Advertisement

மலர் – 17

நீல வானில் நகர்ந்து செல்லும் பஞ்சு பொதியான மேகங்கள் போல நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. அவரவர் வாழ்வும் அதன் போக்கில் தினசரி வேலைகளோடு செல்ல தங்கராசு மட்டும் முற்றிலும் மாறிவிட்டார்.

எத்தனை கோவமாய் பேசுவாரோ, எந்த அளவு அவரது தொனி இருக்குமோ அதெல்லாம் நேர்மாறாய் போனது. யாரிடமும் அத்தனை பேசுவதில்லை. மரகதம் ஏதாவது கேட்டால் பதில் கூறுவார். அவ்வளவே.

வீட்டுக்கு வேண்டியதை எல்லாம் அவராகவே வாங்கி போடுவார். பொன்னரசு அவனாகவே  சில பொறுப்புகளை தனதாக்கிக்கொள்ள, இவரின் அமைதியோ இன்னும் கூடியது.

“என்னாச்சுன்னு இப்ப இப்புடி இருக்க??? ஒடம்பு எதுவு செய்யுதா….  ???” என்று மரகதம் கேட்டதற்கு கூட இல்லை என்று மண்டையை உருட்டினாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை.

“என்னம்மா அப்பா இப்பல்லா வாயே தொறக்குறது இல்ல…. ”

“என்னான்னு தெரியல டா… மனுசே பேசுறதே இல்ல.. எதையோ யோசிக்கிறாரு… கேட்ட ஒன்னு சொல்லுறது இல்ல… எதுவு புரியலா டா பொன்னு…  ”

“ஏம்மா ஒடம்பு எதுவு சரியில்லையா என்ன ??? டவுனுக்கு போயி டாக்டரு கிட்ட காட்டுவோமா…. ”

“கேட்டுபுட்டே டா… அதுக்கு இல்லன்னுத்தே சொன்னாரு..”

“எதுக்கு இன்னொரு தடவ கேட்டு பாருமா…  அவரு இப்புடி இருக்குறது சங்கடமா இருக்கு…. ”

“எனகுந்தே டா.. சரி நானு பேசுறே….  ”

இப்படியான பேச்சுக்கள் அடிக்கடி அங்கே நடப்பது வழக்கமாய் போனது. ஆனால் இதற்கெல்லாம் காரணமாய் இருந்த தங்கராசுவோ வெகு அமைதியாய் இருந்தார்.

“அய்யா ஒருவாட்டி வந்து புதுசா வாங்குன நெலத்த பாருங்க…. ” என்று பொன்னரசு அழைக்க, முன்பிருந்த தங்கராசாய் இருந்தால் இந்நேரம் ஆடி தீர்த்திருப்பார் மனிதர், ஆனால் மகன் அழைத்ததும் அவன் முகத்தை பார்த்தவர்,

“ஹ்ம்ம் இப்ப போவோ… ” என்று கூறி அவனுக்கு முன்னே நடந்தார்.

எங்கே தான் அழைத்து ஏதாவது சொல்வாரோ என்றே தயங்கி அழைத்தவனுக்கு ஆச்சரியமாய் போனது.

ஒருமுறை தன்னை தானே அழுத்தி தொட்டு பார்த்தவன், நடப்பது உண்மை என்பதை உணர்ந்து வேகமாய் அவரின் பின்னே சென்றான்.

“போற மனுசே எதுவு சண்டையிழுக்காம வரணுமே… ” என்று மரகதம் வாசலை பார்த்தபடி கூற,

“அதெல்லா ஒன்னு ஆவாதுத்த.. நீங்க வேணா பாருங்க எனக்கு புள்ள பொறக்குற நேரோ எல்லாமே சரியாகிடு…   ” என்று தன் மேடிட்ட வயிற்றில் கையை வைத்து சொல்ல,

அனைத்தும் நல்லதாய் நடந்திட வேண்டுமே என்று மரகதமும் வேண்டினார்.

அங்கே பொன்னரசுவோடு சென்ற தங்கராசோ ஏற்கனவே அங்கே நின்று நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கரிகாலனை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றார்.

