Advertisement

மலர் – 16

“இந்த ஒரு தடவ ஒங்கய்யா சொல்லுறத கேட்டாத்தான் என்ன டா பொன்னு.. அந்த மனுசே என்ன நீங்க கேட்டு போகவா சொல்ல போறாரு.. இல்ல இத்தன நாளா இத பத்தி வாய் தொறந்துருப்பாரா..???” என்று ஆதங்கமாய் பேசிக்கொண்டிருந்தார் மரகதம்.

அவருக்கு என்னவோ இவ்விசயத்தில் தங்கராசு சொல்வது சரியே என்று பட்டது. ஆனால் பொன்னரசுவோ முடியவே முடியாது என்று வீம்பாய் இருந்தான். எப்பொழுதும் வீம்பு பிடிப்பது தங்கராசு தான் ஆனால் இப்பொழுது இவனது முறையானது.

“ஏம்மா… நீயு புரியாம பேசுற… அய்யாத்தே சொல்லுறாருன்னா அத எப்புடிம்மா நா போயி கரியேங்கிட்ட சொல்ல முடியு.. அவே என்ன நெனப்பான்…”

“எல்லா சொல்லுற மாதிரி சொல்லு புரிஞ்சுக்குவாப்புல.. ”

“நாலா போயி சொல்ல மாட்டே… ”

“ம்ம்ச்… இங்க பாரு டா, நெலோ வாங்குனது சரித்தே… ஆனா இப்பவே அளந்து பிரிச்சு எழுதிகிட்டா நாளைக்கு பிரச்சன வராது பாரு. ஒங்கய்யே கோவக்காரருத்தே ஆனா அனுபவசாலி டா.. சூழ்நில எப்பயு ஒரே மாதிரி இருக்காதுல அதுக்குதே… மத்தபடி நீங்க வெள்ளாம செய்யுறது எல்லா ஒன்னாவே செய்யுங்க.. எழுத்து மொறைல பிரிச்சி மட்டும் எழுதிக்கோங்க…”      

பத்திரம் முடிந்த இரண்டொரு நாளிலேயே தங்கராசு இந்த யோசனையை கூறினார். அவரை பொருத்தமட்டில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்க கூடாது என்றே எண்ணினார்.

விலகி சென்ற மகன் வீடு வந்திருப்பதும், உயிராய் நினைத்த மகளோடு உறவில்லாமல் இருப்பதும் அவருக்கு நிறைய விசயங்களை புரிய வைத்திருந்தது.. சூழ்நிலை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும்.  

அதுவும் சொத்து, பணம் விசயத்தில் யார் மனம் எப்பொழுது எப்படி மாறும் என்பதே கணித்திட முடியாது. அப்படி ஒரு பிரச்சனை வந்து அது கரிகாலனுக்கும், பொன்னரசுவுக்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்தினால் அது அவர் குடும்பத்திற்கே அல்லவா பிரச்னையாய் போகும்.

ஆகையால் தான் இப்படி ஒரு யோசனையை கூறினார்.      

ஆனால் பொன்னரசு இதை ஏற்றுகொள்ளவே இல்லை. அவனது எண்ணமெல்லாம் இப்படியொன்றை கரிகாலனிடம் கூறினால் அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான் என்பதே.

நம்பிக்கை இல்லை என்பது போல் ஆகாதா…

ஆனாலும் மனதின் ஒருபக்கத்தில் இதுவும் சரியென்றே பட்டது.. கரிகாலன் என்ன நினைத்துக்கொள்வானோ என்ற எண்ணமே அவனை வேண்டாம் சொல்ல வைத்தது.

“என்னங்க அத்தையு மாமாவுந்தே சொல்லுறாங்கள்ள… ஒருதடவ அண்ணேங்கிட்ட சொல்லி பாப்போமே….”

“இல்ல பூமணி அது நம்பிக்க இல்லாத மாதிரி ஆகிடு… ” என்று மனைவியின் வாயையும் அடைத்துவிட்டான்.

ஆனால் இதே யோசனையை கரிகாலனே கூறும் பொழுது பொன்னரசனால் சம்மதிக்காமல் இருக்க முடியுமா என்ன??

“மாப்ள… நெசமாத்தே சொல்லுறியா??”

“ஏ பொன்னு… இதுல வெளாட என்னருக்கு… இப்பவே எழுதிட்டோம்னா பின்னால எந்த பிரச்னையும் இருக்காது பாரு….”

