Advertisement

மலர் – 14

குளுகுளுவென தென்றல் தவள, ஓடை நீரோ பளபளத்து ஓடி சலசலக்க, மேகங்கள் எல்லாம் மலை முகடுகளை முத்தமிட்டு தழுவி செல்ல, இதோ வந்துவிடுவேன் என்று தன் செந்நிற கரங்களை உலகெங்கும் நீட்டியபடியே கதிரவன் மெல்ல எட்டி பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சோலையூரின் அழகை கேட்கவும் வேண்டுமா..

அத்தனை ரம்யம் சூழ்ந்திருக்க, வெறுமெனே அங்கே சென்று நின்றால் கூட மனம் அமைதி அடையும் அளவிற்கு பசுமையும், இயற்கையும் போட்டி போட்டுக்கொண்டு அங்கே செழித்துக்கிடந்தன.

ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாய் ஒருவர் மட்டும் கோவத்தில் அனல் கக்கிகொண்டிருந்தார் தன் வார்த்தைகளால். வேறு யார்… எல்லாம் தங்கராசுவே தான்.

இம்முறை அவரது கோவத்திற்கு காரணம் அவரது மருமகனான கரிகாலன் அல்ல. அவரது சீமந்த புத்திரன் பொன்னரசு..

“ஏன் டி.. இங்கன நா உசுரோடத்தேன இருக்கே.. அவே பாட்டுக்கு முடிவெடுத்து இருக்கியா.. என்னான்னு நெனச்சியா அவே.. வேண்டாமுன்னா போறதுக்கு, வேணும்னா வர்றதுக்கும் என்ன நெனச்சியா ??  சரி போன எடத்துலையாவது நல்லா பொழைக்கட்டுன்னுதேன இதனை நாளா சும்மா இருந்தே.. இதுவர அவன எதா கேட்டு இருப்பேனா இல்ல அஞ்சு குடு பத்து குடுன்னு படுத்தி இருக்கேனா…   

பொண்டாட்டி வாயு வயிறுமா இருக்கானு தெரியும்ல.. பெறவு எதுக்கு இங்கன வரேன்னு சொல்லிட்டு வந்து நிக்கிறியா.. அந்த புள்ளைய அலைய விட்டு வேடிக்க பாத்துட்டு இருக்கியா.. சரி வந்ததுத்தே வந்தியா, நமக்குன்னு சொந்தமா நெலோ நீச்ச இல்லியா.. அதுல வெள்ளமா செய்ய வேண்டியது தான.. அந்த வில்லங்கோ பிடிச்சவே கூட சேந்து புதுசா நெலோ வாங்கி இவரு வெள்ளாம செய்ய போறாரா.. இதெல்லா தேவையா.. கையில இருக்க காசு கரஞ்சா தெரியு சேதி…” என்று கத்திக்கொண்டு இருந்தவரை பதில் பேசாமல் பார்த்தபடி நின்றிருந்தார் மரகதம்.

அவருக்கோ எப்படியாவது மகனையும் மருமகளையும் இங்கே கொண்டு வந்திட வேண்டும், அதே நேரம் மகளோடான உறவும் நிலைத்திட வேண்டும். இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் பொன்னரசன் இங்கே வந்திட வேண்டும்.

அதற்கு கடவுளாய் பார்த்து ஒரு சூழலை கரிகாலன் மூலமாய் அமைத்து இருக்கிறார். ஒருபக்கம் தங்கராசு கூறுவது சரியென்றாலும் இந்த சந்தர்பம் மீண்டும் ஒருமுறை வாய்க்காது.

ஆனால் இப்பொழுது தங்கராசுவிடம் ஏதாவது எதிர்த்து பேசினால் நிச்சயம் நடக்க போகும் காரியத்தை தன் பேச்சினால் கெடுத்துவிடுவார். பிறகு மகனது உறவு ஊசல் ஆடும், மகளது உறவு நிரந்தரமாய் அற்று போகும்..

