Advertisement

மலர் – 12

மழை விழும் ஓசையை விட, தங்கமலர் கரிகாலன் இருவரின் இதயங்கள் பேசிக்கொள்ளும் ஓசையே அவர்கள் மனதை நிறைத்தது.

ஆனால் பூஜை வேளை கரடியாக கதவு படார் படார் என்று தாட்டபடும் சத்தம் கேட்கவும், அச்சத்தத்தில் கலைந்த இருவருக்கும், தங்கள் உணர்வில் இருந்து வெளிவரவே வெகு நேரம் பிடித்தது.. ஆனாலும் கதவு விடாமல் தட்டப்பட, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இவர்கள் பார்த்துகொள்ளும் வரைக்கும் எல்லாம் வெளியில் இருப்பவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்கு அடையாளமாய் கதவு இன்னும் வேகமாய் தட்டப்பட்டது..

கரிகாலன் தான் வேகமாய் எழுந்து சென்றான், அந்த இடைவேளையில் தங்கமலர் தன்னை சரி செய்துக்கொண்டாள். அவளும் யாரென்பது போல வெளியே பார்க்க அன்னமயில் அழுதபடி நின்றிருந்தாள்..

அந்த நேரத்தில் அவளை இருவருமே  எதிர்பார்க்கவேயில்லை. அதிர்ந்த பார்வையோடு, “என்ன அன்னோ…. ” என்று ஒருமித்து விசாரிக்க, அவளிடம் இருந்து ஒரு கேவலே பதிலாய் வந்தது.    

“என்ன அன்னோ என்னாச்சு ???? என்ன இந்நேரத்துல வந்திருக்கவ ?? என்ன டி… ”

“தங்கோ…….  ” என்று கட்டிகொண்டாள் அவளை…

இன்னும் அழுகை அதிகரித்ததே தவிர ஓய்ந்தபாடில்லை..

“தங்கோ முதல்ல அன்னத்த உள்ள கூப்புடு..  வா…” என்று கரிகாலன் உள்ளே செல்ல அன்னமயிலை அழைத்தபடி உள்ளே சென்றாள் தங்கமலர்.

“சொல்லு அன்னோ என்னாச்சு புள்ள??? ஏன் டி இந்நேரத்துல வந்து அழுகுறவ??”

……

“சொல்லு அன்னோ என்னாச்சு… ???? ”

……

கணவன் மனைவி இருவரும் என்ன கேட்டும் அழுகை அவளுக்கு இன்னும் அதிகமாகியதே ஒழிய குறைந்ததாக தெரியவில்லை. அப்பொழுதுதான் கவனித்தனர் அவள் கையில் ஒரு கடிதம் இருப்பதை..

“என்ன புள்ள ??? என்ன டி  இது…. கையில….” என்று வாங்கி பார்த்தவளுக்கு அதில் இருந்தவற்றை கோர்வையாய் படிக்க முடிக்கவில்லை..

வேகமாய் கரிகாலன் அதை வாங்கி படித்தான். படித்தவனுக்கு அதிர்ச்சி.. அதிர்ச்சி என்பதனை விட வேதனையின் சாயல் படிந்தது அவன் முகத்தில்..

“என்ன… என்னருக்கு அதுல…. ??”

“அன்னோ… என்னம்மா இதெல்லா…ஏ எங்கிட்ட முன்னமே சொல்லல…. ”

“என்.. எங்க… எங்களுக்கே இப்பத்தேண்ணே  தெரியு…. ”

“ம்ம்ச் முதல்ல என்னான்னு சொல்லிட்டு அப்புறோ பேசுங்க….”என்று தங்கமலர் கூற,

“அது… அது.. அன்னத்தோட அய்யா வீட்ட விட்டு போயிட்டாரு மலரு….”  என்று கரிகாலன் கூறவும்  

“என்ன ???!!!! ” என்றவள்

“என்ன டி அன்னோ???? ” என்று அதிர்ந்து நின்றாள்.

