Advertisement

ஸ்மிரிதியின் மனு – எபிலாக்_3
சற்று தூரத்தில் நின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த ரணதீரனிடம்,”உனக்கு வேற விளையாட்டு வைச்சிருக்கேன்.” என்று பிராமிஸ் செய்தான்.  பிரேமாவின் புடவை மீது அமர்ந்திருந்த பூமியின் அருகே அமர்ந்து, அவளின் நீண்ட தலைமுடியை விரல்களால் தூக்கி பிடித்து,”மூணு வயசுக்கு ரொம்ப நீட்டமா வளர்ந்திருக்கு.”என்று சொன்னவன், அவன் தலைமுடியை அதே போல் தூக்கி காட்டி,”நாளைக்கு மாமாகூட வந்திடு..நாம இரண்டு பேரும் முருகனுக்கு மொட்டை போட்டிடலாம்.” என்றான்.
“டேய் மனிஷ்..அவ கண்ணுலேர்ந்து ஒரு துளி கண்ணீர் வந்தது கலெக்டர் உன்னை காலி செய்திடுவான்..நாளை மறு நாள் மொட்டையடிச்சு காது குத்தணும்..வலி தெரியாம செய்ய ஸ்பெஷல் ஆள் தேட சொல்லி என்னைய படுத்திகிட்டு இருக்கான்…மருந்து போட்டுதான் எல்லாரும் குத்தறாங்கண்ணு சொன்னேன் டா..நரம்புலே படாம இருக்க நீ கியாரண்டியாண்ணு கேட்கறான்.” என்றான் ராம்.
“ராம் அண்ணா, தம்பி யாமிருக்க பயமேன்? குத்திடலாம்..அடிச்சிடலாம்.” என்று தமிழில் அண்ணுக்கு உறுதுணையென்று உறுதி மொழி கொடுத்த மனிஷைப் பார்த்து ஸ்மிரிதி அதிர்ச்சியில்,
“என்ன டா..என்னையவிட தமிழ் நல்லா பேசற?” என்று ஆச்சரியப்பட,
“தமிழ்லே ஆரம்பிச்சு இன்னைக்கு அயல் மொழிலே மருத்துவமே படிச்சு முடிச்சிருக்கேன்.” என்றான் தற்பெருமையுடன் மனிஷ்.
“டேய்..இன்னும் முடியலேன்னு நினைச்சோம்.” என்று அனைவரும்  கோரஸ் எழுப்ப,
“நானா முடிச்சுகிட்டேன்.” என்றான் சுருக்கமாக மனிஷ்.
“மனிஷ்..அம்மாவோட கால் சுளுக்கிடுச்சு..அவங்களோட கை வைத்தியத்துக்கு சரியாகலே..என்னென்னு பாரேன்.” என்றான் ராம்.
உடனே அவன் கைகளை வாஷ் பேஸினில் அலம்பி கொண்டு வந்த மனிஷ், புவனாவின் காலடியில் அமர்ந்து, அவன் இடது கையால் அவர் காலின் மேற்பகுதியை இறுக்கமாகப் பிடித்து கொண்டு, வலது கை விரல்களால் அவர் கணுக்காலை மென்மையாக அழுத்தி,”வலிக்குதா..வலிக்குதா?” என்று கேட்டு கொண்டிருந்தவன் ஒரு இடத்தில் அவர் முகசூளிப்பில் வலியை உணர்ந்தவன்,
“அடுத்த முறை இதெல்லாம் செய்ய மாட்டேன்..ஒரு டேபிளிலே படுக்க வைச்சு மொத்த ஜாயிண்டையும் மாத்திடுவேன்.” என்று பேசிக் கொண்டே அவன் செய்ய நினைத்ததை செய்தபோது,”அம்மா” என்று உரக்க கத்தினார் புவனா. அதன்பின்,
“ராம் அண்ணா நாளைக்கு காலைலே இவங்க ஜாகிங் செய்யற வீடியோ எனக்கு வந்து சேரணும்.” என்றவன்,”எழுந்து நடங்க.” என்று புவனாவிற்குக் கட்டளையிட்டான்.