அவனுமே இவரை எதிர்பார்கவில்லை போல. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். இத்தனை நாள் எப்பொழுது பார்த்தாலும் முட்டலும் மோதலுமாய் இருக்கும் ஆனால் இன்றோ மௌனமே ஆட்சி செய்தது.

பொன்னரசுவிற்கு தான் மனம் பக் பக்கென்றது…

கையை பிசைந்தபடி என்ன நடக்குமோ என்று இருவரையும் மாறி மாறி பார்த்தவன் முகத்தை கண்ட கரிகாலனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

முதல் முறையாய் வந்திருக்கிறார், வந்தவரை வாவென்று அழைக்க வேண்டுமா ??? ஒருவேளை நாமாக ஏதாவது பேச போக அது ஏதாவது சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டது போல் ஆகிவிடுமா என்றெல்லாம் கரிகாலனது மனம் நொடியில் எண்ணமிட,

“மொத மொத வந்திருக்கே… தொர வாங்கன்னு கேட்ட கொறஞ்சிடுவனோ…  ” என்று எண்ணமிட்டது தங்கராசே தான்…

இப்படிதானே நம் வாழ்விலும் சில பொழுதுகள் கடந்துவிடுகிறது. கண் எதிரே தெரிந்தவர்கள் வந்தால், சிரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அப்பொழுதும், வந்தவர்களும் கடந்தது போயிருப்பர்..

அதுபோலத்தான் இப்பொழுதும்..

கரிகாலன் ஒன்று நினைக்க அதையே வேறு விதமாய் தங்கராசு நினைக்க, இருவரின் நிலையும் புரியாமல் பொன்னரசு “அய்யோ !!! ரெண்டு வில்லங்கமு என்னத்த நெனச்சி இப்புடி நிக்குதுங்க…. ” என்று குழம்ப,

கரிகாலன் பட்டென்று “வாங்க…. ” என்று கேட்டுவிட்டான்…

தங்கராசுவும் அவரை அறியாமல் பதிலுக்கு லேசாய் தலையை ஆட்ட, காண்பதெல்லாம் நிஜமா கனவா என்பது போல பார்த்தது வேறு யாராய் இருக்கும்..

“மாப்ள, தண்ணி பாச்சிட்டேன்… புது நாத்து போடணும், அதுக்கு குழி வெட்டனும்… நாளைக்கு ஆள் வர சொல்லிருக்கே.. எனக்கு மேக்க காட்டுல நாளிக்கு சோலி இருக்கு… நீ பாத்துக்க… ” என்றுவிட்டு வேகமாய் அவன் நகர அதுவரை தங்கராசு அமைதியாய் இருந்தது அவர் மகனுக்கே பெருத்த ஆச்சரியமாய் இருந்தது..

“ஏ தொற நா வந்த ஒடனே கெளம்பிட்டாரு…. ” என்றபடி வேட்டியை மடக்கி கட்டிக்கொண்டு நடந்தவரை விநோதமாய் பார்த்தான் பொன்னரசு..

அங்கே கரிகாலனுக்கோ தான் தான் இப்படி நடந்துகொண்டோமா என்று ஆச்சரியமாய் இருந்தது..

“எப்புடி படக்குன்னு வாங்கன்னு கேட்டே.. அதுக்கு அவரு மண்டைய ஆட்டுன மாதிரி இருந்துச்சே….  நெசமாத்தே எல்லா நடந்துச்சா… இல்ல எல்லாமே நம்ம கனா கண்டோமா….” என்று வீடுவரைக்கும் யோசித்தே சென்றவனை போவோர் வருவோரெல்லாம் வித்திசயமாய் பார்த்தது வேறு அவனுக்கு தெரியாது.

