Advertisement

மலர் – 6

“ஏன்டி தங்கோ… என்னாச்சு புள்ள ஒனக்கு?? ஏ இப்படி இருக்றவா?? ” என்று அந்த நாளின் நூறாவது முறையாய் கேட்டுவிட்டாள் அன்னமயில். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை.

“அடியே ஒன்னைய தான்டி கேக்குறே…” என்று தன் பொறுமை இழந்து கத்தினாள் அன்னமயில்.

“ம்ம்ச், இப்ப ஒனக்கு என்ன புள்ள வேணு?? ஏ இப்படி கத்துறவ.. போ.. போயி எதா சோலி இருந்தா பாரு…” என்று எரிச்சலாய் பதில் சொன்னவளை விழிகள் விரித்து பார்த்தாள் அன்னமயில்.

சிறிது நாட்களாகவே தங்கமலர் இப்படித்தான் அமைதியின் சொரூபமாய் மாறிவிட்டாள்.. கூலிக்கு போவது இல்லை, அன்னமயிலோடு ஆறு, அருவி, வயக்காடு என்று எங்கும் சுற்றுவது இல்லை. அத்தனை ஏன் அவளது பிரியமான அத்தையின் வீட்டிற்கு கூட செல்வது இல்லை..

வீடு…. வீடு… வீடு… வீடு மாட்டும் தான் அவளது வாசம் ஆனது. அதையெல்லாம் தான்டி மௌனம்…. மௌனம் மட்டுமே அவளது மொழியுமானது.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் புரியாத அன்னமயிலோ என்னவோ ஏதோவென்று குழம்பிப்போனாள். தன் தோழியின் காதல் விஷயம் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தங்கமலர் இப்படி இருப்பதும் அவளுக்கு பிடிக்கவில்லை.

இரண்டொரு நாட்கள் பொறுத்துப் பார்த்தவள், கிளம்பி நேராய் தங்கமலரின் வீட்டிற்கு சென்றாள்.  அவளது தோழிக்கு பதிலாய் மரகதம் தான் வரவேற்றார்..

“என்ன டி இந்நேரமே வந்திருக்கவ?? ”

“அது.. அது வந்து… அத்தே… எங்க அவ ?? அதே தங்கோ…. அவ எங்க ??” என்று கேட்டவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் மரகதம்..

“என்னத்தே.. கேக்குறேல.. சொல்லு.. எங்க அவ…”

“ஹ்ம்ம் அவதேன… இன்னு மகாராணிக்கு பொழுது விடியல… அங்க பாரு..” என்று இன்னும் படுக்கையில் இருந்து எழாமல் படுத்துக்கிடந்த தங்கமலரை காட்டிவிட்டு தலையில் அடித்தபடி,

 “ அன்னோ, நா வர வரைக்கும் அவ கூடவே இரு புள்ள.. எங்கிட்டு கெளம்பி போயிடாத.. ஒரு முக்கியமான சோலியா போறே.. ரெண்டு பேரு ஆக்கி திண்ணுட்டு இங்கனவே இருங்க..”  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..

மரகதம் வெளியில் சென்றதும் அடுத்த நொடி எழுந்து அமர்ந்த தன் தோழியை தான், இத்தனை கேள்வி கேட்டு அன்னமயில் அந்த காலை பொழுதிலேயே விசாரித்துக்கொண்டு இருந்தாள்..

ஆனால் தங்கமலரோ, அவள் கேட்பது எல்லாம் தன்னிடம் அல்ல, வேறு யாரிடமோ கேள்வி கேட்கிறாள் என்பது போல தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்..

“அடியே இப்ப சொல்ல போறியா இல்லையா டி… ” என்று அன்னமயில் குரலை உயர்த்தவும் தான், தங்கமயில் அவளை திரும்பிப்பார்க்க, திரும்பிப் பார்த்தவளின் விழிகளோ கண்ணீர் சொறிய தயாராய் இருந்தது.. 

“ஏய்.. என்ன டி.. இப்ப நா என்ன கேட்டுபுட்டேன்னு அழறவ?” என்று பதறிபோய் கேட்ட அன்னமயிலின் தோளில் சாய்ந்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழவே தொடங்கிவிட்டாள்..

“ஏய் என்ன டி ??என்னாச்சு புள்ள?? ” என்று கேட்கும் போதே அன்னமயிலுக்கு பயத்தில் குரல் நடுங்கியது..