அவர் சந்தேகமாக எழுந்து நடக்க ஆரம்பித்தது சந்தோஷத்தில் முடிய,”வலியே தெரியலேடா..சரியாயிடுச்சா?” என்று சந்தோஷத்துடன் சந்தேகமாக கேட்க,”கிட்ட வாங்க..பழையபடி செய்திடறேன்.” என்று புன்னகையுடன் மிரட்டிய மனிஷை,”உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு டா.” என்று செல்லமாக கடிந்து கொண்டார் புவனா.
“கொழுப்பு தான்..ஒரு இடத்திலேதான் அதிகமாயிருக்கு..மண்டைலே..”என்று சொன்ன மனிஷ்,”ஒரு ஸர்ஜனை காது குத்த வைக்கறீங்க, மொட்டையடிக்க அனுப்பறீங்க, சுளுக்கு எடுக்க சொல்றீங்க.” என்று அலுத்து கொள்ள,
“டேய் நாங்களா சொன்னோம்? நீ தான டா ஆஃபர் செய்த.” என்று வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு வந்த இரண்டு அக்காக்களையும்  பார்த்து,”உங்களுக்காக இந்த ஸ்பெஷல் வேலையெல்லாம் செய்வேண்டியிருக்கு.” என்று பின்வாங்கினான் மனிஷ்.
மனிஷும் மற்ற குடும்ப நபர்களும் அளவளாவிக் கொண்டிருப்பதைப் புரியாமல் பார்த்து கொண்டிருந்த கீதிகாவின் அருகில் அமர்ந்து அங்கு நடக்கும் உரையாடல்களை அவருக்கு மொழிபெயர்த்து கொண்டிருந்தாள் விதி.  கார்மேகத்திற்கு புரிந்திருந்தாலும் அதை கீதிகாவிற்குப் புரிய வைக்க அவரால் முடியாததால் அந்த வேலையை செய்து கொண்டிருந்த விதியின் கையைப் பாசத்துடன் பற்றி கொண்டார்.
“டேய் மனிஷ்..எனக்கு இடுப்பு ரொம்ப வலிக்குது டா..இந்த சின்னவனைத் தூக்கி வைச்சிருக்க முடியலே..அவன் பின்னாடி ஓடவும் முடியலே.” என்று அடுத்த பேஷ்ண்டானார் சிவகாமி.
“இடுப்பெல்லாம் இந்த மாதிரி ஈஸியா சரி செய்ய முடியாது..மொத்தமா மாத்திடறேன்.” என்றான் அசால்டாக. அவனுடைய தீர்வில் பயந்து போன சிவகாமி,
“வேணாம் டா சாமி….சின்னவன் ஸ்கூல் போகறவரை தான் பார்த்துக்கணும்..அதுக்கு பழைசு போதும்..புதுசு வேணாம்..ஏன் டா அவன் ஸ்கூல் போகறத்துக்குள்ளே அவனுக்குப் பெயர் ஸெலெக்ட் செய்திடுவியா?” என்று கிண்டலாகக் கேட்டார்.
“அதெல்லாம் எப்பயோ ஸெலெக்ட் செய்திட்டேன்..நேர்லேயே சொல்லிக்கலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.” என்று அவன் சொன்னவுடன், அனைவரும் என்ன பெயர் டா? என்ன பெயர் டா? என்று ஆவலுடன் கேட்க,
“இந்திரஜீத்” என்ற மனிஷ், அங்கே தரையில் ஃபோனுடன் விளையாடி கொண்டிருந்த ரணதீரனைத் தோளுக்கு மேல் தூக்கி,”இவன் தீர்..அவன் ஜீத்.” என்றான்.
