Advertisement

சுடும் நிலவு


அத்தியாயம் – 7

பவித்ரா அன்று அருகில் இருந்த கடைக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு மூன்றாம் மாதம் என்பதால்…. தன் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, குழந்தைக்குத் தேவையான சில சாமான்கள் வாங்க வந்திருந்தாள்.

அப்போது எதிரே மார்த்தாண்டம் வந்தான். அவளைப் பார்த்ததும் வழிமறித்து நின்று அவன் பேச…. வேறுவழியில்லாமல் பவித்ராவும் நின்றாள்.

நம்ம பவித்ராவா இது? குழந்தை பெத்த பிறகு இன்னும் அழகாயிட்ட போ…”

அவன் சொன்னதற்குப் பவித்ரா பதில் சொல்லாமல் நிற்க… “உன் வீட்டுக்கார் இப்ப அடிக்கடி வர்ற மாதிரி தெரியுதுஎல்லாம் நான் அன்னைக்குக் கேத வீட்ல பார்த்து கேட்ட பிறகுதான்.”

ஆனாநீ எதுக்கும் உஷாரா இருந்துக்கோ பவிஇந்த மாதிரி ஆளையெல்லாம் நம்பக் கூடாது. உன் அழகுக்கு உன்னை ராணி மாதிரி பார்த்துக்க வேண்டாமா…. உன் அருமை அவனுக்குத் தெரியலை…. இதே நானா இருந்தேன்னு வச்சுக்கோஉன்னை எல்லாம் தரையில நடக்க விடுவேனா….” என அவன் மறைமுகமாகக் குறிப்பு கொடுக்க….
அதைப் புரிந்து கொண்டவளோ பதில் சொல்லாமல் எதோ யோசிக்கும் பாவனையில் நின்றாள்.

என்ன பவி யோசிக்கிற? மார்த்தாண்டம் ஆர்வமாக அவளைப் பார்க்க

இல்லைஇன்னைக்குத் தான் இந்தச் செருப்பு புதுசா வாங்கினேன். அதுக்குள்ள அதை உபயோகிக்க வேலை வந்திடுச்சேன்னு நினைச்சேன். நீ என்ன நினைக்கிற?”
 
அவள் தன் காலைப் பார்த்துக் கொண்டு சாதுவாகக் கேட்க…. மார்த்தாண்டம் அவளை முறைத்தபடி அங்கிருந்து சென்றான். பவித்ரா மிகவும் கோபமாக வீட்டுக்குள் நுழைய, கனகா என்னவென்று கேட்கவும், மார்த்தாண்டம் பேசியதை சொல்லிவிட்டாள்.

புருஷன் வீட்ல இல்லாம அம்மா வீட்லயே இருந்தாகண்டவனும் கண்ட பேச்சுப் பேசத்தான் செய்வான். உன் பையனுக்கும் மூன்னு மாசம் முடியப்போகுது…. இனி நீ உன் வீட்டுக்கு கிளம்பும் வழியப் பாரு பவி.” என்றார்.

அன்று மாலை பவித்ராவே தன் கணவனை அழைத்தாள். அவளே அழைத்ததும், பிரபாகருக்குச் சந்தோஷத்திற்குப் பதில் கவலையே வந்தது.

என்ன பவி? நீ நல்லா தான இருக்க? குழந்தைக்கு ஒன்னும் இல்லையே?”

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கோம். ஏன் இப்படிக் கேட்கிறீங்க?”

இல்லை நீயே போன் பண்ணி இருக்கியேன்னு கேட்டேன். சரி எதுக்குப் போன் பண்ண?”

எங்களை இங்க இருந்து கூட்டிட்டு போற ஐடியா எதுவும் இருக்கா? இல்லையா? அதைக் கேட்கத்தான் போன் பண்ணேன்.”

நான் உன்னை அன்னைக்கே கூப்பிட்டேன். நீதான் பிறகு வரேன்னு சொன்ன…. சரி சொல்லு…. எப்ப கூப்பிட வரட்டும்? நாளைக்கு வரட்டுமா…”

இருங்க அம்மாவை கேட்கிறேன்.” என்றவள், செல்லை கையில் வைத்துக் கொண்டே கனகாவிடம் பேசினாள்.

அம்மா, நாளைக்கு வரட்டுமான்னு கேட்கிறாங்க.”

நாளைக்கு ஆஸ்பத்திரி போறோமே பவி. அடுத்த வாரத்தில ஒரு நல்ல நாள் பார்த்து வர சொல்லு.”
கனகா பேசியது பிரபாகருக்கு தெளிவாகக் கேட்டது. “நீங்க அடுத்த வராம் வருவீங்களாம்.” என்றாள் பவித்ரா.