“அன்னோ… ” என்று வாய் திறந்தவளுக்கு மேற்கொண்டு எதுவும்  பேசமுடியாமல் அழுகை வந்து முட்டியது..

இதுவரை எதற்குமே அழாதவள், இன்று இப்படி அழுவதை கண்டு தோழியின் உள்ளமும் நடுங்கித்தான் போனது…

“என்ன தங்கோ.. என்ன டி….  ??”

“எல்லாமே போச்சு டி… எல்லா முடிஞ்சு போச்சு டி அன்னோ….  ” என்று கூறிக்கொண்டே பெருங்குரல் எடுத்து அழ தொடங்கியவள் அப்படியே நிலத்தில் சரிந்து அமர்ந்தாள்..

“என்ன டி.. எதுனாலு வெளங்குற மாதிரி சொல்லு புள்ள.. என்னாச்சு??” என்று அவள் கண்களை துடைத்தபடி கேட்டாள் அன்னமயில்.

“அம்.. அம்மாக்கு எல்லா.. வி.. விசயமும் தெரிஞ்சு போச்சு புள்ள…” என்றவள் கேவி அழத்தொடங்கினாள்..

இதை கேட்ட அடுத்த நொடி ஓரளவு என்ன நடந்திருக்கும் என்று அன்னமயிலுக்கு புரிந்தது.. ஆனாலும் இப்படி தங்கமலர் அழுது பார்த்திராதவள், அவள் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டால் சற்றே அவளது மனதில் இருக்கும் கவலை குறையும் என்று எண்ணினாள்..

“ம்ம்ச்.. தங்கோ… தங்கோ.. இங்க பாரு டி.. என்னைய பாரு புள்ள.  என்ன ஆச்சுன்னு சொல்லு டி.. நீ எதா சொன்னாதேன எனக்கு புரியு…”

“நா என்னானு சொல்ல புள்ள, என்னானு சொல்ல… அம்மா… இனிமே கரியன பாக்க கூடாது, பேச கூடாதுன்னு சத்தியோ வாங்கிடுச்சு  டி… ” என்றவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை..

அவளது கண்ணீரை கண்டபிறகே, அன்னமயிலுக்கு, தங்கமலர் கரிகாலனை எத்தனை நேசிக்கிறாள் என்பது புரிந்தது.. வயது பெண்கள் யார் மீதாவது காதல் வயப்படுவதும், பின் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவதும் நடப்பது ஒன்று தானே என்று எண்ணியிருந்தாள்..

என்னதான் தோழியை பற்றி தெரிந்தாலும், தங்கராசு இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று நன்கு தெரிந்ததால், தங்கமலரின் கரிகாலன் மீதான நேசத்தை அன்னமயில் அத்தனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை..

ஆனால் இன்றோ, கண்கள் கலங்கி, விரக்தியை மட்டுமே முகத்தில் ஒப்பனையாய் பூசி, இனி வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல் பேசும் தங்கமலரை காண காண அவளுக்கு மனம் துடித்தது..

“ஏ புள்ள அப்.. அப்போ நீ நெசமாத்தே கரியண்ணன விரும்புறியா ??? ” என்றவளை அழுகையினூடே முறைத்து பார்த்தாள் தங்கமலர்..

“என்ன டி கேக்குறேல…??? ”

“என்னைய என்னானு புள்ள நீ நெனச்சுகிட்ட, சும்மா கரியங்கூட பழகிட்டு அப்புறோ எங்கய்யா பாக்குறவனுக்கு கழுத்த நீட்டுவேன்னு நெனச்சியா??” என்று ஆங்காரமாய் கேட்டவளை, பாவமாய் பார்த்தாள் அன்னமயில்..

ஆனால் ஆங்காரமாய் பேச ஆரம்பித்த அன்னமயிலோ மீண்டும் அழுகையை ஆரம்பிக்கவும்,  

“ஏய்.. தங்கோ, மொதோ அழுகுறத நிறுத்து டி.. என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. நீ சொன்னாதேன நா எதா செய்ய முடியுமான்னு பாக்க முடியு… ” என்று கூறிய தோழியை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் தங்கமலர்..

