Advertisement

மலர் – 7

சிலு சிலுக்கும் காலை பொழுது, கதிரவன் உறக்கம் களைந்து கண் விழிக்கும் நேரம், நில மகளும் தன் விழிப்பை காட்ட, புள்ளினங்கள் பூபாலம் இசைக்க, அருவிகள் மகிழ்ச்சியாய் துள்ளி விழ, ஆறுகள் சலசலத்து ஓட சோலையூரின் சௌந்தர்யத்தை கேட்கவும் வேண்டுமா.

ஆனால் இதை எதையுமே ரசிக்க முடியாமல் இரண்டு ஜீவன் தவித்துக்கொண்டு இருந்தது.. ஒன்று தங்கமலர். மற்றொன்று கரிகாலன்.

கரிகாலன் தான் கொண்ட முடிவில் தெளிவாய் இருந்தாலும், அவன் மனதின் ஒரு ஓரத்தில் இன்னதென்று கூற முடியா எதுவோ ஒன்று அவனை போட்டு இம்சித்துக்கொண்டு இருந்தது.

அவன் மனமிடமே அவன் போராட, அதுவே அவனுக்கு பெரும் தொல்லையாய் இருந்தது. தங்கமலரின் பாராமுகம் ஒருபக்கம் அவனை படுத்த, இதுவெல்லாம் போதாது என்பது போல, முனியன் வந்து சேர்ந்தான்.

“டேய் கரியா… ஒனக்கு பொண்ணு பாக்க சொன்னல டா.. ” என்று முகம் முழுவதும் புன்னகையை பூசி வந்தவனை வெறித்து பார்த்தான் கரிகாலன். அவன் மனமோ அடுத்த தொல்லையா என்று கேள்வி எழுப்ப, அதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு

“மொத வீட்டுக்குள்ள வாண்ணே..  ” என்று வரவேற்றான்.

“அதெல்லா இருக்கட்டும் டா… நீ மொத எங்கடைக்கு வா.. ஏ சித்தப்பா ஒருத்தரு ஊருல இருந்து வந்திருக்காரு.. அவருட்ட ஒன்னைய பத்தி சொன்னே, ஒனக்கு ஏத்த பொண்ணா பாக்க சொல்லி.. நீயு ஒரு எட்டு வந்து சொல்லு வா ”  என்று அவனை இழுக்காத குறையாய் அழைக்க,

“இருண்ணே… நா இன்னு குளிக்க கூட இல்ல.. இம்புட்டு அவசரமா வந்து நிக்க… ” என்று நேரத்தை கடத்தினான்..

“அடேய் கரியா, நல்ல விசயோ பேசுறப்ப எதையு தள்ளி போடக்கூடாது..   வா டா கரியா..” என்று முனியன் பிடிவாதம் பிடிக்க வேறு வழியே இல்லாமல் கிளம்பிச்சென்றான்..

அதே நேரம் சரியாய் தங்கராசுவும் முனியனின் கடையில் இருந்தார்..

“என்ன டா சோமு, ஒன்னைய பாத்து எத்தன வருசோ ஆச்சு.. இப்பத்தே இங்குட்டு வர வழி தெரிஞ்சதா?? காடு எல்லாம் வச்சிருக்கியா இல்ல குடுத்துட்டியா?? ” என்று முனியனின் சித்தப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்..

“ஆத்தி இவரு என்ன இங்க?? அதுவு இந்நேரத்துல…  ” என்று எண்ணிய முனியன் “அய்யனாரே நல்ல சங்கதி பேசுறப்ப தடங்கலா எதுவு ஆகிட கூடாதுய்யா… ” என்று வேண்டியபடி

“வா மாமா…” என்று தங்கராசுவை வரவேற்றுவிட்டு,

“சித்தப்பா நா சொன்னேன்ல.. கரிகாலன்.. இவந்தே.. நல்ல பொண்ணா பாக்கனு.. ” என்று கரிகாலனை அறிமுகப்படுத்தினான்.

“வா தம்பி… ஒன்னைய பத்தி முனியே எல்லாத்தையும் சொன்னாப்ல.. நீ எதுக்கு கவலப்படாத.. ஒனக்கு ஏத்த பொண்ணா நா பாத்துத்தரே.. ” என்று அந்த சோமு கூற,

“எது எது இவனுக்கு நீ பொண்ணு பாக்க போறியா??? ஏன் டா சோமு ஒனக்கு இந்த வேலையத்த வேல.. ” என்று ஆரம்பித்தார் தங்கராசு..

