Advertisement

மலர் – 2

கரிகாலனுக்கு மனம் கனத்திருந்தது.. அவனது சிறு வீட்டின் கட்டாந்தரையில் தன் கைகளையே தலையணையாக்கி விட்டதை நோக்கி படுத்திருந்தான்.. போன வருடம் வரையிலும் அவனுக்கு துணையாய் அவனது பாட்டி, அவன் மொழியில் சொன்னால் ‘கெழவி’ இருந்தார்..

ஆனால் இப்பொழுது அவரும் இல்லை.. ஒற்றை மனிதனாய் காலம் தள்ளுவது அவனுக்கு மிகுந்த வருத்தத்தையே உண்டு பண்ணியது.. அவனை உறவென்று கொண்டாட சோலையூரில் அத்தனை பேர் இருந்தாலும், அவனுக்கே அவனுக்கென்று வீட்டினுள் நுழையும் போது பாசமாய் முகம் பார்க்க, ஆசையாய் உணவு செய்ய என்று யாரும் இல்லை..

உண்டாயா, உறங்கினாயா என்ற கேள்வியெல்லாம் எங்கோ யாரோ கேட்டது போல ஒரு தோற்றம் இப்பொழுது.. விருப்பமிருந்தால் அவனாய் சமைத்து உண்பான்.. இல்லையெனில் வெறும் தண்ணீரை பருகிவிட்டு இதோ இப்படி கட்டாதரையில் படுத்துவிடுவான்..

“ஏ கெழவி இருந்ததுதே இருந்த இன்னு ஒரு ரெண்டு வருசமோ மூணு வருசமோ இருக்க கூடாதா ??? இப்டியா போவ.. அப்பே ஆத்தா மொகந்தெரியாது.. நீயு இல்லாம இப்டி நா திண்டாடுறே…” என்று அவனாய் மருகியபடி உறங்கி போனான்..

மறுநாள் வெயில் சுல்லென்று அடிக்க வீட்டினுள்ளே வந்த வெளிச்சம் அவனது முகத்தையும் கண்களையும் கூச செய்தது…

அது சரி நேரம் காலம் பார்த்து எழுப்பிவிட யாரும் இருந்தால் தானே..

“ம்ம்ச்.. இம்புட்டு நேரமா தூங்குனே….” என்றவன் கண்களை நன்றாய் கசக்கிவிட்டு மணியை பார்த்தான் அது காலை பதினொன்று என்று கூறியாது..

“ஐயோ.. இம்புட்டு நேரமா ??? நல்ல வேள இன்னிக்கு எந்த சோலியும் இல்ல..” என்று எண்ணிக்கொண்டே எழுந்தவனுக்கு வீட்டில் விறகு சுத்தமாய் இல்லை என்பது நினைவு வந்தது..

“இனி வெறகு கொண்டு வந்து நா பொங்கி திங்றக்குள்ள…ஹ்ம்ம் ” என்று பெருமூச்சை விட்டபடியே மாற்று உடுப்பையும், ஒரு கோடலியையும், வெட்டருவாளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.. விறகை வெட்டி போட்டு அப்படியே ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என்ற நோக்கதில்..

அதே நேரம் தங்கமலர் தன் தோழி அன்னமயிலோடு பேசியபடி களை எடுத்துக்கொண்டிருந்தாள்.. இருவருக்கும் ஒரே வயது.. தோழிகள் என்பதை விட இரட்டை என்று தான் சொல்லவேண்டும்.. எங்கு போனாலும் வந்தாலும் ஒட்டிகொண்டே தான் திரிவது வழக்கம்.. இருவருக்குள்ளும் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை…

“ஏன் டி அன்னோ… ”     

“என்ன தங்கோ… ”

“என்ன ஓ பாசமலரு எங்கயும் தட்டுபடல..  ”

“ஏன் டி ஒனக்கு வேற சோலியே இல்லியா?? உங்கய்யா என்னடான்னா கரியண்ணன கண்டாலே காயுராறு, ஆனா நீ ஒரு மார்க்கமாத்தே இருக்கவ ”

“ஹ்ஹ்ஹும் அந்த கருவாயன ஒரு மார்க்கமா பாத்துட்டாலு… ” என்றவளின் பார்வை நொடிக்கு ஒரு முறை தான் கொண்டு வந்திருந்த தூக்கு செட்டியின் மீது படிந்து மீண்டது..