நேற்று வரை காணும் போதெல்லாம் சிரித்து பேசிய மனிதர்.. எப்பொழுதும் காட்டில் வேலை வேலை என்று நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் உழைப்பாளி. எப்படியாவது அன்னமயிலை நல்ல இடத்தில கொடுத்துவிட வேண்டும் என்று தினமும் வேண்டுபவர், வயது வந்த மகளை வீட்டில் வைத்திருப்பது கூட மறந்து வீட்டை விட்டு போவது என்றால் ?? என்ன நடந்திருக்கும்??

“என்ன டி அன்னோ ?? எதுனாலு முழுசா சொல்லு புள்ள ?? என்னாச்சு டி.. ”

“அய்யனுக்கு கடன் கொஞ்சம் இருந்துச்சு புள்ள… எம்புட்டு என்னன்னு முழுசா தெரியல. அய்யே பேருல இருந்த நெலத்த வேற அடமானோ வச்சுத்தே அக்கா கல்லாணத்த செஞ்சாரு.. ஆனா இப்படி திடுதிப்புன்னு எழுதிவெச்சிட்டு போவாருன்னு நெனைக்கல புள்ள…”

“என்ன டி இதெல்லா ?? முன்னமே எங்கிட்ட சொல்ல என்ன வந்துச்சு… ”

“எங்களுக்கே இப்பத்தே தெரியு டி…. அம்மா கேக்குறப்பல்லா வட்டி சரியாத்தே கேட்டுறேன்னு சொன்னாரு புள்ள.. ஆனா என்ன நடந்துச்சோ தெரியல இப்படி கெளம்பிட்டாரு.. என்னைய பத்தியெல்லா கொஞ்சங்கூட நெனைக்கவே இல்லையா டி தங்கோ.. எங்கய்யே இப்படி செய்யும்னு கொஞ்சோ கூட எதிர் பாக்கல டி….”

“அன்னோ மொதோ அழுகுறத விடும்மா.. எல்லா சரியா போகு.. உங்கய்யா எங்கயு போயிருக்க மாட்டாரு.. பொழுது விடியவு மொதோ வேலையா நா போயி என்னானு பாத்து கூட்டிட்டு வரே…”

“எனக்கு ரொம்பா பயமா இருக்குண்ணே.. அம்மா வேற பொலம்பி அழுது மயங்கிடுச்சு… அதே ஒங்கள கூப்புடலாம்னு வந்தே…”

“என்ன டி மொதல்லயே இத சொல்ல என்ன வந்திச்சு…. ” என்று தங்கமலர் கடிந்தபடி சொல்ல, மூவரும் அன்னமயிலின் வீட்டிற்கு சென்றனர். அதற்குள் அங்கே ஊரே கூடியிருந்தது.

தங்கராசு யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, கரிகாலன், தங்கமலரை பார்த்ததும் முதலில் திகைத்தவர் பிறகு அமைதியாகிவிட்டார். மரகதத்திற்கு மகளின் முகத்தை பார்த்தே எதோ உணர்ந்தவர், தங்கராசு இவர்களை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு  மெல்ல அவளிடம் வந்து

“ அடியே நீ எதுக்கு டி இங்கன வந்தவ ??? ”  என்று காதை கடித்தார்.

“என்னம்மா இப்புடி சொல்லுற ?? ஊரே இங்கன இருக்கு.. அன்னோ வந்து கூப்புடுறப்ப எப்படி வராம இருக்குறது…???”

“ம்ம்ஹும்.. நல்லா வியாக்கியானம் பேசு.. கூறுகெட்டவளே ஒம்மொகத்த பாரு எப்புடி இருக்குன்னு. ஒனக்குத்தே புத்தியில்ல, ஒம்புருசுனுக்கு எங்க போச்சு.. ”

“ம்ம்ச் யம்மா நெலம புரியாம பேசாத.. பாரு அன்னோ எப்புடி அழுகுறான்னு… ” என்றவள் யாரும் அறியாமல் முகத்தை நன்றாய் சேலை முந்தானையில் துடைத்துக்கொண்டாள்.

அங்கே அன்னமயிலின் அம்மாவோ அழுது அழுது ஓய்ந்து கிடந்தார்.. அன்னமயிலோ வரும் அழுகையை அடக்கி அவள் அன்னைக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள்..

