Advertisement

ஸ்மிரிதியின் மனு – 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது.  ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று புரிந்தது. உடனே அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் மனு.
“ஸ்மிரிதி பற்றி தெரியணும்..மனு” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் கபீருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. உடனே மனுவிற்கு ஃபோன் செய்தான் கபீர்.
“ஸ்மிரிதி எங்க?” என்று அதே கேள்வியைக் கேட்டான் மனு.
“மனு பையா (manu bhaiyya).” என்று தயக்கத்துடன் விளித்தான் கபீர்.
“எங்க டா அவ?” என்று மனு குரலை உயர்த்த,
“பையா (bhaiyya)” என்று மறுபடியும் தயங்கினான் கபீர்.
கபீரின் வாயைத் திறக்க கார்மேகத்தை உபயோகித்தான் மனு.
“அவகிட்டேயிருந்து மூணு நாளா தகவல் இல்லேன்னு கார்மேகம் அங்கிள் கவலைலே இருக்காரு..உனக்கும் நிறைய முறை ஃபோன் செய்திருக்காரு..அவரை உன்கிட்ட அனுப்பி வைக்கறேன் நீயே நேரடியா அவர்கிட்ட அவ எங்கேன்னு சொல்லு.” என்றான்.
“வேணாம்..வேணாம்.” என்று பதட்டமானான் கபீர்.
கபீரின் பதட்டம் விஷயத்தின் விபரீதத்தை மனுவிற்கு உணர்த்தியது. கபீரும் மற்ற சினேகிதர்களும் ஸ்மிரிதியிடம் கொண்டிருந்த அன்பும் அதே போல் சினேகிதர்களிடையே இருந்த விஸ்வாசமும் அவன் அறிந்ததுதான். அந்த இரண்டையும் அவனால் உடைக்க இயலாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். ஸ்மிரிதியிடம் கபீருக்கு இருந்த விஸ்வாசத்தை அவள் மேல் அவன் வைத்திருந்த அன்பாலேயே உடைத்தான் மனு.
“முதல்ல இந்தப் பையா (அண்ணன்) சொல்றதை நல்லா கேட்டிக்க..நான் உனக்கு பையான்னா..அவ உனக்குப் பாபி (அண்ணி)..இப்ப உன் அண்ணனுக்கு உன் அண்ணி எங்க இருக்கா, என்ன செய்துகிட்டிருக்கான்னு தெரியணும்..தெரிய வரலே அடுத்த ஃபோன் என் மாமனாருக்குப் போட்டு உன்னைப் போட்டு கொடுப்பேன்.” என்றான் மனு.
மனு பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கபீர்,
“பையா..இங்கதான் இருக்கா..மூணு நாளாயிடுச்சு இன்னியோட..இன்னும் பேச்சு சரியா வரலே..அவ ஃபோன் சாமானோட இருந்ததுலே சேதமாயிடுச்சு..இன்னைக்கு அங்கிள் எனக்கு நிறைய முறை கால் செய்திட்டாரு..நான் ஸ்மிரிதி முழிக்கறத்துக்காக காத்துகிட்டிருக்கேன்..அவளுக்கு பேச்சு வராம வெறும் காத்து வந்தாலும் அவதான் அங்கிள்கிட்ட பேசணும்..என்னால முடியாது..இதெல்லாம் தெரிய வந்தா என்னை தொலைச்சிடுவாரு.” என்று கடகடவென்று பேசி முடித்தான்.
ஸ்மிரிதியால் பேச முடியவில்லை என்று கேட்டவுடன் மனுவும் பதட்டமாகி,“என்ன டா ஆச்சு அவளுக்கு?” என்றான்.
“ஸ்மோக் இன்ஹலேஷன்.(smoke inhalation)”
“எப்படி டா?”
“தீ விபத்து.”
“வாட்..எங்கே? எப்படி?”
“நாலு நாள் முன்னாடி..அவங்க சாமான் வைச்சிருந்த இடத்திலே..மொத்தம் எரிஞ்சுப் போயிடுச்சு.” என்றான் கபீர்.
“மூணு நாள் ஆச்சுனு சொன்ன.” என்று வக்கீல் கிளாரிஃபிகேஷன் கேட்க,
“அது இரண்டாவது தீ விபத்து..அடுத்த நாள் நடந்திச்சு..முதல்ல அவங்க கொடோன், அடுத்த நாள் அங்க கடைத்தெருவுலே இருந்த கடைங்க எரிஞ்சு போயிடுச்சு..அப்ப ஸ்மிரிதி கடைத்தெருவுலே இருந்திருக்கா.” என்றான் கபீர்.
“நீ எவ்வளவு நாளா அவளோட இருக்க?” என்று மனு கேட்க.
“காலைலதான் இங்கே வந்தேன்.” என்றான் கபீர்
“இங்கன்னா? எங்க டா?” என்று மனு கேட்க
கபீர் மௌனமானான்.
