Advertisement

மலர் – 5

“என்ன டி பொன்னு சொல்றவ??? நெசமாத்தே சொல்றியா??” என்று அதிர்ச்சியாய் நெஞ்சை பிடித்தபடி கேட்டார் மரகதம்..

“நெசந்தே சித்தி… நா காதார கேட்டே… நம்ம தங்கோந்தே அப்படி சொல்லுச்சு… நா ஓங்கிட்ட பொய் சொல்லவேணா சித்தி.. எனக்கு ரெண்டு நாளா ஒறக்கமே இல்ல.. நீ எப்படா வருவ, ஓ காதுல எப்படா விசயத்த போடலாம்ன்னு இருந்தே…” என்று உணர்ச்சி மயமாய் பேசிய பொன்னக்காளை கலக்கமாய் பார்த்து நின்றிருந்தார் மரகதம்..

எந்த அன்னைக்கு தான் தன் மகள் ஒருவனை விரும்புகிறாள் என்று கேள்விபட்டதும் மகிழ்ச்சியாய் இருக்கும்.. அவன் நல்லவனாகவே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் தானே..

இரண்டு நாட்கள் கழித்து அன்று தான் மருத்துவமனையில் இருந்து  சோலையூருக்கு வந்திருந்தனர் அனைவரும்.

ஒருவழியாய் பொட்டியம்மாளின் மகன் கணேசன் உயிர் பிழைத்துவிட, மருத்துவர்களும் இரண்டு நாட்கள் வைத்து கவனித்து பின்னே ஊருக்கு அனுப்பிவிட்டனர்..

வந்ததும் உடனே தங்கராசு தன் காட்டிற்கு சென்று விட, எப்போதடா தனிமை கிடைக்கும் என்று காத்திருந்த பொன்னக்கா வேகமாய் வந்து மரகதத்திடம் விஷயத்தை போட்டுவிட்டார்…

முதலில் நம்ப மறுத்தாலும் மரகதத்தின் மனமோ பொன்னக்காள் எப்பொழுதும் பொய் கூறமாட்டார் என்பதை நேரம் காலம் தெரியாமல் உணர்த்த, அடுத்து என்ன செய்வது, மகளை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் உறைந்து நின்று விட்டார்..

“என்ன சித்தி ஒங்கிட்ட வந்து சொன்னா எதா செய்வன்னு பாத்தா இப்படி நிக்க…  ” என்று உலுக்கினார் பொன்னக்கா..

“என்ன டி சொல்ற… நா என்ன செய்ய முடியு.. இதுமட்டு அந்த மனுசே காதுல விழுந்தா அம்புட்டுத்தே.. ரத்த ஆறே ஓடுமே டி.. ஐயோ நா என்ன செய்வே…” என்றவர் தலையில் கைவைத்து அமர்ந்தே விட்டார்..

“அட என்ன சித்தி நீயி??? கரியே மாதிரி ஒரு ஆளு எங்க தேடுனாலு கெடைப்பானா?? நீதே சித்தப்பா மனச மாத்தனு.. நம்ம தங்கத்துக்கு ஏத்த ஆளு கரியே.. எனக்கு மட்டு ஒரு பொட்டப்புள்ள இருந்துச்சின்னு வையி அவே கைல கால்ல விழுந்தாவது கட்டி குடுத்திடுவே பாத்துக்கோ…” என்று கரிகாலனுக்கும் ஆதராவாய் பேச

மரகதமோ கலக்கத்தில் ஆழ்ந்தார்.. ஏனெனில் மகளின் குணம் நன்கு தெரியும் அவருக்கு.. எதிலும் ஆசை வைக்கமாட்டாள்.. ஆனால் ஒன்றை பிடித்துவிட்டால் யார் என்ன சொன்னலும் மனம் அதிலிருந்து மாறாது..

“அய்யனாரே.. என்ன சாமி இதெல்லா… நா கனவுல கூட நெனைக்கலியே… எம்மவ இப்படி செய்வான்னு… சூதுவாது தெரியாது எம்மவளுக்கு.. வெள்ளந்தியா பேசுவான்னு நெனச்சனே… இப்படி வில்லங்கத்துல கொண்டு சிக்கவச்சிட்டியே… ” என்று சத்தமாய் புலம்ப தொடங்க,

“ஐயோ சித்தி, நீயே கத்தி காரியத்த கெடுத்திடுவ போல.. விசயோ வெளிய தெரிஞ்சா நம்ம புள்ள பேருதேன கெடு..”

