Advertisement

சுடும் நிலவு

அத்தியாயம் – 5

பிரபாகர் வீடு வந்து சேர மணி மூன்றுஆகிவிட்டது. வாயில் மணி அடித்தவன், எட்டி பார்த்த திலகாவிடம்துண்டு எடுத்திட்டு வாங்கஎன்றபடி, வீட்டை சுற்றிக்கொண்டு பின்வாயிலுக்குச் சென்றான். அங்கிருந்த குளியல் அறையில் சென்று குளித்தவன், தன் அம்மா எடுத்து வைத்திருந்த துண்டை சுற்றிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.

நேராகத் தன் அறைக்குச் சென்று உடை மாற்றியவன், அப்படியே கட்டிலில் படுத்து விட்டான். எதிரில் இருந்த சுவரில் அவர்களுடைய திருமணப்படம். அதையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.

பிரபா சாப்பிட வாதிலகா அழைத்ததும் எழுந்து சென்றான்.

அவனுக்கு உணவு பரிமாறியவர், அவன் எதாவது சொல்வானா என்று பார்த்திருக்க…. பிரபாகர் எதோ யோசனையிலேயே இருந்தான். அவனுக்குத் தட்டில் என்ன இருக்கிறது என்றாவது தெரியுமா என்று தெரியவில்லை….

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராஎன்ன பிரபா ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்க…. பிரபாகர் மெளனமாக இருந்தான்.

அங்க பவித்ராவை பார்த்தியா பிரபாகர்சித்ரா சரியாகக் கேட்டுவிட….

ஆமாம் சித்தி.என்றான்.

பவித்ராவை பார்த்தியா அவளை உன்னோட கூடிட்டு வந்திருக்கலாம் இல்லையா நான் எத்தனை தடவை சொல்லிட்டேன். அவளை இங்க கூடிட்டு வான்னுஎனத் திலகா பதற்றமாகப் பேச…. பிரபாகர் அமைதியாக இருந்தான்.

அப்போது சிதம்பரமும் தேவியும் வந்தனர். திலகா முகத்தில் இருந்த பரபரப்பை கவனித்த தேவி, வசுந்தராவை கேள்வியாகப் பார்க்கபோன இடத்தில பவித்ராவை பார்த்தான் போல…. அதுதான் பிரபா மனசு சரியில்லாம இருக்கு…. இதுக்குத்தான் சிதம்பரத்தை போகச் சொன்னேன்.

பவித்ராவை பார்த்ததால்தான் பிரபாகர் எதோ மனவருத்தத்தில் இருப்பது போல் வசுந்தரா பேச…. சித்ராவுக்குக் கோபமாக வந்தது.

பிரபா, இன்னும் நீ பவித்ரா மேல கோபமா இருக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை அவளைப் போய் இங்க கூடிட்டு வர்ற வழியைப் பாருஎன்றார்.

திலகாவும், வசுந்தராவும் தேவியைப் பார்க்கஎன்னை ஏன் பார்கறீங்க? நான் அவளை வீட்டை விட்டு போகவும் சொல்லலை…. அவளை இங்க கூடிட்டு வராதீங்கன்னும் சொல்லலைஉங்க இஷ்ட்டம், எண்ணப் பண்ணணுமோ பண்ணுங்க?” என அவர் பட்டும் படாமல் பதில் சொன்னார்.

இப்போது இப்படிப் பேசும் தேவிதான், அன்றுஎன் பொண்ணு வாழ்க்கையவே நாசமாக்கினவ….என் பொண்ணு மேல அபாண்டமா பழி போட்ட இவ இருக்கிற வீட்ல, நான் இனி ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்.என ஆடியவர், அதற்குச் சிதம்பரமும் ஒத்து ஊதினார்.

எங்கே தன் அப்பா கட்டிக்காத்த குடும்ப ஒற்றுமை, தன் மனைவியால் பறிபோய்விடுமோ என அஞ்சித்தான் பிரபாகர் பவித்ராவை அவள் அன்னை வீட்டுக்கு அனுப்பும் முடிவை எடுத்தான்.

அன்று அவனுமே அவளிடம் மிகுந்த கோபம் கொண்டிருந்தான். அதில் அவளிடம் கடுமையாகப் பேசியும் இருந்தான்.

பிரபாவுக்கு விருப்பம் இல்லைனா அவனை ஏன் வற்புறுத்தணும்? ஏன் தப்பு செஞ்சவ அவதான அவளே வந்து மன்னிப்பு கேட்டா ஆகாதா…. அவளே வராத போது.. நாம ஏன் போகணும்?” வசுந்தரா மறைமுகமாகப் பிரபாகரை தூண்டி விட…. அது சித்ராவுக்கு நன்றாகப் புரிந்தது.

