Advertisement

மலர் – 11

கரிகாலன் வீட்டிற்கு ஒருமுறை சென்று தன் மகளை பார்த்துவரலாம் என்று மரகதம் கூறியதுமே, தங்கராசுவிற்கு பொசு பொசுவென்று கோவம் வந்துவிட்டது..

“என்ன.. என்ன சொல்றவ.. அவே.. அவே வீட்டுக்கு நா போகணுமோ.. அதுவு அழையா விருந்தாளி கணக்கா.. எங்கிட்டு இருந்துடி ஒனக்கு புத்தி இப்புடி போச்சு.. ச்சி… இன்னொரு தரோ எங்கிட்ட அங்கன போகணும்னு சொன்ன நா மனுசனாவே இருக்க மாட்டே ஆமா…”

“ம்ம்ஹும் இப்ப மட்டு மனுசே மாதிரியா பேசுற.. கல்லாணம் பண்ணி போன புள்ளைய போயி பாக்க வேணாமா?? இல்ல நம்ம மொறைக்கு எதுவு செய்ய வேணாமா.. அப்படியே போன்னு விட்டுட முடியுமா?? அப்புறோ நம்ம மவளுக்குனு என்ன மருவாதி இருக்க போகுது..”

“ஏய் என்ன டி பதிலுக்கு பதில் பேசுறவ?? என்ன அவே மேல மருமகன்னு பாசோ கூடுதோ….. அடிச்சு பல்ல கழட்டிடுவே ஆமா….”

“இந்தா சும்மா இரு… எதுக்கு இப்போ இம்புட்டு கத்துற.. நா என்ன ஊரு ஒலகத்துல இல்லாததையா சொன்னே.. இல்ல அவள அப்படியே விட சொல்றியா.. சொல்லு அவளுக்குன்னு சேத்து வச்சது எல்லாத்தையும் கொண்டு போயி ஆத்துல போட்டுட்டு வந்துடுறே.. அப்படியே ரெண்டு பேரு எண்ண வெச்சு தல முழுகலாம்…”

“அடியே!!!! மரகதோ…..!!!!!!!  ”

தங்கராசு அலறியே விட்டார்..

“என்ன டி இப்படி பேசுறவ…. ”

“நீ செய்ற சோலிக்கு வேற எப்படி பேச சொல்ற…..????? ”

மரகதம் எதற்கும் இசைவதாய் இல்லை.. தங்கராசுவை இப்படியே விட்டால் அவர் மீண்டும் கரிகாலனோடு கழகம் இழுப்பார். அது எக்காரணம் கொண்டும் தங்கமலரின் வாழ்வை பாதிக்க கூடாது.

ஒருமுறை மகள் மருமகன் என்று அவர்கள் வந்து போனாலோ, இல்லை இவர்கள் அங்கே சென்று வந்தாலோ, மனிதர் சற்று அடங்குவார் என்று தோன்றியது மரகதத்திற்கு.

மரகதம் கூறியதற்கு அவரால் பதில் பேச முடியவில்லை. மகனை விட மகளையே பெரிதாய் நினைத்த மனிதர்.. அதனாலே என்னவோ பொன்னரசு பிரிந்து போன போது அத்தனை வலிக்கவில்லை. வீட்டிற்கு நுழையும் போதே ‘தங்கோ’ என்ற அழைப்போடு தான் வருவார்..

ஆனால் இப்பொழுது அந்த மகள் இன்னொருவனின் வீட்டில், அதுவும் ஜென்ம எதிரியாய் எண்ணியவனை திருமணம் செய்து சென்றது அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

இதுவே இப்படி என்றால், தங்கமலர் கரிகாலனை விரும்பியதும், அவன் தன்னை முன்னிட்டே அவளை விலக்கியதும், பிறகு தன் பேச்சினாலே தங்கமலரை திருமணம் செய்தான் என்பது எல்லாம் தெரிந்தால் இவரது மனம் தாங்குமா என்ன ???

ஒன்று தங்கமலரை அடியோடு மறந்து உறவே இல்லை என்று வெட்டி விட வேண்டும், இல்லை தங்கமலரோடு சேர்த்து கரிகாலனையும் தன் உறவாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரண்டில் எதுவுமே இப்பொழுது அந்த தந்தையால் முடியாது..