ஆண்களோ அடுத்ததாய் என்ன செய்வது என்பது போல ஆளாளுக்கு பேச, கூட்டத்தில் இருந்த பெருசு

“அட என்னப்பா இப்படி அளாளாக்கு பேசிகிட்டே இருந்தா எப்புடி… சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுங்க…. பொழுது விடியவு எளந்தாரிங்கலா சேந்து போயி பக்கத்து கிராமத்துல தேடுங்க.. மத்த ஆளுங்க எல்லா நம்ம மலைல தேடுங்க…” என்றார் இலவசமாய் ஒரு யோசனையோடு.

அவர் கூறுவதும் அனைவர்க்கும் சரியெனபட  அனைவரும் பொழுது விடிவதற்காய் காத்திருந்தனர். கரிகாலனோ அன்னமயிலிடம் எதுவோ கூற விளைவது போல அவளையே நொடிக்கொரு முறை பார்வை பார்க்க, இதை யார் கவனித்தார்களோ இல்லையோ தங்கராசு சரியாய் கவனித்தார்..

“ச்சே.. முழிய பாரு.. கூறுகெட்ட பைய.. இம்புட்டு பேரு சுத்தி இருக்கோ எம்மவள எப்புடி பக்குறான்னு பாரு.. இவன போயி கட்டிகிட்டாளே… ஐயோ!!!!     இவேலா ஒரு பெரியமனுசன்னு இவனையும் கூப்புட்டு ரோசன கேக்குறானுங்க..  ” என்று கடுகடுத்து போய் நின்றிருந்தார்.

அடுத்ததாக கரிகாலனின் பார்வையை கண்டுகொண்டது பொட்டியம்மாள்.

“அடியே தங்கோ… அடியே… இங்கன.. ம்ம்ச் இங்குட்டு பாரு டி….” என்று யாரும் அறியாமல் அவளை அழைத்தவர் கரிகாலனை பார்க்குமாறு ஜாடை காட்டினார்.

தன் அத்தை என்ன கூறுகிறார் என்பதை போல் உற்றுபார்தவள் பின்னே கணவன் பக்கம் பார்வையை திருப்பினாள்..

அவனது பார்வை என்ன சொல்லியதோ, இல்லை அவளுக்குத்தான் என்ன புரிந்ததோ எழுந்து சென்றவள் நேராய் கரிகாலனின் அருகில் நின்றாள்.

நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த தங்கராசுவிற்கோ வயிறு எரிந்தது.

“ஐயோ !!! இப்புடி ஒத்த பார்வையில எம்மவள ஆட்டி படைக்கிறானே…. தங்கோ எப்புடி புள்ள இவேங்கூட நீ இருக்கவ…. ” என்று மனதளவில் தன் மகளோடு பேச தொடங்கினார்.

கரிகாலனோ தன் மனைவியிடம் “இங்கியாரு புள்ள, நாளிக்கு விடிய கெளம்பிடுவோ. வீட்டுல தனியா இருக்காத என்ன கூட யாரையாச்சு கூப்புட்டுக்கோ. அப்புரோ அன்னத்துக்கு அவ அம்மாக்கு சாப்புட செஞ்சு குடு.  நீ வேளா வேளைக்கு சாப்புடு..

நாளிக்கு மேக்க காடுல பழம் எடுப்பு. பக்கத்து ஊருல இருந்து கூலி ஆள் வரும் பாத்து சோலிய வாங்கு. நாளிக்கு நீதே எல்லா பாத்துக்கணு.   எங்கிட்ட வாயடிக்க மாதிரி கூலிக்கு வரவங்கட்ட வாய் காட்டாத ” என்று அவன் வரிசையாய் கூற தங்கமலரோ திகைத்து போய் நின்றிருந்தாள்.

அவளது திகைத்த முகத்தை பார்த்த தங்கராசுவோ “பாவிப்பைய எம்மவ கிட்ட என்னத்த சொல்லுறானோ அவ இப்புடி தெகச்சு போயி நிக்கிறா…” என்று எண்ணியவருக்கு என்னவென்று தெரிந்தே ஆகவேண்டும் போல ஆவல் பிறந்தது..