பிரபாகருக்கும் பவித்ராவுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை யாழினியே இங்க வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாச்சு அப்புறம் ஏன் பவித்ரா மட்டும் அங்க இருக்கணும்?” சித்ரா கேட்க

அப்ப நாங்க எங்க பொண்ணை வீட்ல சேர்த்தது தப்புன்னு சொல்றியா உனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா அந்தக் கஷ்ட்டம் என்னன்னு தெரிஞ்சிருக்கும். நீ பையனை பெத்த திமிர்ல பேசுறஎன்றார் தேவி.

இப்படி ஆளுக்கு ஒன்று பேச திலகா தன் மகனின் முகத்தையே கவலையாகப் பார்க்கஅவ இப்ப நிறை மாசம் கர்ப்பமா இருக்காஎன்றான் பிரபாகர்.

குழந்தை என்றதும் திலகா மகிழ்ச்சியாகத் தன் மகனை பார்க்க சித்ராவும் சந்தோஷப்பட்டார்.

பார்த்தியா குழந்தை உண்டானதை கூடச் சொல்லலையே…. பிரபாவுக்கு எப்படி வருத்தமா இருந்திருக்கும்.என்றார் வசுந்தரா.

அவள் சொல்லத்தான் வந்தாள். அவளை அவள் அம்மா வீட்டில் விடச் சென்ற போது…. காரில் ஏறியதும், “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனுங்கஎனப் பவித்ரா கண்ணீருடன் சொன்ன போது….

நீ பேசிப் பேசி எல்லோரையும் எப்படி ஏமாத்துவேன்னு எங்க எல்லோருக்கும் தெரியும். நான் எதையும் கேட்க விரும்பலை பேசாம வா இல்லைனா, காரை கொண்டு போய் இப்படியே எங்கையாவது மோதிடுவேன்.என மிரட்டியவன் அவன்தான்.

அதற்குப் பிறகும் அவள் பலமுறை செல்லில் அழைத்த போது பிரபாகர் எடுக்கவே இல்லை அதன்பிறகு பவித்ராவும் அவனை அழைப்பதை நிறுத்திக்கொண்டாள்.

பிரபாகர் என்ன முடிவு எடுக்கணுமோ எடுத்துக்கட்டும். நான் எதிலேயும் தலையிட மாட்டேன்.என்றார் சிதம்பரம்.

அம்மா, நாளைக்கு நாம ரெண்டு பேரும் போய் அவளை இங்க கூப்பிட்டு வரலாம்.என்ற பிரபாகர், மேலும் பேச்சை தொடராமல் எழுந்து கையைக் கழுவிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

மறுநாள் மதியம் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு பிரபாகரும், திலகாவும் மம்சாபுரம் கிளம்பி சென்றனர். செல்லும் வழியில் பழங்கள் இனிப்புகள் எல்லாம் வாங்கிக்கொண்டே சென்றனர்.

அவர்கள் சென்ற போது ஹாலில் இருந்த கட்டிலில், அந்தப் பக்கம் திரும்பி பவித்ரா படுத்திருக்க….பவி…. சாப்பிட வாஎனக் கனகா அழைத்துக் கொண்டு இருந்தார்.

இனிமே கொஞ்சம் நடந்திட்டே இரு பவி.. நாள் நெருங்கிட்டே இருக்கு. அப்பத்தான் சுகப்பரசவம் ஆகும்.என்றபடி திரும்பிய கனகா, அப்போதுதான் வெளியில் நின்ற பிரபாகரையும், திலகாவையும் கவனித்தார். 

வாங்க வாங்க..என அவர் வரவேற்க யாரு என மெதுவாகக் கண் திறந்தவள், “நல்லாயிருக்கீங்களாஎனத் திலகாவின் குரல் கேட்கவும், கண்களை இன்னும் இறுக மூடிக்கொண்டாள்.

நல்லா இருக்கேன், வாங்க உட்காருங்கஎன்றபடி கனகா போர்வையைத் தரையில் விரிக்க திலகா அதில் உட்கார்ந்து கொள்ள…. பிரபாகர் அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

பவி இங்க பாரு யாரு வந்திருக்காங்கன்னுஎன்ற கனகா உள்ளே சென்று இருவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
பவித்ரா அப்போதும் எழுந்து கொள்ளாமல் படுத்தே இருந்தாள். அவள் கோபம் நியமானதுதான் என்பதால் திலகா ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை…. பிரபாகர் தன் மனைவியையே பார்த்து இருந்தான்.

