Advertisement

மலர் – 3

“ஏ தங்கோ…. தங்கோ… அத்தே, தங்கோ எங்க ??” என்று கேட்டபடி வேகமாய் வீட்டினுள் நுழைந்து தங்கத்தை தேடிய அன்னமையிலை வித்தியாசமாய் பார்த்தார் மரகதம்.

“அத்தே எங்க அவ?? எங்கனு சொல்லுங்க வெரசா” என்று நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துக்கொண்டு இருந்தவளை பிடித்து நிறுத்தி,

“ஏன் டி, வேற சோலியே இல்லியா ஒனக்கு அவளுக்கு… காலங்காத்தால வந்து நிக்கிறவ.. அவ ஒரு பொழப்பத்தவ, நீ அதுக்கு மேல.. ரெண்டும் சேந்தா உருப்பட்ட மாதிரித்தே.. ”

“ம்ம்ச்.. அத்தே… நீ சாபங்கொடுக்கிறதெல்லா அப்புரோ கொடு.. மொத தங்கோ எங்கன்னு சொல்லு..” என்று அவள் வந்த காரியத்தில் கண்ணாய் நிற்க

“அவ ஆத்துக்கு துணி தொவைக்க போயிருக்கா ” என்று சொல்லி முடிக்கும் முன்னே, ஆற்றை நோக்கி ஓடினாள் அன்னமயில்..

“ஏ.. ஏ தங்கோ.. அங்க என்ன நடந்திட்டுருக்கு.. நீ என்னடான்னா இங்க தண்ணியில வெளாண்டுட்டு இருக்கவ” என்று மூச்சிறைக்க ஓடி வந்தவளை உஷ்ணமாய் பார்த்தாள் தங்கமலர்..

“என்னைய பாத்தா வெளையாடுற மாதிரியா டி இருக்கு.. ?? ”       

“யம்மா தாயி நீ என்னவோ செய்யி.. மொத நா சொல்ல வந்தத சொல்ல விடு ”

“சொல்லி தொல” என்றபடி தன் வேலையை மீண்டும் செய்யத்தொடங்கினாள் மறுபடியும்

“அடியே அங்க கரியண்ணே, முனியண்ணே கிட்டே கல்லாணத்துக்கு பொண்ணு பாக்க சொல்லிட்டு இருக்கு டி” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

“என்ன டி சொன்ன ??” என்று வேகமாய் ஆற்றில் இருந்து மேலேறி அவளருகில் வந்து நின்றாள் தங்கமலர்..

“ஆமா டி தங்கோ, இது… இதெல்லா எனக்கு பிடிக்கலத்தே.. ஆனாலு இத ஒனக்கு சொல்றது எங்கடம…”

“அடியே உங்கடமைய தூக்கி எங்குட்டா போடு.. மொத விசயத்த சொல்லு…” என்று அவளை பிடித்து உலுக்கினாள் தங்கமலர்..

“ஏய், கைய விடு டி.. வலிக்கிது புள்ள.. முனியண்ணே கிட்ட கரியண்ணே சொன்னத எங்கண்ணால பாத்தே, காதால கேட்டே டி தங்கோ. நெசந்தே இது..”   

இதை கேட்டு சில நொடிகளே மௌனமாய் இருந்தாள் தங்கமலர்.. ஆற்றின் ஓரம் நின்றிருந்த சிலு சிலுப்பிலும் கூட அவளுக்கு வியர்த்தது.. தன் கையை மீறி எதுவோ போவது போல் ஒரு உணர்வு தோன்ற ஒரு சில நொடிகள் தான் இப்படி அவள் யோசனையாய் நின்றது..

“உங்கண்ணே இப்ப எங்கன்னு தெரியுமா ??”

“அது.. அவுங்க மொதலாளி பங்களாக்கு பின்னால நாத்து போட்டிருக்காங்கள்ள அங்க கம்பி வேலி போட போயிருக்கு”

அன்னமயில் சொல்லி முடிக்கவுமே, அவளுக்கு பதில் கூறாமல் தன் ஈரமான கைகளை தாவணியின் முனையில் துடைத்துக்கொண்டு வேக வேகமாய் நடந்தாள்.