“வேற நா என்னத்தடி செய்ய….???? அந்த மனுஷனுக்கு மட்டு இது தெரிஞ்சா…. ஐயோ நெனைச்சு பாக்கவே முடியலையே..”

“ஒன்னைய யாரு நெனைச்சு பாக்க சொன்னா… காரியத்த நடத்திக்காட்டு சித்தி.. கரியனுக்கு என்ன கொற ?? நல்லா சம்பாத்தியம் இருக்கு, பிக்கல் பிடுங்கல் இல்ல… இவ போன எடத்துல ராணி மாதிரி இருக்கலாம்ல….     ”

“நீ சொல்றது எல்லா சரித்தே புள்ள… ஆனா….  ”

“ஐயே!!! மொதோ இப்படி தயங்குறத விடு சித்தி… புள்ள மனசுக்கு ஏத்த ஆளுக்கு கல்லாணம் செஞ்சு குடுப்பியா.. அத விட்டுட்டு பொலம்புற.. நா சொல்லவேண்டியது சொல்லிபுட்டே.. இனிமே ஓ பாடு…” என்றவர் வந்த வேலை முடிந்தது போல கிளம்பி சென்றுவிட்டார்..

மருத்துவமனையில் இருந்து வந்திருந்த கணேசனை காண தன் அத்தை வீடு சென்றிருந்தாள் தங்கமலர்..

“என்னடா கணேசா டாக்டரு எத்தன ஊசி டா போட்டாரு… ” என்று அவனை பிடித்து வம்பிளுத்தபடியே பொட்டியம்மாளுக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தாள்..

“ஏன் டி தங்கோ, எம்மவனே சாக பொழச்சி வந்திருக்கான், அவன ஏன் டி வம்பிழுக்குறவ….   ”

“ஹ்ம்ம் என்ன செய்ய, ஏ அய்த்த மவே இவந்தேன.. பெத்ததுதே பெத்த சின்ன பயலா பெத்துபுட்ட” என்று அவரையும் வம்பிழுத்தாள்..

அதே நேரம் சரியாய் வாசலில் “பொட்டியக்கா….. ”  என்ற அழைப்பு கேட்க, அந்த தொனியிலேயே வந்திருப்பது கரிகாலன் என்று அறிந்துகொண்டாள் தங்கமலர்..

“யாரு…. ” என்றபடி வெளியே வந்தார் பொட்டியம்மாள்..

“அடே வா கரியா… உள்ள வா.. ஏ வாசல்ல நிக்க…   ”        

“இல்ல இருக்கட்டுக்கா… கணேசே எப்படியிருக்கியா??? அதே பாத்துட்டு போகலாம்னு….” என்று அவன் இழுக்க

“அவே உள்ள படுத்துக்கிடக்கான்.. உள்ள வந்து பாரு சாமி….  ” என்று அவர் விடாமல் அழைக்க அதற்குமேல் அவனால் மறுக்க முடியவில்லை..

அந்த சிறு வீட்டினுள் நுழைந்தவனோ, சுத்தமாய் தங்கமலரை எதிர்பாக்கவில்லை போலும்… ஒரு நொடி, ஒரே ஒரு நொடி திகைத்து நின்றான்..

“நா வெளிய திண்ணைல இருக்கே கா…” என்று வெளியேற கிளம்ப

”அட என்ன கரியா.. தங்கோ எம்மவ மாதிரி.. நீ உக்காரு”  என்று ஒரு பாயை விரித்து போட்டார்.

“க்கும்… மகாராசாக்கு கவனிப்புத்தே….” என்று மனதில் எண்ணியபடி நொடித்தவள் வேறு யாருமில்லை தங்கமலரே தான்..

“ஏ.. என்ன டி பாத்துட்டு நிக்கிறவ… கரியனுக்கு சூடா கடுங்காப்பி போடு.. அந்த வெல்லத்த தட்டி போடு டி தங்கோ…” என்று பொட்டியம்மாள் அவளை அவசரப்படுத்த,

“யக்கா.. அதெல்லா வேணா.. நா இவன பாக்கத்தே வந்தே.. என்ன டா கணேசா இப்ப எப்படிருக்கு?? வலி எதுவு இருக்கா ??? ” அவனிடம் பேச்சை திருப்ப

அச்சிறுவனோ “ஒன்னுயில்ல மாமா.. நல்லாத்தே இருக்கே…” என்றவன் தங்கமலரிடம் திரும்பி “யக்கா எனக்கு சேத்து கடுங்காப்பி போடு ”  என்றான்..

