Advertisement

மலர் – 8

ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தங்கமலர் மட்டும் தனித்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. ஊரில் முக்கால்வாசி பேர் கோவில் முன்பு கூடி பேசிக்கொண்டும், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டும் இருந்தனர்.

நல்ல வேலை தங்கமலர் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது மரகதம் வீட்டில்  இல்லை. வீட்டை பூட்டி சாவியை வழக்கமாய் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

வேகமாய் கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் அதைவிட வேகமாய் கதவை அடைத்துவிட்டு அதன் மீதே சாய்ந்து நின்று கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்ய முயன்றாள்.

ஆனால் அவளது இதயத்தின் துடிதுடிப்பே  அவளை பயமுறுத்தியது. என்ன முயன்றும் அவளால் தன்னை சரி செய்துகொள்ள முடியவில்லை..

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ, கைகளில் எதுவோ இருப்பது போல் தோன்ற, அப்பொழுது தான் அவளது கரங்களில் கரிகாலன் திணித்து சென்ற பை இருப்பது நினைவிற்கு வந்தது.

வேகமாய் பையை பிரித்து உள்ளே இருந்ததை எடுத்துப்பார்த்தாள். அழகிய இளமஞ்சள் பட்டுபுடவை, இளஞ்சிவப்பு நிற பார்டர் வைத்து அங்கங்கே சிறு சிறு சிவப்பு புள்ளிகளோடு அழகாய் இருந்தது. அதற்கேற்றார் போல ரவிக்கையும் தைத்து இருந்தது.

அந்த நேரத்திலும் எப்படித்தான் இப்படி அளவு எடுத்தது போல தைத்துக்கொண்டு வந்திருக்கிறானோ என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை தங்கமலாரால். அவள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய தருணம் தான்,  ஆனால் கரிகாலன் கூறி சென்ற வார்த்தைகளோ அவளை கொன்று கூறு  போட்டிருந்தன.

கையில் அச்சேலையை இறுக பிடித்து கண்ணீர் வழிய நின்றிருந்தாள். கண்ணீரோடு கரிகாலன் பேசியதும் அவளது எண்ணத்தில் வழிந்தோடின.

அன்னமயிலின் வற்புறுத்தலுக்காக அவளோடு வெளியே சென்று வந்தவள், தங்கள் வீடு நோக்கி தனியே திரும்பிக்கொண்டு இருந்தாள்.

இரவு நேர பூச்சிகளின் ரீங்காரமும், ஆந்தைகளின் சத்தமும்   அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதியும்  அவள் மனதை  சற்றே சஞ்சல பட வைத்தாலும், பிறந்ததில் இருந்து வந்து போகும் பாதை தானே என்று தன்னை தானே தைரியப்படுத்திக்கொண்டு நடையை துரிதப்படுத்தினாள்..

ஆனால் இந்த கரிகாலன் எங்கிருந்து தான் வந்தானோ கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் முன்னே நின்றிருந்தான்..

அதிர்ந்து விழித்தவளுக்கு, தன் முன்னே நிற்பது கரிகாலன் தானா இல்லை ஆவி பேய் இப்படி எதுவும் அவன் உருவில் வந்து நிற்கிறதோ என்று லேசாய் பயம் எட்டி பார்க்க,

“யா… யாரு… நீ…. ” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்..

ஆனால் கரிகலனுக்கோ மற்ற எதையுமே கவனிக்கும் மனநிலையில் இல்லை.. அவனை பொருத்தமட்டில் அவன் மனதில் இருந்தது எல்லாம் தங்கராசு பேசிய வார்த்தைகளும், இத்தனை நாள் தங்கமலர் அவனை பார்க்காமல் இருந்ததால் அவனை வெறுத்துவிட்டதாக எண்ணியதும் தான்.

“ஏய் என்ன?? என்னைய பாத்தா யாருன்னு கேக்குறவ.. நெசமா என்னைய தெரியல… என்ன டி.. திமிரா…” என்று உறுமினான்.