“என்ன டி அப்படி பாக்குறவ, நெசமாத்தே சொல்லுறே.. இத்தன நாளா நீ சும்மா எதோ சொல்லிட்டு இருக்கன்னு நெனச்சே புள்ள.. ஆனா நீ இப்படி அழவுந்தான் எனக்கு சங்கடமா இருக்கு..” என்று வருந்திய தோழியை லேசான முறுவலோடு பார்த்தாள் தங்கமலர்..

“என்ன டி ஒனக்குத்தே கிறுக்கு பிடிச்சு இருக்குன்னா என்னையும் பைத்தியக்காரி ஆக்க பாக்குறியா ?? ஒன்னு சிரி இல்ல அழு.. ஆனா என்னாச்சுனு சொல்லிபுட்டு செய்யி…”  

“அது வந்து புள்ள … அன்.. அன்னிக்கு.. ” என்று கூற ஆரம்பித்தவளின் கண்களிலும் அன்று நடந்த காட்சிகள் மீண்டும் படமாகின..

அன்று, அந்த ஒற்றை மரத்தை கண்டு பயந்து மயங்கி விழுந்த தங்கமலரை கரிகாலன் தானே வீடு வரை கொண்டு வந்து விட்டு சென்றது.. ஆனால் வீட்டினுள்ளே நுழைந்த தங்கமலருக்கோ அவள் அன்னையின் முறைப்பான முகமே வரவேற்பு கொடுத்தது..

“எதுக்கு இந்தம்மா இப்ப காளி வேஷம் போடுது…” என்று எண்ணியவள்,

“என்னமா இம்புட்டு சூடா இருக்க?? என்னாச்சு..??” என்று வழக்கமான நக்கலில் கேள்வி எழுப்பியவளின் கன்னம் தீயை தொட்டது போல் எறிந்த பிறகே மரகதம் அவளை அடித்தது அவளுக்கு புரிந்தது..

“அம்மா!!!!!….” கன்னத்தில் கை வைத்து எதற்கு இந்த அடி என்று தெரியாமலும், கன்ன எரிச்சல் தாங்காமல் கண்களில் நீர் வழிய நின்ற மகளை பார்த்து ஒரு நொடி தாயின் உள்ளம் உருகித்தான் போனது..

ஆனால் இது உருகும் நேரமல்லவே.. சற்று இறக்கம் காட்டினால் கூட அனைவரின் வாழ்வு அல்லவா வீணாகி போகும்.. இளக தொடங்கி இருந்த மனதை சட்டென்று கடினமாக்கிக்கொண்டு,

“ என்ன டி எல்லா செஞ்சுபுட்டு ஒன்னு தெரியாதவ மாறி வந்து கேக்குறியா என்னாச்சுன்னு??” என்று வேக மூச்சுகள் எடுத்து கேட்கும் அன்னையை இன்னும் புரியாத பார்வை தான் பார்த்தாள் தங்கம்..

“என்ன டி, ஓ கள்ளத்தனம் எல்லா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா ?? உண்மைய சொல்லு எங்க போய்ட்டு வர இப்ப ??” என்றதும் தூக்கி வாரி போட்டது தங்கமலருக்கு..

“ம்ம்.. ம்மா…  ”

“சொல்லு தங்கோ.. எங்க போய்ட்டு  வர ?? ”

அன்னையின் குரலில் கடினம் கூடுவதை உணர்ந்துகொண்டவள்,” அத்.. அத்தை வீட்டுக்கு…  ” என்று கூறிய நொடி மறு கன்னமும் எரிந்தது அவளுக்கு..

“பொய் சொல்றியா டி.. எங்கிட்டயே.. ஒன்னைய நா வெகுளி புள்ளன்னு நெனச்சேனே டி.. ஆனா இப்படி வந்து சிக்கல்ல மாட்டி நிக்கிறியே” என்றவர் தன் நெஞ்சில் ஆடிக்கொண்டு அழவே தொடங்கிவிட்டார்..

அப்பொழுது தான் தங்கமலருக்கு உரைத்தது, உண்மை அனைத்தும் தெரிந்துகொண்டு தான் தன்னிடம் இப்படி ஒரு விசாரணை என்று.. ஆனாலும் அத்தனை நேரம் அடி வாங்கும் பொது வலிக்காத ஏதோ ஒன்று கண் முன்னே அவளது அன்னை தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுவது வலித்தது..

“யம்மா… யம்மா… ஏ மா இப்படி பண்ற ??  யம்மா ” என்று வேகமாய் மரகதத்தின் கைகளை பிடித்து தடுக்க முயற்சி செய்தாள்..

