Advertisement

     மலர் – 18

“தங்கோ…. ஏ.. தங்கோ… அங்கன ஊரே கெளம்பி போச்சு… நீ என்ன டி இன்னு கெளம்பாம இருக்கவ…?” என்று வாசலில் நின்று ஏலம் போட்டவளை, கடுப்புடன் வந்து பார்த்தாள் தங்கமலர்.

“என்ன டி கெளம்பித்தேன இருக்கவ, அப்புறோ வரதுக்கு என்ன ????  ” என்று தங்கமலரை மேலும் கீழுமாய் பார்த்தபடி அன்னமயில் கேட்க,

“அடியே ஆங்காரத்த கெளப்பாத.. நா எப்பையோ கெளம்பிட்டே… எல்லா ஓ பாசமலருத்தே… இன்னு கண்ணாடி விட்டு நகரல…    ”

இளம் சிவப்பு நிற பட்டு சேலையும் அதற்கு தோதாய் ரவிக்கையும்,  கையில், கழுத்தில், காதில் என்று சிறு சிறு தங்கம் மின்ன நிஜமாகவே தங்கமலராகத்தான் மிளிர்ந்தாள் தங்கமலர். இருக்காதா பின்னே பிறந்த வீட்டு சீர் அல்லவா.

முகத்தில் தனி தேஜஸே வந்திருந்தது.  

“என்ன அன்னோ அப்புடி பாக்குறவ…?”

“நெசமாவே இப்ப நீ ரொம்பா அழகாத்தா இருக்க புள்ள…. ”

“ஓ !!! அப்போ இதுக்கு முன்ன நா அசிங்கமாவா இருந்தே…. ” என்று நொடித்தாலும் லேசாய் வெட்கம் எட்டி பார்கத்தான் செய்தது அவளுள்.

காலையில் இருந்து கரிகாலனும் இதைத்தானே கூறிக்கொண்டே அவள் பின்னே சுற்றினான். தன்னிடம் இருந்து விளக்கி அவனை கிளம்ப கிளப்புவதற்குள் அவளுக்கு மூச்சடைத்தல்லவா போனது..

“ஒங்கூட சண்ட இழுக்கல்லா எனக்கு நேரமில்ல தாயி.. ஆள விடு… நானு எங்கம்மாவு முன்ன கெளம்பி போறோ.. வெரசா வந்து சேரு புள்ள…” என்றுவிட்டு அன்னமயில் செல்லவும்,

“இன்னுமா நீ கண்ணாடி முன்ன நிக்கிற..??? ” என்றபடி தன் கணவனிடம் வந்தாள் தங்கமலர்.

புது வேட்டி, சட்டையில், கழுத்தில் மெல்லிசாய் ஒரு தங்க சங்கிலி மின்ன நின்றிருந்தான் கரிகாலன். அவன் கறுத்த நிறத்திற்கு அந்த சங்கிலி எடுப்பாய் தான் இருந்தது.

“என்ன டி அப்புடி பாக்குறவ.. சும்மா சும்மா பாத்து கண்ணு வெக்காத…  ”

“ம்ம்ஹும் நெனப்புத்தே… கண்ண கொண்டு வந்து வெச்சிட்டாலு.. போவியா… நேரமாச்சு.. எல்லா கெளம்பியாச்சு.. நீதே இப்புடி நேரத்த இழுக்குற..”

“ஹேய்!!! ஹேய்!!! தங்கராசு மாப்ள டி… ஒடனே போனா ஏ மருவாத என்னாகுறது?? பொறு பொறு போவோ… ” என்றவன் இன்னும் கிளம்பிய பாடாய் அவளுக்கு தெரியவில்லை.

லேசாய் விசில் அடித்தபடி பவுடரை கையில் கொட்டி கழுத்தில் தேய்த்துக்கொண்டான். 

பொருத்து பொருத்து பார்த்தவள், இவன் சரிபட்டு வரமாட்டான் என்றெண்ணி, “நீ வந்தா வா இல்ல இப்புடியே அழகு பாரு… நா கெளம்புறே… ஆளு மூஞ்சியு…” என்று ஒரு  பையில் சாமான்களை எடுத்து அடுக்கியவளை,

“ஹா!! போ டி போ.. இந்த மூஞ்சிய பாத்துத்தேன் டி நீ மயங்குன.. இப்ப என்ன இப்புடி சிலுப்புறவ…” என்றபடி லேசாய் ஒட்டி நின்றான்.