அன்னமயிலின் பக்கத்து வீடு தான் கரிகாலனுடையது.. அவள் அவனை அண்ணன் என்றே அழைப்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கமலர் அவர்களை பாசமலர் என்று கேலி பேசுவாள்..

“ஏன் டி பேச்செல்லா இங்கருக்க பார்வ மட்டும் என்ன தூக்குக்கு போயி போயி வருது”

“ம்ம்ச் அதொன்னுமில்ல தூக்கு மேல எறும்பு ஏறுன மாறி இருந்துச்சு அதே…” என்று பதில் கூறியவளுக்கு காலையில் வீட்டில் நடந்தது நினைவு வந்தது..

“யம்மா இன்னு எம்புட்டு நேரோ??  வெரசா போனாத்தே நா எல்லாரோடையும் சேந்து மேக்காடுக்கு போக முடியு… சோறு பொங்க இம்புட்டு நேரமா ??” என்று சிடு சிடுத்தபடி கண்ணாடி முன்னே நின்று அதன் உயரம் எட்டாத காரணத்தால் சற்றே எட்டி எட்டி பார்த்து தன் இரு புருவங்களுக்கும் இடையில் சாந்து போட்டை வட்ட வடிவமாய் வைத்துக்கொண்டிருந்தாள் தங்கமலர்..

“ஆமா டி அப்பனு மவளு கலக்டெரு சோலிக்கு போறீங்க.. வீட்டுக்கு வந்தா ஒரு சோலி செய்றதில்ல.. இதுல அது நொள்ள இது நொட்டைன்னு நூறு கொற..  இதுல தெனோ ஒரு உடுப்பு கழட்டி போட்ற வேண்டியது… எவ தொவப்பா எல்லாத்தையும்..” என்று புலம்பி தள்ளியபடி விறகடுப்பை குழவி வைத்து ஊப் ஊப் என்று கண்களை சுருக்கி ஊதிக்கொண்டிருந்தார் மரகதம்..

“ஏம்மா…. எதுக்கு எப்ப பாரு பொலம்பி தள்ளுற.. ஆமா என்ன கொழம்பு வாசம் மூக்க தொலைக்கிது..”

“ஆமா டி.. நா சொல்றதெல்லா பொலம்பலாத்தே இருக்கு… ஏ வயசுல ஒனக்கு புரியு ஆத்தாக்காரி சொன்னதெல்லா அம்புட்டு உண்மன்னு ” என்று நொடித்தவர்..

ஒரு கரண்டியில் சிறு துளி அளவு குழம்பை வைத்துக்கொண்டு வந்து மகள் முன் நின்றார்.

“இந்தா இதுல உப்பு ஒரப்பெல்லா சரியாருக்கா பாரு ” என்ற அன்னையை சிரித்தபடி பார்த்தவள்

“மீன் கொழம்பா ம்மா.. ஆத்தி.. வாசமே எம்புட்டு வருது ” என்றபடி உள்ளங்கையில் அந்த ஒரு சொட்டு கொழம்பை விடு நாவால் நக்கி பார்த்து

 “ம்ம் ம்மா இந்த மீன் கொழம்புக்கே அடுத்த சென்மத்துக்கு நீதே எனக்கு அம்மா ” என்றவள் வேகமாய் ஒரு தூக்கு வாலியை எடுத்து அது பொங்கி வைத்திருந்த சாதத்தை அள்ளி போட்டாள்.