“நா என்ன டி செய்வே, நீ செய்ற காரியோ உங்கய்யனுக்கு தெரிஞ்சா அந்த மனுசே அந்த கரியன வெட்டி பொலி போட்டுட்டு, ஒன்னைய உறிச்சு உப்புகண்டம் போற்றுவாறு டி…  அய்யோ நா என்ன செய்வே….. ” என்று சரிந்து அமர்ந்தார்..

“ம்மா.. மா அழுகாத ம்மா.. ம்மா..” என்று கெஞ்சும் மகளை தன் மடியில் சரித்துக்கொண்டு,

“பாவி மகளே ஒனக்கு ஆச வைக்க வேற ஆளே கெடைக்கலையா டி.. கரியனத்தே ஒனக்கு பிடிக்கனுமா?? என்ன தங்கோ எதுக்கு புள்ள இப்படி செஞ்சவ ?? ”

கோவமாய் பேசினால் பதிலுக்கு கோவமாய் பேசலாம்.. ஆனால் இப்படி வருந்தி அழும் அன்னையிடம் தங்கமலர் என்ன பதில் கூறுவாள்..

“ம்மா.. இல்ல ம்மா  அது வந்து… அது… ”

“வந்து போயி எல்லாம் வேணா புள்ள, அம்மா சொல்றத கேளு.. ஒனக்கு இந்த கூலி பொழப்பே வேணா புள்ள, கா காசோ அர காசோ மாச சம்பள வாங்குனவனுக்கு கட்டி குடுக்குறோ.. நீ பாட்டுக்கு நிம்மதியா பொழப்ப நடத்து.. சொன்னா கேளு தங்கோ…”

அத்தனை நேரம் மரகதத்தின் மடியில் படுத்திருந்தவள் படக்கென்று நிமிர்ந்து “என்னம்மா எல்லா தெரிஞ்சுக்கிட்டு நீயே இப்படி சொல்ற??  ” என்று கண்ணீர் வடிய கேட்டாள்..

“அடியே, நா சொல்றது ஒனக்கு வெளங்குதா இல்லியா ?? உங்கய்யன நெனச்சு பாரு டி.. அந்த மனுசனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு.. அதுவு இல்லாம நீயு இந்த மழை, குளிரு, வெயில்ல பொழப்ப ஓட்டணுமா டி.. நிம்மதியான வாழ்க்க அமைச்சு கொடுப்போ புள்ள… அத சந்தோசமா வாழ பாரு… ”

“ஏ சந்தோசம், நிம்மதி எல்லா இங்க தாம்மா இருக்குது… ”  என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, அவளது இரு கைகளையும் பற்றி

“அடியே நா சொல்றது கேளு டி.. ஒனக்கு கரியான விட நல்ல மாப்ள பாத்து கல்லாணம் கட்டி வைக்கறே டி.. ஒனக்கு இந்த பொழப்பு வேணா புள்ள.. அதுவு இல்லாம உங்கய்யன் நிச்சயமா இதுக்கு சம்மாதிக்காது. தேவ இல்லாம ரெண்டு உசுரு போயிரும் டி… ” என்றதும் திடுக்கிட்டு பார்த்தாள் தங்கமலர்.

மரகதம் சொல்வது அனைத்தும் உண்மை தான்.. ஆனால் அவளது காதல் கொண்ட மனமோ அதை ஏற்க மறுத்தது.. தாயின் சம்மதத்தை பெற்றுவிட்டால் எப்படியும் தந்தையை சமாளித்து விடலாம் என்று இவளது ஆசை மனது கணக்கிட,

மரகதமோ, பின்னால் வரும் விபரீதங்களை நினைத்து மகளின் மனதை மாற்ற எண்ணினார்.. நிச்சயம் இவ்விசயம் தங்கராசுவிற்கு கோபத்தை உண்டு செய்யும்.. அதுவும் உயிர் பலி கேட்கும் கோவமாய் தான் இருக்கும்.. அப்படி இருக்கும் பட்சத்தில் சோலையூரில் ரத்த ஆறு ஓடும் என்பதில் சிறிதும் ஐயம்  இல்லை..