“யோவ்.. அம்புட்டுத்தே ஒனக்கு மருவாதி.. ஒழுங்கா கெளம்புறியா இல்லையா..??” என்றவள் வேகமாய் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்ட போக ,

“வர வர ஒனக்கு ரொம்ப பேச்சு டி.. ஏதோ நீ ஒங்கய்யா ஒங்கண்ணே  எல்லா கெஞ்சுனதுனால வரே…” என்று அவனும் நடந்தான்.

“அப்புடியா எங்கய்யா கெஞ்சுனாரா… ??” என்றவள் அவனை பார்த்து கிண்டலாய் சிரித்தாள்.

ஊரே கூடியிருந்தது அய்யனார் கோவில் ஒட்டி இருக்கும் காலி இடத்தில். அழகாய் பந்தல் போட்டு தென்னம்பாலைகள் தோரணமாய் தொங்கவிட்டு அலங்கரித்து இருந்த பந்தலில் அழகாய் தன் மேடிட்ட வயிறோடு அவர்களுக்கே தெரிந்த அலங்காரத்தில் அமர்ந்திருந்தால் பூமணி. பெண்கள் கூட்டம் அவளை சுற்றி கீழே அமர்ந்திருக்க, சற்றே தள்ளியதாய் ஆண்கள் கூட்டம் இருந்தது.

தங்கராசுவும், பொன்னரசுவும் விசேசத்திற்கு வருவோரை வரவேற்றபடி இருக்க, மரகதம் அங்கே இங்கே என எதையோ எடுத்து வைப்பதும், செய்வதுமாய் இருந்தார். ஆனால் நொடிக்கு ஒருமுறை பார்வை எல்லாம் மகள் வரவை எதிர்பார்த்தே இருந்தது.

வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில், வராமல் போய்விட்டால் என்ன செய்ய என்ற அச்சமும் இருந்தது. காரணம் வீடு வரை குடும்பமாய் சென்று தங்கமலருக்கு செய்ய வேண்டிய சீர் அனைத்தும் செய்து, புது துணிமணி அடுக்கி, நகை நட்டு கொடுத்து, பாத்திரம் பண்டம் எல்லாம் வாங்கி போட்டு,  மாப்பிளை சீர் என கரிகாலனுக்கும் செய்து முடித்து, பின் வளைகாப்பிற்கும் முறைப்படி அழைத்து வந்தாகிவிட்டது.

ஆனால் உடன் வந்த தங்கராசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வீட்டிற்கு வந்தார் தான், தங்கமலர் போட்டு கொடுத்த காப்பியை குடித்தார் தான். ஆனால் ஒரு வார்த்தை மனிதர் வாய் திறக்கவில்லை.

ஒருவேளை இதை மனதில் வைத்து, கரிகாலன் தங்கமலரை விடாமல் போனால் என்ன செய்வது?? குடும்பத்திற்குள் நடக்கும் சிறு சிறு பிணக்குகள் தானே பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாய் போய் விடுகிறது.

ஆண்களின் வீராப்புகளுக்கு சப்பை கட்டு கட்டி, பூசி மெழுகி, புன்னகை புரிந்து அனைத்தையும் உள்ளே போட்டு குமைந்து வெளியே ஒன்றுமே நடக்காதது போல நடித்து அப்பப்பா பெண்களுக்கு தான் எத்தனை சிரமம் என்று மரகதமால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பொன்னரசுவும் நொடிக்கொருமுறை தங்கமலரும், கரிகாலனும் வருகிறார்களா என்று பார்த்தபடி இருந்தான். ஆனால் தங்கராசுவோ முகத்தில் எந்தவித உணர்வையும் கட்டாமல் கூட்டத்தில் இருந்தவர்களை கவனித்துகொண்டிருந்தார்.

“ஏ.. ஏப்பா தங்கராசு.. ஓ மவளு மருமவனு வராங்களா..??? ஊரே வேடிக்க பாக்க போயி சீர் செஞ்சு கூப்புட்டு வந்தியே.. இன்னு ஆள கானோ..  ” என்று ஒரு பெருசு எடாசாய் கேட்க,

அவரோ அதற்கு பதிலேதும் கூறாமல் புன்னகை மட்டுமே புரிந்தார். 

“யம்மா நா போயி ஒரு எட்டு பாத்துபுட்டு வரவா..?? ” லேசாய் காதை கடித்த மகனை முதலில் அதை செய் என்பது போல பார்த்தார் மரகதம்.