“ஏய்… ஏய் என்னடி செய்றவ ?? பொங்கி வச்சத எல்லா நீ அள்ளி போட்டு போனா அந்த மனுசனுக்கு நா வேறுஞ்செட்டிய வா காட்ட.. ” என்று அவர் கத்த கத்த செய்து வைத்திருந்ததில் முக்கால் வாசி சாப்பாடை தூக்கில் நிரப்பி அதில் குழம்பையும் விட்டு வேகமாய் ஒடி விட்டாள்..

“ஐயோ… இந்த புள்ளயோட ஒரே ரோதனையா போச்சே.. தெனம்மு எதையா பண்ணி தொலைக்கிது..” என்று புலம்பியபடி மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார் மரகதம்..

“ஏய்… ஏ புள்ள தங்கோ” என்று அவள் முதுகில் அன்னமயில் இரண்டு தட்டு தட்டவும் தான் சுய நினைவிற்கு வந்தாள்..

“ஏ என்ன புள்ள கனா எது காங்குரியா ??”

“ஹா.. அதெல்லா ஒன்னுயில்ல..  நா.. நா கொஞ்சோ ஒதுங்கிட்டு வரே ” என்றவள் தன் சுட்டு விரலை காட்டிவிட்டு வேகமாய் நடந்தாள்..

“வந்து கொஞ்ச நேரங்கூட ஆகல அதுக்குள்ள இவளுக்கு வந்துடுச்சா ” என்று முனுமுனுத்தபடி தன் வேலையை தொடர்ந்தாள் அன்னமயில்..

அனைவரும் வேலையில் கவனமாய் இருப்பதை கண்ட தங்கமலர் வேகமாய் தன் தூக்கு வாலியை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் நடந்தாள்..

வாயு வேகம் என்பார்களே அது போலத்தான் சென்றாள் தங்கமலர்… சுற்றிலும் பார்வையை ஒட்டிக்கொண்டாள் யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று..

அத்துவான காட்டின் ஆள் நடமாட்டமில்லா இடத்தில்  நடந்து செல்வது என்றால் வெறும் விசயமா என்ன ?? கடவுளின் பெயர்களை எல்லாம் உருப்போட்டு நடந்து போனவளின் பார்வை ஒரு இடத்தில நிலைத்து நின்றது..

அதன் பிறகே அவளுக்கு மூச்சு சீராய் விட முடிந்தது போல. பின் மெல்ல தூக்கு செட்டியை ஆட்டியபடி நடந்து போனாள் கரிகாலனிடம்..

“இந்தா, என்ன இந்நேரம் வெறகு வெட்டுற ?? ”

அத்தனை அமைதியான இடத்தில், மரங்களின் சரசரப்பையும் ஆற்றின் சல சலப்பையும், அங்காங்கே பறவைகளின் ஒலியையுமே அத்தனை நேரம் கேட்டிருந்த காதுகளுக்கு திடீரென்று ஒரு பெண் குரல் கேட்கவும் உலுக்கித்தான் போனான் கரிகாலன்..

படக்கென்று திரும்பியவனுக்கு அத்தனை நேரம் வெயிலில் நின்று அதுவும் வெறும் வயிற்றில் விறகு வெட்டிக்கொண்டிருந்தது வேர்த்து வழிந்தது..

“அடச்சே நீயா…. ” என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்..

“ஏன் தொற யார எதிர்பார்த்த ?? ” என்றவள் தன் கையில் வைத்திருந்த தூக்கை அவன் முகத்துக்கு நேரே இப்படியும் அப்படியும் ஆட்டினாள்..

“ஏய் என்ன பண்ற ??? அறிவுகெட்டவளே, கையில கோடாலி இருக்கு கண்ணு தெரியல ” என்று அவன் திட்டவுமே அவளுக்கு எப்படியோ ஆகிவிட்டது..

