Advertisement

மலர் –  10

நாம் ஒன்று யோசிக்க காலம் ஒன்று யோசிக்கும்.. நாம் ஒன்று நினைத்து செய்ய, விதி தன் சதி வேலையை நம்மை கொண்டே செய்ய வைத்துவிடும்.  அப்படித்தான் ஆனது கரிகாலன், தங்கமலரின் கதையும்..  

கரிகாலனும், தங்கமலர் ஏதோ ஒரு கோவத்தில் பேசுகிறாள் என்று எண்ணியவனுக்கு அவளது கோவத்தின் காரணம் தன் மீது கொண்ட காதலே என்று அறிய, அவள் மனம் மாறும் வரை காத்திருக்க முடிவு எடுத்தவன், அவன் மனதில் இருக்கும் நேசத்தை  அவளுக்கு புரியவைக்க மறந்தான்..

தங்கமலரோ வீட்டை பொறுப்பாய் கவனித்தாள், கரிகாலனுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்தாள். அவனோடு டவுனுக்கு சென்று வந்தாள். வீட்டிற்கு வேண்டியதெல்லாம் அவளே பார்த்து பார்த்து வாங்கினாள்.  இதெல்லாம் செய்தவள் அவனிடம் நெருங்க மட்டும் இல்லை.

அன்னமயிலின் வீட்டிலும், பொட்டியம்மாள், பொன்னக்காளின் வீட்டிலும் புது பெண் மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தனர். ஆனால் மறந்தும் கூட தங்கராசுவும், மரகதமும் இவர்கள் வீட்டு பக்கம் எட்டி பார்கவில்லை. அத்தனை ஏன் அவர்கள் கண்ணிலேயே படவில்லை.. நடுவில் எங்காவது தங்கராசு கரிகாலனை பார்க்க நேர்ந்தால் அமைதியாய் விலகி சென்று விடுவார்.

எப்பொழுதும் சண்டை போடும் மனிதர், வார்த்தைக்கு வார்த்தை எள்ளி நகையாடுபவர், விலகி சென்றால் கூட வழிய வந்து வம்பிலுக்கும் ஆள் இப்பொழுதெல்லாம் விலகி செல்லவும் கரியனுக்கு எப்படியோ ஆனது.

என்னதான் பொன்னரசு அவ்வப்போது வந்து பார்த்து சென்றாலும் கரிகாலனுக்கு தங்கராசுவின் இந்த செயல்பாடு வருத்தத்தை கொடுத்தது. இதை தங்கமலரிடமும் கூறினான்.

“ஏ மலரு உங்கய்யா இப்பெல்லா பாத்தா வம்புக்கே வரது இல்ல… சங்கடமா இருக்கு புள்ள…  ”

அவன் கூறியதும் கை வேலையை விட்டு நிமிர்ந்து பார்த்தவள், ஒரு நொடி அமைதியாய் இருந்து பின் மீண்டும் வேலையை தொடர்ந்தாள்…

“ம்ம்ச் ஏ மலரு… நா பேசிட்டு இருக்கே…”

“கேட்டுகிட்டு தா இருக்கே…. ”

“பெறவு ஏ நா சொன்னதுக்கு எது சொல்லாம இருக்கவ…. ”

“என்னத்த சொல்ல சொல்ற??? ஏற்கனவே இழுத்த வம்புகுத்தே என்னைய இழுத்துட்டு போயி கல்லாணம் செஞ்ச. இனி எங்கய்யா வம்பிழுத்தா அடுத்து என்ன செய்றதா இருக்க???”

அடுப்பில் தகிக்கும் நெருப்பை விட தங்கமலரின் வார்த்தைகள் கொதித்து வந்து அவனை கொத்தியது.. இப்படி ஒரு பதிலை அவன் எதிர் பார்க்கவில்லை போல.. சரி தந்தையை பற்றி பேசினாலாவது இவள் தன்னிடம் சற்று இயல்பாய் இருப்பாள் என்று எண்ணியே அவன் இப்படி செய்தது..

