Advertisement

ஸ்மிரிதியின் மனு – எபிலாக்_2
“விதி பேபி இங்கே வா.” என்றான் மனு.  சோபாவில் அமர்ந்திருந்தவன் அருகில் அவள் வந்தவுடன்,”
“அம்மாகாகதான் நீ அங்கே காத்துகிட்டு இருந்த கண்ணம்மா..உன் அப்பா, அம்மா நாங்க தான் டா.” என்று அவன் சொன்னவுடன், அவனை அணைத்து,”தாங்க்ஸ் பா.” என்றாள் விதி.
சிவகாமியும், நாதனும் கோயமுத்தூரில் குடியேறிய பின் அவர்கள் அடுத்து தில்லிக்கு சென்றது ரணதீரனின் பிறப்பிற்கு தான்.  அதற்குபின் மனிஷின் பள்ளி படிப்பு முடியும்வரை அவனைச் சுற்றியே அவர்கள் பயண ஏற்பாட்டை அமைத்து கொண்டனர்.  திடீர் திடீரென்று கார்மேகத்திற்கு உடல் நல குறைவு ஏற்பட்ட போது மனு, ஸ்மிரிதியின் பொறுப்புக்களைக் குறைக்க விதிஷாவையோ இல்லை ரணதீரனையோ மாறனின் உதவியோடு கோயமுத்தூர் அழைத்து வந்தார் சிவகாமி. மாறன் அவன் முயற்சியில் வெற்றி அடைந்தபின் பயிற்சி காலத்தில் விடுமுறை எடுக்க முடியாத சூழ் நிலையில் மாறனின் இடத்தை நிறப்பியது மெஹக்தான்.  
முதல் இரண்டு வருடம்  வெளியாட்களுடன் விதிஷா பழகவே பயந்ததால் அவளைப் பள்ளிக்கூடம் அனுப்பாமல் வீட்டிலேயே படிக்க வைத்தனர்.  அதனால் அவளுடைய ஆரம்பக் கல்வி முக்கால்வாசி சிவகாமியின் மேற்பார்வையில் கோவையில் தான் ஆரம்பமானது.  பயிற்சி முடிந்து மாறன் வேலையில் சேர்ந்தபோது ரணதீரன் பள்ளி செல்ல தயாராக, அவனுடன் விதிஷாவும் பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.
வீடு கற்று கொடுக்காத, கொடுக்க விரும்பாத பல விஷயங்கள் வெளியுலகம்தான் பலருக்கு கற்று தருகிறது.  வெளியுலகத்துடன் தொடர்பு ஏற்பட்ட பின் ஸ்மிரிதிக்கும் அவளுக்கும் தோற்றத்தில் இருந்த வேறுபாட்டை உணர ஆரம்பித்திருந்தாள் விதி. அவளுடைய தம்பி ரணதீரன், தங்கை பூமி இருவரும் அவளைப் போல் தோற்றத்துடன் இல்லாமல் இருந்தது அதை மேலும் வலியுறுத்த, பூமி பிறந்த பிறகு அவள் பிறப்பை, சிறு வயதில் அவள் செய்த சேட்டைகள் பற்றி அறிய விதி கேட்ட கேள்விகளுக்குப் பொய் சொல்ல விரும்பாமல் அதே சமயம் முழுக் கதையை சொல்லாமல் அவளை இரயில் நிலையம் அருகே கண்டெடுத்தனர் என்று பாதி உண்மையைப் பகிர்ந்து கொண்டவுடன், முதலில் அதை நம்ப முடியாமல் அவள் அம்மா, அப்பாவின் மீது ஆத்திரமடைந்து அதற்கு பின்பு அழுகையில் கரைந்து போனவளை அணைத்து ஆறுதல் அளித்தது கீதிகாதான்.  
கடந்த மூன்று வருடமாக குடும்ப நபர்கள் அனைவரும் அவர்களின் ஒவ்வொரு செயலின் மூலம் அவளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் வித்தியாசமில்லை என்று நிரூபித்து வந்தனர்.  