“அய்யயோ இன்னிக்கு எங்கடைல ஏவாரம் நடந்த மாதிரித்தே.. போச்சு.. ரகளையே கூட்டுவானுங்களே..” என்று அஞ்சியது வேறு யாருமல்ல முனியன் தான்.

கரிகாலனோ ஒரு வெற்று பார்வை பார்த்து நிற்க,  சோமு “ஏ தங்கராசு இப்படி சொல்லிபுட்ட, கரிகாலன பத்தி முனியே நெறைய சொல்லிருக்கானப்பா..” என்று கூறினார்..

ஆனால் தங்கராசுவோ நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிக்க, கரிகாலனின் அடக்கி வைத்திருந்த கோவமெல்லாம் வெளி வந்தது..

“என்ன நக்கலா சிரிக்கிற??” என்று அவன் முறுக்கிக்கொண்டு முன்னேற முனியன் அவனது கைகளை பிடித்து பின்னே இழுக்க,

“ஏய் என்னடா எங்கிட்டயே முறுக்கிட்டு வர.. அம்புட்டு தைரியமோ.. வா டா வா..” என்று தங்கராசுவும் தோளில் இருந்த துண்டை உதறி முன்னேற,

“யோவ் என்ன ரொம்ப பேசுற?? ஓ வயசுக்கு மரியாத குடுத்துத்தே நா இத்தன நாளா சும்மா இருந்தே.. நா கல்லாணம் செஞ்சா ஒனக்கு என்ன செய்யாட்டி ஒனக்கு என்ன ?? ஓ சோலிய பாத்துட்டு போவியா..” என்று கோவமாய் எகிறினான்.

“ஏ சோலியத்தே நா பாக்குறே டா.. நீயே நாதியத்த பைய.. ஒன்னைய நம்பி யாருடா பொண்ணு குடுப்பா..  ஏதோ மொதலாளிய கைக்குள்ள போட்டு சம்பாறிக்கிற, ஒடனே உனக்கு ஏத்தம் கூடி போச்சா… ” என்று தன் வயதையும் மறந்து தங்கராசு வார்த்தைகளை விட்டார்.

அவ்வளவு தான் “என்னய்யா சொன்ன??!!!!!” என்று பாய்ந்துவிட்டான் கரிகாலன்.

“யாரு நா… நா நாதியத்தவனா… மருவாதையா பேசு… ஓ வீட்டுல வந்து நா நின்னேனா.. இல்ல நடுவீட்ல வந்து படுத்தேனா…”

முனியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் நல்லது ஒன்று நினைத்து கரிகாலனை அழைத்து வர இப்படியா சூழ்நிலை மாறவேண்டும் என்று வருந்தினான்..

ஒருவழியாய் முனியனும், அவனது சித்தப்பா சோமுவும், கரிகாலனையும், தங்கராசுவையும் சமாதனம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

சரியாய் அதே நேரம் அந்த பக்கம் வேகமாய் வந்த ஒருவர், “அட என்னப்பா எல்லா இங்க இருக்கீங்க.. அங்க கோவில்ல நம்ம கோடங்கி சாமி வந்து ஆடிட்டு இருக்காரு… ” என்று கூறிவிட்டு செல்ல,

தங்கராசு கரிகாலனை முறைத்தபடி கோவிலை நோக்கி நகர்ந்தார். முனியனும் “சித்தப்பா நா வரவரைக்கும் பாத்துக்க.. ” என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஆனால் கரிகாலனோ சிலையென நின்றிருந்தான். தங்கராசு  கூறிய  ‘நாதியத்த பைய…. யாரு பொண்ணு குடுப்பா..’ என்ற வார்த்தைகளே அவன் மனத்தில் மீண்டும் மீண்டும் ஓயாத அலையின் பேரிரைச்சலாக ஒலித்துக்கொண்டே இருந்தது.

அவனையும் அறியாமல் மனதில் ஒரு வன்மம் எட்டி பார்க்க, தங்கராசுவை இப்படியே விடுவதா என்ற எண்ணம் தோன்றியது.