வீட்டிற்கு சென்றவனும் அதே மனநிலையில் இருக்க இரண்டொரு முறை அழைத்து பார்த்த தங்கமலரோ கடுப்பாகி போனாள்…

“இந்தா எந்த கோட்டையே புடிக்க இப்புடி ரோசன பண்ணிட்டு இருக்க???? ” என்று உலுக்கவும்,

“ஹா… என்ன புள்ள என்ன சொன்ன…  ”

“அது சரி… நெனப்பெல்லா எங்கன இருக்கு..???  ”

“எல்லா எங்க மாமனாரு மேலத்தே… ”என்று கூறி சிரிக்க,

“என்ன சொல்லுற ???” என்று புரியாமல் பார்த்தாள் தங்கமலர்.

“நெசமாத்தே மலரு… ஒங்கய்யா நம்ம காட்டுக்கு வந்தாரு புள்ள… எனக்கு விசுக்குனு ஆகிபோச்சு… ஆனாலு மொதோ தடவ வராரு வந்தவர வான்னு கேக்கனும்ல.. அதே கேட்டே… அவரு தலைய ஆட்டுனாரு…”

“இந்தா என்னைய பாத்தா ஒனக்கு எப்புடி தெரியுது… ஒரு வயசுலேயே எனக்கு மொட்ட போட்டு காது குத்திட்டாங்க… சும்மா நீ என்னைய ஏக்காத….”

“அட சத்தியமா புள்ள.. வேணும்னா நீ ஒங்கண்ணே கிட்ட கேட்டு பாரு….   ”

“ம்ம்…. ” என்றவள் ஒன்றும் சொல்லாமல் வேலையை பார்த்தாள்..

“ஏய் என்ன டி நா சொல்லுறே நீ ம்ம்னு மட்டும் சொல்லுறவ… ”

“இப்ப அதுக்கு என்னத்த பண்ண சொல்லுற… நீ வாங்கன்னு கேட்ட, அவரு தலைய ஆட்டுனாரு அம்புட்டுத்தேன..  அதுக்கு ஊரு கூட்டி திருவிழா கொண்டாடவா முடியு…”

கரிகாலனுக்கோ பொசுக்கென்று ஆனது. அவன் எத்தனை பெரிய விஷயத்தை கூறியிருக்கிறான், அவனை பொருத்தமட்டில் அது பெரிய விஷயம் தானே, ஆனால் அதையெல்லாம் தங்கமலர் சிறிதும் சட்டை செய்யவில்லை என்றதும் அவனுக்கு எப்படியோ ஆகிவிட்டது..

முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கிவைத்துகொண்டு அமர்ந்திருந்தான்.

அவளுக்கு உள்ளே சிரிப்பாய் இருந்தது. வெகு நாட்கள் ஆகிவிட்டது கரிகாலனை இப்படி வம்பிழுத்து.. எளிமையான வாழ்க்கை என்றாலும் அவர்களது வாழ்விலும் எத்தனை பிரச்சனைகள். அதையெல்லாம் கடந்து வாழ்வை ஓட்டுவதும் அத்தனை எளிதாய் இல்லையே.

அத்தனைக்கும் மீறி இன்று கரிகாலன் தன் தந்தையோடு ஒரு வார்த்தை என்றாலும் மனதார பேசியது அவளுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ஆனாலும் அவனை லேசாய் சீண்டி பார்க்கும் எண்ணம் எழ, அவனிடம் வம்பிழுத்தாள்.

“என்ன ஒன்னு பேசாம உக்காந்து இருக்க…?? ”

“ம்ம்ச்.. ஒன்னுயில்ல.. ஒ சோலிய பாரு….   ” என்று கடுப்படித்தான்..

இதற்குமேல் அவள் ஒன்றுமே பேசவில்லை. மேற்கொண்டு பேசினால் அவன் கோவத்தில் ஏதாவது கத்துவான். அது தேவையில்லாத பிரச்சனையில் கொண்டு போய் விடும். ஆகையால் அமைதி ஆகிவிட்டாள்.

நாட்களும் இப்படியே கழிய, பூமணியின் பெற்றோர்கள் வந்து வளைகாப்பிற்கு நாள் குறித்து கேட்க வந்திருந்தனர்.

மரகதத்திற்கோ எப்படியாவது இந்த விசேசத்தில் தங்கமலர் கரிகாலனை வீட்டில் சேர்த்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் வளைகாப்பை வீட்டில் வைத்து  அனைவரின் முன்னும் தங்கராசு வீட்டில் வைத்து அவர்களை ஏதாவது பேசிவிட்டால் பின் அது பெரும் பிரச்சனையாய் போகும்.

