Advertisement

மலர் – 9

“டேய் ஒன்னைய  வெட்டாம விடமாட்டே… அங்க தொட்டு இங்க தொட்டு கடசில எங்குடும்பத்த நாசம் பண்ணிட்டியே டா… நீ நல்லா இருப்பியா..” என்று அருள் வந்த கோடாங்கியை விட வேகமாய் குதித்து கொண்டு இருந்தார் தங்கராசு.

இருக்காதா பின்னே, மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் வந்து கரிகாலனும் தங்கமலரும் நின்றால், தங்கராசு குதிக்காமல் என்ன செயவார். மரகதமோ இடிந்து போய் நின்றிருந்தார்.

தங்கமலர் தலை நிமிரவே இல்லை… அவளை பொருத்தமட்டில் திருமணம் கரிகாலனோடு நடந்துவிட்டது.. அது என்ன காரணத்திற்காக நடந்தது என்றாலும் அவளது எண்ணம் ஈடேறியது.

முனியனும் அன்னமயிலின் தந்தையும், இன்னும் சிலரும் சேர்ந்து  தான் தங்கராசை பிடித்து இருந்தனர். கரிகாலனோ எதையோ ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் நின்று இருந்தான்.. அவனுக்கு துணையாய் தங்கமலரின் அண்ணன் பொன்னரசுவும் அவன் மனைவி பூமணியும் நின்றிருந்தனர்.

தங்கள் திருமணம் ஒருவரும் அல்லாமல் நடக்க கூடாது என்று விரும்பிய கரிகாலன் அவனது உற்ற தோழனான பொன்னரசுவை வரவழைதிருந்தான்.

தங்கராசு கரிகாலன் மீது இத்தனை வெறுப்பு கொண்டதற்கு பொன்னரசுவும் ஒரு காரணம்.. அவன் திருமணமான புதிதில் தந்தையோடு லேசான மனகசப்பு ஏற்பட அவ்வபோது மரகதம் தான் இருவரையும் சமாளித்து வந்தார்..

ஆனால் ஒருநாள் சண்டை முற்றிட கோவித்துகொண்டு மனைவியோடு சென்றவன் தான் அடுத்து வரவே இல்லை.. ஆனால் நடந்த பிரச்னையில் தவறு என்பது இருவர் மீதும் தான்.. புது மனைவியின் முன்பு தந்தை அப்படி கோவமாய் பேசவும் பொன்னரசுவிற்கு சலீரென்று வந்துவிட்டது..

மனைவியை அழைத்து கொண்டு சென்றவன் தான் அதன் பிறகு இப்பொழுது தான் வருகிறான்.. ஆனால் கரிகாலன், நண்பன் என்பதால் அவனோடு மட்டும் தொடர்பில் இருந்தான்.. இந்த காரணமும் சேர்ந்துக்கொள்ள தங்கராசு கரிகலானை மேலும் வெறுத்தார்..

ஆனால் இப்பொழுது அவர் விட்ட வார்த்தைகளே அவருக்கு பகையாகி போனது.. மகள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவருக்கு தெரியாதே.. ஆனாலும் அவருக்கு இந்த கரிகாலன் தான் எதோ செய்திருக்கிறான் என்று தோன்ற மேலும் கத்தினார்..

பொன்னக்கா மெல்ல “சித்தி, நல்ல விசயோ நடந்திருக்கு.. நீ ஏ மொகத்த இப்படி வச்சிட்டு இருக்க.. அங்க பாரு சித்தப்பாவா போயி எதா பேசி சரிக்கட்டு.. இங்கியாரு சித்தி நமக்கு நம்ம புள்ள வாழ்க்கத்தே முக்கியோ.. போ.. போ ” என்று மரகதத்தை உசுப்பேத்த,

அவரோ கணவரை தான் என்ன சொல்லி சரி செய்வது என்று திகைத்து போனார்..

தங்கமலரின் முகத்தை பார்த்தார்.. மனதிற்கு பிடித்தவனை மணந்தோம் என்ற நிம்மதி இருந்தபோதும் அத்தனை செழிப்பாய் ஒன்றும் இல்லை.. தலை குனிந்து நின்றவள் நின்றவள் தான்.. அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவளுடைய திருமணத்திற்கு தன் அண்ணனும் அண்ணியும் வந்தது தான்..

