Advertisement

மலர் – 1

“ஏலேலோ எஞ்சாமி…….

ஏத்தங்கொடு ஏத்தங்கொடு…

வெளஞ்தெல்லாம் வீடு வர

வரங்கொடு எஞ்சாமி….

கால நேரோ காங்காமா

களத்து மேட்டில் நாங்கிருக்க..

எஞ்சாமி தொணையிருக்கும்….. “      

      என்று அழகாய் பெண்கள் மெட்டெடுத்து, ராகம் போட்டு ஒரு சேர பாடிக்கொண்டே அவ்வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.. ஆசான் யாருமில்லை, ஆனாலும் ராகம் தொடுத்து படுவதில் எள்ளளவும் குறையில்லை… இயற்கை அன்னையின் மடியில் பிறந்து வளர்ந்து வரும் ஜீவன்களுக்கு அவ்வியற்கையே அனைத்தையும் கற்று கொடுத்துவிடுகிறது..

சோலையூரின் மக்களும் அப்படிதான்.. படிப்பறிவு அத்தனை இல்லையென்றாலும், இயற்கையோடு இணைந்த வாழ்வு, அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருப்பது ஏராளாம்.. சோலையூர், மேற்கு தொடர்ச்சி மலையின் எண்ணற்ற விவசாய பூமியில் ஒன்றான அழகிய ஊராட்சி மலை கிராமம்..

மேகங்கள் வந்து தொட்டு செல்ல, பச்சை பட்டாடை உடுத்திய மலைகளும் மலை முகடுகளும், வெள்ளியை உருக்கி வார்த்தது போல விழுந்தோடும் அருவிகளும், பாறைகளுக்கு நடுவே வழிந்தோடும் சிறு சிறு ஊற்றுகளும் யாருக்கு தான் பார்க்க தெவிட்டாது.. அதிலும் அங்கேயே வாழக்கூடிய மக்களுக்கு கேட்கவா வேண்டும் ??    

விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவே குடும்பங்கள் இருந்தாலும், அதில்  யாரும் பூர்வீக பழங்குடியினர் இல்லை.. விவசாய.  கூலி வேலைக்காக என்று புலம் பெயர்ந்து இப்பொழுது கோவிலூரையே பூர்விகமாய் கொண்டு வாழும் மக்கள் அவர்கள்..

ஒரு பக்கம் காப்பியும், ஏலமும், மிளகும், ஆரஞ்சும், உலவும் வெள்ளாமை செய்திருக்க, மறுபக்கம் வயல் வெளிகளை அழகாய் பாத்திக்கட்டி அடுக்கடுக்காய் வெட்டி, நெல்லும், சோளமும், இன்னும் பிற தானியங்களும் பயிரிடப்பட்டிருந்தன..

மொத்தத்தில் அறிவியலும் நாகரிகமும் மெல்ல மெல்ல எட்டி பார்த்துக்கொண்டிருக்கும் விவசாய பூபி.. அவர்களை பொறுத்தவரை தொலைக்காட்சி பெட்டியும், பட்டன் வைத்த செல் போனுமே இப்போதிய அறிவியல் சாதனங்கள்..   

ஒருசில இளவட்டங்கள் மட்டும் சீன போன்களில் பாடலை அலறவிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பார்.. பெருசுகளுக்கு பச்சை பட்டனும் சிவப்பு பட்டனுமே அத்துபடி..  

அதுவும் சிக்னல் கிடைக்க ஏதாவது ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டிருப்பர்..  யார் செய்த புண்ணியமோ ஒரே ஒரு ஊராட்சி நடுநிலை பள்ளி இரண்டு ஆசிரியர்களோடு இயங்கி வருகிறது..  

சினிமாவில் வருவதெல்லாம் என்ன பாட்டு நாங்கள் பாடுகிறோம் பாட்டு என்று வேலை பளு தெரியாமல் இருக்காத்தான் பாட்டு படித்தபடி கருது அறுத்துக்கொண்டிருந்தனர்..

