சொர்க்கம் உன்னருகில் 11

     சுசிலா, பரமசிவத்திடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஜயன் வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தான். சுசிலா விஜயனை கூப்பிட பின்னாடியே வந்தும் அவனை பிடிக்க முடியல.

  வேகமாக போய் ஜெய்யின் ரூம் கதவை தட்ட திறந்த சுஜி, என்னவென்று பார்த்தாள் சுசிலாவை. சுசிலா கதவு திறந்தவுடன் உள்ளே வந்து பெட், பாத்ரூம், கதவின் பின்னால என அறையெங்கும் தேடிவிட்டு,

    “டேய் யோகா, உங்க பெரியப்பன் வீட்டவுட்டு போயிட்டான். உங்கப்பன் எங்க போனான் ?  அவனும் ஒளிஞ்சி விளையாடறானா”ன்னு, கேக்க

    “அப்பா அவரு ரூமுல இருப்பாரு. இது எங்க ரூம்..அங்க போயி நீங்களும் அவரும் விளையாடுங்க யாரு கேக்க போறா? இப்போ எதுக்கு இங்க வந்து டிராமா போடறிங்க. உங்க மகன் ஜெய், அவரோட பொண்டாட்டி, புள்ளைங்ககூட இல்ல.  போயி நிம்மதியா தூங்குங்க. இன்னைக்கு நல்லா தூக்கம் வருமே உங்களுக்கு.” என்றான் யோகன்.

       “உங்கப்பன கூப்பிடுடா யோகா. யேன் மவன் சாமியாரா போறானாம் டா. அவன தடுத்து நிறுத்தனும்.” என்று சுசிலா சொல்லி அழ,

    “உங்க மகன நீங்க தடுங்க, என்னமோ பண்ணுங்க. எதுக்கு வந்து எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க? நீங்க போயி தேடுங்க, எங்கப்பா எதுக்கு வரனும்?” சூடாக கேட்டான்.

     “உங்கப்பன் என்னோட புள்ளடா. அவன் அண்ணணுக்கு ஒன்னுன்னா அவந்தான வரனும்? அதுக்கு ஏன் இத்தனை கேள்வி கேக்கற?” சுசிலா கத்த,

      “எங்கப்பன பணங்கேட்டு நச்சரிக்கிறப்போ அவரு உங்கபுள்ளன்னு தெரியலயா? பணத்தை பிடுங்கறப்போ பக்கத்து வீட்டுக்காரனா தெரிஞ்சாரா எங்கப்பா? பணபிசாசுகளான நீங்களும் உங்க ஆச மருமவளும் போயி தேடுங்க. அர்த்த ராத்திரியில கூட பணத்துக்காக இப்படி நாடகம் போடறீங்களே? இப்ப விஜியப்பாவ தேட பணம் வேணுமா? அதுக்கும் எங்கம்மாதான் குடுக்கனுமா? இங்க பணமெல்லாம் இல்லை வேணும்னா தேடி பாத்துக்கங்க.” என சுஜி, கவியை இழுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்து  ஷோபாவில் உட்கார்ந்தான்.

    சுசிலா தலையில் அடித்துக்கொண்டே வந்து, “ ஏங்க இங்க ஜெயனையும் அவன் ரூமுல காணோம். ஐயோ யேன் மவன நான் மறுபடியும் பாப்பனான்னு தெரியலையே?” என்க

    வேரொரு அறையில் இருந்து வெளியே வந்த ஜெய் சுசிலாவிடம் “அம்மா இப்ப என்ன இங்க நாடகம் போட்டுகிட்டிருக்க? இப்ப பணமா, நகையா, இல்ல யேன் உசுரா? எதை குடுத்தா உனக்கு விடியும்? பசி அடங்கும் சொல்லு ஒரெடியா குடுத்து உங்கள எல்லாம் தலைமுழுகறேன். என்னை நிம்மதியா இருக்கவே விடகூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான எனக்கு கல்யாணமே பண்ணிவச்சிங்க. அப்புறம் இன்னும் என்ன தயக்கம் சொல்லு. என்ன பெத்த கடனுக்கு அதையும் கட்டி முடிக்கறேன்.” என சத்தமாக கத்த