“ச்சே.. ஒனக்கு போயி ஆச ஆசையா மீன் கொழம்பு சுடு சோறு கொண்டு வந்தே பாரு.. என்னைய சொல்லனு..” என்றவள் அருகே இருந்த ஒரு பாறையின் மீது சட்டமாய் அமர்ந்துகொண்டாள்..

“ம்ம்ச் இப்ப எதுக்கு இங்க உக்காருறவ?? ஒனக்கு சோலி இல்லையா ??”

“இந்தா என்ன எப்ப பாரு தாளிக்க போட்ட கடுகு போல பொறியுற ?? ஒனக்குத்தே சோறு கொண்டு வந்தே, மொத சாப்படு அப்புற சோலிய பாரு ”

“நா ஒன்னு தங்கராசு வீட்டு சோறு திங்க தவங்கிடக்கல.. போ டி  ஓ சோலிய பாத்துட்டு.. வந்துட்டா… தூக்க தூக்கி..” என்று அவளை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை..

“என்னைய சொல்லனு, ஒனக்கு போயி கொண்டுவந்தே பாரு… ஓ பின்னாடியே வரேல.. அதா இப்படி எகத்தாளம் பண்ணுற.. நீ திண்ணா திண்ணு திங்காட்டி போ.. ஆனா இது ஒனக்குத்தே கொண்டு வந்தே.. நா கொண்டு போகமாட்டே” என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் நடக்க தொடங்கிவிட்டாள்..

“ஏ.. ஏ கூறுகெட்டவளே.. நில்லு டி… ஏ புள்ள மலரு… ஏ நில்லு டி..” என்றபடி வேகமாய் அவளது தூக்கு செட்டியையும் தூக்கியபடி ஓடிவந்தான்..

அவளிடம் வந்தவன் அவளை முறைத்தபடி “ஏய் நில்லுன்னு சொல்றேல கொழுப்பெடுத்தவளே..” என்று சிடு சிடுத்தான்..

“நீ மட்டு நா சொல்றத கேக்குறியோ ??”

“அதுக்கு…. இந்த மொத இத கொண்டு போ…  ” என்று வாளியை நீட்டினான்..

“நீ சோறு சாப்டுட்டு குடு நா கொண்டு போறே ” என்று அவளோ பிடிவாதமாய் நின்றாள்..

“ஏய் ஏன் டி.. நா போற எடமெல்லா வந்து ஏ உசுர வாங்குறவ ??”

“ஹா… ஏன்னு ஒனக்கு தெரியாதோ.. பாச்ச மண்ணு பாரு நீயி.. ”

“இங்க பாரு புள்ள… இதெல்லா நமக்கு ஒத்தே வராது.. அதுவு உங்கப்பே… அம்புட்டுத்தே.. எட்டூருக்கு பஞ்சாயத்த கூடி.. ம்ம்ச் அதெல்லா வேணா ஓ சோலிய பாரு போ.. ” என்று அவள் கையில் வாளியை திணித்து அவளது தோள்களை பற்றி திருப்பினான் போ என்பது போல..

“இதுத்தே.. இதுத்தேயா… என்னைய ஓ பின்னால வர வைக்கிது.. இந்த ஊருல எல்லார் கூடையும் தா நீ பேசுற செய்யுற ஆனா எந்த புள்ளயவாது இப்படி உரிமைய தொட்டு பேசிருக்கியா இல்ல வா டி போடின்னு தா சொல்லிருக்கியா?? எல்லாரு தங்கோன்னு சொல்லு போது நீ மட்டு ஏ மலருன்னு சொல்ற ?? அதுக்கு மொத பதில சொல்லு”

அவள் சரியாய் கேட்கவும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை.. அவனது எண்ணமெல்லாம் இப்படி யாருமே இல்லாத இடத்தில அவளும் அவனும் பேசிக்கொண்டு இருப்பதை யாராவது கண்டால் என்னாகும் என்பதிலேயே இருந்தது..

ஒன்றென்றால் ஒன்பது என்று பேசும் ஊரல்லவா.. அதுவும் வாழ வேண்டியவள்..