சரிஆனா நாளைக்கு எதுக்கு ஹாஸ்பிடல் போற?” பிரபாகர் கேட்கபவித்ரா என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அடுத்தக் குழந்தை உடனே உண்டாகி விடக் கூடாது. இரண்டு வருடங்களாவது செல்ல வேண்டும். உடனே கருவுற்றாள் அவள் உடல் நலத்தைப் பாதிக்கும் என்று கனகாதான் கருத்தடை சாதனம் பொறுத்த, அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு இருந்தார்.

பவித்ரா வேண்டாம் என மறுக்கஅதற்கும் வீட்டில் தாயிக்கும் மகளுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. கனகா தான் சென்னைக்குப் போகும் முன் இந்த வேலையும் முடித்து விட வேண்டும் என நினைத்தார்.

சும்மாதான் செக்கப்.” எனப் பவித்ரா மழுப்ப….

சரி நான் உங்க அம்மாவையே கேட்டுகிறேன்.” என்றான் பிரபாகர்.

இதைப் போய்த் தன் அம்மாவிடம் கேட்பானா என நினைத்தவள்ஐயோ ! அடுத்தக் குழந்தை உடனே வேண்டாம்ன்னு தான்காரணம் சொல்லியாச்சு, இப்ப சந்தோஷமா…” சத்தமாக ஆரம்பித்துக் கிசுகிசுப்பாகப் பவித்ரா முடிக்க…. அந்தப் பக்கம் பிரபாகரின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

ஒருவருஷம் இருக்கும் இல்ல…” அவன் உல்லாசமாகக் கேட்க….

எது?” என்றாள் பவித்ரா புரியாதது போல….

அது நீ இங்க வந்த பிறகு நேர்லையே தெரிஞ்சிக்கோ…” என்றான்.

எத்தனையைத் தான் நேரில் தெரிந்து கொள்வது என நினைத்தவள்எனக்கு எதுவும் தெரிஞ்சிக்க வேண்டாம். நான் ஒன்னும் சந்தோஷமா எல்லாம் அங்க வரலை….எங்க அம்மா தான் போ போன்னு துரத்துறாங்க. ரோஷமா வர மாட்டேன்னு சொல்லஎன்கிட்டே என்ன இருக்கு? சொந்த வீடு கூட இல்லை….” பவித்ரா மூச்சு விடாமல் பொரிய….

ஹே உனக்கு என்னடி குறைச்சல்? சிவகாசியிலேயே பெரிய
குடும்பத்தில வாக்கப்பட்டிருக்க…. எத்தனை கம்பெனி, பெரிய வீடு, காரு எல்லாம் வச்சிக்கிட்டு, என்ன இருக்குன்னு கேட்கிற பார்த்தியாஇது நியாயமா?”

ம்ம்அப்படியா ! அது என்னோட வீடா இருந்தாஅங்க இருந்து ஏன் என்னை அனுப்பினீங்க?” பவித்ரா கேட்க…. பிரபாகரிடம் பதில் இல்லை….. அவள் கேட்பது நியாயம் தானே…. கண்களில் கண்ணீரோடு பவித்ரா போன்னை வைத்தாள். பிரபாகரும் வருத்தமாகத்தான் இருந்தான்.

தங்கையைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு, அப்படியே தன் அம்மாவை அழைத்துக்கொண்டு செல்ல தாமரை அவள் கணவருடன் வந்திருந்தாள்.

பவித்ரா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த தாமரைஇப்ப என்னதான்டி உனக்குப் பிரச்சனை?” எனக் கேட்டே விட்டாள்.

அம்மாவை நீ உன்னோட கூடிட்டு போய்டுவஅப்ப நான் எப்படி அம்மாவை பார்க்கிறது?”

பவித்ராவின் வருத்தம் மற்றவர்களுக்குப் புரிந்தே இருந்தது. “அம்மா இங்க இருந்தா தனியா இருக்கணும். அங்க எங்க கூட இருப்பாங்க. ஏன் நீ எங்க வீட்டுக்கு வரமாட்டியா?” தாமரை சொல்ல….