“இவே மட்டு எம்மவள எதா சொல்லட்டு இன்னிக்கே அவள எவ்வீட்டுக்கு கூட்டிட்டு போறே.. ” என்று முனுமுனுத்தபடி யாரும் அறியாமல் அங்கே இங்கே நகர்ந்து சரியாய் கரிகாலனுக்கு பின்னே சுவரில் சாய்ந்து உட்காரும் பாவத்தில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டார்.

“என்ன புள்ள மலரு நா இம்புட்டு சொல்லிட்டு இருக்கே நீ வெச்ச கண்ணு வாங்காம நின்னுருக்கவ…”

“ஹா நீ இம்புட்டு சொன்னா பெறவு எப்புடி நிக்கிறாதாம்… ”

“இங்கியாரு மலரு சூழ்நில எப்பவு ஒரே மாதிரி இருக்காது.. சரி நீ வீட்டுக்கு போ நானு கொஞ்சோ நேரத்துல வரே.. வந்து சொல்றே வெவரமா..” என்றவிட்டு யாருடனோ பேச திரும்பிவிட்டான்.

“ஹ்ம்ம் நேரோ.. வான்னா வரணு போன்னா போகனு..” என்று முனுமுனுத்தபடி பெண்கள் பக்கம் சென்றவள் சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அன்னமயிலோடு இருக்க ஆசை தான். ஆனால் இருந்தால் மரகதமும், போட்டியம்மாலும் இவளை ஏதாவது சொல்லிவிடுவர் என்று அஞ்சியே வந்துவிட்டாள்.

ஆனால் இவர்கள் பேசுவதை கேட்கவென்றே வந்தமர்ந்த தங்கராசுவிற்கு தான் ஏமாற்றமாய் போனது.

“ச்சே… நா வந்தத பாத்துபுட்டுத்தே இவே பேச்ச மாத்திட்டியா… கொடுமக்காரே..” என்று கரிகாலனை கடிந்தார். 

சிறிது நேரம் கழித்து வந்த கரிகாலனுக்கு சற்று முன்னரே தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த இனிமையான பொழுதுகள் எல்லாம் நினைவிலேயே இல்லை.

அவனது எண்ணமெல்லாம் அன்னமயிலின் தந்தையை சுற்றியே இருந்தது. இரண்டு நாட்களுக்கு தேவையான துணிமணிகளை எடுத்துவைத்தவன் செலவுக்கென்று கொஞ்சம் பணத்தையும் எடுத்துவைத்துக்கொண்டான்.

அதன் பிறகே தங்கமலரை வீட்டிற்கு போக சொன்னது நினைவு வர அவள் எங்கே என்பது போல பார்த்தான். அவளோ அன்னமயில் வீட்டில் இருந்த அனைவருக்கும் அந்நேரத்தில் குடிக்க கடுங்காப்பி போட்டு கொண்டிருந்தாள். தானே சொல்ல நினைத்ததை அவளாகவே செய்வது கண்டு கரிகாலனுக்கு மனதில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தது.

“நானே சொல்லனும்னு நெனச்சே புள்ள நீயே செஞ்சுபுட்ட…. ”

“ஹ்ம்ம் நேரோ ஆச்சுல… மழ வேற இப்பத்தே விட்டுச்சு.. அதே குடிக்க எல்லாத்துக்கும் எதா இருந்தா கொஞ்சோ நல்லாருக்கும்னு… இந்தா நீயு குடி.. நா போயி எல்லாருக்கு குடுத்துபுட்டு வரே…”

“நில்லு மலரு… நீ இரு.. நீ கொஞ்சோ நேரோ தூங்கு… நா போயி குடுக்குறே…” என்றவன், அவள் தலையை தடவி லேசாய் கன்னம் தடவி, தங்கமலர்  குடுத்த தூக்குவாளியை எடுத்துக்கொண்டு நேரே அன்னமயிலின் வீட்டு பின் வாசல் பக்கம் சென்றான்.

பின் பக்க வாசலில் அமர்ந்து பேசிகொண்டிருந்த பொன்னாகாளிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொன்னவன் படக்கென்று முன்னே வந்து அமர்ந்துகொண்டான்..