“ஏய் என்ன கோட்டி கழுத… கிருக்குத்தே ஒனக்கு.. போ அங்குட்டு”  என்று அவன் அவளை ஒரு தள்ளு தள்ளிவிட்டு சென்றுவிட்டான்..

அவளோ எத்தனை ஆசையாய் அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்தாளோ அத்தனை ஆசைக்கும் ஈடாய் கண்ணீர் வடித்தபடி போனாள்..

“ஒரு நா இல்ல ஒரு நா வருவ.. ஏ புள்ள மலரு வா நம்ம கல்யாணங்கட்டிக்கலா அப்டின்னு சொல்லுவ ” என்றபடி அவளாக முனுமுனுத்து சென்றாள்..

அவனோ அவள் செல்லும் பாதையையே ஒரு வெற்று பார்வை பார்த்து நின்றிருந்தான்..

சிறு வயதில் இருந்து அவளை அவனுக்கு தெரியும்.. தலையில் கட்டியிருக்கும் ரிப்பன் ஒரு பக்கம் அவிழ்ந்து அழகுக்கு படிந்த ஒரு பாவாடை சட்டை போட்டு புழுதியில் அவனோடு அவள் புரண்டு விளையாடிய காலங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போனது…

நல்ல பெண்தான்.. உழைப்பாளியும் கூட.. ஆனால் விதி யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யார் அறிவார்.. காலையும் மாலையும் குளிர் எடுக்கும் என்றால், மதிய நேரங்களில் வெயில் வாட்டி விடும்..  மரங்கள் அடர்ந்து இருப்பதால் சற்றே குளுமையாய் இருக்கும்..

ஆனாலும் கரிகாலனுக்கு அன்றைய தினம் விடிந்ததே நன்றாக இல்லையோ என்று இருந்தது..

ஒரு வழியாய் விறகை எல்லாம் வெட்டி கட்டி வைத்துவிட்டு, ஆற்றில் அலுப்பு தீர குளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு மீண்டும் ஒரு வெறுமை குடிக்கொண்டது..

“ம்ம்ச்.. வர வர வீட்டுக்கு வரவே கடுப்பாருக்கு…” என்று சலித்தபடி முனியனின் கடை நோக்கி சென்றான்..

சோலையூரின் வியாபார ஸ்தலம் என்பது முனியாண்டியின் அந்த பெட்டிக்கடை தான்.. காப்பி, டீயில் இருந்து ஜில்லிப்பே இல்லா குளிர் பானங்களும், காய்கறிகளும் இன்னும் என்னென்ன வேண்டுமோ அனைத்தும் அங்கே கிடைக்கும்..

இரண்டு நாளுக்கு ஒருமுறை டவுனுக்கு சென்று சரக்கு போட்டு வருவது என்றால் அவருக்கு மிகுந்த குசி.. ஆனால் பணம் குடுத்து வாங்குபவர்களை விட, கணக்கில் வாங்குபவர்கள் தான் அதிகம்.. என்ன செய்வது ஆனாலும் பிழைப்பு ஓட வேண்டுமே..

ஒரு சிறு மிட்டாய் வாங்குவது என்றாலும் காசு கொடுத்து வாங்கு கரிகாலன் என்றால் அவருக்கு எப்பொழுது ஒரு தனி மரியாதை தான்..

“என்ன டா கரியா… இந்நேரமே வந்திருக்கவே.. சோலி இல்லியா ???” என்று புன்னகையாய் வரவேற்றவரை பார்த்து தானும் புன்னைதுக்கொண்டான்

“இல்லண்ணே அப்படியே கண்ணசந்துட்டே.. ஆத்துக்கு போயிட்டு வந்தே.. சோறு பொங்க கடுப்பாருக்கு…” என்றபடி முனியனின் கடையில் தொங்கிய இரண்டு வாழை பழங்களை வாயில் தள்ளிவிட்டு, அடுத்து ஒரு ரொட்டியை எடுத்து உண்டான்..

