Advertisement

ஸ்மிரிதியின் மனு – 20_1
இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை.  அவளோடு பேச நேர்ந்தால் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டி வருமென்று மனுவும் ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்யவில்லை.  அந்த இரண்டு வாரத்தில் சிவகாமிதான் அவரின் மகன்களில் மனதை மாற்ற இடைவிடாது முயன்று கொண்டிருந்தார்.
அவரின் விருப்பம் போல் செயல்பட நாதன் உறுதி அளித்த பின்னும் மகன்கள் இருவரையும் பிரிய சிவகாமிக்கு மனம் வரவில்லை.  தில்லிக் குளிரினால் ஏற்பட்ட காது வலியையும், கால் குடைச்சலையும் தினமும் கேட்டு கேட்டு வக்கீல் மனு ஊமையாகிப் போனான், மாறனோ சிவகாமியைத் தவிர்ப்பது எப்படி என்று படித்து பட்டதாரியாகிப் போனான்.  அவரின் குடைச்சலைத் தாங்க முடியாமல் சிவகாமியின் முயற்சியை முடக்கி வைக்க முனைந்தார் நாதன்.
“நீ இப்படியே பேசிகிட்டே இருந்தேன்னா ஊமையானவன் கல்யாணத்தை முடிச்சுகிட்டு வந்தாலும் தெரிய போகறதில்லே..வீட்லேத் தலையைக் காட்டாதவன் தலைமறைவாகிப் போனாலும் நமக்குத் தெரியப் போகறதில்லே..உன் பசங்க சந்தோஷம் முக்கியம்னு சொல்லிட்டு நீதான் அவங்களுக்கு வீட்லக்கூட நிம்மதி இல்லாம செய்யற..நீ என்னை நினைக்கற..உனக்கு என்ன வேணும்னு நீயே யோசனை செய்து பாரு.” என்றார் நாதன்.
நாதன் சொன்னதில் இருந்த உண்மை சிவகாமியை யோசிக்க வைத்தது.
 மூன்றாவது வாரம் ஆரம்பிக்கும் தருவாயில் ஒர் இரவு வேளையில் கார்மேகத்திடமிருந்து ஃபோன் வந்தது மனுவிற்கு.
அவரின் அழைப்பை ஏற்காமல் எரிச்சலுடன் ஃபோனைப் பார்த்து கொண்டிருந்தான் மனு.  அவர் அழைப்புக்குக் காரணம் ஸ்மிரிதி தான் என்று அவன் உள்ளுணர்வு அறிவுறுத்த அதைக் கார்மேகத்திடமேத் தெளிவுப்படுத்திக் கொண்டான் மனு.
“உங்க பொண்ணுகிட்டேயிருந்து எந்த தகவலும் இல்லை அதானலதான எனக்கு இப்ப  ஃபோன் செய்யறீங்க?” என்று அழைப்பை ஏற்று கொண்டவுடன் அவர் பேச வாய்ப்பளிக்காமல் கேட்டான்.
கார்மேகம் மௌனம் காக்க, அதற்குதான் அவர் ஃபோன் செய்திருக்கிறார் என்று உறுதியானது மனுவிற்கு. 
“உங்ககிட்ட பணத்துக்குப் பஞ்சமில்லே..தில்லிலே வக்கீலுங்களுக்குப் பஞ்சமில்லே..யாரு வேணும்னாலும் ஹேபீயஸ் கார்பஸ் (habeas corpus) ரிட் ஃபைல் செய்யலாம்…ஸுப்ரீம் கோர்ட் இருக்கு, தில்லி ஹை கோர்ட் இருக்கு.” என்றான்.
மனுவின் பதிலில்,“தம்பி” என்று அதிர்ச்சியானார் கார்மேகம்.
“உங்களுக்குப் பத்து வருஷம் முன்னாடியே இதை சொல்லியிருக்கணும்..அப்பவும் நான் வக்கீல்தான் ஆனா உங்களைப் போல ஆளை எடைப் போடற அனுபவம் அப்ப எனக்கு இருக்கலே…இன்னைக்கு அப்படியில்லே..என்னைய வக்கீலா நினைச்சுதான இப்ப ஃபோன் செய்யதீங்க..அதனாலதான் உங்களுக்கு ஒரு வக்கீலா நானும் ஆலோசனைக் கொடுத்தேன்..உங்க மகளுக்கு ஒரு ரூல் உங்களுக்கு வேற ரூலா..அவ என்கிட்ட எதுவும் வைச்சுக்க கூடாது ஆனா நீங்க வைச்சுப்பீங்க.” என்றான் மனு.