“ஏ புள்ள, துணியெல்லா அப்டியே கெடக்கு நீ எங்க போறவ??” என்று சத்தமாய் கேட்க

“அதே நீ இருக்கள்ள தொவைச்சு கொண்டு போயி எங்கம்மாட்ட குடு.. ” என்றபடி சென்றேவிட்டாள் தங்கமலர்..

“அடிப்பாவி ஒன்னைய சொல்லி குத்தமில்ல, எல்லாம் என் நேரோ… ” என்று புலம்பியபடி தங்கமலர் பாதியில் விட்டுப்போன வேலையைத் தொடர்ந்தாள் அன்னமயில்.

வேக வேகமான மூச்சுகளோடு, அதை விட வேகமாய் நடந்து சென்றாள் தங்கம்.. மேகம் தவழ்ந்து செல்லும் மலை முகடுகளோ, சாலையோர பூக்களின் வண்ணங்களோ, அதன் வாசங்களோ, காட்டில் வேலை செய்யும் ஆட்களின் பாடல் ஒலியோ எதுவுமே அவளது கவனத்தில் பதியவில்லை..

அவளது மனதில் இருந்தது எல்லாம் கரிகாலன் பெண் பார்க்க கூறிய விஷயம் மட்டும் தான்.. அந்தவொரு விஷயம் அவளுக்கு விசமாய் தெரிந்தது..

வேகமாய் அவன் இருக்கும் இடம் அடைந்தவள் சுற்றிலும் யார் இருக்கிறார்கள் இல்லையென்றே பாராமல்

“இந்தா, ஒனக்கு என்ன தைரியம்.. பொண்ணு பாக்க சொன்னியாமே பொண்ணு” என்றபடி கரிகாலன் முன் நின்றாள்..

அவனது முதலாளியின் பங்களாவின் பின்னே புதிதாய் போடப்பட்டிருந்த அரஞ்சு நாத்துகளுக்கு கம்பி வேலி கட்டிக்கொண்டு இருந்தான்..

திடுதிப்பென்று அவளது குரல் கேட்கவும் ஒரு நொடி உலுக்கித்தான் போனான்.. இது வழக்கமான ஒன்று தானே..

“ஏய்.. ச்சே அறிவில்ல.. இப்டித்தே பொசுக்குன்னு வந்து நிப்பியா.. வேற பொழப்பே இல்லியா ஒனக்கு ” என்று சிடு சிடுத்தான்..

“எம் பொழப்பெல்லா அப்புரோ பாப்போம்.. மொத நா கேக்குறதுக்கு பதில சொல்லு” என்று மூச்சிரைக்க நின்றவளை முறைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் கரிகாலன்..

“நா ஒருத்தி பேசிட்டு இருக்கே, நீ என்னடான்னா ஓ சோலிய பாத்துட்டு இருக்க “ என்று அவன் கையை வேகமாய் பிடித்து திருப்பினாள்..

“ஏய்.. என்ன டி வேணு ஒனக்கு? சும்மா இந்தா இந்தான்னு பின்னாடியே வந்துட்டு.. நாந்தே சொல்லிட்டேல நமக்கிதெல்லா ஒத்தே வராதுன்னு பின்ன என்ன ??? ”

“ இங்கியாரு அதெல்லா நீ சொல்லவேண்டியது இல்ல.. முனியண்ணே கிட்ட பொண்ணு பாக்க சொன்னியா இல்லியா ??? ” என்று அவன் முன்னே தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் கேட்டாள்..

“மொத இப்புடி கத்துறத நிறுத்து…” என்றவன் அவளது முகம் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக்கொண்டான்..

“ம்ம்ச் இப்ப நா கேட்டதுக்கு பதில சொல்லப்போறியா, இல்ல ஓ மொதலாளிக்கிட்ட போயி நா பேசவா ”

“அப்புடிலா செஞ்சுப்போடாத புள்ள” என்று வேகமாய் திரும்பினான்..

“அப்புடி வா வழிக்கு” என்று எண்ணியபடி அவனையே பார்த்து நின்றிருந்தாள்..

ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன் “ஆமா சொன்னே, அதுக்கு என்ன ??” என்றான் விட்டேறியாக..

“என்னவா???? அது சரித்தே… நா, ஓ பின்னாடியே சுத்தி சுத்தி வருவே, நீயு மனசுக்குள்ள ரசிப்ப, கல்லாணம் கட்டி குடும்போ நடத்த மட்டு வேற ஒருத்தியோ??? கொன்னு போடுவே.. சொல்லிட்டே… ”

“ஏ?? நா கல்லாணம் செய்ய கூடாதா ?? ஓ அப்பே என்னடான்னா எனக்கு எவே பொண்ணு கொடுப்பான்னு நக்கல் அடிக்கிறான்.. நீ என்னடான்னா கொன்னு போடுவேன்னு சொல்லுற… என்ன டி, ஓ குடும்பத்துக்கு என்னைய பாத்தா எப்படி தெரியுது…??” என்று எகிறவும் சற்றே பின்வாங்கி நின்றாள் தங்கமலர்..

“இங்கபாருய்யா, வேணாம்… சொல்றத கேளு.. எங்கய்யாவ பத்தி தா ஒனக்கு நல்லா தெரியுந்தான… அவர் சொல்றதுக்கெல்லா நீ ஏ இப்படி செய்யுற ??” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.. கண்களில் நீர் முட்டியது..

அவளது கலங்கிய கண்களையும், கவலை படிந்த முகத்தையும் பார்க்கும் பொழுது அவனுக்குமே மனதில் எதுவோ செய்தது.. ஆனாலும் அவன் தான் எடுத்த முடிவில் இருந்து சிறிதளவும் கூட பின்வாங்க விரும்பவில்லை..

“இங்கியாரு புள்ள, நா சொன்னா சொன்னதுத்தே… இதுல எந்த மாத்தமும் இல்ல… ஓ பொழப்பு வேற எம்பொழப்பு வேற… அதுவு ஒங்கப்பனுக்கு இது தெரிஞ்சா என்ன நடக்குமுன்னு ஒனக்கே தெரியு.. ஒனக்கு கண்டிப்பா என்னைய விட நல்ல புருசே வருவான்.. அதனால” என்று அவன் பேசிக்கொண்டே போக

“போது நிறுத்துறியா… ” என்று கத்தியேவிட்டாள்.. அவள் கத்திய கத்து எட்டூருக்கு எதிரொலிக்கும்..

ஒருநொடி கரிகாலனே அதிர்ந்து போனான்..

“இங்கியாரு…. எனக்கு வெவரோ தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னையத்தே நா மனசுல நெனச்சிட்டு இருக்கே… சும்மா அத இத பேசி எம்மனச மாத்திபுடலாம்னு நெனைக்காத.. ஒனக்கு எங்கய்யனுக்கு சண்டைனா அது ஒங்க மட்டும் … என்னைய ஏ இதுல இழுக்குற…?? நா ஒங்கூட நல்லாத்தான இருக்கே.. பெறவு என்ன வந்துச்சு ஒனக்கு ” என்று அவள் கோவமாய் பேச, பதில் பேச முடியாமல் சிறிதுநேரம் நின்றிருந்தான் கரிகாலன்..

ஆனாலும் அவன் மனம் இதற்கு ஒப்ப மறுத்தது தான் ஆச்சரியம்.. போயும் போயும் தங்கராசுக்கு மருமகனாய் போவதா ???? ஏதோ அவர் மகளை மயக்கி இவன் கைக்குள் போட்டுக்கொண்டாதகவே எண்ணுவாரே… இருக்கும் கொஞ்ச நஞ்சம் நிம்மதியும் போய்விடும் என்றெல்லாம் அவனுக்கு எண்ணங்கள் ஓட, புத்தியோ உன் முடிவில் இருந்து பின்வாங்காதே என்று கூறிக்கொண்டே இருந்தது.. 

கண்களை இறுக மூடி, தன் மனதை சமன் செய்தவன்

“இங்கியாரு புள்ள, சும்மா நீ பேசுனதவே பேசாத… நா எம்முடிவுல தெளிவா இருக்கே.. உன்னால ஆனத பாத்துக்க டி ” என்று அவளை பிடித்து தள்ள, அவன் கம்பி வேலி போட வைத்திருந்த கம்பியில் ஒன்று அவள் கையை பதம் பார்த்தது..