ஆனால் அதுவே தங்கராசிற்கு மிகுந்த கோவத்தை வர செய்தது.

“டேய் கடைசியில என் குடும்பத்தையே கெடுத்திட்டியே…. ” என்று எகிறியவரை

“நா ஒன்னு ஒ குடும்பத்த கெடுக்கல.. எல்லா ஒ பேச்சுத்தே காரணோ.. என்ன மாமா நீ புரியாம பேசுற…” என்று கரிகாலன் நக்கலாய் பேசி இன்னும் தூண்டிவிட்டான்..

“டேய்.. டேய்… யாரு டா மாமா… அது இந்த சென்மத்துல நடக்காது… நாதியத்த பைய நீ…. என்னையா மாமான்னு சொல்லுறியா….”

“ஹா ஹா என்ன மாமா நீ…. இப்ப எனக்குன்னு ஒரு குடும்பமே இருக்கு.. புரியல.. ஒ பொண்ணு தங்கமலர்.. இப்போ ஏ பொண்டாட்டி.. வீட்டுல ஒரு  பொண்ணு இருந்தாலே போது அது குடும்பமாகிடு.. இப்போ நானு குடும்பஸ்தந்தே… ” என்று தங்கமலரின் தோளை இறுக பிடித்து நின்றான்.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த தங்கமலர், கரிகாலனின் பிடியை உணர்ந்து நிமிர்ந்து தன் தந்தையின் முகத்தை பார்த்தாள்.

அவரது பார்வையோ இப்படி செய்துவிட்டாயே என்று குற்றம் சாற்றியது.. அன்னமயிலோ இப்படி நடக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

“ஊமையாட்டோ இருந்துட்டு இப்படி செஞ்சுபுட்டாளே… ” என்று அதிசயித்து நின்றிருந்தவளை மரகதம் தான்

“அடியே அன்னோ, என்ன டி ஒனக்கு இது முன்னமே தெரியுமா ?? ” என்று காதை கடித்தார்..

“ஆத்தி… அத்த…. எனக்கு நேசமா எதுவுமே தெரியாது… ”

“நேத்து நீயு அவளுந்தேன ராத்திரி ஒண்ணா சுத்துனீங்க.. ”

“அவ எதுவுமே சொல்லல அத்த.. அதுவு இல்லாம கரியண்ணனுக்கு தங்கோ மேல இப்படி எண்ணமெல்லா இல்லவே இல்ல.. தங்கோ தான் ஆசபட்டா… ” என்று அடுத்த குண்டை தூக்கி போட்டாள்.

“என்ன டி சொல்றவ… ” என்று அதிர்ந்து அன்னத்தின் முகத்தை பார்த்த மரகதம் அடுத்த நொடி தன் மகளின் முகத்தை பார்த்தார்.

அவள் முகத்தில் இருந்த பாவனையே அவருக்கு சொல்லியது, தங்கமலர் ஒன்றும் கல்யாணம் ஆன மகிழ்ச்சியில் இல்லை என்று.. மரகதத்தின் மனமோ வேகமாய் கணக்கு போட்டது.. முடிவாய் தன் கணவரிடம் வந்து நின்றது..

“ஆக, இம்புட்டுக்கு காரணோ இந்த மனுசந்தேனா.. ஐயோ இப்படி எம்மவள வீட்ட விட்டு போயி கல்லாணம் செய்ய வச்சிட்டியே..” என்று மருகியவர் என்ன செய்வது என்பது போல மகனின் முகத்தை பார்த்தார்..

பொன்னரசுவும், பூமணியும் மரகதத்தை தான் பார்த்தபடி  இருந்தனர்.. ஏனெனில் இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கராசை மரகதம் மட்டுமே சமாளிக்க முடியும். மருமகளின் மேடிட்ட வயிரை கண்டவரின் மனமோ லேசாய் நிம்மதி அடைந்தது..

“ ஏ சித்தி எம்புட்டு நேரோ இப்படியே நிக்க போற…” என்று பொன்னக்காவும்,

“மதினி எதையாது பண்ணு.. இல்லாட்டி அண்ணே அவுங்கள ஏதாவது செஞ்சிடு…” என்று பொட்டியம்மாலும் மரகதத்தை உசுப்பினர்..