“என்ன தம்பி, நீ கோயிலுக்கு போகல??” என்று சோமு கேட்டதற்கு அவனிடம் பதிலே இல்லாமல் போக,

அவரோ விடாது “தம்பி, கரிகாலா…” என்று அவனை அழைத்து பார்த்து, அவனிடம் எவ்வித மாற்றமும் இல்லாது போகவே. முனியனின் கடைக்குள் சென்றுவிட்டார்.

அதே நேரம் அங்கே வந்த அன்னமயிலின் தந்தை, “டேய் கரியா என்னடா இங்க இருக்கவே.. அங்க ஊரே கோயிலுக்கு ஓடிட்டு இருக்கு.. வா வா.. நம்ம கோடாங்கி சாமியாடுறாரு..   ” என்று அவனை அழைத்தார்.

இவர் பேசுவதற்காவது கரிகாலன் பதில் கூறுகிறானா என்று பார்க்க சோமு எட்டி பார்த்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் பொய்த்துப்போனது..

“டேய் கரியா நா பேசிட்டே இருக்கே.. நீ என்னடா கனா கண்டுட்டு இருக்கவே.. வா டா வந்து கோடாங்கிட்ட ஆசிர்வாதோ வாங்கு… வா.. ஒனக்கு கல்லாணம் நல்லபடியா நடக்கனும்ல.. ” என்றவர் அவன் பதிலை எதிர்பார்க்காது

“அட வாப்பா… ” என்று இழுத்து சென்றார்.

அங்கே சென்று பார்த்தால் ஊரில் முக்கால்வாசி ஆட்கள் கோவில் முன்பு தான் இருந்தனர். பக்தியான பாவம் வேறு. கோவில் என்றால் நம்மூர்களில் இருக்கும் கோவில் போல் அல்ல.

ஒரு பெரிய பலா மரம். அம்மரத்தின் வயதே கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது ஆண்டுகள் இருக்கும். அம்மரத்திற்கு அடியில் மூன்று அடி உயரத்தில் ஒரு அய்யனார் சிலை, கையில் வீச்சரிவாளோடு கண்களில் கோவம் தெறிக்க, வெள்ளை நிற வேட்டி அணிந்து நின்றிருந்தார்..

அவர் முன்னே சற்று மயங்கிய நிலையில் கையில் உடுக்கை பிடித்து அமர்ந்திருந்தார் கோடாங்கி.. அவரை சுற்றி நின்றிருந்த அனைவரின் கண்களிலும் ஒரு பயம் கலந்த பக்தி தெரிந்தது..

கோடாங்கி இத்தனை நேரம் அருள் வந்து ஆடிய களைப்பில் அமர்ந்திருக்க, அவர் முன்னே ஒருவர் வந்து மிகவும் பவ்யமாய் நின்று,

“சாமி, நீங்க இம்புட்டு நேரோ சொன்னபடியே நாங்க கண்டிப்பா நடந்துக்குறோ.. ஆனா பாற பொங்கல இப்படி ஒடனே நடத்த சொன்னா எப்படிங்க சாமி.. எல்லா ஏற்பாடு செய்யணும்ல…” என்று பயந்த படி கேட்க,

கோடாங்கி வேகமாய் அவரை முறைத்து “ஏய்…… நாந்தே சொல்லுறேன்ல.. இந்த ஊரு மக்க, வெள்ளாம வெளச்சாலு, ஆடு, மாடு, கோழி  எல்லா காவந்தா இருக்கணும்னா, நம்ம அய்யனுக்கு கெடா வெட்டி, பொங்க போட்டு, சாராயம் வாங்கி வச்சு, எல்லார் வேண்டுதலையும் செலுத்துனாத்தே அய்யன் மனசு குளிரும்.. நா குறிச்ச நேரத்துல குறிச்ச நாளுல பாற பொங்க நடக்கணும்.. ” என்றவர் அதற்குமேல் கூற எதுவும் இல்லை என்பது போல சாய்ந்துவிட்டார்.

பாறை பொங்கல் என்பது சோலையூரின் மிகவும் முக்கியமான திருவிழா.. காவல் தெய்வமாய் விளங்கும் அய்யனாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, நேர்ந்து விட்ட கிடாவை மாலை அணிவித்து, மஞ்சள் நீரால் குளிப்பாட்டி,   ஒரு பாறையின் மீது வைத்து வெட்டி ரெத்த பலி கொடுத்து, வெல்லம் போடாத வெள்ளை பொங்கல் செய்து, சாராயம் படைத்தது, இது போக தங்களுக்கென்று தனிப்பட்ட வேண்டுதல் இருந்தால் அதையும் நிறைவு செய்து வழிபடுவதே பாறை பொங்கல்.