மகளின் விருப்பத்திற்கு சரி என்று கூறி வரும் ஆபத்தை தானே ஆரத்தி எடுத்து வரவேற்க அவர் தயாராய் இல்லை.. கரிகாலன் தான் எடுத்து கூறினால் கேட்டுக்கொள்வான் என்று எண்ணியவருக்கு தன் மகளை சமாளிப்பது தான் பெரும் பாடாய் இருந்தது..

வயதுக்கு வந்த பெண்ணை அடக்கவும் மனமில்லை ஆனால் அன்பினால் அடக்கலாமே.. அன்பென்னும் ஆயுதத்தை தான் இப்பொழுது கையில் எடுத்தார்..

“கண்ணு.. தங்கோ சொன்னா கேளு டி… ஒங்கண்ணேந்தே, கல்லாணம் ஆகவு பொண்டாட்டி பேச்ச கேட்டு போயிட்டான்.. நீயாது அம்மா சொல்றத கேளு டி… நீ மட்டு கரியன கல்லாணம் கட்ட பிடிவாதம் பிடிச்சா ஒன்னு உங்கய்யே அவன வெட்டும், இல்ல அதுவே ஏதாவது பண்ணிக்கிடும் டி… ஒன்னு நீ தாலியருக்கணும், இல்ல நா தாலி அறுத்து மூழியா  இருக்கனுமா ???? ” என்று கேட்கவும்,

“அம்மா….!!!!!!!!!!!!!!!!!! ” அலறியேவிட்டாள் தங்கமலர்..

தங்கமலர் வாயாடி தான், பிடிவாதக்காரி தான்.. ஆனால் அவளுக்கும் அன்பு பாசம் எல்லாம் இருக்கும் தானே.. மரகதம் கேட்ட கேள்விக்கு அவளால் பதில் கூற முடியவில்லை..

அமைதியாய் பதில் கூற முடியாது விசும்பியபடியே இருந்தாள்.. ஆனால் அவளது மனமோ சிறிதும் அமைதியாய் இல்லை… இந்த நொடியே கரிகாலனிடம் ஓடி செல்ல அவளது கால்கள் துடித்தன.. ஆனால் அசைய கூட முடியாது அவளது அன்னையின் பாச வலை கட்டி போட்டுள்ளதே..

“என்ன டி இம்புட்டு ரோசன ??? அப்போ இம்புட்டுத்தே நீ எங்க மேல வச்சிருக்க பாசமா டி.. ஒங்கண்ணே போனதுக்கு அப்புறோ அந்த மனுசே ஒன்னைய தானடி மல போல நம்பிருக்கு.. நீயு இப்படி கழுத்தருக்கலாமா??” என்று கேட்ட அன்னையை விழிகள் வெறித்து பார்த்தாள் அந்த காதல் மலர்..

“இங்க பாரு தங்கோ, ஒனக்கு நெசமாவே நம்ம குடும்பம் நல்லா இருக்கணும், அந்த கரியன் நல்லா இருக்கணும்னு மனசுல நெனப்பு இருந்தா, எனக்கு சத்தியம் பண்ணு, இனிமே அவன பக்க போகமாட்டே, பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணு புள்ள…” என்று மரகதம் கேட்கவும் அவளுக்கு வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.. சற்று நேரத்திற்கு முன்பு தானே அவனோடு தனிமையில் நேரம் கழித்தோம் என்று மகிழ்ந்திருக்க அந்த மகிழ்ச்சி மிச்சம் மீதி இல்லாமல் துடைத்து எறியப்பட வேண்டுமா என்று இருந்தது அவளுக்கு..

“சத்தியம் பண்ணு டி தங்கோ… ” என்று மேலும் மரகதம் வற்புறுத்த, அவளுக்கோ, அன்னை கூறியது எல்லாம் கண் முன்னே அவளுக்கு காட்சிகளாய் ஓடின…   அடுத்த நொடி அவளையும் அறியாது அவளது கரங்கள் மரகதத்தின் கரத்தினை பற்றி இருந்தது…

மகள் சத்தியம் செய்துவிட்டாள் என்றதுமே அந்த அன்னையின் உள்ளம் குளிர்ந்து தான் போனது..

“அடி ஏ ராசாத்தி… பேருல மட்டு இல்ல புள்ள குணத்துலையு நீ தங்கந்தே…” என்று அவள் முகம் வழித்து நெட்டி முறித்தவரை ஒரு வெற்று பார்வை பார்த்தாள் தங்கமலர்..