“ஒரு சுக்கு காப்பி போடுண்ணே…  ” என்று கூறிக்கொண்டே..

“ம்ம் போடுறே.. போடுறே.. ஒனக்கு இல்லாததா… நல்லா உண்டு தின்னு  சந்தோசமா இருக்க வேண்டிய வயசுல இப்படியா டா வயித்த காய போடுவ… காலாகாலத்துல ஒரு கல்லாணத்தா பண்ணா உனக்குன்னு ஒருத்தி வருவா..” என்று அவன் கேட்டதை அவருக் செய்து கொடுக்க

“ம்ம்ச்.. நடக்குறத பேசுண்ணே..” என்றபடி அவனும் அந்த சுக்கு காப்பியை விழுங்கி வைத்தான்..

“ஏ… ஏ நடக்காது…. இப்ப கூட சரின்னு சொல்லு.. சுத்துபட்டு கிராமத்துல இருந்து ஒனக்கு நா பொண்ணு பாக்கேன்..  என்ன டா இப்படி சொல்லிபுட்ட, ஒனக்கு நாங்க எல்லா இருக்கோ டா கரியா ”

“ம்ம்… ”

சரியாய் அதே நேரம் “எலே முனியா, எப்படா ஓ தொழில மாத்துன“ என்றபடி வந்தார் தங்கராசு..

“வா மாமா… நான் என்ன மாத்துனே…” என்று புரியாமல் பார்த்தான் முனியாண்டி.. கரிகாலனோ வேகமாய் இவ்விடம் விட்டு நகர்ந்தால் போதும் என்று எழுந்தான்..

“ஹா ஹா…. இந்த தங்கராசு முன்னாடி எவனு உக்கார கூட தகுதி இல்ல டா… நீ தான டா முனியா சொல்லிட்டு இருந்த பொண்ணு பாக்குறேன்னு.. அதே எப்பருந்து தொழில மாத்துனன்னு கேட்டே..” என்றவர் நக்கலாய் கரிகாலனை நோக்கினார்..

அவனோ கணக்கு பார்த்து பணத்தை கொடுத்துவிட்டு

“அண்ணே, சாயங்காலம் மொதலாளிய கூட்டிட்டு வர டவுனுக்கு போறே, ஒனக்கு எதுவு வேணுமா ??” என்று வினவ…

“டேய்.. டேய் போது டா.. எம்புட்டு நாளைக்குத்தே நல்லவனாட்டமே நடிப்ப.. அவனுக்கு வேணும்னா அவே வாங்கமாட்டானா ??” என்று தங்கராசு பதில் கூற இம்முறை அவரை முறைத்து நின்றான் கரிகாலன்..

“என்ன டா மொறைப்பு எல்லா பெருசாருக்கு… ஒனக்கெல்லா எவன்டா பொண்ணு கொடுப்பான்?? நாதி நாத்தாங்கா இல்லாதவனுக்கு எவே நம்பி பொண்ணு கொடுப்பான்.. பேசுறானுக பேச்சு கா காசுக்கு வக்கில்லாம ” என தன் பங்கிற்கு எகிற

அவர் கூறிய வார்த்தைகள் ஏற்கனவே நொந்து போயிருந்த கரிகாலனின் மனதில் இன்னும் அமிலத்தை பாய்ச்சியது..

“யோவ்.. நான் உங்கிட்ட வந்து நின்னேனா?? எனக்கு பொண்ணு பாத்து குடுன்னு.. இல்ல சோத்துக்கு கையேந்தி வந்து நின்னேனா.. எம்பொழப்ப பாத்துட்டு நா இருக்கே.. ஒனக்கு என்ன?? ” என்று அவனும் முறுக்கிக்கொண்டு நிற்க

முனியாண்டிக்கு ஐயோ என்று இருந்தது…

   

“மாமா என்னா  மாமா இது.. ஓ வயசுக்கு அவேங்கூட வம்புக்கு நிக்குற…  ” என்று அவன் சமாதானம் செய்ய முயல

கரிகாலனுக்கும், தங்கராசுவிற்கும் இடையில் அவனது சமாதான முயற்சி எடுபடுமா என்ன ??