ஆனால் குடும்பத்தினரின் பொறுமையை சோதிக்கும் படி கடந்த சில மாதங்களாக பிடிவாதத்தின் உருவமாக மாறி கொண்டிருந்தாள் விதி.  சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கெட்ட கனவுகளும் அதன் தொடர்ச்சியான அலறல்களும் மறுபிரவேசம் செய்ய ஆரம்பித்திருந்தன. அந்த நாட்களில் அவளுள் என்ன ஏற்படுகிறது என்று யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் பிடிவாதமாக ஒதுங்கியிருப்பவளைப் புறக்கணிக்கவும் முடியாமல்,  புத்தி சொல்லவும் முடியாமல் அனைவரும் தடுமாறி கொண்டிருக்க, மனு மட்டும் அவளுடன் எப்போதும் போல் அப்பாவாக அவளை அரவணைத்து அவள் மனதை அறிய முற்பட்டான்.  ஆனால் விதிக்குதான் அவள் கனவுகளை, நிஜத்தில் அவள் அப்பாவிற்கு எப்படி புரிய வைப்பதென்று தெரியவேயில்லை.  
அந்த இடத்தில், அந்த ஆளுடன் விதி எத்தனை பகல்கள், இரவுகள் கழித்தாள், அப்போது என்ன நடந்தது என்று விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.  விதியும் அவளுடைய அந்த அறியா வயசில் நடந்தை எந்த அளவிற்கு அவள் மனதில் புதைத்து வைத்திருந்தாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை.  விதிக்கு உதவ முடியாமல் இருக்கும் அவள் இயலாமையை நினைத்து ஸ்மிரிதி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். ஒரு மனநல நிபுணரிடம் அழைத்து சென்று விதியின் வேதனைகளுக்கு முடிவு கட்ட முடிவு செய்திருந்தாள்.
ஸ்மிரிதியிடம் விதி கேட்ட கேள்விகளைப் பற்றி கவலைப்படாமல் ஸ்மிரிதியின் ஃபோனுடன் விளையாடி கொண்டிருந்தான் ரணதீரன்.  மெஹக் ஊட்டிய ரோட்டியை சாப்பிட்டு முடித்திருந்தாள் பூமி.  பேபியோ ஸ்மிரிதியின் தாலாட்டைக் கேட்டபடி அவள் மடியிலேயே பாதியில் தடைப்பட்ட அவன் தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
அப்போது வீட்டு வாசலில் அரவரம் கேட்டு அனைவரும் நிமிர்ந்து பார்க்க, கைகளில் ஏராளமான பைகளோட தோன்றினான் மாறன்.
“சாசூ.” என்று கத்த ஆரம்பித்த இரண்டு குழந்தைகளையும் சிவகாமி அடக்க, உடனே அமைதியாக வாசலுக்கு சென்று மாறனை அணைத்துக் கொண்டனர்.  பூமி மட்டும் அவள் இருந்த இடத்திலே மாறனை நோக்கி கைகளைத் தூக்க, அவளை உயர தூக்கி ஒருமுறை சுற்றி கீழே இறக்கியவனுக்கு ஒரு முத்தம் கொடுத்து அவள் அன்பை தெரிவித்தாள் பூமி.
சோபாவில் அமர்ந்திருந்த மனு எழுந்து வந்து ஸ்மிரிதியின் மடியில்  தூங்கி கொண்டிருந்த பேபியை தூக்கி கொண்டு போய் மாறன் அறையில் விட, வேறு உடைக்கு மாறி கொள்ள மாறனும் அவனைப் பின் தொடர்ந்தான். அவனறைக்கு பேபி சென்றவுடன் வரவேற்பறையில் சிரிப்பு, பேச்சு என்று சத்தம் கூடியது. அப்போது மறுபடியும் வாயிலில் அரவம் கேட்க, வாசலை நோக்கி திரும்பிய குழந்தைகள் அங்கே நின்று கொண்டிருந்த அவர்கள் கூட்டாளிகளை ஆர்பாட்டமாக வரவேற்றனர்.
வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே ராமின் இரண்டு மகள்களும், விதி, பூமியுடன் சேர்ந்து ஒரு குழவாக அவர்களுக்குள் பேசி சிரித்தபடி விளையாட ஆரம்பித்தனர். குழந்தைகளின் சந்தோஷ கூச்சலைக் கேட்டு மாறன் அறையிலிருந்து வெளியே வந்த மனு, மெதுவாக படியேறி வந்து கொண்டிருந்த புவனாவைப் பார்த்து,”ரண்தீர்..புவனா பாட்டி கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சுகிட்டு வா.” என்றான்.  அவன் விளையாடி கொண்டிருந்த ஃபோனை ஸ்மிரிதியிடம் கொடுத்து விட்டு புவனாவைப் பத்திரமாக வீட்டிற்குள் அழைத்து வந்தான் ரந்தீர்.  புவனாவிற்கு பின்னால் இன்னும் சில பைகளுடன் நுழைந்தனர் ராமும், ஜனனியும்.
“என்ன டா? இன்னைக்கே எல்லா சாமானையும் இங்கே கொண்டு வந்துட்டீங்களா?” என்று மனு கேட்க,
“கலெக்டர் ஆர்டர் பா..இரண்டு குழந்தைங்களுக்கு மொட்டையடிச்சு, காது குத்தணும்..எதுவும் விட்டு போகக்கூடாதுண்ணு ரொம்ப கவனாம செயல்பட வேண்டியிருக்கு….பூமி கண்ணுலே ஒரு துளி கண்ணீர் வந்தாலும் இந்தப் பூமி தாங்காதுண்ணு அவளுக்கு மொட்டையடிக்கவும், காது குத்தவும் ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு.” என்றான் ராம்.
பூமி மேல் மாறன் கொண்டிருந்த அளவில்லா அன்பு அனைவரும் அறிந்திருந்ததால் ராமின் கூற்றை யாரும் மறுக்கவில்லை.
அப்போது ஜனனி,”மெஹக்..இன்னைக்கு உன்னோட ஸ்பெஷல் சாப்பிடதான் மாறன் அண்ணோவோடவே வந்திட்டோம்..உன் மிஸ்ஸி ரோட்டியை மிஸ் செய்ய விரும்பலே.” என்று சொல்லி டைனிங் டேபிளில் தட்டை வைத்து அமர்ந்து கொண்டாள்.
“நாங்கெல்லாம் சாப்பிட்டாச்சு….மெஹக் ஊட்டினாதான் பூமி சாப்பிடுவா அதான் அவ எல்லாருக்கும் செய்து வைச்சிட்டு இப்பதான் பூமிக்கு  ஊட்டி முடிச்சா.” என்றார் சிவகாமி.
அதற்குள் மாறனும் வேறு உடைக்கு மாறி ராம், ஜனனி இருவருடன் சேர்ந்து உணவு அருந்த டேபிளில் அமர்ந்தவுடன், குழந்தைகளுக்கும், புவனாவிற்கு தனியாக தட்டில் போட்டு கொடுத்த சிவகாமி,
“உன்னை யாரு டீ லேட்டாயிடுச்சுண்ணு இதுங்க பின்னாடி ஸ்கூல் பஸ்ஸுக்கு ஓட சொன்னா? இப்படி கால் சூளுக்கிகிட்டு இருக்க..உட்கார்ந்த இடத்திலேர்ந்து சீக்கிரமா ஸ்கூலுக்கு கிளம்ப இதுங்களை மிரட்டி வைக்கணும்.” என்று புவனாவைக் கடிந்து கொண்டார்.