“மாமா..பாட்டி எப்பவும் என்னை ரணதீரான்னுதான் கூப்பிடறாங்க..இப்ப பேபி பெயரையும் தமிழ்லே மாற்றி கூப்பிடுவேண்ணு சொல்லியிருக்காங்க.” என்று மனிஷிடம் கம்ப்ளயண்ட் செய்தான் ரந்தீர்.  
“அது நடக்காது.” என்றான் திடமாக மனிஷ்.
“ஏன்?” என்று அனைவரும் கேட்க,”கண்டு பிடிங்க.” என்று சொல்லி கொண்டிருக்கும் போது அவன் ஃபோன் அழைக்க,”டாக்டர் எம் கே ஹியர்.” என்று பேசி கொண்டே வெளியே சென்றான்.
அப்போது,”நீங்கெல்லாம் சாப்பிட்டாச்சா?” என்று கீதிகாவைப் பார்த்து கேட்டார் சிவகாமி.
“மனிஷ் ஏற்பாடு செய்திருந்தான்..ஏர்போர்ட் பக்கத்திலேயே.” என்றார்.
“ஸ்மிரிதி, கீழே இருக்கற ரூமை உங்கப்பாவுக்கு ரெடி பண்ணு.” என்று அவர் ஸ்மிரிதியிடம் சொல்லி கொண்டிருக்கும் போது உள்ளே வந்த மனிஷ்,”என்ன கண்டு பிடிச்சுட்டீங்களா?” என்று கேட்க, அனைவரும் “இல்லை” என்று தலையாட்ட,
“எனக்குத் தெரியும்.” என்று குரலை உயர்த்தினாள் விதி.
“என்ன காரணம்?” என்று அவளைக் கேட்டான் மனிஷ்.
அவள் அருகிலிருந்த கார்மேகத்தை அணைத்து,”இவரு மேக்.” என்று சொன்னவள், பக்கத்து சோபாவில் அமர்ந்திருந்த தில்லை நாதனை அணைத்து,”இவரு நாத்.” இரண்டு தாத்தா பெயரையும் சேர்த்து “மேக் நாத்ன்னு” நீ பேபிக்கு பெயர் வைச்சிருக்க..அந்தப் பெயரை யூஸ் செய்ய முடியாதுண்ணு மேக்நாத்தோட இன்னொரு பெயரை ஸெலெக்ட் செய்திருக்க.” என்று மாறன், மெஹக்கின் மகனுக்கு மனிஷ் தேர்ந்தெடுத்த பெயரின் பின்னனியைப் போட்டு உடைத்தாள் விதி.  அவளின் புத்திக்கூர்மையைப் பாராட்டுவதாக நினைத்து,”டீச்சர், கலெக்டர், வக்கீல்னாலே கண்டு பிடிக்க முடியலே..இத்தனை அறிவோட எங்க குடும்பத்திலே எப்படி வந்து சேர்ந்த நீ?” என்று கேட்டு விதியின் கண்ணாடி மனதில் அவனையறியாமல் கீறல் ஏற்படுத்தினான் மனிஷ்.
”மனிஷ்..யோசிச்சு பேசு.” என்று ஸ்மிரிதி உடனே அவனைக் கண்டிக்க, அவன் சொன்னதில் என்ன தவறு என்று புரியாமல் மனிஷ் மௌனமானான்.
அதற்கு மேல் அங்கே இருக்காமல் மனிஷின் கேள்வியில் காயப்பட்ட விதி மாடிக்கு ஓடி சென்றாள்.  அவள் வலியை அவள் குடும்ப நபர்கள் உணர்ந்திருந்தாலும் புவனாவின் குடும்பத்தின் முன் அதை எதிர் கொள்ள விரும்பவில்லை.  சிறிது நேரம் கழித்து புறப்படுவதற்குத் தயாரான புவனாவின் குடும்பத்தை மாறனின் காரில் கொண்டு விட மனிஷும் தயாரானான். 
