்லியே இவங்க கடந்த காலத்த நினைச்சிப் பாக்கறாங்க. ஏன்னா எங்கம்மாவை கல்யாணம் பண்ணிட்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கப்பாவை குடும்பத்திலிருந்து பிரிச்சி சொத்தெல்லாம் வித்து நடுத்தெருவுல நிக்க வச்சாங்க. இவங்கள விட ஒரு பெஸ்ட் குடிகெடுத்தவள பாக்கமுடியாது. ஓ கீதாவ விட்டுட்டேனோ? மாமியா, மருமவ ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் ஜோடிதான், ஆனா குறுக்க மாட்டினது என்னமோ அப்பாவியான நாம” சொல்லிக்கொண்டான்.
பரமசிவத்திடம் இரவே விஜயன் பேசியிருந்தான், கிட்டதட்ட மிரட்டி இருந்தான். “கீதாவுடன் சேர்ந்து ஏதாவது செய்வதுபோல தெரிந்தால் நாங்க ரெண்டு பேருமே உங்கள கண்டுக்க மாட்டோம். பணமிருக்குன்னு ஆட முடியாது. இருபதாயிரத்துக்குதான் உங்க மருமக பாப்பா. இவ்வளவு கொடுத்தபோதே உங்கள இங்க வர விடாம தொரத்தியிருக்கா பாத்து நடந்துக்குங்க அப்புறம் இந்த வயசுல மறுபடியும் தனி குடித்தனம் போக வேண்டியதுதான்” என அவருக்கு வாய்பூட்டு போட்டிருந்தான்.
“ஜெய் நீங்க கோவிலுல இறங்கி வேலைய பாருங்க. நான் அங்க கொஞ்சம் வேப்பிலை அடிச்சி கூட்டிட்டு வர்றேன், கோவில் பூஜை முடியும் வரை கீதா ஆரம்பிக்காம இருக்க. அவ பேசறப்போ அவளோட சொந்தபந்தம் எல்லாரும் இருக்கனும். அவங்களும் அவள பவுச பத்தி தெரிஞ்சிக்கட்டும்…இங்க நம்ம குடும்பத்துல கும்மி அடிச்சாயில்ல, அவ வீட்டுல அப்படி நடந்தா எப்படி இருக்குமுன்னு காட்டலன்னா நாம என்ன மனுசங்க? புழு பூச்சிகூட அதோட மறுப்பை காட்டுது. இன்னைக்கு நாம யாருன்னு இவங்களுக்கு காட்றோம்.” என்றான் விஜயன்
“கீதா பூஜையை முடியும் வரை எதுவும் பேசாதே. பலமான வேண்டுதல் வச்சிருக்கேன். நாளஞ்சி மாசமா நானும் கவுச்சி ஏதும் சாப்பிடாம இருந்திருக்கேன். மறுபடி குடும்பமே இப்படி விரதம் போல இருக்கமுடியாது..கவினுக்கு வேலை கிடைக்கனுமுன்னு நீயும் வேண்டுதல் வை. கவின், பவனுக்கு அப்புறம்தான் மத்ததெல்லாம், ஞாபகம் வச்சிக்கோ.” அன்பு கட்டளையிட்டு அழைத்து வந்தான்.
வந்த லக்கேஜை பாத்த கீதா ஏதோ கேக்க வர, “இதெல்லாம் அம்மா பேக் பண்ணி கொண்டு வந்தாங்க. வந்து பாத்துக்கலாம். வா நாமளே லேட்டா போனா நல்லாயிருக்காது. சாவி எங்க? குடு நான் பூட்டிட்டு வர்றேன்”, எதையும் பிரிக்க விடாமல் கையோடு கூட்டிச் சென்றான்.
“அத்த அங்க வேற பை வச்சிருக்காங்களா? மாத்திரை மருந்து இருக்குமில்ல? கேளுங்க நாம இந்த பேக்கிங்ல இருந்து எடுத்துட்டு போவோம்” கீதா ஏதோ ஒரு பையில்தான் புடவை இருக்கும், தேடி எடுத்து கட்டிட்டு சுஜி முன்னாடி கெத்தா போகனுமுன்னு பம்ம, விசயத்தை தெரிஞ்சிகிட்ட விஜயன்
“வாடி வா. இன்னும் ஒருசில மணி நேரம், அதுக்கு மேல உன் ஆட்டம் செல்லாது” என மனதுக்குள் சொல்லிக்கிட்டு,
“அதெல்லாம் சுஜி தனியே எடுத்து வச்சி இருக்கும். கிளம்பு நேரமாயிடுச்சின்னு அம்மா பூஜையை ஆரம்பிக்க சொல்லிட போறாங்க.” அவசரபடுத்த வேற வழியேதுமில்லாமல் கிளம்பினாள்.