அவர்கள் இருவரையும் பார்த்துக் கனகா சாப்பிடுங்க என்றார்.இல்லை நாங்க சாப்பிட்டு தான் கிளம்பினோம். நீங்க இப்படி உட்காருங்க.என்ற திலகா, “பவித்ரா இன்னும் சாப்பிடலையா தினமும் சாப்பிட இவ்வளவு நேரம் ஆகிடுமா….எனக் கேட்டார்.

பத்துநாள் முன்னாடி வரை பக்கத்தில இருக்கிற ஸ்கூல்ல வேலை பார்த்தா…. அதனால சரியா பன்னண்டு மணிக்கெல்லாம் நான் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்திடுவேன்.

ஒன்பது மாசம் தொடங்கிட்டதுனால எப்ப வேணா வலி வரலாம் இல்லையா அதனால நான் வேலைக்குப் போக வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். பதினோரு மணிக்கு ஜூஸ் போட்டுக் கொடுத்தேன். அதுதான் பசிக்கலைன்னு சொன்னாஎன்றார்.

மேலும் அரைமணிநேரம் சென்றும் பவித்ரா எழுந்து கொள்ளாமலே இருக்கநாம வேணா வெளிய இருப்போமா பிரபாகர்? பவித்ரா சாப்பிடட்டும்.என்றார் திலகா. பிரபாகர் சரியென்று எழுந்துகொள்ள கனகாவுக்குத் தன் மகள் மீது கோபமாக வந்தது.

அதற்குள் பவித்ராவே எழுந்து கொண்டாள். அவள் அழுதிருக்கிறாள் என அவளின் முகமே காட்டிக்கொடுக்க யாரும் எதுவும் பேசவில்லை.

சிவப்பு நிற நைட்டி அணிந்திருந்தாள். வாங்கும் போது பெரிதாக இருந்திருக்கும், இப்போது கொஞ்சம் சுருங்கி விட்டது போல சரியான அளவில் இருக்க.. அதில் அவளின் உருண்டு திரண்ட பெரிய வயிர் நன்றாகவே தெரிந்தது.

பவித்ரா சமையல் அறைக்குச் செல்லஅவளைச் சாப்பிட வச்சிட்டு நீங்களும் சாப்பிடுங்க.எனக் கனகாவை திலகா அனுப்பி வைத்தார்.

மகளுக்குத் தட்டில் உணவை போட்டுக் கொடுத்த கனகாவந்தவங்களை வாங்கன்னு கூடக் கேட்கலை என்ன நினைப்பாங்க உன்னைப் பத்தி?” அவர் மெதுவாகச் சொல்ல

என்னைப் பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு அதைபத்தி கவலையில்லைஎன வெடுக்கெனப் பதில் கொடுத்தவள், தட்டை வாங்கிக் கொண்டு பின்பக்கம் சென்றாள்.

சாப்பிட்டு முடித்த பிறகும் பவித்ரா வீட்டிற்குள் வராமல் இருக்க…. பிரபாகரே அவளைத் தேடி சென்று, அவளின் அருகே உட்கார்ந்தான்.

எங்க இவ்வளவு தூரம்?”

நான் என் பொண்டாட்டியை பார்க்க வந்தேன்.சொல்லிவிட்டு பிரபாகர் புன்னகைக்க

உங்க பிள்ளைக்காக வந்தேன்னு சொல்லுங்க. நம்புற மாதிரி இருக்கும்.என்றாள் பவித்ரா வெடுக்கென்று

என்னைக்கா இருந்தாலும் உனக்காகவும் வந்திருப்பேன் பவி.

ஆனா இன்னைக்கு வந்தது எனக்காக இல்லை….பவித்ரா பேசுவதிலேயே அவளின் கோபம் நன்றாகத் தெரிந்தது.

எட்டு மாசமாக அவளோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை…. அவளிடம் ஒரு போன்னில் கூடப் பேசவில்லை பிறகு வேறு எப்படிப் பேசுவாள்.

நேத்து என்னைப் பார்த்தும் கூட ஒரு வார்த்தை பேசலை இப்ப மட்டும் தேடி வந்திருக்கீங்க. எதுக்காக உங்க பிள்ளைக்காக?”