கேட்டிற்கு வெளியே வந்தவுடன் அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது.  குழந்தைகளில் மூக்கை மூடிக் கொள்ள கட்டளையிட்ட ஜனனி,”இப்பெல்லால் குப்பையோட எனென்னமோ கொளுத்தி போடறாங்க..அதான் இந்த மாதிரி நாத்தம் வருது..மூச்சுவிட கஷ்டமா இருக்கு..டயரைக் கொளுத்தியிருக்காங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை அண்ணி..பாலிதீன்..பிளாஸ்டிக்..அதோட வாசனைதான் இது.” என்றான் மனிஷ்
அவன் திரும்பி வந்தபோது புகைமூட்டமும், நாற்றமும் குறைந்திருந்தது.  வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு கேட்டை திறக்க முயன்றபோது அது உள் பக்கமாக பூட்டியிருப்பதை உணர்ந்தான்.   அவன் வெளியே சென்றது அனைவருக்கும் தெரிந்திருந்தும் யார் கேட்டைப் பூட்டியிருக்ககூடும் என்று யோசனையான மனிஷ்.  கேட்டின் உயரத்தைக் கணக்கிட்டு கொண்டிருந்த போது,
வீட்டு வாசல் கதவைத் திறந்து வெளியே வந்த விதி,”நீ எதுக்கு இங்கே வந்த..இவ்வளவு நாள் எங்கே இருந்தியோ அங்கையே போயிடு.” என்று பூட்டியிருந்த கேட்டின் மறுபுறத்திலிருந்து கோபமாக மனிஷைப் பார்த்து கத்தினாள்.
அந்த இரவு வேளையில் ஏற்கனவே களைப்பாக இருந்தவன் அந்தப் பேச்சில் எரிச்சலடைந்து,”நான் கோபப்படறத்துக்கு முன்னாடி நீ இங்கேயிருந்து போயிடு.” என்று அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளை விரட்டினான் மனிஷ்.
“நான் உள்ளே போறேன்..நீ எப்படி உள்ள வர போற.” என்று பூட்டியிருந்த கேட்டைக் காட்டி கேட்டாள் விதி.
அவள் கண்ணெதிரே கண்ணிமைக்கும் நொடியில் அந்தக் கேட்டின் மீது கிடுகிடுவென ஏறி விதிஷாவின் முன்னால் குதித்தான் மனிஷ்.
“லங்கூர்.” என்று அவனைப் பார்த்து சொல்லி குரங்கை போல் சைகை செய்து ஓடி போக பார்த்தவளின் கையைப் பிடித்து,” இரு..நீ செய்ததை மனு ஜிஜுகிட்ட சொல்றேன்.” என்று அவளை மிரட்டினான்.
மனுவிடம் சொல்லுவேன் என்ற அவன் மிரட்டிலில் பயந்து போன விதிஷா அவன் பிடியை உதறிவிட்டு  வீட்டிற்குள் ஓடி போக,  அங்கே வரவேற்பறையில் மனிஷின் வரவிற்காக காத்திருந்த ஸ்மிரிதி, பயத்துடன ஓடி வந்த விதியைப் பார்த்து,”என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“மா..உன்னோட தம்பி ஒரு குரங்கு..நான் சாவியைப் போட்டு கேட்டை திறக்கறத்துக்குள்ளே மூடின கேட் மேலே ஏறி குதிக்கறான்.” என்று சொல்லி கேட்டின் சாவியை ஸ்மிரிதி அமர்ந்திருந்த சோபாவின் மீது விட்டெறிந்து விட்டு அவர்கள் படுக்கையறைக்குள் சென்றாள்.
விதியின் பின்னே வந்து, வாசல் கதவை சாத்திய மனிஷிடம்,”எதுக்குடா கேட் ஏறி குதிச்ச?விதிகிட்ட சாவி இருந்திச்சு.”