“நீ… நீயா… நீயென்ன பண்ற இங்கன??” என்று எச்சில் விழுங்கி கேட்டவளுக்கு யாரும், முக்கியமாய் மரகதம் எங்கிருந்தாவது தங்களை பார்த்துவிடுவாரோ என்று அஞ்சி சுற்றி முற்றி பார்த்தாள். ஆனால் அதுவே அவனுக்கு இன்னும் கோவத்தை அதிகப்படுத்தியது.

“என்ன டி கேள்வி மேல கேள்வி கேக்குறவ…. ஏ நா ஒன்னைய பாக்க வரக்கூடாதா?? அப்படின்னு ஒங்கப்பே சொன்னானா… இங்கியாரு, இனி யாரு சொல்றதையும் நா கேக்குறதா இல்ல.. நீயே சொன்னாலு நா இனிமே கேக்குறதா இல்ல… தங்கராசு மவ தான நீயி.. அந்தாளு புத்தியில ஒனக்கு கொஞ்சமாது இருக்காது..”

“ஏ இப்படில்லா பேசுற.. ஒனக்கு என்ன கிறுக்கா.. வழிய விடு நா வீட்டுக்கு போகனு” என்று அவனை தாண்டி சென்றவளை,

கைகள் கன்றி விடும் அளவிற்கு இறுக்கமாய் பிடித்து நிறுத்தினான்.. இதுபோல் அவன் முன்னே ஒருநாள் கூட நடந்தது இல்லை..

வலி ஒருபக்கம், மனதில் ஏற்கனவே அவளது அன்னை பேசிய பேச்சின் காயம் ஒருபக்கம், தான் செய்த சத்தியம் ஒருபக்கம் என்று அவளை கண்ணீர் சொரிய வைத்தது.

ஆனால் கரிகாலனுக்கோ மனதில் இருந்த கவலை வருத்தம் எல்லாம் இப்பொழுது கோவமாய் உருமாறி அவனது கண்களை திரையிட்டு மறைத்து இருந்தது..

“என்ன டி நா ஒ கைய பிடிச்சா அழுக வருதோ.. இதுக்கு முன்ன நீயா தேடி தேடி வந்து பேசுன.. அப்ப எல்லா எங்க போச்சு ஒ அழுக.. நல்லா கேட்டுக்க, நாளைக்கு பாற பொங்கலுக்கு எல்லா கோயிலுக்கு போயிடுவாங்க.. நீயு போற.. நானு அங்கனத்தே இருப்பே… சரியா பத்து மணிக்கு நா கூப்புடுவே, நீ கெளம்பி இந்த பொடவைய கட்டிக்கிட்டு எங்கூட வர.. வரணும் புரியுதா.” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவனின் முகத்தை பார்க்கவே அவளுக்கு நெஞ்சில் குளிர் பிறந்தது..

“என்… என்ன சொல்ற… நா… நா ஏ ஒங்கூட வரணு…” என்று திக்கி திணறி கேட்டாள்.

“ஹா ஹா… நல்லா கேட்ட போ.. ஒன்னைய எதுக்கு கூப்பிடுவாங்க… ஒழுங்கா எங்கூட வர.. நாளைக்கு நமக்கு கல்லாணம்.. புரிஞ்சதா..”

இந்த வார்த்தைகளை கேட்டதும் தங்கமலருக்கு அத்தனை நேரம் இருந்த அழுகை, வருத்தம், சோர்வு எல்லாமே ஒரு நொடியில் பறந்து போனது. இந்த ஒரு வார்த்தையை இவன் கூற மாட்டானா என்று எத்தனை நாட்கள் பைத்தியம் போல அவன் பின்னே அலைந்திருப்பாள்.

ஆனால் அப்பொழுதெல்லாம் விட்டுவிட்டு சத்தியம் என்ற பெயரில் தான் கட்டுண்டு நிற்கும் பொழுதா இவன் இப்படி வந்து நிற்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனாலும் அவள் மனம் சந்தோசமாய் தான் இருந்தது..

