Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 54
 
இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார்.
அஷோக்கின் மனது அவனைக் கேட்காமலே கடல் பச்சை கண்ணில் லயிக்க… கைப்பேசியில் கண் நிறங்கள் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடல் பச்சை, தேன், நீலம், கருப்பு, சாம்பல், ஊதா, பழுப்பு… இத்தனை நிறங்களில் விழி என்பது வியப்பாயிருக்க… அதைப் பற்றி இன்னும் படிக்க ஆரம்பித்தான். எலிசபத் டெயிலர் கண்களில் அவன் கவனம் நிலைத்தது. அப்படி ஒரு அழகு.. ஊதா நிறக்கண்கள்!
ஆனால் அதை விட அழகு கண் ஒன்று வந்து அவனை வருட… அதன் நினைவில் தூங்கிப்போனான்.
‘காலை வெயில் மண்டை பிளக்க… மரத்தடியில் பதியம் வைத்த செடியை பராமரித்துக் கொண்டிருந்தவன் கண்ணில் விழுந்தாள் ஒரு பெண். தாவணி அணிந்திருந்தாள். அதிலும் வெகு மார்டனாய் இருந்தாள். முகம் தெரியவில்லை. அவன் வீட்டுக்குள் அனுமதி இல்லாமலே நுழைந்தாள். பின்னோடு இவனும் சென்றான். ‘ஹாய்’ என்றான். அந்த தாவணி பெண் பயந்துவிட்டாள் போலும் கீழே விழப் போக இவன் தாங்கி பிடித்துக் கொண்டான். அவள் கூந்தல் மட்டுமே அவன் கையை வருடியது. முகத்திலும் கழுத்திலும் முத்து முத்தாய் வியர்வை துளிகள். பயத்தில் கடிக்கப் பெற்றிருந்த கீழ் உதடும், இழுத்து மூடிய கண்களும், நெற்றி வியர்வையில் ஒட்டி இருந்த முடியும் அவளை ரசனையாய் பார்க்கச் செய்தது. அவள்  முகத்தில் தான் எத்தனை உணர்வு கலவைகள். முகத்தை ஆர்வத்தோடு மட்டும் தான் பார்த்தான். அவள் வேல்விழி திறக்கவும் சட்டென்று ஒரு முறை இதயம் நின்று துடித்தது!’ 
முகத்தில் வியர்வை அரும்ப எழுந்து அமர்ந்துவிட்டான் அஷோக். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அறை இருட்டாயிருக்க… அந்த ஊதா கண்ணழகியைத் தேடியது கண்கள். கண்களாலேயே அவனைச் சுண்டி இழுத்து சொக்க வைத்த கூந்தல் அழகி எங்கே…?
வெயில் இல்லை.. தாவணி பெண்ணில்லை… அறை இருட்டு! கனவா? கனவில் நிறம் தெரியுமா? அவளை உணர்ந்தானே.. இடை வரை நீண்ட கூந்தல் பட்டு போல் இருந்ததே.. அதில் மல்லி மணம் நாசியை துளைத்ததே.. அழகாய் இருந்தாள். முகத்திலிருந்த வியர்வை முத்துகள் கூட துல்லியமாய் தெரிந்ததே.. கண்டிப்பாய் கனவில்லை… பின் இது என்ன? விடையில்லை அவனிடம்.
யார் அவள்? அஷோக்கிற்கு அவளைத் தெரியவில்லை. முன்பின் பார்த்தது இல்லை.
குழப்பமாய் போனது அவனுக்கு. பெண்ணை உணர்ந்தான்.  மணத்தை நுகர்ந்தான். அவளில் மயங்கி இதயம் துடித்ததும் உண்மை. இது புதிது!
என்ன? என்ன இது? யாரிவள்?
கண்களைப் பற்றிப் படித்துவிட்டுப் படுத்ததினால் வந்ததா? இருக்கலாம்.. இவள் கண்ணும் ஊதா தானே.. தன்னையே சமாதானம் செய்துகொண்டான்.
சுதாவின் கண்களில் ஆழ்ந்துவிடவே.. அஷோக்கின் சிதறிய நினைவலைகளில் அவனின் அன்றிலின் பிம்பம்… ஆனால் அவனால் அதை உணர முடியவில்லை.