பூஜை திருப்தியாய் முடிய, ஏற்கனவே ஏற்பாடு செய்த அன்னதானமும் முடிந்து கோவில் மண்டபத்துல உட்கார்ந்து பொதுவாக பேச ஆரம்பித்தனர். கீதா பூஜை செய்த பூசாரிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, கொண்டுவந்த சாமான்களை பவனுடன் வண்டில் வைக்க சென்றாள்.
“ஏப்பா ஜெயா என்னமோ நிலம் வாங்கி இருக்கியாம்? ஊருக்குள்ள பேசிக்கிறாங்க உண்மையா அது?” விஜயன் யோசனைபடி மகேஷ் விசயத்தை மெதுவாக ஆரம்பிக்க,
கீதாவின் தம்பி “என்ன நிலம் வாங்கியிருக்கிங்களா? எங்ககிட்ட ஏன் சொல்லல? சொந்த பந்தத்துக்கிட்ட சொல்லீட்டு வாங்கனும் அதுதான முறை. எங்கள மதிக்கறதே இல்ல எங்க அக்கா அங்க மூத்த மருமவ ஞாபகம் இருக்கா இல்லயா?” என கேட்டு
“இன்னும் பாகம் பிரிக்கல. அப்பறம் எப்படி தனியா வாங்கினாங்க? எங்கக்கா, மாமா வாங்கும்போது எங்ககிட்ட சொல்லிட்டு வாங்கினாங்க, அது மரியாதை தெரிஞ்சவுங்க செய்யறது.” என பேசிக்கிட்டே போக
“இருடி உனக்கு இருக்கு. எங்க முன்னாடியே குரல ஒசத்தி கை நீட்றியா நீ” என நினைத்த விஜயன்
“சொன்னா உங்க அக்காவுக்கு குடுத்தது போல பணம் நகை குடுப்பிங்களா சொல்லுங்க? நான் நீங்க போட்ட நகை, உங்கம்மா குடுத்திருந்த பணத்தை வச்சி வாங்கினேன். அதனால உங்ககிட்ட சொன்னேன். என் தம்பி வாங்கியதுக்கு உங்ககிட்ட எதுக்கு சொல்லனும்?” விஜயன் கேக்க
“என்னப்பா இவங்க போட்ட இருபது பவுனுக்கா இம்புட்டு கேள்வி கேக்கறாங்க?” கீதாவின் தங்கை கணவன் கோபால் கேக்க
“இருபது பவுனா? என்கிட்ட எம்பொண்டாட்டி நூத்திமுப்பத்தஞ்சி பவுன் எங்கம்மா வீடு போட்டதுன்னு குடுத்திருக்கா. அறுபது லட்சம் எங்கம்மா குடுத்தாங்கன்னு குடுத்திருக்கா. நீங்க வெறும் இருபது பவுனுன்னு சொல்றிங்க. என்ன சகல நடக்குது? ஏம்மா தங்கச்சி உனக்கு தெரியுமா?” என கீதாவின் தம்பி மனைவியை கேட்டான்.
“என்னண்ணா சொல்லறிங்க? நாங்களே கடனுக்கு வட்டி கட்ட முடியாம நிலத்தை விலை காட்டிட்டு இருக்கோம். உங்களுக்கு தெரியாதா? உங்க வீட்டம்மா அதுலயும் பங்கு கேட்டு சண்டை போட்டது ஊரறிஞ்ச விசயம். ஆனா இப்போ நீங்க சொல்லறத பாத்தா…. ஏங்க உங்க பெரியக்காவுக்கு கொடுத்த நகை ஏது? அப்போ என் நகையெல்லாம் இந்த கடங்காரிதான் வாங்கினாளா? “ என கீதாவின் தம்பி மனைவி ஆனந்தி ஆரம்பிக்க
“அண்ணி இருங்க. அம்மா அண்ணன் வியாபாரத்துல நஷ்டமாச்சே நீங்க அக்காக்கு குடுத்த பணத்தை குடுத்திருந்தா அந்த கடன குடுத்தவங்களுக்கு கௌரவமா குடுத்திருக்கலாமே. ஏன் இப்படி எல்லோரையும் மூச்சந்தியில நிறுத்தினிங்க?” என கீதாவின் தங்கை கேக்க
“ஆனந்தி நான் நகையை பேங்க்லதான் வச்சி பணம் வாங்கினேன். நான் அக்காவுக்கு ஒரு பைசா கூட அவ கல்யாணம் ஆன காலத்தில் இருந்து கொடுத்தது இல்லை. நம்பு ஆனந்தி” என கெஞ்சினான்.