வேலை ஒருபக்கம் இருக்க, பாட்டும் ஒரு பக்கம் இருக்க, பேச்சும் ஒரு பக்கம் சுவாரசியமாய் நடந்துக்கொண்டு இருந்தது.

“ஏன் டி தங்கோ, என்ன இங்கன வந்திருக்கவ, உங்கய்யனுக்கு தெரியுமா??” என்று பொன்னக்கா கேட்க,

“ஸ்ஸ்ஸ்… மெல்ல பேசுக்கா… எங்கய்யனுக்கு தெரிஞ்சா விடுமா ?? அய்யன் ஊருல இல்ல ” என்று தலை உயர்த்தாமல் வேலையில் கண்ணாய் பதில் கூறினாள் தங்கமலர்..

“அது சரித்தே. அதுவு கரியனுக்கு கூலிக்குன்னா உங்கய்யன் வானத்துக்கு பூமிக்கும்ல குதிக்கு..”

“குதிக்குமாவா???? ஆத்தி.. என்னைய வெட்டி பொலி போட்டிருக்கும். கூலிக்கு ஆள் எடுக்க அய்யன் பக்கத்து ஊருக்கு போயிருக்கு.”

“பின்ன எதுக்குடி வந்தவ ??”

“இன்னிக்கு தா சீட்டுக்கு கடசி நா க்கா… நேத்தே வாத்தியார் சம்சாராம் வந்து சொல்லிட்டு போச்சு..  அதான் அம்மா கிட்ட அத இத சொல்லிபுட்டு வந்தே..” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க

“ஏ யாரது.. நச நசன்னு பேசிட்டு… சோலிய பாக்க வந்தமா, பாத்தமான்னு இல்லாம என்ன பேச்சு வேண்டி கெடக்கு ” என்று அரட்டும் தொனியில் வந்து நின்றான் கரிகாலன்.. அனைவருக்கும் கரியன்..

கருத்த தேகம்.. சோழ மன்னன் ஆதித்த கரிகாலனின் வேடம் அப்படியே இவனுக்கு பொருந்தும்.. சிறு வயதில் இருந்து, வஞ்சகம் இல்லாமல் உண்டு, உழைத்து உரமேறிய உடம்பு..

“ஸ்.. வந்துட்டான்.. பாம்பு காது..” என்று முனுமுனுத்தபடி தலை நிமிராமல் வேலையை செய்துக்கொண்டிருந்தாள் தங்கமலர்..

“யாரது புதுசா இருக்கு.. ஏ புள்ள நிமிரு கொஞ்சம்” என்றவனின் குரல் அவளை கண்டுகொண்டதாகவே  இருந்தது.

“இந்தா சோலிய கெடுக்காம போறியா ??” என்றபடி நிமிர்ந்தாள் தங்கம்.

“ஆத்தாடி.. அதிசயமா அதிசயம், ஆனைமலை ரகசியம்…. தங்கராசு மவ இந்த கரியனுக்கு கூலிக்கு வந்திருக்கா.. என்னடா நடக்குது இங்க..” எகத்தாளமாய் பேசியவனை முறைத்து நின்றிருந்தாள் அவள்..

“என்ன மொறப்பு எல்லா பயங்கரமா இருக்கு.. ஆமா உங்கப்பனுக்கு தெரியுமா இங்கன வந்தது ?? கரியங்கிட்ட மக கூலிக்கு போனான்னு தெரிஞ்சா உங்கப்பன் கிடா மீச கீழ விழுந்திடாது…”

“இந்தா, உனக்கு தேவ சோலி, எனக்கு தேவ கூலி.. அந்தமட்டும் நில்லு.. தேவையில்லாம எங்கய்யன மருவாதி இல்லாம பேசுன இடுப்புல சொறுகிருக்க அருவாள உங்கழுத்துல சொறுகிப்புடுவேன் பாத்துக்க..” என்று அவள் எகிறிய பின்பே அவ்விடம் விட்டு நகன்றான்..

