Advertisement

மலர் – 4

“டாக்டரு என்ன சொன்னாரோ… கணேசே கண்ணு முழிச்சானோ என்னவோ ??  ஏந்தே அவன வந்து பாம்பு கொத்துச்சோ…” என்று புலம்பிக்கொண்டே சேலை முந்தானையால் முகத்தில் அரும்பியிருக்கும் வியர்வையை துடைத்தபடி உடன் வந்த மரகதத்தை ஒரு பார்வை பார்த்தார் தங்கராசு…

“என்னங்க…. ”

“நீ சொல்றது ஒனக்கே நல்லாருக்கா டி.. மலங்காட்டுல இருக்கவங்கள பாம்பு கொத்தத்தே செய்யு… இதுக்கெல்லா பயந்தா பொழப்பு ஓடாது… அவனுக்கு ஒன்னு ஆகாது.. வர்றப்பவே அய்யனாருக்கு கும்பிட்டுத்தே வந்தே.. பாற பொங்க அன்னிக்கு கணேசே பேருல ஒரு சேவ அறுக்குறேன்னு…” என்றபடி துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தார் தங்கராசு..

அரசு மருத்துவமனை தான்.. அந்த காலை நேரத்திலேயே அத்தனை கூட்டம் நிரம்பி வழிந்தது…

“இம்புட்டு கூட்டத்துல எங்கன போயி தேடுறது…” என்று தயங்கி நின்ற மரகதத்தை

“அட என்ன நீ… வா நாந்தே வரேல… விசாரிப்போ” என்றவர், அருகே சென்றுக்கொண்டிருந்த செவிலி ஒருவரை விசாரிக்கவும் அவரும் கைகளை இப்புறமும் அப்புறமும் காட்டி வழி கூறி அனுப்பி வைத்தார்..

இவர்களோடு இன்னும் ஒருசிலரும் வந்திருந்தனர் சோலையூரில் இருந்து…

அனைவரும் பேசியபடியும் மனதிற்குள் வேண்டியபடியும் நடந்து செல்ல உடலில் மின்சாரம் தாக்கியது போல விரைத்து போய் நின்றார் தங்கராசு பட்டென்று…

கணவர் உடன் வருகிறார் என்று பேசிக்கொண்டே நடந்த மரகதம் இரண்டடி தூரம் நடந்த பின்பே உணர்ந்தார் தங்கராசு வரவில்லை என்று.. வேகமாய் திரும்பி பார்த்தவர், கணவர் வெறித்த பார்வையோடு உஷ்ண மூச்சுகளை வெளிவிட்டு நிற்பதை கண்டு

“ஏய்யா… என்ன மலைச்சு நிக்கிற வா….” என்றவர் தன் கணவர் பார்வை சென்ற இடம் நோக்க… அவரும் ஒருநொடி அதிர்ந்து போனார்…

“அய்யயோ…. இந்த மனுசே ஆசுபத்திரின்னு பாக்காம ஏழரைய கூட்டுமே” என்று எண்ணி முடிக்கவில்லை, வேக வேகமாய் கோவமாய் முன்னேறி சென்றார் தங்கராசு..

அவரது கோவத்திற்கு காரணம் வேறு யாருமில்லை, அவரது பாசமிகு எதிரி கரிகாலன் தான்.. ஆனாலும் அவன் மீது எப்பொழுதுமே தப்பு தவறுகள் இருக்காதே…

இரவெல்லாம் ஜீப் ஒட்டி வந்ததாலும், மருத்துவமனையில் உறக்கமில்லாமல் முழித்து இருந்ததாலும் இக்காலை பொழுதில் சற்றே கண்ணயர்ந்து விட்டான் கரிகாலன்.. அதுவும் எப்படி பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த தங்கமலரின் மீது உறக்கத்தில் சாய்ந்திருந்தான்.. அது அவனுக்கே தெரியாது..

முனியன் ஒரு பக்கம் கிடந்த பெஞ்சில் கால் நீட்டி படுத்துக்கிடக்க, தங்கராசின் தங்கை பொட்டியம்மாளோ, தன் சேலை முந்தியையே விரிப்பாக்கி கைகளை தலைக்கு கொடுத்து ஒரு ஓரமாய் படுத்திருந்தார்..

இவர்கள் உறங்கட்டும் நாம் விழித்திருப்போம் என்று இருக்கையில் அமர்ந்திருந்த தங்கமலரும், கரிகாலனும் விடியல் பொழுதில் கண்ணயர்ந்து விட்டனர்..