அவர் ஸ்மிரிதியிடம் சொன்னது மனுவைப் போய் சேர்ந்திருக்கிறது என்று உணர்ந்த கார்மேகம் அதற்கு மேல் மனுவிடம் மனம் திறக்காவிட்டால் அவனின் உதவியைக் பெற முடியாது என்று புரிந்து கொண்டவர்,
“ஸ்மிரிதிகிட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லை..இன்னிவரைக்கும் ஸ்மிரிதி இப்படி செய்ததில்லேத் தம்பி..நான் எங்கே இருந்தாலும் சரி, அவ எங்கே இருந்தாலும் சரி எனக்குத் தகவல் கொடுத்திடுவா…அதேபோல அவ வெளியூர் போனா என்கிட்ட எப்படியும் இரண்டு நாளைக்கு ஒருமுறை பேசிடுவா..
எனக்குத் தெரிஞ்சு உதய்பூர்தான் கிளம்பிப் போனா..அங்கேயிருந்து பேசிக்கிட்டுதான் இருந்தா.. இரண்டு நாளைக்கு நான் ஒரு வேலையா வெளிய போயிருந்தேன்..அதனால என்னால அவளோட பேச முடியலே..இன்னைக்கு அவகிட்டேயிருந்து ஃபோன் வந்திருக்கணும் ஆனா இன்னும் வரலே..ஒருவேளை உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்காளோன்னு நினைச்சுதான் உங்களுக்குப் ஃபோன் செய்தேன்.” என்றார்.
“நீங்க வேணாம்னு சொன்ன பிறகு அவ எதுக்கு என்கிட்ட  பேச போறா? போலீஸுக்குப் போங்க இல்லேன்னா உங்களுக்கு யாரு மேலேயாவது சந்தேகம் இருந்திச்சுன்னா அவங்களைத் தூக்கிகிட்டு வந்து அன்பா கேட்டுப் பாருங்க.” என்று கார்மேகத்தை வார்த்தைகளால் குத்தினான் மனு.
மனுவின் குத்தல் பேச்சை மனதில் போட்டு கொள்ளாமல் மகளைப் பற்றிய கவலையில் இருந்த கார்மேகம்,
“அவ என்னோட பொண்ணுன்னு நிறைய பேருக்குத் தெரியாது தம்பி.. நானும் அவளைப் பொறுத்தவரைக்கும் கவனமாதான் இருந்திருக்கேன்..எங்க தப்பு நடந்திச்சுனுத் தெரியலே அதனால என் பசங்களை விசாரிக்க சொல்லியிருக்கேன்.” என்று வக்கீலிடமே அவர் விசாரனையை ஆரம்பித்துவிட்டாரென்று ஒப்புக் கொண்டார்.
“தப்பு செய்யறவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கறதுதான் என் வேலை… எங்க தப்பு நடக்குதுண்னு கண்டுபிடிக்கறது, எப்படி நடக்குதுண்னு கண்டுபிடிக்கறது இரண்டும் என் வேலை இல்லை..உங்க பொண்ணை அன்னிக்கு உங்க வீட்டுக் கேட்ல இறக்கிவிட்டதோட சரி..அதுக்கு அப்பறம் நாங்க இரண்டு பேரும்  நேர்ல சந்திச்சுக்கலே..என்கிட்ட உறவு வைச்சுக்க விரும்பாதவங்களோட நானும் எந்த உறவும் வைச்சுக்க விரும்ப மாட்டேன்..
ஆனா உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் அந்த மாதிரி கோட்பாடெல்லாம் கிடையாது.. ஆளை எப்படி யூஸ் செய்துக்கணும்னு உங்க இரண்டு பேர்கிட்டேயிருந்துதான் கத்துக்கணும்.” என்று மறுபடியும் கார்மேகத்தை வார்த்தைகளால் புண்படுத்தினான் வக்கீல்.