கரிகாலன் வந்து மரகத்திடம் பேசினால் நிச்சயம் மனம் மாறுவார், அவரின்  உதவியோடு தந்தையையும் சரி செய்துவிடலாம் என்று நிமிடத்தில் அவளது காதல் மனம் கோட்டை கட்ட,

“என்ன டி சொல்லிட்டு இருக்கே நிக்கிறவ.. ஒங்கப்பே சொன்னான்,  நா நாதியத்தவனாம். எனக்கு யாரு பொண்ணு தரமாட்டாங்களாம்.. அதே.. அந்தாளு மவள கட்டி அந்தாளு மொகத்துல கரிய பூசல நா கரியன் இல்ல…”  என்று மிக எளிதாய் அவள் கட்டிய மனக்கோட்டையை சுக்கு நூறாக்கினான்.

அவ்வளவு தான் தங்கமலர் மனதில் இருந்த சிறுதுளி நம்பிக்கை கூட இருந்த இடம் காணாமல் போனது. ஆக, இவன் காதல் கொண்டு தன்னை திருமணம் செய்ய கேட்கவில்லை.. தன் தந்தையை அவமான படுத்தவே இவன் என்னை அழைக்கிறான் என்ற எண்ணம் ஓட அவன் பிடியில் இருந்த தன் கரத்தினை வெடுக்கென்று உருவினாள்.

“என்ன டி சிலுப்புற.. நீ வர.. வரணும்.. அவ்வளோதான் சொல்வே… வராம மட்டும் இருந்து பாரு அப்புறோ தெரியு நா யாருன்னு.. இந்தா பிடி.. ” என்று கைகளில் ஒரு பையை திணித்துவிட்டு சென்றான்…

அவன் சென்ற பின்னும் தங்கமலர் அவ்விடம் விட்டு நகரவில்லை. நகர முடியவில்லை. கரிகாலன் கூறி சென்ற வார்த்தைகளே அவளை சிலை போல நிற்க வைத்துவிட்டது..

இனி நான் செய்வது ??? இந்த ஒரு கேள்வியே அவளை போட்டு பாடாய் படுத்த எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

முதலில் கரிகலான் குடுத்த பையை ஒரு மறைவான இடைதில் வைத்துவிட்டு சிறிது நேரம் அப்படியே கண்கள் மூடி படுத்திருந்தாள்..

அவளது காதல் கொண்ட மனமோ “ஏ தங்கோ இதவிட ஒனக்கு வேற வழி கெடைக்காது.. பேசாம கல்லாணம் செஞ்சுக்க.. ஒனக்கு என்ன கரியன பத்தி தெரியாதா.. அவே ஒன்னைய விரும்புறான்.. எதோ கோவத்துல இப்டி பேசுறான்.. மத்தபடி ஒன்னுயில்ல.. ” என்று கரிகாலனுக்கு ஏற்றுக்கொண்டு பேச,

அவளின் இன்னொரு மனமோ “இங்கியாரு நீ ஒ அம்மாக்கு சத்தியஞ்செஞ்சு குடுத்திருக்க.. அவே ஒங்கப்பன அவமான படுத்தத்தே ஒன்னைய கல்லாணம் செய்ய கூப்புடுறான்.. இந்த தப்ப மட்டு நீ செஞ்ச அப்புறோ சென்மத்துக்கு நீ ஒ அப்பே ஆத்தா மொகத்துல முழிக்க முடியாது..” என்று எடுத்து கூறியது..

“அதெல்லா இல்ல புள்ள… கரியே ஒன்னைய விரும்புறியா.. ஒங்கய்யன பழிவாங்க அவே ஏ ஒன்னைய கல்லாணம் செய்யணும்.. அவே யார செஞ்சாலும் நல்லா பொளச்சாலும் ஒங்கய்யனுக்கு பிடிக்காதே.. ஆனா ஒன்னைய கேட்டதுக்கு காரணோ அவே ஓ மேல வச்ச பாசந்தே.. ” என்று மனதின் மறு பாதி கூற இப்படியே அவளுள்ளே ஒரு போராட்டம் ஆரம்பம் ஆனது..