வருடா வருடம் நடைப்பெறும் இத்திருவிழா கோடாங்கி அருள் வந்து கூறிய பிறகே அனைத்தும் முடிவு செய்யப்படும்.. ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கை காசு போட்டு கோலாகலமாய் நடக்கும் பாறை பொங்கலில், சாராய விருந்தும் மிகவும் பிரசித்தம்.  

எப்பொழுதும் ஒரு மாதத்திற்கு முன்பே கோடங்கி அருள் வந்து கூறிவிடுவார், ஆனால் இம்முறையோ அடுத்த வாரத்திலேயே பாறை பொங்கல் நடந்த வேண்டுமென்று கூறிவிட, அனைவரும் அதிர்ந்து நின்றனர். அதெப்படி ஒரு வாரத்தில் அனைத்தும் செய்திட முடியும்..

அதுவும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டுமே.. இல்லாவிட்டால் அய்யனார் கோவம் அடைந்து எதுவும் விபரீதம் நேர்ந்துவிட்டால்.. இந்த பயமெல்லாம் அவர்களை வந்து சூழ்ந்துகொள்ள ஒரு குழப்பமான சூழல் நிலவியது..

கோடாங்கி அருள் இறங்கி சாய்ந்துவிட, சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்..

அத்தனை நேரம் தங்கராசு, கரிகாலன் மனதில் இருந்த கோவம் எல்லாம் இப்பொழுது பாறை பொங்கல் வந்து போக்கிவிட சிந்தனைகள் மாறுபட்டு அடுத்த வேலையை கவனிக்க சென்றனர்.. ஆனால் கரிகாலன் மனதில் மட்டும் ஒரு முள் சுருக் சுருக்கென்று தைத்துக்கொண்டே இருக்க, வீட்டிற்கு வந்தவன் கட்டாந்தரையில் மல்லாக்க விழுந்து படுத்தான்..

மனதில் பலவேறான எண்ணங்கள் ஓடினாலும், அவனது எண்ணக்கலவைகளின் முதன்மையாக தங்கராசுவின் அமிலம் தடவிய சொற்களே வலம் வந்தன.. 

“ஒருவேள ஏ வாழ்க்க இப்டியே ஒண்டிக்கட்டையா போயிருமோ… எனக்குன்னு யாரும் இருக்கமாட்டாங்கலோ.. ” என்ற எண்ணம் தோன்ற சட்டென்று அவனுக்கு தங்கமலரின் நினைவு வந்தது..

சுற்றி சுற்றி வருவாள். எத்தனை முறை திட்டினாலும், முகத்தில் அடிப்பது போல் பேசினாலும் அதையெல்லாம் பெரிதுப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் தன்னை தேடி வருபவள், இப்பொழுதெல்லாம் கண் முன்னே வருவது கூட இல்லை என்று தோன்றவும் அவனுக்கு மனம் வலித்தது..

ஒருவேளை அவளும் என்னை வெறுத்துவிட்டாளோ?? இல்லை இருக்கவே இருக்காது.. அதெப்படி முடியும்… இப்படியாக அவன் மனம் அவனிடமே போராட முடிவில் அவனுக்கு தங்கமலர் அவனை வெறுத்துவிட்டதாகவே பட்டது.

அடுத்த நொடியே, அதெப்படி அவள் தன்னை வெறுக்கலாம்?? என்ற கேள்வி எழ, பதிலுக்கு அவள் தங்கராசுவின் மகள் தானே, தந்தையின் குணம் பாதி இருக்குமல்லவா என்று அவன் மனம் பதில் சொல்ல, அவனுக்கு கிடைத்த இப்பதிலில் கொதித்து போனான்..

தன்னுடைய இத்தனை குழப்பத்திற்கும், மன வருத்தத்திற்கும் காரணம்  தங்கராசு என்றே எண்ணினான்.. கரிகாலன் மனதில் ஏற்கனவே தங்கராசுவின் வார்த்தைகள் விதைத்த வன்மம் இப்பொழுது விருட்சமாய் வளர்ந்து நின்றது..  