அவன் போவதையே ஒரு நொடி பார்த்தவள் மெல்ல புன்னகைத்துக்கொண்டாள்.. இருக்காதா பின்னே, கரிகாலனை பார்த்து நாட்கள் மூன்று ஆகிவிட்டதே.. அரை நாள் கூலியே அவளது சீட்டு பணத்திற்கு சரியாய் போய்விடும், ஆனாலும் முழு நாள் கரியனை அருகில் இருந்தே பார்க்கத்தானே இப்படி வெயில் காய்ந்துக்கொண்டிருக்கிறாள்..

அவளது தந்தை தங்கராசுவிற்கும் கரிகாலனுக்கும் ஆகவே ஆகாது.. ஆனால் தங்கமலருக்கு அப்படியில்லை.. கரிகாலன் என்றால் ஒரு பிரமிப்பு.. இனம் புரியா உணர்வு எல்லாம்..

“ஏன் டா கரியா  சும்மா அந்த புள்ளைய வம்பு பண்ற ” என்று ஒரு மூதாட்டி கேட்க

“ஆமா இப்ப மட்டும் பஞ்சாயத்துக்கு வருவிங்க எல்லாம்.. அவ அப்பன் என்னைய பேசும் போது எங்க போச்சு எல்லார் காதும் வாயும்” என்று லேசாய் சிடு சிடுத்தபடி அனைவரும் அறுத்து போட்டிருந்த கருதை அள்ளி குவித்து மூட்டை கட்டிக்கொண்டிருந்தான்..

அவன் சொல்வதும் நிஜம் தானே.. தங்கராசுவிற்கு கரிகாலனை கண்டால் எப்படித்தான் இருக்குமோ.. அவனை காணும் நேரமெல்லாம் ஏதாவது சண்டை தான் நிகழும்.. தங்கராசு பிறந்து வளர்ந்ததே சோலையூரில் தான். ஆனால் கரியனின் குடும்பம் கூலிக்கு வந்து இங்கேயே நிலைத்துவிட்டது..

கரிகாலனின் வயதில் தங்கராசு தான் பெரிய கங்காணி. சீசன் நேரங்களில் எங்கிருந்து தான் கூலிக்கு ஆட்களை படி( சமையல் பொருட்கள்) போட்டு கூட்டி  வருவாரோ தெரியாது.. கூலிக்கு என்றால் அவரது சொந்த தோட்டத்திற்கு அல்ல, தாங்கள் கங்காணியாய்  வேலையில் இருக்கும் முதலாளிகள் பூமிக்கு தான் வேலைக்கு ஆள் கூட்டி வருவர். 

கையகல பூமி அவருக்கும் சொந்தமாய் இருக்க, அதற்கேற்ற வேலை திறனும் இருக்க சோலையூரில் பெரிய கங்காணி என்ற பெருமை அவருக்கு.. அதனால் தானோ என்னவோ தன் பாட்டியோடு பதினைந்து வயதில் கூலிக்கென்று வந்த கரிகாலனை கண்டால் சற்றே இளப்பமாய் இருந்தது போல..

ஆனால் கரிகாலனும் வேலையில் சளைத்தவன் அல்ல.. கிடைத்த வேலையை முகம் சுளிக்காமல் சுறுசுறுப்பாய் செய்வதில் அவனை விஞ்ச ஆள் இல்லை.. முதலில் கரிகாலன் கூலிக்கு சென்றதே தங்கராசுவிடம் தான்.. அதட்டி உருட்டி வேலை வாங்குவார்..