வேகமாய் கிளம்ப போனவனை, “ டே… பொன்னு இப்ப எங்கன போறவே.. நில்லு டா…” என்று பிடித்து நிறுத்திவிட்டார் தங்கராசு.

“என்ன இப்புடியே நேரோ போவுது… முதல்லா மாமியாரு அம்மாவு வளவிய போட்டு விடுங்க, அப்புரோ வந்து நாத்தி போடட்டு..” என்று ஒரு பெண்மணி கூற,

“சித்தி நீ மொதோ வளவி போடு எப்புடியு தங்கோ வந்துடுவா… ” என்று பொன்னக்காளும், “ஆமா மதினி.. நல்ல நேரோ போவ போது…  ” என்று பொட்டியம்மாள் கூற வேறு வழியே இல்லாமல் தங்கமலர், கரிகாலன் வரும் முன்னே வளைகாப்பு தொடங்கியது.

வளையடுக்கு வளையடுக்கு

வண்ண வண்ண வளையடுக்கு…

சீமாட்டி பொண்ணுக்கு

சீமந்தோ வளையடுக்கு…

வகை வகையா சோறு செஞ்சு

வயிறார பிள்ள உண்ண

கல கலன்னு வளையடுக்கு…

பேறுகால பொண்ணுக்கு

பெருமையா வளையடுக்கு…

பெண் புலி வந்தாலென்ன

ஆண் சிங்கோ வந்தாலென்ன..

ரெண்டுமே எங்கண்ணுன்னு சொல்லி

இருகையும் வளை குலுங்க

இறுமாந்து நில்லு பொண்ணே…   

என்று பெண்கள் பாட்டு பாடவும் பூமணியின் அம்மாவும், மரகதமும் முதலில் வளையல் போட்டு விட சரியாய் அதே நேரம் தங்கமலர் கரிகாலனோடு வந்து சேர்ந்தாள்.

வேகமாய் முன்னே நகர்ந்தவர் “வாங்க.. வாங்க…  ” என்று சிரிப்புமாய், முகத்தில் ஒரு நிம்மதி ரேகை படிய வரவேற்ற மரகதமும் பொன்னரசுவும் நிற்க, அப்பொழுதும் தங்கராசு வாய் திறந்து பேசவில்லை.

அமைதியாய் முகத்தில் ஒரு வரவேற்பு புன்னகையை மட்டும் தவழ விட்டு நின்றிருந்தார்.

கரிகாலனும் அவர் முகத்தை பார்த்தான் தான். தங்கமலரும் பார்த்தாள் தான். ஆனால் அவரோ அதே பாவனை தான்.

“ஏன் டி ஒங்கய்யே எதுவு கோந்த முழுங்கிப்புட்டாரா… இப்புடி நிக்குறாரு…” என்று கரிகாலன் கேட்ட விதத்தில் தங்கமலர் களுக்கென்று சிரித்தே விட்டாள்.

“தங்கோ வா ம்மா.. நாத்தி மொறைக்கு நீதான மொதல்ல போடணு.. வா புள்ள…” என்று மரகதம் அழைக்க, தங்கமலர் கணவனின் முகம் பார்த்தாள்.

அவனோ, “போ…” என்பது போல் சைகை செய்தவன் அவள் கையில் ஒரு மஞ்சள் பையை திணித்தான்.

“மதினி….. ” என்றபடி பூமணி அருகே சென்றவள், இருகைகளிலும் வளையலை போட்டு பின்னே,

 “பொறக்க போற புள்ளைக்கு இந்த அத்த மாமனோட மொதோ சீதனமா சின்ன பரிசு.. ” என்று அந்த மஞ்சபையை வெற்றிலை பாக்கோடு சேர்த்து வைத்து கொடுத்தாள் தங்கமலர்.

இதை யாருமே எதிர் பார்க்கவில்லை.. மரகதம் பொன்னரசு என்னவென்பது போல பார்க்க, தங்கராசுவோ சற்றே அதிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் தழுவிய புன்னகை இப்பொழுது கரிகாலன் முகத்தில் தாவி ஒட்டிக்கொண்டது.