வருஷத்துக்கு ரெண்டு தடவை அத்தை இங்க வீட்டுக்கு வருவாங்க பவி. அப்ப நீ வந்து அவங்களோட இரு…. அதனாலதான் இந்த வீட்டை வாடைக்கு விடலை சரியா…” சரண் சொல்லபவித்ரா அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

நீங்க வீட்டை வாடகைக்கு விடப்போறதா அன்னைக்குத் தாமரை சொன்னா….” பவித்ரா கேட்கஅவளைப் பார்த்துச் சரண் புன்னகைத்தான்.
நான் அப்படித்தான் பவித்ரா முதல்ல நினைச்சேன். ஏன்னா நாங்க சென்னையில வாங்கின வீட்டுக்கு வேற லோன் கட்டனும். இதுல இருந்து வாடகை வந்தா உதவியா இருக்கும்ன்னு நினைச்சேன்.”

ஆனா உன் வீட்டுகாரர் போன் பண்ணி வீட்டை என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டார். நான் வாடகைக்கு விடப்போறேன்னு சொன்னதும், இல்லை வேண்டாம், அத்தை வந்து போக இருக்க வீடு வேணும்ன்னு சொல்லிட்டார்.”

வீட்டையும் அவரே வாங்கிக்றேன்னு சொல்லிட்டார். வீடு இப்போதைக்கு அத்தை பேர்லையே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டார்.”

எங்களுக்கும் மொத்தமா பணம் வந்தா நல்லதுதான். லோன் அடைச்சிட்டு நிம்மதியா இருப்போம்.”

சரண் சொன்னதும், “உனக்கு இப்ப சந்தோஷமா…” எனத் தாமாரை கேட்க…. பவித்ரா நிம்மதியாகப் புன்னகைத்தாள்.

தான் அன்று அப்படிப் பேசியதால்தான் இப்படியொரு முடிவெடுத்தானோ என நினைத்தவள், அதைத் தன் கணவனிடம் போன்னில் கேட்கவும் செய்தாள்.

அதுவும் ஒரு காரணம். ஆனா முக்கியமா உங்க அம்மாவுக்காகத்தான். அவங்களுக்குன்னு ஒரு வீடு இருக்கணும் பவி. உங்க அக்கா வீட்டோட ஒத்து வரலைன்னாஅவங்க எங்க போவாங்க.”

அவன் சொன்னதை நினைத்துதான் பவித்ராவும் மனதிற்குள் தவித்துக்கொண்டு இருந்தாள். அவளும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறாள். அவளாலும் தன் அம்மாவை உடன் வைத்துக்கொள்ள முடியாது.

இருந்தாலும், என்னால உங்களுக்கு நிறையச் செலவு…. ஒழுங்கா வேலை கேட்டு வந்த போது வேலையே கொடுத்திருக்கலாம்.” பவித்ரா கேலியாகச் சொல்ல…..
நீ அதை விடவே மாட்டியாநாளைக்குக் காலையில சீக்கிரமா கார் வந்திடும். நீங்க எல்லாம் அதுல கிளம்பி வந்திடுங்க.” என்றுவிட்டுப் போன்னை வைத்தான்.

மறுநாள் குழந்தையைத் தொட்டிலில் போட்டு பெயர் சூட்டும் விழாவை, சிவகாசியில் இருந்த ஒரு மண்டபத்தில் நடத்த பிரபாகர் ஏற்பாடு செய்திருந்தான்.

பவித்ராவிற்கு வளைக்காப்பு செய்யாததால்…. அவள் கர்ப்பமாக இருந்ததே அவர்கள் உறவினர்களுக்குத் தெரியாது. அதனால் பெயர் சூட்டும் விழாவை சிறப்பாகச் செய்து விட நினைத்தான்.

காலை உணவை சீக்கிரம் முடித்துக் கொண்டு பவித்ரா வீட்டினர் அனைவரும் காரில் கிளம்பினர். முதலில் நேராக வீட்டிற்குச் சென்றனர்.

பவித்ராவுக்கு அங்கே செல்லவே தயக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் கார் சத்தம் கேட்டதும், பிரபாகர் வாயிலுக்கே வந்து வரவேற்றான்.

பவித்ராவிடம் இருந்து தன் மகனை வாங்கியவன், அவர்கள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல…. திலகாவும் வந்து அவர்களை வரவேற்றார்.

இவர்கள் எல்லோரும் ஹாலில் இருந்த போது, சித்ரா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து தந்தார். அவரைப் பார்த்ததும் புன்னகைத்த பவித்ரா அவரிடம் பேச செல்ல….

பவித்ரா, நீ இனி இங்க தான் இருக்கப் போறபிறகு பேசிக்கலாம். இப்ப டைம் ஆகுது. போய்ப் புடவை மாத்து.” பிரபாகர் சொல்ல… ,

ஆமாம் பவித்ரா விருந்தாளிங்க வர்றதுக்குள்ள நாம மண்டபத்தில இருக்கணும். நீ போய்க் கிளம்பு.” என்று சித்ராவும் சொல்லசரியென்று பவித்ரா அவர்கள் அறைக்குச் சென்றாள்.

ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த தங்கள் திருமணப் புடவையையும், நகைகளையும் எடுத்து அணிந்தவள், தன் ஒப்பனையை ஒருமுறை சரிபார்த்துவிட்டு வெளியே வந்தாள்
அப்போது சரியாக வசந்த்ராவும் தர்ஷினியும் வந்தனர். பவித்ரா அவர்களை பார்த்து வரவேற்பாக புன்னகைத்துவாங்க….” என்றதற்கு,
ம்ம்…” என்று மட்டும் சொன்ன வசுந்தரா, பிரபாகர் கையில் வைத்திருந்த அவன் மகனை எட்டி பார்த்தார்
அவனே அவரிடம் குழந்தையை கொடுப்பான் என எதிர்பார்த்தார். ஆனால் அவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க வராத கோபம் பிரபாகருக்கு
பவித்ரா, இவனுக்கு வாங்கின புது டிரஸ், நகை எல்லாம் போட்டு தூக்கிட்டு வாஎன தன் மனைவியிடம் குழந்தையை கொடுத்து அவன் அனுப்பவசுந்தராவுக்கு முகம் சுருங்கி விட்டது. அதைக்கட்டிக் கொள்ளாமல் மாடிக்குச் சென்றார்.
குழந்தையை தயார் செய்ய அறைக்கு சென்ற பவித்ரா…. அப்படியே அவனுக்கு பாலும் கொடுத்துவிட்டு வந்தாள்அவள் வந்ததும், முதலில் அவர்களைக் காரில் மண்டபத்திற்குச் பிரபாகர் அனுப்பிவைத்தான். அவர்களோடு திலகாவும் சென்றார்

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த பிரபாகர்என்ன சித்தி அவங்க யாரும் வராங்களா இல்லையா?” எனக் கேட்கசித்ரா தெரியாது எனத் தோளை குலுக்கினார்.

மாடிப்படியின் கீழே நின்றுசித்தப்பாநாங்க முன்னாடி போறோம். நீங்க பின்னாடி வாங்க.” என அவன் குரல் கொடுக்க….. “சரி பிரபாகர்….” எனச் சிதம்பரம் பதிலுக்குக் குரல் கொடுத்தார்.

அப்போது வசுந்தரா மேலே இருந்து இறங்கி வரஅவரோடு தர்ஷினியும் இறங்கி வந்தாள்.

என்ன பிரபா எல்லோரும் கிளம்பி போயாச்சு போல….” என அவர் தெரியாதது போலக் கேட்க….

ம்ம்ஆமாம்.” என்று மட்டும் பிரபாகர் சொன்னான்.

நீ யாழினி வீட்டை விழாவுக்குக் கூப்பிடலைன்னு உன் சித்திக்குக் கோபம். நீ ஒரு போன்லையாவது கூப்பிட்டு இருக்கலாம்.” என்றதற்கு, பிரபாகர் எந்தப் பதிலும் சொல்லவில்லை….ஆனால் அவன் முகம் இறுகியது.

சித்தி, ரெடியாபோகலாமா…” பிரபாகர் சித்ராவை பார்த்து கேட்க…. அவர் சரிஎன்றதும், அவரைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு பறந்து விட்டான்.

பிரபாகர் செல்வதை மேலிருந்து பார்த்த தேவி, கீழே இறங்கி வந்து வசுந்தராவிடம்என்ன சொன்னான்?” எனக் கேட்க….

பதிலே சொல்லலை முறைச்சிட்டு போறான்.” என்றார் அவர்.

பார்த்தீங்களா உங்க அண்ணன் பையன் திமிரைஎன் பொண்ணைக் கூப்பிடாத விழாவுக்கு நானும் வர மாட்டேன்.” தேவி முறுக்கிக்கொள்ள….

சரி வரலைன்னா இரு. நான் மட்டும் போய்த் தலையைக் காட்டிட்டு வரேன்.” என்று சிதம்பரம் சொல்ல….

அப்பா நானும் உங்களோட வரேன்.” என்ற காமினியை நன்றாக முதுகில் சாத்திய தேவிஅண்ணின்னு அவ கூடப் பேசின….. உன் காலை உடைச்சிடுவேன். அவ உன்னையும் உங்க அக்கா மாதிரி ஓடிப்போக வச்சிடுவா…” என்றவர்,

உங்களுக்காகவாவது அவன் யாழினி வீட்டை கூப்பிட்டு இருக்கணும். அவன் உங்களை மதிக்கலைநீங்க மட்டும் ஏன் போறீங்க?” சிதம்பரத்தையும் குழப்பி விடஇவர் பேச்சை கேட்டு அவரும் போகாமல் இருந்து விட…. வசுத்ராவும் தர்ஷினியும் கிளம்பினர்.