“ஸ்மிரிதி அப்படி இல்லை தம்பி.” என்று கார்மேகமும் மனுவின் வார்த்தைகள் ஏற்படுத்தியக் காயத்தைப் பொருட்படுத்தாமல் அவர் பெண்ணிற்காகப் பரிந்துப் பேசினார்.
“அவ உங்களைப் போல இல்லை..உங்களைவிட பத்து மடங்கு புத்திசாலி..அவ செய்ய நினைக்கற விஷயத்தை அவ செய்யாம எல்லாரையும் செய்ய வைப்பா..இப்ப அவ எங்கையாவது ஜாலியா சுத்திகிட்டு இருப்பா நானும், நீங்களும் அவளைப் பற்றி கவலைப்பட்டுகிட்டு இருக்கோம்.
அவளைக் கண்டிக்காம அவ உடைச்சதுக்குப் புது கார் வாங்கிக் கொடுத்து..கரெக்டா பேப்பரை வைச்சு கரெக்ட் செய்தீங்களே அதே அக்கறை பெத்த பொண்ணு ஆரோக்கியத்து மேல இருந்திருக்கணும்…இப்ப அவளைக் காணலேங்கற போது எப்படி இருக்காளோ? என்ன ஆயிருக்குமோன்னு பதட்டப்பட வேணாமில்லே.”  என்று அவனும் ஸ்மிரிதியைப் பற்றிய கவலையில், பதட்டத்தில் இருக்கிறான் என்று அவனை அறியாமல் அவன் மனதை கார்மேகத்திடம் வெளியிட்டான் மனு.
ஸ்மிரிதியைப் பற்றி மனு சொன்னதை கேட்டு,”அவளுக்கு அந்தப் பழக்கமெல்லாம் இப்ப இல்லே தம்பி.” என்றார் கார்மேகம்.
“எப்படி இல்லேன்னு சொல்றீங்க? அன்னிக்கு உங்க எதிர்லதான் என்னைய ஸ்கூரு டிரைவர் வேணுமான்னு கேட்டா..பத்து வருஷம் முன்னாடி உங்க இடத்திலே நான் இருந்திருந்தா அன்னிக்கே அவளை ஸ்கூரு டிரைவரை வைச்சே டைட் செய்திருப்பேன்.” என்று கோபமடைந்த மனுவிற்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியாமல் கார்மேகம் அமைதியாக இருக்க,
“எப்படி அங்கிள் அவளைக் கவனிக்காம விட்டீங்க?” என்று கார்மேகத்திடம் அதுவரை யாரும் கேட்காத கேள்வியை ஆதங்கத்துடன் கேட்டான் மனு.
யாரிடமும், எதற்கும் விளக்கம் கொடுக்காத கார்மேகமும் அவர் மகளிற்காக மனுவிடம் அவர் செய்கையை விளக்கினார்.
“அந்த தப்பு நடந்த பிறகுதான் அவளோட பழக்கமெல்லாம் எனக்கு தெரிய வந்திச்சு..அவ செய்த தப்பை நான் சரி செய்ய பார்த்ததுலே என்ன தப்பு தம்பி..அந்த சம்பவத்துக்கு அப்பறம் என் பொண்ணும் அவகிட்ட இருந்த தவறுகளைத் திருத்திக்கிட்டா…அவ கண்டிப்பா பழையத் தப்பைத் திரும்ப செய்திருக்க மாட்டா.” என்று திடமாகச் சொன்னார் தந்தை கார்மேகம்.
இப்போது அமைதியாவது மனுவின் முறையானது.  சிறிது நேரத்திற்குப் பின்,
“எந்த ஊருக்குப் போயிருக்கா அவ?” என்று கேட்டான் மனு.
“உதய்ப்பூர் பக்கத்தில.” என்றார் கார்மேகம்.
“எந்த இடம்னு கரெக்ட்டா சொல்லுங்க.” என்று சிடுசிடுத்தான்.
“எனக்குத் தெரியாது தம்பி…அவ விஷயம் டீடெய்லா என்கிட்ட சொல்றதில்லே..நானும் அதுலே தலையிடறதில்லே..அவ செய்துகிட்டு இருக்கறதுல நான் வர முடியாது.” என்றார் கார்மேகம்.