ஒன்றுமே கூற முடியாமலும், எதையுமே செய்ய முடியாமலும் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். மரகதத்திற்கும் அவரை காணும் போது கவலையாய் தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய?? இப்படியே இச்சூழலை வளர்க்க முடியாதே..

“இங்க பாருய்யா, தங்கோ யாரு, நம்ம மவ.. தங்கோ தங்கோன்னு வாய் ஓயாம சொல்லுவ.. அவளுக்குன்னு நக நட்டு, துணிமணி எல்லா குருவி சேதாப்புல நீ தான வாங்கி வச்ச. கல்லாணம் செஞ்சு போன புள்ளைய அப்படியே விட முடியுமா?? நமக்கு பிடிக்காட்டினாலு மொறைன்னு ஒன்னு செஞ்சுப்புடனும்ல.. யோசிய்யா.. நல்லதா ஒரு முடிவு எடு.” என்று தன்மையாய் பேசிவிட்டு சென்றார்.

தங்கராசுவோ செய்வது அறியாது அமர்ந்திருந்தார்..

இதற்கெல்லாம் காரணமானவளோ, விளக்கேற்றி கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தாள்..

“சாமி நா வேணுமுன்னே எதுவுஞ்செய்யல.. அது ஒனக்கே தெரியு.. எங்கய்யானா எனக்கு உசுரு.. அவர மட்டு எங்கூட பேச வெச்சிடு சாமி… வேற ஒன்னு வேணா எனக்கு.. கரியன நா அசபட்டுத்தே கட்டிகிட்டே. அவே மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியாது. ஆனா நாங்க வாழ போற வாழ்க்க இனிமே நல்லாருக்கணு.. ” என்று கண்கள் மூடி வேண்டியவளின் வேண்டுதலை கடவுள் கேட்டாரோ இல்லையோ அவளது கணவன் கரிகாலன் கேட்டான்..

முன்பெல்லாம் வீட்டிற்கு வரவே பிடிக்காதவனுக்கு, இப்பொழுதெல்லாம் எப்போதடா வீட்டிற்கு செல்வது என்று இருந்தது.. இருக்காதா பின்னே, தனக்கென்று ஒருத்தி காத்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனை உவகை கொள்ள வைத்தது.

வேலை முடிந்து முன்னெல்லாம் இரவு உறங்க மட்டுமே வருபவன், இப்பொழுதெல்லாம் அடுத்த நொடியே வீட்டிற்கு நடையை கட்டிவிடுகிறேன்..

“என்ன டா கரியா விழுந்தடிச்சு ஓடுறவே.. தங்கோ புள்ள மயக்கமோ…” என்ற கேலி பேச்சுகள் எல்லாம் அவனுக்கு இனிப்பாகவே இருந்தது.

காதல் தராத மயக்கம் இந்த கல்யாணம் கொடுத்தது அவனுக்கு..

ஒரு புன்சிரிப்புடனே வீட்டிற்குள் நுழைந்தவனை தங்கமலரின் வேண்டுதலே வரவேற்றது. அதை கேட்டதும் அவன் மனம் லேசாய் வலிக்கத்தான் செய்தது.

தங்கமலர், தங்கராசு இருவருக்குள்ளும் இருக்கும் பாசம் எப்படிபட்டது என்று அவனுக்கு தெரியாதா என்ன ??

ஆனாலும் வந்தாளே, இவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக..

கண்களை இறுக மூடி திறந்தவனுக்கு இதை சரி செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது.

அவளது இழப்பை ஈடுகட்ட துடித்தது அவனுள்ளம்.

சாமி கும்பிட்டு கண்கள் திறந்தவளுக்கு கரிகாலன் கண்கள் மூடி நிற்பதே கண்ணில் பட்டது..

“இந்தா என்ன ?? வந்தது வராததுமா கண்ண மூடி தூங்குற..”

 மெல்ல கண்கள் திறந்து பார்த்தவன், அவள் தன்னையே பார்ப்பதை கண்டு, ” ம்ம்ச் ஒன்னுயில்ல புள்ள. நா ஆத்துக்கு குளிக்க போறே… ” என்று கிளம்பினான்.