நீ மாசமா இல்லைனாலும், நேத்து உன்னைப் பார்த்த பிறகு இன்னைக்கு எப்படியும் வந்திருப்பேன் பவி. நேத்து கேத வீட்டிற்கு வந்திட்டு எப்படி அப்படியே வர்றது? நீயே சொல்லு….அதுதான் வரலை

என்னைப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு என்னோட நியாபகம் வந்துச்சா …. அப்ப நேத்து என்னைப் பார்க்கலைன்னா இன்னைக்கும் வந்திருக்க மாட்டீங்க அப்படித்தான

நேத்து வரை உன்னைப் பத்தியோ என்னைப் பத்தியோ யோசிக்கிற நிலைமையில நான் இல்லை பவி. இதுதான் உண்மை. நீ எப்படி நினைச்சாலும் பரவாயில்லை…. சரி இப்ப நம்ம வீட்டுக்கு கிளம்பு.

அது நம்ம வீடு இல்லை உங்க வீடு. நான் கண்டிப்பா அங்க வரேன். இப்ப இல்லை குழந்தை பிறந்த பிறகு. குழந்தைக்காகத் தான நீங்க வந்தீங்க. அதனால நானும் குழந்தை பிறந்த பிறகே வரேன்.

ஒருவேளை உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் இருந்தா நான் பிரசவத்துல இல்லாம கூடப் போகலாம்.எனப் பவித்ரா சொல்லிக் கூட முடிக்கவில்லை

ஹேஎனப் பிரபாகர் அவளை அடிக்கக் கை ஓங்கி இருந்தான். பிறகே அவளின் நிலை உணர்ந்து கையைக் கீழே இறக்கினான்.

அவர்கள் இருவரும் பேசுவது வீட்டிற்குள் இருந்த திலகாவுக்கும், கனகாவுக்கும் நன்றாகக் கேட்க, இருவரும் பதறியடித்து எழுந்து வந்தனர்.

பவித்ரா, வயித்துல பிள்ளை வச்சிட்டு பேசுற பேச்சா இதுகனகா மகளைக் கண்டிக்க….

ஏன் பிரபா அவதான் கோபத்தில எதோ பேசுறான்னு நினைக்காம நீயும் அடிக்கக் கை ஓங்குற..என்றார் திலகா….

நீங்க போங்க மா.என்றான் பிரபாகர்.

அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும், மனைவி பக்கம் திரும்பியவன், “பவித்ரா, நீ தப்பு எதுவும் பண்ணலைன்னு வச்சுப்போம். எல்லாத் தப்பும் என் மேலதான். சரியா இப்ப என்ன நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா?” எனக் கேட்க

நீங்க மன்னிப்பு கேட்டா மட்டும் நான் அனுபவிச்ச வேதனை எல்லாம் இல்லைன்னு ஆகப்போறது இல்லைஎன்றவள் கண்ணீர் சிந்தினாள்.

அழாத பவிபிரபாகர் சொன்னதும் பவித்ராவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.

நான் இந்த எட்டு மாசமா அழுதிட்டுதான் இருக்கேன். வயித்துல இருக்கிற உங்க பிள்ளைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். இப்ப வந்து சொல்றீங்க அழாதன்னு.என்றாள் ஆங்காரமாக.

டென்ஷன் ஆகாதஎதாவது ஆகிடப்போகுது. நான் வேணா போயிடட்டுமா….பிரபாகர் கேட்கஅது உங்க இஷ்ட்டம்.என்றாள்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவே இல்லை. அங்கேயே அமர்ந்து இருந்தனர். மீண்டும் பிரபாகரே பேச்சை ஆரம்பித்தான்.

எந்த ஹாஸ்பிடல்ல காட்றீங்க?”

ஸ்ரீவில்லில சாரதா ஹாஸ்பிடல்ல

அங்கேயா ! ரொம்பச் செலவு ஆகுமே, எப்படிச் சமாளிச்சீங்க?”

அம்மா அவங்க வளையலை வித்துட்டங்க.என்றவள், சொல்லும் போதே அழுது விட…. பிரபாகர் மிகவும் வருந்தினான்.

பவி ப்ளீஸ் அழாத நான் அன்னைக்கு எதோ கோபத்தில உன்னைக் கொண்டு வந்து விட்டேன். உன்னைத் திரும்பக் கூப்பிட கூடாதுன்னு எல்லாம் நினைக்கலை….