இன்றைய மொட்டை அடித்து.. மெலிந்து.. பாதி முகம் மட்டுமே தெரிந்த சுதாவிற்கும் அவனின் சுதாவிற்கும் ஒரு பொருத்தமும் இல்லை. எதிலுமே இருவரும் ஒத்து போகும் நிலையில் இல்லை. அதனால் அவளோடு அந்த பெண்ணை அவன் இணைத்துப் பார்க்கக் கூட இல்லை.
அவனுக்கு அவன் அன்றிலின் பிம்பம் தெரிந்தும் தெரியவில்லை.
குழப்பமாய், புது வித கனவென்று படுத்துவிட்டான்.
வாரங்கள் நகர.. கனவில் வந்த பெண்ணை மறந்தும்விட்டான்.
சுதாவிற்கு செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. அது முகத்திற்கான ப்ளாஸ்டிக் சர்ஜரி. காயங்களெல்லாம் ஆறிக் கொண்டிருந்தாலும் உடல் முழுவதும் கட்டுகளோடும் இன்னும் எகிப்து மம்மி போல் தான் இருந்தாள். என்ன ஒன்று.. கட்டுகள் சிறியதாய் மாறியிருந்தது. 
கண்ணை உருட்டுவதோடு ஒரு பக்கமாய் விரிந்த புன்னகை வர ஆரம்பித்திருந்தது. பாட்டிக்கு காச்சல். சுசிலா தான் வருவதாய் இருக்க, அவரால் வர முடியவில்லை. கண்ணன் வந்திருந்தான். அவள் கண்மூடி கிடந்தாள்.
என்ன செய்வதென முழித்தான். பத்து நிமிடத்திற்கு மேல் இந்த அறையில் அவன் இருந்ததே இல்லை. அவளைப் பார்த்தால் ஏனோ அவன் நிலையில் அவன் இல்லாதது போன்ற உணர்வு. தள்ளி இருக்க முடிவெடுத்திருந்தான். கண்டிப்பாய் அவன் கண்ணைப் பார்க்கவே கூடாது என்ற அதி முக்கிய முடிவும் அதில் அடக்கம். நித்தமும் அவள் விழி அவனை வதைத்தது. அவள் மேல் ஒரு ஈர்ப்பு.. மனம் அவள் மேல் பாய்ந்துவிடுமோ என்ற பயம் வர ஆரம்பித்திருந்தது. “அவள் என் ஃப்ரெண்ட்..” நூறு முறை சொல்லிக்கொண்டான். எல்லாவற்றிலும் புத்தி கூர்மை அதிகம்… நினைவாற்றலும் அதிகம், நான்கு மாதமாய் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான் இந்த ஒற்றை வரியை  இருந்தும், இன்னும் அது அவன் சின்ன மூளையில் ஏறவில்லை.
எல்லா கட்டுப்பாட்டையும் மீறி ஏனோ பார்வை அவள் பக்கம் திரும்பியது. அவளருகில் வந்தான். கட்டுகளை எல்லாம் பார்த்தான். அவள் உடல் தேறி வரும் நாட்களை மனம் கணக்கிட்டது!! ‘மிஞ்சிப் போனால் ஆறு வாரம்.. தேறிவிடுவாள்.’
அவனால் அல்லவா அவளுக்கு இந்த வேதனை? மனம் ஏகமாய் வருந்தியது.  ‘எல்லாம் என்னால்’ நொந்து போவதால் யாருக்கு என்ன பயன்?
அவளருகில் போட்டிருந்த நாற்காலியில் சத்தமில்லாமல் இன்னும் அருகில் போட்டு அமர்ந்தான்.
அவள் வலது கையை அவன் இரு கைக்குள்ளும் அடக்கி வைத்துக் கொள்ள, அவன் மனதுக்கும் அது இதமாகவே இருந்தது. அவள் அருகாமை அவன் உள்ள குமுறலை வெளி கொண்டுவர தனாய் புலம்பினான். “நான் கொஞ்சம் பார்த்து கார் ஓட்டியிருந்தா இன்னைக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது! எத்தன தடவ ஸாரி கேட்டாலும் பத்தாது.. வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல சுதா…” மனம் கசந்து வேதனையைத் தூங்கிக் கொண்டிருந்தவளிடம் ஊற்றினான். மெத்தையில் தலை சாய்ந்தவன் எப்பொழுது கண்ணயர்ந்தானோ தெரியவில்லை.