“கபீர்..நீ இப்ப ஃபோன் எடுத்திருக்கலேன்னா நாளைக்கு காலைலே தில்லி ஹை கோர்ட்ல அங்கிள் ஹெபியஸ் கார்பஸ் ஃபைல் பண்ணியிருப்பாரு..அவ சொன்னா உன் அறிவு எங்கடா போச்சு..அவ அப்பாக்காவது சொல்ல வேணாம் அவ எங்க இருக்கா..எப்படி இருக்கான்னு.” என்று கபீரை மனு கத்த.
“பையா..அவகிட்ட சொன்னேன்….உங்களுக்குத் தெரியாதா பையா அவளைப் பற்றி.”
“எங்கடா இருக்கீங்க?” என்று மறுபடியும் மனு கேட்க,
“உதய்ப்பூர்ல..எங்க ஹோட்டல்ல.”
“உன்னாலதான் டா அவ இப்படி இருக்கா..ஊர் ஊரா ஹோட்டலைக் கட்டி விட்டிட்டு..எல்லா ஹோட்டலேயும் பர்மனெண்டா ரூம் போட்டு வைச்சிருக்க.. அவளுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் உன் ஹோட்டல்லே தங்கி முடிச்சுக்கறா.” என்று கபீரைக் குற்றவாளியாக்கினான் மனு.
“இல்லை மனு பையா..அவ இங்கே தங்கறது இதுதான் முதல் தடவை..அவங்க குழு இருக்கற ஊர்ல, அவங்க ஆளுங்களோடதான் தங்குவா.. அவளைப் பேச கூடாது.. வாய்ஸ் ரெஸ்ட் கொடுக்கணும்னு சொல்லிருந்தாங்க..அதனால இரண்டு நாளாதான் இங்கே இருக்கா..இப்ப தூங்கிகிட்டிருக்கா..எழுந்திருச்சிடுவா.” என்றான் கபீர்.
“உனக்கு எப்படி டா ஆக்ஸிடெண்ட் பற்றி தெரிஞ்சுது?”
“என்னோட நம்பர் அவ குழுவோட ஆளுங்கிட்ட இருக்கு..என்னோட ஹோட்டலுக்கும், சுசித் ரா கடைக்கும் அவங்க சரக்கு அனுப்பறதுனால எங்க இரண்டு பேர் நம்பரும் அவங்கிட்ட இருக்கு..அவங்கதான் ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போயிருக்காங்க..எனக்குத் தகவல் சொன்னவுடன என்னால புறப்பட்டு வர முடியலே..இன்னைக்கு காலைலதான் வர முடிஞ்சுது.” என்றான் கபீர்.
எல்லாம் தெரிந்தும் கபீர் யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் அன்று காலையில்தான் தில்லியிலிருந்து  உதய்பூர் சென்றிருக்கிறான் என்ற கேட்டவுடன்,“நாளைக்கு அவளைத் தேடி போலீஸ் வரப் போகுது.. உன்னோட கஸ்டடிலேர்ந்து அவங்க கஸ்டடிலே அவளைக் கொண்டு வந்த பிறகு உன்னோட  விளக்கம் எல்லாத்தையும் கோர்ட்டுக்கு வந்து சொல்லு.” என்று கோபமானான் மனு.
“பையா (bhaiyya)” என்று அதிர்ச்சியானான் கபீர்.
“ஹெபியஸ் கார்பஸ்ஸுன்னா என்னென்னு தெரியுமில்லே..கார்மேகதோடப் பொண்ணு பற்றி மூணு நாளா தகவல் இல்லேங்கறது விளையாட்டு விஷயமா டா? அவளை யாரு, என்ன செய்திருபாங்களோன்னு அவரு அன்பா விசாரிக்க ஆரம்பிச்சிட்டாரு.. தகவல் சொல்ல உனக்கு என்ன டா தயக்கம்?.ஃபூல்.” என்று கபீரிடம் கத்தினான் மனு.
“பையா, ஸ்மிரிதிதான் அங்கிளுக்குத் தெரிய வேணாம்னு சொன்னா.” என்றான் கபீர்.
அதற்குமேல் கபீரின் மேல் கோபப்பட்டு பிரயோஜனமில்லை என்று உணர்ந்த மனு,
“எழுந்திருச்சிடாளா டா?” என்று மனு கேட்க,
“இல்லை பையா…நாளைக்கு நானே அவளை தில்லிக்கு அழைச்சுகிட்டு வந்திடறேன்.” என்றான் கபீர்.
“உனக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகுதான் விஷயத்தோட வீரியம் புரியுதா?”
“ஸாரி பையா..அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா அங்கிள் மட்டுமில்லை எங்கப்பாவும் என்னை தொலைச்சிடுவாரு…நாளைக்கு அவளை எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போயிடறேன் பையா.” என்றான்.