“இன்னைக்கு எத்தனை நாள் ஆகுது?” என்று கேட்டான் மனு.
“இன்னியோட மூணு நாள்.” என்றார் கார்மேகம்.
“அவளுக்கு ஃபோன் செய்தீங்களா?”
“நாட் ரீச்சபிள்.” என்றார் கார்மேகம்
“அவளோட பிரண்ட்ஸ்கிட்ட கேட்டீங்களா?”
“தல்ஜித் வெளி நாடு போயிருக்கான்..கபீருக்கு இன்னைக்கு ஃபோன் செய்தேன் அவன் எடுக்கலே..அவனும் இங்க இல்லைனு நினைக்கறேன்..மெஹக், சுசித் ராகிட்ட இன்னும் பேசலே.” என்றார் கார்மேகம்.
“சரி..நான் விசாரிக்கறேன்.” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்த மனு யோசனையில் ஆழ்ந்தான்.  அவன் மனதில் ஸ்மிரிதியைக் கோயமுத்தூரில் சந்தித்ததிலிருந்து ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் அலசி பார்த்த போது ஒரே ஒரு நபரைப் பற்றி மட்டும் சந்தேகம் எழுந்தது. அந்த நபரிடம் ஸ்மிரிதியைப் பற்றி விசாரிக்கும் முன் கார்மேகத்தின் ஃபோன் அழைப்பை ஏற்காத கபீருடன் முதலில் பேச வேண்டுமென்று தோன்றியது. கார்மேகத்திடமிருந்து கபீரின் ஃபோன் நம்பரைக் கேட்காமல் மெஹக்கிற்கு ஃபோன் செய்தான் மனு.
அந்த இரவு வேளையில் மனுவிடமிருந்து ஃபோன் அழைப்பை எதிர்ப்பார்க்காத மெஹக் முதலில் ஆச்சிர்யப்பட்டாலும் அதன்பின் அவனுடன் சாதாரணமாகப் பேச, ஸ்மிரிதியைப் பற்றி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று முடிவுக்கு வந்த மனு அவளிடம் கபீரின் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான்.
கபீருக்கு பலமுறை ஃபோன் செய்தும் மனுவின் அழைப்பைக் கபீர் ஏற்கவில்லை.  கார்மேகம் சொன்னது உண்மைதான் என்று நினைத்த மனு சிறிது இடைவெளிக்குப் பின் மறுபடியும் முயற்சி செய்தான்.  அவனுடைய முயற்சி வெற்றியடவில்லை. முதல்முறையாக ஸ்மிரிதியின் நலனைப் பற்றிய பயம் ஏற்பட்டது மனுவிற்கு.
அவள் நலனைப் பற்றி ஒருவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று உணராமல் அந்த விசாலமான அறையில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.  அவள் அருகில் கவலையோடு அமர்ந்திருந்தான் கபீர். அன்று மாலையிலிருந்து மாத்திரையின் உதவியுடன் உறங்கி கொண்டிருந்த ஸ்மிரிதி கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.  அவனுடைய ஃபோனில் வந்த அழைப்புகளை ஏற்காமல் அடுத்து என்ன செய்வது என்று சிந்தனையில் இருந்தான் கபீர்.  
கார்மேகத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டுமென்று என்று அவன் மனம் அறிவுறுத்த அதே சமயம் அவன் அப்படி ஏதாவாது செய்தால், உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் ஸ்மிரிதி அவனைத் தொலைத்து விடுவாள் என்று தெரிந்ததால் என்ன செய்வதென்று என்று புரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.
அப்போது மறுபடியும் அவன் ஃபோன் அழைக்க அதற்கு மேல் புறக்கணிக்க முடியாமல் அந்தப் புதிய நம்பரின் அழைப்பை ஏற்றான்.  அவன் “ஹலோ” என்றுவுடன்,
“ஸ்மிரிதி எங்க?” என்று அந்தக் குரல் கேட்க, பதில் சொல்ல முடியாமல் பயந்து போய் இணைப்பைத் துண்டித்தான் கபீர்.

Advertisement