ஆனால் நடந்ததோ சொந்த செலவில் சூனியம்.. பதிலேதும் சொல்லாமல் கூலிக்கு கிளம்பிவிட்டான்..

“சாப்ட்டு போ…. ”

அவள் சொல்வதையும் கேளாமல் வாசல் தாண்டியவனை வேகமாய் ஓடி வந்து கை பிடித்து நிறுத்தினாள்..

“சாப்ட்டு போன்னு சொல்றேல…”

“வேணாம்…. ”

“ஏனாம்??? ”

“ம்ம்ச் வேணாம்னா விடு… ”

கரிகாலனுக்கோ எங்கே தான் ஏதாவது இன்னும் பேசினால் இவள் மனது இன்னும் நோகுமே என்று. தங்கமலருக்கோ, இவன் மனதில் என்றுதான் தன் மீது நேசம் வரும் என்று.

பிடிவாதத்திற்காய் மணந்தான், ஆனாலும் அவன் மனதில் தன் மீது கடுகளவு கூடவா காதல் இல்லாமல் போனது?? இந்த எண்ணம் தான் அவளை அவ்வபோது சுடு சொல் பேச வைத்துவிடுகிறது.

பேசாமல் அவனையே முறைத்தவள், விடுவிடுவென்று வீட்டினுள்ளே சென்றுவிட்டாள். ஒரு சில நொடிகளே நின்றவன் ஆட்டுக்குட்டி போலே அவள் பின்னே சென்றான்..

இது இவர்களுக்குள் அவ்வபோது நடப்பது தான்.. நேசமெனும் அழகிய ஒளியை இருவருமே கோவத்திரையிட்டு மறைத்திருந்தனர்.. திரை விலகும் நேரம் இவர்கள் வாழ்வும் பிரகாசமாய் ஜொலிக்கும்.. ஆனால் விலக வேண்டுமே…

கரிகாலன் கூலிக்கு சென்றுவிட்டால் தங்கமலர் வீட்டில் தனியே இருப்பாள். அந்நேரம் அன்னமயில், அவள் அம்மா, இல்லை பொட்டியாம்மால் இப்படி யாராவது வந்து அவளுக்கு துணையிருப்பர்.. இல்லையென்றால் இவள் அவர்களது வீட்டிற்கு செல்வாள்..

அப்படிதான் அன்றும் தன் அத்தை பொட்டியம்மாளின் வீட்டிற்கு தங்கமலர் சென்ற நேரம், அங்கே மரகதமும் இருக்க.. இருவரின் பார்வையும் திகைத்து பின்னே தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டது..

இருவருக்குமே இருப்பதா இல்லை கிளம்புவதா என்று தெரியவில்லை..

“அத்த நா அப்புறமா வரே.. ”

“அடியே தங்கோ இரு.. இப்ப வந்தவ அதுக்குள்ள ஏ போறவ,..”

“இல்லத்த இருக்கட்டு… ” என்றவள் தயங்கி தன் தாயின் முகம் பார்த்தாள்..

“அடியே சும்மா உள்ள வா.. அதெல்லா மதினி ஒன்னு சொல்லாது..”

“பொட்டி.. என்னால யாரு போகவேணா… சும்மா பயந்த மாதிரி யாரையு நடிக்க வேணாம்னு சொல்லு…” மரகதம் எங்கோ பார்த்தபடி பேச,

வேகமாய் அவரிடம் ஓடி “அம்மா…. ” என்று கட்டிக்கொண்டாள்…

தன் கைகுள்ளேயே வளர்ந்த மகள் இத்தனை நாளாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததே மரகதத்திற்கு தாங்க முடியவில்லை.. தங்கமலரை பற்றி விசாரிக்கவே அவர் இங்கு வந்தது. அந்நேரம் பார்த்து அவளும் வர மனதிற்குள் மகளை கண்ட மகிழ்ச்சி..