“ நில்லு நில்லு.. நானு வரே..”

“நீ எதுக்கு??? ”

“ஹா ஒனக்கு முதுகு தேக்க…”

“என்ன மலரு சொல்ற???? !!!!!!” என்றான் சற்றே அதிர்ச்சியாக…

“அதுசரி ஆசைய பாரு… துணி எல்லா கெடக்கு தொவைக்கனு.. அதே..”

“ப்பூ… இம்புட்டுத்தேனா… ஹ்ம்ம் நாங்கூட என்னவோன்னு நெனச்சே… வீட்டு கொழாய்ல துணி தொவச்சா என்னவா ???”

“ஆ!! வீட்டு கொழால தொவைச்சா துணி வெழுக்காதாம்.. ம்ம்ச் நானு வரேன்னு சொல்றேன்ல. ம்ம்ஹும் ம்ம்ஹும் ” என்று சிறுபிள்ளை போல கையை காலை உதறிக்கொண்டு சிணுங்கினாள்.

“அடியே.. அடியே மலரு.. நீ வா மா தாயி… நா ஒன்னைய ஒன்னு சொல்லல.. அதுக்குன்னு இப்படில்லா சிணுங்கி தொலைக்காத என்ன ???” என்றபடியே வீட்டை பூட்டி நடந்தான்.

அவன் பின்னே அழுக்கு துணிகளை ஒரு மூட்டையாய் கட்டி தூக்கி தலையில் வைத்துக்கொண்டு அவளும் நடந்தாள்..

“ஏ நா சிணுங்குறது காண சகிக்கலையோ…”

“அந்த மூட்டைய குடு…. ”என்று வாங்கியபடியே

“சகிக்கலன்னு இல்ல…… வேணா நா சொன்னா நீ எதா சொல்லுவ… ஒங்கய்யா கிட்ட வாங்கி கட்டினது எல்லா போதாதுன்னு ஒங்கிட்ட வேற வாங்கி கட்டிகணுமா என்ன” என்று நடந்தவனை முறைத்தாள்..

“இப்ப என்னத்துக்கு டி மொறைக்கிற… ”

“என்னையவே கட்டிகிட்ட இதுல வாங்கி கட்ட மட்டும் ஒனக்கு வலிக்கிதா.. உண்மைய சொல்லு என்ன சொல்ல வந்த…..  ”

“அதெல்லா சொல்ல முடியாது… ”

“ம்ம்ச் சொல்லு கரியா…  ”

“அடி… புருசே பேரு சொல்லி கூப்புடுற…” என்று லேசாய் கண்களை உருட்டி மிரட்டினான் செல்லமாய்.

இவர்கள் இப்படியே பேசியபடி செல்ல ஆறும் வந்து சேர்ந்தது.. சிலு சிலுவென்ற மாலை நேர கூதல் காற்று தேகம் சிலிர்க்க வைத்தது..

“இங்கியாறு ரொம்ப ஆழமா எறங்காம அங்கனையே நின்னு தொவைச்சு போடு. தண்ணி ரொம்ப போகுது… ” என்றபடியே இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்தான்..

“ம்ம்ஹும் இதே ஊருளத்தே நா பொறந்து வளந்தே.. ஓ சோலிய மட்டு பாரு… ” என்றவள் அவன் நீச்சல் அடிப்பதையே பார்த்தபடி நின்றிருந்தாள்..

“ஏய் கண்ணு வெக்காத டி.. போ போயி வந்த சோலிய பாரு…” என்று தண்ணீரை அவள் மீது தெளித்துவிட்டான்..

அவள் உடலோடு சேர்ந்து மனமும் சிலிர்த்துத்தான் போனது.. இப்படியெல்லாம் கரிகாலன் தன்னுடன் பேசமாட்டானா என்று எத்தனை நாள் ஏங்கி தவித்திருப்பாள்.

“எல்லா வந்த சோலியத்தே பாக்குறோ… ” என்றபடி துவைக்க தொடங்கினாள்.