பத்து வருடங்கள் உருண்டோட, தங்கராசுவின் குடும்ப பிரச்சனை காரணமாக வேலையில் கவனம் சிதற, சற்றே அவரது தொழில் பாதித்தது. அதே நேரம் கரிகாலன் தன் விடா முயற்ச்சியாலும், நிலத்தின் மீதிருந்த நேசத்தாலும் படி படியாய் உயர்ந்து இன்று அவனும் சோலையூரின் பெயர் பெற்ற கங்காணி, கணக்குபிள்ளை..

இதெல்லாம் பார்த்து தங்கராசுவிற்கு மனதில் அவ்வளவு காட்டம்.. ஏதோ இவன் வந்ததால் தான் தொழில் பாதித்துவிட்டதாய் எண்ணினார்.. அதன் விளைவே அவனை காணும் போதெல்லாம் ஏச்சும் பேச்சும் சண்டையும்..

ஆனால் தங்கமலருக்கு அப்படியில்லை.. கரியனை காணும் போதெல்லாம் புன்னகை தான்.. வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள் அவ்வளவே..

வேலை முடிந்து அனைவரும் வரிசையாய் நின்று சம்பள பணத்தை வாங்கிக்கொண்டிருக்க, தங்கத்தின் முறை வரவும் வேண்டுமென்றே வேறு எதுவோ வேலை இருப்பது போல் பாசாங்கு காட்டினான் கரிகாலன்..

“இந்தா, இப்ப கூலிய குடுக்கிறியா இல்லியா ?? நேரமாகுது…”

“அடேங்கப்பா.. என்ன பேச்செல்லாம் பச்சமல வர கேக்கும் போல.. ஆள் அரைக்காபடி இருந்துட்டு சத்தம் மட்டும் எட்டூருக்கு.. ம்ம்.. சும்மாவா தங்கராசு ரெத்தம்ல. ” என்றபடி அவளது சம்பள பணத்தை நீட்டினான்..

வெடுக்கென்று அவனிடம் இருந்து பறித்தவள், திரும்பியும் பாராமல் விடு விடுவென்று நடக்க தொடங்கினாள்..

“பாத்து… பாத்து… பூமி பெளந்திட போது…  ” என்றவனின் குரல் காற்றோடு தேய்ந்து மறைந்தது..

“ஏ.. தங்கோ.. நில்லுடி.. என்ன இம்புட்டு வெரசா பொரவ.. ஏ நில்லு புள்ள ” என்றபடி ஓட்டமும் நடையுமாய் வந்தார் பொன்னக்கா..    

“என்னக்கா, நானே எங்கய்யன் வரக்குள்ள வீடு போயி சேரணும்னு போறே.. நீ வேற…” என்று லேசாய் சலித்தபடி பொன்னக்காவோடு நடையை எட்டி போட்டாள்..

“அதுக்கில்ல டி தங்கோ, வயசு புள்ள தனியா போற.. மசங்குற நேரம் அதா…“

“என்ன அதா, காத்து கருப்பு வந்து அண்டிருமாக்கும்… ஹ்ம்ம் இம்புட்டு நேரம் அந்த காத்து கருப்பு கிட்ட தா சோலி பாத்தோம்” என்று நக்கல் பேசியபடி நடக்க  பொன்னக்காளின் வீட்டு வளைவு வர,

“யக்கா நீ போ நான் வாத்தியார் வீட்டுக்கு போயி சீட்டு காச  குடுத்துட்டு வீட்டுக்கு போறே” என்று தங்கம் கூறவும்

“சரி புள்ள பாத்து போ.. பெராக்கு பாத்துகிட்டே போகாத.. இருட்டகுள்ள வீடு போயி சேறு.. ” என்று நூறு எச்சரிக்கை கொடுத்தபடி தன் வீட்டை நோக்கி நடந்தார்..

சிலு சிலுவென்று மாலை நேரக்காற்று தேகம் தழுவ, உழைத்து வேர்த்திருந்த உடலுக்கு அக்காற்று அத்தனை இதமாய் இருந்தது.. பகலவன் மறைய இன்னும் நேரம் இருந்தாலும், இப்பொழுதே மேகங்கள் எல்லாம் கரும் போர்வை போர்த்த தொடங்கியிருந்தன.. பச்சை நிறங்கள் எல்லாம்  சற்றே சாம்பல் நிறமாய் தெரிய தொடங்கியிருந்தன..