“யம்மா… என்னைய மன்னிச்சிடு மா… நா… நா.. வேணுமுன்னே எதுவு செய்யலம்மா… என்னைய ஒதுக்கி வெச்சிடாதம்மா… ”

“ஏ தங்கோ.. ஏ… புள்ள எந்திரி…”

“ம்ம்ஹும்… நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு ம்மா.. அய்யனும் என்னைய பாக்க வரல.. நா செஞ்சது  தப்புத்தே.. ஆனா நா வேணும்னு செய்யல.. அவே.. அந்த கரியே செத்துடுவேன்னு சொன்னா மா…” என்று கதரியவளை இறுக அணைத்துகொண்டார் மரகதம்..

“ஸ்ஸ்.. எல்லா எனக்குந்தெரியு.. கண்ண தொட தங்கோ…” என்று அவள் முகம் நிமிர்த்தினார்..

“ம்மா…. !!!!”

“ஆமா புள்ள.. கரியே எங்கிட்ட வந்து எல்லா உண்மையு சொல்லிப்புட்டான்…”

“என்னம்மா சொல்லுற… ”

“ஆமா டி தங்கோ.. ஒங்க கல்லாணம் முடிஞ்ச ரெண்டு நா கழிச்சு என்னைய பாத்தான்.. அப்பத்தே எல்லா உண்மையு சொன்னான்.. உங்கய்யணும் பேசுனது தப்புத்தேன டி…”

மரகதம் இத்தனை இதமாய் பேசுவார் என்று அவள் சிறிதும் நினைத்து கூட பார்க்கவில்லை.. மீண்டும் “அம்மா….!!!! ”  என்று கட்டிக்கொண்டாள்..

பொட்டியம்மாலுக்கு தான் செய்ய நினைத்த வேலை தானாகவே முடிந்ததை எண்ணி மனம் நிம்மதி ஆனது..

“ம்மா அய்யனுக்கு எம்மேல ரொம்ப கோவமா இருக்கும்ல.. நா வேணா வந்து ஒரு தடவ அவருகிட்ட பேசவா….  ”

“வேணா டி.. இப்ப வேணா.. கொஞ்ச நா போகட்டு.. பூமணிக்கு கொழந்த பொறக்கவு, ஒங்கண்ணே இங்கனவே வந்துடுறேனு சொல்லிருக்கான்.. அதுவர பொறுத்துக்கோ புள்ள.. அப்புறம் எல்லா சரியாகிடு.. ”

“ம்ம் சரி.. ஆனா நீயாது வீட்டுக்கு வந்துபுட்டு போ மா.. தனியா இருக்க எப்படியோ இருக்கு…”

“நீ ஏன் டி தனியா இருக்கவ.. ஒ புருசங்கூட சேந்து கூலிக்கு போ… ”

“ம்ம்ச் நா அன்னிக்கே கெளம்புனே.. அதெல்லா வேணா, நா சம்பாரிச்சு கொண்டு வந்து போடுறதுல குடும்போ நடத்து அப்படின்னு சொல்லிடுச்சு..  முனியண்ணே கடைக்கு கூட போக விடுறதுல்ல.. எல்லாமே அதுவே வாங்கி போடுது.. ” என்றவள் சலிப்பாய் கூறினாலும் அவளையும் அறியாமல் ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்தது.

“அதெல்லா சரித்தே… ஏ புள்ள தங்கோ… நீ.. நீ.. சந்தோசமாத்தே இருக்கியா புள்ள.. ” என்று மரகதம் விசாரிக்க, பொட்டியம்மாலும் அவள் முகம் பார்க்க தங்கமலரோ என்ன கேட்கிறார் என்று விழித்தாள்..

“என்ன டி முழிக்கிறவ.. நீயு ஒ புருசனும் சந்தோசமாத்தான இருக்கீங்க..”