“உன் பொண்ணு பூட்டைத் திறக்காம என்னை அப்படியே நான் கிளம்பி வந்த இடத்துக்குப் பாக் பண்ண பார்த்தா..எப்படி உன்னைப் போலவே இருக்கா..எதுக்கும், யாருக்கும் பயப்படாம? அதான் மனு ஜிஜு பெயரை வைச்சு மிரட்டினேன்..பயந்திட்டா.” என்றான் கண்களில் சிரிப்புடன் மனிஷ்.
“முதல்லே அவ இப்படி இல்லை டா..எல்லாத்துக்கும் பயந்துகிட்டு இருப்பா..தனியா தூங்கக்கூட மாட்டா..வீ விட்டு ஸ்கூலுக்குப் போன பிறகுதான் அவளுக்கு தைரியம் வந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“எனக்கும் வீட்டை விட்டு போன பிறகுதான் தைரியம் வந்திச்சு.” என்று பதில் சொன்ன மனிஷ், அவன் தனியாக கடந்து வந்த நினைவுகளையும், தூக்கத்தில் கண்ட கண்ட கண்ட கனவுகளையும், தூங்கமுடியாமல் புத்தகங்களுடன் கடத்திய இரவுகளையும் நினைத்து பார்த்தான். வெளியே சிரித்து பேசி இலகுவாகத் தெரியும் மனிஷ் மனதுள்ளே எத்தனை கடினமாக மாறியிருக்கிறான் என்று அவனைத் தவிர யாருமே உணரவில்லை. 
அந்த நிகழ்விற்குப்  பின் தான் என்று அவன் சொல்லாமல் சொன்னதைப் புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“மனிஷ்..என்ன பிளான்லே வந்திருக்க..” 
“இனி இங்கதான்…நிரந்தரமா.”
“ஏன் டா முன்னாடியே சொல்லலே..திடீர்னு சொல்ற.”
“இரண்டு ஜிஜுகிட்டையும் கொஞ்ச நாள் முன்னாடியே சொல்லிட்டேன்..உன்கிட்ட நானே நேர்லே சொல்லிக்கறேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன்..நான் திரும்பி வரும்போது நீ என்னோட பேச்சை கேட்கறேன்னு பிராமிஸ் செய்திருக்க.” என்றான் மனிஷ்.
“மனிஷ்..இப்ப அதுக்கு சரியான சமயமில்லே.” என்று மறுத்தாள் ஸ்மிரிதி.
“தீதி..எனக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்..நீ உன்னோட குறிகோளைப் பற்றி கவலைப்படு..மற்றதை நான் பார்த்துக்கறேன்.”
“மனிஷ், நீ என்னோட தம்பி…என்னோடது, உன்னோடதுண்ணு தனி தனியா எதுவும் கிடையாது.”
“தீதி..இந்தமுறை நீ தேர்தல்லே போட்டியிட எல்லா கட்சிகளும் வாய்ப்பு கொடுக்க தயாரா இருக்காங்க..இந்த சந்தர்ப்பம் உன் வாழ்கைலே திரும்ப வராது..அதனாலே என்னைப் பற்றி நீ யோசிக்காத..என்னாலே என்னை பார்த்துக்க முடியும்..பள்ளிக்கூடத்திலே படிச்சுகிட்டிருக்கற அந்த மனிஷ் இல்லை நான்.” என்றான். 
“நீ சொல்றது போலே இந்த மாதிரி வாய்ப்பு எனக்குத் திரும்ப கிடைக்காது..நானா யாரையும் தேடி போகாம எனக்கு இருக்கற மக்கள் ஆதரவைப் பார்த்து எல்லாரும் என்னைத் தேடி வராங்க..என்னோட அரசியல் வாழ்க்கையாட ஆரம்ப கட்டம் இது.” என்று அவன் சொன்னதை ஆமோதித்தாள் ஸ்மிரிதி. 