ஆனாலும் தன் பார்வையை சுற்றிலும் திருப்பி வேடிக்கை பார்த்தும், மனதினுள் ரசித்தும் நடந்துக்கொண்டிருந்தாள் தங்கமலர்..  சாலையோர பூக்களின் வாசம், சிறு சிறு பூச்சிகளின் ரீங்காரமும் அலுக்கவே அலுக்காது அவளுக்கு..           

“ஹ்ம்ம்… நல்ல வேள.. அய்யன் வரதுக்குள்ள வீடு போயி சேந்துடுவே” என்று கையில் இருந்த பணத்தை கணக்கிட்டபடி எதையோ யோசித்துக்கொண்டே நடந்தவளை

“ஏ தங்கோ… ” என்று குரல் அதிர்ந்து நிற்க வைத்தது…

“அய்யய்யோ….. ”

“ஏ புள்ள தங்கோ..” என்றபடி தோளில் போட்டிருந்த துண்டை உதறியபடி வேகமாய் நடந்து வந்தார் தங்கராசு.

கண்களை மூடி அவளுக்கு தெரிந்த அத்தனை கடவுளின் பெயர்களையும் உருப்போட்டு பின் மெல்ல விழிகள் திறந்தாள்..

“கூப்டுட்டே இருக்கே என்ன கனா காங்குறவ ??” என்றார் லேசான அரட்டல் தொனியில்.

“அய்யா…. நீ.. நீங்க எப்ப வந்திங்க??” என்று கேட்டவளுக்கு வியர்த்து வழிந்தது..

“நா கடசி பஸ்ஸுக்கு வந்தே புள்ள.. ஆமா நீ என்ன இங்கன நிக்க?? கரிகும்ன்னு வருது என்ன பண்ணிட்டு இருக்கவ இங்க??” என்றவர் மகளை ஒரு பார்வை பார்த்து

“என்ன புள்ள யாருக்கு கூலிக்கு போய்ட்டு வந்த??? ”

“அது.. அது.. அதுய்யா..”

“அடடா… இப்ப நா என்ன கேட்டுபுட்டே… சரி சரி வா வீட்டுக்கு போலா..”

“இல்லய்யா நீங்க முன்ன போங்க.. நா வாத்தியார் வீட்டுக்கு போயி சீட்டு காசு குடுக்கனு..”

“ஹ்ம்ம் இந்த சீட்டு காசுக்காக கூலிக்கு போனியா ??? கூறுகெட்ட புள்ள.. என்ட கேட்டா குடுக்க போறே.. இந்தா பிடி… அந்த காச நீ செலவுக்கு வச்சிக்க.. ” என்று பணத்தை நீட்டிய தந்தை காண அவளுக்குள் அத்தனை பெருமிதம்..

அத்தனை வசதி இல்லை தான்.. ஆனாலும் மகள் கேட்டால் எதுவும் செய்வார்.. அவரை பொருத்தமட்டில் தங்கமலர் தான் அவருக்கு எல்லாம்.. ஆனால் இதுவரைக்கும் தங்கமலர் அது வேண்டும் இது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை.

“அட என்ன புள்ள முழிச்சிட்டு நிக்கிறவ ?? வா வா நானு வாறே சீட்டு பணத்த கொடுத்துபுட்டு போலா.. உங்கம்மா வாசல்லயே உக்காந்துட்டு இருப்பா..”

“ம்ம் சரி.. ” என்றபடி தன் தந்தையோடு வாத்தியாரின் வீடு நோக்கி நடந்தாள்..