“ஏய் என்ன டா ” என்று அவர் ஆரம்பிக்க பதிலுக்கு பதில் என்று அவனம் கொடுக்க சிறிது நேரத்தில் போர்களம் போலானது அவ்விடம்..

இது எதுவுமே தெரியாத தங்கமலரோ, கரிகாலனின் மீதிருந்த கோபத்தாலும், பசியின் காரணாமாகவும் வேக வேகமாய் மீன் குழம்பை போட்டு பிசைந்து சாத உருண்டைகளை உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள்..

“டி தங்கோ நீ செய்யிறது கொஞ்சங்கூட நல்லாவே இல்ல புள்ள சொல்லிட்டேன் ஆமா” என்று அன்னமயில் கூற

“நா என்ன டி செஞ்சே.. சோறு திங்கிறது ஒரு குத்தமா…” என்று நொடித்தாள் தங்கம்..

“ஹ்ஹும்… ஒரு வாய் இந்தா சாப்பிடு புள்ளன்னு குடுத்தா நீ என்ன கொறைஞ்சா போவ… மீன் கொழம்பு வேற… ஹ்ம்ம் ” என்று சப்புக்கொட்டினாள் அன்னம்..

“இதொன்னு நா ஒனக்கு கொண்டுவரல… ” என்றபடி மேலும் தன் வேலையில் கவனமாய் இருக்க..

“அது எனக்கு தெரியு.. நீ தூக்கு வாளிய தூக்கிட்டு வேகமா போகும் போதே நெனச்சே… களவாணி கழுத… நீ பண்ற சோலி எம்புட்டு பெரிய பெரச்சன ஆகுந்தெரியுமா.. ”

“ம்ம்ச்… நச நசன்னு பேசாம திண்ணு டி.. நீ வேற…”

“ஆமா டி ஏ சொல்லமாட்டா, நாளிக்கு கரியண்ணனுக்கு, உங்கய்யாக்கு வெட்டு குத்து ஆச்சுன்னாத்தே ஒனக்கு புத்தி வரு.. நா சொல்றத சொல்லிபுட்டே.. ”

“இங்கியாறு அன்னோ, இந்த விசயத்துல எங்கய்யாவே என்ன சொன்னாலு நா கேக்கமாட்டே.. புரிஞ்சுக்க..” என்று இறுகிய குரலில் கூறியவளை கண்டு அதிர்ந்து தான் போனாள் அன்னமயில்…

மாலை வேலை முடிந்து வீட்டுக்கு போகும் வழியெல்லாம் கரிகாலன் கண்ணில் தட்டுபடுகிறானா என்று அலசியபடி நடந்தாள்.. ஆனால் என்ன செய்ய ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அவளுக்கு.. வீட்டிற்குள் நுழையும் போதே தங்கராசுவின் சத்தம் காதை கிழித்தது..

“என்னைய என்னான்னு நெனச்சிட்டு இருக்கான் அவே… சுண்டக்கா பைய… கொஞ்சங்கூட மட்டு மாருவாதையே இல்லையே.. பெறகெப்புடி உருப்படுவியான்.”       

“ஆமாய்யா.. ஒனக்குதே வேற சோலி இல்லியா.. சும்மா அவேங்கூட வம்பு வளத்து வர.. அவே எளந்தாரி.. ஒன்னைய ஒரு தள்ளு தள்ளுன்னா நீ பொத்துன்னு விழுந்து வச்சா என்னாகு கொஞ்ச நெனச்சு பாரு”

என்று தங்கராசு மரகதத்தின் குரல் கேட்டு தலையில் அடித்துக்கொண்டாள் தங்கமலர்..