“என்னடா இது வந்தே இப்புடி ஓடுறியா..  சித்தி ஓ மவ கடுங்காப்பி போட்டு அனுப்பிருக்கா…  ” என்று கூறியபடி அனைவருக்கும் விளம்பினார்.

“அடியே பொன்னு மறந்து கூட ஒ சித்தப்பேங்கிட்ட தங்கோ வீட்ல இருந்து வந்ததுன்னு குடுத்துபுடாதா.. இங்கன போட்டதுன்னே சொல்லு புள்ள…”

“ம்ம் சரி சித்தி…… ”

பொன்னக்கா கொண்டு போயி கொடுத்த காப்பியை வாங்கியபடி  “யப்பா… நல்ல சோலி செஞ்சிங்க.. குடு குடு…” என்று வாங்கி பருகியவரை கரிகாலன் சற்றே தள்ளி நின்று பார்த்தபடி இருந்தான்.

“என்னடா கரியா ஒ மாமானார இப்புடி ரசிக்கிறவே…. ”

“ஹ்ஹும் முனியண்ணே ஒனக்கு நாக்குல எமகண்டோ போல. இது மட்டு அந்த மனுசனுக்கு கேட்டுச்சு ஒ காத அத்துபுடுவாரு..  ”

“அதுசரி ஒ வீட்டு கடுங்காப்பிய குடிச்சருன்னு தெரிஞ்சா அவரு வயித்த என்ன டா செய்வாரு… ” என்று கிண்டலாய் கேட்க,

“அண்ணே… செத்த சும்மா இரு…. நானே எல்லா சீக்கிரோ சரியாகனும்னு நெனச்சிட்டு இருக்கே…” என்றான் 

“என்ன டா ஒ மாமனார் மேல அம்புட்டு பாசோ…??? கல்லாணம் முடிஞ்சு இம்புட்டு சீக்கிரோ மாறிட்ட…”

“பாசமு இல்ல கீசமு இல்ல… எல்லா மலரு புள்ளைக்காக.. என்னயிருந்தாலு அவளுக்கு அவங்கய்யே முக்கியோதேன ண்ணே..”

“நீ சொல்றது சரித்தே டா.. குடும்போங்கிறது என்ன எல்லா சேந்து இருக்குறதுத்தேன.. அது இந்த மாமனுக்கு எப்பத்தே புரியுமோ.. இந்த பொன்னரசு சீக்கிரோ இங்கன வந்துபுட்டா நல்லது..”

“ஹ்ம்ம் பாப்போம் ண்ணே.. நா போயி ஜிப்ப எடுத்துகிட்டு வரே… நீ எல்லாத்தையு தயாரா இருக்கச் சொல்லு..” என்றவன் சொன்னது போலசே சிறிது நேரத்தில் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் என்பதற்கு அடையாளமாய் ஆகாயம் தன் போர்வையை மெல்ல விலக்க, பறவைகளின் பூபாளம் கேட்க, கரிய நிற மேகங்கள் எல்லாம் தங்க வண்ணத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது.

இந்த விடியல் தங்கள் வாழ்விலும் ஒரு விடியலை தராதா என்று அன்னமயில் இறைவனை வேண்ட, தாங்கள் போகும் காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று ஆண்கள் அனைவரும் ஏற்கனவே முடிவு எடுத்தபடி கிளம்ப, கரிகாலன் தங்கமலரிடம் கூறிக்கொள்ளவென  மீண்டும் வீட்டிற்கு வந்தான்.

அவளோ கண்கள் மூடி இறைவனை வேண்டியபடி நின்றிருந்தாள். நேற்றும் இதே போலத்தான் நின்றிருந்தாள்.. அதன் பிறகு நடந்தது எல்லாம் அவன் மனதில் வர, ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்தவன், பின் நேற்று போலவே இன்றும் ஒரு நல்லது நடக்கவேண்டும் என்று அவனும் வேண்டிக்கொண்டான்.

“மலரு…. ”

அவனது அழைப்பில் படக்கென்று விழிகள் திறந்தவள் என்னவென்பது போல பார்த்தாள்.

