Advertisement

      மலர் – 15

“தங்கோ…. தங்கோ…..”

“யாரு…… அட வாண்ணே.. உள்ள வா,. ஏ வெளிய நின்னு கூப்புடுற…”

உடன் பிறந்தவனை கண்ட மகிழ்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது அவள் முகத்தில்..

“உள்ள வாண்ணே..”

“இருக்கட்டு புள்ள.. கரியே எங்க ???”

“ம்ம்ச் உள்ள வந்து பேசு எதுனாலு… நீ என்ன அசலாளா ?? மொத உள்ள வா…”

“சரி சரி வரே புள்ள… ” என்றவன் உள்ள வந்ததுமே அவனுக்கு பருக கொடுக்க வேகமாய் அடுக்களைக்கு போனாள் தங்கமலர்.

“எதுவு வேணா புள்ள. ஒரு சோலியா வந்தே… அப்புடியே ஒங்க எல்லாரையும் பாத்துபுட்டு போகலாம்னு வந்தே…”

“நீ சும்மா இருண்ணே.. கல்லாணம் முடிஞ்சு இப்பத்தே வர.. எதுவு வேணான்னு சொன்னா எப்புடி… அம்மா அய்யா யாரு வரல இதுவரைக்கு.. வந்த ஒன்னையும் நா கவனிக்காம இருக்க முடியுமா ???”

இதற்குமேல் அவன் மனம் தாங்குமா.. ஒற்றையாய் உடன் பிறந்தவள்.. ஹ்ம்ம் என்னதான் தந்தையுடன் சிறு மனகசப்பு என்றாலும் தங்கை மீது அவனுக்கு என்றுமே பாசம் தான்.

கரிகாலன் வந்து உன் தங்கையை திருமணம் செய்ய போகிறேன் என்று சொன்னதுமே பொன்னரசு கேட்ட முதல் கேள்வி,

“என்ன கரியா எங்கய்யன பழிவாங்க ஏ தங்கச்சி வாழ்கைய கெடுக்க பாக்குறியா ???” என்பது தான்..

அதற்கு பதில் கூறாமல் மௌனமாய் இருந்த கரிகாலனை பேசியே உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டான் பொன்னரசு..

“இங்கியாறு டா.. ஓ எடத்துல வேற எவனா இருந்தான்னு வையி.. இந்நேரோ வெட்டி பொலி போட்றுப்பே… எனக்கு எங்கய்யன பத்தியு தெரியு ஒன்னைய பத்தியு தெரியு அதே பேசிட்டு நிக்கிறே…” என்றவன் முகத்தில் அத்தனை கோவம்..

“டேய் மாப்ள…. ”

“வாய மூடு டா.. எங்கய்யே பேசுனா அவர்கிட்ட சண்டைக்கு போ… அத விட்டுபுட்டு  பொட்ட புள்ளைய மெரட்டிட்டு வந்து நிக்கிறவே. எம்புட்டு தைரியோ இருந்தா எங்கிட்டயே வந்து சொல்லுற…”

“பொன்னு ஒரு நிமிசோ நா சொல்லுறத கேளு டா.. அப்புறோ நீ என்ன சொன்னாலு நா கேக்குறே… இந்த கல்லாணம் வேணாம்னு சொல்லு நா செய்யுறே….”

கரிகாலன் இந்த வார்த்தையை கூறிய பிறகே பொன்னரசு சற்று அமைதியானான்.

“ சொல்லு….. ”

“மலரு என்னைய விரும்புதடா….. ”

“என்னாது………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ”

நிச்சயமாய் இது பொன்னரசுவிற்கு பலத்த அதிர்ச்சி தான்.. அவனை பொருத்தமட்டில் தங்கமலர் ஒரு சிறு பெண். வெள்ளந்தி உள்ளம் படைத்தவள். சற்றே சல சலவென்று நீரோடை பேசுவாள். ஆனால் அவள் உள்ளமும் தெளிந்த நீரோடை போல எவ்வித கசகசப்பும் இருக்காது.

இப்படி எண்ணியிருந்தவனுக்கு தங்கையின் மனதில் காதல் இருக்கும் என்று சிறிதும் நினைத்து பார்க்கவில்லை. பார்க்கவில்லை என்ன அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை.