“ஸ்.. ஆ… யம்மா…” என்று அலறிவிட்டாள்..

அவனோ திடீரென்று இப்படி ஒரு அலறல் அவளிடம் இருந்து வரவும் பாம்பு தான் எதுவும் தீண்டிவிட்டதோ என்று அஞ்சி,

“ஏ என்ன டி ஆச்சு ??? கத்துறவ… என்னாச்சு” என்று பதறி அடித்து அவளருகில் வந்தான்..

அவளோ அவனை எட்டியே நிற்கும் படி கை கட்டி “இன்னொரு தரோ கிட்ட வந்து தொட்டு பேசுன நடக்கறதே வேற..  ” என்றவள் அவள் கையில் ரத்தம் வந்த இடத்தை வேகமாய் தன் தாவணியால் இறுக சுற்றினாள்..

அப்போது தான் அவனுக்கு புரிந்தது கம்பி இழுத்துவிட்டது என்று.. அவள் கூறியதையும் மீறி அவளருகில் வந்தவன், வேகமாய் அவள் கரங்களை பற்றி தாவணியால் போடப்பட்டிருந்த கட்டை அவிழ்க்க முயன்றான்..

“ஏ நா என்ன சொன்னே நீ …. ”  என்று அவள் கத்த தொடங்க

“வாய மூடிட்டு நில்லு, இல்ல நேரா உங்கப்பன் முன்னாடி ஒன்னைய இழுத்துட்டு போயி நிக்க வச்சிடுவே” என்றதும் கப் சிப் என்றாகிவிட்டாள்..

அவள் மௌனம் ஆனதும், அவளை ஒரு முறை பார்த்தவன் பிறகு வேகமாய் அவள் கை காயத்தை கழுவி, அருகே இருந்த ஏதோ ஒரு செடியின் இலையை கசக்கி காயத்தின் மீது விட்டான்..

“ஸ்ஸ்.. ஆ… எரியுது…..” என்று அவள் மீண்டும் தொடங்க

“ஒன்னைய வாய தொறக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லியா ” என்று மீண்டும் அவன் அரட்ட

அவன் தனக்காக பதறியதையும், தன் காயத்திற்கு மருந்திட்டதையும் மனதிற்குள் ரசித்தப்படி வாய் மூடி நின்றிருந்தாள்.

அவளுக்கு மனதிற்குள் உற்சாகமாய் இருந்தது..

“இது ஒன்னு போதாதா, ஓ மனசுலையும் நா இருக்கேன்னு தெரிய… என்னையவா வேணாங்குற. இரு இரு… எனக்கு ஒரு நேரோ வரு.. அப்போ வச்சிக்குரே கச்சேரியே…” என்று முனு முனுத்தவள்

“போது போது… இதுத்தே சாக்குன்னு ரொம்ப எங்கைய தடவாத.. கலரு போயிட போது“ என்று கையை வெடுக்கென்று அவனிடம் இருந்து விடுவித்து வந்தபோது இருந்த கோவம் மாறி புன்னகையோடு நடந்தாள்..

“நீ எல்லா திருந்தவே மாட்ட டி… ” என்று தலையில் அடித்துக்கொண்டான்..

“புரிஞ்சா சரித்தே…” என்று லேசாய் சிரித்தபடி சென்றவளை ஒரு கையாலாகாத தனத்தோடு பார்த்தான் கரிகாலன்..

“என்ன சொன்னாலு கேக்குறாளா பாரு.. ஆடுகாளி… ஒடம்பு முழுக்க திமிருத்தே…   இவள கட்டிக்கிட்டு….” என்று எண்ண ஆரம்பித்தவன் தன் எண்ணம் போகும் போக்கை எண்ணி தன் தலையில் அடித்துக்கொண்டான்..

“ச்சே.. மொதல்ல ஒரு பொண்ண பாத்து கல்லாணத்த முடிக்கணு… இல்ல இவ தொல்ல தாங்க முடியாதுடா சாமியோ…” என்று முனங்கிக்கொண்டே தன் வேலையே பார்த்தான்..