“அப்படிசொல்லு டா ஏ அய்த்த மவனே.. நா அக்கா அவே மாமனா.. சரியாத்தே சொல்ற” என்று மனதினுள் அவனை பாரட்டியபடியும், தங்களுக்குள் உறவுமுறை பொருந்தி போவதை எண்ணியும் மகிழ்ந்து போனாள்..

தனது கனவுலகில் மிதந்தவளை, “அடியே தங்கோ என்ன கனா காங்குற.. ஒரு கடுங்காப்பி போட இம்புட்டு நேரமா..” என்று கேட்டபடி அவளை நகட்டி நிறுத்திவிட்டு அவரே போட்டார்..

“யப்பா நல்லவேள தப்பிச்சே டா சாமி.. எங்க இவ போட்டு குடுத்து ஒரு வாரம் வயிறு கெட்டு படுக்கனுமோன்னு நெனச்சே..” என்று நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சு விட்டான் கரிகாலன்..

அவனுக்கு அவன் கவலை.. ஆனால் இவன் முகத்தை வைத்து தங்கமலர் கணிக்காமல் இருப்பாளா என்ன ???

“நெனப்புத்தே பொழப்ப கெடுக்கும்…  ” என்று முனுமுனுக்க

“என்ன டி நீயா பேசுறவ… தனியா எங்கயு போகாத வராதுன்னு சொன்னா கேக்குறியா?? காத்து கருப்பு எதா அண்டிருக்கும்” என்று தன் பங்கிற்கு பொட்டியம்மாள் எடுத்துவிட, கரிகாலனோ இருக்கும் இடம் மறந்து பக்கென்று சிரித்துவிட்டான்..

வெகு நாட்களுக்கு பிறகு அவன் தன்னை மறந்து சிரிக்கின்றான் என்பது அவன் கண்களை இறுக மூடி சிரிப்பதிலேயே புரிந்துவிட்டது தங்கமலருக்கு.. ஆனாலும் பிறர் முன்பு தன்னை கரிகாலன் கிண்டலாய் சிரிப்பதா என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கு பொசுக்கென்று கோவம் வந்துவிட்டது..

“இந்தா, இப்ப என்ன எங்கத்த சொல்லிபுடுச்சுன்னு இப்படி வாய் சுளுக்க சிரிக்கிற?? காப்பிய குடிச்சோமா கெளம்புனமான்னு இருக்கனு.. அதவிட்டுபுட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு ” என்று அனைவரின் முன்னும் எகிற, அதன் பின்னே கரிகாலன் தான் செய்த காரியம் உணர்ந்து அமைதியானான்..

ஆனால் அவன் சட்டென்று தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து முகத்தை இறுக்கமாய் மாற்றிக்கொண்டதும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..
அவன் தன்னை பார்த்து சிரிக்கமாட்டானா என்று எத்தனை முறை ஏங்கியிருப்பாள்.. அது கேலி சிரிப்பாய் இருந்தால் என்ன வேறு எதுவாக இருந்தாலும் தான் என்ன??

“இந்தா இப்ப நா என்ன சொல்லிட்டே ஒடனே மொகத்த தூக்குற… ” என்று அதற்கும் சிடு சிடுத்தாள்..

“அடியே தங்கோ… என்ன நீ அவன வந்ததுல இருந்து இந்த பேச்சு பேசுறவ… உங்கய்யே தா அவன எங்க கண்டாலு காச்சுறாருன்னா நீயுமா.. போடி அங்குட்டு…” என்று பொட்டியம்மாள் விரட்டினார்..

“க்கும்… ” என்று கழுத்தை நொடித்தவள்,

“நா எங்க வீட்டுக்கு போறே… நா ஒன்னு ஓ வீட்டுல பாய் விரிச்சு படுத்துக்கிடக்க வரல..” என்றபடி செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்..