“டேய் மாப்ள நா நெசத்த சொல்லவா… எங்கய்யே கூட இதே ரோசனத்தே சொன்னாரு டா.. நாந்தே எப்புடி ஒங்கிட்ட வந்து இத சொல்லுறதுன்னு வீட்டுல சண்ட போட்டுட்டு வந்துட்டே….” என்றான் முகத்தை ஒரு மாதிரி வைத்து.

“ஹா ஹா… எனக்கு இந்த ரோசனைய சொன்னதே ஒங்கய்யாத்தே டா பொன்னு… ” என்று கூறி கரிகாலன் பலமாய் சிரிக்கவும், பொன்னரசன் திகைத்தே போனான்..

“என்ன டா கரியா சொல்லுற… அய்யா ஒங்கிட்ட வந்து பேசுனாறா???”

“டேய் டேய் மாப்ள… ஒடனே கற்பன செய்யாத டா…  முனியண்ணே கடையில உக்காந்து பொலம்பிட்டு இருந்தாரு…முனியண்ணேந்தே எங்கிட்ட இத சொல்லுச்சு. கேக்கும் போது எனக்கு ஒரு மாதிரித்தே இருந்துச்சு.. ஆனா யோசிக்கு போது நல்ல ரோசனத்தேன்னு தோனுச்சு…”

“நெசமாத்தே சொல்லுறியா கரியா???? ”

“இதுல பொய் சொல்ல என்ன டா இருக்கு.. பின்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தேன ஒங்கய்யா சொல்லுறாரு… இதுலையாது அவரு பேச்ச கொஞ்சோ கேப்போமே டா… ”

“கேக்க எல்லா நல்லாத்தே இருக்கும்… அவரு கூட இருந்து பாரு அப்போ புரியு.. அது சரி ஏ ஒங்கய்யா ஒங்கய்யான்னு சொல்லுற.. வாய் நெறைய மாமான்னு சொல்ல வேண்டியதுத்தேன… ”

கரிகாலனுக்கு மட்டும் என்ன ஆசையா, குடும்பத்தில் அவரிடம் மட்டும் ஒதுங்கி நிற்பது. சொல்ல போனால் இப்பொழுதெல்லாம் தங்கராசுவை அவனுக்கு அதிகம் பிடித்தது.

தன் பிள்ளைகள் மீது இருக்கும் அதிகப்படியான அன்பே அவரை இப்படி கோவம் கொள்ள செய்கிறது என்பதனை புரிந்துகொண்டான். இப்படி ஒரு தகப்பன் நமக்கிருந்திருந்தால் நிச்சயம் கரிகாலன் பல படிகள் முன்னேரியிருப்பான்.

என்ன செய்வது விதி, தங்கரசையும், கரிகாலனையும் எதிர் எதிர் துருவங்களாகவே நிறுத்திவிட்டது.. முழுதாய் ஒன்றிட முடியாது என்றாலும் முட்டல் மோதல் இல்லாமலாவது இருக்கலாம் என்றே எண்ணினான்.

ஆனால் அதற்கான சூழ்நிலை தான் சரியாய் இன்னும் அமையவில்லை.. அப்படி இருந்த பொழுது அவரது உள்ளக்குமுறல் தானாகவே அவனது காதுகளில் விழ, அதுவும் சரியென பட சரி சற்றே அவன் மனம் குளிரும்படி நடக்கலாம் என்று முடிவெடுத்தான்.

ஆனால் அவனுக்குமே பொன்னரசு இதற்கு என்ன சொல்வானோ என்றே இருந்தது. ஆனால் அவனே விசயத்தை உடைக்கவும் படக்கென்று பிடித்துகொண்டான்.