இரண்டு வளைவுகள் தாண்டினால் அந்த வாத்தியாரின் வீடு.. ஒட்டு வீடே என்றாலும் இவர்களுக்கெல்லாம் அவ்வீட்டை காணும் போது சிறிது ஏக்கமாய் தான் இருக்கும்.. அதுவும் அக்கால கல் கட்டிடம் சொல்லவா வேண்டும்.. 

“வெரசா உள்ள போயி கொடுத்துபுட்டு ஓடியா… ” என்று கூறியவர் அவ்வீட்டின் வாசல் படியை துண்டால் இரு தட்டு தட்டி அமர்ந்துக்கொண்டார்..

உள்ள சென்றவள் இரண்டொரு நொடியில் வெளியே வந்தாள் யோசனை படிந்த முகத்தோடு..

மீண்டும் எதுவோ பேசியபடி அவர் நடக்க, இவளோ பலத்த யோசனையோடு நடந்தாள்..

மகள் மௌனமாய் வருவதை கண்டவர்

“என்ன புள்ள ?? என்ன ரோசனை ??” என்க

“ஹ்ம்ம் ஒன்னு இல்லய்யா… ”   

“அட சும்மா சொல்லு புள்ள, யாரு எதா வம்பு பண்ணாங்களா ?? சொல்லு புள்ள, அந்த கரியே எதுவு சீண்டுறானா?? சொல்லு தங்கோ அவன ஒருவழி செஞ்சிப்புடுறேன்… “என்று கோவமாய் கேட்டவரை

“ஐயோ !! அய்யா அதெல்லா இல்ல.. அந்த வாத்தியாரு சம்சாரம் இருக்குல ”

“ஆமா.. ”

“அது அவங்க வீட்டு வேலைக்கு கூப்டுது.. கூலி எம்புட்டுனாலு குடுக்குதாம்.. பாக்குரப்பலா இதையே சொல்லி உசுர வாங்குது..”

“அட இதுக்குதேனா இம்புட்டு ரோசன பண்ண ??? ”

“இல்லய்யா சும்மா சும்மா இதவே கேட்டுக்கிட்டு இருக்கு அதே… ”

“பிடிக்காட்டி சட்டுன்னு முடியாதுன்னு சொல்லிபுட்டு அடுத்த சோலிய பாக்கணும் புள்ள, அதவிட்டுபுட்டு ஏன் முகத்த தூக்க…. வா… வா… காட்டு வேலைக்கு போறது வேற, வீட்டு வேலைக்கு போறது வேற…” என்றபடி மகளை அழைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார்..

“ஹ்ம்ம் போனா போடா எடம்… வந்தா வந்த எடம்…. பொட்ட புள்ள கோழி கூவ போனவ பொழுது சாய வார.. ஏன்னு நானு கேக்ககூடாது, இந்த மனுசனும் கேக்காது” என்று முனங்கியபடியே அவர்களுக்கு பருக கடுங்காப்பியில் வெல்லம் தட்டி போட்டு கொடுத்தார் மரகதம்…

“யம்மா… வந்தது பாடாத… சொல்லிட்டு தான போனே.. இப்ப என்னத்துக்கு அலுக்குற.. ” என்றவள் ஒரே மடக்கில் காப்பியை குடித்துவிட்டு “நா போயி ஆத்துல குளிச்சிட்டு வரே..” என்று ஓடிவிட்டாள்..

“ ஏ நில்லு டி…. தூத்த விழுது… ஏ புள்ள நில்லு” என்று கத்திய மரகதத்தின் வசவை கேட்க அவள் அங்கு இல்லை…

“ஆடுகாலி… ஒரு எடத்துல நிக்கிறதில்ல…  இருவது வயசு ஆவுது… ஒருத்தே கையில பிடிச்சி குடுத்தாத்தே எனக்கு நிம்மதி ” என்றவர் கணவர் குளிக்க சுடு நீர் காய்ச்சினார்..

“ஏ மரகதோ.. சும்மா நை நைன்னு… எல்லா நடக்கவேண்டிய நேரத்துல நடக்கு..” என்றபடி போய் வந்த கணக்கை ஒரு நோட்டில் எழுத தொடங்கினார்..