புரிந்து போனது அவளுக்கு மரகதம் எதை பற்றி கேட்கிறார் என்று..

“அது.. வந்து… ம்மா…. அது… ”

“ம்ம்.. இங்க பாரு டி.. ஒங்க கல்லாணம் சரியோ தப்போ, கரியே  வேணும்னு தான கட்டிக்கிட்ட.. அன்னிக்கே அன்னோ எல்லாத்தையும் சொன்னா.. கரியனுக்கு ஒம்மேல எந்த நெனப்பு இல்லன்னு… ஆனா அவே கல்லாணம் செஞ்சது ஒன்னைய. அத யாராலு மாத்த முடியாது.. கெடச்ச பொழப்ப நல்லா வாழ பாரு. அம்புட்டுத்தே சொல்லுவே.. ”

“ம்ம் சரிம்மா… ” என்றவளுக்கு நிஜமாகவே கரிகாலனின் மனதில் தன் மீது சிறு சலனமும் இல்லையோ என்ற எண்ணம் தோன்ற இதயமே இரண்டாய் பிளப்பது போல வலித்தது..

எங்கே மேலும் மரகதம் ஏதாவது பேசினால் தன்னையும் மீறி ஏதாவது பேசிவிடுவோமோ என்றஞ்சி “சரிம்மா நா கெளம்புறே.. அத்த நா கெளம்புறே.. கணேசே வந்தா வீட்டுக்கு அனுப்பு.. டவுனுக்கு அது கூட போய்ட்டு வறட்டு…. ” என்று கிளம்பிவிட்டாள்..

மகள் போவதையே பார்த்த மரகதம் “ஹ்ம்ம் மனசுக்குள்ள ரெண்டுத்துக்கும் அம்புட்டு பாசோ இருக்கு.. ஆனா வெளிய சொல்லாம கல்லாணம் வேற பண்ணி… ஹ்ம்ம் கடவுளே எம்புள்ள வாழ்க்க நல்லாருக்கனு சாமி…” என்று வேண்டினார்..

வீட்டிற்கு வந்த தங்கமலருக்கோ மனம் கணமாய் போனது.. மரகதம் தன்னோடு பேசிய மகிழ்ச்சி இருந்தாலும் முழுதாய் அவளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை.. ஏனோ கரிகாலன் அவள் மீது நேசமாய் இல்லையோ என்ற எண்ணம் அவளை போட்டு பாடாய் படுத்த நடந்த அனைத்தையும் ஒரு முறை நினைத்துப்பார்த்தாள்..

முன்பெல்லாம் அவனை தேடி போய் பேசும்போதெல்லாம் அவன் கண்ணில் தெரியும் காதல் அன்று அவளிடம் திருமணத்திற்கு கேட்கும் போது அவனிடம் இல்லை.. ஆக நடுவில் எதுவோ நடந்திருக்கிறது..

என்னவாய் இருக்கும் என்று தன் மூளையை கசக்கி பிழிந்தவளுக்கு அன்று கரிகாலன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நினைவு வர, தன்னை ஏதோ அவன் தவறாக புரிந்துகொண்டதாகவே பட்டது.

“அய்யோ இவே என்னைய தப்பா நெனச்சுக்கிட்டானா.. நானே எங்கம்மா கிட்ட சத்தியோ செஞ்சு படாத பாடு பட்டே… அதுக்குத்தே இந்த மனசே தங்கராசு மவ தங்கராசு மவன்னு அம்புட்டு ஆட்டோ..” என்றவள் தனக்குள்ளே புலம்பியபடியே மிச்சம் மீதமிருந்த வேலைகளை முடித்தாள்..