இடையில் கண் விழித்து பார்த்த தங்கமலரோ தன் மீது அசதியில் சாய்ந்து உறங்குபவனை காதலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் நன்றாய் சாய்ந்துக்கொள்ள ஏதுவாய் அமர்ந்து அவளும் கண்களை மூடிக்கொண்டாள்…

அவளுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் போதாதா???

அவளுக்கு மட்டுமா???

தங்கராசுவும் இப்படி ஒரு வாய்ப்பை வெறுமெனே விடுவாரா ??? அதிலும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் கண் முன்னே இப்படி ஒரு காட்சி கிடைக்க,  காலை நேரத்தில் வந்த சண்டையை வேண்டாம் என்பாரா ???

“அடி செருப்பால… ” என்றபடி வேகமாய் சென்றவர்…

“அட அட… உத்தம ராசா ஊர்வலோ போனானாம்… ஊரெல்லா கைக்கொட்டி சிரிச்சுச்சாம்… டேய் எந்திரி டா…..” என்று ஒரு சத்தம் போடவும்,

தங்கமலர், கரிகாலன் இருவருமே திடுக்கிட்டு முழித்தனர்.. பொதுவாக காலை கண்விழிக்கும் நேரம் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு அது நல்ல சூழ்நிலையில் இருக்க வேண்டும்.. மனதிற்கு இதமாய் இருந்தால் அந்த நாள் முழுவதுமே ஒரு இதம் நம்மை சுற்றி பரவியிருக்கும்..

கரிகாலனுக்கும் அப்படியே.. அவனை பொருத்தமட்டில் காலை கண்விழிக்கும் நேரம் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை  கொடுக்க வேண்டும்.. அதற்காகவே அவன் வீட்டை சுற்றி ரோஜா செடிகள் வைத்திருக்கிறான்..

ஆனால் இன்றோ நாராசமாய் தங்கராசுவின் குரலில் தூக்கம் கலைந்தவனுக்கு முதலில் இவர் ஏன் தன் முன்னால் நிற்கிறார் என்றே விளங்கவில்லை..

ஆனால் தங்கமலரோ சட்டென்று சுதாரித்து எழுந்து நின்றுவிட்டாள்.. மனதிற்குள் நடுக்கம் இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டாமல்

“அய்யா… யம்மா.. எப்ப வந்தீங்க ??? வெள்ளனவே கெளம்பிட்டீங்களா?? ” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து வினவ, தன் மகளை ஒரு பார்வை பார்த்தவர், இன்னும் தெளியாத உறக்கத்தோடு கண்களை கசக்கிவிட்டு குழப்பமாய் பார்த்தவனை முறைத்தார்..

“என்ன டா.. ஒன்னுந்தெரியாத அப்பாவி மாறி மொகத்தை வச்சு பாத்தா ஓ கள்ளத்தனம் எல்லா எனக்கு புரியாதுன்னு நெனைச்சியா… எந்திரி டா மொத” என்று அவர் போட்ட கூச்சலில் போவோர் வருவோர் எல்லாம் திரும்பி பார்க்க, நன்றாய் உறங்கிக்கொண்டிருந்த முனியனும், பொட்டியம்மாலும் கூட கண் விழித்து எழுந்தனர்..

“அண்ணே, மதினி.. எப்ப வந்தீங்க…. ” என்று கேட்டபடி அருகில் வந்தவரிடம் பேச்சை மாற்றும் பொருட்டு மரகதம்

“என்ன பொட்டி கணேசே எப்படிருக்கான்.. டாக்டரு என்ன சொன்னாரு..??” என்று வினவ

“அத ஏ கேக்குற மதினி, குளுக்கோசு ஏத்திட்டு இருக்கு.. யாரு உள்ள இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க…ராவெல்லாம் ஒறங்கல….” என்று பதில் அளிக்க

அத்தனை நேரம் அமைதியாய் தங்கை கூறுவதை கவனித்துக்கொண்டிருந்த தங்கராசு, பொட்டியம்மாள் கடைசியாய் கூறிய வார்த்தையை கேட்டதும் கரிகாலன் தங்கமலரின் மீது சாய்ந்து உறங்கியது நினைவில் வர மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார்

“ஏன் டா, அதே ஆசுபத்திரில சேத்தல, ஒன்னைய யாரு இங்க தங்கச்சொன்னா… கெளம்பி போக வேண்டியதுதான… இதே சாக்குன்னு…” என்று கோவத்தில் குதித்தவர் வார்த்தைகள் வராமல் திணறினார்…

இவர் என்ன கூறுகிறார் என்று அனைவரும் திகைத்து நிற்க. தங்கமலரோ கைகளை பிசைந்தபடி அன்னையின் முகத்தை பாவமாய் பார்க்க, மரகதம் முதலில் முறைத்தாலும் பிறகு ஓரளவு நடந்து என்னவாய் இருக்குமென்று புரிந்துக்கொண்டார்..