    பரமசிவம் ஓடி வந்து ஜெய் கையை பிடித்து, “ என்னை மன்னிச்சிடுடா. இத அப்புறம் பேசலாம். விஜி வீட்ட விட்டு போயிட்டான், சாமியாரா போறேன்னு சொல்லிட்டு…. அவன தேடி கண்டுபிடிடா ஜெய். ஓடுடா” என்க

     “டேய் யோகா நீயும், அம்மாவும் ஒரு பக்கம் போங்க, நான் பஸ் ஸ்டாண்ட் பக்கம் தேடறேன். போன் குடு” என்க

     “பீரோல திருடி, புடுங்கி வச்ச பணமிருக்கும். அத ஒரு பக்கம் போவ சொல்லுங்க. அவங்க ரெண்டு பேரையும் ஆளுக்கொரு பக்கம் போயி தேட சொல்லுங்க. நாங்களும், நீங்களும் எதுக்கு போகனும்? நம்மளவிட பணந்தான் பெருசுன்னு நினைச்சாங்க. அப்புறம் நாம எதுக்கு? நம்ம போன் எல்லாம் விஜியப்பாகிட்ட கொடுத்தோமே. இங்க எங்க இருக்கும்?” என்றான் யோகன்.

     திபுதிபுவென வீதியில் பலர் ஓட, வெளியே ஓடிய சுசிலா, அவர்களில் ஒருவரை நிறுத்தி “ஏன் எல்லாரும் இப்படி ஓடறீங்க? என்ன ஆச்சி?” எனக் கேக்க

     “அம்மா யாரோ ஒருத்தர் வேகமா நடந்து போயிட்டிருந்தாராம், அவர்மேல லாரி மோதி அந்த இடத்திலேயே செத்து போயிட்டாராம். யாருன்னு அடையாளம் தெரியலயாம். அதான் பாக்க ஓடறோம்.” சொல்லிட்டு அவர் ஓட,

    சுசிலா அழ ஆரம்பித்தார். பரமசிவமும் சுசிலாவுடன் நடுவீதியில உக்காந்து அழ, ஜெய் வண்டில வேகமாக போனான்.

   யோகன் சுசிலாவிடம, “ உங்க பீரோ சாவி குடுங்க. பணமிருந்தா எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் யாரையும் கூட்டிட்டு வந்திடலாம். வாங்க போய் பணத்தை எடுத்துகிட்டு எமங்கிட்ட போலாம். பாவம் யாரு பெத்த புள்ளையோ? எங்க விஜிப்பா இப்ப வருவாங்க. அங்க அடிபட்டது எங்க விஜிப்பாவுக்கு இல்ல. நீங்க போயிருந்தா கண்டிப்பா இன்னைக்கு எங்களுக்கு விடுதலை கிடைச்சிருக்கும். அந்த அதிஷ்டம் கூட எங்களுக்கு இல்லாம போச்சி. கவி இந்த விஜிப்பாவுக்கு அறிவே இல்ல, இருந்திருந்தா இவங்கள தொரத்தி விட்டுட்டு அவர் இங்க இருந்திருப்பாரு. தம்பியவே தன் மெத புள்ளையா நினைக்கிற அவர் எங்கே? பெத்த பிள்ளையவே எதிரியா நினைக்கிற இவங்க எங்கே?” யோகன் பொரிந்து தள்ளினான்.

     “யோகா நாமும் போலாம் வா” என சுஜி கூப்பிட

     “அம்மா அப்பா விஜிப்பாவை கூட்டிகிட்டு இப்போ வந்திடுவார். நம்மல அவ்வளவு சீக்கிரம் இவங்க விடுவாங்களா, என்ன? இந்த பதட்டத்திலே நாம போயி ஏதாவது ஆச்சின்னா இதுங்ககிட்ட உசுரோட இருக்கமுடியுமா? பணம் கிடைக்குமுன்னா விசங்கூட வச்சி குடுத்துடுங்க. அதனால மெதல்ல நம்மல நாம பாத்துகிறதுதான் முக்கியம். காயு அத்தை வீட்டுக்கு பக்கத்துலதான் ஆக்சிடன்ட் நடந்திருக்கும் போல. இருங்க பாக்கலாம்,” என்ற யோகன் அங்கிருந்த கல் மேல உட்கார்ந்தான்.