ஆகையால், ” இந்கியாரு.. இப்ப என்னத்துக்கு நீ உசுரு போக கத்திட்டு இருக்க.. ஒ பேச்ச யாரு கேக்குறா. நீ கத்தி கத்தி தொண்ட வத்துனதுத்தே மிச்சோ.. அவே பாடு அவே பொண்டாட்டி பாடு.. என்னவோ செய்யட்டு. நம்மகிட்ட வந்து தங்குரே சொல்றாங்களா, சரி வறட்டு. இல்ல வேற வீடு பாக்கணுமா அதுவு சரித்தே. அவனுக்கு தனியா வெள்ளமா செய்யணுமா செய்யட்டு.. ஒங்கிட்ட ரோசன கேட்டா சொல்லிக்குடு இல்லியா ஒ சோலிய பாத்துட்டு இரு. அம்புட்டுத்தே. நீயே இப்புடி கத்தி சாகுற..”என்று சற்றே ஆதங்கமாய் கேட்க,

ஒருநொடி தங்கராசு அமைதியாய் மனைவியின் முகம் பார்த்தார். கோவப்பட்டு பேசினால் பதிலுக்கு கோவமாய் கத்தலாம். ஆனால் இப்படி ஆதங்கமாய் பேசினால் என்ன சொல்வது.

“இருந்தாலு அந்த புள்ள பூமணி வாயு வயிறுமா…. ” என்று சொல்ல வரும் போதே,

“இப்ப என்ன செய்றது அதுக்கு, அவே பொண்டாட்டியோட வந்து இங்க இருக்கணும்னு நெனைக்கிறியா போல.. இது அவனுக்கு வீடுத்தேன. வறட்டு இருக்கட்டும். அடுத்த மாசோ சீமந்தோ செஞ்சு அந்த புள்ளைய அவங்க அய்யே வீட்டுக்கு அனுப்பனும்ல. அதுக்கு எப்புடினாலு அவங்கே ரெண்டு பேரு இங்கன வந்துத்தேன ஆகணு.. சிறுசுங்க தப்பு செஞ்சாலு பொறுத்து போயி அதுங்க பொழப்புக்கு நல்லது செய்றதுத்தே நம்ம கடம. அத விட்டுபுட்டு சவடால் பேசிட்டே இருந்தா பொழப்பு ஓடுமா… ” என்றவர் மேலும் சில நிமிடம் பேசி தங்கராசு மனதை சமாதானம் செய்து அனுப்பினார்.

“ஹ்ம்ம் இதுங்களுக்கு நடுவுல கெடந்து நா முழிச்சு தவிக்குறே.. ” என்றவர் வீட்டை பூட்டிவிட்டு அன்னமயிலின் வீட்டிற்கு சென்றார்.

அன்னமயிலின் தந்தை வீடு வந்து சேர்ந்து ஒருவாரம் ஆகிவிட்டது. அவர் வந்த அன்று பார்த்துவிட்டு வந்தது அதன்பிறகு அந்தபக்கம் செல்ல நேரம் கிடைக்கவில்லை. தங்கமலரையும் பார்க்க முடியவில்லை.

ஆனால் பொன்னரசன் நேற்று வந்து இங்கேயே வந்து நிரந்தரமாய் தங்க போவதாகவும்,  அன்னமயிலின் தந்தையிடம் இருந்து அவர்கள் நிலத்தை தானும் கரிகாலனும் வாங்கி விவசாயம் செய்ய போகிறோம் என்று சொல்லவும் மரகததிற்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும், இதற்கு தன் கணவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற கவலையும் இருந்தது.

அதற்கு ஏற்றாற்போலவே அவரும் நடந்துக்கொள்ள, இப்பொழுது மகளிடம் பேசவேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு நேராய் கரிகாலன் வீட்டிற்கும் செல்ல முடியாதே. தோதாய் அன்னமயிலின் வீடு அருகேயே இருக்க, அங்கே சென்றால் மகளை அழைத்து பேசும் வாய்ப்பும் கிட்டும்.

நடந்த விஷயங்கள், நடக்க போகும் விசயங்கள் எல்லாம் கலந்து பேசலாம் என்றெண்ணி சென்றார் மரகதம். அங்கே சென்றால் அவருக்கு முன்னமே தங்கமலர் அங்கே இருந்தால்.

“என்ன டி இந்நேரத்துலையே இங்கன இருக்க.. காட்டுக்கு போகல..  ” என்றபடியே,

“என்னண்ணே இப்ப கொஞ்சோ தெம்பா இருக்கா, அடியே சரசு நாட்டுகோழி அடிச்சு சாறு குடு புள்ள…  ” என்று விசாரிக்கவும் தவறவில்லை.