இதே பார்வை தான் அன்னமயிலிடம் அனைத்தையும் கூறி முடிக்கும் போதும் இருந்தது..

அனைத்தையும் கேட்ட அன்னதிற்கோ மரகதம் கூறியது எதுவுமே தவறில்லை என்று தோன்றினாலும், தோழியின் வாழ்வு இப்படியே கண்ணீரில் கரைந்துவிடுமோ என்று அஞ்சவும் செய்தாள்..

“இப்ப என்ன டி செய்யலாம்னு இருக்கவ??”

“ம்ம்ச்.. என்ன செய்ய?? அதா எல்லா முடிஞ்சு போச்சே…” என்றவள் முகமோ மனதில் முடிவு எடுத்துவிட்ட தெளிவை காட்டியது..

“ஏ தங்கோ பொய் சொல்லாத டி.. நீ மனசுல வேற என்னத்தையோ நெனச்சி இருக்க.. ஒழுங்கா உண்மைய சொல்லு டி..   ”

“ம்ம் அதெல்லா ஒண்ணுயில்ல புள்ள.. ” என்றவளிடம் அடுத்து என்ன கேட்டும் பதில் இல்லை..

நடந்த எதுவுமே தெரியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கரிகாலனுக்கோ ஏன் என்றே தெரியமால் மனம் சோம்பி இருந்தது..

“ச்சே என்ன டா இது… என்னிக்கு இல்லாத திருநாளா இன்னிக்கு இப்படி இருக்கு..” என்று தனக்கு தானே புலம்பியபடி களை எடுத்துக்கொண்டு இருந்தான்..

உச்சி வெயில் மண்டையை பிழக்க, வியர்வையோ உடலை நனைக்க, தன் எண்ணங்கள் பின்னிய வலையில் சிக்கியவனுக்கோ வேலையே ஓடவில்லை..

“ஏ கரியா என்ன ஒடம்பு எது சரியில்லையா ” என்று உடன் களை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவர் கேட்ட பின்னே சுதாரித்து

“ஹா.. அதெல்லா ஒன்னுயில்ல மாமா… கொஞ்சோ தலையிடி அதே… ” என்று சமாளித்தான்..

“ஹ்ம்ம் இதுக்குத்தே காலாகாலத்துல கல்லாணம் செய்யனும்னு சொல்றது.. ஒனக்குன்னு ஒருத்தி இருந்தா ஏன் டா நீ இப்படி கெடந்து தவிக்க போற.. ” என்றவர் மேற்கொண்டு அவர் வேலையை தொடர,

கரிகாலனோ அவர் கூறியதில் திகைத்து நின்றான்…

“ஒருவேளை இப்படியும் இருக்குமோ??? ” என்ற எண்ணம் எழ, அழைப்பிதலே இல்லாமல் தங்கமலரின் நியாபகம் வந்தது அவனுக்கு..

அதன் பிறகே அவனுக்கு தோன்றியது, அவளை பார்த்தே நாட்கள் சில ஆனது என்று..

எப்பொழுதுமே தேடி வந்து பேசும் அவளை இந்த சில நாட்களாக காணவில்லை.. வேறு யாருக்கும் கூலிக்கு சென்றதாகவும் அவனுக்கு தெரியவில்லை..

“ஒருவேள ஒடம்பு எதுவு சரியில்லையோ ” என்று அவன் நினைக்கும் பொழுதே அவன் மனம் அப்படி எதுவும் இருந்துவிட கூடாது என்று எண்ணியது..

அவனை நினைத்து அவனுக்கே வியப்பாய் தான் இருந்தது.. யாரிடம் இருந்து விலக நினைக்கிறானோ அவளிடமே மனம் செல்வதை எண்ணி..

“ஒருவேள அவங்கப்பனுக்கு எதுவு விசயோ தெரிஞ்சு இருக்குமோ.. நேத்து இருந்து அந்தாளு பார்வையே சரியில்லாம இருந்துச்சு  ” என்று நினைத்தவனுக்கு, அவனது மனமே பதில் உரைத்தது என்று உன்னை தங்கராசு நல்ல விதமாய் பார்த்திருக்கிறார் என்று..

சரி எதுவாக இருந்தாலும் தன்னை அவள் தொல்லை செய்யாமல் இருந்தால் அதுவே போதும் என்று தனக்கு தானே சமாதானம் செய்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான்…

               

                       

              

           

   

  

       

             

              

  

             

             

Advertisement