எத்தனை நேரம் இப்படி தனக்குள்ளே தன்னோடு போராடினாளோ, இறுதியாக “அவே அப்டி நெசமாவே என்னைய விரும்புனா, நேரா வந்து எங்க அய்யே அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கி என்னைய கல்லாணம் செய்யட்டும்.. நம்மலா  எந்த வம்பையும் இழுக்காம இருக்கணும். நாளிக்கு போலைனா இவன் என்ன செஞ்சிடுவானாம்.. அதையும் பாப்போம் ” என்று முடிவு எடுத்தாள்..

ஒரு முடிவிற்கு வந்த பிறகே அவளால் நிம்மதியாய் இருக்க முடிந்தது..

“என்ன நடந்தாலு சரித்தே நாளிக்கு அவே கூப்புட்டா போகவே கூடாது.. எத்தன நா என்னைய அலைய விட்றுப்பான்.. கெடக்கட்டு.. வருவாளா மாட்டாளான்னு பதறட்டு.. அங்க தொட்டு இங்க தொட்டு கடசியா எங்கப்பன அவமான படுத்த என்னையவே கல்லாணம் செய்ய கேட்டா எம்புட்டு தைரியோ..” என்றவள் மரகதம் சமைத்து வைத்து சென்றிருந்த சாப்பாட்டை உண்ண தொடங்கினாள்..

ஆனால் விதி என்று ஒன்று உள்ளதே.. அது மனிதர்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு நிற்குமா என்ன ?? தான் எடுத்த முடிவை செயல்படுதத்தானே மனிதர்களை பொம்மையாய் ஆட்டுவிக்கிறது. இதில் தங்கமலர் மட்டும் எம்மாத்திரம்.

தெளிவாய் முடிவெடுத்த திருப்தியில் உண்டு முடித்து, பாத்திரங்களை ஒழித்து போட்டு வந்து படுத்தவளுக்கு பின் பக்க கதவை யாரோ திறக்கும் ஓசை கேட்டது.. ஒருநொடி திடுக்கிட்டாலும், பிறகு மரகதம் இல்லை தங்கராசாக இருக்கும் என்றெண்ணி அமைதியாய் இருந்தாள்..

கதவு திறந்த ஓசை கேட்டு சில நொடிகள் ஆன பிறகும் யாரும் வந்தது போல தெரியவில்லை. மேலும் சிறிது நேரம் காத்திருந்தாள். மனதிற்கு எதுவோ தவறாய் பட, “யாரு…. யாரு அங்க” என்று கேட்டபடி பின்னே சென்றவள் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

கரிகாலன் தான் பின் வாசலை திறந்து வழியை முழுவதுமாய் அடைத்து தன் முழு உயரத்திற்கும் நீட்டி நிமிர்ந்து நன்றாய் படுத்திருந்தான்..

“ஏ.. ஏய் என்ன செய்ற?? எந்திரி மொதோ.. எந்திரின்னு சொல்றேல…” என்றவளுக்கு எங்கே சத்தம் போட்டால் பிரச்சனை ஆகிவிடுமோ என்ற அச்சம் வேறு.

ஆனால் அவனோ அசையாது படுத்திருந்தான்.. கண்கள் மூடியிருந்தாலும் அவனது கவனமெல்லாம் இவள் மீது இருப்பது அவளுக்குமே புரிந்து இருந்தது..

“ஏ கரியா.. என்ன இது புதுசா… எந்திரி மொதோ.. யாரா பாத்தா வம்பா போகும்.. எந்திரி ” என்று அவன் கைகளை பிடித்து இழுத்தாள்..

அவனது கைகளை பிடிக்கத்தான் முடிந்தது ஆனால் இழுக்க முடியவில்லை. தன் முழு பலத்தையும் திரட்டி முயற்சி செய்தாள். கதவு மேல் இவள் இடித்துக்கொண்டது தான் மிச்சம்.