அனைத்து வேலைகளும் முடிந்தாகி விட்டது.. வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை..  என்ன செய்வது இப்படியே அடைந்து கிடந்தால் ஒன்றும் சரிபட்டு வராது என்றேண்ணியவள் தூக்கு வாளியில் அக்கி வைத்திருந்த சாதத்தை போட்டு, அவனுக்கு பிடிக்குமென்று செய்த நாட்டுகோழி சாரையும் விட்டு தனியே ஒரு தூக்கில் ரசத்தையும் விட்டு, அனைத்தையும் ஒரு கூடையில் வைத்துகொண்டு கிளம்பினாள்..

“ஹ்ம்ம் இவனுக்கு நா ஒன்னொன்னு பாத்து பாத்து செய்றது.. இவே என்னைய கண்டுக்கறதே இல்ல…” என்று நோடித்தபடி கரியனை நோக்கி சென்றாள்..

புதிதாய் கல்யாணம் ஆனவர்கள். அதுவும் காதல் திருமணம் என்று ஊரில் செய்தி இருக்க, இவள் என்றும் இல்லாத திருநாளாய் அவனுக்கு உணவு கொண்டு போக வழியில் பார்த்தவர்கள் அனைவரும் கிண்டல் செய்தனர்..

“ஏ புள்ள தங்கோ.. என்ன புருசனுக்கு சோறு கொண்டு போறியா.. ஹ்ம்ம் கரியே குடுத்து வச்சவேந்தான்..  ” என்று ஒரு பெருசு சொல்ல,

“ஹா எம்புருசே நா கொண்டு போறே… ஒனக்கென்ன பெருசு… போவியா…” என்று முகத்தை சுருக்கி சென்றாள்.

கரிகாலனோ மிளகு கொடிக்கு கம்பு நட்டுக்கொண்டு இருந்தான்.. மரத்தில் சுற்றி படர்ந்து பலன் தரும் மிளகுக்கொடி சிறு கம்பு ஒன்றை நட்டு வைத்து சுற்றி விட்டால் தான் அடி பகுதி உடையாமல் காற்றில் ஆடாமல் இருக்கும்..

அதை தான் கரிகாலனும் செய்துகொண்டு இருந்தான்.

தனக்கு சாப்பாடு கொண்டு வந்தவளை கவனிக்கவில்லை.. அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களோ, “கங்காணி… புது பொண்ணு சோறு கொண்டு வந்திருக்கு கொஞ்சம் இங்குட்டு பாருய்யா…  ” என்று கிண்டல் பேச  அப்பொழுது தான் தங்கமலரை கவனித்தான்..

“இவ எதுக்கு வந்துருக்கா..” என்று நினைத்தவன் வேகமாய் மரத்தில் இருந்து இறங்கினான்.

தங்கமலரை பார்த்தபடியே இறங்கியவனுக்கு மரத்தின் கிளை ஒன்று நீட்டிக்கொண்டு இருப்பது தெரியவில்லை.. பக்கவாட்டு கிளையின் மீது கால் வைப்பதற்கு பதிலாய் கீழிருந்த கிளையில் வைத்தான், வைத்தவன் காலின் நீட்டிக்கொண்டிருந்த கிளை நன்றாய் கிழித்து விட்டது..

அவனையே பார்த்திருந்த தங்கமலருக்கோ அடுத்த நொடி உள்ளம் பதறிவிட்டது..

“ஏ.. ஏ.. பாத்து…. ”  என்று அவள் கத்திய கத்தில், சுற்றி வேலை பார்த்துகொண்டிருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று திரும்பிப்பார்த்தனர்..

ஆனால் கரிகாலனோ எதுவுமே நடக்காதது போல இறங்கி வந்தவன் ”எல்லா சோலிய பாருங்க… ” என்றுவிட்டு, அருகில் ஓடிய ஓடையில் சென்று காயத்தை கழுவினான்.

“இந்தா பாத்து வர மாட்டியா.. கண்ணு என்ன குருடா…” என்று திட்டியபடி அவளே அவன் காலை தொட்டு பார்த்தாள்.