பொதுவான இடத்தில வைத்தால், அவர்களும் வந்து போக ஏதுவாய் இருக்கும். இதையெல்லாம் யோசித்து மகனிடம் கூறினார்.

பொன்னரசுவோ, “ம்மா… நீ சொல்லுறது நல்ல ரோசனத்தே.. ஆனா வீட்டுல வச்சாலு எனக்கென்னவோ அய்யா அவங்க கூட பேசுவாருன்னுத்தே தோணுது..” என்று ஆரம்பித்து அன்று நடந்ததை கூறினான்..

“என்ன டா சொல்லுற… நேசமாதேனா…. இத முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன வந்துச்சு….” என்று மகிழ்ந்தவர், மனதில் வேறு சில கணக்குகள் போட்டார்.

அவர் போட்ட கணக்கிற்கு சரியாய் தங்கராசுவும் வந்து சேர,

“ஏய்யா… வளகாப்பா வீட்டுல வெக்கலாமா இல்ல பந்த போட்டு களத்து மேடுல வேப்போமா.??  ” என்று வினவ,

அவரோ “ஹா…!!! எங்க வச்சா என்ன ??? நல்லா செறப்பா செய்யணு அம்புட்டுத்தே.. ஊரு மொத்தத்தையு கூப்புட்டு சோறு போடனு.. எதுனாலு எனக்கு சரி… ஒம்மவன ஒரு வார்த்த கேட்டுக்க… ” என்று சொல்லி முடித்துவிட்டார்.

இவர் இப்படித்தான் சொல்வார் என்று மரகதத்திற்கு தெரியாதா என்ன ??

“ஊரெல்லா கூப்புட்டா போதுமா ?? நம்ம வீட்டுல ஒருத்தி பொறந்தாலே அவள கூப்புட வேணாமா ?? அப்புரோ நாத்தி மொறைக்கு வந்து யாரு வளவி போடுவா ?? ஹ்ம்ம் எவ்வயுத்துல பொறந்தவ அவளுக்கு அய்யே அண்ணே அம்மா அண்ணின்னு எல்லா இருந்து இப்புடியா ஒட்டு இல்லாம உறவு இல்லாம அல்லாடனு… யாரு செஞ்ச புண்ணியமோ புருசங்காரே நல்ல மனுசனா போயிட்டான்….  ” என்று மூக்கை சிந்தி சேலை முத்தியில் கண்ணை துடைத்து அழ ஆரம்பித்துவிட்டார்..

“ஏ.. ஏய்.. கூறுகெட்ட கிறுக்கி… இப்ப என்னத்துக்கு டி அழுவுற… நல்ல சேதி பேசுறப்ப இப்புடித்தே கண்ண கசக்குவியா… பொட்ட கழுத…” என்று சீரியவரை கண்டு உள்ளே நடுங்கினாலும்,

“வேற என்னத்த செய்ய முடியு?? அழத்தே  முடியு… அவளுக்குன்னு வாங்கி வச்ச துணிமணி பாத்தரோ பண்டோ எல்லா தூசி அடஞ்சு கெடக்கு… நீ பாத்து பாத்து செத்து வச்ச நக நட்டெல்லா கேக்க ஆள் இல்லாம கெடக்கு… நா ஒரு வக்கத்தவ வாய மூடி கெடக்கே…” என்று புலம்பிய மனைவியை என்ன சொல்லி சமாதனம் செய்வது என்று தங்கராசுவிற்கு தெரியவில்லை.

“ம்ம்ச்.. ஏ வாய மூடுறியா… எட்டூருக்கு கேக்கணுமா?? ஏற்கனவே ஊரு முழுக்க நாரி கெடக்கு… எம்மானோ மருவாதி எல்லா போனது போதாதா ஒனக்கு.. ” என்று தங்கராசு பலமடங்கு எகிறவும், வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்துவிட கூடாது என்றெண்ணி அமைதியாய் இருந்தார் மரகதம்.