விழா நல்லபடியாக நடந்தது. நல்லநேரம் முடிய இருந்த கடைசி நொடி வரை, தன் சித்தப்பா குடும்பத்திற்காகக் காத்திருந்துவிட்டே…. பிரபாகர் தன் மகனுக்குத் தன் தந்தையின் பெயர் வரும்படி ஸ்ரீராம் எனப் பெயர் சூட்டினான்.

விழாவுக்கு வந்த உறவினர்கள் அனைவரும், ஏன் சிதம்பரம் குடும்பம் வரவில்லை எனக் கேட்க…. பிரபாகர் எதோ சொல்லி சமாளிக்கதன் கணவனைப் பார்க்கவே பவித்ராவுக்குச் சங்கடமாக இருந்தது.

பிறகு அவர்களே, பொண்ணு வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிகிட்டா இல்லைஅதுதான் வரலை போல எனப் பதிலும் சொல்லிக்கொண்டனர்.

வசுந்தராவும் தர்ஷினியும் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தபடி உட்கார்ந்து இருந்தனர். சித்ராவின் கணவர் சோமசேகர் விழா நேரத்திற்குதான் வந்தார். அவரும் மிகவும் மெலிந்து போய் இருக்கபவித்ரா காரணம் தெரியாமல் குழம்பினாள்.

குழந்தைக்குப் பெயர் சூட்டி முடித்ததும், அவளே சென்று அவரிடம் குழந்தையைக் காட்டிநல்லா இருக்கீங்களா மாமா….” எனக் கேட்டதற்கு,
நல்லா இருக்கேன்.” என்றவர், பதிலுக்கு அவள் எப்படி இருக்கிறாள் என எதுவும் கேட்கவில்லைகுழந்தையை மட்டும் வாங்கிப் பார்த்தார். பிறகு சித்ராவிடம் குழந்தையைக் கொடுக்கபவித்ராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

பிரபாகர் பார்த்துக்கொண்டே இருந்திருப்பான் போல… “பவித்ரா உங்க வீட்டு ஆளுங்களை எல்லாம் சாப்பிட அனுப்பு.” என அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றான்.

அவர்கள் அருகில் வந்த சுதாகரிடம் கடை பையன்கிட்ட வீட்ல இருக்கிறவங்களுக்குப் பிரியாணி கொடுத்து அனுப்பு.” என்றான்.

மதியம் அசைவ விருந்து உண்டுவிட்டு உறவினர்கள் கிளம்பும் வரை அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தனர். கனகாவும் தாமரையோடு கிளம்பினார். இன்று இரவு பேருந்தில் சென்னை செல்கிறார்கள்.

கிளம்புவதற்கு முன் தன் மகளைத் தனியே அழைத்துக்கொண்டு சென்ற கனகாபவித்ரா எந்தப் பிரச்சனைனாலும் மாப்பிள்ளை கிட்ட கேட்டு முடிவு பண்ணு. நீயா எதுவும் செய்யாத…. அவர் ரொம்ப நல்ல மாதிரி.” என்றார்.

பவித்ராவும் சரி என்றவள்அம்மா உங்ககிட்ட இந்த வளையலை கொடுக்கச் சொன்னார்.” என்றபோது, கனகா அதை வாங்க மறுத்துவிட்டார்.

வேண்டாம் உன் புருஷன் ஏற்கனவே நிறையச் செஞ்சிட்டார். எனக்கு இருக்க ஒரு வீடு வேணும்ன்னு நினைச்சார் பாருஎனக்கு அதே போதும். பேங்க்ல இருக்கிற பணத்தில வர்ற வட்டியை உங்க அக்காகிட்ட கொடுத்து நான் நிம்மதியா சாப்டிட்டு இருப்பேன்.”

மேலும் மேலும் அவரைக் கஷ்ட்டபடுத்தக் கூடாது. நீ இனியாவது உன் புருஷனோட ஒழுங்கா குடும்பம் நடத்து.” என்றுவிட்டு சென்றார்.

வீடு திரும்பும் போதுபவித்ரா ஒரு முடிவு எடுத்திருந்தாள். அவளை வேண்டாம் என்று நினைப்பவர்கள் யாரும், இனி தனக்கும் வேண்டாம். இனி தானாகச் சென்று யாரிடமும் பேசுவதில்லை என முடிவு செய்தாள்.

Advertisement