“அய்யா.. நீங்க ஒரு ஆளே போது… நா நெனச்சது எதுவு நடக்காம போக.” என்று நொந்தபடி

“யம்மா…. ஒங்க சத்தம் வெளிய வர கேக்குது.. சும்மாவே இருக்கா மாட்டிங்களா ச்சேய் வீட்டுக்கு வந்தா கொஞ்சோ நிம்மதியா இருக்க முடியுதா” என்று சத்தம்மிட்ட பின்னே இருவரும் அமைதியாகினர்..

தங்கராசு அமைதியானது போல கரிகாலனின் மனம் அமைதியடையவில்லை… அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் காதுகளில் ஒலித்து மனதை பதம் பார்த்தன.

மலைப்பாதையில் சிறிய சைக்கிள் ஓட்டுவதே பார்த்து ஒட்டவேண்டும், இவனோ ஜீப்பை ஒட்டிக்கொண்டு அதுவும் இறக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தான்.. அவனது எண்ணங்களோ எண்ணிலடங்கா கவலையை சூடிக்கொண்டிருந்தது..

கரிகாலனின் முதலாளி அவனுக்கு ஒரு ஜீப் வாங்கி கொடுத்திருந்தார்.. சொந்தமாய் வைத்துக்கொள்ள அல்ல, தோட்ட வேலைக்காக ஏதாவது சாமான்  டவுனுக்கு போய் வர வேண்டும் என்பதாலும், அவர் சோலையூருக்கு வந்தால் தேவைப்படும் என்பதாலும் வாங்கிக்கொடுத்திருந்தார்..

கை தன் பாட்டில் வண்டியோட்ட, மனமோ அவனது கட்டுபாட்டில் இல்லை..

“இந்தாளுலா பெரிய மனுசே.. ச்சே… எனக்கா நாதி நாத்தாங்க இல்ல…” என்று கருவியவன்

“இந்தாளு மொகத்துல கரிய பூசவே நான் கல்லாணம் கட்டுறே.. குடும்பமா பொண்டாட்டி பிள்ளை குட்டின்னு இதே சோலையூர்ல வாழ்ந்து காட்டல எம்பேரு கரிகாலன் இல்ல. ” என்று   அவனுக்கு அவனே சூளுரைத்துக்கொண்டான்..

அதன் பிறகே அவனது மனம் சற்று சமன்பட்டது.. ஒருவழியாய் அவனது முதலாளி ராமச்சந்திரனை ஏற்றிக்கொண்டு மீண்டும் மலை மீது ஜீப்பை ஒட்டி, அவரது பங்களாவில் விட்டுவிட்டு, பின் அம்மாதம் நடந்து முடிந்த வேலைகளை எல்லாம் கூறி கணக்குளை எல்லாம் ஒப்படைத்துவிட்டு இவன் வீடு வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது..

அவனது வீட்டை சுற்றிலும் ரோஜா செடிகள் நட்டுவைதிருப்பான்.. அழகழகாய் வண்ண வண்ணமாய் மலர்ந்து சிரிக்கும் பூக்களை பார்க்கும் போதெல்லாம் அவன் மனமும் மலர்ந்துவிடும்..

அவனது சிறு தோட்டத்தை ஒட்டி ஒரு சிறு இடத்தை குளியறை போல் செய்திருந்தான் நான்கு மூன்று பக்கமும் கிடுகு வைத்து கட்டி ஒரு பக்கத்தை மட்டும் கதவு வைத்திருப்பது போல கிடுகால் மறைத்திருந்தான்..

நிலவின் ஒளியில் அம்மலை குளிரையும் பொருட்படுத்தாமல் மனதிலும் உடலிலும் உள்ள அலுப்பு தீர குளித்து வந்தவனின் உள்ளம் ஒரு அமைதியை பெற்றிருந்தது..

ஒருவேளை அது அவனது முடிவினாலோ என்னவோ…   

            

             

                         

          

                

      

    

 

                       

Advertisement