“டே மாப்ள என்னடா இதெல்லா…  ” என்றபடி பொன்னரசு கரிகாலனிடம் கேட்க,

“இருக்காட்டு மாப்ள, பூமணிக்கு கூட பொறந்த அண்ணே தம்பி இல்ல. தாய் மாமா மொறைக்கு நான் செஞ்சதாவு, அத்த மொறைக்கு ஓ தங்கச்சி செஞ்சதாவு இருக்காட்டு.. வேணாங்காத…”

“என்ன டி இதெல்லா… இப்புடி செய்ய போறேன்னு நீ சொல்லவே இல்லையே” என்று மரகதம் மகளிடம் விசாரிக்க,

“ம்மா எதுனாலு வீட்டுல போயி பேசிக்கலா… ” என்று அந்த பேச்சை முடித்துவிட்டாள் தங்கம்.

ஒருவழியாய் வந்திருந்தவர்கள் அனைவரும் பூமணியை வாழ்த்தி வளையல் போட்டு, ஐந்து வகை சோறு பரிமாறி, என்று வளைகாப்பு சிறப்பாகவே முடிந்தது.

அதன் பிறகு சிறிது நேரத்தில் நல்ல நேரம் பார்த்து பூமணி தன் பிறந்த வீடு செல்ல சோலையூரின் அடிவாரம் வரை கரிகாலன் ஜீப்பில் சென்று விட்டு வந்தான்..

முடிக்க வேண்டிய வேலைகள் சிலது இருந்ததால் பொன்னரசுவால் மனைவியோடு தற்சமயம் போக முடியவில்லை.

“அடியே தங்கோ. ராத்திரிக்கு நம்ம வீட்டுக்கு வந்திடுங்க. இம்புட்டு சாப்பாடு இருக்கு. நீ போயி ஒலை வைக்கவேணா.. ” என்று மரகதம் மகளிடம்,

“கூப்புட்டு வாங்க…. ” என்று கரிகாலனிடம் கூற, அவனோ தங்கராசுவின் முகத்தை பார்த்தான்.

“ஏய்யா.. ஒருவார்த வாய தொறந்து பேசுனா என்ன…???”

“என்ன பேச சொல்லுறவ…..?? ”

“அது சரி, மவளையு, மருமவனையும் ராத்திரி சாப்பாடுக்கு வீட்டுக்கு கூப்புடு…”  

“ஏ கூப்புட்டாத்தா தங்கோ வருவாளா…?? அவ பொறந்த வீட்டுக்கு எப்போ வேணா வரலா.. போகலாம்…”

“சரி மலரு… ராத்திரி சாப்பாடுக்கு நீ மட்டு போயிட்டு வா புள்ள… இப்ப கெளம்பு வீட்டுக்கு போவோ..” கரிகாலன் மனைவியை கிளப்ப, அவளோ

“என்னம்மா இதெல்லா ” என்பது போல தன் அம்மாவை பார்த்தபடி நின்றாள்.

“இங்கியாருங்கத்த மலரு ஒங்களுக்கு மவத்தே, ஆனா இப்ப எனக்கு பொண்டாட்டி. அவளுக்கு குடுக்க வேண்டிய மருவாதியா குடுத்து கூப்புட்டாத்தே அவளு வருவா நானு அனுப்புவே.. ” என்று சொல்லிவிட்டு தங்கமலரை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான் கரிகாலன்.

ஆரம்பிக்கும் போது அனைத்தும் நல்லதாய் ஆரம்பித்து, முடிக்கும் போது இப்படியா கோணலாய் போக வேண்டும் என்று நொந்தார் மரகதம். வீட்டிற்கு போனதும் தங்கரசுவை ஆடி தீர்த்துவிட்டார்.

“இப்ப என்னத்துக்கு நீ இம்புட்டு அமைதியா இருக்க…??? நானு பாத்துகிட்டு தான இருக்கே. வந்தவங்கள வான்னு கேக்கல, சரி வீட்டுக்கு ஒரு வார்த்த கூப்புட்டா கொறஞ்சு போயிடுவியா??? நீ இப்புடி செஞ்சா நாளைக்கு நம்ம மவ எப்புடி இங்கன வந்து போக இருக்க முடியு… நீ என்னவோ முடிவு செஞ்சு வச்சுக்கிட்டுத்தே இப்புடியெல்லா செய்யுற…”

“ம்மா நீ ஏம்மா கண்ண கசக்குற… நானு பாத்துகிட்டேத்தே இருந்தே… இவரு ஒரு வார்த்த கூட கரியங்கிட்ட பேசல.. சரி பேசத்தே வேணா.. வந்தவங்கள ஒரு வார்த்த வான்னு கேக்கணுமா இல்லியா.. ஏய்யா இப்புடி செய்யுற… தங்கோ பாவோ இல்லியா..”