“என்ன கரியா சொல்லுற…. ”                 

“அமா டா மலரு புள்ள என்ன விரும்புது டா…… இந்த கல்லாணம் நா அதுக்காகவாது செஞ்சுத்தே ஆகணு டா மாப்ள… ”

“டேய் என்ன டா… புதுசு புதுசா வந்து சொல்லுற… இத்தன நாளா சொல்லாம என்னடா செஞ்ச.. எங்கய்யனுக்கு மட்டு தெரிஞ்சிச்சு கேட்டது குடி…. ”

“அதே மாப்ள… அதுக்காகத்தே மாப்ள இந்த கல்லாணம் நடக்கனும்னு சொல்லுறே…”

“இந்த விசயோ எப்புடியு கொஞ்ச நாள்ல ஒங்கய்யனுக்கு தெரியு.. அப்ப எம்மேல இருக்க கோவத்த எல்லா மலரு மேலதேன டா காட்டுவாரு..”

இவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல பார்த்தான் பொன்னரசு..

“நெசந்தே டா. எனக்கு மலருன்னா இஷ்டந்தே.. மன்னிச்சுக்க மாப்ள இத இத்தன நாளா ஒங்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு.. நா ஒங்கய்யே மேல இருந்த கோவத்துல இந்த கல்லாணம் செய்யணும்னு  முடிவு எடுத்துருக்கலா.. ஆனா எனக்கு மலரு மேல அக்கற இருக்கு டா.. இந்த விசயோ எப்புடியு ஒங்கய்யனுக்கு தெரிஞ்சிச்சுன்னு வையி ஒன்னு அந்த புள்ளைய ஏதாவது செஞ்சிபோடுவாறு.. இல்ல என்னைய பலி வாங்குறதா நெனச்சி அவசரமா அந்த புள்ளைய வேற எவனுக்காது கட்டி வைப்பாரு..

இதுல எது நடந்தாலு மலரு சந்தோசமா இருக்காது டா மாப்ள.. இன்னி வரைக்கு எம்மனசுல அந்த புள்ள மேல இருக்க எண்ணத்த வெளிய சொன்னது இல்ல டா.. இப்பக்கூட அந்த புள்ள எம்மேல கோவமாத்தே இருக்கு…” என்று ஆழ்ந்த குரலில் பேசிய தன் நண்பனை இமைக்க மறந்து பார்த்தான் பொன்னரசு..

கரிகாலன் அத்தனை படிக்காதவன் தான்.. ஆனாலும் அவனுக்குள் இருக்கும் புரிதல் எத்தனை பெரியது.. என்னதான் தங்கராசு பகையாளி என்றாலும் அவர் மகன் மீது நட்பும், மகள் மீது நேசமும் கொண்டிருக்கிறான்..

கண்களை மூடி நெற்றியை சுழித்து யோசித்தான். இது எப்படி சாத்தியம்.. இந்த திருமணம் நடந்தால் என்னென்ன விளைவுகள் வரும்.. ஆதி முதல் அந்தமாய் அனைத்தையும் கணக்கிட்டவனுக்கு இறுதியில் தங்கமலரின் மகிழ்ச்சியே முதன்மையாய் வர,

கரிகாலனுக்கு அவள் மீது இருக்கும் அக்கறை கூடவா தனக்கு இருக்காது என்று எண்ணம் தோன்ற இத்திருமணத்திற்கு சம்மதித்தான்.

“இங்கியாரு மாப்ள.. நீ சொல்றது எல்லா சரித்தே.. ஆனா நீ கூப்டதும் ஏ தங்கச்சி வந்தாத்தே இந்த கல்லாணம். இல்லன்னா அதுக்கு மேல அந்த புள்ளய நீ இம்ச பண்ண கூடாது…”

“நீ என்ன சொல்றியோ அதுக்கு நா சம்மதம் டா மாப்ள… ” என்று மலர்ந்த முகமாய் சிரித்தவனை எண்ணி இப்பொழுதும் கூட சிரிப்பாய் தான் இருந்தது பொன்னரசுவிற்கு…

“அண்ணே….!!!!!!!!!!!!!! ”

“ஹா என்ன புள்ள.. என்னாச்சு…..  ”

“என்னாச்சா…. அது சரி… என்ன காப்பி தண்ணிய கையில பிடிச்சி கனா காங்குற..”