“என்னைய பாத்து நீ என்னென்ன கேட்டியோ அத்தனையும் பொய்யாக்குறே.. நானா நாதியத்தவே… வாழ்ந்து காட்டுறேயா.. குடும்பமா பொண்டாட்டி புள்ளைன்னு வாழ்ந்து காட்டுறே… ஒரு நா இல்ல ஒரு நா நீயா வந்து எங்கிட்ட பேசுவ… பேச வைக்கிறே…” என்று சூளுரைத்தவன் மனதின் திண்ணமாய் ஒரு முடிவு தோன்றி மனதில் தெளிவு பிறந்தது..

இவன் மனம் இப்படி ஒரு முடிவில் தெளிந்திருக்க அங்கே தங்கமலரோ செய்வது அறியாமல் படுத்துக்கிடந்தாள்.. கூலிக்கு என்று எங்கேயும் செல்வதுமில்லை.. தங்கராசு கூட ஓரிரு முறை கேட்டுவிட்டார்..

ஆனால் மரகதமோ, “இந்தா வயசு புள்ள வீட்ல இருக்குறதுத்தே நல்லது.. இப்ப இவ கொண்டு வர காசுலத்தே சோறு பொங்கனுமோ… போயி ஓ சோலிய பாரு.. மொத மகளுக்கு கல்லாணம் பண்ணி குடுக்க ஏற்பாடு செய்யி.. அத விட்டு வந்தாச்சு கூலிக்கு போலியான்னு கேட்டுகிட்டு..” என்று சிடு சிடுக்கவும் அமைதியாகிவிட்டார் தங்கராசு..

அன்றிலிருந்து தங்கமலர் வெளியே எங்கேயும் செல்வதில்லை.. மரகதம் கூட மகள் இப்படி முடங்கி கிடப்பது கண்டு மனம் வருந்தினாலும் ஒரு கல்யாணம் நடந்துவிட்டால் அனைத்தும் சரியாகி போகும் என்றே எண்ணினார்..

அவ்வபோது அன்னமயில் வந்து பார்த்து பேசி செல்வாள்.. ஆனால் அவளிடம் கூட தங்கமலர் பேசுவதை குறைத்துக்கொண்டாள்.. குறைத்துக்கொண்டாள் என்பதை விட அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை அதுதான் உண்மை. பெயருக்கு உண்டாள், உறங்கினாள்.. அனைத்தும் எதோ ஒரு கட்டாயத்தின் பேரில் செய்தாள்..

அப்படிதான் இன்றும் வீட்டில் படுத்துக்கிடந்தாள்.. மரகதமோ மகளின் முகத்தை ஒரு பார்வை பார்ப்பதும், அடுப்படியில் ஒரு கண்ணுமாய் இருந்தார்.. அவருக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரித்துக்கொண்டே சென்றது எங்கே இவள் தவறாய் எதுவும் முடிவு எடுத்துவிடுவாளோ என்று..

“அய்யனாரே ஏ மவளுக்கு ஒரு நல்ல வாழ்கைய குடு.. அடுத்த பாற பொங்கலுக்கு சேவ அருக்குறே..” வேண்டிய நேரம் தங்கராசு வீடு வந்து சேர்ந்தார்..

“மரகதோ குடிக்க நீர் மோரு குடு…. ஏ புள்ள தங்கோ என்ன இப்படி படுத்துகிடக்க.. ஒடம்பு எது சரியில்லையா புள்ள..” என்று விசாரிக்கவும், ஒருநொடி தந்தையின் கரிசனத்தில் கண்ணில் நீர் முட்டியது தங்கமலருக்கு.

“அ.. அதெல்லா இல்லைய்யா… சும்மாத்தே…” என்று மென்று முழுங்கியவளை ஒரு பார்வை பார்த்தபடி தங்கராசுவிற்கு நீர் மோர் குடுத்தப்படியே

“கோடாங்கி அருள் வந்து ஆடுனாராம்.. என்னாச்சு” என்று கணவரிடம் வினவினார் மரகதம்.

“ஹ்ம்ம் அத ஏ கேக்குற.. அடுத்த வாரமே பாற பொங்க வைக்கணுமாம்.. என்ன செய்யிறதுன்னே தெரியல…” என்று வருத்தமாய் கூறும் கணவரை புரியாமல் பார்த்தார் மரகதம்..