இப்படி ஆளாளுக்கு பேச, தங்கராசு பொறுமையாய், “எனக்கு நெசமாவே என்ன பேசுறதுன்னு தெரியல.. அதே ” என்று வார்த்தைகளை தேடினார்.

“என்னாது என்ன பேசுறதுன்னு தெரியலையா..?? ஒனக்கு பேசவே தெரியாது பாரு..”

“நெசமாத்தே மரகதோ… எனக்கு படக்குன்னு போயி என்ன பேசுறதுன்னு தெரியல. பொம்பளைங்க பொசுக்குனு சண்ட போடுவீங்க, அப்புரோ ஒட்டிக்குவீங்க, ஆனா எனக்கு அப்புடில்லா இருக்க தெரியாது.. நெசமாவே எனக்கு தங்கோ கிட்டயோ, இல்ல அவ புருசங்கிட்டையோ திடுதிப்புன்னு போய் பேச முடியல. அவ நல்லாருக்கான்னு மனசுக்கு தெரிஞ்சு போச்சு. இனி இதுக்கு மேல என்ன வேனும்னுத்தே அமைதியா இருந்தே..”

தங்கராசு வாழ்வில் இத்தனை பொறுமையாய் பேசியது இது தான் முதல் முறையாய் இருக்கும் போல. மரகதமே சற்று ஆச்சரியமாய் தான் பார்த்தார். பொன்னரசுவோ இவர் என்ன சொல்கிறார் என்பது போல பார்க்க,

“நெசமாத்தே மவனே, இத்தன நாளா நா எம்புட்டு சத்தோ போட்டு இருப்பே, அப்பல்லா எனக்கு இந்த தயக்கோ வரல, இப்ப சகஜமா பேசணும்னு நெனச்சா என்ன பேசன்னு தெரியல.  அதுவு இல்லாம இத்தன நாளா கோவிச்சுட்டு இருந்துபுட்டு இப்ப இளிக்க சங்கடமா இருக்கு..” என்றவர் மேற்கொண்டு எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தார்.

மரகதத்திற்கு இப்பொழுது தான் புரிந்தது. “இவரு கூட இம்புட்டு யோசிப்பாரா.. ஹ்ம்ம் ” என்று நினைத்தவர் விடாமல்,

“சரி சரி அதெல்லா இருக்கட்டு.. சாப்புட வாங்கன்னு போயி ஒரு எட்டு நீதே கூப்புட்டு வர.. ” என்று இந்த பேச்சை இதோடு முடித்துவிட்டார்.

தங்கராசுக்கு இப்பொழுதும் அன்று தங்கமலர் வந்து பேசியது தான் நினைவில் வந்தது. திருமணம் ஆனா பிறகு ஒருமுறை கூட அவளாய் வந்து பேசியதில்லை, நேருக்கு நேர் பார்த்தால் கூட பேசாமல் ஒதுங்கி போவாள். அப்பொழுதெல்லாம் மனதிற்குள்  “ஒரு வார்த்த அய்யா கூப்புட்ட இந்த புள்ளைக்கு என்னவா..?? என்னைய மன்னிச்சிடுங்கன்னு கேட்டா என்னவா..?? ”  என்று பலமுறை நினைத்திருக்கிறார்.

மனைவி, மகன், மருமகள் என அனைவரும் தங்கமலரோடு பேசினாலும், என்னவோ மனதில் ஒரு பிடிவாதம், அவளாய் அப்பா என்று தேடி வரட்டும் என்று. அந்த நாள் வருமா வராதா என்றெல்லாம் அவருக்கு தெரியாது, ஆனாலும் மனதில் மகள் தன்னை தேடி வரவேண்டும் என்ற பிடிவாதம்.

தந்தையாய் ஒரு ஆசை என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு தருணத்திலும் அவர் எதிர் பார்த்தார், அத்தனை ஏன் இந்த சீட்டு பணம் வந்தபோது கூட மகள் தன்னிடம் வந்து இதை பற்றி பேசுவாள் என்றே எண்ணினார் ஆனால் அவளோ இவர் பக்கம் கூட வரவில்லை.

இப்படியிருக்க தங்கமலர் வந்து இவரிடம் பேசவும் மனிதருக்கு அத்தனை நிம்மதி மகிழ்ச்சி, இறுதியில் தகப்பனின் உறவு வேண்டும் என்று அவளாகவே வந்துவிட்டால் பார்த்தாயா என்ற கர்வம் கூட அவருக்கு வந்தது.