“ஐயோ யாரா பாத்தா வம்பா போகுமே… கடவுளே” என முனுமுனுத்தவள் வேகமாய் முன்னே சென்று முன் பக்க கதவை நன்றாய் தாளிட்டு வந்தாள்..

அப்பொழுதும் அவன் அசையாமல் தான் படுத்திருந்தான்..

“ஏ கரியா என்ன இது புதுசா..”

“என்ன புதுசா??? ”

“ஹப்பா வாய தெறந்தான்… ” என்று எண்ணிக்கொண்டு

“இங்கியாரு ஊரே அங்க கோயில் முன்னால இருக்கு ஒனக்கு என்ன இங்கன வேல??? ”                           

“நீ இங்கத்தேன இருக்க” என்றவன் அவள் புறம் பார்த்து படுத்தான்.

இது போல் எல்லாம் அவன் முன்பு செய்திருந்தால், பேசியிருந்தால் தங்கமலர் எத்தனையோ மகிழ்ந்திருப்பாள்..  ஆனால் இன்றோ அக்குளிர் நேரத்திலும் வியர்த்தது..

“ம்ம்ச் எதுக்கு வந்த நீ.. கெளம்பு போ..  ”

“போறேன்… போறேன்… ஓ முடிவு என்னனு தெரிஞ்சிட்டு போலாம்னு வந்தே.. என்ன முடிவு பண்ணிருக்க.. ??” என்றவன் அவளது முகத்தையே தீர்க்கமாய் பார்த்தான்.

நாளை பாறை பொங்கலன்று அத்தனை பேருக்கு இடையில் இவனை எளிதாய் சமாளித்து விடலாம் என்று எண்ணியவள் இப்படி தன் வீட்டிலே அவனிடம் தனியாய் மாட்டிக்கொள்வாள் என்று கனவு கண்டாளா என்ன??

“என்.. என்ன முடிவு.. ”

“அது சரி.. தங்கராசு மவ தான நீ.. ஒங்கிட்ட வேற எத எதிர் பாக்க முடியு.. இங்கியாரு நல்லா கேட்டுக்கோ… நீ என்ன வேணா முடிவு எடுத்துக்கோ.. ஆனா நா எம்முடிவ சொல்லிடுறே.. நீ மட்டு நாளிக்கு நா கூப்டவு வரல, அடுத்து என்னைய நீ உசுரோட பாக்க முடியாது.. ஒனக்கு கல்லாணம்னு நடந்தா அது இந்த கரியங்கூடத்தே.. அதுவு நாளிக்குத்தே… நா சாவுரது பொழைக்கிறது இப்ப உங்கிட்ட.. ” என்று கூறிவிட்டு வந்த வேலை முடிந்தது என்பது போல சென்றுவிட்டான்..

ஒருநாளில் எத்தனை முறைதான் அவள் திகைத்து போய் அதிர்ந்து நிற்பாள். மறுபடியும் முதலில் இருந்து குழப்பம் ஆரம்பித்தது.

அவனது குரலே மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவன் கூறி சென்ற வார்த்தைகளோ தங்கமலர் மனதில் அமிலம் தூவியது.. ஒருபக்கம் தந்தை.. மறுப்பக்கம் அவள் உணர்வில் கலந்தவன்..

இப்படித்தானே பல பெண்களின் போராட்டம் இன்றும்.. ஆண்களின் வெட்டி வீராப்பிற்கும், வீணாய் போன வெறும் பெருமைக்கும் இடையில் சிக்கி தவித்து புழுங்கி சாவது பெண்களின் உணர்வுகள் அல்லவா.

தங்கமலரும் அப்படித்தான் துடித்தாள்.. சொல்வதை செய்துவிடுவேன் என்ற அவனது குரல்.. இப்படி தான் அவனோடு சென்றுவிட்டாள் பிறகு தங்கராசு மரகதம் இருவரின் முகத்திலும் விழிக்கவே முடியாது.. முடியாது என்பதை விட தன் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள்..