“ஏ கரியா நா பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கே… நீ என்ன இப்புடி இருக்கவே…”

“ஒன்னுயில்ல டா பொன்னு… ”

“நா கேட்டதுக்கு பதில சொல்லு டா ”                  

“என்ன டா கேட்ட….??? ”

“அது சரி… எங்கய்யன மட்டும் ஏ மாமான்னு சொள்ளமாட்டேங்குறன்னு கேட்டே…”

“அதுவா… மொதல்ல அவரு என்னைய மருமகனா நெனைக்கட்டு டா.. அப்புறோ நானே அப்புடிதேன கூப்புடுவே…”

“வெராசா எல்லா நடக்கும் டா… ”

“சரி பொண்ணு மேற்கொண்டு ஆக வேண்டிய சோலிய பாப்போம்.. இதை பிரிச்சு எழுதுறதுக்கு ஏற்பாடு செய்யணு.. நாளைக்கு வெள்ளனவே டவுனுக்கு போய்ட்டு வந்துடுவோ.. சரி இப்ப வீட்டுக்கு கெளம்புறே… அங்கன ஓ தங்கச்சி மட்டு இருப்பா…” என்றவன் கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்து தங்கமலரிடம் அனைத்தையும் கூறியவன், அவள் பதிலேதும் சொல்லாததை பார்த்து என்னவென்று விசாரித்தான்.

“ம்ம்ச் ஒன்னுயில்ல.. ஓ சோலிய பாரு…”

வெகு நாட்கள் கழித்து பட்டென்று வந்தது பதில் அவளிடம்…   

“ஏம்புள்ள என்னாச்சு… ”

“அதே ஒன்னுயில்லன்னு சொல்லுறேல.. அப்புரோ என்ன… ”

“ஓ மொகத்த பாத்தாலே தெரியுது.. சொல்லு மலரு என்னான்னு…  ”

“ஆமா.. எல்லாரு அவங்கவங்க பிரச்சனிக்கு ஒரு வழிய சுலுவா செஞ்சுப்புடுறீங்க.. ஆனா நா மட்டு என்ன செய்யுறதுன்னு தெரியாம கெடந்து அல்லாடனு..   ”

“ஏ… என்ன மலரு… என்னாச்சுன்னு இப்ப இப்புடியெல்லா பேசுறவ…   ??”

அவனுக்கு நிஜமாகவே மறந்தே விட்டது தங்கமலர் சீட்டு விஷயம் கூறியது. அவனை பொருத்தமட்டில் சரி பணத்தை வாங்கி தங்கமலர் ஏதாவது செய்துகொள்ளட்டும்  என்று இருந்தவன் பிறகு அதை நினைக்கவே இல்லை. 

ஆனால் தங்கமலருக்கு இந்த பிரச்னையே பெரும் பிரச்சனையாய் இருந்தது. அவளை பொருத்தமட்டில் கரிகாலனுக்கு வேண்டாத பணம் அவளுக்கும் வேண்டியது இல்லை, அது அவள் சேர்த்ததாகவே இருந்தாளும் அவளுக்கு அது தேவையில்லை…

“என்ன மலரு கேக்குறேல.. இப்புடி வெறுமெனே மொகத்த வச்சா என்ன நெனைக்கிறது…”

“அதே அந்த சீட்டு காசு சொன்னேன்ல….  ”

“அதுவா….. ”

“என்ன நொதுவா.. எம்புட்டு சுலுவா சொல்லுற அதுவான்னு.. எனக்கு அன்னிக்கு இருந்து தூக்கமே போச்சு தெரியுமா…. ”

“அப்புடியா நேத்து வெள்ளன எம்மேல கால போட்டு தூங்கியிருந்தது யாரு புள்ள நீயில்லையா??? ”

“ம்ம்ச் நா சொல்லிட்டு இருக்கே… நீ என்ன சொல்லுற.. போ…” என்றவள் அவனிடம் இருந்து விலகி படுத்தாள்.

கரிகாலனுக்கு இப்பொழுது நன்றாகவே உரைத்தது தங்கமலர் நிஜமாகவே குழப்பத்தில் இருக்கிறாள் என்று..

“ஏ புள்ள மலரு… ஒங்கிட்ட எம்புட்டு இருக்கு…..  ”

கரிகாலன் பணத்தை பற்றி கேட்டதுமே படக்கென்று அவனிடம் திரும்பியவள், “அத தெரிஞ்சு நீயென்ன செய்ய போற ” என்றாள் வெடுக்கென்று…

“அடடா… ஒங்கய்யா கோவோ அப்புடியே ஒனக்குத்தே இருக்கு புள்ள…. “ என்றவன் மெல்ல நகண்டு அவளருகே வந்தான்..

“இப்ப என்னத்துக்கு நகண்டு வர…. ”

“நா கேட்டதுக்கு பதில சொல்லு புள்ள ”        

“ஒரு பதினஞ்சாயிரோ இருக்கு… ”

“ஹ்ம்ம்…. ” என்று யோசித்தவன்,

“ஒனக்கு நெசமாவே அந்த காசு வேணாமா புள்ள…. நல்லா ரோசன பண்ணி சொல்லு…”

வேண்டாம் என்பது போல தலையை உருட்டினாள்..   