“நா சொன்னது நெனப்புல இருக்கா புள்ள.. எப்படியு நாங்க எல்லா வந்து சேர ரெண்டு மூணு நாளு ஆகும். வீட்டுல தனியா இருக்க சங்கடப்படாத. நா கணேசேகிட்ட சொல்லிருக்கே ஒங்கூட காட்டுக்கு அவே தொணைக்கு வருவியா. கூலிக்கு ஆள், சம்பள கணக்கு ஒனக்கே தெரியு. காசு அந்த பையில வச்சிருக்கே புள்ள. பாத்து இரு.. ”

தங்கமலரோ எங்கோ பார்வையை பதித்தபடி “ஹ்ம்ம் சரி… ” என்றாள்.

“நீ என்ன நெனைக்கிறன்னு எனக்கு புரியுது மலரு. ஆனா எப்பவும் ஒரேமாதிரி இருக்காதுல…”

“அதுக்கு இப்புடித்தே எல்லாத்தையும் எங்கிட்ட விட்டு பாருன்னு சொல்லுவியா. திடுதிப்புனு சொன்னா நா என்ன செய்ய. இங்க அன்னத்த பாப்பேனா, காட்டுக்கு போயி கூலி பாப்பேனா, இல்ல நீ எப்ப வருவன்னு பாத்துட்டு இருப்பேனா….”

“அடியே மலரு புள்ள.. என்ன டி இது.. சின்ன விசயோ இதுக்கு போயி கலங்கி நின்னா எப்புடி மலரு.. எதுவுமே சொல்லிட்டு வராது. திடுதிப்புன்னுத்தே வந்து நிக்கு. அதுக்கு தக்கனத்தே நம்ம நடந்துக்கனு. ”

“எல்லா எனக்குந்தெரியு… இதே சாக்குன்னு நீ வியாக்கியானோ பேசாமா கெளம்பு. அங்க எல்லா நீ எப்ப வந்து வண்டிய எடுப்பன்னு இருப்பாங்க…”

“அடி….. பேச்ச பாரு… சரி தனியா இருப்பாளே சங்கடபடுவாளேன்னு பேசிட்டு போக வந்தா.. போ டி….  சரி பாத்து இரு புள்ள…” என்றவன் பின்னே பின்னே திரும்பி பார்த்தபடி ஜீப்பை நோக்கி நடந்தான்.

அன்னமயிலும் அவள் அன்னையும் கூட ஊர்காரர்கள் குடுத்த தைரியத்தில் சற்றே தெளிந்திருந்தனர். ஒரு கூட்டம் ஜீப்பில் ஏறி செல்ல, மற்ற ஆண்களோ சோலையூரிலே தேடும் பொருட்டு கிளம்பி சென்றனர்.. சற்று நேரம் கழிய மற்றவர்களும் செல்ல அன்னமயில் வீட்டில் மரகதமும், பொட்டியம்மாலும் மட்டும் இருந்தனர். 

தங்கராசு எப்போதடா கிளம்புவார் என்பது போல காத்திருந்த மரகதம், தங்கமலரை அழைத்தார்.

“என்னம்மா… இங்கனயே இருந்துபுட்ட.. வீட்டுக்கு வா ம்மா….”

“இல்ல டி தங்கோ… மொறையா வந்தாத்தே சரி.. இப்புடி ஒ அய்யனு ஒ புருசனு இல்லாத நேரத்துல வரக்கூடாது..”

“ம்ம்ச் என்னவோ போ.. சரி சாப்புட எதா கொண்டு வரவா.. ??? ”

“அதெல்லா ஒன்னு வேணாம் டி… பொன்னு செஞ்சு எடுத்துவரேன்னு போயிருக்கா.. நீ வா இப்புடி உக்காரு…”       என்றவர் மகளின் கையை பிடித்துக்கொண்டார்.

வாய் கொண்டு பேசாத ஆயிரம் பாசைகளை மரகதத்தின் இந்த ஒற்றை ஸ்பரிசம் அவளுக்கு உணர்த்தியது.. அவரின் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் பிறகு

“ஏம்மா அய்யே மனசே மாறாதா ம்மா.. எனக்கு சங்கட்டமா இருக்கு ம்மா..  ” என்றாள் கவலையாய்.