“அது உன்னாலேதான் முடியும்..என்னாலே முடியாது..டீச்சருக்கு டீச்சர் விதிமுறை வித்தியாசபடுமில்லே.” என்றார் புவனா சிரித்துக் கொண்டே.
“அப்பா, என்ன திரும்பவும் குப்பைங்களை இங்கேயே எரிய விட்டிருக்காங்க? நீங்க கம்ப்ளயண்ட் செய்யறதில்லையா?” என்று மாறன் கேட்க, 
“நிறைய தடவை சொல்லிட்டேன்..அந்தக் குடியிருப்பு ஆளுங்க கேட்கறதில்லை..அவங்க ஏரியாவுலேகுள்ளே நடக்குதுண்ணு விதண்டாவாதம் செய்யறாங்க.” என்றார்.
“அடுத்தமுறை நானே ஆளுங்களை அனுப்பி அப்படி செய்யறவங்களை உள்ளே பிடிச்சு போட சொல்றேன்.”
“அங்கேயே ஒரு போலீஸ்காரனும் குடியிருக்கான் டா..அவனாலேயே ஒண்ணும் செய்ய முடியலே..தினமுமில்லே எப்பவாவது ஒரு வீடு, இரண்டு வீடோ இந்த வேலை செய்யறாங்க..தோட்டத்து குப்பையோட மற்ற குப்பைங்களையும் சேர்த்து கொளுத்தறாங்க.” என்றார் நாதன்.
“நாம சந்தோஷமா நம்ம வீட்லே இருக்கறது நம்ம கைலே இல்லே..பக்கத்து வீட்டுக்காரன் கைலேதான் இருக்கு.” என்றார் சிவகாமி.
அப்போது அவர்கள் வாங்கி வந்திருந்த சாமான்களைக் கண்களால் பார்வையிட்டு கொண்டிருந்த ஸ்மிரிதி,”புவனா ஆன் ட்டி..எல்லாருக்கும் ஒரே மாதிரி தானே வாங்கியிருக்கீங்க?” என்று கேட்டாள்.
“ஆமாம்..பட்டு பாவாடைங்க ஒரே டிஸைன் வேற வேற கலர்லே..பசங்க இரண்டு பேருக்கும் ஒரே போலே பட்டு வேஷ்டி.”
“ரணதீரனோட முதல் பிறந்த நாளை பெரிசா கொண்டாடலே..தீரனுக்கு ஒரு வயசாகும் போது கார்மேகத்திற்கு உடம்பு சரியில்லை..பூமிக்கு ஒரு வயசாகும் போது இவருக்கு முடியலே அதனாலே கொண்டாடவே இல்லை..” என்று அவர் அடுக்கிக் கொண்டிருக்க,
“எல்லாம் நல்லதுக்கு தான் மா..மாறன் பையனோட சேர்த்து செய்யணும்னு இருக்கு.” என்று இடைமறித்தான் மனு.
“எல்லாம் நல்லபடியா நடக்கணும் டா..கீதிகாவும், கார்மேகமும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.” என்றார் சிவகாமி.
“திரேன் துணையோட அழைச்சுகிட்டு வந்திருக்கலாம்..ஆனா வேணாம்னு சொல்லிட்டாரு.” என்றான் மனு.
“திரேன் இருக்கறதுனாலேதான் நாம எல்லாரும் இங்கே நிம்மதியா இருக்கோம்..அவன் இல்லைன்னா கீதிகாவாலே அவரைத் தனியா சமாளிக்க முடியாது.” என்றார் சிவகாமி.
“இப்பெல்லாம் வாக்கர் வைச்சுகிட்டு கொஞ்சமா நடக்கறாங்க..நிறைய பேச முயற்சி செய்யறாங்க..மனிஷ் ஒவ்வொரு முறை வந்த போன பிறகும் அவர்கிட்ட நிறையா மாற்றம் ஏற்பட்டிருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“தில்லி பக்கம் வந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு..மெஹ்கோடேயும், அவ பையனோடவும் சரியா இருக்கு.” என்று சொன்னவர்,
“டேய்..உனக்குண்ணு ஒரு வீடு பார்த்துக்கிட்டு உன் குடும்பத்தை உன்னோட கூட்டிக்கிட்டு போயிடு.” என்று மாறனுக்கு ஆர்டர் போட்டார் சிவகாமி.