தங்கராசோ சிறிதும் ஓயாமல் கத்தியும், திட்டியும் கொண்டு இருந்தார்.. அவரை பிடித்து வைக்கவே பெரும் பாடு பட்டனர் அனைவரும்.. காரிகாலனோ தான் செய்தது தவறே இல்லை என்பது போல் மாப்பிள்ளை கோலத்தில் முறுக்கி நின்றிருந்தான்.. 

“இந்தா கெளம்பு வீட்டுக்கு போவோ.. இங்க நின்னு என்ன பேச்சு நமக்கு.. வா போவோம்.. இங்கன ஒரு நிமிசோ கூட எனக்கு இருக்க சகிக்கல… ” என்று மரகதம் கூறவும்

“அதெப்புடி அப்படியே விட்டு வர சொல்றவ.. ரெண்டுல ஒன்னு பாக்காம நா வர மாட்டே.. அவே கட்டுன தாலிய கழட்டி எறிஞ்சிட்டு எம்மவள நா கூட்டிட்டுத்தே வருவே…” என்று பிடிவாதமாய் மகளை அழைத்து கொண்டு போவதிலேயே இருந்தார்..

“ம்ம்ச் ஒனக்கு கண்ணு கேட்டு போச்சா.. அவ ஒங்கூட வரவா கல்லாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா.. பாரு.. அவ, அவ புருசங்கூட நிக்கிறா.. இனி நீ நா எல்லா வேறத்தே.. கெளம்பு.. நமக்கு மருவாதி இல்லாத எடத்துல நம்ம இருக்க கூடாது.. ”

“அதெல்லா முடியாது…. எனக்கு இங்கனவே முடிவு தெரிஞ்சாகனு..  ”

“என்ன தெரியனு… ”

“தங்கத்த இப்பவே நம்ம கூட வீட்டுக்கு கூட்டிட்டுத்தே போகனு… ”

“அவ தாராளமா வருவா.. ஆனா அவ புருசங்கூட வருவா.. பரவாயில்லையா..”

மறகதத்திற்கும் மனதில் வருத்தம் தான்.. ஆனால் என்ன செய்வது.. எதிரில் நிற்பது அவரது பிள்ளைகள் அல்லவா..

மகனையும் மருமகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்கராசை விடாபிடியாய் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார். மறந்தும் கூட போகும் போது மகள் முகத்தை பார்க்கவில்லை.

பாறை பொங்கல் முடிந்த பிறகே இவர்கள் வந்ததால் திருவிழா எவ்வித தடையுமின்றி அழகாய் நடந்து முடிந்தது..

“என்ன டா இப்படி செஞ்சுபுட்ட… ”                   

“என்ன தங்கோ உங்கய்யன பத்தி தெரிஞ்சுமா புள்ள நீ இப்படி செய்வ… ”

“டேய் கரியா எங்கட்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம்ல டா… ”

என்று ஆள் மாற்றி ஆள் கூறி செல்ல, கரிகலானோ பதில் எதுவும் பேசாமல் தங்கமலரை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான்..

அதற்கு முன்னே அங்கே சென்று அன்னமயிலும் அவள் அம்மாவும் ஆரத்தி கரைத்து வைத்திருந்தனர்.. இதே சோலையூரில் கரிகாலனை காண ஒளிந்து மறைந்து நடந்திருக்கிறாள் தான் தங்கமலர்.

ஆனால் இன்றோ அவன் மனைவியாய், அவன் கட்டிய தாலியை சுமந்துக்கொண்டு நடந்து செல்கையில் மனதில் பெருமை தாங்கவில்லை.. மலை முகடுகளை விட இவளுக்கு உயர்வு கூடியது போல் இருந்தது..

மேகம் தழுவி செல்லும் முகடுகளும், வண்ணமிகு வாசனை பூக்களும், காற்றில் ஆடும் மரங்களும், நீரோடைகளின் சல சலப்பும் என்று ஒன்றுவிடாமல் அவளுக்கு வாழ்த்து கூறியது போலவே உணர்ந்தாள்..

தன் பெற்றோர்களை பற்றியும், இந்த திருமணம் நடந்ததற்கான காரணத்தை பற்றியும் மனதில் வருத்தமும் வேதனையும் இருந்தாலும் அவள் இந்த நொடியை அனுபவிக்க தவரவில்லை..

கரிகாலன் தாலி கட்டும் போது அவளது கண்களை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியதோடு சரி இந்நிமிசம் வரை எதுவும் பேசவில்லை..