“ஹா ஹா ஒன்னுயில்ல தங்கோ… சும்மாத்தே.. ஆமா கரியே எங்க.???”

“அதுவா.. காப்பி காடுக்கு பழம் எடுக்க போயிருக்க.. இன்னிக்கு பத்து ஆளுங்கத்தே கூலிக்கு வந்தாங்க…”

“ஹ்ம்ம் வேறு பத்து ஆளுங்கள வச்சி என்னிக்கு புள்ள இந்த பழமேடுப்ப முடிக்க.. வெள்ளாம நேரோ வேற.. சரி நா அவன அங்கன போயி பாத்துக்குறே..”

“ஹ்ஹும் எங்கண்ணே கூலிக்கு ஆள் வருது.. ரெண்டு நிமிசோ இருண்ணே சோறு பொங்கிட்டே எடுத்து வச்சிக்கிட்டு நானு வரே…”

“நீ எதுக்கு புள்ள.. எடுத்துக்குடு நானே கொண்டு போறே… ”

“இல்லண்ணே நா… நானு வரே… சும்மாத்தேன இருக்கே… ” என்றவள் வேக வேகமாய் தூக்கு வாளியில் சாப்பாடை எடுத்து வைத்து அதனினும் வேகமாய் தன் முகத்தை சீர் செய்துக்கொண்டு வீட்டை பூட்டி தன் உடன் பிறந்தவனோடு நடந்தாள் கணவனை காண..

அவளுக்கு அவள் விசயமும் பேச வேண்டுமே… எப்படியும் இன்று கரிகாலனும் பொன்னரசுவும் நிலம் வாங்குவதை பற்றி பேசி முடிவெடுத்து விடுவர். அப்பொழுது இவள் இவளதை கூற வேண்டுமே..

போகும் வழியெல்லாம் இருவரும் பழைய கதைகளை பேசியபடி நடந்தனர்.. எப்பொழுதும் அக்டோபர் இறுதியில் இருந்து பிப்ரவரி இறுதி வரை காப்பி சீசன். கரும் பச்சை, இளம் பச்சை நிற  இலைகளுக்கு நடுவே சிவப்பாய் அழகழகாய் குங்கும பொட்டிட்டது போல இருக்கும் காப்பி பழங்களை காணவே அத்தனை அழகாய் இருக்கும்.

ஏலமும், மிளகும் ஒரு அழகென்றால் காப்பி அது ஒரு தனி அழகு.. கசப்புதான் என்றாலும் காப்பியை காதலிப்போர் ஏராளம் அல்லவா…

சிறுவயதில் தங்கராசோடு பொன்னரசுவும், தங்கமலரும் பழம் எடுக்கும் போது உடன் செல்வர். வெறுமெனே வேடிக்கை பார்க்க. கூலி ஆட்கள் இடுப்பை சுற்றி ஒரு கயிறை கட்டி அதில் ஒரு பையை வேறு இணைத்து பழங்களை பறித்து போடும் ரிதமே ஒரு தனி அழகாய் தான் இருக்கும்.

கீழே உதிரும் பழங்களை பொறுக்குவது இவர்களது வேலை..

அந்த நாட்களை எல்லாம் நினைத்து பேசியபடி நடந்தவர்களுக்கு, எங்கோ தூரத்தில் நாட்டுப்புற பாடல் சத்தம் கேட்டது….

மயில் வந்து சொல்லுச்சு

மச்சா வருவாக….

அருவியெல்லா சொல்லிச்சு

அரசே வருவாக….

ஆள் இல்லா வீட்டுல

அரவோ கேக்க போகுது….

எம்மாமே வர்ற நேரத்துல

வானம் எல்லா தூவுது….

பூ பூவா பூத்திருக்கு

பொண்ணு மனசு……..

என்று கேட்ட பாடலை ரசித்தபடி நடந்தவர்களுக்கு, கரிகாலனின் குரலும் காதில் விழுந்தது..