    ஜெய் வருவதற்குள் வீட்டை விட்டு சென்ற விஜயனை சற்றே பின்தொடரலாம் வாங்க.

     கத்திவிட்டு வெளியே வந்த விஜயன், காயுவை நினைத்து சிரித்துக் கொண்டே, வீதியில் வேகமாக சென்று மறைந்தான். அவன் சிரிப்புக்கு காரணம் போன் செய்தது காயு. இவனோ யாரோ சாமியாரிடம் பேசுவது போல பேச அவள் குறிக்கிடாமல் கேட்டுக் கொண்டு கடைசியா “வேகமாக பேசிட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்? ஆனா இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்படாது அந்த பனங்காட்டு நரி” என்றாள்.

     கதவை திறந்து வரவேற்ற கண்ணணும் கலகலவென சிரித்துக் கொண்டே “வாங்கண்ணா. காயுவ சாமியாரா ஆக்கிட்டிங்க. அப்ப தட்சணை எங்க? தங்கமா குடுங்க” என்றான்.

     காபி கொடுத்துவிட்டு “ஏதாவது ஐடியா, வழி கிடைச்சுதா? முட்டுசந்துல ஓடறமாறியே இருக்குமே… இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா அப்படின்னு தொடச்சிகிட்டே அடுத்த ப்ளான பாக்க போகனும்.” அடிச்சி விட்டா காயு.

    “அண்ணா பணத்தை, நகையை திருப்பி குடுத்தே ஆகனுமா? ஏன் கேக்கறேன்னா இப்பவாச்சும் அவங்கள வாழவிடச் சொல்லுங்க சுஜி சமாளிச்சிடுவா. உங்கம்மா, கீதாவோட தொந்தரவு இல்லன்னாவே அவங்க சந்தோசமா பொழச்சிக்குவாங்க. சுஜி இன்வெஸ்ட் பண்றதுல புலி. அவ பார்ட் டைம் ஒர்க்ல கிடைக்குற பணத்தை எல்லாம் மியுச்சுவல் பண்டுல போட்டு வச்சிருப்பா. என்னோட கணிப்பு சரின்னா ஜெய் அண்ணாவுக்குகூட முழுசும் தெரியாது. தெரிஞ்சா அதுங்க மூணும் பேச்சுவாக்குல போட்டு வாங்கி புடுங்கிக்கும். ஸோ சம்பள பணத்தை மட்டுமே கணக்குல கொண்டு வந்திருப்பா.” என்றாள் நம்பிக்கையுடன்.

     “எங்கம்மா எங்கிட்ட பேச பேச யோகன் டென்ஷன் ஆயிட்டான்

நான் மட்டும் பேசியிருந்தா என்னை சமாதானம் செய்திருப்பாங்க. யோகனுக்கு பதிலே சொல்ல முடியல. கீதாம்மா பேரை சொல்லிகிட்டு இவங்க நடிக்கறாங்க அப்படின்னு அவங்க முன்னாடியே சொல்லிட்டான் பதிலே பேச முடியல.” என்றான் விஜயன்.

     “யோகன் இப்படி பேச ஆரம்பிச்சதில் இருந்தே உங்கம்மாவும், உங்கவீட்டம்மாவும் இன்னும் கொஞ்ச நாள் போனா எதுவும் கிடைக்காது. இப்போ எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் புடிங்கிக்கனுமுன்னு முடிவுபண்ணிட்டாங்க. கிடைக்கற வரை லாபம்தான. வாயிலயே வடைய சுட்டு கொஞ்சமா லாபம் பாத்தாங்க?” என்றாள் காயு.