தங்கமலர் வீட்டிற்கு சென்ற போது, துணியெல்லாம் காய போடப்பட்டிருந்தது… அவளது அன்னையோ அவளை முறைத்தபடி சமையலுக்கு காய் அறிந்துக்கொண்டு இருந்தார்..

பொன்னக்கா வேறு வந்து எதுவோ பேசிக்கொண்டிருக்க

“யப்பா நல்ல வேல அம்மா பொன்னக்கா முன்னால எதுவு கேக்காது..” என்று மனதில் மகிழ்ந்துக்கொண்டே பின் வாசலை நோக்கி போனவளை

“ஏய் தங்கோ, கையில என்ன டி காயோ” என்ற பொன்னாக்காளின் குரல் தடுத்து நிறுத்தியது,

“ஆந்த கண்ணு ” என்று பல்லை கடித்தபடி

“ஹிஹி நடந்துவரப்ப கம்பி இழுத்துவிட்றுச்சு… வேற ஒண்ணுமில்ல ” என்று சமாளித்தாள்..

“கண்ண நேரா பாத்து நடக்கணு… பெராக்கு பாத்துட்டே வந்தா இப்படித்தே.. பொம்பள புள்ள நிதானமா இருக்கணு… அதவிட்டு ஆடிக்கிட்டு போனா எல்லா ஆகும் ” என்றது வேறு யாருமில்ல மரகதம் தான்…

“ஆமா ஒனக்கு வேற சோலி இல்ல, எப்ப பாரு என்னைய ஏசிக்கிட்டே…” என்றவள் ஒரு ஜமுக்காளத்தை எடுத்துப்போட்டு படுத்துக்கொண்டாள்…

“ஏய் என்ன டி வந்தவ படுக்குற??  ஒடம்புக்கு என்ன செய்யுது?? ” என்றபடி மரகதம் வர கூடவே பொன்னக்காளும் வர, ஐயோ.. என்றிருந்தது அவளுக்கு..

“ஒன்னுயில்ல தல வலி அம்புட்டுத்தே… ” என்றவள் ஒரு தலையணையால் அவள் முகத்தை மூடிக்கொண்டு ஒருக்களித்து படுத்துக்கொண்டாள்.. அவளுக்கு யாரோடும் பேசவும் பிடிக்கவில்லை, யார் பேசுவதும் பிடிக்கவில்லை..

காதல் கொண்ட மனமல்லவா, அவ்வப்போது இப்படிதானே சில சண்டித்தனங்களை செய்யும்…

“காலாகாலத்துல இவள ஒருத்தே கையில புடிச்சுக்கொடுத்தாத்தே எனக்கு நிம்மதி…” என்று மரகதம் கூற

“அட இப்ப சொல்லு சித்தி, தங்கத்துக்கு தங்கமா மாப்பிள்ள பாத்துடுவோ..” என்று பதில் கூற

“இந்தா ரெண்டு பேரு என்னைய கொஞ்சோ தூங்க விடுறீங்களா.. நை நைன்னு.. ச்சே” என்று அவர்களது பேச்சை திசை திருப்பினாள்..

“ஹ்ம்ம் நா பெத்த ரெண்டுமே சரியில்ல.. ஒன்னு என்னடான்னா பொண்டாட்டியே கெதின்னு போயிட்டான்.. இவ இப்படி காயுரா… எல்லா என் நேரோ… அடியே பொன்னு, வா இந்த அவரைய அறிஞ்சு குடு” என்று தன் பாட்டில் பேசிக்கொண்டே வேலையை தொடர்ந்தார்..

இப்படியாக நாட்கள் நகர, யார் வாழ்விலும் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை.. கரிகாலன் அவன் வேலையுண்டு அவனுண்டு என்று இருக்க தங்கராசு தான் அவனை எதிரியாகவே நினைத்துக்கொண்டிருக்க இடையில் சிக்குபவர்கள் தான் மண்டை காய்ந்தனர்..