கரிகாலனிடம் நீ என்னதான் என் மகளை ராணியாய் தாங்கினாலும், இந்த அப்பன் மீது இருக்கும் பாசத்தை நீ வெல்ல முடியாது என்று இறுமாந்து கூற வேண்டும் போல இருந்தது.

ஆனாலும் ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு வந்தவர், அன்றிரவே மரகதத்திடம் “ஒரு நல்ல நாளா பாத்து தங்கோ வீட்டுக்கு போயி சீர் செஞ்சுபுட்டு வந்துடலா..” என்று கூறியவர் அடுத்து மரகதம் கேட்ட கேள்வி எதற்குமே பதில் கூறவில்லை.

அதன் பிறகு தங்கமலர் வீட்டிற்கு போனபோது கூட இவர் எதுவும் பேசவில்லை தங்கமலர் வந்து அய்யா அய்யா என்று பேசினதற்கும் மனிதர் சிரித்தே வைத்தார். 

கரிகாலன் உபசரிப்பாய் இரண்டொரு வார்த்தை பேசியதற்கும் தலையசைத்துக்கொண்டாரே ஒழிய எதுவும் பேசவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு மரகதம் கூட கேட்டார் “ ஏய்யா அந்த புள்ள எம்புட்டு ஆசையா வந்து பேசுது.. பதிலுக்கு பேசுறதுக்கென்ன… இல்ல இன்னு மனசுல எதையா வச்சுட்டுத்தே இப்புடி செய்யுறியா ” என்று கேட்டதற்கு கூட

“எனக்கு எல்லா தெரியு நீ சும்மா இரு.. ” என்று வாயடைத்துவிட்டார்.

மரகதத்திற்கு தெரியாதே இவருக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று.

“என்ன தெரியு ஒனக்கு… இல்ல என்ன தெரியும்னு கேக்குறே.. நம்ம மவ…” என்று மரகதம் தொடங்கும் போதே

“எனக்கு எல்லா தெரியு… எல்லாமே… சும்மா திரும்ப திரும்ப அதையே பேசி மனுசே உசுர வாங்காத.. போயி ஆக வேண்டிய சோலிய பாரு. இதுக்கு மேல நடக்குறதாவது நல்லதா நடக்கட்டு. ” என்றவர் துண்டை உதறி தோளில் போட்டபடி நகர்ந்துவிட்டார்.

மரகதம் தான் விக்கித்து போனார். பொன்னரசுவிடம் அனைத்தையும் கூற, அவனோ, “ம்மா இதுதே நடக்கனும்னு நீ எதிர்பாத்த… அவரா மனசு மாறினது சந்தோசம்னு விடு மா.. சும்மா அதவே போட்டு நம்ம கிண்டுனா கடுப்பாக போறாரு… ” என்றதும் இவர்கள் பிரச்சனை இதோடு முடிந்தது.

ஆனால் அன்று இரவோ தங்கமலர் துளி தூக்கம் கூட தூங்கவில்லை.  தங்கராசுவோடு அவள் பேசியது யாருக்கும் தெரியாது. ஏன் கரிகாலனிடம் கூட அவள் சொல்லவில்லை. நாளை பின்னே நீ சொல்லிதானே வந்தார் என்று பேச்சு வந்துவிட கூடாதே என்று அவள் அமைதியாய் இருந்தாள்.

ஆனால் இப்படி திடுதிப்பென்று வந்து சீர் செய்து, வளைகாப்பிற்கு முறைப்படி அழைத்து என்று அனைத்தையும் முறையாய் செய்யவும் மகிழ்ந்து தான் போனாள்.

கரிகாலனும் அனைவரிடமும் இன்முகமாகவே பேச இன்னும் மகிழ்ச்சி கூடியது. மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை.      

“என்ன புள்ள தூங்காமா இப்படி உருண்டுட்டு கெடக்க…. ”

“ம்ம்ம் தூக்கோ வரல.. ”

“அது சரி.. அதெப்புடி வரு…   ”

“பின்ன, பாத்தியா கடசில எப்புடி வந்து எங்கய்யா செஞ்சாருன்னு.. என்ன இருந்தாலு மவ மேல அவருக்கு பாசந்தே..  என்ன கொஞ்சோ கோவோ.. ஏ ஒனக்கு கோவோ வரது இல்ல அது போலத்தே.. ” என்று சலுகையாய் அவனிடமே ஒட்டி படுத்துக்கொண்டாள்.