“ஓடனே ரோசோ பொத்துக்கிட்டு வந்துடு இவளுக்கு.. அடியே பாத்து போடி… பொழுது சாயுற நேரோ.. ”என்று பொட்டியம்மாள் கத்தியது தங்கமலரின்  காதில் விழவே இல்லை..

மலை பிரதேசங்களில் பொழுது விடியும் காலை நேரம் ஒரு அழகு என்றால், அந்தி சாயும் மாலை நேரமோ மற்றோர் தனியழகு.. எப்படி வேலை முடிந்து தங்கள் வீட்டிற்கு மக்கள் திரும்புகின்றனறோ அதே போல பறவைகளும் தங்கள் இரை தேடும் பணியை செவ்வனே செய்து முடித்து தங்கள் கூட்டிற்கு கூட்டம் கூட்டமாய் அழகாய் வந்து சேரும்…

மாலை நேரத்தில் மலரும் பூக்களின் வாசம் வேறு மனதை நிறைக்க, அந்த நேரத்தில் வீசும் தென்றல் காற்றிற்கு கூட ஒரு தனி வாசம் சேர்த்தது…  அதை எல்லாம் ரசித்தபடியும், கரிகாலனை பார்த்த மகிழ்ச்சியிலும்  தன்னை மறந்து நடந்துக்கொண்டு இருந்தாள் தங்கமலர்..

சிறிது தூரம் வந்த பிறகே தெரிந்தது தவறான பாதையில் வந்துவிட்டோம் என்று… பிறகே சுதாரித்து சுற்றி முற்றி பார்த்தவளின் முகம் பயத்தில் வெளிறியது…

“அய்யயோ…. ஒத்த மரத்து பக்கமா வந்தோ… போச்சு போச்சு எல்லாம் போச்சு…” என்றவளுக்கு கால்கள் பயத்தில் பின்னிக்கொண்டு நடக்க வரவேயில்லை.. அத்தனை ஏன் ஒரு அடி முன்னே நகர கூட முடியவில்லை..

சோலையூரில் ஒரு இடத்தில மட்டும் செடிகள் எதுவும் இல்லாமல் பொட்டலாய் இருக்கும்.. சிறு சிறு பாறைகளும், காய்ந்து போன வரண்டு மண் மேடுகளும், அவ்விடமே பார்க்க மனதிற்கு ஒருமாதிரி இருக்கும்..

ஆனால் அங்கே ஒரே ஒரு மரம் மட்டும் நீண்டு நெடிய தூரம் வளர்ந்து நிற்கும்.. அதன் கிளைகள் தரும் நிழலில் நாண்டு குடிசை வீடுகள் கட்டலாம்.. அத்தனை பெரிது…

பொதுவாகவே சோலையூரில் யாரும் இப்பக்கம் தப்பி தவறி தெரியாமல் கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள். காரணம் ஆவி பேய் மீது இருக்கும் பயம்.. முன்பெல்லாம் சர்வசாதாரணமாய் வந்து புழங்கிக்கொண்டு இருந்த பாதை தான்..

சில வருடங்களுக்கு முன்பு, பேச்சி என்ற இளவயது பெண்ணொருத்தி அந்த பெரிய மரத்தில் தூக்கு மாட்டி தொங்கி இறந்துவிட்டாள்.. காரணம் யாருக்கும் இன்று வரை தெரியவில்லை.. அதற்கு பிறகும் அந்த பக்கத்தில் ஆட்கள் சென்று வந்தார்கள் தான்..

ஆனால் நாட்கள் ஆக ஆக பேச்சியை தலைவிரி கோலமாய் பார்த்தோம் என்றும், போவோர் வருவோரை எல்லாம் தன் கோரை பற்களை காட்டி அழைப்பதாகவும் செய்திகள் உலவ, கொஞ்சமாய் கொஞ்சமாய் மக்கள் பயத்தில் அப்பக்கம் போவதையே தவிர்த்துவிட்டனர்..