வெகு நேரமாய் கைகள் அசைவற்றிருக்கவே சுதா கண் திறந்தாள். எத்தனை நாளாய் அவனுக்காகக் காத்திருந்தாள். வருடக் கணக்காய் அவனைப் பிரிந்தது போலத் துடித்த இதயம் இன்று அவனை அருகாமையில் கண்டதும், வெயில் பட்ட பனியாய் கரைந்தது! தலையைத் திருப்ப முடியவில்லை. வலியை பொறுத்துக்கொண்டு மெதுவாய் கொஞ்சமேனும் திருப்பி, கண் குளிர அவனைப் பார்த்தவண்ணம் அவன் கைகளை அவளால் இயன்ற மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டாள். இனி அவனைப் பிரிவதில்லை என்ற எண்ணமோ? எல்லா வித உணர்ச்சிகளும் அவளுள் எழுந்து அவள் கண்கள் வரை முட்டி நின்றது!
அவள் அசைவு அவனை எழுப்ப, அவள் முகம்.. அவள் சுவாசக் காற்று அவனை வருட.. நெகிழ்ந்த இருவரின் நெஞ்சும் அடைத்தது. அவள் உள்ள மகிழ்ச்சி கண்ணீராய் வெளிப்படப் பதறிப் போய் எழுந்து, “சுதா.. என்ன ஆச்சு? வலிக்குதா? நர்ஸ்ச கூப்பிடவா?”
எங்கே கையை விலக்கிவிடுவானோ என நினைத்தவள் பிடியை இறுக்கிக் கொண்டாள். அவள் பிடித்திருந்த கையை விலக்க மனம் வராமல், மேதுவாய் வலக்கையால் அவள் கண்களைத் துடைத்தான்.
“நர்ஸ்ச கூப்பிடவா?”
புன்னகையோடு ‘வேண்டாம்’ என்பது போல் சிறிதாய் தலை அசைத்தாள்.
அவள் கண்ணுக்கும், புன்முறுவலுக்கும் தான் எத்தனை காந்த சக்தி..! அவள் கண்கள் அவன் கண் வழியாய் அவன் உள்ளத்தைத் தொட்டதோ.. தலைக்கிறங்கி மதிமயங்கி நின்றான்.
“ஹாய்” என்றாள் என்றும் போல் காற்று வந்தது. காதை அருகில் வைத்துக் கேட்டால் அவள் பேசுவது கொஞ்சமாய் கேட்கும்.
“ஷ்.. சுதா.. பேச ட்ரை பண்ணாத.. தொண்டை டேமேஜ் ஆகிடும்.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ சரி ஆகிடும். ரெண்டு வாரத்தில தெரப்பி ஆரம்பிச்சிடுவாங்களாம்.. அப்பரம் நீ பேசலாம்.. சரியா?”
அவனோடு ஆயிரம் வார்த்தைகள் பேச மனம் விம்மியது.. தொண்டை ஒத்துழைக்க மருத்தது! புன்னகை மட்டுமே பஞ்சமில்லாமல் வந்தது! அதுவும் அளவான புன்னகை மட்டுமே.
ஏனோ அவள் புன்னகை அவன் கண்ணைக் கரித்தது. ஆண் அல்லவா.. அதை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டான்.
அவள் கைகளை மெல்லத் தட்டிக் கொடுத்தான். அவன் இடது கையை அவள் விடவில்லை.. அவனும் அதை விடுவிக்க விரும்பவில்லை.
அவளோடு பதில் எதிர்பார்க்காமல் பேசினான். அவன் பேச்சுக்கு அவள் கண் விரிவதும் சுருங்குவதும், உதடு நெளிவதும், அவ்வப்போது கதை கேட்கும் ஆவலில் அவன் கையில் அவள் அழுத்தம் தருவதும் பேசும் ஆவலை அதிகப் படுத்தியது.
அவ்வப்பொழுது அவளும் பேசினாள்… மென்மையான சத்தத்தோடு.. காற்று தான் வந்தது. அவள் உதட்டருகில் காதை கொண்டு செல்ல பயம்… அவள் உதடு உரைந்தால்… அவள் மூச்சுக் காற்று பட்டால்.. அவனால் அவனாய் இருக்கத் தான் முடியுமா? தோழியிடம் தவறான எண்ணம் கூடாதே…
நர்ஸ் சூப் கொண்டு வந்தாள். காயில்லாமல் தண்ணீர் மட்டும். “நான் கொடுக்கறேன்..” என்று வாங்கிக் கொண்டான்.