சிறிது நேர மௌனத்திற்குப் பின், அவள் பேசியதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல்,
“அன்னைக்கு என்ன நடந்திச்சு தீதி?” என்று கேட்டான் மனிஷ்.  அவன் எந்த தினத்தைப் பற்றி கேட்கிறானென்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“ஒண்ணும் நடக்கலே டா..உன்னைக் கண்டு பிடிச்ச போது நீ மயக்கமா இருந்த.. உன்னை உன் ஜிஜுக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனோம்..அவரு உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போக சொன்னாரு..அதனாலே உன்னை அப்பா இருந்த ஆஸ்பத்திரிக்கே அழைச்சுகிட்டு வந்திட்டோம்…அதுக்கு அப்பறம் நடந்ததெல்லாம் உனக்கே தெரியும்.” என்றாள்
“நீங்க என்னை கண்டு பிடிச்ச போது என்கூட யாராவது இருந்தாங்களா?” என்று கேட்டான் மனிஷ்.
அவன் கேள்வியில் அதிர்ச்சியடைந்தாள் ஸ்மிரிதி. இவ்வளவு வருடங்கள் கழித்து அவனின் அந்த நிமிடங்களை அவன் நினைவுப்படுத்திக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. முதல் இரண்டு வருடங்கள் அவன் குடும்பத்தை விட்டு ஹாஸ்டலில் தனியாக இருந்த போது விதிஷாவிற்கு ஏற்பட்டது போல் எந்தவிதமான நிகழ்வும் ஏற்படாமல் சாதாரணமாக அவன் இருந்ததால் அன்றைக்கு அவனுக்கு வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர் அனைவரும்.  ஆனாலும் அன்றைய பகல் பொழுதில் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள நினைத்த போது அவனாக அந்த தினத்தை பற்றி பேசும் வரை அவனிடம் அதைப் பற்றி பேசுவது நல்லதல்ல என்ற டாக்டர்களின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருந்தனர்.
இப்போது மனிஷுக்கு எதற்கு அந்தக் கேள்வி என்று ஸ்மிரிதியின் மனதில் கேள்வி எழுந்தது.
“எதுக்கு டா கேட்கற?”
“அன்னைக்கு என்னை காப்பாத்தின போது நீங்க அங்கே இருந்தீங்களா தீதி…
எத்தனையோ நான் பாதி தூக்கத்திலே எழுந்துகிட்டு எனக்கு நடந்திச்சுண்ணு யோசிச்சு இருக்கேன்..சில இரவுகள் யோசிச்சு யோசிச்சு தூக்கத்தை தொலைச்சுயிருக்கேன்..இப்ப கொஞ்ச வருஷம் என்னோட கலீக் ஒருத்தர்கிட்ட சிகிச்சை எடுத்துகிட்டு வரேன்… எதையும் தெளிவா ஞாபகப்படுத்திக்க முடியலே…ஆனா என்கூட அங்கே யாரோ இருந்திருக்காங்க தீதி..எத்தனையோ முறை முயற்சி செய்திட்டேன் அந்த உருவத்துக்கு முகம் கொடுக்க முடியலே..அதான் அந்த முகத்தைக் கண்டுபிடிக்க அவர் ஆலோசனைபடி உன்கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன்.” என்றான் அவனின் இத்தனை வருட மனப் போராட்டத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
மனிஷ் சொன்னதைக் கேட்ட ஸ்மிரிதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.  அன்று அவன் பக்கத்தில், அவன் கையைப் பிடித்து கொண்டு இருந்தது விதிஷாதானென்று அவள், மனு விரேந்தர், ராஜு நான்கு பேரைத் தவிர யாருக்கும் அந்த விவரம் தெரியாது. குடும்ப நபர்களுக்கு விதிஷா மூலம் மனிஷ் கிடைத்தானென்று தெரியுமே தவிர அவன் அருகில் அவள் அமர்ந்து கொண்டு ஸ்மிரிதியை வலுக்கட்டாயமாக அங்கே வரவழைத்த விவரங்கள் யாரும் அறியாதது.  ஏன் விதிஷாவே அதையெல்லாம் இப்போது அறிவாளா என்று ஸ்மிரிதிக்கு சந்தேகமாக இருந்தது. அந்தத் தகவலை இப்போது மனிஷுக்கு தெரிவித்தால் தற்போதைய சூழ் நிலையில் அதைப் பற்றிய பேச்சு விதிஷாவின் மன நிலையைப் பாதிக்ககூடுமென்று நினைத்து, 
“மனிஷ்..அது உன் சம்மந்தப்பட்டது மட்டுமில்லை..அதனாலே அதைப் பற்றி என்னாலே இப்ப எதுவும் உன்கிட்ட சொல்லமுடியாது.” என்று ஒரளவு உண்மை பேசினாள்.