“அட அதுக்குள்ள காடு வந்துருச்சா… ”

“ஆமா புள்ள பேசிகிட்டே வந்ததுலே நேரோ போனதே தெரியல…. ஏ கரியா… ”

“என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க எல்லா.. வந்து எம்புட்டு நேரோ ஆச்சு.. இன்னு ஒருத்தரு பத்து படி கூட எடுக்கல.. இப்புடியே போனா சோலி ஆகாது..” என்று வேலையில் கவனமாய் இருந்தவனை பொன்னரசுவின் குரல் எட்டவில்லை..

“ஏ கரியா… ஏ இங்க பாருப்பா… அட இங்குட்டு பாரு…”

சற்றே அவனருகில் நெருங்கியாதும் குரல் வந்த திசையை சுற்றி முற்றி பார்த்தான் இவர்களை மட்டும் பார்க்காமல்.. அதன் பிறகே திரும்பிப்பார்தவன்,

“ஏ… வா டா மாப்ள…” என்றவன் தன் மனைவியை பார்த்து

“என்ன புள்ள நீயு வந்துருக்க…. ” என்று கேட்டான்..

“சும்மாத்தே… ” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

அவள் மனமெல்லாம் இவர்கள் பேச போகும் விஷயத்தை  பற்றியே இருந்தது..

“மாப்ள அப்புடி ரெண்டு பேரு உக்காருங்க.. இன்னி கொஞ்ச நேரத்துல சாப்பாடு நேரோ அப்போ பேசுவோம்…  ” என்றவன் மீண்டும் வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

சற்று நேரம் செல்லவும் கரிகாலன் முகம் கை கால் கழுவி வர, தங்கமலர் மூவருக்கும் உணவை எடுத்து பரிமாறினாள்.

“என்ன கரியா என்ன முடிவு செஞ்சிருக்க ???”

“ ஹ்ம்ம் நம்ம பேசுனபோலவே செஞ்சுபுடலாம் டா.. ”

“நெசமாத்தே சொல்லுறியா.. அப்போ மிச்ச பணத்துக்கு என்னடா செய்யுறது??..”

“ஹ்ம்ம் அதுக்கு ஒரு ரோசன இருக்கு டா மாப்ள… பேசாம இருக்குற பணத்த வச்சு நெலத்த வாங்குவோ.. எப்புடியு முக்காவாசிக்கு மேல இருக்கும்ல காசு..அது எப்புடியு அன்னோ அய்யா கடே கட்ட சரியா போகும்னு நெனைக்கறே.. மீத பணத்துக்கு மாசா மாசம் குடுப்போ கொஞ்சங்கொஞ்சமா. அது அவருக்கு கொஞ்சோ ஒதவியா இருக்கும்ல.. பேசி பாப்போம் மாப்ள” என்றவன் உண்ணுவதை நிறுத்தவில்லை.

ஆனால் தங்கமலருக்கு தான் வாயில் சாப்பாடு இறங்கவில்லை.. இருவரையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

“ஏ என்ன மலரு கைல சோறு வச்சுக்கிட்டு என்ன இப்படி முழிக்குற???”

“ஹா… அ.. அதெல்லா ஒன்னுயில்ல…. நீ.. நீங்க பேசுங்க…”

“ஹ்ம்ம் நீயு சாப்புடு புள்ள..  ”

“பரவால தங்கோ நல்லாத்தே சமைக்குற… ரொம்ப நா ஆச்சு புள்ள ஓ சமையல சாப்ட்டு…”

இப்படி கணவனையும், அண்ணனையும் மாறி மாறி பார்த்தவள்,

“நா… நா ஒன்னு சொல்லவா ???? ” என்றாள் திக்கி திணறி…

“என்ன புள்ள ???!!!” இருவருமே அவள் முகம் நோக்கினர்.

“நா… நா ஒரு ரோசன சொல்லவா….  ”

“என்ன மலரு…”

“இல்ல நா வாத்தியார் வீட்டம்மாட்ட சீட்டு போட்டேல.. அது அடுத்த வாரோ முடியுது.. அந்த காசு வரும்.. அதையு சேத்து போட்டு நெலத்த வாங்கலாம்ல….”