பொன்னரசுவும் பூமணியும் வந்து தங்கள் பங்கிற்கு அனைத்தும் செய்து முடித்து இவர்களை வீட்டில் விட்டு கிளம்பவும் தங்கமலருக்கு திக்கென்று இருந்தது..

“என்ன புள்ள தங்கோ இப்படி தெகச்சு பாக்குறவ..”

“இல்ல மதினி… இப்பவே போகனுமா என்ன…??”

“அது சரி… நாங்க நேரா அத்த மாமாவ பாக்காதே போறோ.. நாளிக்குத்தே ஊருக்கு.. ஒன்னைய வந்து நாளிக்கு பாத்துட்டு போறோ என்ன.. பாத்து நடந்துக்க… ” என்று பொன்னரசுவை பார்க்க அவனுக்கு காரிகாலனிடம் கூறிக்கொண்டு கிளம்பினான்..

அடுத்த சில நேரத்திலேயே அன்னமயிலும், அவள் அன்னையும் கிளம்ப கரிகாலனும், தங்கமலரும் தனித்து இருந்தனர். கரிகாலன் தனியே சிக்கினால் வாய் ஓயாமல் பேசுபவள் இன்றோ பேசா மடந்தையாகிவிட்டாள்..

கரிகாலனுக்கு அப்பொழுது தான் மனம் என்னவோ போல் இருந்தது.. இனிமேல் என்ன செய்வது?? குடும்பம் என்றாகிவிட்டது, வீட்டிற்கு பெண்ணொருத்தி வந்துவிட்டாள். அவளுக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.. இப்படியெல்லாம் அவன் மனம் எண்ணிட பொட்டியம்மாள் வந்தார் இவர்களுக்கான இரவு உணவோடு..

வந்தவர் சிறிது நேரம் இருந்து கிளம்ப “அத்த… நீயாது இருத்த… என்.. எனக்கு பயமா இருக்கு……” என்று கண்கள் கலங்க தங்கமலர் கூறுவதை பார்த்தபடி தான் இருந்தான் கரிகாலன்..

“அடியாத்தி.. இது நல்ல சோலியா இருக்கா.. நந்தி கணக்க நா இங்கயிருந்து என்ன செய்ய ?? நல்லா கேட்ட போ.. இந்த புள்ள இதுல சேல துணிமணி இருக்கு.. என்ன பக்குறவ.. ரவிக்க மதினி கிட்ட கேட்டு எடுத்து வந்தே.. சேல ஒன்னு ரெண்டு புதுசு இருக்காம்..  குளிச்சிபுட்டு கட்டிக்க.. சந்தோசமா இரு கண்ணு…  கரியா பாத்துக்க.. ” என்று கூறி கிளம்ப மீண்டும் தனித்து விடப்பட்டனர்..

அவனது வீடே அவனுக்கு முற்றிலும் அன்னியமாய் தெரிந்தது இப்பொழுது..

வீட்டை ஒரு முறை தன் பார்வையாலே சுற்றி பார்த்தாள் தங்கமலர்.. மொத்தமே இரண்டு அறை தான்.. ஒன்று தனியே படுக்கையறை.. மற்றொன்று வரவேற்பறை  போல, அதன் ஒரு பக்கத்திலே அடுப்பு வைக்கபட்டு இருந்தது.. அடுப்பிற்கு மேலே ஒரு பலகையில் சமையல் சாமான்கள்..

மற்றொரு ஓரத்தில் கரிகாலனின் பாட்டியின் படமும் அய்யானார் படமும் மாட்டி அதற்கு பூ வேறு போட்டு வைத்திருந்தான்.. விளக்கெல்லாம் என்று கழுவியதோ.. கருப்படித்து போய் இருந்தது.. ,மற்றொரு மூலையில் அரசாங்கம் கொடுக்கும் ஒரு சிறு டிவி பெட்டி, அதன் மேல சிறு ரேடியோ..

அறைக்குள் எட்டி பார்த்தாள், அதற்கு கதவெல்லாம் இல்லை போல.. அவனது பெட்டி ஒன்று மட்டும் இருந்தது.. மூலையில் ஜமுக்காளம், பாய், போர்வை  இரண்டு தலையணை வைக்கபட்டு இருந்தது.. வீடு சுத்தமாய் தான் இருந்தது ஆனால் இருக்கும் சாமான்களை பார்த்தால் இருவர் குடும்பம் நடத்த போதாது..