“ஹ்ம்ம் இப்ப வேணாம்னு சொல்லிபுட்டு பின்னால ஒரு தேவைன்னு வர்றப்ப ஓ மனசு அந்த காச வச்சிருக்கலாமோன்னு நெனைக்க கூடாதுல புள்ள அதே சொல்லுறே ஒரு தடவைக்கு இன்னொரு தடவ நல்லா ரோசன பண்ணு.. ”

“இந்தா ஒனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா??? வேணாம்னா வேணா.. அம்புட்டுதே… ஒனக்கு வேணாங்குறது எனக்கும் வேணா…”

“ஹ்ம்ம் ” என்றவன் பதிலே பேசவில்லை.

அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்துகொண்டிருந்தான்.

“என்ன கேள்வி கேட்டுபுட்டு இப்புடி பாத்தா என்ன அர்தோ… ” 

“ஹ்ஹ்ம்ம் ஏ மலரு ஒருவேள நா கல்லாணத்துக்கு அப்புரோ ஒங்கம்மா அய்யே கூட லா ஒட்டு இருக்ககூடாது உறவு இருக்ககூடாதுன்னு சொல்லிருந்தா நீ வேணாம்னு வந்திருப்பியா…. ”

இதென்னடா கேள்வி… இப்பொழுது தான் அனைத்தும் சிறிது சிறிதாய் சரியாகிக்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இவன் புத்தி ஏன் இப்படி ஒரு யோசனை செய்கிறது என்று புரியாமலும் லேசான அதிர்ச்சியோடும் பார்த்தாள் தங்கமலர்.

“என்ன புள்ள இப்படி பாத்தா என்ன அர்தோ….. ”

“இப்ப என்னத்துக்கு இந்த கேள்வி… நா சொன்ன விஷயத்துக்கு மொதல்ல பதில சொல்லு…..   ”

“நீ இதுக்கு பதில சொல்லு மலரு… நா அப்புடி சொல்லிருந்தா நீ என்ன செஞ்சிருப்ப… ”

“ஹ்ம்ம் நீ அப்புடி சொல்லுவியா ஏன்னா ??? எனக்கு நல்லா தெரியு.. ஒன்னால அப்புடிலா நெனச்சுக்கூட பாக்க முடியாதுன்னு….”

“ஏ… ஏ அப்புடி சொல்லுற… ”

“ஒன்னால அப்புடி நெனைக்க கூட முடியாதுன்னு ஒரு நம்பிக்கத்தே…. ” என்று கூறி புன்னகைத்தாள்..

“ஹ்ம்ம் இப்புடி நம்பிக்க நம்பிக்கனு சொல்லித்தே பல ஆம்பளைங்க வாயே தொறக்க முடியாம இருக்காங்க…. ”

“ஓஹோ!!!!! நீ ரொம்பத்தே கண்ட…… சரி சரி ஏ விசயத்துக்கு வா… அந்த காச நா என்ன செய்யட்டு… ”

“நேரோ வரப்ப சொல்லுறே… அத சூதானமா வையி…”    

 “இதுக்குதே… கேட்டியா… நா கூட எதா சொல்லுவன்னு பாத்தே…” என்று அவள் பதில் அளிக்க, அதன் பிறகும் பல நேரம் பேச்சு தொடர்ந்தது அவர்களுக்குள்..

ஆனால் கரிகாலன் கூறிய நேரம் தான் தங்கமலருக்கு எப்பொழுது வரும் என்று தெரியவில்லை..

நாட்கள் கடந்ததே ஒழிய அவளிடம் அப்பணம் அப்படியே தான் இருந்தது. மரகதத்திடம் கூட ஒருமுறை சொல்லி பார்த்தார். அவரோ நீயே ஏதாவது வாங்கிக்கொள், உனக்கு இன்னும் கல்யாண செயமுறையே இன்னும் செய்யவில்லை இந்த பணத்தையாவது வைத்துக்கொள் என்றுவிட்டார்.

இதற்கிடையில் புதிதாய் வாங்கிய பூமியை பிரித்து எழுதவும், தங்கராசுவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

போகிற போக்கில் இதற்கு காரணம் கரிகாலன் தான் என்று பொன்னரசு சொல்ல, அவருக்கு முதலில் நம்பவே முடியவில்லை..