ஒருநொடி கரிகாலன் அவள் முகத்தையே பார்த்தான்.. பிறகு என்ன நினைத்தானோ,

“அதெல்லா வேணா புள்ள..  ”

“ஏ…. ”

“வேணாம்னா வேணா.. சரிபட்டு வராது…” என்றவன் அதற்குமேல் சொல்ல எதுவும் இல்லையென்று தட்டில் கவனம் செலுத்தினான்.

“அண்ணே….  ” என்று பொன்னரசுவின் முகம் பார்த்தாள்.

“வேணா தங்கோ… கரியே சொல்றது சரித்தே..”

“ஏண்ணே நீயு இப்புடி சொல்ற… ”

“மொட்டையா வேணாம்னு சொன்னா… எப்புடி…”

“ம்ம்ச் அதெல்லா சரிபட்டு வராது புள்ள… ”

“ஏ.. ஏ சரிபட்டு வராது… காரணத்த சொல்லுங்க ரெண்டுபேரு.. அதவிட்டு சும்மா சரிபட்டு வராதுன்னு சொன்னா எப்புடியாம்… ”

“மலரு இப்ப எதுக்கு கத்துற.. எதுனாலு வீட்டுக்கு போயி பேசிக்கலாம்.   ”

வேலையெல்லாம் முடிந்தும், வீட்டிற்கு சென்றும் கூட தங்கமலருக்கு இதே பதில் தான் கிடைத்தது..

“கையில காச வச்சுட்டு எதுக்கு நம்ம அவகாசோ கேக்கனு… முழு பணமும் குடுக்க முடியாட்டினாலு, சீட்டு பணமும் கொஞ்சோ உதவியா இருக்கும்ல..”

“ஒனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா.. அந்த காசு ஒங்கய்யாக்கு சேர வேண்டியது புள்ள…”

அதன் பிறகே இருவரும் என்ன கூறுகின்றனர் என்று அவளுக்கு புரிந்தது.

ஆனாலும் அது அவள் கூலி பார்த்து சேர்த்த பணம் தானே.. அப்படி பார்த்தாள் அவள் உழைப்பில் வந்தது. அவளது…

அதையும் கூறினாள்.

ஆனாலும் இருவரும் சம்மதிக்கவில்லை.

“இங்கியாரு தங்கோ.. எப்புடியு நாங்க நெலோ வாங்குறதே அய்யாக்கு பிடிக்காது. அதுவுமில்லாம நீ வேற காசு குடுத்தன்னு தெரிஞ்சது அம்புட்டுத்தே..”

இருவரும் மாற்றி மாற்றி பேசி அவள் வாய் மூடிவிட்டனர்..

“சரி கரியா.. நா போயி அம்மாவ பாத்துபுட்டு, அய்யா கிட்டயு ஒரு வார்த்த சொல்லிபுட்டு ஊருக்கு கெளம்புறே. நீ அன்னோ அப்பகிட்ட பேசிபுட்டு சொல்லு.. என்னிக்கு பத்தரோ முடிக்கனுமோ அன்னிக்கு செஞ்சுக்கலாம். அதுக்குள்ள நானு இங்கனவே வர எல்லா எடுத்து வைக்கணு.. வரே தங்கோ… ” என்றவன் கிளம்பிவிட்டான்.

கணவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவனோ பதிலே பேசாமல் அன்னமயில் வீட்டுக்கு கிளம்பினான்..

சென்றவன் சிரித்த முகமாவே திரும்பி வந்தான்..

“மலரு……. ” என்று உற்சாகமாய் அழைத்தவனுக்கு, மௌனமாய் முகத்தை மட்டுமே காட்டினாள்..

“அன்னோ அப்பா சரின்னு சொல்லிட்டரு புள்ள.. பொன்னரசு  இன்னு எப்புடியு நாலஞ்சு நாள்ல வந்திடுவான்.. அதுக்கப்புறோ பத்தரோ முடிக்கலாம்னு சொல்லிட்டாரு..”

“ஓ… சரி….   ”

“என்ன புள்ள சரின்னு மட்டு சொல்லுற…”

“என்னைய ஒதுக்கி வைக்கிறவங்க கிட்ட நா வேற என்னத்த சொல்ல… ”

“ஏ என்ன மலரு இப்புடி சொல்லுற.. நா.. நா என்ன புள்ள செஞ்சே…”

“பெறவு எதுக்கு நா காசு குடுக்குறேன்னு சொன்னா அத வேணாங்குற… ”

“அட கிறுக்கு புள்ள.. இதுக்கா இம்புட்டு கோவோ ஒனக்கு…” என்றவன் அவளையும் தன்னோடு சாய்த்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.