“ம்ம் நேத்து அது டவுனுக்கு போச்சுமா, மாமாக்கு மருந்து வாங்கிட்டு வந்துச்சு. குடுத்துபுட்டு போகலாம்னு வந்தே.. ” என்றவள் மருந்தை குடுத்துவிட்டு, கரிகாலன் வீட்டிற்கும், அன்னமயிலின் வீட்டிற்கும் இடையில் இருக்கும் சிறு பாறை வளைவில் சென்று அமர்ந்தாள்..

மேலும் சிறிது நேரம் மரகதம் சரசுவிடம் பேசிவிட்டு மகளிடம் வந்தார்.

“என்ன டி இங்கன வந்து இருக்கவ.. ”

“ம்ம்ச் அங்கன ஒங்கூட சரியா பேச முடியாதும்மா.. அதே.. நீயு அந்த வீட்டுக்கு வரமாட்ட.. ”  என்றாள் லேசாய் மனதாங்லாய்.

“அடியே.. கலங்காத புள்ள.. எல்லா கொஞ்சோ நாளைகுத்தே.. பெறவு எல்லா சரியாகிடு..”

“என்னமோ ம்மா.. நீயு இதத்தே சொல்லுற. எங்க ஒன்னு நடக்குற பாடில்ல..  யம்மா கேக்க மறந்துபுட்டே, அண்ணே நேத்து வந்து வெவரோ சொல்லவு அய்யா எதுவு சொல்லலியா??? ”

“ஹ்ம்ம் அத ஏன் டி கேக்குற.. இம்புட்டு நேரோ கத்து கத்துன்னு கத்திபுட்டு த்தே போச்சு… ஸ்ஸ்.. அம்பளைங்களுக்கு எதுவுமே அவங்களா முடிவு செஞ்சா அது சரி… அதுவு ஒங்கய்யே மாதிரி ஆளுங்களுக்கு, எல்லாத்துக்கு அவரே முன்னுக்க நிக்கனு.. சரி அதேல்லா விடு ஒ மொகோ எதுக்கு இம்புட்டு வாட்டமா இருக்கு. வேற எதுவு பிரச்சனையா தங்கோ…”

மரகதம் இப்படி கேட்கவுமே அவளுக்கு அன்று இரவு கரிகாலன் பேசியதே நினைவு வந்தது. பிரச்சனையும் அதிலிருந்து தானே ஆரம்பம்.. ஆனாலும் அவரிடம் கூறி மேலும் அவரை போட்டு வருத்தவேண்டாம் என்று முடிவெடுத்தவள் சிறிது நேரம் அவரோடு பேசிவிட்டு வீடு வந்தாள்.

ஆனாலும் அன்று நடந்தது அனைத்தும் அவளுக்கு மனக்கண்ணில் ஒருமுறை காட்சிகளாய் ஓடின.

 “ஏ புள்ள மலரு, அன்னோ அய்யாட்ட இருந்து அந்த நெலத்த நம்ம வெலைக்கு வாங்கலாமா ??? ” என்று கரிகாலன் கேட்டதும் அவனருகே படுத்திருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..

“என்ன புள்ள நா என்ன சொல்லிபுட்டேன்னு இம்புட்டு அதிர்ச்சியா பாக்குறவ..”

“இல்ல ஒன்னுயில்ல.. நெலோ நீச்சு வாங்குறது என்ன அம்புட்டு சுலபமா என்ன?? நீ பாட்டுக்கு சொல்லுற…”என்றாள்  இன்னும் வியப்பு மாறாத குரலில்.

“ஏ புள்ள.. நம்ம என்ன வாங்க கூடாதா ??? காலோ முழுக்க கூலியாத்தே இருக்கனுமா?? நமக்குன்னு சொந்தமா ஒரு காலடி நெலோ இருந்தா வேணாங்குதா…??”  சற்றே ஒரு மாதிரி குரலில்..

“அப்புடில்லா இல்ல.. ஆனா அம்புட்டு காசுக்கு எங்க போறது.. அதுவு இந்த நேரத்துல நம்ம போயி அவங்ககிட்ட நெலத்த குடுன்னு கேட்டா நல்லாவா இருக்கும்?? அவங்க மனசுல வேறா எதா முடிவு இருந்தா என்ன செய்யுறது??? ”

“ம்ம்ம் ” என்று யோசித்தவன் சிறிது நேர அமைதிக்கு பிறகு இந்த பேச்சை விட்டு தான் போன காரியம், அன்னத்தின் தந்தையை பார்த்தது, திரும்பி வந்தது என்று கதை சொல்லிக்கொண்டு இருந்தான்..