“ஹ்ம்ம் இனி எங்க எம்பேச்செல்லா காதுல ஏறும்…” என்றவன் சிறிது அமைதிக்கு பின்னே

“மலரு நானு ஒங்கிட்ட ஒன்னு சொல்லனு புள்ள…  ” என்றான் ஒரு அமைதியான குரலில்.

“என்ன..???!!!! ”

“இல்ல… அது… இன்னு ஒங்கய்யா கூட சண்ட போட்டதுனாலத்தே நா ஒன்ன கல்லானோ  பண்ணேன்னு நெனைக்குறிய.. அது.. அது வந்து.. மலரு… ”

“ஹ்ம்ம் நா அப்புடி நெனப்பேன்னு  நீ கண்டியா… இங்கியாரு நீ ஒ வீராப்புக்காக என்னைய கல்லானோ பண்ணிருந்தா நெசமா நம்ம சந்தோசமாவே இருக்க முடியாது. அதுவு இல்லாம இந்த  எங்கண்ணே வந்து நின்னப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு இதுல வேற எதுவோ இருக்குனு. ஆனாலு ஒரு கோவோ மனசுக்குள்ள இருக்குறத சொல்லாம வேற காரனோ காட்டி என்னைய கல்லாணம் செய்யுறன்னு. அதே அப்பல்லா சண்ட போட்டே..”

“இல்ல மலரு இருந்தாலு… நா செஞ்சது தப்புத்தேன…   ”

“ஹ்ம்ம்  கோவத்துல எங்கய்யா என்னைய பிடிச்சு எவனையாது கட்டி வச்சிடுவாருன்னு தேன நீ இப்புடி பண்ண.. விடு நீ எதுக்கு வெசன படதா…” என்றவள் ஆறுதலாய் அவன் முகம் தடவினாள்.

தங்கமலரின் கைகளை இறுக பற்றிக்கொண்ட கரிகாலன், “இத்தன நாளா தனியா இருந்தே புள்ள.. இன்னிக்கு ஒன்னாலத்தே ஒரு குடும்பமே எனக்கு கெடச்சிருக்கு..” என்றவன் மெல்ல அவள் கைகளில் முத்தமிட்டான்.

“ம்ம்ம் அதெல்லா அப்புரோ கொஞ்சு…. அந்த காச என்னத்தே செய்ய… அப்புடியே பெட்டிக்குள்ள இருக்கு.. நீயு சொல்லுவ சொல்லுவன்னு பாத்தா ஒண்ணுமே சொல்லல.”

“அதான பாத்தே.. தங்கராசு மவ காரியக்காரித்தே.. ”

வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

“நீ என்ன வம்பிழுத்தாலு சரி.. மொதல்ல எனக்கு ஒரு பதில சொல்லு…”

“ஹ்ம்ம் இங்கியாரு தங்கோ என்ன இருந்தாலு அந்த காசு ஒங்கய்யா வீட்டுக்கு சேர வேண்டியது. ஒங்கய்யா கிட்ட இத பத்தி பேச முடியாது. அதுனால வளகாப்பு அன்னிக்கு பேசாம எல்லா முன்னாடியு ஒங்கண்ணி  கையில குடுத்துபுடு. யாரு எதுவு சொல்ல மாட்டாங்க. சொல்லவு முடியாது. ஒனக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு. எப்படினாலு அந்த காசு ஒங்கவிட்டு புள்ளைக்குத்தேன சேருது.. ”

கரிகாலன் இப்படி கூறியதும், “அட இத நா கொஞ்ச கூட நெனச்சு பாக்கலயே… நல்ல ரோசனத்தே… ம்ம் ஒன்னைய நெனச்சா எனக்கு பெருமைய இருக்குய்யா…” என்றாள் காதலாய் பார்த்து.

“ஏன் ???”

“ காசு பணத்துக்கு பின்னால ஓடுற இந்த காலத்துல யாருக்கு இப்புடி தூக்கி குடுக்க மனசிருக்கு. இது வரைக்கு நீ ஒரு வார்த்த என்ன சொல்லிருப்பியா. இன்னிக்கு வீட்டுல இருந்து வந்தப்ப கூட நீ எவ்வளோ மருவாதியா நடந்துகிட்ட.. ”

“ஹ்ம்ம் இங்கியாரு மலரு, பொறக்கு போதே யாரு யாருக்கு எதிரி இல்ல. ஒங்கய்யா மருவாதியா நடந்தா நானு அதுக்கு ஏத்த மாதிரி நடந்திருப்பே. இப்ப எதுக்கு அந்த பேச்செல்லா.. இனியு நா நல்லபடியாத்தே நடந்துப்பே.. ஆனா அதுக்கா ரொம்ப ஏறங்கியு போவேன்னு சொல்ல முடியாது..” என்றவன் தான் இன்று வளைகாப்பு முடிந்து மரகதம் இரவு உணவிற்கு வீட்டிற்கு வருமாறு அழைக்கவும்,

முறைப்படி வந்து தங்கராசு அழைத்தால் தான் வர முடியும் என்று கூறி சென்று விட்டான்.