“இங்கியாரு தங்கோ.. அது நீ செத்து வச்சது புள்ள.. அதுவு எப்போ கல்லாணத்துக்கு முன்னாடி.. அது ஒங்கய்யாக்கு போகனு.. இல்ல நீ ஒனக்கு என்ன வேணுமோ அத வாங்கிக்கோ..”

“ஒனக்கே அந்த காசு வேணாம்னா அப்புறோ எனக்கெதுக்கு…”

பாட்டென்று அவள் கூறியது கரிகாலனுக்கு மனதை நிறைத்தது.அப்படியானால் தங்கமலர் கரிகாலனை தானே முக்கியமாய் நினைக்கிறாள் என்று அர்த்தம்.

இதனை நினைக்கையில் அவனது கண்களும் லேசாய் கலங்கினதோ  என்னவோ, அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தான்..

“ஏ.. என்னா  இப்புடி பாக்குற… ”

“ஒன்னுயில்ல புள்ள.. எனக்கு சந்தோசமா இருக்கு.. அதே… ஓ மடியில படுத்துக்கவா தங்கோ….. ”

அவன் முகத்தையே ஆழ பார்த்தவள் அவளை தன் மடியில் அவனது தலையை சாய்த்துகொண்டாள்.

ஆனாலும் அவளது மனதில் கேள்விகள்..

அந்த காசை என்ன செய்வது ??? கரிகலானுக்கு வேண்டாமென்றால் தனக்கும் நிச்சயமாய் வேண்டாம்..

அம்மாவிடம் கொடுக்கலாம் என்றால் அவரும் நிச்சயம் வாங்கமாட்டார்..

பிறகு என்ன தான் செய்வது….

ஏதாவது செய்தே ஆகவேண்டும்….

அவள் மனதில் இந்த குழப்பம் என்றால், பொன்னரசு நிலம் வாங்க போகிறோம் என்று கூறி சென்றதும் தான் தங்கராசு அந்த குதி குதித்தார்.

அந்தா இந்தாவென்று பொன்னரசுவும் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்..

மகன் திரும்பவும் இதே வீட்டிற்கே வந்துவிட்டன என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் ஏனோ தங்கராசுவால் இயல்பாய் இருக்க முடியவில்லை.

ஒருவேளை வாழ்வின் அனுபவங்களை புரிந்தவரால் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ என்னவோ..

மகன் சென்ற பிறகு மகள் தான் எல்லாம் என்று இருந்தார். அவளும் தன் விருப்பத்திற்கு ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள இனி எதுவும் இல்லை என்ற வெறுமையில் இருந்தார்.

அதெல்லாம் இல்லை, உறவென்பது இதோடு முடியபோவதில்லை, நான் இன்னமும் இருக்கிறேன் என்பதனை உணர்த்த பொன்னரசு வந்து சேரவும் மனிதருக்கு எப்படி தன் உணர்வுகளை வெளிபடுத்த என்று தெரியவில்லை.

மருமகளிடம் மட்டும் இரண்டொரு வார்த்தை பேசினார். மகன் தன்னிடம் நிலம் வாங்குவது பற்றி எதுவும் பேசுவானா என்று எதிர்பார்த்தார்.. ஆனால் அவனோ தந்தை வெளிப்படையாக அவர் எதிர்ப்பை தெரிவித்தால் அதை மீற முடியாதே அதற்கு அமைதியாய் இருப்பதே மேல் என்று எதுவும் பேசவில்லை. 

பத்திரமும் முடிவாகியது..

சீட்டு பணமும் தங்கமலர் கைக்கு வந்தது. இதற்கிடையில் மரகதத்திடம் பேசி பார்த்தாள். அவரும் நினைத்தது போலவே அப்பணத்தை நீயே வைத்துகொள் என்று கூற, கையில் காசை வைத்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள்.

இதெல்லாம் இப்படியிருக்க, புது பிரச்சனை ஒன்று கிளம்பியது..                       

 

 

         

    

 

             

        

 

Advertisement