நம்ம வீட்டு நிலைமை கொஞ்சம் சரி ஆகட்டும்ன்னு நினைச்சேன். ஆனா அது இன்னும் சரியே ஆகலைஎன்றான். பவித்ரா அவனைப் புரியாமல் பார்க்க

உனக்கு இன்னொரு நாள் அது என்னன்னு சொல்றேன். இப்ப நாம நம்மைப் பத்தி மட்டும் யோசிப்போம். குழந்தை முதல்ல நல்லபடியா பொறக்கட்டும் சரியா நீ டென்ஷன் ஆகாத.

இவ்வளவு வளையல் போட்டிருக்கியே யாரு போட்டது?”

தாமரைதான் ஏழாவது மாசம் வந்து போட்டுட்டு போனா

வேலைக்குப் போறியா நீ

பின்ன அந்த வேலைக்கு மட்டும் போகலைன்னா இந்நேரம் எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும்.

நீ நம்ம வீட்லயே இருந்திருந்தாலும், உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கும். நீ இந்த நேரத்தில உங்க அம்மா வீட்ல இருந்தது நல்லதுன்னு நினைச்சிக்கோ….

பிரபாகர் சொல்வது பவித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை….இங்க பாருங்க சும்மா நீங்க செஞ்சதுக்கு நியாயம் கண்டுபிடிக்காதீங்க சொல்லிட்டேன்.

நீங்க செஞ்சதை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன். எங்க அக்காவுக்குச் சென்னையில வேலை கிடைச்சிருக்கு. அவ பெண்ணைப் பார்த்துக்க எங்க அம்மா சென்னைக்குப் போகணும்.

அதோட இது எங்க மாமா வீடு, நான் எப்படி இங்க இருக்க முடியும்? அதனால மட்டும்தான் உங்க வீட்டுக்கு வரேன். அதுவும் குழந்தை பிறந்த பிறகுதான்.

உங்களை என்னால நம்ப முடியாது. நீங்க என்னைத் திரும்பத் துரத்தினா என்னால தெருவுல எல்லாம் நிக்க முடியாது. அதனால நான் டீச்சர் ட்ரைனிங் படிக்கப் போறேன். இதுக்குச் சம்மதம்னா மட்டும்தான் நான் அங்க வருவேன். இல்லைனா இப்பவே சொல்லிடுங்க நான் என் வழியைப் பார்த்துகிறேன்.என்றாள் கண்டிப்பான குரலில்.

இதுக்கு முன்னாடியும் உன்னை நான் ஒன்னும் தெருவுல நிறுத்தலை உங்க அம்மாகிட்ட வந்து சொல்லித்தான் விட்டுட்டு போனேன். எதோ நம்ம கெட்ட நேரம், நாம பிரிஞ்சிருக்க மாதிரி ஆகிடுச்சு.

உனக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ நான் யாரையும் எதுவம் சொல்ற நிலைமையில இல்லை எல்லாம் என் கைமீறி போயிடுச்சு.

பிரபாகர் சொல்வது இப்போதும் பவித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் எதோ மிகவும் துயரத்தில் இருப்பது போல இருந்தது. அதற்கு மேல் அவளுக்கே அவனிடம் சண்டை போட கூட மனம் வரவில்லை.

பிரபாகர் நெற்றியை தேய்த்து விடுவதைப் பார்த்தவள், எழுந்து சென்று அவனுக்குக் காபி போட்டாள். திலகாவும், கனகாவும் உள்ளே அறையில் போர்வை விரித்துப் படுத்துப் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவள் பிரபாகரிடம் சென்று காப்பியை நீட்ட…. அவளைப் பார்த்து புன்னகைத்தவன், காபியை வாங்கிக்கொண்டு, மறுகையால் அவளை மெதுவாகப் பிடித்து இழுத்து உட்கார சொன்னான்.

உங்களுக்குத் தலை வலிக்குதுன்னு நினைக்கிறேன். உள்ள கட்டில்ல வந்து கொஞ்சம் நேரம் படுங்க.

பவித்ரா சொன்னதும், சரியென்று பிரபாகர் எழுந்து கொண்டான். உள்ளே வந்து காபி அருந்தியவன், குடித்து முடித்ததும் கட்டிலில் காலை நீட்டி படுத்து விட்டான்.

பவித்ரா தரையில் உட்கார செல்ல அதைக் கவனித்த பிரபாகர், கட்டிலில் தள்ளிபடுத்து அவளுக்கு இடம் விட அவள் மேலே உட்கார்ந்ததும் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான்.

அவன் உறங்கியதும் பவித்ரா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். எதோ சரியில்லை என்று தெரிந்தது, என்னவென்றுதான் புரியவில்லை.

Advertisement