“ஸ்ஸ்…”

“என்ன வலிகுத்துல.. அப்புறோ நீ பாட்டுக்கு எறங்கி வர.. பாத்து வர கூடாதா.. இனிமே நீ மரோ ஏறுற சோலியெல்லா பாக்காதா.. ஆமா சொல்லிப்புட்டேன்.. இப்படியா பண்ணுவ… ”

“அடியே… கொஞ்சோ மெல்ல பேசு.. பாரு எல்லா நம்மளையே பாக்குறாங்க. இதென்ன இனிக்கு நேத்து செய்யுற சோலியா.. எத்தன வருசமா இத செய்யுறே…”

“பாத்தா பாக்கட்டு.. அடிபட்டு ரெத்தோ வர்றது எம்புருசனுக்கு. இனிமே இப்படி செய்யாத அம்புட்டுத்தே.. ” என்றவள் அவன் முகத்தையும் பாராமல் காயம் பட்ட இடத்தில ஏதோ ஒரு இலையை  கசக்கி பிழிந்து சாறு விட்டாள்..

ஆனால் கரிகாலனிடம் தான் ஒரு வார்த்தை இல்லை.. இவளுக்குத்தான் எத்தனை காதல் என்று எண்ணியவன் பேசவும் மறந்து அமைதியாய் அமர்ந்திருந்தான்..

“என்ன சும்மா இருக்க.. கால்ல தான அடி.. வாய்ல இல்லைல..”

“என்னத்த  டி சொல்ல சொல்றவ… ” என்றவனது குரலே உரிமையாய் ஒலித்தது..

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், அவன் முகத்தில் என்ன கண்டாளோ பேசாமல் எழுந்து அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள்..

இவனும் மெல்ல சிரித்தபடி அதைவிட மெல்ல நடந்து வந்தான்.. அவனிடம் முறைத்தபடியே அவனுக்கு உண்ண எடுத்து வைத்தவள் அமைதியாய் இருந்தாள்..

“ஏன் டி தங்கோ புருசனுக்கு சிரிச்ச மொகமா சோறு போடுவியா.. இப்படியா எள்ளு கொள்ளுமா வெடிப்ப….” என்று அங்கே அருகில் இருந்த பொன்னக்கா சொல்ல

“ஹா… எம்புருசே… நா எள்ளு கொள்ளுமா வெடிச்சாலு சரி எக்குதப்பா பேசுனாலு சரி அது சொல்லட்டு எதுனாலு…” என்று வெடித்துவிட்டு அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்..

வார்த்தைக்கு வார்த்தை அவள் ‘எம்புருசன் ’ என்று சொல்லும் போதெல்லாம் கரிகாலன் மனதில் வான வேடிக்கை தான்..

அமைதியாய் ஒரு புன்முறுவலோடு அவள் கொண்டு வந்திருந்த உணவை ருசித்துகொண்டிருந்தான்..

“ஹ்ம்ம் எல்லா ஏ நேரோ… ஒரு வார்த்த நல்லா இருக்குன்னு சொல்றானா.. முழுங்குறத பாரு… கருவாப்பைய…” என்று அவள் முனுமுனுத்தது நன்றாகவே கேட்டது அவனுக்கு..

“ஏலே கரியா.. எங்கிருந்து டா பிடிச்ச இவள.. எப்ப பாரு பொரிஞ்சுகிட்டே இருக்கா..” என்று ஒரு பெண்மணி எடாசு பேச,

“அதெல்லா அவங்கய்யே ரெத்தோ க்கா.. அப்படித்தே பேசுவா…” என்று கூறி சிரித்தவன் மீண்டும் தன் வாய்க்கு வேலை குடுத்தான்..

இப்பொழுதெல்லாம் கரிகாலன் தங்கராசுவை மரியாதையாய்  பேசுவதாக  உணர்ந்தாள் தங்கமலர்.  அந்தாளு, தங்கராசு என்று எகத்தாளமாய் பேசுபவன் இப்பொழுதெல்லாம் அப்படி கூறுவதில்லை..