“அப்ப இந்த வீடு யாருது?” என்று அவன் கேட்க,
“உங்கப்பா எல்லாத்தையும் அவரோட பேரன், பேத்திங்களுக்குண்னு சொல்லிட்டாரு..நானே பர்மிஷன் கேட்டுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.”
“என் ரூமை நீங்க அவங்களுக்குக் கொடுக்க முடியாது..நமக்குள்ளே ஒப்பந்தமிருக்கு.” என்று அவரிடம் வம்பு செய்தான் மாறன்.
“அதைதான் நீ உன் பசங்களுக்குப் பட்டா போட்டு கொடுத்திருக்கியே..வில்லங்கத்தை நீயே செய்திட்டு என்கிட்ட வம்பு செய்துகிட்டு இருக்கியா? என்று பொய்யாக கடிந்து கொண்டார் சிவகாமி.
அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்து கொண்டிருக்க ஸ்மிரிதி மட்டும் அவள் ஃபோனை பார்த்து கொண்டிருந்தாள். அதை கவனித்த மனு,
“ஃபோன்லே என்ன பார்த்துகிட்டு இருக்க?”
“மனிஷ்” என்றாள் ஸ்மிரிதி.
“வீடியோலே வந்திருக்கானா? என்ன பெயர் செலக்ட் செய்திருக்கான்? என்று சிவகாமி கேட்க, ஹாய் சொல்லும் ஆவலில் ஓடி வந்த விதியும், தீரனும்  ஃபோனை ஸ்மிரிதியின் கைகளிலிருந்து பறித்தனர்.
அந்த வீடியோவில், இரவு வேளையில், அவர்கள் தில்லி வீட்டின் நீச்சல் குளம் தெரிந்தது.  ஸ்ப்ரிங் போர்டிலிருந்து இரண்டு முறை ஸமர்ஸால்ட் அடித்து குளத்தின் உள்ளே சென்ற உருவம் சில நொடிகள் கழித்து கமெரா முன்னால் தோன்றி பெரிய புன்னகையுடன்.”ஹாய் தீதி.” என்ற சொல்ல அத்துடன் வீடியோ முடிந்து போனது.
அவனுடைய கல்லூரி படிப்பு தொடங்கிய பின் வருடத்தில் ஒரு முறை, இரண்டு வாரங்களுக்கு இந்தியா வந்த மனிஷ் முதல் ஐந்து நாட்கள் கோயமுத்தூரிலும் அடுத்த பத்து நாட்களை தில்லியிலும் கழித்தான்.  அவன் கோயமுத்தூர் வந்த போது அவனுடைய தீதியின் குடும்பம் தில்லியில் இருந்தது.  அவன் தில்லி வந்தபோது அவன் தீதியின் குடும்பம் கோயமுத்தூரில் இருந்தது.  அவனும், அவன் தீதியும் நேரடியாக சந்திக்கவேயில்லை.  அவர்கள் சந்திப்பெல்லாம் வீடியோ மூலம் நிகழந்தன.  
அவனுடைய பதினெட்டாம் வயதிற்குப் பிறகு அவன் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும், தேவைகளையும் அவனுடைய இரண்டு ஜிஜுக்கள் மூலம் நடத்தி கொண்டான் மனிஷ். இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அவன் வீட்டிலிருக்கும் போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவளுடன் வீடியோவில் பகிர்ந்து கொண்டதே இல்லை. இந்தமுறை ஏன்? என்று ஸ்மிரிதி யோசித்து கொண்டிருக்கும் போது,
“அம்மா, என்னைய மட்டும் இராத்திரிலே ஸுவிம்மிங் செய்ய அலவ் பண்ண மாட்டாங்க நானி..இப்ப மனிஷை மட்டும் எப்படி அலவ் செய்தாங்க..அதுவும் டைவிங்..நம்ம வீட்டுக்குப் போனவுடனே நானியோட சண்டைப் போட போறேன்.” என்றாள் விதி.