“என்ன பேசுறதெல்லா பேசிபுட்டு அமைதியா இருந்தா என்ன அர்தோ… இப்ப என்னத்துக்கு இப்புடி உக்காந்து இருக்கவ.??”

“நா ஒன்னு சொல்லல சாமி.. எனக்குத்தே இந்த வீட்டுல வாய் தெறக்க உரிம இருக்கா என்ன ???எதோ உங்குற சொத்துக்கு சோலி செய்யுறே அம்புட்டுத்தே.. இல்ல இத்தன வருசத்துக்கு மேல அப்பே வீட்டுல போயி நிக்க முடியுமா என்ன ???” என்று அங்கலாய்க்க, தங்கராசுக்கோ அசதியாய் இருந்தது மனதில்.

எதையும் சட்டென்று ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனாலும் விட்டு வெட்டிவிடவும் முடியவில்லை.

அதுவும் இல்லாமல் எதுவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் மாட்டிகொண்டு முழிப்பது அவருக்கு இம்சையாய் இருந்தது.

சரி யோசிக்கட்டும் என்று மரகதம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க, அங்கே தங்கமலர் தான் தவியாய் தவித்து போனாள்.

பொன்னரசு வந்து வளைகாப்பு பற்றி கூற கரிகாலன், தங்கமலர் இருவருக்குமே மகிழ்ச்சிதான்..

“டே மாப்ள.. ஒனக்கு என்ன ஒதவி வேணாலு கேளு டா நா செய்யுறே…  ” என்று அவனாகவே முன் வந்தான் கரிகாலன்.

“அதெல்லா ஒன்னு வேணா கரியா… நீயு தங்கமு வந்து சபையில நின்னாபோது… ” என்று பொன்னரசு சிரித்த முகமாய் கூற,

“அதெப்புடி முடியு… ” என்று கரிகாலன் குண்டை தூக்கி போட்டான்..

அண்ணன் தங்கை இருவருமே அவன் முகம் பார்க்க,

“என்ன ரெண்டு பேரு இப்புடி பாத்தா என்ன அர்த்தோ.. ஒங்கய்யா எங்கள ஒதுக்கி வெச்சுருக்காரு.. பெறவு எப்புடி நாங்க அங்கன வர முடியு. வெளியளவுல என்ன ஒதவி வேணுமோ கேளு செய்யுறே. அம்புட்டுத்தே.. ”

அவன் கூறிய தொனியே இதற்குமேல் என்னிடம் எதுவும் கேட்காதே என்பாத இருக்க, பொன்னரசு ஒன்றும் செய்ய முடியாதவனாய் தன் தங்கையை பார்க்க அவளுமே கணவன் முகத்தை தான் பார்த்தாள்.

கரிகாலனோ பதிலேதும் கூறாமல் சிறு சிறு கருப்பு பையில் ஈர மண்ணை நிறப்பிக்கொண்டிருந்தான். புதிதாய் நாற்றுகள் வளர்த்து கேட்பவர்களுக்கு விற்க அவன் இவ்வாறு செய்துகொண்டிருக்க, தங்கமலரோ அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.

“என்ன பொன்னு வா வந்து சோலிய பாரு… அங்குட்டு இருக்க செடிக்கு கீழ எல்லா சருகா கெடக்கு எல்லாத்தையு குமிச்சு அந்த குழிக்குள்ள போடு.. வா வா.. மசங்கிட போது…” என்று காரியத்தில் கண்ணாய் இருக்க, தங்கமலர் பதில் பேசாமல் ஓடைக்கு சென்றாள்.

“என்ன செய்றது??? அய்யே கூப்புடலன்னா இதோட முடிஞ்சிச்சு.. அம்புட்டுத்தே.. இது சொல்லுறது சரித்தே.. இந்தளவுக்கு பொறுமையா போறதே பெருசு….. வளகாப்புக்கு  போகாட்டி அடுத்து அண்ணனு சங்கடப்படு.. அய்யனாரே.. ஒரு நல்ல வழிய காட்டப்பா…” என்று அமர்ந்தவளின் உள்ளதை ஓடை தண்ணீர் கூட குளிர்விக்க வில்லை.