கீதாவின் அம்மா, “எனக்கு செலவுக்கே அப்பப்போ ஆயிரம், ரெண்டாயிரமுன்னு அவதான் தர்றா. இதுல நான் அறுபது லட்சத்துக்கு எங்க போவேன்?” என சரண்டர் ஆக
கவினுக்கு ஏதோ புரிய “அப்பா எனக்கு ஒன்னும் புரியல என்ன நடக்குதுன்னு? சித்தப்பா நிலம் வாங்கினத பேசாம நம்ம கதை எதுக்கு?” என கேக்க
அவனை பார்த்துக்கிட்டே, “கவின் பொதுவுல பாகம் பிரிக்காம நான் எப்படி நிலம் வாங்கினேன்னு விளக்கிட்டு அவன இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்.” என சொல்லவும் கீதா வரவும் சரியாக இருந்தது.
“என்ன பேசிகிட்டு இருந்திங்க? நான் வந்ததும் அமைதியா என்னை பாக்கறிங்க”என கேக்க
“கீதா நாம நிலம் வாங்க பணம் எங்கயிருந்து வந்துச்சின்னு கேக்கறாங்க. நீயே சொல்லு. நமக்கு பணம் ஏது?” விஜயன் கேக்க
“இது என்னங்க கேள்வி? என் தம்பி எனக்கு குடுத்த நகை, அம்மா குடுத்த பணம் எல்லாம் வச்சிதான் வாங்கினோம். இத யாருங்க கேட்டது?”என கீதா கேக்க
“நாங்கதான் கேட்டோமுன்னு” கீதாவின் பிறந்த வீட்டு ஆட்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சொல்ல
கீதாவுக்கு இப்போதான் இருக்கிற இடமும் தான் சொன்ன பதிலினால் ஏற்படபோகும் விளைவுகளும் புரிந்தது.
“ஏது அவ்வளவு பணம் உன்னிடம்? யாரிடம் திருடினாய்?” கீதாவின் தங்கை சத்தமாக கேக்க
கீதா இதை சத்தியமா எதிர்பாக்கல. எல்லாரும் கிளம்பி போன பின்னாடி மாமனார், மாமியாரை மட்டும் வச்சிகிட்டு சண்டை போட அவ பிளான் போட்டிருந்தா.
“ஏய் நான் உன் அக்கா. நான் திருடியா? என்ன பேசற?” என திருப்பி கொடுக்க,
“அவ பழைய இருபது பவுன உன் மகளுக்கு சீர் செய்ய மாத்தி எடுத்துக்க சொல்லி குடுத்துட்டேன்னு சொன்னா. அவகுடுத்தத வாங்கிகிட்டு இப்படி மோசமா பேசற. இது நல்லாயில்ல பாத்துக்க?” என்றார் சுசிலா திடீரென.
“என்ன யேன் புள்ளைக்கு இவ பவுனு குடுத்தாளா? யேன் புள்ளைக்கு எட்டு வயசுதான் ஆகுது. இவ அதுக்குள்ள சீர் வச்சேன் சொல்லறா. நீங்களும் நம்பியிருக்கிங்க.. அவகிட்ட நான் இதுவரை பத்து பைசா கூட வாங்குனதில்லை” கீதா தங்கை தெளிவா சொல்ல
விஜயன் திரும்பி மனைவியை பார்த்தான்.
கீதாவின் அம்மாவிற்கு விஜயனின் தோரணையில் பயம் வந்தது. ஏதாவது செய்து கீதாவை இங்கேயே விட்டு செல்ல முடிவு செய்தார். தன்னோடு வந்தால் மற்ற பிள்ளைகள் வாழ்வையும் நாசம் செய்திடுவாள். என்ன செய்ய? யோசிக்க ஆரம்பித்தார்.
கீதாவோ தன் பிறந்த வீடு உடனிருக்கும் தெம்பில் தெனாவட்டாக பதில் கொடுக்க ஆரம்பித்தாள்.