அந்தபக்காமாக கூலி முடிந்து சென்ற ஆட்கள் எல்லாம் தங்கமலர் இந்நேரம் ஆற்றுக்கு வந்து துவைப்பதை ஆச்சரியமாய் பார்த்தனர். ஏனெனில் திருமணம் முடிந்து அவளை யாரும்  இப்படி தனியே  வெளியிடங்களில் பார்க்கவில்லை.

“என்ன தங்கோ இந்நேரோ வந்திருக்கவ தொவைக்க…. ”என்று அந்தபக்கம் வந்த பொன்னக்கா கேட்க

“இப்பத்தே நல்ல நேரமுன்னு போட்டிருக்கு அதே…. ”

“அடியே ஒ வாய் மட்டு கொறையாது டி.  பாவோ கரியே… ”

“அமாமா  அப்புடித்தே சொல்லிகிட்டாக… ” என்று நொடித்தாள்..

அப்பொழுதுதான் பொன்னக்கா கவனித்தார் சற்று தள்ளி கரிகாலன் ஆற்றில் குளிப்பதை..

“ஆத்தாடி ஆத்தி.. என்ன டி புருசனு பொண்டாட்டியு சேந்து வந்திருக்கீங்க… என்னது அதிசயோ….” என்று நாடியில் கை வைக்க..

“இந்தா போவியா அங்குட்டு.. எம்புருசே கூடத்தான நா வந்தே.. இதுல என்ன அதிசயோ வேண்டி கெடக்கு.. போக்கா அங்குட்டு…. ” என்று துணியை பொன்னக்கா முன்னே வேண்டுமென்றே உதறினாள்.

“ஏய் ச்சி கழுத… ஒ சங்காத்தமே எனக்கு வேணாம்டி.. அப்புறோ ஒம்புருசனுக்கு யாரு பதில் சொல்றது….  நா கெளம்புறே  பா…” 

“கெளம்பு கெளம்பு… ” என்றவள் கரிகாலன் வரவுக்காய் காத்திருந்தாள்.

வெகு நாளைக்கு பிறகு ஆற்றுக்கு வந்தது இவளுக்கு குஷியாய் இருந்தது. ஆற்று நீரோ இவளை வா வா வந்து என்னுள் மூழ்கி குளித்து நீராடி மகிழ்ச்சிக்கொள் என்று அழைப்பது போன்றே தோன்றியது.

வானமோ கரிய நிற கம்பளி விரிக்க ஆரம்பித்திருந்தது. எப்பொழுதும் ஆற்றில் குளிக்க நேரம் காலம் எல்லாம் பார்த்தவள் இல்லைதான். ஆனாலும் இன்று கரிகாலன் எதுவும் சொல்வானோ என்று நினைத்தாள்.

ஆனாலும் கரிகாலன் சொல்வதற்கெல்லாம் பயந்தால் அவள் தங்கமலர் அல்லவே.

அவனோ முங்கு நீச்சல் அடித்தபடி இருந்தான். இப்பொழுது வருவாய் தெரியவில்லை,, இவளின் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.. வேகமாய் ஆற்றில் இறங்கி கரிகாலன் அறியாவன்னம் நீரில் விளையாடினாள்.

“யப்பா எத்தன நாளாச்சு…. ” என்றபடியே நீரை கையில் அள்ளி அள்ளி ஆனந்தம் அடைந்தாள்.

இவள் இந்தப்பக்கம் நீராட, அதையறியாத கரிகாலனோ அவள் துவைத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தான்.. சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு தங்கமலர் கண்ணிலே படவே இல்லை..

“மலரு…. ஏ புள்ள மலரு……  ” என்று சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு நெஞ்சில் பிசைய ஆரம்பித்தது..

“எங்க போனா…. மலரு… ஏ மலரு எங்க டி இருக்க… மலரு… ” என்று பதறினான்.

அவனது குரலொலி எதிர்ரொலித்தது.. அவளை பற்றி தெரிந்தும், அவளை தனியே விட்டு சென்றது தவறோ என்று தோன்றியது.

“மலரு………………………….. ”

“இந்தா வந்துட்டே… ஏ இப்புடி ஏலம் போடுற… ”  என்றபடி ஆற்றுக்குள் இருந்து எழுந்து வந்தாள்..