“ஊட்டட்டுமா?” வாஞ்சையாய் முகம் பார்த்தான்.
பொறுமையாய் ஊட்ட.. அவளும் ஆசையாய் குடித்தாள். குழந்தை போல் அரை தேக்கரண்டி வீதம்..
சின்னதாய் மல்லி தழை இதழ் ஓரம் ஒட்டிக் கொள்ள, அவன் விரல் வைத்து அதை எடுக்க… அவன் எடுப்பான் என்று எதிர் பார்க்காமல் அவள் நாக்கை வைத்து எடுக்க முற்பட.. அவள் நாவின் உஷ்ணம் அவன் விரலில்.. அவள் உதட்டின் மென்மையும் ஒன்று சேர.. ஏதோ சுறுக்கென்றது தலையில். மின்சாரம் பாய்ந்த உணர்வு.
ஏதோ அவர்களுக்குள் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்று மனம் அடித்துச் சொன்னது. கேட்டுவிட உதடு துடித்தது. என்னவென்று கேட்பது? நமக்குள் என்ன உறவென்றா? தப்பாய் விடுமே? அப்படியே கேட்டாலும்.. அவள் எப்படி பதில் கூறுவாள்? இது சமயம் அல்ல என்பதால் வாய் திறக்கவில்லை,
அடிக்கடி நர்ஸ் வந்தும் சென்றும் கொண்டிருந்தாள். மருந்து, நீராகாரம் என்று அவ்வப்பொழுது ஏதோ கொடுத்துக்கொண்டே இருந்தாள். 
அவளுக்குத் தூக்கம் தேவை என நர்ஸ் சொல்லிவிட்டு போனாள். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். வீட்டில் விளக்கணைத்தபின் கைப்பேசியை போர்வைக்கடியில் வைத்து திருட்டுத்தனமாய் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் உள்ளத்தின் வெற்றிடம் நிரம்புவது போல் தோன்றியது. அவனை அறியாமலே ஏதோ ஒரு நிறைவு!
அவன் பேசக் கொஞ்சம் சிரித்தாள்.. கண் விரித்து ஆச்சரியப் பட்டாள்… அவனுக்குள் தேனில் வழுக்கிய வண்டாய் இறங்கினாள். சுதாவின் ஒவ்வொரு முகபாவத்திலும் கிறங்கிப் போனான். 
அவளின் ஒவ்வொரு அசைவெனும் மெலிதான பட்டு இழைக்கொண்டு அவனையறியாமலே காதலை அவன் இதயத்தில் நெய்திருந்தாள்.
முன்ஜென்ம பந்தமாயிருக்குமோ.. இல்லை என்றால் முகம் கூட ஒழுங்காய் தெரியாத பெண் மேல் ஈர்ப்பு வருமா என்ன? வரும் என்றது மனது. ஒருவரை பிடித்துப்போக முக அழகு தேவை இல்லை போலும்! ஏனோ தீபக் இன்று அவள் காதலனால் தோன்றவில்லை. கேட்டுவிட மனம் துடித்தது.
அடக்க முடியாமல் கேட்டு விட்டான். ஆம் அவனுக்குத் தெரிந்தே ஆகவேண்டி இருக்க.. கேட்டே விட்டான்.
“அன்னைக்கு உன்ன பாக்க உன் சொந்தக்காரன் வந்திருந்தானே… தீபக்! அவனுக்கு நீன்னா, ரொம்பப் பிடிக்குமோ?”
‘இது என்ன கேள்வி’ என்ற எண்ணம் வந்தாலும்… ‘ஆம்’ என்பது போல் கண்ணசைத்தாள்.
கொஞ்சம் தயக்கம் அவனுக்குள் இருந்தாலும் அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டான்.
“உனக்கு அவனை இஷ்டமா?”
‘நீ என்ன பைத்தியமா?’ என்று முறைக்க
“அப்போ… உங்களுக்குள்ள ஒன்னும் இல்லை தானே?”
கண்டிப்பாய் ஏதோ சரி இல்லை… என்ன அது? ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறான். ‘டேய்… நீ தானே டா என் புருஷன்… உனக்குத் தெரியாத என்னை?’ கத்தியிருப்பாள் முடிந்தால்.
“ஏ..ன் இப்..படி பே..சரீ..ங்க…” திக்கி திணறிக் கேட்டும் விட்டாள்.