அவருக்கு நன்றாகவே தெரியும் வீட்டில் அவரை தவிர அனைவரும் கரிகாலன் தங்கமலரோடு உறவாகவே இருப்பது. இப்போது மகனும், மருமகளும் வந்து சேர்ந்தபின், ஊரில் இருந்த பெரிய ஆட்கள் நிறைய பேர் மகளையும் சேர்த்துக்கொள்ளும் படி இவரிடம் கூரிக்கொண்டுத்தான் இருந்தனர்.

“ஏ தங்கராசு… இப்புடியே காலோ முழுக்க கோவமாவே இருந்து என்னத்த காங்க போற… கொஞ்சமாது விட்டுக்குடுத்து போயா……” என்று ஒரு பெரியவர் கூற இவருக்கு முதலில் பொங்கிக்கொண்டு தான் வந்தது.

ஆனாலும் அவரது மனம் எதற்காக ஏங்குகிறது, என்ன நினைக்கிறது என்று அவருக்கே தெரியவில்லை. கரிகாலன், தங்கமலரை ஏதாவது கொடுமை படுத்துவான், அப்படியெல்லாம் ஏதாவது நடந்தால் அவனை வெட்டி போட்டாவது தன் மகளை அழைத்துவந்துவிட வேண்டும் என்று இருந்தார்.

ஆனால் அவனோ நிலம் வாங்கியதே தன் மனைவி பெயரில் தான். இதை கேட்டதும் அவருக்கு மனதில் எதோ ஒரு தோற்ற உணர்வு..

ஏனெனில் அவர் நிலம் வாங்கும் போது அவர் பெயரிலும், பொன்னரசு பெயரிலும் தான் வாங்கினார். என்னதான் மகள், மனைவி மீது உயிரே இருந்தாலும் பெண்கள் பெயரில் வாங்கவேண்டும் என்றெல்லாம் அவர் நினைத்ததே இல்லை.

ஆனால் கரிகாலன், இவர் மகள் பெயரில் வாங்கியதும் அவர் மனதினுள் எதுவோ உடைந்தது உண்மைதான்..

அதுவும் இல்லாமல் இத்தனை நாள் கவனித்து பார்த்ததில் தங்கமலர் மகிழ்ச்சியாய் இருப்பதாகவே தெரிந்தது. அவனும் நன்றாய் தான் பார்த்துக்கொள்வதாய் புரிந்தது.

ஆனாலும் மனதில் ஒரு பிடிவாதம், தான் இறங்கி போவதா என்று…

பிடிவாதம் ஒருபுறமும், கோவம் ஒருபுறமும், மகளின் மீதான பாசம் மறுபுறமும் எல்லாம் சேர்ந்து அவரை போட்டு பாடாய் படுத்தின..

இதெல்லாம் போதாதென்று வீட்டில் மரகதமும், பூமணியும் தங்கமலர் கரிகாலனை விரும்பியது, அவன் ஒதுங்கி போனது, பின் தங்கராசின் பேச்சினால் அவன் கோபமுற்று இவளை பிடிவாதமாய் மணந்தது என்று கதை பேசிகொண்டிருக்க, தங்கராசு காதில் அனைத்தும் விழுந்து வைத்தது.

வீட்டில் இவர் இல்லையென்று எண்ணியே இவர்கள் பேசியது. ஆனால் விதி யாரது காதில் விழ கூடாதோ அவர் காதிலேயே விழுந்து வைத்தது.

இதை கேட்டதும் மனிதர் பாவம் இடிந்து போனார்.

கடைசியில் அனைத்தும் தன்னாலா ??? தன் கோவத்தினாலா?? என்ற கேள்வி எழுந்து அவரது மனதை கத்தி இல்லாமல் அறுத்தது.   

வாசல் படியிலேயே இடிந்து போய் அமர்ந்துவிட்டார்.

மேற்கொண்டு என்ன நினைப்பது என்ன பேசுவதென்றே அவருக்கு தெரியவில்லை. இத்தனை நாள் கோபத்தில் கத்தியது எல்லாம் அவருக்கு இப்பொழுது நினைத்தால் அபத்தமாய் பட்டது.

கண்களை இறுக மூடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

 

                 

                                 

  

Advertisement