ஈர உடை அவள் மேனி தழுவிட, கூதல் காற்றோ அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, உதடுகள் நடுங்க, கைகளை தேய்த்தபடி நடந்து வந்தவளை விழிகள் விரித்து பார்த்து நின்றான்.

இயற்கையின் வரமாய் அமைந்த சூழல், யாரும்மில்லா தனிமை, கண்ணுக்கு குளிர்ச்சியாய் புது மனைவி, யாருக்கு தான் மனம் மயங்காது?? கரிகாலன் மட்டும் விதி விளக்கா என்ன ???

வானில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு போட்டியாய் அவளது ஒற்றைக்கல் சிறு மூக்குத்தி இவன் மூளையை மழுங்கடிக்க செய்தது.. அவளது ஒருபக்க தோளில் ஈரமாய் ஒட்டிக்கிடந்த நீள கூந்தலோ, ஒருமுறை என்னை தொட்டுத்தான் பாரேன் என்று அழைப்பது போல இருந்தது அவனுக்கு…

இதோ அருகே வந்துவிட்டாள், தங்கமலர்.. அவனது மனைவி…. அவனை மட்டுமே நம்பி வந்தவள்.. அவனையே  சுற்றி சுற்றி வந்து இறுதிவரை விட்டுகொடுக்காமல் அவனோடே தன் வாழ்கையை அமைத்துக்கொண்டவள். காண காண தெவிட்டவில்லை அவனுக்கு..

இமைகள் இமைக்க மறந்து தன் உடலில் ஈரம் வழிவதை கூட உணராமல் அவளையே கண்டபடி சிலையாய் அமர்ந்திருந்தான்…

“ஏ… என்ன பாக்குற…. நா அப்பருந்து கூப்புட்டிட்டு இருக்கே..” என்று அவனை பிடித்து உலுக்க,

“அ…. என்… என்ன புள்ள…” என்றவனது குரலோ கரகரத்தது..

“அய்யயோ என்னய்யா…. கொரலே எப்படியோ இருக்கு.. காச்ச கீச்ச அடிக்குதா என்ன ??” என்றவள் சற்றே அவனது உயரத்திற்கு எம்பி அவனது நெற்றியை தொட்டு பார்த்தாள்..

அவ்வளவு தான் லேசாய் தெளிந்தவன் முழுதாய் மயங்கித்தான் போனான்….

“மலரு……… ” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்ன சொல்வது என்றெல்லாம் ஒன்றுமே புத்தியில் இல்லை…

அவளது முகத்தையே பார்த்தபடி இருந்தவனுக்கு அவளை தன் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே மனதில் பேரொலியாய் ஒலித்தது..

“ஹே !!!! என்ன அப்புடி பாக்குற இன்னிகுத்தே புதுசா காங்குறியா என்னைய ?? வா நேரமாச்சு…..”

“ஹ்ம்ம் இனிக்கு நீ புதுசா தெரியுற புள்ள…. ” என்றவன் அவளை ஒட்டி உரசி நடக்க, அவளுக்கு இப்பொழுது தான் எதோ வித்தியாசம் புரிந்தது.

திட்டுவான் என்று வந்தவளுக்கு இவன் இப்படி திக்கு முக்காடி போய் நிற்பதை கண்டு ஒருபக்கம் சிரிப்பு வேறு, மறுபக்கம் இனம் புரியா உணர்வு வேறு.. ஆனாலும் பெண் அல்லவா ??? இப்படி வெட்டவெளியில் அவனோடு இழைய முடியுமா ??

“இந்தா கொஞ்சம் வெரசா நடக்குறியா.. மழ வேற வரும் போல…. வா வெரசா போகலாம..” என்றவள் அவனை விட்டு சற்றே முன்னே நடந்தாள்..

லேசாய் இடி இடிக்கும் சப்தம் கேட்ட பிறகே கரிகாலன் சுய உணர்வுக்கு வந்தான்..