ஆனால் இன்றோ தங்கமலர் கரியனின் நினைப்பில் எந்த பக்கம் செல்கிறோம் என்றே தெரியாமல் வந்துவிட்டாள்… அத்தனை நேரம் தோன்றாத பயம் அவளுக்கு அந்த ஒற்றை மரத்தை பார்த்த பிறகே ஒட்டிக்கொண்டு கால்கள் பின்னிக்கொண்டன…

“ஐயோ… இந்த பக்கோ சும்மா கூட யாரு வரமாட்டாங்களே.. நா என்ன செய்ய… இந்த பேச்சி பேயா வந்து என்னைய பிடிப்பாளே…” என்று இருதயம் துடி துடிக்க, முகமெல்லாம் வேர்த்து, கை கால்கள் நடுங்க நின்றிருந்தவளுக்கு, சருகுகள் மிதிபடும் சப்தம் கேட்டு சப்த நாடியும் அடங்கியது…

திரும்பிப் பார்க்கவும் பயம், திரும்பாமல் இருக்கவும் முடியாமல் திணறித்தான் போனாள் தங்கம்..

அந்த காலடிச்சத்தம் நெருங்க நெருங்க அவளது இதய துடிப்போ எகிறிக்கொண்டே போனது..

 “பேச்சி.. நீயு நானு சின்னதுல எப்படி வெளாண்டு இருக்கோம்.. ஒனக்கு நா தேனுமுட்டாயி எல்லா குடுத்து இருக்கே புள்ள.. அதையெல்லா மறந்துட்டு இப்படி என்னைய பயமுறுத்தலாமா.. வேணா ஒனக்கு நா அதே மாதிரி தேனுமுட்டாய் வாங்கித்தரே புள்ள.. என்னைய விட்று” என்று திரும்பாமல் சத்தமாகவே புலம்ப தொடங்கினாள்..

ஆனால் அந்த காலடி சத்தம் மட்டும் அவளுக்கு வெகு நெருக்கமாய் கேட்க,

“ஆத்தி நா செத்தே… எனக்கடுத்து அந்த கரியனையு பிடிச்சிடு புள்ள அப்படியாது எங்கூட சேரட்டும்… ” என்று அந்த நேரத்திலும் கரிகாலனை மறக்காது கோர்த்துவிட்டவள் கண்களை இறுக  மூடி நின்றாள்..

அந்த காலடி சத்தம் மிக அருகில் கேட்டது… இன்னும் இரண்டு அல்லது மூன்று அடிகள் தான் அவளை நெருங்கிவிடும்… ஆனால் படக்கென்று அந்த சத்தம் நின்றுவிட்டது.. கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தவளுக்கு சிறிது நேரம் ஆனது அங்கே நிலவும் நிசப்தம் பிடிபட..

காலடி சப்தம் எதுவும் கேட்காமல் போகவே, கண்களை மெல்ல திறந்து பார்த்தவளுக்கு அவளுக்கு பின்னே யாரோ நிற்பது போல் தோன்றவும், மிகவும் சிரமப்பட்டு எச்சில் விழுங்கி “யா…. யாரு…. பேச்சி.. வேணா புள்ள.. என்னைய விட்று…” என்று குரலே எழும்பாமல் கூறினாள்..

அவள் குரல் கேட்டதும் மீண்டும் அங்கே சருகுகள் மிதிபடும் ஓசை.. இதோ அவளை தொட்டுவிடும் தூரம் தான்….. அடுத்தநொடி “மலரு…. ” என்று அவளது தோள்களில் ஒரு கரம் வந்து பதிய “அய்யயோ!!!!!!!!!! ” என்று மயங்கி சரிந்தாள் தங்கமலர்..

அடுத்த சில நொடி அங்கே என்ன நடந்தது என்று அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லையே…. மேலும் சில நொடிகளில் முகத்தில் நீர் வந்து விழுவதை உணர்ந்தவள் கண்களை மெல்ல மெல்லாம் திறந்தவளுக்கு, உலகமே தலைகீழாய் சுழல்வது போல இருந்தது..

ஏனெனில் தங்கமலர் கரிகாலனின் மடியில் இருந்தாள்..

அவனோ அவள் கண் விழித்தது கூட தெரியாமல், “மலரு… ஏ மலரு… ஏ புள்ள எந்திரி… கண்ண முழிச்சி பாரு டி… ” என்று அவள் கன்னத்தை தட்டியும், அருகில் ஓடும் ஓடை நீரை ஒருகையால் எடுத்து அவள் முகத்தில் தெளித்தபடியும் இருந்தான்..