“உங்க வீட்டுக்கா?” என்று மனு கேட்க,
“எங்க வீட்லே எங்கம்மா அவளைக் கவனமா பார்த்துப்பாங்க…எங்கம்மா சொன்னா அடம்பிடிக்காம கேட்பா பையா..அவளுக்கு இப்ப ரெஸ்ட் தேவை.” என்றான்
கபீரின் திட்டத்தில் தலையிட விரும்பவில்லை மனு. “நீ அவகிட்ட போய் ஃபோனைக் கொடு..நான் பேசணும்.”என்று ஸ்மிரிதி விழித்து கொண்டதை நேரில் பார்த்தவன் போல் பேசினான் மனு.
கபீர் சந்தேகத்தோடு படுக்கையை நோக்கி செல்ல, அங்கே விழித்து கொண்டு அவன் ஃபோன் உரையாடலைக் கேட்டு கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. கபீர் நீட்டிய ஃபோனை வாங்கி,
“சொல்லு” என்று அவள் சொன்ன போது அவள் பேசுவது கிணற்றுகுள்ளிருந்து பேசுவது போல் இருந்தது.
“நீ பேச வேணாம்..நான் பேசறதைக் கேட்டுக்கோ..உங்கப்பா இன்னைக்கு எனக்கு ஃபோன் செய்தாரு..நீ இந்த மாதிரி மூணு நாள் தகவல் கொடுக்காம இருந்ததிலேன்னு சொன்னாரு..நாளைக்கு காலைலே ஹெபிய்ஸ் கார்பஸ் ஃபைல் பண்ண சொன்னேன்..ஆனா எனக்கு உன்னையும், உன் பிரண்டுகளையும் தெரியும் அதனாலதான் கபீருக்கு ஃபோன் போட்டேன்..
நீ எதுக்கு உங்கப்பாக்கு தகவல் கொடுக்கலேன்னு எனக்குப் புரியலே..நாளைக்கு நீ கபீரோட புறப்பட்டு இங்கே வா இல்லை அவரு அங்கே வந்து நிப்பாரு..அவரு அங்க வந்து நின்னாருன்னா அது எங்கே போய் நிக்கும்னு உனக்கேத் தெரியும்..
அப்பறம் அப்பாவும், பொண்ணும் என்னைய வைச்சு விளையாடறத்துக்கு இன்னையோட ஒரு முடிவு கட்டப் போறேன்..கார்மேகத்திற்கு காணாம போற பொண்ணைக் கண்டுபிடிக்கவும், கண்ட நேரத்திலே ஃபோன் போட்டு உதவி கேட்கும் போதும் நான் வேண்டியவன் ஆனா அதே ஆள் அவர்  பொண்ணைக் கல்யாணம் செய்துக்க நினைக்கும் போது கண்டவன் …
   
உங்கப்பா எந்த உரிமைலே ஒவ்வொரு முறையும் உன் விஷயமா என்கிட்ட வராரு?..உறவு வைச்சுக்க வேணாம் ஆனா உரிமை வேணும்..உங்கப்பாவையாவது புரிஞ்சுக்க முடியுது..அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் அவருக்கு நீ முக்கியம் அதுக்காக அவரு என்ன வேணும்னாலும் செய்வாரு..ஆனா உனக்கு என்கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குப் புரியலே ஸ்மிரிதி..நானா ஏதாவது கேட்டாலும் நீ பதில் சொல்ல மாட்டே..நீயாவும் என்கிட்ட எதையும் சொல்ல மாட்டே….இரண்டு வாரத்திற்கு முன்னாடி நம்ம கல்யாணத்தைப் பற்றி பேசின உனக்கு இவ்வளவு பெரிய விஷயத்தைப் பற்றி என்கிட்ட சொல்லணும்னு ஏன் தோணலே….
“மனு” என்று மெலிதாக இடைமறித்தாள் ஸ்மிரிதி.
“நீ என்ன சொல்ல போறேன்னு எனக்குத் தெரியும்..இப்போதைக்கு இதைப் பற்றி பேச வேணாம், உங்கப்பாகிட்டையும் எதுவும் சொல்ல வேணாம்னுதான சொல்லபோற.. உங்கப்பாவுக்கும், உனக்கும் நடுவுல நடுவரா, நீதிபதியா இருக்க எனக்கு விருப்பமில்லே.. உனக்கும், எனக்கும் உறவுன்னு இருந்தாதான் இனி நீயும், உங்கப்பாவும் என்கிட்ட பேச முடியும்..அதுக்கு நீங்க இரண்டு பேரும் தயாரா இல்லைன்னா உங்கப்பாகிட்ட உனக்கு ஒரு பாடி கார்ட் புருஷனைத் தேடி தர சொல்றேன்..உனக்கும், அவருக்கும் நடுவுல அந்த மாதிரி ஆள்தான் லாயக்கு..என்னைப் போல லாயரில்லே.” என்றான் மனு.
“மனு..என் கல்யாணம் என் விருப்பம்..உன் வேலையப் பார்த்துக்க.” என்று தெளிவாகப் பேச முடியவிட்டாலும் அவன் ஐடியாவிற்குக் கண்டனம் தெரிவித்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் கண்டனத்தைக் கண்டு கொள்ளாமல் ஃபோன் இணைப்பைத் துண்டித்தான் மனு.

Advertisement