தங்கமலரோ இரவு நெருங்க நெருங்க வாசலை பார்த்து அமர்ந்திருந்தாள். சமைக்க மனமே இல்லை.

“என்ன இப்புடியே இருந்தா தட்டுல சோறு வருமா… எனக்கு பசி வயித்த கிள்ளுது….  ” என்று கரிகாலன் வேறு வேண்டுமென்றே கடுப்படித்தான்..

“ம்ம்ச் மதியோ நல்லாத்தேன சாப்புட்ட… எப்படியு எங்கய்யா வருவாரு…”

“வருவாரு வருவாரு… நீ இன்னிக்கு வாசல்லயே இருக்க வேண்டியதுத்தே…  ”

இப்படியே இவர்கள் பேச, ஒருவழியாய் தயங்கி தயங்கி தங்கராசுவும் வந்தார். வந்தவர் உள்ளே வராமல் வாசலில் நிற்க, “அய்யா உள்ள வாங்க… என்ன அங்கனயே நிக்கறிங்க.. உள்ள வாங்கய்யா…” என்றவள் கரிகாலனிடம் பெருமையாய் ஒரு பார்வையை வேறு வீசினாள்.

“உள்ள வாங்க…. ” என்று அவனும் கூற,

“இல்ல இருக்கட்டு நேரோ போவுது… ரெண்டு பேரு வந்து சாப்புடுங்க..” என்றவருக்கு அதற்குமேல் நிற்க முடியவில்லை போல.

“தங்கோ நா முன்னடி போறே புள்ள.. நீயு ஓ வீட்டுகாரு வாங்க…” என்றபடி நடந்துவிட்டார்.

“அவருக்கு சங்கடமா இருக்கும்ல…. ” என்றபடி வீட்டை பூட்டி கரிகாலனையும் இழுத்துக்கொண்டு சென்றாள் தங்கமலர்.

திருமணம் முடிந்து முதல் முறையாய் வீட்டிற்கு செல்கின்றனர். தங்கமலரை விட கரிகாலனுக்குத்தான் ஏகப்பட்ட மரியாதை.

உண்ணும் போது கூட “ மொதல்ல மாப்பள சாப்பிடட்டு…” என்று மரகதம் கூற, கரிகாலன், பொன்னரசு, தங்கராசு மூவரும் முதலில் உண்ண அமர்ந்தனர்.

தங்கமலரோ பார்த்து பார்த்து தன் அப்பாவை கவனிக்க, மரகதம் யாரும் அறியாமல் “ஓ புருசன கொஞ்சோ கவனி… ” என்று கண் ஜாடை காட்ட, அதெல்லாம் அவள் கண்ணும் தெரியவே இல்லை.

பொன்னரசுவும், கரிகாலனும் பேசியபடி உண்ண, பொருத்து பொருத்து பார்த்த தங்கராசு, “ஏ புள்ள தங்கோ… மருமவனுக்கு கொஞ்சோ கவனி புள்ள.. பாரு எலையில சோறு கம்மியா இருக்கு..” என்று கூற கரிகாலன் படக்கென்று திரும்பி தங்கராசு முகம் பார்த்தான்.

இத்தனை நாட்கள் கழித்து மருமகன் என்று கூறியிருக்கிறார். அவனையும் அறியாமல் முகத்தில் ஒரு சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்ள, அதே சிரிப்பு தங்கராசு முகத்திலும் லேசாய் படர்ந்து மலர்ந்தது.

தந்தையும்,  கணவனும் ஒருவரை ஒருவர் சிநேகமாய் பார்த்து சிரித்துக்கொள்ள, இதை தானே நான் வேண்டினேன் என்று  மனதார அய்யனாருக்கு நன்றி கூறினாள் சோலையூரின் தங்கமலர்..

                            

           

   

 

          

   

   

           

 

                            

                                                  

Advertisement