தங்கமலருக்கு இத்தனை நேரம் தான் காண்பது எல்லாம் கனவா என்று தோன்றியது.. ஒருவேளை தான் இன்னும் மயக்கத்தில் இருந்து தெளியவே இல்லையோ என்று நினைத்தவளுக்கு, இப்படியே இருந்துவிடலாமா என்று தோன்றியது.. ஆனால் அவன் ஓயாமல் கன்னத்தை தட்டியதால் லேசாய் வலி ஏற்பட

“இந்தா மெதுவா தட்டமாட்டியா.?? ” என்று கேட்டவளுக்கு எழுந்து அமரும் எண்ணமே இல்லை போலும்..

ஆனால் கரிகாலனோ அடுத்தநொடி அவளை படக்கென்று நிமிர்த்தி அமரவைத்தான்…

அவன் முகத்தில் இத்தனை நேரம் இருந்த பதட்டம் இல்லை… மாறாக கோபமே நிறைந்து இருந்தது..

தங்கமலருக்கு எழுந்து அமர்ந்தபிறகே நடந்த அனைத்தும் நினைவிற்கு வர, மீண்டும் மனதில் பயம் துளிர்க்க, சுற்றும் முற்றும் மெல்ல பார்த்தவளுக்கு சற்றே நிம்மதி.. ஏனெனில் அவள் அந்த ஒற்றை மரத்து பக்கம் இல்லை.. எதோ ஒரு ஓடையில் அருகில் இருந்தனர்..

 “இம்புட்டு தூரோ எப்புடி வந்தோ…” என்று கரிகாலனை பார்த்தாள்,  ஆனால் கரிகாலனோ அவனது பார்வையை வேறு எந்த பக்கமும் திருப்பாமல் முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

“என்ன??ஏ இப்படி மொறைக்கிற?? ”

“அ!!! வேண்டுதலு… ஒனக்கெல்லா அறிவே இல்லையாடி… புத்தியோடத்தே ஒங்கப்பே பெத்தானா இல்ல மூளைய எங்குட்டு அடகு கிடகு வச்சிட்டியா…    பொட்டபுள்ள மாறியா டி இருக்க நீயி… ” என்று அவன் பாட்டிருக்கு பொரிய தொடங்கிவிட்டான்..

தங்கமலரோ எதுக்கு இவன் திட்டுகிறான் என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள்..

“ஏன் டி.. நீ பாட்டுக்கு இங்குட்டு வரியே… ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா என்ன ஆகுறது… அதுக்கு ஒங்கப்பே நாந்தே காரணமுன்னு என் தலைய திங்கவா?? ”

“ஏ…. ஒனக்கு என்ன இம்புட்டு கோவோ… போறதுன்னா எந்திரிச்சு போ.. ஒன்னைய யாரு எங்கிட்ட இருக்கா சொன்னா.. அதென்ன எப்ப பாரு எனக்கு அறிவிருக்கான்னே கேக்குற.. ஒனக்கு கொஞ்சோ வேணுமா ??? ”

“அடிங்க… அப்படியே விட்டேன்னு வைய்யி ஓ வீட்டுல போயித்தே விழுவ.. ஆளு எம்புட்டு பேச்சு எம்புட்டு…. எந்திரி டி மொதோ…“ என்று அவளது கைகளை பிடித்து இழுத்தபடி அவனும் எழுந்து நிற்க

“இந்தா மொதோ இப்படி என்னைய தொட்டு பேசுறத விடு… நா என்ன ஓ பொண்டாட்டியா ?? எப்ப பாரு தொட்டு தொட்டு பேசுற..” என்று அவளும் பதிலுக்கு சீர, கரிகாலன் முகமோ சடுதியில் விழுந்துவிட்டது..

 

“என்ன என்ன மொகத்த தூக்குற… நா நெசத்ததே சொன்னே.. ஒடனே  ஒனக்கு வலிக்குதா.. எனக்கெப்புடி இருக்கு நீ தெனமு திட்ரப்ப.. மனசுல பாசோ இருக்குல அப்புரோ என்ன ?? ” என்று கிடைத்த தனிமையை விட்டுவிட கூடாது என்று சற்றே ஆவல் தளும்பிய கோவத்துடன் அவன் முகம் பார்த்து கேள்வி கேட்டாள்..

ஆனால் கரிகாலனுக்கா தங்கமலரை பற்றி தெரியாது.. நொடியில் சுதாரித்தவன்,

“இங்கபாரு, நேரோ ஆகுது… கொஞ்ச நேரமான இருட்டிடு… வா ஒன்னைய ஒங்க வீட்டு வரைக்கு கொண்டாந்து விட்டு போறே…” என்று நடக்க தொடங்கினான்..