அவளது பார்வையை உணர்ந்தவன், “அது.. அது… நாளிக்கு டவுனுக்கு போயி எல்லா சாமானும் வாங்குவோ…   ” என்றான் பார்வையை எங்கோ பார்த்து..

பதிலே கூறாமல் பொட்டியாம்மாள் கொடுத்து சென்ற பையை கொண்டு போய் அந்த அறைக்குள்ளே வைத்தவள், “நா குளிக்கனு… ” என்று மட்டும் கூறினாள்..

இத்தனை நாள் அவன் ஆற்றுக்கு செல்வான்.. இந்த ஜாமத்தில் புது மனைவியை அழைத்துக்கொண்டு குளிக்க ஆற்றுக்கு செல்ல முடியுமா.. தங்கராசு வீட்டில் சிறிய கழிவறை இருந்தது நினைவு வந்தது…

“ஹ்ம்ம் அது அதுக்கு நாளிக்கு ஏற்பாடு செஞ்சுப்புடுறேன்… இப்ப இங்கன குளி..” என்று சமையல் பாத்திரம் கழுவும் இடத்தை காட்டினான்.. வரவேற்பறையின் இன்னொரு மூலை அது…

“இங்கனயா???!!!!!! ”

“இல்.. இல்ல… கதவ… சாத்திக்க.. பழைய தகரோ இருக்கு நாளிக்கு பின்னால மறப்பு போட்டுத்தறே.. இன்னிக்கு மாட்டும் இங்கன…. ” என்று கூறும் பொழுதே மேலும் அவன் முகம் கருத்தது..

“ம்ம் ”

இதற்குமேல் அவனும் அங்கே நிற்கவில்லை அவளும் பேசவில்லை..

வெளியே தண்ணீர் சிந்திவிடாமல் பார்த்து பார்த்து குளித்து முடித்து, சேலை கட்டி விளக்கு ஏற்றினாள்..

அதே நேரம் கரிகாலனும் குளித்து முடித்து வேறு உடை அணிந்து வந்தான்.. அவள் பார்வையை உணர்ந்தவன் “அது வெளிய பம்ப்புல குளிச்சே…” என்று பதில் கூற, இவள் உண்ண எடுத்து வைத்தாள்..

கரிகாலனின் மனம் இப்பொழுது எத்தனை நிம்மதியை உணர்கிறது என்று அவன் மட்டுமே அறிவான்.. அவனது அந்த சிறிய வீட்டிற்கு ஒரு புது ஒளி வந்தது போல இருந்தது.. தனக்கும் பார்த்து பார்த்து பரிமாற ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது..

இருவரும் அமைதியாய் உண்டு முடிக்கவும், கூட்டி சுத்தம் செய்து, தட்டுகளை கழுவி வைத்துவிட்டு வந்தவளுக்கு அடுத்தது என்ன என்பது புரிந்தாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை..

அவனோ ஜென்னல் பக்கம் பார்த்து நின்றிருந்தான். பெரியவர்கள் யாராவது ஒருத்தார் இருந்திருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது..

எத்தனை நேரம் தான் இப்படி தனி தனியே நிற்பது..??

யாராவது ஒருத்தர் பேச்சை தொடங்கத்தானே வேண்டும்.. கரிகாலனே தொடங்கினான்.. 

“மலரு….  ”

“ம்ம்…. ”

“நீ…. நீ… அங்கன உள்ள படுத்துக்க… நா இங்கன படுத்துக்கிறே…”

“ம்ம்…. ”

“என்ன புள்ள… ”

“ஒ விருப்போ…  ”

“ஏ.. ஒனக்கு என்னாச்சு… எதுனாலு சொல்லு புள்ள.” என்று அருகில் வந்தவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள்..

“என்ன மலரு…. ” அப்பொழுது தான் தெரிந்தது அவள் அழுதுகொண்டு இருக்கிறாள் என்பது..

“ஏ புள்ள அழுகுறியா.. ஏ மலரு என்னாச்சு.. ஒனக்கு இந்த வீடு பிடிக்கலியா… ”

இல்லை என்பது போல தலையாட்டினாள்..