ஆனால் தங்கமலருக்கு இதை பற்றியெல்லாம் எக்கவலையும் இல்லை.. அன்னமயில் தான் அவளிடம் எடுத்து சொல்லி சொல்லி தோற்று போனாள்…

காலை நேரங்களில் வேலையும், மாலை நேரங்களில் பேச்சும் கும்மாளமும் விளையாட்டுமாய் பொழுதுகள் நகர, அன்று இரவு திடீரென்று “அய்யய்யோ……. ” என்ற அலறல் சத்தம் அந்த சோலையூரை உலுக்கியது..

நட்ட நாடு ஜாமத்தில், அந்த மலை பிரதேச அமைதியில் சாதரணாமாய் பேசினாலே நான்கு வீடுகளுக்கு கேட்கும்… அதுவும் மரண ஓலமென்றால் கேட்காமலா இருக்கும்..

அடுத்த சில நொடிகளிலேயே ஆட்கள் என்னவோ எதோ என்று ஓடி வரும் சப்தமும், டார்ச் விளக்கின் ஒளியும், சற்று நேரம் அந்த இடத்தை பரபரப்புக்கு உள்ளாக்கின..

சத்தம் வந்தது வேறு எங்கும் இல்லை, தங்கராசின் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் இருந்து தான். அவரது பதிமூன்று வயது மகனை பாம்பு தீண்டியிருந்தது..

“ஐயோ!!! எம்மவனே… நல்லா தானடா படுத்திருந்த…. இப்படி வாயில நோற தள்ளி கிடக்கியே” என்று அழுது கூப்பாட்டு போட்டுக்கொண்டிருக்க

சுற்றி இருந்த ஆண்களில் சிலர் 

“இந்தா பொட்டியம்மா, மொதல்ல அழுகைய நிறுத்து, அட தூக்குங்கப்பா டவுனு ஆசுபத்திரிக்கு கொண்டு போவோம்” என்று ஆரம்பிக்க, வேகமாய் தங்கராசு தன் குடும்பத்தோடு அவ்விடம் வந்து சேர்ந்தார்..

“அண்ணே…. மதினி…. பாருண்ணே.. இவே எப்புடி கெடக்கான்னு…” என்று தன் மகனை காட்டி மீண்டும் பெருங்குரல் எடுத்து அழ தொடங்கினார்..

“ஏ.. யாரப்பா அங்க… கரியன ஜீப்பு எடுத்து வர சொல்லுங்கப்பா…. ” என்று கூட்டத்தில் யாரோ கூற

தங்கராசு “அதெல்லா வேணா, அவே எதுக்கு.. எட்டுச்சாமிய கூட்டி வாங்க டா” என்று யாரிடமோ சொல்ல அடுத்த சில நொடிகளிலேயே நடக்க முடியாமல் வயோதிகத்தின் காரணமாய் தள்ளாடி வந்தார் எட்டுச்சாமி… சோலையூரின் ஆஸ்தான நாட்டு மருத்துவர்..

அவர் பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது.. யாருக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தாலும் அவர் எட்டு சாமிகளின் பெயர்களை உச்சரித்தே தொடங்குவார் அதலால் அவருக்கு எட்டுச்சாமி என்றே பெயரானது..

வந்தவரோ அவரது முறை படி எட்டு சாமியின் பெயர்களை உச்சரித்து கையில் கொண்டு வந்திருந்த மருந்தை அச்சிறுவனுக்கு வாயில் திணித்து சில நேரம் நாடி பிடித்து அமர்ந்திருந்தார்..

பிறகு கண்களை கூர்மையாக்கி பாம்பு தீண்டிய இடத்தை பரிசோதித்து பார்க்க அவரது முகமோ யோசனையில் சுருங்கி விரிந்தது..