“எல்லா நடக்குமுடி.. கொஞ்சோ பொறுமையா இருப்போ.. நேத்து ராத்திரி நீயு ஒ புருசனு வந்ததுல இருந்து ஒ அய்யே பார்வ ஒங்கமேலத்தே இருந்துச்சு. பார்வையில கோவமில்ல.. அதே சொல்லுறே இன்னு கொஞ்ச நாளு பொறுமையா இரு…”

“ஹ்ம்ம் சரிம்மா..நா உள்ள போயி அன்னத்த பாத்துபுட்டு வரே… ” என்று உள்ளே சென்றாள்.

“அன்னோ.. ஒனக்கு எதா வேணுமா டி.. சமச்சு கொண்டு வரவா புள்ள… ஒ அம்மா எங்க…. அத்த…. அத்த….. ” என்று வீடெல்லாம் பார்வையை வீசினாள்..

“அம்மா உள்ள தூங்குது டி.. நம்ம எட்டுசாமி வந்து தூங்க மருந்து குடுத்தாரு.. பாவோ நேத்து எல்லா அழுதுக்கிட்டே இருந்துச்சு. ”

“ம்ம் சரி தூங்கட்டு புள்ள.. கூட அம்மா அத்த எல்லா இருக்கட்டு.. நீ எங்கூட காட்டுக்கு வரியா.. ஒனக்கு கொஞ்சோ மாத்தமா இருக்கும்…”

“என்ன டி சொல்றவ நீ காட்டுக்கு போறியா…??? ”

“அமா டி.. ஒங்கண்ணே கூலிக்கு இன்னிக்கு ஆள் போட்ருக்கு போல.. அதே நா போறே பாக்க..”

“ஓஹோ!!!!! பெரிய கங்காணி பொண்டாட்டி இப்ப கங்காணியம்மா வா..” என்று அந்த நேரத்தில் கூட தன் தோழியை கேலி பேசினாள் அன்னமயில்.

“போ டி.. கூறுகெட்டவளே…. அதுசரி ஒ அக்காக்கு தகவல் சொல்லியாச்சா அன்னோ…”

“இல்ல டி மலரு. அவ பொழப்பே இப்பத்தே கொஞ்சோ நல்லா போகுது. இத சொன்ன ஒடனே கெளம்பி வருவா. அவ புருசே வந்து இதே சாக்குன்னு இங்கன தங்கி எங்க உயிர வாங்கிபுடுவாரு. எதுனாலு நம்மலே பாத்துப்போம் டி…  ” என்று தோழியின் கைகளை இறுக பற்றிகொண்டாள்..

“எல்லா சரியா போயிடு அன்னோ.. ஒங்கய்யே திரும்பி வந்தது நீயு ஒ அம்மாவு அவருகிட்ட எதுவு கேக்காதிங்க.. அப்புடியே விட்ருங்க.. அவரா மனசு விட்டு பேசட்டு சரியா… அழுது ஆர்பாட்டம் பண்ணாம இருங்க…”

“ம்ம் சரி புள்ள. நா இப்ப தைரியாமாத்தே இருக்கே…  ”

“நல்லது புள்ள.. சரி நா வீட்டுக்கு போயி எல்லா ஒதுங்க செஞ்சு. காட்டுக்கு போறே புள்ள.. நீயு வரதுன்னா வா. இல்ல நீயு ஒரு தூக்கோ தூங்கி எந்திரி   ” என்றவள் மரகதத்திடமும் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நேற்றுவரை விளையாட்டாய் இருந்தவள் இன்று திருமணம் முடிந்ததும் எத்தனை பொறுப்பாய் மாறிவிட்டாள் என்றே தோன்றியது அவருக்கு.

“சாமி எம்மவ வாழ்க்க இப்புடியே நிம்மதியா இருக்கணு சாமி…  ” என்று வேண்டிக்கொண்டார்.

 

  

 

     

 

            

              

      

 

 

 

                         

        

Advertisement