     “காயு ஜெய்ய எழுப்பி அனுப்பியிருப்பாங்க. ஜெய்யுக்கும் ஸாக் ட்ரீட்மெண்ட் தேவைன்னு நினைக்கிறேன்….. நான் பேசறேன். சுஜி, ஜெய் ரெண்டு பேரும் வாயே திறக்கல. யோகன் உன்கிட்ட எடுத்த ட்ரெய்னிங் சிம்பிளீ ஸூப்பர். சரி நம்ம அடுத்தகட்ட ப்ளான்படி கீதா மொபைல் உடைஞ்சி போச்சிதான. எப்படி நடந்துச்சி?” என விஜயன் கேக்க,

     “இந்த உலகத்துல உங்கள மாதிரி சில நல்லவங்களாச்சும் இன்னமும் இருக்காங்க. மகேஷண்ணன்தான் வேற யாரு. மலைவாழைப்பழம் அவங்க வீட்ல இருந்துச்சி. அதைவச்சி வீட்டுக்கு போயி மொபைல்ல வைரஸ் ஆப்பை ஏத்தியாச்சி. கவின் வீட்டுக்கு வர மாட்டான்ல? வந்தா சரி பண்ணிடுவான். அதுக்குள்ள உங்க வேலைய முடிச்சிடுங்க” காயு சொல்லி முடிக்க

    அரக்க பரக்க வேகமா வந்தான் ஜெய். வந்தவன், “ ஒரு நிமிசத்துல எனக்கு உசுரு போயி, உசுரு வந்துடுச்சி போ…. சொல்லிட்டு வரமாட்டையா? எங்களோட போன் எங்க?” கேக்க, அமைதியாக நீட்டினான் விஜயன்.

     ஜெய் சிசிடிவி பூட்டேஜை ஓப்பன் செய்ய, யோகன் சுசிலாவை பேசுவதெல்லாம் பார்த்திருந்தனர். “அண்ணா அவன் சொன்ன மாறி அவங்கள வெளியில அனுப்பிட்டு நீங்க இருந்திருக்கலாம்” காயு கலாய்க்க

    விஜயன் அவன் வெளியேறியது முதல் தற்போது பேசியது வரை ரெண்டு மூணுமுறை ஓட்டிப்பாத்து “காயு நாம ரெண்டு ப்ளானையும் ரெடி பண்ணுவோம். இவங்கள நம்ப முடியாது. இங்க எங்கம்மா முகத்தை பாறேன். இந்த ரியாக்ஷன் பத்தல. எங்கம்மா சுஜிமேல நிறைய வஞ்சம் வச்சிருக்காங்க போல தெரியுது” என விஜயன் கூற எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி தான் இருந்தது சுசிலாவின் பார்வை..

    “அது சுஜி அவங்க பாத்த பொண்ணில்லையாம். அவ போட்டோ பாத்தே நான் மயங்கிட்டேனாம். அவ ஆள் மயக்கியாம்”என ஜெய் சொல்ல,

    “எதே போட்டோவுலேயே  மயக்கிட்டாளா? அப்புறம் எட்டு வருசத்தை என்ன செய்ய? உங்கம்மா என்ன பைத்தியமா? அந்த கீதாகூட சேந்தா வேற எப்படி இருப்பாங்க? சுஜியைதான் லவ் பண்ணீங்க அப்படின்னு தெரியாதா?” என சிரித்தாள் காயு.

     “பங்கு பக்குவமா சிக்கிட்ட”என கண்ணன் நக்கலடிக்க

    “காயு இது சுஜிக்கு தெரியுமா? என்கிட்ட கேக்கவே இல்ல” ஜெய் கேக்க

    “சுஜிக்கு தெரியுமா, தெரியாதான்னு எனக்கு தெரியல. நீங்க அஞ்சு பேரும் எங்க பின்னாடி வருவீங்க. அது தெரியும். கல்யாணத்துல வச்சித்தான் நீங்க சுஜியைதான் பாத்திங்கன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். அத பத்தி சுஜிகிட்ட பேசமுடியாது. ஸோ எனக்கு புரிஞ்சது என்னோட….”  காயு சொல்லவருவது புரிய, விஜயனும், கண்ணணும் பரிதாபமாக ஜெய்யை பார்த்தனர்.