தங்கமலரும், மரகதமும் தங்கராசுவின் தங்கைக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருக்க, தங்கராசுவோ

“எட்டுசாமி என்னான்னு சொல்லுங்க.. இப்படி அமைதியா இருந்தா என்னச்செய்ய….  ” என்று விசாரித்தார்…

“சார பாம்புத்தே கொத்திருக்கு போல… விஷோ ஏறாம இருக்க மருந்து கொடுத்திருக்கே… கொத்துன எடத்துல கட்டு போட்டிருக்கே… எதுக்கு டவுனு ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போறது நல்லது ” என்று அவர் கூறி முடிக்கும் நேரத்தில் கரிகாலன் சரியாய் ஜீப்பில் வந்து நின்றான்…

தங்கராசுவை சட்டை செய்யாமல் உள்ளே வந்தவன் படுத்துக்கிடந்த சிறுவனை அலேக்காய் தூக்கி சென்றான்..

“ஏய் என்ன டா செய்ற ??? ஒன்னைய யாரு டா இங்க கூப்புட்டா… டேய் ” என்று கத்தியபடி வேகமாய் தங்கராசு அவன் பின்னே செல்ல, அவரது தங்கையோ

“அண்ணே, ஓ பிடிவாதத்த ஏ மவே உசுருல காட்டாதண்ணே…” என்று கண்கலங்கி நின்றார்..

இதற்கு அவர் என்ன பதில் கூற முடியும்… ஒன்றும் செய்ய முடியாமல் கரிகாலனை முறைத்தபடி நின்றிருந்தார்..

அவனோ “கூட யாராது வரதுன்னா வாங்க ” என்று கூற வேகமாய், தங்கமலர்

“அத்தே வா… ” என்று பொட்டியாம்மாளின் கைகளை பிடித்துக்கொண்டு

“யம்மா, அய்யா நா அத்தைக்கு தொணையா போய்ட்டு வரே ” என்றுவிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காமல் ஜீப்பில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்..

தங்கராசுக்கோ மகளை பிறர் முன்பு தடுக்கவும் முடியவில்லை, கரிகாலனோடு அனுப்பவும் பிடிக்கவில்லை..

அவர்களோடு சேர்ந்து செல்லலாம் என்று நினைத்தாலோ, அவனோடு ஒரே ஜீப்பில் செல்வதா என்ற எண்ணம் ஏற்பட என்ன செய்வது என்று யோசிக்கும் நேரம் மரகதம்

“ஏ முனியா நீயும் போய்ட்டு வா டா…” என்று கூற முனியனும் அவர்களோடு ஜீப்பில் ஏறவும் வண்டி பறந்தது… 

தங்கமலருக்கு கரிகாலனோடு செல்லவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. அவளுக்கு அத்தை என்றால் உயிர்… சிறுவயதிலேயே கணவனையும் இழந்து ஒண்டியாய் பிழைப்பு நடத்தும் பொட்டியம்மாளை யாரும் ஒரு குறை சொல்லிவிட முடியாது..

அதே போல அண்ணன் குடும்பத்து மீது அவர்க்கும் பாசம் அதிகம்.. தங்கமலர் கூலிக்கு செல்லாத நாட்களில் எல்லாம் இவரது வீட்டில் தான் இருப்பாள்..

அத்தைக்கு துணை என்று ஏறிவிட்டாளே ஒழிய, தந்தையை நினைத்து மனதில் பயம் இருந்துக்கொண்டே தான் இருந்தது…

“பள்ளிக்கூடத்த கட்டுனாங்க, அதே மாதிரி ஒரு ஆசுபத்திரி கட்டுனா என்னவா.. ஒவ்வொரு தடவைக்கு இப்புடித்தே ஓட வேண்டியதா கெடக்கு” என்று முனியன் புலம்ப, இதெல்லாம் கரிகாலனின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை..

அந்த அர்த்த ஜாமத்தில் மலை பாதையில் வண்டி ஓட்டுவது என்றால் சும்மாவா ?? அதிலும் இத்தனை உயிர்களுக்கும் இப்பொழுது அவன் தானே பொறுப்பு..

மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக தங்கராசுவும் அவர் மனைவியும்,  அடிவாரம் வந்து முதல் பஸ்ஸை பிடித்து மருத்துவமனைக்கு சென்றனர்..

அங்கே சென்றதும் அவர்கள் கண்ட காட்சியில் தங்கராசு முகமெல்லாம் சிவந்து ருத்ரமூர்த்தி ஆனார்……

  

             

    

 

      

                              

  

      

Advertisement