“வேற என்ன புள்ள…. ”

“என்ன நோன்ன புள்ள ?? அதே ஒ விருப்பத்துக்கு எங்கய்யன பழிவாங்க கல்லாணம் பண்ணிட்டல.. அப்புறோ என்ன ஒனக்கு.. ஒ மனசுல என்ன எம்மேல பாசமா இருக்கு.. இல்லையில.. போ ஒ சோலிய பாத்துட்டு…” என்று எரிந்து விழுந்தாள்..

அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது காலையில் இருந்து ஏன் இவள் முகம் செழிப்பில்லாமல் இருக்கிறது என்று..

“என்ன புள்ள நீயி…இப்படி சொல்றவ.. ” என்றவன் மேலும் அவளிடம் வந்தான்..

“இந்தா அங்கனையே நில்லு… நீ என்னைய ஒன்னும்  விரும்பி கல்லாணம் கட்டலல.. பெறவு என்ன ?? ஆனா நா அப்படி இல்ல.. வெவறோ தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னைய மட்டுந்தே நெனச்சிக்கிட்டு இருக்கே.. அப்ப எல்லா ஒனக்கு என்னைய தெரியல.. எங்கய்யே ஒரு வார்த்த சொல்லிடுச்சுன்னு மட்டு வந்து எப்படி பேசுன.. என்னைய கொஞ்சோ நெனச்சியா..”

அவளது அழுகை கூடியதே ஒழிய குறையவே இல்லை.. இரு கைகளால் முகத்தை மூடி அழுதவளை என்ன கூறி சரி செய்வது என்று தெரியவில்லை..

“அ.. அதெல்லா ஒன்னுயில்ல புள்ள.. நீ.. நீ.. அப்படி எல்லா நெனக்காதா.. சொன்னா கேளு புள்ள வந்த மொத நாளே அழுவாதா.. மலரு..”

எப்பொழுதுமே தங்கமலர் முகம் சுணங்கினால் அவனுக்கு பிடிக்காது.. இத்தனை நாள் தங்கராசு மரகதத்திற்காக ஒதுங்கி இருந்தான்.. ஆனால் இன்று அவன் மனைவி அல்லவா அவள்…

“தங்கோ சொன்னா கேளு புள்ள அழுவாத.. அப்போ எனக்கு கோவம் இருந்துச்சுத்தே.. ஆனா நீ வீட்டுக்கு வந்து இப்படி எல்லாம் செய்யவு எனக்கு மனசுக்கு நிம்மதியாத்தே புள்ள இருக்கு..”

“ஒனக்கு நிம்மதியாத்தே இருக்கு.. ஆனா எனக்கு…???!!!”

அதிர்ந்து பார்த்தவன் “ஏ புள்ள ஒனக்கு இந்த கல்லாணம் பிடிக்கலையா ? அது சரி கொஞ்ச நாளா நீதே என்னைய கண்டுக்கவே இல்லல..” என்றவனுக்கு பழைய கோவம் எட்டி பார்த்தது..

“என்னது??!! ” என்று புரியாமல் பார்த்தவள் பின்பு அழுகையினூடே நடந்த அனைத்தையும் கூறினாள்.. மரகதம் சத்தியம் வாங்கியது என்று எல்லாம்..

முழுதாய் கேட்டு முடித்த கரிகாலனுக்கோ தான் தவறாய் புரிந்துகொண்டு தங்கராசு பேசியதை காரணமாய் வைத்து இவளை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது..

“இங்கியாரு.. ஒனக்கு வேணா நீ நெனச்ச மாதிரி எங்கய்யன பழிவாங்க இந்த கல்லாணம் நடந்து இருக்கலா.. ஆனா எனக்கு அப்படி இல்ல. நீ கூப்பிட்ட. ஒன்னைய விரும்புன ஒரே காரணத்துக்காக மட்டுத்தே நா வந்தே.. இதுக்கு மேல எங்கிட்ட வேற எதுவு நீ எதிர்பாக்காத.. நீ போடுற சோறுக்கு நா வீட்ல வேல பாப்பே அம்புட்டுத்தே..” என்றவள் பதில் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று படுத்துவிட்டாள்..

செய்வது அறியாமல் அவள் வார்த்தைகள் தந்த வலியில் அதிர்ந்து நின்றது கரிகாலன் தான்..               

     

              

   

                  

       

          

            

Advertisement