அவளோ இவன் அருகில் இருக்கும் மகிழ்ச்சியே போதும் என்று, அவன் கூறிய கதைகளை எல்லாம் கேட்டபடி அமைதியாய் உறங்கிவிட்டாள். அவள் உறங்கிய பின்னரும் கூட கரிகாலனும் உறக்கம் வரவில்லை.

சில நொடிகள் யோசனையாய் தங்கமலரின் முகத்தையே பார்த்தபடி இருந்தவன் பிறகு எப்பொழுது உறங்கினானோ தெரியவில்லை. எப்பொழுதும் காலை வேகமாகவே முழித்துவிடும் அவனுக்கு அன்று எழும்பவே மனமில்லை.. வேண்டாவெறுப்பாய் எழுந்தவன் குளித்துவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டான்.

வெறுமெனே உருண்டுகொண்டு இருந்தான்..

“என்ன கோவில்ல வேண்டுதலா செய்யுற… இந்த உருளு உருளுற.. எந்திரிக்க முடியலையோ…”

“ம்ம்ச் போ டி…  ”

“அது சரி… எந்திரி மொதோ.. இன்னிக்கு என்ன காட்டுல சோலி இல்லையா??? ”

“ஏ.. சோலிக்கு போகாட்டி புருசன்னு சொல்லமாட்டியோ..” என்றபடி அவளருகே வந்தான் கைலியை மடக்கி கட்டிக்கொண்டே..

“நீ போ போகாம இரு.. என்னமுஞ்செய்யி.. ஆனா இப்புடி வந்து ஓரசாத. அடுப்பு முன்னால சோலியா இருக்கேல.. ”

“ஓகோ!!!! அப்போ இப்புடி வந்து ஓரசுனா பரவாலியா…  ” என்றான் அவளை இழுத்து தள்ளிக்கொண்டு வந்து.

“ம்ச்ச் ஒனக்கு எப்பவுமே என்னைய தள்ளிட்டு போறதே சோலியா போச்சு.. ” என்றால் இதழில் ஒரு மென்னகையை தவழவிட்டு..

“ஆமாமா இல்லாட்டினாலு ஒனக்கு ஒன்னு தெரியாது பாரு..” என்றவன் அவளை விடுவிப்பதாய் தெரியவில்லை அவளுக்கு..

“என்னவா.. நேத்தேல்லா எதோ ரோசனையா இருந்த இன்னிக்கு என்னவா ?? ” என்றவளும் அவனுக்கு இழைந்தே பேசினாள்..

“ஒரு முடிவெடுத்தா அதுல தெளிவாருக்கணும். அம்புட்டுதே.,. சும்மா அதையே போட்டு மனச ஒளப்பிட்டு இருந்தா நல்லவா இருக்கும்…”

“இருக்காதுத்தே… அதுக்குனு இப்புடி வெளிய கூட போகமா வந்து நின்னா எப்புடி.. என்ன முடிவெடுத்த… ” என்று கேட்டவளுக்கு அவள் குரலே அவள் காதில் விழ வில்லை.

அந்த மழை நாளுக்கு பிறகு இன்றே கரிகாலனின் அருகாமை கிடைக்க, அதிலிருந்து விலகும் மனமே இல்லை அவளுக்கு. ஆனாலும் அவனது முடிவை தெரிந்துகொள்ளும் ஆவலும் அவளை போட்டு படுத்த இரண்டிற்கும் தோதாய் அவனிடமே சரணடைந்தாள் தங்கமலர்.       

“ஒனக்கு பொருத்தமா தான் டி ஒங்கய்யா பேரு வச்சிருக்காரு… ” என்று அவளது இடையை சேர்த்து அணைத்தவனை விழிகள் விரித்து பார்த்தாள்..

“என்ன அப்புடி பாக்குறவ.. தங்கமலருன்னு… ஒனக்கு பேரு பொறுத்தமா இருக்கு டி… பூ மாதிரி இருக்க மலரு…. ” என்றவனது குரலும், கண்களும், ஸ்பரிசமும் அவளுக்கு என்ன உணர்த்தியதோ மயங்கித்தான் போனது அவளது உள்ளம்..

கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் கலந்திருக்க, காலமும் அவர்களுக்கு துணையிருந்தது யாரும் தொல்லை செய்துவிடாமல் பார்த்து கொண்டு.

ஏனோ அன்றைய பொழுதில் அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. நாள் முழுக்க மலரோடு இருக்கவே விரும்பினான். அதற்காத அவன் எண்ணத்தில் வேறெதுவும் இல்லை.

வெறுமெனே அவளோடு பேசியபடி இருப்பதும், அவளது நடமாட்டத்தை பார்ப்பதும், ரசிப்பதுமாய் இருந்தான்.

“என்ன தொர வீட்ட விட்டு வெளிய போக வலிக்குதா…. ” என்றபடி அவனுக்கு பேசிக்கொண்டே சமையல் செய்தவளை பார்த்து லேசாய் புன்னகைதான்..

“அட என்ன ??? இப்புடி சிரிச்சா எப்புடி??? ஆமா என்ன முடிவெடுத்தன்னு சொல்லவே இல்ல.. கேக்க வந்த என்னையு தெச திருப்பிட்ட… ” என்றவளுக்கு இன்னும் கூட அவன் முகம் பார்க்க கூசியது.

“ஹ்ம்ம் நா சொன்னே நீ எங்க அதெல்லா காதுல வாங்குன…” என்று கேலியாய் சிரித்தவனை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டாள்..

பின்னே யோசனை வந்தவனாய் “சாயங்காலம் டவுனுக்கு போகனு புள்ள… ” என்றான்..

“எதுக்கு ??? ”

“தோட்டத்துக்கு சாமான் எல்லா வாங்கனு.. ஒங்கண்ணே வேற இன்னிக்கு டவுனுக்கு வரேன்னு சொல்லிருக்கான். அதே போகணும்..”

“போறதுலா ச்சரி… இன்னு நா கேட்டதுக்கு பதிலே சொல்லல.”

“ஹ்ம்ம் பொறுமையா இறு புள்ள.. ஒங்கண்ணே கிட்ட பேசிட்டு வந்து சொல்லுறே முடிவு என்னான்னு…   ”

“இதுல எதுக்கு எங்கண்ணன கோத்து விடுற.. ”

“அடியே… சும்மா நச நசன்னு பேசாம சோலிய பாரு.. எதுவா இருந்தாலு ஒங்கிட்ட சொல்லாம செய்யமாட்டே…” என்றவன் அதற்குமேல் இதை பற்றி பேசவில்லை.

அவளும் கேட்கவில்லை.

மேலும் சிறிது நேரம் வீட்டில் இருந்தவன் பிறகு என்ன நினைத்தானோ சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே கணேசன் வந்து வாத்தியார் வீட்டில் அழைப்பதை கூறவும் தங்கமலரும் வீட்டை பூட்டிக்கொண்டு, கரிகாலன் வந்தால் சொல்லும்படி அன்னமயில் வீட்டில் சொல்லிவிட்டு சென்றாள்.

சென்றவள் என்னமோ சிறிது நேரத்திலயே வீட்டிற்கு திரும்பிவிட்டாள், ஆனால் அவளது முகமோ போகும் போது இருந்த தெளிவில் இல்லை…

கரிகாலனிடம் சொல்லலாம் என்று எண்ணியவளுக்கு ஏற்கனவே அவன் மனதில் வேறு யோசனை வந்து அமர்ந்துக்கொண்டு இருப்பது நினைவு வர எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாய் இருந்தாள்.

சரி இன்னும் நாள் இருக்கிறதே என்று தற்சமயம் தன் குழப்பத்திற்கு அவளே விடுமுறை விட்டு ஆகவேண்டிய வேலையை பார்த்தாள்.

கரிகாலன் அதன் பிறகு இரவே வீடு வந்தான்.. போன போது இருந்ததை விட இப்பொழுது அவன் முகம் மிகவும் தெளிவாய் இருப்பதை பட்டது தங்கமலருக்கு. ஆனாலும் அவனாகவே கூறட்டும் என்றெண்ணி அமைதியாகவே இருந்தாள்..

“என்ன புள்ள மொகத்தையே பாக்குறவ, என்னன்னு கேக்க மாட்டியா???”

“ஹ்ஹும் நா கேட்டு ஒடனே நீ கடகடன்னு பதில சொல்லிட்டுத்தே வேற சோலி பாப்ப  பாரு.. போவியா…”

வேண்டுமென்றே சலித்துக்கொண்டாள்.