“ஐ நியூ தீதி..யாரோ என்கூட இருந்தாங்கண்ணு எனக்குத் தெரியும்..எதுக்கு தீதி அது யாருண்ணு மறைக்கறீங்க? என்று கோபப்பட்டான் மனிஷ்.
“மனிஷ்..ப்ளீஸ் அதைப் பற்றி பேச வேணாம்..கொஞ்ச வருஷங்களாகட்டும் நானே உனக்கு எல்லா விவரத்தையும் சொல்றேன்.”
“அந்த ஆளைக் கண்டுபிடிச்சா என்னை அந்த இடத்துக்கு யார் அழைச்சுகிட்டு வந்தாங்கண்ணு விவரம் கிடைக்கும்..அதை வைச்சு எல்லாத்துக்கும் பின்னாடி யாருண்ணு கண்டு பிடிச்சிடலாம்.” என்றான் மனிஷ்.
“அது டெட் எண்ட்..அவங்கிட்ட எந்த விவரமும் கிடைக்காது.” என்று மனிஷை முடக்க பார்த்தாள் ஸ்மிரிதி.
“நீங்க சொல்ல வேணாம்..அந்த ஆள் யாருண்னு நானே கண்டு பிடிக்கறேன்..அவங்ககிட்டேயிருந்து அந்த விவரத்தை எப்படி எடுக்கணும்னு எனக்குத் தெரியும்.” என்று மனிஷ் சொன்ன போது ஸ்மிரிதிக்கு அவளையே பார்ப்பது போல் இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல்,
“ஷட் அப் மனிஷ்..அந்த மாதிரி வேலை நாம செய்யறது இல்லை..நான் மக்களோட பிரதிநிதியா தேர்ந்தெடுக்கபட்டா..சட்டத்தை காப்பாத்தவும், பின்பற்றவும் பிரமாணம் எடுக்கணும்..அதனாலே அந்த மாதிரி வேலையை உன்னையும் செய்ய விட மாட்டேன்..உன்கிட்ட அந்த ஆளைப் பற்றிய விவரத்தை மறைக்கறதுக்கு காரணம் வேற.”
“நானும் ஒரு மருத்துவனா உயிர்களைக் காப்பாற்ற பிரமாணம் எடுத்திருக்கேன் தீதி.. இனி உங்ககிட்ட இதைப் பற்றி பேச மாட்டேன்..குட் நைட் தீதி.” என்று சொல்லி மாடியிலிருந்த படுக்கையறைக்குச் சென்றான் மனிஷ்.
மெஹக்குடன் அவளறையில் பூமியும், ஜீத்தும் தூங்கி கொண்டிருந்தனர்.  அதற்கு அடுத்து இருந்த அறையில் கார்மேகமும், கீதிகாவும் படுத்து கொண்டனர்.  மாடியில் இருந்த படுக்கையறைகளில், முதலில் இருந்த அறையில் நாதனும், சிவகாமியும், அதற்கு அடுத்த அறையில் மாறன், மனு, ரணதீரன் மூவரும் உறங்கி கொண்டிருந்தனர்.  அவர்களெதிரே இருந்த அறையில்   விதிஷாவுடன், ஸ்மிரிதியும் படுத்துக் கொண்டாள்.  அதற்கு அடுத்து இருந்த அறையில் மனிஷ் தனியாக படுத்து கொண்டான்.  