கரிகாலன் தங்கராசுவிடம் பொறுமையாய் போவதற்கு மரகதமும் ஒரு காரணம்.. தங்கராசு அவனை ஏடாசாய் பேசினாலும் மரகதம் அப்படி செய்ய மாட்டார்.. அவனிடம் சகஜமாய் பேசவில்லை என்றாலும் அவர் பார்வையில் ஒரு ஆறுதல் தெரியும் அவனுக்கு..

அவன் தங்கமலரை வேண்டாம் என்று கூறுவதற்கு மரகதமும் ஒரு காரணம்..

அனைவரும் அமைதியாய் நிற்க, தங்கராசு தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்தார்..

“என்ன டா அமைதியா இருந்தா ஓ யோக்கியோ எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா.. எம்புட்டு தைரியோ இருந்தா எம்மவ மேல சாஞ்சு ஒறங்குவ???” என்று அவர் கத்திய பிறகே அவனுக்கு தான் அப்படி உறங்கியது தெரிய வந்தது..

படக்கென்று திரும்பி தங்கமலரை முறைத்தான்.. அவளோ அவனை பாவமாய் பார்த்து வைத்தாள்..

அவளை சொல்லியும் குற்றம் இல்லை.. அவளும் தானே இரவெல்லாம் உறங்கவில்லை.. அவளுக்கு மட்டும் என்ன தெரிந்தா இருக்க போகிறது என்று தன்னை தானே சாமதானம் செய்துக்கொண்டவனுக்கு, உறக்கத்தில் என்றாலும் ஒரு வயது பெண் மீது அதுவும் இத்தனை பேர் வந்து போகும் இடத்தில் இப்படி தான் சாய்ந்து இருந்தது கரிகாலனுக்கு தவறாகவே பட்டது..

அவனுக்கே தவறாக பட்டது என்றால், பெண்ணை பெற்ற தந்தைக்கு எப்படி இருக்கும் என்று எண்ணினான்.. அதனால் அமைதியாய் இருந்தான்..

தங்கமலர் “அய்யா… நீங்க நெனைக்கிற மாதிரிலா எதுவு… ” என்று அவள் கூற தொடங்கும் போதே

“வாய மூடு கழுத, ஒனக்கு என்ன தெரியு?? நீ கண்ணசந்து தூங்குற நேரத்துல இவே… ” என்றவர் மரகதத்தின் கை பிடியில் பேச்சை நிறுத்தி தன் மனைவியை திரும்பி பார்த்தார்..

ஆனால் மரகதமோ தங்கராசுவிடம் எதுவும் பேசாமல், கரிகாலனை பார்த்து “கரியா, ஒறக்கத்துல நம்மள அறியாம இப்படி நடக்குறது சகஜந்தே.. நீ மொத கெளம்பு… மனசில எதுவு வச்சிக்காத…“ என்று கூறவும்

கரிகாலனோ பதிலே எதுவும் பேசாமல அவ்விடம் விட்டு நகர்ந்தான்… தங்கமலரோ அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்..

அனைவருக்கும் இப்பொழுது தான் மூச்சை இயல்பாய் விட முடிந்தது..

“ஏய் என்ன டி ஒனக்கு தைரியோ கூடி போச்சோ.. நா பேசிட்டுக்கு இருக்கே நீ என்னடான்னா அவன போக சொல்றவ….” என்று மனைவியை எகிற

“என்னய்யா நீ, வந்த எடத்துல அதுவு நாலு பேரு பக்குறமாதிரி இப்படித்தே பேசுவியா ??? அசிங்கோ யாருக்கு நம்ம பொண்ணுக்குந்தேன… கொஞ்சோ கூட ரோசன பண்ணாம அவன பிடிச்சி கத்துற…” என்று சற்றே காட்டமாய் மரகதம் பேசவும் தான் தங்கராசு அமைதியானார்..

ஆனாலும் உள்ளே ஒரு எரிமலை பொங்கிக்கொண்டு தான் இருந்தது… வாய்ப்பு கிடைத்தால் இதையே காரணாமாய் வைத்து கரிகாலனை ஒருவழி செய்து விடவேண்டும் என்று எண்ணினார்..