தங்கராசின் வீடு, வீட்டை சுற்றி சிறு தோட்டமும் அவர்களுக்கு சொந்தாமனது.. தகர வீடே என்றாலும் தன் வீடல்லவா, சொந்த வீடு வைத்திருப்பதில் அவருக்கு ஒரு பெருமை.. இவர்கள் வீட்டின் பின்னே ஒரு சிறு ஓடை ஒன்று ஓடும்.. ஓடை வழியே சிறிது தூரம் நடந்தால் ஆறு வந்துவிடும்..

காலை, மாலை வேளைகளில் ஆற்றில் மூழ்கி எழுந்தால் தான் தங்கத்திற்கு ஒரு திருப்தியே இருக்கும்…

“யப்பா… இன்னு செத்த நேரோ அங்க இருந்தே அய்யன் மறுபடி யாருக்கு கூலிக்கு போனன்னு கேட்ருக்கும்…” என்று எண்ணியவளுக்கு  தண்ணீரின்  ஜில்லிப்பு உடலை ஊசியாய் குத்தினாலும் முங்கி முங்கி எழுந்தாள்…

“இதுல இருக்க சோகமே தனி…. ” என்றவள் வெறும் கையை வைத்தே முகத்தை கை கால்களை எல்லாம் தேய்த்து குளிக்க நேரம் கடந்தது தெரியவில்லை அவளுக்கு..

தூரத்தில் அவர்கள் வீட்டில் எரியும் சிறு பல்பின் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது..

நடந்து போகும் தூரம் தான் என்றாலும் இருட்ட தொடங்கிவிட்ட வனாந்திரத்தில், பழகிய இடமே என்றாலும் யாருக்குமே பயம் இருக்கும் தானே…

“போச்சு…. போச்சு… இனி இதுக்கு வசவு தா ” என்றபடி கண்கள் கூர்மையாக்கி இருட்டை விழிகளுக்கு பழக்கப்படுதிக்கொண்டு வேகமாய் எட்டுகளை போட்டாள்..

பின்னே யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க அவளது இதயம் நின்று துடித்தது..

“ஊஊ….” என்ற சத்தமோ அவளை இன்னும் பயம்கொள்ள வைத்தது..

“யா… யாரு…  ” என்று கேட்டபடி மீண்டும் நடக்க தொடங்கினாள்..

சிறிது நேரம் மௌனம்…

மீண்டும் நடை சத்தமும்… “ஊ ஊ ” என்ற ஒலியும்..

“யா… யாருன்னு கேக்குறேல…” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை

“ஒருவேள தூக்கு மாட்டி செத்த பழனியோ…. அய்யோ.. இவே பிடிச்ச நாட்டுகோழி கொழம்புல கேப்பான்…” என்று பயந்துவளுக்கு மிக அருகில் ஆள் வரும் சப்தம் கேட்டு வேகமாய் திரும்பினாள்

கையில் ஒரு பெரிய டார்ச் லைட்டை வைத்து கரிகாலன் வந்து கொண்டிருந்தான்..

“ஏய்.. யாரது.. நாத்து மேல நடக்கிறது…” என்று கேட்டபடி டார்ச்சை அவள் முகத்தை நோக்கி வெளிச்சம் அடிக்கவும்  கண்கள் கூசி முகத்தை சுளித்து நின்றிருந்தாள்.. ஆனாலும் மனதில் ஒரு நிம்மதி..

“ஏ கிறுக்கி… அறிவிருக்கா, நாத்து பேடு மேல நடக்க ?? கூறுகெட்டவ…” என்றபடி அவளது கையை பிடித்து இழுக்காத குறையாய்  தள்ளி நிறுத்தினான்..