ஏற்கனவே உடன் பிறந்தவன் வேறு திருமணம் ஆனதும் மனைவியோடு சென்றுவிட்டான்.. இதில் தானும் இப்படி செய்தால்.. நினைக்கும் போதே மூச்சு முட்டியது அவளுக்கு..

இரு கைகளிலும் தன் தலையை அழுந்த பிடித்து அமர்ந்தவளுக்கு என்ன செய்வது என்ற கேள்வியே அச்சத்தை கொடுத்தது..

அய்யனா ?? கரியனா ??

காதலா ?? சத்தியமா ??

இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கினாள்..  ஒன்றை தேர்ந்தெடுத்தால் மற்றொன்றை முழுவதுமாய் இழந்துவிட வேண்டும்..

எதை இழந்தாலும் அது அவளுக்கு வலியை தானே குடுக்கும்…

இப்படியே யோசித்தபடி இருந்தவளுக்கு முன் பக்கம் கதவு தட்டும் ஓசை கேட்க, வேகமாய் தன் முகத்தை துடைத்து உணர்வுகளை மறைத்து, கதவை திறந்தாள்..

மரகதம் தான் நின்றிருந்தார்..

“என்ன டி இம்புட்டு நேரோ.. என்ன செஞ்சிட்டு இருந்தவ…” என்றவரின் பார்வை மகளின் முகத்தையே அலசி ஆராய்ந்தது..

தன் தாவணியின் முனையை திருகிக்கொண்டே “ஒன்னுயில்ல.. பாத்திரம் கழுவ உக்காந்தே.” என்று முனுமுனுத்தவள் வேகமாய் சென்று தான் கூறியதை உண்மை என்று நிரூபித்தாள்..

அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்த மரகதம் “என்ன புள்ள தங்கோ, ஒடம்பு எதா சரியில்லையா மொகமே வாட்டமா கெடக்கு என்னாச்சு…  ”  என்று விசாரிக்க,

“அதெல்லா ஒன்னுயில்ல… ” என்றவளின் பார்வை அவள் சேலையை மறைத்து வைத்த இடத்திற்கு சென்று வந்தது..

“கடவுளே நாளிக்கு வரைக்கு இத வேற நா காவக்காக்கனுமே… ” என்று எண்ணியவள் மரகதம் அவள் முகத்தையே பார்க்கவும் குனிந்துகொண்டாள்..

“என்ன புள்ள என்னவோ மாதிரி இருக்கவ.. இங்கியாரு, நாளிக்கு பாற பொங்க முடியவு கோடாங்கிட்ட தின்னூறு வாங்கிட்டு ஒனக்கு கல்லாணம் பேசணும்னு நானு ஒங்கய்யனு முடிவு செஞ்சிருக்கோ.. அதுக்கு ஏத்த மாதிரி ஒழுங்கா இரு.. கண்டத போட்டு நெனைக்காத…” என்று விட்டு பாயை போட்டு படுத்தார்..

மரகதம் கூறியதை கேட்டு உறைந்திருந்தவளுக்கு என்னடா இது வாழ்க்கை என்பது போல் ஆனது..

கரிகாலன் செய்த குழப்பம் போதாது என்று இப்பொழுது புதிதாய் இது  வேறு என்று எண்ணியவள் ஒருவேளை அப்படி எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தோன்ற விலுக்கென்று நிமிர்ந்தாள்..

தான் இன்னொருவனோடு வாழ்வதா.. அது எப்படி முடியும்??

கண்களை இறுக மூடி திறந்தவளுக்கு முடிவெடுக்க வெகு நேரம் பிடிக்கவில்லை..

இறுதியில் காதல் கொண்ட மனமே வெல்ல… நாளைய விடியலை எதிர்நோக்கி காத்திருந்தாள் தங்கமலர்..

           

         

              

              

Advertisement