“நா எல்லாருக்கு ரொட்டியு பண்ணு வாங்கிட்டு வரே..  ” என்று வெளியே சென்றுவிட்டார் தங்கராசு…

அவர் சென்றதும், “ஏன் டி கூறுகெட்டவளே நீ ஏன் டி அவேங்கிட்ட போயி உக்காந்த… அறிவிருக்கா ஒனக்கு?” என்று தன் அன்னை கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் திருட்டு முழி முழித்து நின்றாள் தங்கம்..

“மதினி…. ராத்திரி முழுக்க கூட்டமா இருந்திச்சு… உக்கார கூட எடமில்ல… கெடச்ச எடத்துல மொடங்குனோ… ஹ்ம்ம் கொஞ்ச நேரத்துல ஏ ஈரக்கொலையே நடுங்கிடுச்சு…” 

“ஹ்ம்ம்… ஒங்கண்ணன பத்தித்தே தெரியும்ல ஒனக்கு, விடு பொட்டி… கணேசே சரியா ஆனா போது… ” என்றவர்

“ஏ தங்கோ, நம்ம அன்னமயிலு அம்மாவு அய்யாவு வந்திருக்காங்க..  நீ அவங்க கூட சேந்து ஊருக்கு போ டி… மாத்து துணிகூட எடுத்து வரல.. நானு அவசரத்துல மறந்துட்டே.. தனியா இருக்காத அதே அந்த அன்னமயில கூட இருக்க சொல்லிக்க… கணேசனுக்கு சரியாகவு நாங்க எல்லா வந்திடுறோ.” என்று தன் மகளிடம் கூற…

“ஹ்ம்ம் சரி ” என்றவளுக்கு மனதில் பல கணக்குகள் ஓடின.. 

இவளுக்கு இப்படியிருக்க, அங்கே ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்த கரிகாலனுக்கோ மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்…

அவன் மனம் குற்ற உணர்ச்சியில் துடித்தது… ஒரு வயது பெண்ணின் மீது அத்தனை பேர் வந்து போகும் இடத்தில்,  தானா இப்படி சாய்ந்துக்கொண்டு உறங்கினோம் என்று..

தங்கராசு சத்தம் போட்டதில் தவறே இல்லை என்று எண்ணினான்..

“ஹ்ம்ம் இந்தாளு இத வச்சே ஆறு மாசோ என்னைய காய்ச்சுவானே… அத விட இவ இருக்காளே… ஆயுசுக்கு எம்மேல சாஞ்சு தூங்குனவே தானே நீன்னு அசிங்கபடுத்துவாளே…” என்றவனின் மன போக்கை தடுத்து நிறுத்தியது அவனது அறிவு,…

“முட்டா கரிகாலா… நீ எடுத்த முடிவு என்ன இப்ப நெனைக்கிறது என்ன?? கூறு இருக்காடா ஒனக்கு… ஒம்பொழப்புக்கு அந்த புள்ள மலரு பொழப்புக்கு ஒத்து வராதுன்னு நீ தான டா சொன்ன.. இப்ப என்னத்துக்கு அவள நெனைக்கிற??” என்று அவனது புத்தி அவனை கடிய…

“ச்சே… மனுசே நிம்மதியா இருக்க முடியுதா… மொதோ ஒரு கல்லாணம் செய்யணும், அப்பரோந்தே எல்லா கொழப்பமும் சரியா போகும்… முனியேங்கிட்ட மறுபடியு சொல்லனு இல்ல மொதலாளி கிட்ட சொல்லனு” என்றபடியே தன் போக்கில் ஜீப்பை செலுத்தியவனுக்கு, அப்பொழுது தான் திடீரென்று ஸ்ப்ரிங்குலர் புதிதாய் வாங்க, அவனது முதலாளி பணம் கொடுத்ததே நினைவு வந்தது..