ஏற்கனவே ஆற்று நீரில் குளித்து, பயத்தில் வேறு சில்லிட்டு இருந்த அவளது உடலுக்கு அவனது சூடான கரங்கள் புது தெம்பை கொடுத்தது..

“ஏய் உன்ன தா.. என்ன இப்படி நிக்கிறவ?? ”

“அது… அது…. குளிக்க வந்தே….”

“குளிக்க வந்தியா ?? அறிவிருக்கா உனக்கு?? அதுசரி உங்கப்பனுக்கே அது இல்ல.. பெறகெப்புடி உனக்கிருக்கு…” என்றபடி அவளை தாண்டி சென்றான்..

“இந்தா நில்லு ” என்றவள் வேகமாய் அவனிடம் வந்து நின்றாள்..

“என்ன ???”

“என்னைய எங்க வீட்டு வர விட்டு போ ”

“ஏதேது… நானு… உன்னைய… வீட்டு வர… போ.. போ வேறாள பாரு.. அதுக்கு உங்கப்பன்  ஊர கூட்டவா…” என்றவன் முன்னே நடக்க

“இந்தா பயமா இருக்குன்னு தானே சொல்றே..” என்றவள் அவன் பின்னாடியே நடந்தாள்..

அவளை திட்டியபடியே வந்தவனோ அவன் பாட்டில் நடக்க, அவளோ அவன் என்ன சொன்னாலும் வீடு போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை..

வீட்டை நெருங்கும் போதே மரகத்தின் பேச்சு குரல் கேட்டது..

“வரட்டு.. கரண்டிய காச்சி கால்ல நாலு இழு இழுக்குறே.. எம்புட்டு நேரோ.. வயசுக்கு வந்தவ மாதிரியா இருக்கா.. ஆடுகாலி.. ” என்று இன்னும் சில பல வசை மொழிகள் கேட்க

“போ போ நல்ல விருந்துதே உனக்கு இன்னிக்கு” என்று மேலும் அவளை கடுப்பேற்றினான் கரிகாலன்..

“நீ முத ஓ வீட்ட பாத்து போ.. இம்புட்டு தூரோ நா தொணைக்கு வந்த மாதிரி யாரு வரமாட்டாங்க” என்று நடந்ததை அப்படியே திருப்பிவிட்டாள்..                   

“எல்லா என் நேரம் டி… உங்கூட வந்தே பாரு.. என்னைய சொல்லனு..” என்றவன் அவளது தலையை ஒரு தட்டு தட்டிவிட்டு சென்றான்..

சிறு வயதில் ஒன்றாய் விளையாடும் போது இப்படிதான் செய்வான்..

ஆனால் அவனோடு விளையாடுவதை கண்டாலோ தங்கராசு நெருப்பு துண்டை மிதித்தது போல் குதி குதியென குதிப்பார்.. சிறு வயதில் அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை..

ஆனால் இப்பொழுது, அன்று ஒன்றுமில்லை என்று எண்ணியது எல்லாம் பூதாகாரமாய் வந்து நின்றது..

இவனை எப்படியாவது ஒழித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு..

அவன் தட்டி சென்றதும் பழைய நியாபகங்களில் உறைந்து நின்றவளின் முதுகில் பளீரென்ற அடி ஒன்று விழுந்தது…

“ஆ… அய்யோ.. யம்மா….”

“அம்மா தான் டி… அம்மா.. எம்புட்டு நேரோ… பாத்தா கனா கண்டு நிக்கிற.. ”

“இல்லம்மா…. இருட்டிடுச்சு…. வழி தெரியல….” என்றவளின் காதை நன்றாய் திருகினார் மரகதம்..

“தெனமும் இதத்தேன சொல்லுறே…. மசங்கின பின்ன ஆத்துக்கு போகாதன்னு.. கேக்குறியா… கொழுப்பெடுத்தவளே… வா வீட்டுக்கு ” என்று காதை பிடித்தே இழுத்து சென்றார்..           

                         

 

             

 

  

                              

Advertisement