“அடடா என்ன டி இது.. காலம்பர நல்லா இருந்த இப்ப என்ன வந்துச்சு.. இப்புடி சலிச்சுக்குற..  ”

“ஆமா நீ மாவு நா சலிக்கிறே…  ”

“அடியாத்தி… இங்க பாரு டா…   ”

அவன் வேண்டுமென்றே அவளை சீண்டுவது அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் நேற்றிலிருந்து எத்தனை முறை கேட்டுவிட்டாள் என்ன முடிவு என்று. இன்று இதோ இந்த நிமிஷம் வரைக்கும் அவன் பதில் சொல்வதாய் இல்லை.

இனிமேல் அவள் கேட்டாள் என்னாவது?? அதுவும் தங்கராசு மகள் அல்லவா அவரது பிடிவாதத்தில் சிறிதாவது இருக்குமே. ஆனாலும் அவனை எப்படியாவது சொல்லவைக்க வேண்டுமே.

“ஓ மூஞ்சிய ஓயாமலா பாக்க முடியாது….  ”

அவளும் சீண்டினாள்..

“சரி சரி பாக்காத… நீதே ஏற்கனவே மயங்கிட்ட.. இனி பாத்து ஒன்னு ஆகபோறது இல்ல….”

இவன் பேச்சை மாற்றுகிறான் என்று அவள் மூலையில்  மணியடிக்க,

“சரி சரி.. இப்ப என்ன அதுக்கு?? எல்லா தெரிஞ்சு நீதான புடிவாதமா கல்லாணம் செஞ்ச, அப்போ என்னைய பிடிக்காம பிடிவாதத்துக்குத்தே கல்லாணம் பண்ணியா ??? ”  என்று பொரியவும்,

“ஏய் ஏய் என்ன மலரு இப்புடி திடீர்னு பொங்குற..” என்றவனது குரலே தற்சமயம் அவன் எந்த சண்டையையும் விரும்பவில்லை என்று பறைசாற்றியது.

இப்பொழுது தான் அவர்களது வாழ்வு சற்றே சுமுகமாய் போகிறது. தங்கராசு மனம் மாறி தங்களை ஏற்றுக்கொண்டாலே போதும் அனைத்தும் சரியாகிவிடும்.

அதுவும் சீக்கிரமே நடந்துவிடும் என்று கரிகாலன் நம்பினான். அதற்காகத்தானே அவன் பொன்னரசுவை இங்கே வரவைக்க முயற்சித்தான். அதிலும்  கூட அவனுக்கு வெற்றித்தான்.. ஆனால் அவன் விரும்பியே தோற்கும் இடம் தங்கமலர் தான்.

முன்னெல்லாம் இவன் அரட்டுவான் அவள் அடங்குவாள். இப்பொழுது நேர்மார்.. விவரம் தெரிந்த நாளில் இருந்து அவனுக்கு அவன் பாட்டி தான். அன்னையின் அன்பை உணர்ந்தானோ என்னவோ தற்பொழுது அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை.

தங்கமலர் அவனை தேடி போய் தன் நேச முகத்தை காட்டும் போதெல்லாம் தனக்கென்று ஒரு ஜீவன் இருக்கிறது, தன்னை நேசிக்க, தன்னையே சிந்திக்க என்று அவனுள்ளே மகிழ்ந்துக்கொள்வான்.

அவனது பாட்டி இறந்தபின்னோ இந்த எண்ணம் இன்னும் அதிகமாகியது.

ஆனால் ஒருபக்கம் தங்கமலர் மீது நேசம் அதிகரித்தாலும், தங்கராசு தராசின் மறுபக்கம் அமர்ந்து அவன் ஏறும் நேசத்தை இறக்கிவிடுவார். அவரை எண்ணியே அவன் பல நாள் மௌனமாய் இருந்தது.

பிறகும் ஒரு எண்ணம் எதற்கு வீணாய் பிரச்சனை செய்துக்கொண்டு, ஆயிரம் இருந்தாலும் தந்தையின் வயதை ஒத்தவர். அவர் கோவத்தில் கத்தினாலும் நாம் பொறுமையாய் இருப்போம் என்றே இருந்தவனை பொருத்தது போதும் பொங்கி எழு என்று தூண்டியவரும் அவரேதான்.