கால் மட்டும் ஓடும் நீரில் இருக்க, மனமுழுக்க பிறந்த வீட்டையே சுற்றி வந்தது. கல்யாணம் முடிந்து இத்தனை நாட்களில் ஒருமுறை கூட கரிகாலன் அது வாங்கி வா இது வாங்கி என்றேல்லா சொல்லியதில்லை.

அதே போல ஒருமுறை கூட உன் வீட்டிற்கு அழைத்து போகவா என்றும் கேட்டது இல்லை. நீ போய் வருகிறாயா என்றும் கூறியதில்லை. அப்பொழுதெல்லாம் பெரிதாய் படாத விஷயம், இப்பொழுது வீட்டில் ஒரு விசேசம் என்றதும் அனைத்தும் பேயாட்டம் போட்டது.

ஆயிரம் இருந்தாலும் பிறந்த வீடு, தான் தானே வீட்டை விட்டு வெளியே வந்தது, அவர்கள் அனுப்பவில்லையே.. ஆனாலும் கரிகாலனின் கௌரவத்தையும் பார்க்கவேண்டும். இவள் மட்டுமென்றால் கையில் காலில் விழுந்தாவது தந்தையோடு பேசிவிடுவாள்.

ஆனால் இப்பொழுது என்ன செய்ய ???

இந்த கேள்வியே அவள் மனதில் நண்டாய் குடைய, அந்த குடைச்சலுக்கு காரணமானவரே கண்ணெதிரே வந்தார்.

தங்கராசுவே தான்…

மம்பட்டியை ஓடை நீரில் கழுவ வந்திருப்பார் போல. மகள் அமர்ந்திருந்ததை கவனிக்கவில்லை. தன் வேலையில் இருந்தவரையே கூர்ந்து பார்த்தாள். அவரோ மாமாபட்டியை கழுவிவிட்டு கை கால்களை கழுவி முகத்தில் நீரடித்தார்..

அவர் முகம் தெளிந்ததோ என்னவோ.. ஆனால் தங்கமலரின் மனம் தெளிந்தது. எங்கிருந்துதான் அத்தனை தைரியம் வந்ததோ முகத்தை அழுந்த துடைந்து எழுந்தவள், “அய்யா…!!!!! ” என்றபடி அவரருகே சென்றாள்.

திடுக்கிட்டு திரும்பியவர், தங்கமலரை சிறிதும் கூட எதிர்பார்க்கவில்லை போல..

எத்தனை நாட்கள்.. அவளது இந்த அய்யா என்ற அழைப்பை கேட்டு.. மனம் ஒருமுறை இளகித்தான் போனது அவருக்கு. ஆனாலும்  தன்னை வேண்டாம் என்று போனவள் தானே என்று தோன்ற முகம் கல்லாய் இறுகி நடக்க தொடங்கினார்.

“அய்யா… நா ஒங்கட்ட பேசனு…  நில்லுங்க…” வழியை மறைத்து நின்றாள் அவள்.

இதென்ன புதிதாய் என்று அவர் பார்க்க,

“நா பேசி முடிக்க வர நீங்க நகரவே கூடாதுய்யா.. ஏ எங்கிட்ட நீங்க பேசமாட்டிங்களா?? அப்புடி என்னத்த நா கொல குத்தம் செஞ்சுபுட்டே… ” என்று அழுகை பாதியுமாய் ஆங்காரம் மீதியுமாய் எதிரே நின்றவளை காண இன்னுமே கூட இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவருக்கு விளங்கவில்லை.

“என்ன பாக்குறீங்க ?? என்னடா இத்தன நா வந்து பேசாதவ இன்னிக்கு வந்து நிக்கிறாளேன்னு தான.. இம்புட்டு நாளா ஒங்களோட நிம்மதிக்காகத்தே நா ஒதுங்கி நின்னே. ஆனா இனியு அப்புடி நா இருக்க முடியாது.. என்னைய ஒதுக்கி வெச்சிட்டு நீங்க வீட்டுல விசேசோ வச்சுடுவீங்களோ.. பொறந்த மவள ஒதுக்கி வெச்சி நீங்க ஊரு கூட்டி விருந்து வெப்பீங்களோ ??”