இரவு எத்தனை நேரம் உறங்கினாள் என்று ஸ்மிரிதிக்குத் தெரியவில்லை ஆனால் திடீரென்று அவளருகில் படுத்திருந்த விதிஷா,”என்னை விட்டிடு.” என்று முனகியபடி குழந்தைப் போல் அழ ஆரம்பித்தாள்.  அவள் அழுகையில் திடுக்கிட்டு விழித்த ஸ்மிரிதி விதிஷாவை தட்டி எழுப்ப முயல ஆனால் விதிஷா கண்களைத் திறக்காமல் ஸ்மிரிதியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு,”என்னை விட்டுடாத.” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
“விதி..விதி..எழுந்திரு.” என்று அவளை உலுக்கி எழுப்பினாள் ஸ்மிரிதி.
தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து கொண்ட விதி ஸ்மிரிதியைக் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.
“என்ன கண்ணமா..திடீர்னு விட்டிடுன்னு அழற..விடாதேண்ணு கெஞ்சற..கெட்ட கனவா?’ என்று ஸ்மிரிதி கேட்க,
“ஆமாம்.” என்று தலையசைத்த விதிக்கு கண்டிப்பாக அது கெட்ட கனவு என்று தான் தோன்றியது. ஏனென்றால் அவள் விடாதே என்று கெஞ்சியது பள்ளிசீருடையில் இருந்த மனிஷிடம்.
அதே நேரத்தில் அவன் தூக்கத்திலிருந்து திடுமென விழித்து கொண்ட மனிஷின் முகம் பேயறைந்தது போலிருந்தது.  இத்தனை வருடங்களாகப் பொசுங்கி போன பிளாஸ்டிக் நாற்றத்தையும் அன்றைய தினத்தின் நிகழ்வுகளையும் கோர்க்க முயற்சி செய்து தோற்று  கொண்டிருந்தவனுக்கு முதல் முறையாக அவன் கையோடு கோர்த்திருந்த இன்னொரு கையும் அதன் முகமும் தெளிவாகத் தெரிந்தது.  
அவன் கனவில் தெரிந்த கையும், முகம் விதிஷாவினுடையது என்று சந்தேகமேயில்லாமல் உணர்ந்தான் மனிஷ். ஆனால் அது எப்படி சாத்தியமாகக்கூடும் என்று எண்ணியவனுக்கு இன்று அவளுடைய கையைப் பிடித்து பேசியதால் அவளின் கையையும், முகத்தையும் அவன் கனவில் கண்டானா இல்லை உண்மையாகவே அன்று அவன் பக்கத்தில் இருந்தது விதிஷாதானா? என்ற கேள்வி எழுந்தது.
மனிஷ் வீட்டிற்குள் வரக்கூடாதென்று கேட்டை திறக்க மறுத்த விதிஷா அறிந்திருக்கவில்லை அதுவரை அவள் மனதில் பூட்டி வைத்திருந்த நினைவுகளை அது திறக்க போகிறதென்று.  விதிஷா திறக்க மறுத்த கேட்டை ஏறி குதித்த மனிஷ் அறிந்திருக்கவில்லை அவன் நினைவலைளின் தடையை அவன் அப்போது தாண்டினானென்று. 
விதியின் ஒரு நிகழ்வால் பிணைக்கப்பட்டு, பிரிந்த இருவரையும் மறுபடியும் அதே விதியே இணைத்து அவர்கள் இருவருக்கும் முடி போட்டு அவர்கள் வாழ்க்கை முடிச்சை அவிழ்க்க  ஆரம்பித்தது.
*****ஆரம்பம்******

Advertisement