கண்ணில் வலி…
“அச்சோ… பேசாத சுதா… பார் கண்ணெல்லாம் தண்ணி..” என்றவன் அவளின் குழப்பத்தைத் தீர்க்க வாய் திறந்தான். அந்தோ பரிதாபம்.. அது அவள் தலையில் பாரங்கல்லாய் இறங்கியது.
“நீ என் ஃப்ரெண்டா?”
“?”
“வெங்கட் சொன்னான்..”
என்ன பேசுகிறான் என்று பார்த்தாள்.
“ரொம்ப க்ளோஸ்சா நாமா? சேர்ந்தே சுத்துவோமாம்… சொன்னான்”
“…???”
“எப்படி நீ எனக்கு க்ளோஸ் ஆனனு தெரியல. பொதுவா எனக்கு பொண்ணுங்க நட்பில நாட்டம் இல்ல. நீ ரொம்ப ஸ்பெஷல்லா இருப்பனு நினைக்குறேன்.. அது தான் உன் கூட க்ளோஸ் ஆகி இருக்கேன். அம்மாக்கும் உன்னை ரொம்ப பிடிக்குமாமே.. சரி.. அத விடு, நீ தான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா, உனக்கு என்னைப் பத்தி.. என்னைச் சுத்தி நடந்ததைப் பத்தி தெரியுமில்ல?”
அவள் விழிக்க..
“நீ என் ஃப்ரெண்ட் தானே அப்போ உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சு இருக்குமே.. என் வாழ்கையில கொஞ்ச மாசமா நடந்தது உனக்கு தெரிஞ்சிருக்குமே… உடம்பு சரி ஆனதும் எனக்கு நீ சொல்லணும் சரியா?” என்றான் ஆசையாய்.
அவள் முகம் மாற..
“ஆக்ஸிடென்ட்-ல எனக்குக் கொஞ்ச மாசம் நடந்த எதுவுமே நினைவில இல்ல… வெளியில யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.. அப்படியே மெய்டெய்ன் பண்ணு. வெளில தெரிஞ்சா பெரிய பிசினஸ் மேனுக்கு சுயநினைவு இல்லேனு மானத்தை வாங்கிடுவானுங்க கொட்டை எழுத்தில. உன் நிலமை தேவல சுதா… சரி ஆகிடுவ. நம்பிக்கை இருக்கு! ஆனா நான் தான் சீக்கிரம் லூசாகிடுவேனு நினைக்கறேன். எதையோ ரொம்ப முக்கியமானதை மாறந்திட்ட மாதரி மனச போட்டு அரிக்குது… சட்டையை  கிழுச்சுகிட்டு சுத்தாம இருந்தா சரி! நீ கூட எனக்கு யாருனே தெரியலை.. வெங்கட் தான் சொன்னான்.. நீ என் ஃப்ரெண்டுனு..” அவன் பேசிக்கொண்டே போக அவளுக்கு மயக்கம் வரும் நிலை.
இதயம் நின்று விடவா என்றது… கண்ணை இருட்டிக்கொண்டே வர ஆரம்பித்தது.
உடல் தசைகள் இறுக.. உடல் முழுவதும் வலி பரவ… பேச்சும் மறந்து போனது. வாழ்க்கையே இருண்டு போனது. என் கணவன் என்னை மறப்பதா? என் கண்ணனுக்கு என்னைத் தெரியவில்லையா? அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியவில்லை.
நர்ஸ் ஒரு வழியாய் இருவரையும் பிரித்துவிட்டாள்.
ஆறு மாதம் கண்ணனோடு ஒரு முறை வாழ்ந்தாள். நான்கு மாதமாய் அதே வாழ்வை நூறாயிரம் முறை வாழ்ந்துவிட்டாள். இன்று அந்த வாழ்வு அவள் கணவனுக்கு மறந்து விட்டதாம்!
யாரிடம் சென்று அவள் மனகுமுறலை முறையிடுவாள்? அவள் உணர்வை புரிந்த தோழன் இருந்திருந்தால் மடி சாய்ந்திருப்பாள்… அவனும் இல்லையே..
‘மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி, பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி ..’
விபத்தில் உயிரை விடவில்லை. போக இருந்த உயிரைப் போராடிப் பிடித்து வைத்தாள் ஒருவனுக்காக… அவனுக்கு அவளைத் தெரியவில்லை.  இன்னும் போராட உடலில் வலிமை இல்லை! உள்ளத்தில்?

Advertisement