எது எப்படியோ இருவரது நேசமும், பிறியா நேசமாய் திருமணத்தில் முடிய கரிகாலனுக்கு அத்தனை நிம்மதி மனதினுள். ஆனால் அவனுக்குமே உள்ளுர சிறிது வருத்தம் தான் ஏனெனில் திருமணத்தின் போது தங்கமலர் அத்தனை மகிழ்ச்சியாய் இல்லை.

அதை ஈடு செய்யவே அவளை இப்பொழுது நன்றாய் பார்த்துக்கொள்கிறான். அவளும் அவனை முழுமனதாய் ஏற்றுக்கொண்டாள். ஆனால் எந்நேரமும் இவனிடம் பழையதை சொல்லி சண்டையிடும் வாய்ப்பும் இருந்தது. அப்படி இருவருக்குள்ளும் சிறு பிரச்சனை என்று தங்கராசிற்கு தெரிந்தால் போதும் அவ்வளவு தான். முற்றுபுள்ளி மட்டும் தான் இனி கண்ணில் படும். 

ஆனால் கரிகாலனுக்கோ தனக்கு தாயாகவும் தாரமாகவும் மாறிவிட்ட தங்கமலரை இனி எதற்காகவும் இழப்பதாய் இல்லை. அது அவளது தந்தையே என்றாலும் இனி விட்டுகொடுப்பதாய் இல்லை.

அவனை பொருத்தமட்டில் வாழ்விற்கு இப்பொழுது இருப்பதே போதும். ஆனால் அவன் தங்கமலரை வெறும் கூலி தொழிலாயின் மனைவியாய் மட்டும் பார்க்க விரும்பவில்லை.

இன்னும் வயதிருக்கிறது. முன்னேற வாய்புகள் கண் முன்னே கொட்டி கிடக்கிறது.

தங்கமலர் பிறந்ததில் இருந்தே பட்டாதாரரின் மகள். கை அளவு நிலம் என்றாலும் இன்றளவும் தங்கராசு அதை வைத்திருந்தார். தன் பெயரில் ஒரு பட்டா இருப்பது அத்தனை பெருமை அவருக்கு.

அதே பெருமையை அவன் தன் மனைவிக்கு கொடுக்கவேண்டாமா ?? அதற்கு பிறகு அவன் சந்ததிக்கு என்று அவன் எதுவும் சேர்த்துவைக்க வேண்டாமா??

இதெல்லாம் யோசித்தே அவன் அன்னமயிலின் தந்தையிடம் அவர் நிலத்தை வாங்குவது என்று முடிவெடுத்தான். இத்தனை நாள் சேமித்து வைத்த பணமெல்லாம் இருக்கிறது. செலவுக்கு என்று அவனுக்கு வாய்ப்பே இல்லையே.

ஆனாலும் அவனிடம் இருக்கும் பணம் மட்டுமே போதாது. அந்நேரம் தான் பொன்னரசு தானும் சிறிது பணம் போடுகிறேன். இருவரும் சேர்ந்தே வாங்குவோம் என்றான்.. மேற்கொண்டு வரும் பணத்தை எப்படியாவது புரட்டிகொள்ளலாம் என்று ஏற்பாடு.

“இந்தா என்ன??? இப்புடியே மோட்டுவளைய பாத்துட்டு இருக்க என்னாச்சு….  ” என்று தங்கமலர் உலுக்கிய பின்னரே அவனுக்கு தான் இத்தனை நேரம் நினைவுகளில் மூழ்கி இருந்தது விளங்கியது..

“ஹா ஒண்ணுயில்ல,.. அது நானு ஒங்கண்ணனு சேந்துத்தே அந்த நெலத்த வாங்கலாம்னு இருக்கோ..” என்று அவன் பட்டென்று உடைக்கவும், தங்கமலருக்கு முதலில் எதுவுமே புரியவில்லை.

பிறகு அவன் விளக்கி கூறியதும், இதில் தன் பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருப்பதாய் தோன்றியது. அதேநேரம் இப்பொழுது அதை இவனிடம் சொல்வது சரியல்ல என்று எண்ணியவள் தன் அண்ணன் வரும் போது இருவரையும் சேர்த்து வைத்தே சொல்லவேண்டும் என்று எண்ணினாள்.

ஆனால் அதற்கு இருவருமே எதிர்புத்தான் தெரிவித்தனர்.

                                                                        

                            

                                     


Advertisement