வெயில் காலங்களில் செடிகளுக்கு தண்ணி பாய்ச்ச உபயோகபடுத்துவது தான் ஸ்ப்ரிங்குலர்.. அழகாய் அனைத்து பக்கங்களிலும் சுற்றி சுற்றி செடிகளுக்கும் தண்ணீரை பாய்ச்சி விடும்.. மலைக்காடுகளில், வெள்ளாமை பூமியில் ஸ்ப்ரிங்குலர் வழியாக அனைத்துபக்கமும் தண்ணீர் சுற்றி சுழன்று செடிகளில் சென்று விழும் காட்சி பார்ப்பதற்கே மிகவும் அழகாய் இருக்கும்… 

“அய்யயோ இத மறந்து போனேனே… ஹ்ம்ம் கரியா ஒனக்கு நேரமே சரியில்ல டா.. மொதவே நெனப்பு இருந்தா வாங்கியிருக்கலா.. இனி எங்க… எல்லா இந்த தங்கராசு மொகத்துல முழிச்சேல அதே… ” என்று சலித்தவன் நேராய் தன் முதலாளியின் பங்களாவிற்கு சென்று ஜீப்பை நிறுத்தினான்..

பின்பு நடந்த அனைத்தையும் கூறி முடித்து, அவர் சொன்ன வேலைகளையும் செய்து முடித்து அவன் வீட்டிற்கு வரவே மாலை ஆகிவிட்டது..

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அவனது ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினான்.. யாருமில்லாமல் இருப்பவனுக்கு இந்த வண்ண வண்ண வாச மலர்களே உறவுகளாய் தெரிந்தன..

சிறு வயதில் இருந்தே இப்படித்தான் இவன்… சிறு சிறு நாற்றுகள் கிடைத்தாலும் வேகமாய் கொண்டுவந்து தன் சிறு வீட்டின் முன்பக்கமோ இல்லை பின்புறமோ எவ்விடம் இடம் இருக்கிறதோ அதை நட்டு வைத்து அழகு பார்ப்பான்..

அவனை பொருத்தமட்டில் வீட்டை சுற்றிலும் பசுமையாய் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மனமும் அதே பசுமையை சூடிக்கொள்ளும்.. இவ்வெண்ணம் தானோ என்னவோ விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் ஒரு காதலோடு கற்க தூண்டியது கரிகாலனை..

வெயில், மழை  பாரமால் அவனை போல் வேறு யாராலும் வேலை செய்ய முடியாது.. சில நேரம் வெயில் சுட்டெரிக்கும், சில நேரம் மழையோ நடுங்கச்செய்யும், ஆனாலும் அந்தந்த காலகட்டத்தில் என்ன பணிகள் செய்தல் வேண்டுமோ அதை சரியாய் செய்வான்..

கரிகாலனின் இந்த உழைப்பு தான் இந்த சிறு வயதிலேயே அவனை கங்காணியாய் மாற்றி உள்ளது..

ஒருவழியாய் தன்செல்ல உறவினர்களுக்கு தண்ணீர் காட்டிய பின்னர், வீட்டினுள் நுழைந்தவனுக்கு சமைத்து உண்ண வேண்டும் என்ற நினைப்பே எரிச்சலை கொடுத்தது..

ஆனாலும் தன் வயிற்றையும் கவனிக்க வேண்டுமே… என்ன செய்வது என்று சிறிது என்றம் யோசித்தவனுக்கு வேறு ஒன்றும் நினைவில் வரவில்லை..

வெறும் ரச கஞ்சியும், உப்பு கருவாடை நன்றாய் கல்லில் தோய்த்து கழுவி, எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து உண்பதற்கு அமரும் வேலையில் அவனையும் அறியாமல் அன்று தங்கமலர் அவனுக்காய் சாப்பாடும் மீன் குழம்பும் கொண்டு வந்தது நினைவு வந்தது..

ஆனாலும் அந்த நினைப்பே அவனுக்கு எரிச்சலை கொடுத்தது…

“ச்சே ஒரு வா கஞ்சி குடிக்க முடியுதா….. ” என்று சிடு சிடுத்தவன் கட கடவென்று வேகமாய் கஞ்சியை குடித்துவிட்டு, இரு துண்டு கருவாடையும் ஒரு வாயில் போட்டு  மென்று விழுங்கினான்..

அவனுக்கு புரியவில்லை.. யார் மீது இந்த கோவம்..  தங்கராசு மீதா ?? தங்கமலர் மீதா ?? இல்லை தன் மீதே தானா ???

அவனை பொருத்தமட்டில் அவனது இத்தனை குழப்பங்களும் தனக்கு திருமணம் முடிந்து , தனக்கென்று ஒருத்தி வந்துவிட்டால் சரியாகிவிடும் என்று நம்பினான்..

அதே நேரம் தன் வீட்டின் கட்டாந்தரையில் படுத்துக்கிடந்த தங்கமலரோ, அன்னமயிலின் வசவுகளில் குளித்துக்கொண்டு இருந்தாள்..