“டைவ் செய்யறானா..ஃபோனை இங்கே கொண்டு வா டா.” என்று தீரனை அழைத்து அனைவரும் ஃபோனில் தெரிந்த மனிஷின் சாகச செயலை அதிசயமாகப் பார்த்தனர்.
அப்போது,”அவன் கடுங்குளிர்லே, நதிலே நீச்சல் அடிக்கறான்..ஸ்கீ ஜம்பிங் போட்டிலே கலந்துக்கறான்..இதென்ன பெரிய விஷயம்? என்றான் மாறன்.
“அவன் அங்கே படிக்க போனானா இல்லை இந்த மாதிரி ஆபத்தான விளையாட்டெல்லாம் விளையாட போனானா?” என்று கேட்டார் சிவகாமி.
அந்தக் கேள்விகளுக்கு பதில் மனிஷிடம் தான் கிடைக்கும் என்பதால் மாறன் அமைதியானான்.
மனிஷின் வீடியோவை அலுக்காமல் குழந்தைகள் பார்த்து கொண்டிருக்க, ஸ்மிரிதியோ ஆழ்ந்த யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.  அவர்கள் வீட்டில் எடுத்த வீடியோவை அவளுக்கு அனுப்பியதற்கான காரணமென்ன என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்போது, குழந்தைகள் அனைவரும்,”மனிஷ் மாமா, சித்தப்பா.” என்று ஒரே சேர குரல் எழுப்ப, பெரியவர்கள் அனைவரும் அந்த திடீர் கூச்சலில் வாசலைப் பார்க்க, அங்கே வாயிற் கதவின் உயரத்திற்கு  நின்று கொண்டிருந்தான் மனிஷ் கார்மேகம்.
உடனே வாயிலுக்கு சென்று அவனை அணைத்து கொண்ட மனு,”என்ன டா..இப்படி நேர்லே வந்து அதிர்ச்சி கொடுக்கற.” என்று கேட்க,
“பொறுங்க..இன்னும் அதிர்ச்சி இருக்கு.” என்று சொன்னவன், கேட்டில் நின்றிருந்த கார் கதவை திறந்து கார்மேகத்தை கையில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.  அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார் கீதிகா.
“அப்பா.” என்று ஸ்மிரிதியும் அதிர்ச்சியாக, விதியும், ரணதீரனும் நானா, நானி என்று சோபாவில் அமர்ந்த கார்மேகத்தையும், கீதிகாவையும் கட்டி அணைத்தனர்.
“இப்பதான் உன்னை வீடியோவிலே பார்த்துகிட்டு இருந்தோம்..இப்படி நேர்லே வந்திட்டே.” என்றார் சிவகாமி.
“அதைப் பார்த்துகிட்டு இருக்கும் போது ஸைலெண்ட்டா என் ட் ரி கொடுக்கணும்னு நினைச்சேன் இந்த வாண்டுங்க உள்ளே நிழல் விழந்தவுடனே கண்டுபிடிச்சிட்டாங்க.” என்ற மனிஷ், ராமின் இரு  ஒரு சேர அவன் தோளில் தூக்கி அமர்த்தி கொண்டான்.
“டேய் வேணாம் டா..பயந்திட போறாங்க”என்று சிவகாமி பதற,
“அத்தை..சூப் (chup)..நான் எப்பவும் இவங்களை இப்படி தூக்கறதுதான்.” என்று சொல்லி அவர்களை இருவரையும் ஒரு சுற்று சுற்றி விட்டு ஒவ்வொருவராக கீழே இறக்கிவிட்டான்.

Advertisement