ஆனால் தங்கமலரோ இருந்த இடம் விட்டு அசையாமல் இருந்தாள்..

“ம்ம்ச் என்ன டி நிக்கிறவ… வா.. இந்நேரோ ஒன்னையு என்னையு யாரா பாத்தா தப்பாகிடு புள்ள வா மொத” என்று அவள் கைகளை பிடித்து இழுத்தான்..

“ஏய் என்னைய தொடாதன்னு சொன்னேல…கைய விடு ” என்று அவனிடம் இருந்து தன் கைகளை விடுவிக்க போராடியபடி அவன் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நடந்து வந்தாள்..

“பேச்சுத்தான் டி ஒனக்கு.. ஒரு இழுப்புக்கே இப்படி வர,… என்ன ஒங்கப்பே ஒழுங்கா கஞ்சி ஊத்துறது இல்லியா ” என்று நக்கல் அடிக்க

“இங்கியாரு, விடு என்னைய… வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியு.. நீயோன்னு என்னய கொண்டு வந்து விட வேணா, என்னிக்கு இல்லாத அக்கற என்ன இன்னிக்கு…” என்று வாய் ஓயாமல் பேசியவளை மௌனமாய் ஒரு பார்வை பார்த்தான் கரிகாலன்..

“ஏன் டி ஓ வாய் மூடவே மூடாதா… அமைதியா வரியா இல்ல ஒன்னைய குண்டுகட்டா தூக்கிட்டு போயி ஓ வீட்டுல விடவா.. எது வசதி…   ” என்று மிரட்டினான்..

அவன் குரலே இவன் செய்தாலும் செய்வான் என்று தோன்ற அமைதியாய் நடந்தாள் தங்கமலர்..

வெளியே தான் கோவமெல்லாம், உள்ளுக்குள்ளோ மகிழ்ச்சி பீறிட்டுகொண்டு இருந்தது…

ஆனால் கரிகாலன் மனமோ வேறு ஒன்றை நினைத்தது..

“ஏ புள்ள மலரு…. ” அழைத்தவன் பதில் வராமல் போகவே

“ஏய் ஒன்னைய தான்டி ” என்று பிடியை இறுக்கினான்..

“சொல்லு எனக்கு காது கேக்கும்….  ”

“கொழுப்புடி ஒனக்கு… இந்த பக்கோ ஏ வந்த….???  ”

“நீ எதுக்கு வந்த ?? அத சொல்லு மொத… ”

“ம்ம்ச் எதுக்கோ வந்தே…. பொட்டபுள்ள இப்படித்தே சூதானோ இல்லாம வருவியா… பாத்து இருபுள்ள… எதோ நா வந்தே இன்னிக்கு… தெனமு இப்படி இருக்க முடியுமா ???    ” என்று அன்பாய் கேட்டவனின் குரலே அவளுக்கு புதிதாய் தோன்றியது…

இந்த சூழ்நிலையை அவள் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.. தன் இடக்கு பேசினால் ஏதாவது பேசி அவன் மீண்டும் முறுக்கிக்கொள்ள கூடாதே என்று எண்ணியவள்

“ம்ம் சரி இனிமே பாத்து நடந்துக்குறே ” என்றால் மெல்ல….

“ஹ்ம்ம் நீத்தே ஒங்க வீட்டுக்கு இப்ப ஒரு ஆறுதல் புள்ள, ஒனக்கு எதா ஆச்சுன்னா ஓ அப்பானு ஆத்தாளு என்ன செய்வாங்க.. ஓ அண்ணந்தே பொண்டாட்டி கூட போயிட்டான்.. நீயாது பாத்து நடந்துக்க”

“ம்ம் சரி… ”

இப்படியாக அவன் வண்டி வண்டியை அறிவுரைகளை வழங்கியபடி அவள் வீடு இருக்கும் வளைவு வரைக்கும் வந்து, அவள் வீட்டினுள் செல்வதை பார்த்துவிட்டே சென்றான்..

வீட்டின் உள்ளே நுழைந்த தங்கமலருக்கோ அவள் அன்னையும் முறைத்த முகமே வரவேற்பு கொடுத்தது..                      

    

  

 

                                

             

 

Advertisement