“ஹ்ம்ம் அடகு வச்ச நகைய திருப்பத்தே காசு எடுத்துவச்சிருந்தே.. இப்ப அதத்தே பாற பொங்கலுக்கு குடுக்கனு.. தோட்டத்துக்கு ஒர மூட வாங்கணும்… துணிமணி வாங்கனு.. ஒரு கெடா வாங்கி கணேசனுக்கு வேண்டுனபடி நேர்ந்துவிடனும்… இம்புட்டு செலவு இருக்குல..”

“ஆமால,.. இந்த மாசோ நகைய திருப்பனும்னு நாந்தேன சொன்னே.. மறந்துபோச்சி.. அதுக்கென்ன செய்யறது.. விவசாயிங்க பொழப்பு இப்டித்தே கெடக்கு.. கா காசு கண்ணுல காங்க முடியல.. பூ எடுக்குற நேரோ ஒன்னு கல்மாரி விழுது இல்ல வெயில் அடிச்சு கொழுத்துது.. வருமானம் இருந்தாத்தேன..ஏய்யா ஓ மொதலாளிக்கிட்ட கேட்டு பாக்குறது..”

“ம்ம்ச் கூறுகெட்ட தனமா பேசாதா… சும்மா எல்லாத்துக்கு அவங்ககிட்ட போயி காசு கேட்ட என்னைய என்ன நெனைப்பாங்க.. அதுவு இல்லாம தங்கோ கல்லாணத்துக்கு எதா வேணும்னா செய்யுறேன்னு சொல்லிருக்காங்க.. இப்ப போயி இத கேட்டா நல்லாவா இருக்கும்… நம்மத்தே எப்டியா பொறட்டனும்.. ”  என்று குடும்ப வரவு செலவுகளை கணவன் மனைவி இருவரும் அலசி அராய்ந்து கொண்டிருக்க, தங்கமலரோ இது எதிலுமே தனக்கு சம்ம்பந்தம் இல்லை என்பது போல இருந்தாள்.

இத்தனை வருடம் பாறை பொங்கல் என்றால் போதும், அவளும் அன்னமயிலும் சோலையூரையே ஒரு கலக்கு கலக்குவர்.. ஒருவாரத்திற்கு முன்பே டவுனுக்குள் சென்று புதுத்துணி, வளையல் அது இதென்று வாங்கி குவித்து அவர்கள் விடும் அலப்பறை சோலையூர் பிரசித்தம்.

ஆனால் இன்றோ தங்கமலர் எதிலும் அக்கறை காட்டாமல் ஏனோ தானோவென்று இருக்கவும் அன்னமயிலுக்கு பொறுக்குமா என்ன??

“அடியே தங்கோ… இங்க பாரு புள்ள இன்னும் முழுசா ஒரு வாரங்கூட இல்ல.. சேலை எடுக்கலாமா ?? இல்ல பாவாட தாவணியா??” என்று மூன்றாம் முறையாய் கேட்டும் எவ்வித பலனுமில்லை பதிலுமில்லை..

“அடியே ஒன்னத்தே கேக்குறே.. எதா பதில சொல்லு புள்ள.. இப்படி கல்லு கணக்க இருந்தா நா என்ன நெனைக்க.. இன்னிக்கு எங்கய்யங்கூட டவுனுக்கு போறே.. நீயு வரியா.. ஒனக்கு ஒரு மாத்தமா இருக்கும்ல…” என்று கேட்டவளை வெறித்து பார்த்தாள் தங்கம்..

“என்ன டி பதிலே சொல்லாம நிக்கிறவ… ”

“ம்ம்ச்.. எனக்கு எதுவு வேணா அன்னோ.. நீ போயி ஒனக்கு பிடிச்சத எடுத்து போடு.. ”

“அது சரி.. நீ வராம நா என்னிக்கு கடைகன்னிக்கு போயிருக்கே.. வா புள்ள.. ஏ இப்டியே இருக்கவ.. அய்யனாருக்கு நல்லா வேண்டிக்க.. நல்லதே நடக்கு.. நா வேணா அத்த கிட்ட பேசி ஒன்னைய கூட்டிட்டு போறே…”

“அதெல்லா வேணா… ” என்று அவள் கூறும்பொழுதே மரகதம் “போய்ட்டு வா தங்கோ.. போ போயி ஒனக்கு பிடிச்ச துணியா எடுத்துட்டு வா.. ” என்று அவள் கையில் பணத்தை திணிக்க, எவ்வித உணர்ச்சியும் காட்டாத பாவனையில் சென்றாள் தங்கமலர்..