“ச்சே கொஞ்ச நேரத்துல இப்படி கிறுக்கு புடிக்க வச்சுபுட்டாளே… சும்மாவா தங்கராசு மவ… இல்ல இல்ல… இனிமே இப்புடி சொல்லக்கூடாது.. சும்மாவா கரியே பொண்டாட்டிலன்னு சொல்லனு…. ” என்று அவனாய் பேசி சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தபோதே தங்கமலர் உடை மாற்றி, ஈர கூந்தளை தளர விட்டு நின்றிருந்தாள்..

“ஹ்ம்ம் வீடு வந்து சேர இம்புட்டு நேரமா ??? இதுத்தே நீ வேகமா வர லட்சணமா ???” என்று கேட்டவளின் தோற்றம் இன்னும் புதிதாய் அழகாய் தெரிந்தது அவனுக்கு…

ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தபடி வந்தவன் நிலையில் இடித்துக்கொண்டான். அவனது மாற்றங்கள் அவளுக்கு புரியாமல் இருக்குமா என்ன ??? ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல பேசிக்கொண்டு இருந்தாள்..

“மலரு……”

“ம்ம்…… என்ன???  ”

“ஏ புள்ள மலரு………… ”

“என்ன சொல்லு……. ”

“ம்ம்ம்….. மலரு………..  ”

“அய்யய்யே….!!!! என்னத்தே வேணு ஒனக்கு…”

“அது…. அது வந்து……. ” என்றவன் அவளுக்கு வெகு அருகில் வந்துவிட்டிருந்தான்….

இப்பொழுது இதயம் வேகமாய் துடித்து, விழிகள் விரித்து தங்கமலரின் முறையானது…

“மலரு புள்ள……. ”

“ஹ்ம்ம்…… ”

எங்கோ கேட்பது போல ஒலித்தது அவள் குரல்…

“என்…. எனக்கு……..  ”

“ஹ்ம்ம்…. ”

“ஒரு……. ”

………

பேச்சே இல்லை அவளிடம்… என்ன கூற போகிறானோ என்று ஆவலாகவும், ஆசையாகவும், வெட்கமாகவும் அவன் முகம் நோக்கியவளிடம்

“ஒரு கிளாஸ் கடுங்காப்பி போட்டு தர்றியா….. ”

பொத்தென்று ஆனது அவளுக்கு…

“இதுகுத்தே இவே இப்புடி பாத்தானா.. அட கடவுளே…. ” என்றெண்ணியவள் அவனை முறைத்தபடியே அடுப்பை நோக்கி சென்றாள்..

“அடியே பொண்டாட்டி, என்னையவா கண்டுக்காத மாதிரி நடிக்கிறவ… இருக்கு ஒனக்கு.. ” என்று  ஏண்ணியவன் ஒரு புன்சிரிப்போடு தன் பெட்டியில் எதையோ பார்த்துகொண்டு நின்றான்.

அடுப்பின் முன்னே நின்றவளுக்கு கோபம் தீயை விட சூடாய் இருந்தது..

“கூறுகெட்ட கிறுக்கே.. காப்பி கேக்குற லெட்சனத்த பாரு.. மொகற கட்ட. இவனுக்கெல்லா பொண்டாட்டி இல்லன்னு யாரு அழுதா.. ” என்று முனங்கியவள் பாத்திரங்களை போட்டு உருட்டினாள்..

“ஏய் மெல்ல டி.. எல்லா புது பாத்திரோ.. இப்புடி டம்மு டும்முனு போடுறவ..”

“எல்லா எனக்குந்தெரியு.. நீ கம்முன்னு ஒ சோலிய பாரு…”

“அப்புடியா… இரு வரே….  ” என்றவன் வேகமாய் அவளை வந்து பின்னோடு அணைத்துக்கொண்டான்..

“ஹே !!! என்ன செய்ற… தள்ளு போ…”

“நீதான சோலிய பாருன்னு சொன்னவ…. ” என்றவன் மேற்கொண்டு என்ன பேசினானோ..

அவளும் தான் என்ன பேசினாலோ, மலை நிலத்தில் மழை தன் கால் தடங்களை பதிக்க, அச்சத்ததில் அவர்கள் பேசிய காதல் மொழிகளும் நனைந்துகொண்டு இருந்தது.

வீட்டு கதவு பட படவென்று தட்டப்படும் வரை..                         

     

      

                

    

           

 

                    

Advertisement