மனதிற்குள் “இவள தொணைக்கு கூட்டி வந்தது தப்பால போச்சு… யப்பா எம்புட்டு பேச்சு பேசுறா… இதுக்கு எங்கய்யாவே பரவாயில்ல… ” என்று எண்ணியவளை

“ஏன் டி எம்புட்டு பேசிட்டு இருக்கே.. யாருக்கு வந்த விருந்தோன்னு படுத்துக்கிடக்க…   ” என்ற அன்னமயிலின் பேச்சு திரும்பி பார்க்க வைத்தது..

“ம்ம்ச் என்ன டி… நானு பாக்குறே வந்ததுல இருந்து என்னையவே திட்டுறவ?? நா என்ன செஞ்சேன் சொல்லு புள்ள…” என்று பாவமாய் முகம் வைத்தவளை பார்த்து

“ஆத்தாடி ஆத்தி… அமுக்கினி பேத்தி… இந்த நடிப்பு ஆகாது டி தங்கோ…. நா சொல்றத சொல்லிப்புட்டே, ஒன்னால ஒங்கய்யாவுக்கு, அந்த அண்ணனுக்கு வெட்டு குத்து ஆகபோது பாத்துக்க…” என்று நொடித்தாளும், அவள் பேச்சில் அக்கறை தான் இருந்தது..           

“ஏன் டி எனக்கு மட்டு என்ன ஆசையா என்ன ??? நானுந்தே ரெண்டு சண்ட போடறப்ப தவிக்குறே.. கொஞ்சோ என்னைய நெனச்சு பாரு அன்னோ, கரியே மேல நான் உசுரையே வச்சிருக்கே புள்ள… ” என்று கூறியவளின் குரல் விசும்பலில் முடிந்தது..

“ஏ.. என்ன டி… நா என்ன சொல்லிபுட்டேன்னு இப்ப கண்ண கசக்குறவ.. அழாத தங்கோ… எம்மனசுல தோணிச்சு சொன்னே… நீ சந்தோசமா இருக்கணு புள்ள.. அதே… ”

“ஹ்ம்ம்.. ஏ சந்தோசோ எல்லா அதுக்கூட வாழ்றதுலத்தே இருக்கு புள்ள.. என்ன ஆனாலு சரித்தே இந்த விசயத்துல நா மனசு மாறமாட்டே.. ”

“அதெல்லா சரி, அதுக்கு அந்தண்ணே ஒத்துக்கனும்ல…  ”

“அதுக்குத்தே நா அது போற வர எடமெல்லா போயி பேசுறே.. ஆனாலு ஒரு மனுசனுக்கு இம்புட்டு இடுத்தோ ஆகாது டி… மனசுக்குள்ள ஆச இருந்தாலு வெளிய அம்புட்டு நடிப்பு ”என்று கூறும் பொழுதே தங்கமலருக்கு கரிகாலனை எண்ணி பெருமையாய் இருந்தது..

இருக்காத பின்னே கடின உழைப்பாளி, கண்ணியமானவனும் கூட.. அவன் நினைத்திருந்தால் எத்தனையோ தனிமையான சந்திப்புகளில் தங்கமலரை என்னவும் செய்திருக்கலாம்..

போதாத குறைக்கு அவனை எதிரியாய் நினைப்பவரின் சீமந்த புத்திரி வேறு.. தங்கராசு அவனை அவமான படுத்துவதற்கு எல்லாம் இவன் தங்கமலரை வைத்தே அழகாய் அவரை பலி வாங்கிட முடியும்..

ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே..

எத்தனை அழகாய் அவளுக்கு ஒவ்வொரு முறையும் எடுத்து சொல்லி வாதிடுகிறான்.. அதுவும் இவளின் நன்மைக்காக அவன் மன விருப்பத்தையே மறைக்கிறான் என்றால் இவள் மீது எத்தனை நேசம் இருக்கும் அவனுக்கு..

“இந்த பாற பொங்கக்குள்ள எப்படியாவது அது மனசு மாறிடனும் புள்ள.. கரியேங்கூட நா எப்படியாது சேந்துடனு அன்னோ..” என்று கண்களில் கனவுகள் மின்ன கூறியவளின் வார்த்தை அன்னமயிலின் காதுகளில் மட்டுமில்லை,

தங்கமலர் தனியாய் இருப்பாள் என்று காண வந்த பொன்னக்காளின்  காதுகளிலும் விழுந்தது…          

  

                                       

 

               

 

                      

        

Advertisement