     “சுஜிக்கு தெரியுமுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா உங்க அஞ்சி பேரிடமும் அவ கேசுவலா பேசுவா. எங்க என்னோட ஹப்பியே உங்க விருப்பத்த பத்தி உங்க கல்யாணம் வரை எதுவும் சொல்லல” காயு தொடர,

     “அம்மா பராசக்தி என்னை மன்னிச்சிடுங்க. நம்மல பத்தி நீங்க பேசி முடிக்கிறதுக்குள்ளவே நிலா, நித்து பஸ்ட் பர்த்டேவே வந்துடுச்சி. நான் எங்க மத்தவங்கள பத்தி பேச?” கண்ணன் காயுவை வம்புக்கிழுக்க

   “ஜெய் வா போலாம். ஆமா காயு ஏன் சுஜி இவங்க யாருக்கிட்டையும் பேசறதில்ல?” விஜயன் கேள்விக்கு ஜெய் “ அவங்க வரைமுறை இல்லாம பேசும்போது நானும் கண்டிக்கல. அதனால அம்மணி எங்க யாரிடமும் பேசறதில்ல.” என்றான்.

   “அப்ப இருந்த காதல் இப்ப எங்க போச்சி அண்ணா? அதே சுஜி…. சொல்லப்போனா உங்க கஷ்டத்துல முக்கால்வாசி சுமக்கிறவ. மனசாட்சியோட சொல்லுங்க சுஜி உங்க வீட்ல எப்பவாச்சும் சந்தோசமா  இருந்திருக்காளா? இருக்குறாளா? நீங்க விட்டிருந்தா அவ மதிப்பு தெரிஞ்ச இடத்துல கல்யாணம் செஞ்சி போயிருப்பா.. ஒரு எழுத்தாளரா ஆயிருப்பா. இங்க பிஜி ஆகவே வழிய காணோம்” காயு வருத்தத்துல பேச,

   “ எனக்கென்னவோ இப்படி ஏதும் பேசிடகூடாதுனுதான் தங்கச்சி உன்கிட்ட பேசல ஜெய். அப்பவே வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசும் சுஜி”, என கண்ணன் சொல்ல

    “அப்படி அமைதியா இருந்து மட்டும் என்ன சாதிச்சா? பட்டிமன்றத்தில அவளுக்கு எதிரா பேச பயப்படுவாங்க. பாயிண்ட் பாயிண்டா பேசுவா. எப்படியும் அவ டீம் ஜெயிச்சிடும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது இதுக்கு சுஜி நல்ல எடுத்துக்காட்டு.” காயு கண்ணீர் விட பதறினர் ஆண்கள் மூவரும்.

   “காயும்மா ஐயம் சாரிம்மா. நீ சொல்லறது சரிதான். வைரத்தோட மதிப்பு தெரியாம  இங்க கூழாங்கல் எல்லாம் கூவிக்கிட்டு இருக்கு. எங்க வரவுசெலவெல்லாம் சுஜிதான். எதையுமே நானா முடிவு செஞ்சதில்ல இந்த பதினேழு வருசமா. எங்க வீட்டு பிரச்சனை தவிர வேற எதாவது சுஜி குறை சொல்லியிருக்காளா? அவள நான் எங்கவீட்டு ராணியா தான் வச்சிருக்கேன். என்னை பாத்தே எனக்கு என்ன வேணுமுன்னு புரிஞ்சிக்கிறவ சுஜி. என்னை பேசி கஷ்டப்படுத்திட கூடாதுனுதான் என்னோட பேசாம இருக்கா. நீ எங்க நல்லதுக்குதான் பேசறன்னு புரியுது இட் ஹர்ட்ஸ் மீ மோர் தென் லூசிங் லைப். ப்ளீஸ்” ஜெய் கண்ணீர் விட விஜயனின் முடிவு உறுதியானது.

  “காயு நா காலையில வரேன்மா. கண்ணன பத்திரமா பாத்துக்கம்மா. ஜெய்ய கொண்டுபோய் சுஜிகிட்ட ஒப்படைச்சிடுறேன். இல்லன்னா யோகன் கேள்வி ஒவ்வென்னும் துப்பாக்கி குண்டு துளைப்பது போல நம்மை துளைச்சிடும்” விஜயன் ஜெயனுடன் கிளம்பினான்.

        விஜயனின் முடிவுக்கு சுசிலா உடன்படுவாரா? ஸாக் ட்ரீட்மெண்ட் சரியா வேலை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.