கரிகாலனுக்கோ தங்கமலர் முன்னை போல இப்பொழுது பட படவென்று வெடுக் சடுக்கென்று பேசுவதாய் பட்டது.. அவள் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு இருப்பதை கண்டவன், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்..

“என்ன பாக்குற.. சாப்புடு…” என்றவளுக்கு அவனது பார்வையை தாங்க முடியவில்லை.

“நீ சாப்டியா மலரு…. ”

“ம்ம்ஹும்… நீ மொத  சாப்டு…  ”

“ஏ சாப்டாம வந்தவ… ”

“ம்ம்ச் அத்த வீட்டுக்கு போனே.. எங்கம்மா வந்துச்சு… எங்கிட்ட பேசுச்சு.. நீ எல்லா சொன்னியாமே… ஒம்மேல அதுக்கு எப்பவுமே மருவாதிதே… ” என்றவளின் குரல் மிக இயல்பாய் இருக்க, என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்துகொண்டான்..

மேலும் சில நேரம் இருந்துவிட்டே தங்கமலர் சென்றாள். ஆனால் கரிகாலனுக்குதான் அவளை இன்னும் நன்றாய் பார்த்துக்கொள்ள வேண்டுமோ என்று இருந்தது..

இவர்களது சூழல் சற்றே இப்படி சரியாய் இருக்க. அங்கே தங்கராசோ மரகதத்தோடு கூட பேசுவதை குறைத்திருந்தார்..

“இந்தா இப்ப எங்கிட்ட மொகத்த தூக்கி என்னாக போகுது.. சூடு ஆருறதுகுள்ள காப்பிய குடிய்யா…”

“ம்ம்ச்… சும்மா இரு மரகதோ… ஒனக்கு கொஞ்சங்கூட கஷ்டமா இல்லையா.. எம்மவ இங்க ராணி மாதிரி இருந்தவ.. அங்க அவேங்கிட்ட என்னென்ன செரமோ படுறாளோ.. அவே என்னைய பழிவாங்க எம்மவள என்ன படுத்துறானோ… கல்லாணம் ஆகி இத்தன நா ஆச்சே ஒருநா நம்ம கண்ணுல காட்டினான..”

“அது சரித்தே… நா போயி பாத்துபுட்டு வரேன்னு சொன்னதுக்கு கூடாதுன்னு சொல்லிபுட்ட.. அதெல்லா தங்கோ நல்லாத்தே இருக்கா.. ”

“அதெப்புடி ஒனக்கு தெரியு.. நீ அங்க போனியா….  ” வேகமாய் துண்டை உதறிக்கொண்டு எழுந்து கோவமாய் வந்தார்..

“அடடா… சும்மா சும்மா இப்படி குதிக்காத.. பொட்டி வீட்டுக்கு போனே. அவகிட்டத்தே விசாரிச்சே.. எல்லா தங்கோ நல்லாத்தே இருக்காளாம். அவ புருசே கடகன்னிக்கு கூட அனுப்புறது இல்லையா.. எல்லாதையு அவனே பாத்து பாத்து வாங்கி போடுறானாம்…”

“கிழிச்சான்.. அவனுக்கே ஒழுங்கா பொங்கி சாப்ட மாட்டான்.. பாத்து பாத்து வாங்கி போடுறானாம் வாங்கி.. என்ன இருந்தாலு என்னைய மாதிரி எம்மவள கவனிக்க முடியுமா..”

மரகதத்திற்கு இதுவே சரியான நேரமாக பட்டது..

“ஏய்யா.. ஒருதடவ நம்ம போயி தங்கோ எப்படி இருக்கான்னு பாத்துபுட்டு வருவோமா ??? ”

இதை கேட்டு தங்கராசு கொதித்து நின்றார்..     

              

             

       

           

                       

Advertisement