அவளது நல்ல நேரம் என்பதா இல்லை விதியாடும் சதிராட்டம் என்பதா, இவர்கள் சென்ற அதே பேருந்தில் தான் கரிகாலனும் ஏறினான்.. அன்னமயிலும், தங்கமலரும் ஒரு இருக்கையில் அமர, கரிகாலனும் அன்னமயிலின் தந்தையும் ஒன்றாய் அமர்ந்துக்கொண்டனர்..

ஒரு நொடி ஒரே ஒரு நொடி கரிகாலனை கண்டு உள்ளம் பூரித்தாலும், அடுத்த நொடி அப்படியே பொங்கிவரும் பாலில் நீர் தெளித்தது போல அடங்கிப்போனது..

“ஹ்ம்ம் இவனுக்குத்தே என்னைய பிடிக்காதே.. பெறவு என்ன… ” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு ஜென்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்..

கரிகாலனோ, அன்னமயிலின் தந்தையோடு பேசும் சாக்கில் லேசாய் பின்னே திரும்பித்தான் பார்த்தான்.. அவனுக்கு பதிலாய் தங்கமலரின் பாராமுகமே கிடைக்கே அவனுக்கு எரிச்சல் மண்டியது..

“எம்புட்டு திமிரு… இரு டி வச்சுக்கிறே….” என்று கருவிக்கொண்டவன் அடுத்து அவள் பக்கம் திரும்பவே இல்லை..

ஆனால் விதி அப்படியே விடுமா என்ன???

வேண்டா வெறுப்பாய் ஒரு உடையை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.. அன்னமயிலோ கடையையே புரட்டி போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்..

தங்கமலருக்கோ எதிலுமே லயிப்பு இல்லை.. மெல்ல கண்களை சுழல விட்டவள் சேலைகள் விற்கும் பக்கம் பார்வை போனதும் லேசாய் அதிர்ந்து தான் போனாள்..

அங்கே கரிகாலன் சேலை எடுத்துக்கொண்டு இருந்தான்.. அதுவும் பட்டு சேலைகள் பிரிவில்…

கண்களை சுருக்கி பார்வையை கூர்மையாக்கி உற்று பார்த்தவள் அது கரிகாலன் என்று ஊர்ஜிதமாகவும் “இவனுக்கு என்ன வேல அதுவும் சேலை இருக்குற பக்கம்.. யாருக்கு எடுக்குறான்… ” என்று யோசிக்க,

“ஒருவேள பொண்ணு கிண்ணு பார்த்துட்டானோ… ” என்று தோன்றவுமே அவளுக்கு தூக்கிவாரி போட்டது..

அவ்வளவு தான் அதன் பிறகு அவள் கரிகாலனை பார்க்கவே இல்லை.. இவர்கள் சோலையூர் வந்ததே கடைசி பேருந்தில் தான்.. ஆனால் அதில் கூட கரிகாலன் வரவே இல்லை..

வருவான் வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

இன்னும் ஒரே ஒரு நாள் தான்.. மறுநாள் விடிந்தால் பாறை பொங்கல்.. சோலையூர் முழுவதும் மகிழ்ச்சி மேகம் தவழ்ந்துகொண்டிருக்க, மக்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் இருந்தனர்..

வீடு வாசல் கழுவி, வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி ஆவலோடு மறுநாளை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்..

அன்னமயிலின் பிடிவாதத்தில் ஊரை சுற்றி வந்தாள் தங்கமலர். என்ன தேடியும் கரிகாலன் மட்டும் அவள் கண்ணில் படவே இல்லை.. என்னதான் சத்தியம் செய்து இருந்தாலும், காதல் கொண்ட மனமல்லவா அவனை சற்றே எதிர்பார்த்தது..

எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று அவள் எண்ணியிருக்க, தங்கமலர் தனியாய் வீடு திரும்பும் நேரம் கரிகாலன் அவள் முன்னே வந்து நின்றான்.. அவள் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்றை கூறிக்கொண்டு..      

 

            

     

 

 

         

                

                                                 

 

Advertisement