விளங்கிவிட்டது அவருக்கு இவள் எதற்காக வந்து நிற்கிறாள் என்று. ஆனாலும் மனத்தில். அதெல்லாம் பதியவில்லை. திருமணம் ஆகி சென்றபின் இத்தனை நாட்கள் கழித்து தேடிவந்து மகள் பேசியிருக்கிறாள் என்பதே அவருக்கு மகிழ்ச்சியாய் ஒருபக்கம் பெருமையாய் கூட இருந்தது.

அவளாய் சென்றவள்,அவளாகவே வந்திருக்கிறாள்.

வேண்டாம் என்று போனவள், வேண்டும் என்று வந்திருக்கிறாள்..

என்னதான் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாய் இருந்தாலும், பிறந்த வீட்டு உறவு இல்லாமல் மகிழ்ச்சி முழுமையாகுமா என்ன ??

இதெல்லாம் அவர் மனதில் ஓடினாலும், பதிலேதும் பேசாமல் தங்கமலரின் முகத்தை பார்த்தார்..

“கேக்குறேல பதில் பேசுங்கய்யா.. நா செஞ்சது தப்புத்தே.. ஒங்களுக்கு செஞ்ச துரோகந்தே.. ஆனா ஏ செஞ்சே எதுக்கு செஞ்சேன்னு எல்லா ஒங்களுக்கு தெரியாதே.. என்ன நடந்துருந்தாலு நீங்க பெரியவரு எங்கள மன்னிக்க கூடாதா..??  என்ன இருந்தாலு நா ஒங்க வீட்டு பொண்ணுதேன.. போனதெல்லா போவட்டு.. ஒங்களுக்கு இனியு மவ ஒறவு வேணும்னா மதினி வளகாப்புக்கு வந்து கூப்புடுங்க. இல்ல இத்தோட போதும்னா ஊர் கூட்டி உறவே இல்லன்னு அத்து விடுங்க… இதுக்கு மேல நீங்கத்தே முடிவெடுக்கணு..”

மகள் வந்து பேசியது தங்கராசிற்கு ஒரு இனம் புரியா நிம்மதியை கொடுத்தது. ஆனாலும் அவள் கடைசியாய் பேசியது நெஞ்சை குறுவாளால் அறுத்து போட்டது.

உறவே வேண்டாம் என்று அத்துவிட வேண்டுமென்றால் என்றோ செய்திருப்பாரே. செய்யவில்லையே..

நிலவு மெல்ல மெல்ல ஒழிந்து பிடித்து விளையாட, மேகங்கள் எல்லாம் கருப்பு கம்பளி போற்றிக்கொள்ள தயாராய் இருக்க, காற்றில் ஆடும் மரங்களும், நீரோடையின் சலசலப்பும், இதையனைத்தையும் தாண்டி ஒரு நிசப்தம் அங்கே நிலவத்தான் செய்தது..

தங்கமலருக்கு நன்றாய் தெரியும் தங்கராசு பதில் எதுவும் சொல்லமாட்டார் என்று, ஆனாலும் தான் நினைத்ததை பேசி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, அவளும் பேசிவிட்டாள்.

இதுவரை இப்படியெல்லாம் அவள் குரலை உயர்த்தி தந்தையை நிற்கவைத்து பேசியதெல்லாம் இல்லை. ஆனால் இன்று வேறு வழியில்லையே..

“எனக்கு தெரியுய்யா.. நீங்க ஒன்னு சொல்லமாட்டீங்கன்னு. ஆனாலு எனக்கு மனசு கேக்கல அதே.. இனி எதுனாலு ஒங்க முடிவுத்தே.. வேணுமா வேணாமான்னு சொல்லிப்புடுங்க…” என்றவள் வேகமாய் கண்களை துடைத்தபடி சென்றுவிட்டாள்.

     

                                   

                                                                                   

 

                   

                              

Advertisement